மீண்டும் புதிதாய் பிறக்க ஆசை...

1:03:00 PM

ஏப்ரல் 22. அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, அக்காக்கள், தம்பிகள், மாமா, தாத்தா, பாட்டி என்று ஒரு பெரிய கூட்டமாய்க் கூடி என் பிறந்த நாளைக் கொண்டாடினோம். ஒரு வாரத்திற்கு முன்பாகவே எல்லோரையும் அழைத்திருந்தோம். என் பாட்டி தடபுடலாக ஏற்பாடுகளைச் செய்திருந்தார். என் மாமா மாலை கொண்டாட்டத்திற்காக காலையிலிருந்தே பம்பரமாய்ச் சுற்றிக் கொண்டிருந்தார். பக்கா டிசைனில் 2 கிலோ கேக் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது; Photographer ஒருவர் வேறு சுற்றி சுற்றி வந்து கிளிக்கிக் கொண்டிருந்தார். அன்பளிப்பாக 500 ரூபாய் நோட்டுகள், Gift கள் என்று நான் மிகவும் சந்தோசமாக இருந்தது அன்று தான். எல்லாம் கனவு மாதிரியிருக்கிறது...

மேற்சொன்ன நிகழ்வுகள் நடந்தது 22 ஏப்ரல் 1996. இந்த பிறந்தநாளில் ஹ்ம்ம்...பெரிதாய் ஒன்றும்
இல்லை.

இரவெல்லாம் பயணித்த களைப்பில் என் பிறந்தநாளன்று காலை 6 மணிக்கு வீட்டுக் கதவைத் தட்டினேன். ஓடி வந்து கதவைத் திறந்து சிரித்த அப்பா, எதையோ மறந்தார். கட்டியணைத்து முத்தமிட்ட அம்மாவும் எதையோ மறந்திருந்தார். பின்னால் வந்த தாத்தா மட்டும் எதையும் மறக்காமல் கை கொடுத்து 'பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்றார். பின்னர் உடனே அப்பாவும் அம்மாவும். மகனைப் பார்த்த மகிழ்ச்சி மட்டுமே பிரதானமாய் இருந்தது அவர்களிடம். தப்பில்லையே. பதிலுக்கு சிரித்துவிட்டு படுக்கையில் விழுந்தேன். 7:30 மணியிலிருந்தே நண்பர்களின் அலைபேசி வாழ்த்து. குறுஞ்செய்தியும் வந்துகொண்டேதானிருந்தது. மகிழ்ச்சிக்குப் பஞ்சமிருக்கக்கூடதுதான்; ஆனால்...

அன்று என் பிறந்தநாளைக் கொண்டாடிய என் பாட்டி, என் தாத்திமா என்று இல்லை. போட்டோவில் தான் ஆசிர்வாதம் வாங்கினேன். என் தம்பி, நான் நாளைக்குத்தான் 22nd னு நினைச்சேன் என்றான், பொறுக்கமாட்டாமல் மதியத்திற்கு மேல் நான் போன் போட்ட போது. என் சித்தி, சித்தப்பா மறக்காமல் வாழ்த்துகளைக் கூறினர். 'அதெல்லாம் யாருக்கு நியாபகமிருக்கு.அக்காதான் நியாபகப்படுத்துவா. இப்ப அவளும் பிசி ' என்றனர் என் சின்ன தாத்தா, பாட்டி. என் அக்காவும் சொன்னது போல் பிசி தான்; இங்கில்லை அமெரிக்காவில். இன்னொரு அக்கா, காலையிலேயே சொல்லி விட்டார் வாழ்த்துகளை. மற்றும் ஒரு அக்கா 'சாரி டா, மறந்துபோச்சு, வெரி சாரி...ப்ளீஸ்' என்றார் அடுத்த நாள் நானே போன் செய்த போது.

'இப்பதான் உனக்கு விஷ் பண்ணலாமுன்னு உங்க அப்பாவுக்கு போன் போட்டேன்' என்று என் அத்தை கை கொடுத்தபோது மணி பின்மாலை 7:30. பின் அவரே போன் செய்து சொல்லி அப்புறம் என் மாமா 'Happy Birthday' சொன்ன போது மணி இரவு 8. (பி.கு: பறந்து பறந்து அன்று பலூன் கட்டி, கலர் பேப்பர் ஒட்டி, போட்டோ எடுத்து, பார்ட்டி ஏற்பாடு செய்த அதே மாமா தான்...)

'கேக் வெட்டுறது, சாக்லேட் கொடுக்குறது எல்லாம் சின்ன பசங்களுக்குதாண்டா...நீ என்ன குழந்தையா?' என்று அம்மா சொன்னதில் தவறு இருப்பதைத் தெரியவில்லை.ஆனால் அது என்ன சின்னக் குழந்தைகள் மட்டும் தான் கேக் வெட்ட வேண்டும் ? யார் போட்ட ரூல்ஸ் இது? புது டிரஸ் எடுக்க வில்லை, எடுக்கத் தோன்றவில்லை (முன்பெல்லாம் என் பாட்டி எனக்கு போலீஸ், வக்கீல் என்று எதாவது சூப்பர் டிரஸ் எடுத்துக் கொடுப்பார்...இப்போது தான் அவரில்லையே...). அன்று என்னக்கு எதுவுமே தோன்ற வில்லை...இன்று தோன்றுகிறதொரு ஆசை...நான் மீண்டும் புதிதாய் பிறக்க வேண்டும்...

You Might Also Like

2 comments

  1. குழந்தைகள் உலகமே தனி அழகுதான்! எல்லாருக்குமே , குழந்தைகள் என்றால் தனி அக்கறை! அதுவே நாம் பெரியவர்கள் ஆகும்போது, குழந்தை மாதிரி என்னை ஏன் நடத்தவில்லை, என்றால் ... அது சரியான கேள்வி அல்ல. உன் மேல் இருக்கும், அக்கறையும், பாசமும் குறைந்து விட்டது என்று அர்த்தம் அல்ல. உன் மீதான பார்வை மட்டும் மாறிவிட்டது. அவ்வளவுதான்! வாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஒரு அழகு உண்டு! நீ குழந்தையாகவே இருந்திருந்தால், உனக்கென வரும் பெண்ணின் கைகளை பற்றிக்கொண்டு, காதலோடு கடற்கரையிலேல்லாம் நடக்க முடியாது~ எனவே அந்த அந்த காலகட்டத்தின் மகிழ்ச்சிகளை நம்மோடு எடுத்து கொண்டு, சென்று கொண்டே இருத்தல் வாழ்க்கையை மிக அழகாக்கும்! மனத்தை கனக்க செய்த ஒரு பதிவு ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. உங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...