சிறுகதை : உன் பார்வைக்கு என்ன அர்த்தம்...?

9:00:00 AM



'அந்தக் கண்ணு இருக்கே...ஆஹா, மனுசன கயிறு கட்டி இழுக்கும்.அப்படி லேசா ஒரு பார்வை, வைத்துல பட்டாம் பூச்சி பைத்தியமாகிப் போய் சுத்தும். அவ முடியக் கோதி விடுறது அழகு, முகத்தை லேசா சுளிச்சுக் கோபப்படுரது அழகு, கண்ண படபடன்னு அடிச்சு ஹாய் சொல்றதும் அழகு. மொத்தத்தில் இந்த பிரம்மன் செதுக்கிய சிற்பம், இளையராஜா போட்ட டியுன், ரவிவர்மன் எழுதிய ஓவியம்...இப்படி எல்லாமே அவதான்...'

இங்கே பெங்களூரில், இத்தனை விதமான பிகர்களுக்கு மத்தியில் எனக்கு ஒரு பிகர் மாட்டும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்க வில்லை. அதுவும் கோயம்பத்தூர் பிகர்...'மச்சக்காரன்டா நீ ' என்று என்னை நானே கொஞ்ச வேண்டும் போலிருந்தது. அதற்கு முன் ஒரு முக்கியமான விஷயம். நானே பேசிக் கொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது. அவளிடம் போய் பேசி பழகி, பின் உருகி, பின் மருகி,பின்... இன்னும் நிறைய பிறகு தான் செய்ய வேண்டும்.சமயம் பார்த்து காத்திருந்தேன்.

சரியாக வந்து மாட்டினான் அவளுடன் கல்லூரியில் படித்த ஒரு உச்சா மூஞ்சி. வேறு வழி இல்லை. அவளிடம் பேச கண்ட உச்சா கூடவெல்லாம் friendship maintain பண்ண வேண்டியதாய் இருந்தது. சரி, ஆயிரம் காலத்து பயிர் வளர்க்கும் முயற்சியில் இருக்கோம். இந்த உச்சாவும் உதவி செய்து விட்டு போகட்டுமே...

நான் காத்திருந்த அந்த இனிய நாளும் வந்தது...அன்று 'அவள்' உச்சா மூஞ்சியுடன் சாப்பிட வந்திருந்தாள். என் கூட வந்த கழிசடையை நேக்காக கழற்றி விட்டு 'ஹாய் டா நண்பா, என்ன சாப்பிட வந்தாயா...ஹி...ஹி... 'என்று போய் அவனெதிரில் உட்கார்ந்தேன். கையில் சிக்கன் நூடுல்ஸ். அவளும் என்னை கவனித்தாற்போல் நிமிர்ந்து பார்த்தாள். கண்களும் கண்களும் மோதிக் கொண்ட அந்த சமயம், "சிறு பொன்மணி அசையும், அதில் தெறிக்கும் புது இசையும்... "என்று இளையராஜா டியுன். (ஹையோ...காதல் வந்தவுடன் இளையராஜா பாட்டெல்லாம் கேட்க்குது...Rock Song எல்லாம் போகப் போகக் கேட்க்கும் போல...பின்னாடி வெள்ளை டிரஸ், smoke effect ல் தேவதைஸ் ஆடுதா) னு பார்க்கத் திரும்பியபோது...'ஆமாண்டா மச்சா சாபிட்டுக்கிட்டு இருக்கேன்..நீ நல்ல இருக்கியாடா, இங்க செம ஜாலிடா...' என்று நாராசமாய் ஒரு குரல். அட உச்சா மூஞ்சி அந்த டியுன் உன் ரிங்டோனா ? சீ...அதற்குள் நான் feel பண்ண ஆரம்பித்து விட்டேன்.

சரி காரியத்துல இறங்குவோம்னு, 'என்ன சாப்பிடாம அப்படியே வச்சிருக்க? இங்க rice நல்லாவே இருக்காது...வேணும்னா என்னோட நூடுல்ஸ் ஷேர் பண்ணிக்கோ' என்று ஆரம்பித்தேன். சின்னதாய் சிரித்து விட்டு 'இல்ல வேண்டாம்' என்றாள். (ஹையா அவ என்ன பாத்து சிரிச்சுட்டா... அவ என்ன பாத்து சிரிச்சுட்டா....ஆத்தா நா பாஸ் ஆயிட்டேன்)

'எங்க அவ ஐயர்ங்க' என்று மறுபடியும் கனவைக் களைத்தான் உச்சா. 'கொன்னுடு... இவனக் கொன்னுடு ' என்று உள்ளே கேட்ட குரல் வெளியே கேட்பதற்குள் 'ஓ..மாமியா...ok ok' என்று பதிலுக்கு சிரித்தேன். 'நீங்க சாதமே சாப்பிடமாட்டீங்களா?' என்று பேச ஆரம்பித்தாள். நானும் அந்த கானக்குரலில் மயங்கியவனாய், 'ஆமாம் நம்ம ஊர் மாதிரி இல்லை, அதான் நூடுல்ஸ், pizza, burger, sandwich னு வேற எதையாவது சாப்பிடுவேன். உனக்கு பிடிச்சிருக்கா?' என்று கொக்கி எல்லாம் போட்டேன். 'Gowri Sankar நல்லாயிருக்குங்க' மறுபடியும் உச்சா. அடிங்...என்ன என்பது போல் அவளைப் பார்க்க அவள் Gowri Sankar ஐக் காட்டினாள். உச்சா உன்னக் கொல்லாம..."நகிர்தனா தினனனா தினனனா...."இப்போது பாக்கியராஜ்...இது என் ரிங்டோன்.

'ஹலோ...யாரு?'
'யாரா?...டேய் எங்கடா போன...வா டீ சாப்பிடலாம் ? '
'டேய் டேய் மட்ட மத்தியானம் எவனாவது டீ குடிப்பானா? ஏன்டா என்னக் கொல்லுற'
'சரி டீ வேணாம்...ஜூஸ் வாங்கித் தா...'
'வாங்கித்தரென் ..வாங்கித்தரேன்டா ராசா; தயவு செய்து போன வைடா...ப்ளீஸ் '
'சரி சரி...நீ எங்க இருக்க?'
'டேய் இங்க already என்ன ஒருத்தன் கொன்னுகிட்டு இருக்கான்..நீ வேற உள்ள வந்து உசிர விட்டுடாத...வச்சித் தொல...'

'....அப்படியா...?'

'என்ன...அப்படியா?...நான்...போன் பேசிக்கிட்டு இருக்கும் போது ஏதோ serious discussion நடந்துகிட்டு இருந்தது போல...'
'இல்ல நாங்க B.Sc நீங்க B.E இல்ல...' என்றாள் அவள்.
'ஆமா, So What...?
' என் தலைஎழுத்து சும்மா விடுமா? கேள்வியாய் முன்னாடி வந்தது.
'இல்லங்க...நீங்க B.E யானு கேட்டா...ஆமா B.E, ஒரு வருஷ சீனியர்னு சொன்னேன்...அப்ப அண்ணாவானு கேட்டா நான் ஆமான்னு சொன்னேன்.'

என்னது அண்ணாவா? அடப் பாவி உச்சா ஆயிரம் காலத்துப் பயிர்ல தண்ணி விடுவன்னு பாத்தா, இப்படி உச்சா அடிச்சிட்டு போய்ட்டியேடா...ஒரு வருஷ சீனியர் னா அண்ணாவா...சொல்லவே இல்ல?

அப்ப அந்தப் பார்வைக்கு அர்த்தம் அதில்லையா?

You Might Also Like

1 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...