Wednesday, January 15, 2014

6 ஆவது பெங்களூரு சர்வதேச திரைப்படவிழா (BIFFES '13) - பாகம் 02

2013 ஆம் ஆண்டு 6 ஆவது பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் நான் கண்ட உலகத்திரைபடங்களைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் தொடரில் இது இரண்டாவது பதிவு.

முதல் பதிவை இங்கு க்ளிக்கிப் படிக்கலாம்.

படங்களுக்குப் போகும்முன் சில விஷயங்கள். இந்தியாவின் மற்ற நகரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது சர்வதேசத் திரைப்பட விழாக்கள் நடத்துவதில் பெங்களூரு தான் கடைக்குட்டி. அதனால் படங்களைக் கொண்டுவருவதிலும், விழாவை ஒருங்கிணைப்பதிலும் சில குழப்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடப்பது சகஜமே. அப்படி இந்த வருடம் நடந்த ஒரு மிகப்பெரிய குளறுபடி, தொடக்க விழா. "கமல் வருகிறார்" என்று ஊரெல்லாம் பெருமையாக தம்பட்டம் அடித்துவிட்டார்கள். அந்த நாளுக்கு காத்திருந்த ரசிகர்களும் விழா நடக்கும் இடத்தில் வந்து குவியத் தொடங்க, யாரும் எதிர்பாராத விதமாக டக்கென்று போலீஸை விட்டு வந்த ரசிகர்களை (உலக சினிமா பார்க்க ரூ500 கொடுத்து 'பாஸ்' வாங்கியிருந்த ரசிகர்களை) அடித்து விரட்டிவிட்டார்கள். சோகம் என்னவென்றால் ஒரு மாதத்திற்கு மேல் நாய் போல் வேலை செய்த விழா ஒருங்கிணைப்பாளர்கள், வாலண்டியர்களுக்கும் இதே நிலைமை தான். அரசியல்வாதிகள் அவர்களது குடும்பங்கள், திரை உலகத்தில் ஒரு சிலர், வி.வி.ஐ.பி க்கள் என்று ஒருசில வர்க்கத்தினர் மட்டும் தான் அனுமதிக்கப்பட்டனர். 2013 ஆம் ஆண்டு கன்னட சினிமா (சாண்டல்வுட்) என்ற ஒன்றும் இருக்கிறது என்று உலகத்திற்குச் சொன்ன 'லூசியா' பவன்குமாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 'போங்கடா நீங்களும் உங்க விழாவும்' என்று பஜரங்கி பார்க்கச் சென்றுவிட்டதாக எழுதியிருந்தார். ஆரம்பமே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருத்தியை ஏற்படுத்தியது. இதே கூத்து தான் சென்னையிலும் நடந்தது என்று கேள்விப்பட்டேன். எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்றால் என்ன தான் செய்வது.

அடுத்த பிரச்சனை - 130 படங்களை 7 நாட்கள் திரையிட்டார்கள். ஒரு நாளைக்கு 5 படங்கள் பார்க்கலாம். மொத்தம் 7 இடங்களில் திரையிடல் நடந்தது - FUN சினிமாஸ் - 3 ஸ்கிரீன்கள், INOX LIDO - 2 ஸ்கிரீன்கள், SULOCHANA INFORMATION CENTER, PRIYADARSHINI. இதில் ஃபன் மாலிற்கும் லிடோவிற்கும் இடையே 5 கி.மீ தூரம். சுலேச்சனா, ப்ரியதர்ஷினி எல்லாம் வேறு வேறு ஏரியாக்கள். அதனால் முடிந்தவரை ஒரே இடத்தில் திரையிடப்படும் படங்களைப் பிளான் செய்ய வேண்டும். இல்லையென்றால் பெரும் பிரச்சனை தான். என் வீட்டிற்கும் இந்த தியேட்டர்களுக்கும் குரைந்தது 12 கி.மீ ஆவது இருக்கும். ஆக எனக்கு எல்லாம் ஒன்றுதான். ஆனால் எனக்கும் அந்த ஏரியாக்களுக்கும் சம்பந்தமே இல்லையென்பதால் நான் முழுக்க முழுக்க Google Maps உதவியுடன் தான் படம் பார்த்தேன். ஃபன் மாலிலிருந்து சுலோச்சனாவைத் தேடிக்கண்டுபிடிக்க எனக்கு ஒரு மணிநேரம் ஆனது. டிராபிக் போலீஸ், ஆட்டோகாரன் யாருக்கும் சுலோச்சனா தெரியவில்லை. Google Maps நன்றாக சுற்றலில் விட்டது. ஒருவழியாக உள்ளே சென்றால் ஒரு சின்ன ஆடிடோரியத்தில் ப்ரொஜெக்டர் வைத்து படம் காட்டினார்கள். எதிர்பார்த்து அரும்பாடு பட்டு சென்ற படம் - செம மொக்கை. வாழ்க்கை வெறுத்துவிட்டது. அருகருகில் வென்யூ இருந்திருந்தால் டக்கென்று அடுத்த படத்திற்கு தாவியிருக்க முடியும். ஆனால் அது முடியாமல் போனது.

அடுத்து Synopsis புத்தகம். வழக்கமாக முதல் நாள் உள்ளே வரும்பொழுதே திரையிடப்படும் படங்களைப் பற்றிய அறிமுகப்புத்தகத்தை ஒரு பையில் போட்டுக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் இந்த முறை அப்படிக் கொடுக்கவில்லை. குறுகிய நேரத்திலேயே தீர்ந்துவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. 2000 பேர் பணம் கட்டி பாஸ் வாங்கியிருக்கிறார்கள் என்றால் 2100 பிரிண்ட்களாவது அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இதுகூடவாடா தெரியாது என்று கேட்டால், "ஸார், புத்தகத்தில் 100 பக்கம் மாற்றி பிரிண்ட் செய்யப்பட்டு வந்தது. அதனால் 2000 புத்தகங்களை திருப்பி அனுப்பி இருக்கிறோம்" என்றார்கள். எனக்கு புத்தகம் கைக்கும் வந்தது 4 ஆம் நாள் இரவு. நான் மொத்தம் 5 நாட்கள் தான் படமே பார்த்தேன்.

வெறும் குறைகளாக சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். குறைகள் குறைவு. அதனால் முதலிலேயே எழுதிவிட்டேன். நிறைகள் நிறையவே இருக்கிறது. அதை அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன். படங்களுக்குச் செல்வோம்.

13 Semesters | Frieder Wittich | 2009 | Germany

அப்படியே என் கல்லூரி வாழ்க்கைக்கு திரும்பப் போய்விட்டு வந்த உணர்வை இந்தப் படம் தந்தது. இதை உலகப்படம் என்றெல்லாம் சொல்லமுடியாது. அக்மார்க் வணிகப்படம். எடுக்கப்பட்ட விதத்தில் உலகத்தரம் இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். Moritz and Dirk இருவரும் நண்பர்கள். ஒரே கிராமத்தில் படித்து வளர்ந்தவர்கள். ஜெர்மனியின் பெரிய பல்கலைக்கழகத்தில் Business Arithmetics படிக்க வருகிறார்கள். படம் இதிலிருந்து தான் தொடங்குகிறது. பல்கலைக்கழகத்தில் இருக்கும் பல்வேறு விதமான மாணவர்களைக் காட்டுகிறார்கள். முதல் நாளே ரூம் விஷயத்தில் நண்பர்கள் பிரிந்து விடுகிறார்கள். Dirk படிப்பில் கவனத்தை செலுத்த Moritz கேளிக்கைகளிலேயே குறியாக இருக்கிறான். ஒவ்வொரு செமஸ்டராக கடந்து போகிறது. பால்ய நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேறு வேறு ஆட்களாகிக்கொண்டே வருகிறார்கள். நடுவில் காதல், காதலிகள், புதிய நண்பர்கள், தொழில்கள் என்று அப்படியே 13 செமஸ்டர்கள் ஓடுகிறது. முழு படமும் ஹீரோவின் பிளாஷ் பேக் ஒன்றில் ஆரம்பித்தாலும் காட்சிகள் லீனியராகவே பயணிக்கிறது. சுவாரஸ்யமான சீக்வென்ஸ்கள் பல இந்தப் படத்தில் உண்டு. தன் காதலியை எப்படி சந்தித்தான், எப்படிப் பிரிந்தான். M-L-M டைப் வியாபாரம் ஒன்றில் மாட்டிக்கொண்டு முழிப்பது என்று அவற்றை எடுத்த விதத்தில் கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டார் இயக்குனர். அப்படி செம ஜாலியாக அமைக்கப்பட்ட ஒரு சீக்வென்ஸ், ஹீரோ ஆஸ்திரேலியாவிற்கு ஒரு செமஸ்டர் படிக்கப் போவது. ஹீரோவின் வாய்ஸ் ஓவரில் போட்டோக்களாக அவை காண்பிக்கப்பட்டது. தன் கேர்ள் பிரண்டிற்கு சொல்லும்பொழுது ஒரு விதமாக, நண்பனிடம் சொல்லும் பொழுது ஒரு விதமாக, வாத்தியாரிடம் சொல்லும்போது ஒரு விதமாக என்று செம ஜாலி போட்டோ சீக்வென்ஸ் அது. கல்லூரி நாட்களை நினைத்து ஏங்குபவர்களுக்கு இந்தப் படம் பிடிக்காமல் போக வாய்ப்பே இல்லை.


Hush…Girls Don’t Scream | Pouran Derakhshandeh | 2013 | Iran

இந்தத் திரைப்பட விழாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் இதுவும் ஒன்று. படத்தின் இயக்குனர் வந்திருந்தார். கையைத்தட்டி ஆரவாரம் செய்து அசத்திவிட்டார்கள் ரசிகப்பெருமக்கள். இரண்டு வருடங்களுக்கு முன் நான் பார்த்த 678 என்ற படத்தின் கரு தான் இதுவும். ஆனால் மனம் கனக்கும் வகையில் அதைச் சொன்ன விதத்தில் தான் இயக்குனர் ஜெய்த்துவிட்டார். திருமணத்திற்கு இன்னும் சிறிது நேரமே இருக்க, மணமகள் மிஸ்சிங். அனைவரும் அவளைத் தேடிக்கொண்டிருக்க வெள்ளை உடை முழுக்க ரத்தக்கரையுடன் மணமேடைக்கு பேயறைந்ததுபோல் வருகிறாள் மணமகள். கொலை குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் தள்லப்படுகிறாள். என்ன ஆனது? யாரைக் கொன்றாள்? ஏன் கொன்றாள் என்பது தான் படம். படம் நிச்சயம் நம் மனதை இறுக்கும். இதுபோல் ஏதாவது ஒரு சென்சிடிவ் விஷயத்தை எடுத்து எதையாவது எடுத்து ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை இயக்குனர். பெண் என்பதால் அவர் எடுத்துள்ள காதல் காட்சிகள் அவ்வளவு அழகாக இருந்தது. பெண் உணர்வைச் சொன்ன விதமும் அருமை. படம் நிச்சயம் பார்க்க வேண்டிய படம், முக்கியமாக வீட்டில் பெண் குழந்தை உள்ளவர்கள்.


Walesa: Man of Hope | Andrzej Wajda | 2013 | Poland

ாலிவுட்டிற்கு ஒரு ஸ்கார்ஸேஸி என்றால் போலாந்திற்கு ஆந்ரே வாய்தா (Andrzej Wajda). முதலாமவருக்காவது வயது 71. ஆனால் தலைவருக்கு வயது 87. இன்னும் நின்று விளையாடுகிறார். போலாந்தின் ஹீரோ - லே வாலேசா (Lech Wałęsa)வின் வாழ்க்கை பற்றிய பயோ-பிக் இந்தப் படம். சாதாரண எலெக்டிரீசியனான வாலேசா எப்படி கம்யூனிச நாடான போலாந்தில் தொழிற்கூடங்களில் நடைமுறையில் இருந்த விதிகளை எதிர்த்து தொழிற்சங்கங்கள் அமைய போராடினார் என்பது தான் இந்தப் படம். ஒரு பத்திரிக்கையாளருக்கு பேட்டி கொடுப்பது போல் தொடங்குகிறது படம். கேள்விகளுக்கேற்றாற்போல வாலேசா வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் விளக்கப்படுகின்றன (Slumdog Millionare போல). செம்ம ஜாலியான, கெத்தான, தனது பேச்சால் செய்கைகளால் எவரையும் கவர்ந்திழுக்கும் ஆசாமியாக வாலேசாவை மிக அருமையாக பிரதிபலித்திருக்கிறார்கள். அவரது மனைவி கதாப்பாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் இருக்கிறார்கள். அனைவரையும் எப்படி இந்த 87 வயது இளைஞர் சமாளித்து வேலை வாங்கினார் என்பது தான் ஆச்சரியம். வாலேசா பற்றி கொஞ்சமாவது தெரிந்தால் இந்தப் படம் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. முதலில் எனக்கு படம் கொஞ்சம் விளங்கவில்லை. சட்சட்டென்று காட்சிகள் தவ்வுவது போலிருந்தது. பின்னர் வாலேசா பற்றி படித்துத் தெரிந்து கொண்டு, பார்த்தவற்றை ரிலேட் செய்து பார்த்த பொழுதுதான் வாய்தாவின் அருமை புரிந்தது.


The Patience Stone | Atiq Rahimi | 2012 | Afghanistan

ந்தத் திரைப்பட விழாவிலேயே என்னை மிரள, மறக்க நினைக்கும் ஆனால் மறக்க முடியாத ஒரு படம் என்றால் அது இந்தப் படம் தான். படம் முழுக்க இரண்டே பிரதான கதாப்பாத்திரங்கள் தான். அதில் ஒன்று பின்னங்கழுத்தில் குண்டடிபட்டு படுத்தபடுக்கையாக இருக்கும். மற்றொரு கதாப்பாத்திரம் அவனது மனைவி. வெளியே தாலிபான்களுக்கும் ராணுவத்திற்கும் நடக்கும் சண்டையில் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்க, கிட்டத்தட்ட பிணமாகிப் போயிருக்கும் தனது கணவனை கவனித்துக்கொண்டு வறுமையில், தனிமையில் தவிக்கும் ஒரு பெண்ணின் கதை தான் The Patience Stone. படம் முழுக்க பெயர் கூடச் சொல்லப்படாத அந்தப் பெண்ணைச் சுற்றித்தான் நடக்கிறது. தன் மனதில் உள்ள ரகசியங்களையெல்லாம் தன் கணவனிடம் அந்தப் பெண் சொல்கிறாள். தங்க்குள்ளே சிரித்துக்கொள்கிறாள், வெட்கப்பட்டுக்கொள்கிறாள், பயப்படுகிறாள், கோபப்படுகிறாள். காதல், காமம், பெண்களின் நிலை, அவர்களுக்கு இருக்கும் மதிப்பு, அவர்கள் நடத்தப்படும் விதம் என்று அனைத்தையும் தன் கணவனுடன் மனம்விட்டு பகிர்ந்துகொள்கிறாள். Golshifteh Farahani என்கிற அழகிய ராட்சசி தான் அந்தப் பெண். ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாடுகளை உடைக்க வேண்டும் என்பதற்காகவே டாப்லெஸாக நடித்து, போஸ் கொடுத்து தடை செய்யப்பட்ட நடிகை இவர். நம் சோனியா அகர்வால் போன்ற சோகம் கலந்த ஒரு அழகிய முகம் இவருக்கு. கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கதாப்பாத்திரத்தின் உணர்வுகளுக்குள் நம்மை இழுக்கும் சக்தி இந்தப் பெண்ணின் நடிப்பிற்கும் குரலுக்கும் இருந்தது. படத்தில் இசையும் இல்லை. அந்த அமானுஸ்ய உணர்வு, குரலிருந்து நான் இன்னும் மீளவில்லை. சினிமா ஒருவனுக்குள் ஏற்படுத்தக்கூடிய உணர்வுகள் மிக அதிகம் என்பதை எனக்கு மீண்டும் உணர்த்திய படமிது. Don't miss it!

Tuesday, January 7, 2014

2013 படங்கள் - ஒரு பார்வை 03 - ஹிந்தி

"வருஷம் தாண்டிப்போச்சே இதுக்கு மேல எதுக்கு எழுதிக்கிட்டு" என்று தான் 2013 ஆம் ஆண்டு நான் பார்த்த ஹிந்தி படங்களைப் பற்றி எதுவும் எழுதாமல் விட்டிருந்தேன். ஆனால் எனது தொடர் வாசகனான நண்பன் ஒருவன் "உன் லிஸ்ட வச்சித்தான் மச்சி நான் படங்கள் பாக்குறேன், எங்க ஹிந்தி பட லிஸ்ட்?" என்று ஒரு பாசக் கேள்வியை வீச கரஞ்சு போச்சு என் பிஞ்சு மனசு, நமக்கு இப்படியொரு வாசகனா என்று. ஸோ, இதோ 2013 ஆம் ஆண்டு ஹிந்திப் படங்கள் ஒரு பார்வை. பாலிவுட்டில் நூற்றுக்கணக்கில் படங்கள் வந்து கோடிக்கணக்கில் வசூலை வாரிக் குவித்திருந்தாலும் நான் பார்த்த, ரசித்த, வெறுத்த, மறந்த படங்களைப் பற்றி மட்டும் இந்த பதிவு. 

இந்தப் பதிவு அந்த நண்பனுக்காக.

முதல் போஸ்டர் நிச்சயம் வெறுப்பைக் கிளப்பியது. ஆனால் படம் அப்படி இல்லை. செம்ம ஜாலியாக இருந்தது. ரா ஒன் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகியிருந்தவர்களுக்கு CHENNAI EXPRESS செம விருந்து. இது போன்ற படங்கள் தான் ஷாருக்கின் பிளஸ். கூடவே சரியான முறையில் தமிழ்நாட்டையையும் கவர் செய்துவிட்டதால் (விஜய் அவார்ட்ஸில் சிவாஜி விருது... ஹி ஹி...) படம் நம் ஊர்களிலும் பட்டையைக் கிளப்பியது. ஹிந்திப் படத்தில் நம் சத்யராஜின் லொள்ளு நன்றாக எடுபட்டிருந்தது. தீபிகாவின் நடிப்பு பற்றிச் சொல்லவேண்டியதில்லை. என்ன தேவையோ அது தாராளமாகவே இருந்தது. ஆனால் அவர் பேசிய தமிழை மட்டும் கொஞ்சம் கவனித்திருக்கலாம். மற்ற தமிழர்கள் எல்லாம் நல்ல தமிழ் பேச இவர் மட்டும் கொலை செய்துகொண்டிருந்தார். மற்றபடி படம் எனக்கு பரம திருப்தி.

சப்-டைட்டில்கள் இல்லாமல் பார்த்த படம் BHAAG MILKHA BHAAG. பாஷை புரியவில்லையென்றாலும் படம் புரிந்தது. வாழும் வரலாறான (Living Legend என்று அர்த்தம் கொள்க. Legend என்பதன் சரியான தமிழ் அர்த்தம் தெரியவில்லை) மில்கா சிங்-ன் வாழ்க்கையை கொஞ்சம் சினிமா மசாலாக்களைக் கலந்து கொடுத்திருக்கிறார்கள். கிரணைட் கல்லை செதுக்கியது போன்ற உடல்வாகில் ஃபர்ஹான் அக்தர் கலக்கியிருந்தார். சற்றே பெரிய படம் ஆனாலும் சுவாரஸ்யமான திரைக்கதை + நல்ல நடிப்பு படத்தை எந்தப் பிரச்சனையுமில்லாமல் நகர்த்தியது. ஒலிம்பிக்ஸ் தோல்வியில் ஆரம்பித்து பாகிஸ்தானிடம் வெற்றி பெறுவதில் முடிந்திருந்தார்கள். ஒலிம்பிக்ஸில் தோற்பதை விட பாகிஸ்தானிடம் ஜெய்ப்பதுதான் நம் மக்களுக்குப் பிடிக்கும் என்று தெரிந்தே திரைக்கதையை அப்படி அமைத்திருக்கிறார் இயக்குனர், ராக்கேஷ் மெஹ்ரா. அவரது கணக்கு தப்பவில்லை. மில்கா சிங் போலவே படமும் வெறி ஓட்டம் ஓடியிருக்கிறது.

வெளியான போது ஆஹா ஓஹோ என்று எல்லோரும் பாராட்டித் தள்ள சப்-டைட்டில்களுக்காக பொறுமையாகக் காத்திருந்து, பின் பார்த்து, பின் நானும் ஆஹோ ஓஹோ என்று பாராட்டிய படம் SPECIAL 26. அக்ஷய் குமார் படங்களை நான் விரும்புவதில்லை. ஆனால் இந்தப் படம் நன்றாக இருந்தது. கூடவே அனுபம் கெர். அவரைப்பற்றிச் சொல்வது மீன்குஞ்சிற்கு நன்றாக நீந்த வருகிறது என்பது போல் இருக்கும். மனோஜ் பாஜபாய் லெவலுக்கு இந்தப் படம் கொஞ்சம் சப்பை தான். ஏன் இருக்கிறார் என்றே தெரியாத ஒரு கதாப்பாத்திரம் என்றால் காஜல் பாத்திரம் தான். படம் முழுக்க ஆஹா ஓஹோ என்று சொல்ல முடியாது. ஆரம்பம், நடுவில் சில காட்சிகள், கடைசி அரை மணிநேரக் கிளைமாக்ஸ். இவை மட்டும்கூடப் போதும் இந்தப் படத்தைக் கொண்டாட.

இந்த வருடம் நான் தியேட்டரில் பார்த்த மூன்று ஹிந்தி படங்களில் முதல் படம் - நான்கு குறும்படங்கள் - BOMBAY TALKIES. நான்கு படங்களும் அற்புதம், உச்சகட்டம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் எடுக்கப்பட்ட விதத்தில் நான்கும் அருமையாகவே இருந்தது. 100 வருட இந்திய சினிமாவிற்கு சமர்பணம் செய்ய இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு முற்றிலும் சினிமா சம்பந்தமான படங்களாக கொடுத்திருக்கலாம். அப்படிப் பார்த்தால் அனுராக் காஷ்யபின் STAR எனக்குப் பிடித்திருந்தது. முக்கியமாக அந்த "முரப்பா" தீம்.

தியேட்டரில் சென்று பார்த்த மற்றுமொரு படம் SHIP OF THESEUS. முக்கால்வாரிப்படம் ஆங்கிலத்தில் தான் இருந்தது. இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கிறேன்.

இந்த வருடம் நான் ரசித்துப் பார்த்த ஒரு படம் என்றால் அது D-DAY தான். கோல்ட்மேன் என்று செல்லப்பெயர் வைத்து அழைக்கப்படும் தாவூத் இப்ராஹிம்மை பாகிஸ்தானில் வைத்துப் பிடிக்க இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தான் படம். அர்ஜுன் ராம்பால் கொஞ்சம் ஜேம்ஸ் பாண்டுத்தனமான சேட்டைகளைச் செய்தாலும் படம் ஒரு அருமையான ஆக்ஷன் திரில்லர். நிச்சயம் மேக்கிங் + திரைக்கதையில் ஹாலிவுட் தரம் என்று தாராளமாகச் சொல்லலாம். வழக்கம்போல இர்ஃபான் கான் கலக்கியிருந்தார். ரிஷி கபூர், நாசர், ஸ்ருதிஹாசன் போன்றவர்கள் அந்தந்த கதாப்பாத்திரங்களுக்கான கச்சிதமான தேர்வு. 2013 ஆம் ஆண்டு வெளியான எந்தப் படம் மிஸ் ஆனாலும் பரவாயில்லை இந்தப் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்பது எனது பரிந்துரை.

சேத்தன் பகத் எழுதும் ஃபில்மி ஸ்டைல் நாவல்கள் எனக்குப் பிடிக்கும். KAI PO CHE! நாவலாக படித்ததைவிட திரையில் அருமையாக இருந்தது. பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுத்திருந்தது அதற்கு ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். நான் பெரிதும் விரும்பிய 'வித்யா' கதாப்பாத்திரம் மட்டும் மொக்கையாக்கப்பட்டிருப்பது போல் தெரிந்தது. அந்த வகையில் இந்தியாவில் வாழ்ந்து இந்தியப் படங்களைப் பார்ப்பது ஒரு சாபம் என்பேன்.

80களில் மும்பையை ஆண்டு கொண்டிருந்த டான்களில் ஒருவனான மான்யா சுர்வே பற்றிய படம் SHOOTOUT AT WADALA. தாவூத் ஆள் ஆவதற்கு முன் அவனுக்கு டஃப் பைட் கொடுத்தவன் தான் இந்த மான்யா என்பது தெரிந்தது. ஜான் ஆப்ரகாமின் நடிப்பு ஒரே மாதிரியே இருந்தாலும் பரவாயில்லை, பார்க்கலாம் என்ற வகையில் இருந்தது. கங்கனா ராவட் இந்தப் படத்திலும் சிலபல போல்ட் சீன்களில் கலக்கியிருக்கிறார். ஆக்ஷன் சீன்களும், சில சேஸ்களும் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை விட இதன் முந்தைய பாகமான (கதைப்படி அடுத்து நடந்த) SHOOTOUT AT LOKHANDWALA எனக்கு முகவும் பிடித்த படம். வாண்டாலாவை மிஸ் செய்தாலும் லோகண்ட்வாலாவை தவற விடவேண்டாம்.

என்னமோ ஏதோ என்று ஆவலாக பார்க்க உட்கார்ந்த படம் B.A.PASS. சாதாரண படம் தான் ஆனால் புதிய ப்ளேவரில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் Ajay Bahl. டெம்ப்ளேட் கதை. டெம்ப்ளேட் கிளைமாக்ஸ். நியோ நாயர் ஸ்டைல் படத்தை கொஞ்சம் வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. கிகோலோஸ் இந்தியாவிற்கு கொஞ்சம் புதிது என்பதால் படம் சென்சேஷனல் அந்தஸ்த்து பெற்றுவிட்டது. இது போன்ற ஒரு கதையை அமரர் சுஜாதா எழுதிப் படித்ததாக நியாபகம்.

RGV பேக் டு பார்ம் எடுத்த படம் ATTACKS OF 26/11. என்ன எதிர்பார்த்து பார்க்கிறோமோ அது இந்தப் படத்தில் இருந்தது. இது போன்ற உண்மைச் சம்பவங்களைப் படமாக எடுப்பதில் மனிதர் கில்லி என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்தப் படத்தின் கூடுதல் பலம் கசாப் ஆக நடித்தவரின் திறமை. எனக்கு RGV யின் ரத்தசரித்திரம் இரண்டு பாகங்களும் பிடித்தது. மும்பை தொடர் குண்டு வெடிப்புகள் பற்றி அனுராக் எடுத்த Black Friday (2004) படமும் பிடித்த படமே.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் "சரி பார்க்கலாம்" என்று உக்கார்ந்து கொஞ்சமே கொஞ்சம் மிரண்ட படம் - SHORTS. ஐந்து குறும்படங்களை உள்ளடக்கியது. SUJATA என்ற முதல் படமும் SHOR என்ற கடைசி படமும் எனது பேவரிட். AUDACITY என்ற படமும் செம ஜாலியான படமே. மீதி இரண்டு படங்கள் கண்ணாபின்னவென்று இருந்தது. புரியவில்லை. மலையாள 5 சுந்தரிகள் போல 5 விதமான பெண்களைப் பற்றிய படம். இதுபோன்ற வித்தியாச முயற்சிகள் பாலிவுட்டில் வந்தாலே அதில் அனுராக் காஷ்யப் ஏதாவது ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறார். இதில் தயாரிப்பாளர். 

ஆபீஸ் கசமுசாக்களை கச்சிதமாக திரையில் காட்டியிருந்த படம் INKAAR. அர்ஜுன் ராம்பால் செம ஸ்மார்ட் ஆக்டிங். ஹீரோயின் நடிப்பும் பாராட்டும்படியாகவே இருந்தது. இந்தப் படத்தில் நடப்பது போல் தான் இப்பொழுது பெரும்பாலான கார்ப்பரேட்களில் நடக்கிறது என்பது தான் கசப்பான உண்மை. நிச்சயம் பார்த்து, தெரிந்து கொள்ள வேண்டிய படம்.

நண்பர் கீதப்பிரியன் சிபாரிசில் பார்த்த படம் MICKEY VIRUS. செம்ம கலர்ஃபுல்லான யூத் படம். 'ஆரம்பம்' ஆர்யா போன்ற ஒரு ஹேக்கர் தான் ஹீரோ. பல டெக்னிக்கல் ஜிலேபிகளைப் போட்டு அசத்தியிருந்தார்கள். கவர்ச்சிக்காமெடிப்படம் போல் தெரிந்தாலும் கொஞ்சம் த்ரில் கலந்து கொடுத்த விதத்தில் ஜெயித்திருக்கிறார்கள். யோ யோ பாய் கேரக்டருக்கு பொருந்திப் போகும் ஒரு ஹீரோ. அப்புறம் ஒரு செம்ம ஹாட் ஹீரோயின். 

துப்பாக்கி வில்லன் Vidyut Jamwal-ற்காகவே பார்த்த படம் COMMANDO. ஒன் மேன் ஆர்மி என்ற டேக் லைனிற்கு துரோகம் செய்யாமல் படம் எடுத்திருக்கிறார்கள். ஆனால் மயிர்கூசும் ஸ்டண்ட்களில் கவனம் இருந்த அளவிற்கு கதையில் கவனம் இல்லை. ரா ஆக்ஷன் படமே என்றாலும் கொஞ்சம் சால்ட், பெப்பர், மசாலா எல்லாம் போட்டுக் கொடுத்தால் தான் நம் மக்களுக்குப் பிடிக்கும். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

நன்றாக இருக்குமோ என்று நினைத்து மொக்கை வாங்கிய படம் ANY BODY CAN DANCE (ABCD). டெம்ப்ளேட் கதை. படம் நெடுக பிரபுதேவா புகழ் தான். இறுதி ஆட்டமான கணபதி பாப்ஆ மோரியா அற்புதம். சமீபத்தில்கூட ஏதோ ஒரு சேனலில் பார்க்கும் போது புல்லரித்தது. 3Dயில் ஏன் இந்தப் படத்தை வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை.

ஆசையாக பார்க்க உக்கார்ந்து மொக்கை வாங்கிய மற்றொரு படம் GHANCHAKKAR. வித்யா பாலன் கண்டமேனிக்கு உடை அணிந்து வந்ததால் மட்டுமே படம் வித்தியாச படமாகி விடும் என்று நினைத்துவிட்டார்களோ என்னமோ தெரியவில்லை. குட்டியாக ஒன்றிரண்டு கில்மா சீன்கள் வேறு. எதுவும் எடுபடவில்லை. அருமையான ஒன்-லைன். ஆரம்ப பேங்க் கொள்ளைகூட நன்றாகத்தான் இருந்தது. ஆனால் போகப்போக பேசிப்பேசியே சாகடித்துவிட்டார்கள். வித்யாவின் 'ஹ' மட்டும் நன்றாக இருந்தது. என்னைப் போன்ற பாஷை புரியாதவர்களுக்கு இருக்கும் பிரச்சனை அவர்களுக்குப் புரியவில்லை. இம்ரான் ஹஸ்மி சுவற்றில் அடித்த சாணம் போன்ற தனது அருமையான நடிப்பு / முகபாவனைகளால் என்னைக் கவர்ந்தார்.

நாம் பார்த்து பார்த்து சலித்துப் போன நமது தனுஷ் நடிப்பில் வந்த படமான RAANJHANAA படம் என்னைப் பெரிதாகக் கவரவில்லை. கதையையும் தனுஷின் நடிப்பையும்விட என்னை வெகுவாகக் கவர்ந்தவை ரஹ்மானின் இசையும் 'மிளகா' நட்டி நட்ராஜின் ஒளிப்பதிவும் தான். தமிழில் வெளியான படமெல்லாம் ஊத்திக்கொண்டிருக்கும் வேளையில் ஹிந்தியில் பெரிய வெற்றி அடைந்திருக்கிறார் தனுஷ். நல்லதுதான்.

பார்க்கவே கூடாது என்று நினைத்து ஆனாலும் பார்க்கத் தொடங்கிய படம் MADRAS CAFE. அரைமணிநேரத்திற்கு மேல் முடியவில்லை. டெக்னிக்கலாக இந்தப் படம் இந்திய சினிமாவில் ஒரு மைல் கல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் எதைக் காட்டுகிறோம் என்பதில் ஒரு அக்கறை இருக்க வேண்டும். தமிழகத்தில் வெளியாகவே இல்லை. வேறு எங்கும் பெரிதாக வசூலித்ததாகவும் தெரியவில்லை. பணம் விரயமானது தான் மிச்சம்.

சென்ற வருடம் கோடிகளைக் கொட்டி எடுக்கப்பட்ட குப்பைகளில் முதல் இடத்தில் இருப்பது KRRISH 3. தியேட்டரில் பார்த்தேன். ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியைக் காட்டி இது தான் மும்பை சிட்டி என்று காட்டிய போதே படம் எப்படி என்று தெரிந்துவிட்டது. இத்தனைக்கும் படத்திற்கு போவதற்கும் முன் விமர்சனமெல்லாம் படித்துவிட்டுத் தான் சென்றிருந்தேன். இருந்தாலும் சூ..கொழுப்பு, சூடு வாங்கிக் கொண்டு வந்தேன். படத்தில் ஒன்றுமே இல்லை. சும்மா சும்மா மார்லின் மன்ரோ போஸில் கிருஷ் நின்றுகொண்டிருந்தது தூக்கத்தை வரவழைத்தது. வில்லனைக் கண்டால் எரிச்சல் தான் வந்தது. உட்கார முடியவில்லை. நான் ரசித்த ஒரே கதாப்பாத்திரம் கங்கனா ராவட். செம ஹாட், செம பெர்பாமென்ஸ். படம் 200, 300 கோடிகளைத் தாண்டி வசூலித்துள்ளதாம். வசூலிக்கட்டும் வசூலிக்கட்டும்...

இரண்டாம் இடம் RACE 2. ரேஸ் முதல் பாகம் உண்மையிலேயே ஒரு ஆச்சரியம். ஒரு படத்தில் ஒன்றிரண்டு டுவிஸ்ட் இருக்கலாம். ஆனால் காட்சிக்கு காட்சி ஒன்றிரண்டு டுவுஸ்ட் வைத்து மிரட்டிய படம் ரேஸ் 1. ஆனால் இந்த இரண்டாம் பாகம் குப்பை. தீபிகாவைப் பார்க்கச் சகிக்கவில்லை. இதில் அமீஷா பட்டேல் வேறு. கெரகம்...

இவை தவிர அவசியம் பார்க்க வேண்டும் என்று நினைத்துள்ள படங்கள் கீழ்வருமாறு.

1) Lunchbox - பலநாட்களாகக் காத்திருக்கிறேன். நல்ல பிரிண்ட் + சப்-டைட்டில்களுக்காக வெயிடிங்
2) Shahid - தரவிறக்கம் முடிந்தது. கூடிய விரைவில் பார்த்துவிடுவேன்
3) Lootera - 50'களில் நடக்கும் காதல் காவியக் கதை என்கிறார்கள். அதனாலேயே ஒரு தயக்கம். 
4) Grand Masti - அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிட வேண்டும்
5) Dhoom 3 - இன்றைய தேதிக்கும் 500 கோடி வசூலித்திருக்கும் ஒரே இந்தியப் படம். பார்த்தே ஆகவேண்டும்.
6) Satya 2 - RGV படம். அந்த ஒரு காரணத்திற்காகவே பார்ப்பேன்.
7) Shuddh Desi Romance - பர்னீத்தி சோப்ரா. வேறென்ன சொல்ல.
8) Aashiqui 2 - இந்தப் பெயரைக் கேட்டாலே சிலர் உருகுகிறார்கள். பார்க்க வேண்டும்.
9) Ram-Leela - நல்ல பிரிண்ட் + சப்-டைட்டில்களுக்காக வெயிடிங்
10) Ankur Arora Murder Case / Aurangazeb / Yeh Jawani Hai Dewani / Saheb, Biwi Aur Gangster Returns - இவையெல்லாம் நன்றாக இருக்கிறது என்று கேள்விப்பட்ட படங்கள்.

இவை தவிர நல்ல படங்கள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். பார்த்துவிடுகிறேன்.

மச்சி - திருப்திதான?

Thursday, January 2, 2014

6 ஆவது பெங்களூரு சர்வதேச திரைப்படவிழா (BIFFES '13) - படங்கள் - பாகம் 01

இந்தியா முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு ஒரு பெரும் சுற்று சுற்றிவிட்டு ஆண்டு இறுதியில் பெங்களூருக்கு வந்த உலக சினிமாக்களில் சுமார் 20 படங்களைப் பார்க்கும் வாய்ய்பு எனக்கு ஆறாவது பெங்களூரு சர்வதேச திரைப்பட திருவிழாவின் மூலம் கிடைத்தது. நாம் தினம் பார்க்கும் கமர்ஷியல் படங்களைப் போல் ஆரம்பிப்பதும் தெரியாமல் முடிப்பதும் தெரியாமல் மறப்பதும் தெரியாமல் இருப்பவையல்ல உலக சினிமாக்கள். அவற்றைப் பார்க்க பொறுமை மிக மிக அவசியம், அவை நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம் என்பது நான் பல நாட்களுக்கு முன் கண்டுபிடித்த ஒரு மாபெரும் உண்மை, ரகசியம். பிறகு எதற்கு இவ்வளவு ஆர்பாட்டமாக திரைப்பட விழாவிற்கு கிளம்ப வேண்டும், சோறு தண்ணி தூக்கம் இல்லாமல் நத்தை வேகத்தில் பொறுமையாகப் போகும் படங்களாகப் பார்த்துத் தள்ள வேண்டும். வெறுமனே பெருமைக்காகவா? நிச்சயமாக இல்லை நண்பர்களே. கடவுள் பக்தி உடையவர்களுக்கு தூணிலும் துரும்பிலும், வீட்டருகிலேயே இருக்கும் கோவிலிலும் இருக்கும் கடவுளை ஒரு நிமிடம் நின்று கும்பிட பொறுமை, நேரம் இருக்காது. அதே ஆபீஸில் லீவ் சொல்ல வேண்டும், செலவு செய்து மலையேற வேண்டும், மணிக்கணக்கில் க்யூவில் நிற்க வேண்டும் என்று தெரிந்தும் வருடத்திற்கு ஒரு முறையாவது ஏழுமலையானையோ மற்ற இஷ்டதெய்வத்தையோ தரிசிக்க கிளம்பிப் போகும் பொறுமை இருக்கும். அப்படித்தான் உலக சினிமாக்களும். எங்கும் இருக்கும் இறைவன் தான் என்றாலும், அவனுக்கான வழிபாட்டுத் தளங்களில் சென்று தரிசிக்கும் பொழுது ஒரு தனி இன்பம் + திருப்தி கிடைக்கும், பொறுமை + நேரம் இருக்கும். வீட்டிலேயே அருமையாக டவுண்லோட் செய்து சாவகாசமாக எந்த வித தொந்தரவும் இல்லாமல் உலக சினிமாக்களைப் பார்க்க முடியும். ஆனால் அந்த அளவிற்கு எனக்கு நிச்சயம் பொறுமை கிடையாது. 90 நிமிடங்கள் ஓடும் ஒரு உலக சினிமாவைப் பார்ப்பதற்கு எனக்கு குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். நல்ல சினிமாக்களை எப்படியும் பார்த்து விட வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும், பொறுமை இருப்பதில்லை. ஒரு மனதாக, நிலையாக ஒரே இடத்தில், அமர்ந்து, pause பட்டனை உபயோகிக்காமல், படம் சொல்லும் விஷயத்தை உள்வாங்கி என்னால் நல்ல சினிமாக்களைப் பார்க்கவே முடிவதில்லை. ஆக்ஷன், த்ரில்லர், அட்வென்சர், வார் படங்களை என்னால் எந்தச் சிரமும் இல்லாமல் பார்க்க முடியும். ஆக, பெர்சனலாக நல்ல சினிமா பார்த்துக் கற்றுக்கொள்ள எனக்கிருக்கும் ஒரே சாய்ஸ், இதுமாதிரியான திரைப்பட விழாக்கள் மட்டும் தான். வேறு எந்த நினைப்பும் இல்லாமல் ஐந்து நாட்கள் சினிமா சினிமா சினிமா மட்டும் தான், அதுவும் நல்ல சினிமாக்கள் என்பது தான் தனிச்சிறப்பு. சினிமா எனக்கிருக்கும் ஒரே பொழுதுபோக்கு. ஒரு அருமையான ஆண்டை சந்தோசமாக வழியனுப்பி வைக்க இதைவிட ஒரு சிறந்த வழி எனக்கு இருக்க முடியாது. மனதார அனுபவித்து ரசித்து சந்தோஷமாகக் கழித்தேன் அந்த ஐந்து நாட்களையும்.

சரி சொந்தக் கதை போதும். விஷயத்திற்கு வருகிறேன். இந்த திரைப்பட விழாவில் 20 படங்களைப் பார்த்தேன் என்று சொன்னேன் அல்லவா - அவற்றை 5 பதிவுகளில் உங்களுக்கும் அறிமுகம் செய்து வைப்பது தான் எனது நோக்கம். சில படங்கள் இணையத்தில் இப்பொழுதே கிடைக்கின்றன. தரவிறக்கிப் பார்த்து விடுங்கள். திருப்பதிக்கு சென்ற திருப்தி கிடைக்காது, ஆனாலும் பரவாயில்லை, போட்டோ பார்த்தாவது கும்பிட்டுக் கொள்ளுங்கள்.

Dozakh in search of heaven | Zaigham Imam | 2013 | India


இன்னும் விடிந்திராத ஒரு அதிகாலைப் பொழுதில் ஒரு பெரியவர் தூங்கி எழுந்து பொறுமையாகக் கிளம்புகிறார். அவர் முஸ்லீம் என்பது தெரிகிறது. அதிகாலைத் தொழுகைக்காக மசூதிக்கு கிளம்புகிறார். ஆனால் அவருக்கு முன்னமே எழுந்து பூஜைகளை முடித்து மணியடித்துக்கொண்டே மைக்கில் சத்தமாக காயத்ரி மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார் தெருவில் இருக்கும் இந்து பண்டிதர். மந்திர சத்தம் பலமாக ஒலிப்பதால் மைக்கில் இறைவணக்கம் சொல்ல முடியாமல் சிரமப்படுகிறார். ஒருவழியாக சகித்துக்கொண்டு “அல்லாஹு அக்பர்” என்று தன் தொழுகையைத் தொடங்குகிறார். காயத்ரி மந்திரமும் தொழுகைச் சத்தமும் மணியோசையுடன் கலந்து கேட்கிறது. ஊர் வாரனாசி – இப்படித்தான் தொடங்குகிறது Dozakh – In Search of Heaven திரைப்படம். Dozakh என்றால் நரகம் என்று பொருள். அந்த முஸ்லீம் பெரியவருக்கு 12 வயதில் ஒரு மகன் இருப்பதும் அவன் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததும் தெரிகிறது. முன் பின் நான்-லீனியராகப் போகும் கதையில் அந்தச் சிறுவனைப் பற்றியும், அவனது தாயைப் பற்றியும், இரண்டு மதங்களும் அவை சார்ந்த சடங்குகளும், மனிதர்களும், நம்பிக்கைகளும், கதைகளும் அந்தச் சிறுவனுக்குள் ஏற்படுத்தும் குழப்பங்களை நாம் தெரிந்துகொள்கிறோம். அந்த சிறுவன் கிடைத்தானா, அவனுக்கு என்ன ஆனாது, ஏன் காணாமல் போனான் என்பதை அருமையாக, உருக்கமாக சொல்லியிருக்கிறார்கள்.

உலக சினிமா பார்க்க வந்துவிட்டு முதல் படமே இந்தியப் படமாக இருக்க வேண்டுமா என்று யோசித்துக்கொண்டே தான் உள்ளே சென்றேன். இந்தப் படத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. முற்றிலும் அன்-பிளான்டாகத்தான் இந்தப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். ஆனாலும் படம் என்னை அசத்திவிட்டது. படத்திலிருக்கும் ஒரே மாபெரும் குறை வசனங்களும், டப்பிங்கும் தான். அருமையான கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, கதாப்பத்திரத் தேர்வு, நடிப்பு என்று மற்ற ஏரியாக்களில் எல்லாம் கலக்கியவர்கள் ஒலியமைப்பில் சொதப்பிவிட்டார்கள். ஆனாலும் படம் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் நான் பார்த்த முதல் படமே நல்ல படம் என்ற சர்டிபிக்கேட் பெறுகிறது.

Harmony Lessons | Emir Baigazin | 2013| Kazakhstan

படம் முழுக்க சிறுவர்களைப் பற்றித்தான் என்றாலும் இது முழுக்க முழுக்க கஸகஸ்தான் நாட்டின் அரசியல் சூழலை பற்றிப் பேசும் / துகிலுரிக்கும் படம். படத்தின் முதல் காட்சியே படம் எப்படி இருக்கப் போகிறது என்பதை நமக்குச் சொல்லிவிடுகிறது. பனி படர்ந்த ஒரு இடம். அங்கு பொறுமையாக ஒரு ஆட்டை துரத்தி துரத்தி பிடித்து, அதன் கால்களைக்கட்டி, கழுத்தை அறுத்து, ரத்தத்தை ஒரு பாத்திரத்தில் பிடித்து, உடலை தலைகீழாகத் தொங்கவிட்டு, தோலுரித்து, பாகங்களை வெளியே எடுத்துப்போட்டு, மாமிசத் துண்டுகளாக வெட்டி தன் பாட்டியிடம் கொடுக்கிறான் 13 வயதுச் சிறுவனான அஸ்லான் (Aslan). மறுநாள் பள்ளியில் நடக்கும் ஒரு மருத்துவ பரிசோதனையின் போது போலாட் (Bolat) என்கிற ஒரு அடாவடிச் சிறுவனது சதியால் மற்ற சிறுவர்கள் தங்களது லுல்லாவை விட்டு எடுத்த தண்ணீரைக் குடித்துவிடுகிறான் அஸ்லான். அன்றிலிருந்து மற்ற சிறுவர்களின் கேலிக்கூத்திற்கு ஆளாகிறான். போதாத குறைக்கு அவனிடம் யாரும் பேசக்கூடாது என்று தடை வேறு விதித்து விடுகிறான் ‘கேங்லீடர்’ போலாட். மனதளவில் வெகுவாக பாதிக்கப்படும் அஸ்லான் தன்னை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக தீவிரம் காட்டுக்கிறான். அசிங்கம் / நோய் இவற்றைப் பரப்புவதே கரப்பான்பூச்சிகள் தான் என்று டி.வியில் சொல்ல, விதவிதமாக அவற்றைப் பிடித்துக் கொல்கிறான் (மரண தண்டனை விதிக்கிறான் என்று சொன்னால் சரியாக இருக்கும்). நாளுக்கு நாள் போலாட் மீதான வெறுப்பும் அதிகமாகிறது. அந்தச் சமயத்தில் நகரத்திலிருந்து மிர்ஸயன் (Mirsayan) என்ற சிறுவன் புதிதாக பள்ளியில் வந்து சேர்கிறான். ஆஸ்லானுடன் நட்புடன் பழகுகிறான். ஆஸ்லான் – போலாட் - மிர்ஸயன் இவர்களுக்கு என்ன ஆனது என்பதை பொறுமையாக, உலக சினிமாக்களுக்கான இலக்கணம் மாறாமல் சொல்லியிருக்கிறார்கள்.

பள்ளியில் இளம்பவயதிலேயே எப்படி வன்முறை வளர்கிறது என்பதை அருமையாக பொறுமையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். போலாட் சிறுவன் வருங்காலத்தில் மிகப்பெரிய மாஃபியா தலைவனாக வரும் அனைத்து தகுதிகளும் கொண்ட கதாப்பாத்திரம். இந்தப் படத்தில் இசையே கிடையாது. நம் “வீடு” திரைப்படம் போல பல முக்கிய காட்சிகளை நமது கற்பனைக்கே விட்டுவிடுகிறார் இயக்குனர். வசனங்களாகப் பேசித் தள்ளாமல் பொறுமையாக நம்மை அந்த உலகிற்குள் கூட்டிச் செல்கிறார் தனது காட்சிகளின் மூலம். வன்முறையை கதைக்களனாகக் கொண்ட படங்கள் எனக்குப் பிடிக்காது. இருந்தாலும் இந்த ஹார்மொனி லெசன்ஸ் படத்தை என்னால் மறக்க முடியவில்லை.


The Amazing Catfish | Claudia Sainte-Luce | 2013 | Mexico

தனிமையிலேயே வாழ்க்கையைக் கழிக்கும் இளம்பெண், கிளாடியா (Claudia) – சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்கிறாள். வய்ற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவளுக்கு பக்கது பெட் மார்த்தா (Martha) உடன் பழக்கம் ஏற்படுகிறது. மார்த்தாவிற்கு மூன்று கணவன்கள் மூலம் பிறந்த நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு விதம். வேலை, காதலனுடன் பிரச்சனை என்றிருக்கும் சீரியஸாகவே சுற்றும் மூத்த பெண், வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் என்பதே தெரியாமல் தேமே என்று எது கிடைத்தாலும் வாயில் போட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கும் குண்டுப் பெண், சதாசர்வகாலமும் மேக்கப், அலங்காரம் என்று கண்ணாடி + சீப்பிலேயே + போன் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பருவப் பெண், மூன்று அக்காக்களுடன் வளரும், பருவ வயது சந்தேகங்கள் அனைத்தும் உள்ள ஒரு சிறுவன். இவர்கள் தான் மார்த்தாவின் பிள்ளைகள். ஒருவர் மீது மற்றவருக்கு எந்த அக்கறையும் இல்லை. போதாதகுறைக்கு மார்த்தாவிற்கு எய்ட்ஸ் நோய். இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் மார்த்தா தனது குடும்பத்தை வெகுவாக விரும்பும் ஒரு பெண். தேரோத்திருவிழாவாக இருக்கும் அந்தக் குடும்பத்தில் வலுக்கட்டாயமாக பக்கத்து பெட் கிளாடியாவையும் இழுத்து விடுகிறாள் மார்த்தா. கொஞ்சம் கொஞ்சமாக கிளாடியாவும் அந்தக் குடும்பத்தில் ஒரு அங்கமாகிறாள். அங்கம் என்றால் “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” என்றில்லை. எல்லாரும் அந்த வீட்டில் இருப்பார்கள் அவரவரது வேலையைச் செய்வார்கள், கிளாடியாவும் சேர்ந்து கொள்கிறாள். குடும்பம் என்பதே புதிதாக இருக்கும் கிளாடியா கொஞ்சம் கொஞ்சமாக மார்த்தாவின் நான்கு பிள்ளைகளுடனும் நெருக்கமாகிறாள், அவர்களுக்கு உதவுகிறாள். மார்த்தாவின் நோயும் தீவிரமடைந்துகொண்டே வருகிறது. இறுதியில் என்ன ஆனது என்பது தான் கதை.

“மகளிர் மட்டும்” என்று பெயர் வைத்திருக்கலாம். அந்த சிறுவன் மட்டும் தான் பிரதான ஆண் கதாப்ப்பாத்திரம். படத்தில் ஏகப்பட்ட பெண்கள். கிளாடியாவை வழுக்கட்டாயமாக இழுத்து வந்துவிட்டு மயிராப் போச்சு என்று அவரவர் வேலையைப் பார்க்கும் பொழுது எரிச்சல் தான் வரும். ஆனால் கிளாடியா மார்த்தாவிற்காக மீண்டும் மீண்டும் அந்தக் குடும்பத்திற்குள் வருகிறாள். தன்னால் முடிந்தவற்றைச் செய்கிறாள். அடித்து தூள் கிளப்பியிருக்க வேண்டிய விக்ரமன் கதை. ஆனால் சொதப்பிவிட்டார்கள் என்பதே எனது கருத்து. அடுத்து என்ன நடக்கும் என்பதை குழந்தை சொல்லும் அப்படியொரு அசதியான, வீக்கான திரைக்கதை. பிடிக்கவில்லை.


Like Father, Like Son | Hirokazu Koreeda | 2014 | Japan

முதல் நாள் நான் பார்த்த படங்களிலேயே ஒரு அட்டகாசமான படமென்றால் அது லைக் ஃபாதர் லைக் சன் தான். உலக சினிமாவும் வணிக சினிமாவும் சரியான விகிதத்தில் கலக்கும் பொழுது இப்படி ஒரு மேஜிக் நிகழும். சதாசர்வகாலமும் வேலை, பணம் என்று கெத்தாக இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு கூட்டிற்குள் வாழ்ந்துகொண்டிருப்பவன் ரயோட்டா (Ryota). அவனது அன்பான, அமைதியான மனைவி மிடோரி (Midori) இவர்களது 6 வயது மகன் கெய்டா (Keita). ஒரு நாள் கெய்டா பிறந்த மருத்துவமனையிலிருந்து போன் வருகிறது. விஷயத்தைச் சொல்லாமல் கிளம்பி வாருங்கள் என்று மட்டும் சொல்கிறார்கள். சென்று பார்த்தால் “ஒரு சின்ன தப்பு நடத்துபோச்சு... கெய்டா உங்க மகன் இல்ல. அன்னிக்கி பிறந்த ருய்ஸி (Ryuse) தான் உங்களுக்கு பிறந்த மகன். குழந்தைகள் மாறிப் போச்சு” என்று நிதானமாகச் சொல்கிறார்கள். ருய்ஸி வளர்வது யுடாய் - யுகாரி என்ற நடுத்தர வர்கத்து தம்பதியிடம். அவர்களுக்கும் விஷயம் சொல்லப்படுகிறது. பெற்றவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எப்படியும் ஒரு முடிவிற்கு வந்துதான் ஆக வேண்டும் என்பதால் சில சந்திப்புகளுக்குப் பிறகு, தங்களிடம் வளரும் மகன்களை வாரம் ஒரு நாள் மாற்றிக்கொள்ள முடிவு செய்கிறார்கள். 6 வருடங்கள் ஆசையாக வளர்த்த மகனா அல்லது பெற்ற மகனா, என்ன நடந்தது என்பது தான் மீதிக் கதை.


டாரெண்டில் படம் வந்தவுடன் படக்கென்று டவுண்லோட் செய்து பார்த்தே தீர வேண்டிய படம் இது. இரண்டு தந்தைகளுக்கும் உள்ள வித்தியாசம், இரண்டு தாய்களுக்கும் இருக்கும் ஒற்றுமை, இரான்டு மகன்களும் வளர்ந்த விதத்தால் நடந்து கொள்ளும் விதம் என்று படம் முழுக்க பல அருமையான விஷயங்கள் உள்ளன. இரண்டு சிறுவர்கள் உட்பட முக்கிய கதாப்பாத்திரங்கள் அனைவரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஐந்து நாட்களில் நான் கண்ட அற்புதமான சினிமாக்களில் இந்தப் படமும் ஒன்று.

Wednesday, January 1, 2014

2013 தமிழ் சினிமா - பெஸ்ட், வொர்ஸ்ட், Ok 10 படங்கள்

2013 ஆம் ஆண்டின் கடைசிப் பதிவாக இருக்க வேண்டிய 2014 ஆம் ஆண்டின் முதல் பதிவாக உள்ளது. அதனால் என்ன, பரவாயில்லை.

சென்ற வெளியான படங்களில் அலெக்ஸ் பாண்டியன், கண்ணா லட்டு தின்ன ஆசையா, சமர், கடல், டேவிட், விஸ்வரூபம், வனயுத்தம், ஆதி-பகவன், ஹரிதாஸ், பரதேசி, வத்திக்குச்சி, சென்னையில் ஒரு நாள், கேடி பில்லா கில்லாடி ரங்கா, சேட்டை, கெளரவம், உதயம் NH4, நான் ராஜாவாகப் போகிறேன், யாருடா மகேஷ், எதிர்நீச்சல், மூன்று பேர் மூன்று காதல், சூது கவ்வும், நாகராஜ சோழன் M.A M.L.A, நேரம், குட்டிபுலி, தீயா வேல செய்யணும் குமாரு, தில்லு முல்லு, சிங்கம் II, மரியான், பட்டத்து யானை, சொன்னா புரியாது, 555, ஆதலால் காதல் செய்வீர், தலைவா, தேசிங்குராஜா, தங்கமீன்கள், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மூடர்கூடம், 6 மெழுகுவர்த்திகள், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், ராஜா ராணி, இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வணக்கம் சென்னை, சுட்ட கதை, ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா, பாண்டியநாடு, பிட்ஸா II, இரண்டாம் உலகம், விடியும் முன், தகராறு, இவன் வேற மாதிரி, பிரியாணி, என்றென்றும் புன்னகை, கல்யாண சமையல் சாதம் ஆகிய படங்களைக் கண்டுள்ளேன். 95% தியேட்டரில் தான் பார்த்தேன். சில படங்கள் பெங்களூரில் வெளியாகவில்லை என்பது தான் பிரதான காரணம்.

ஓ.கே முதலில் நான் பார்த்த படங்களில் டாப் 10 படங்களைச் சொல்லிவிடுகிறேன்.

10) 6 மெழுகுவர்த்திகள்
மையக்கதை மிகவும் சிம்பிளாக இருந்தாலும், கதையை கொண்ட்டு சென்ற விதம், கொடுத்திருக்கும் உழைப்பு அபாரமானது. பல இடங்களில் இதயம் கனத்து கண்களில் நீர் கோர்த்தது. இன்னும் கொஞ்சம் சிறப்பாக எடுத்திருந்தால் படம் படு கிளாஸாக இருந்திருக்கும்.

9) பாண்டிய நாடு
நரம்பு புடைக்க, கண்கள் சிவக்க எத்ரிகளை பறக்க விட்டுக்கொண்டிருந்த விஷால் அடக்கி வாசித்திருந்த படம். சுசீந்திரன் கதைக்காகவெல்லாம் ரொம்ப மெனக்கெடவில்லை. தனது முந்தைய படமான நான் மகான் அல்ல டைப் கதையையே கொஞ்சம் பட்டி டிங்கடிங் பார்த்து ஜெயித்து விட்டார்.

8) ஆதலால் காதல் செய்வீர்
முதல் பாதியில் பார்த்து சலித்துப் போன பருவ வயதுக்காதலைச் சொன்ன சுசீந்திரன், இரண்டாம் பாதியில் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார். யதார்த்தமாக, உண்மையாக இருந்தது படம். இவ்வளவு பொருத்தமான கிளைமாக்ஸை நான் எந்த சமீபத்திய படத்திலும் காணவில்லை.

7) ஹரிதாஸ்
என்கவுன்டர் போலீஸ் அதிகாரி ஒரு பக்கமும், பாசமுள்ள தந்தை ஒரு பக்கமும் வெவ்வேறு தளத்தில் பயணிக்கும் கதை. இரண்டு சம்பந்தமில்லாத டிராக்குகளை எந்த வித சமரசமும் இல்லாமல் தெளிவாகக் கொடுத்திருந்தார் இயக்குனர் குமாரவேலன்

6) கல்யாண சமையல் சாதம்
இந்த வருடம் நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம் இது. எடுத்துக்கொண்ட கதைக்கு, வகைக்கு (Genre) ஏற்ற ஸ்கிரிப்ட். இயக்குனர் பிரசன்னாவும், நடிகர் பிரசன்னாவும் கலக்கியிருக்கிறார்கள். தரம்கெட்ட காமெடி படங்களுக்கு மத்தியில் இந்த அர்பன் காமெடி மிகவும் கவர்ந்தது

5) சிங்கம் II
முகப்புத்தகத்தில் நான் எழுதிய விமர்சனத்தையே இங்கும் பகிர்கிறேன்.

// பெங்களூரு பனசங்கரி ஏரியாவில் "சிவாஜி மிலிட்டரிஎன்று ஒரு ஹோட்டல் இருக்கிறதுபல வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் சிவாஜிக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாதுபிரியாணி மட்டும் தான் ஸ்பெஷல்உடன் சிக்கன் சாப்ஸ்மட்டன் சுக்கா என்று ஒன்றிரண்டு சைடு அயிட்டங்கள் கிடைக்கும்ஆலமர இலையில் செய்த கோப்பையில் பிரியாணியை வைத்துத் தருவார்கள். "தொன்னை பிரியாணிஎன்பது அதன் பெயர்.

காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை திறந்திருக்கும் சிவாஜி மிலிட்டரிக்கு எவ்வளவு சீக்கிரம் போனாலும் கூட்டமாகத்தான் இருக்கும்பார்சலாக இருந்தாலும் காத்திருந்து தான் வாங்க வேண்டும்எப்படிப் பார்த்தாலும் நம் இலைக்கு பிரியாணி வர குறைந்தது 20வதிலிருந்து 30 நிமிடங்கள் வரை ஆகும். "லக்இருந்தால் மட்டும் தான் நாம் போகும் நேரத்தில் மட்டன் பிரியாணி இருக்கும்முதல் மாடியில் இருக்கும் சிவாஜி மிலிட்டரியின் பிரியாணி வாசனை படி ஏறும் போதே மூக்கைத் துளைக்கும்பசியுடம் உள்ளே நுழைந்தால் கூட்டம் குமுறும்கூட்டத்தைப் பார்த்து "சரி வேண்டாம் போய்ரலாம்என்று முடிவெடுத்தவனை இதுவரை நான் பார்த்ததில்லைஒரு மணி நேரமானாலும் காத்திருந்து சாப்பிட்டு விட்டுத்தான் போகத் தோன்றும்நான்கு வரிசையில் இருக்கைகள் இருக்கும்மொத்தமாக 100 பேர் சாப்பிடலாம் என்று நினைக்கிறேன்வரிசைக்கு ஒரு சர்வர்பிரியாணி ரெடி ஆக ரெடி ஆக சுடச் சுட கிச்சனிலிருந்து அனுப்பிக்கொண்டே இருப்பார்கள்மிகப்பெரிய ஒரு தாம்பூலத்தில் மொத்தமாக பிரியாணிசாப்ஸை எடுத்துக்கொண்டு தங்களது வரிசைக்கு சப்ளை செய்வார்கள்தலைகீழாக நின்றாலும் அடுத்த வரிசையில் காத்திருப்பவர்களுக்கு பிரியாணி கிடைக்காதுஆகஎப்படிப் பார்த்தாலும் ஒரே சமயத்தில் அதிகபட்சம் மூன்று வரிசை ஆட்கள் தான் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்ஒரு வரிசை ஆட்கள் காத்துக்கொண்டு தான் இருக்க வேண்டும்முதல் வரிசை முடியும் நேரத்தில் நான்காம் வரிசை ஆட்கள் சாப்பிட ஆரம்பித்திருப்பார்கள்முதல் வரிசையில் அடுத்து வந்து அமர்பவர்கள் அடுத்து சாப்பிட எவ்வளவு நேரம் ஆகும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்பிரியாணி வாசனை மூக்கை துளைக்க நாம் காத்திருக்கும் அந்த நிமிடங்களில் சர்வமும் மறந்து போய் பசி மட்டும் தான் நம் கண்களில் இருக்கும்தாம்பூலம் நிறைய பிரியாணிகளை எடுத்து வரும் சர்வரை நாம்  ஏதோ தேவ தூதன் ரேஞ்சிற்கு எதிர்பார்த்துக் காத்திருப்போம்அதிலும் மட்டன் பிரியாணி கிடைத்துவிட்டால் நாம் முன் ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்ற எண்ணம் ஏற்படும்பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது எத்தனை சரியான பழமொழி என்பதை நான் உணர்ந்ததே சிவாஜியில் தான்சாப்பிடுவதற்கு முன் "எங்கே நமக்கு பிரியாணி கிடைக்காமல் போய்விடுமோஎன்று ஒவ்வொருவரும் பதறுவதை பல முறை பார்த்திருக்கிறேன்நாகரிகம்படிப்புசம்பாத்தியம் - இதெல்லாம் "கிலோ என்ன விலைஎன்று கேட்பார்கள்தங்கள் வரிசைக்கு எப்பொழுது பிரியாணி வரும் என்று சர்வரிடம் ஒரு முறையாவது கேட்காத ஆள் இதுவரை இல்லைஇவ்வளவு ஏன் ஒரு முறை நானும் என் மாமாவும் இடம் இல்லாமல் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து சாப்பிட அமர்திருந்த 40 வயதைத் தாண்டிய நண்பர்கள் எங்களை அழைத்து (கன்னடத்தில்) "சார்அங்க ஒரு சேர் காலியா இருக்கு பாருங்கஎடுத்துட்டு வந்து இங்க எங்க கூட உட்காந்துகோங்க... பாதுக்கலாம்என்று இடம் கூடக் கொடுத்திருக்கிறார்கள்இதே ஆட்கள் ரோட்டில் நமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் திரும்பிப் பார்ப்பார்களா என்பதுகூட சந்தேகம்.

ஒருவழியாகசுடச்சுட நம் இலையில் வைக்கப்படும் பிரியாணி சரியாக 10 நிமிடங்களுக்குள் காணாமல் போய்விடும். "ருசிஎன்பது மிகச்சரியான அர்த்தமாக அந்த தொன்னை பிரியாணி இருக்கும். "திருப்திஎன்பது பிரியாணியை சாப்பிட்டு விட்டு அங்கிருக்கும் சோம்பைக் கொஞ்சம் கையில் அள்ளி வாயில் போடும்போது ஏற்படும்தொடர்ந்து மூன்று வருடங்களாக நான் சிவாஜியில் நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்மாதம் இரு முறையாவதுஇங்கு சொன்ன எதையும் நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லைஅத்தனையும் உண்மைஎன் அனுபவம்.

அப்படியாப்பட்ட சிவாஜி மிலிட்டரியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பார்சல் வாங்கி வீட்டிற்கு எடுத்து வந்தோம்ஏதோ காரணத்தால் சாப்பிடுவதற்கு கொஞ்சம் லேட் ஆகிவிட்டதுநேரம் அதிகமானதால் பசி போய் கிறக்கம் தான் இருந்ததுபிரியாணியை பிரித்து சாப்பிட ஆரம்பித்தால்...

கன்றாவியாக இருந்தது சிவாஜி மிலிட்டரி தொன்னை பிரியாணி!

அப்பொழுது தான் தெரிந்தது சிவாஜி மிலிட்டரியின் ஸ்பெஷல் அந்த பிரியாணி அல்லஅந்த இடமும்இடத்தின் வாசமும்கூட்டமும்கூட்டத்தின் மனநிலையும்முக்கியமாக அந்த 20 - 30 நிமிட காத்திருப்பும் தான் என்றுவீட்டில் வாங்கி வைத்து சாப்பிட்டுப் பார்த்து நன்றாக இல்லை என்பதற்காக நான் அடுத்து அங்கு செல்லவே மாட்டேன் என்றா அர்த்தம்இல்லையேஇன்று மதிய சாப்பாடு சிவாஜியில் தான் என்று காலை எழுந்தவுடன் முடிவு செய்யப்பட்டு விட்டது.

சிவாஜி மிலிட்டரியில் போய் பிரியாணி சாப்பிடுவது போல் தான் தியேட்டரில் போய் "சிங்கம் 2" படம் பார்ப்பதும்இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்.

மிஸ் பண்ணிடாதீங்கலே...//

4) சூது கவ்வும்
டிக்கெட் விற்கும் விலையில் பெங்களூர் தியேட்டரிலேயே இரண்டு முறை பார்த்த படம். ஒரிஜினல் டி.வி.டியும் வைத்துள்ளேன். இந்த வருடம் என்னை மிகவும் திருப்தி படுத்திய படங்களில் இதற்குத் தான் முதல் இடம்.

3) ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
முகமூடி எடுத்து தன் பெயரைக் கெடுத்துக்கொண்ட மிஷ்கின் அதை ஈடுகட்ட கொடுத்த மிகவும் சிம்பிளான ஆனால் அற்புதமான படம். அலைந்து திரிந்து ரசித்துப் பார்த்த படம். ஓ.ஆ வெளியான பொழுது நான் எழுதிய கட்டுரை - மிஷ்கின் எனும் ஒரு தனித்த ஓநாய் - A tribute to the Master...


2) பரதேசி
"பாலா படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும். அதற்கெல்லாம் நான் அசரப்போவதில்லை" என்று தயாராகப் போனாலும் இதயம் கனத்து, அழுதுகொண்டு வந்த படம் பரதேசி. நாம் வாழும் இந்த வாழ்க்கை எத்தனை அருமையானது, அதை வாழ நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதை தனது ஒவ்வொரு படத்திலும் பாலா சொல்கிறார். பரதேசி படம் பார்த்ததிலிருந்து ஏனோ தெரியவில்லை நான் தேநீர் அருந்துவதையே முற்றிலுமாக நிறுத்திவிட்டேன்.

1) விஸ்வரூபம்
“ஹாலிவுட்டிற்கு இணையாக” என்று தான் இன்று வரை நாம் நமது தமிழ் சினிமா தரத்தின் அளவை வைத்துள்ளோம். அந்த தரத்தை எட்டி என்னை பிரம்மிக்க வைத்த படம் விஸ்வரூபம். இயக்குனர் கமலு என்ற அளவீட்டில் சாதாரண படமாக இருந்தாலும் கூட இந்த வருடத்தில் என்னை அசத்திய படம் விஸ்வரூபம் தான்.

இப்பொழுது ஏன்டா பார்த்தோம் என்று நான் வெறுத்த வொர்ஸ்ட் 10 படங்கள். இதற்கு விளக்கமெல்லாம் கொடுக்க விரும்பவில்லை. அவசியமில்லை என்பது என் கருத்து.

அலெக்ஸ் பாண்டியன்
சுட்டகதை
அழகுராஜா
ஆதிபகவன்
நாகராஜசோழன் MA MLA
சேட்டை
பட்டத்துயானை
யாருடா மகேஷ்
கண்ணா லட்டு தின்ன ஆசையா
கடல் / டேவிட்

பரவாயில்லை என்று நான் நினைத்த, கொஞ்சம் மிஸ் ஆகி பெஸ்ட் 10ல் இடம் பிடிக்காத Ok 10 படங்கள்.

மூடர் கூடம்
எதிர்நீச்சல்
தீயா வேலை செய்யனும் குமாரு
தேசிங்குராஜா
வருதப்படாத வாலிபர் சங்கம்
ராஜா ராணி
ஆரம்பம்
பிரியாணி
என்றென்றும் புன்னகை
தகராறு

எதற்கு தலைவலி என்று நான் பார்க்காமல் விட்ட படங்களும் உண்டு.

மதில் மேல் பூனை
ஒன்பதுல குரு
சுண்டாட்டம்
கருப்பம்படி
மறந்தேன் மன்னித்தேன்
மாசாணி
அன்னக்கொடி
துள்ளி விளையாடு
சும்மா நச்சுன்னு இருக்கு
ஆர்யா சூர்யா
யா யா
நையாண்டி
ரகளபுரம்
நவீன சரஸ்வதி சபதம்

பார்க்காமல் விட்ட ஆனால் நிச்சயம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிற படங்களும் உண்டு.

பொன்மாலை பொழுது
ராவண தேசம்
ஜன்னல் ஓரம்
தலைமுறைகள்
மதயானைக்கூட்டம்
விழா

கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் தரமான படங்கள் சிலவும் மகாமட்டமான படங்கள் பலவும் வந்து நம்மை மகிழ்விக்கும் என்று நம்புவோம்.


நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்