#100நாடுகள்100சினிமா #50.SOUTH KOREA - ODE TO MY FATHER (2014)
7:38:00 AM
Yoon Je-kyoon | South Korea | 2014 | 126 min.
(*** English write-up &
Download Link given below ***)
தமிழ், ஹாலிவுட் படங்களுக்கடுத்து நான் அதிகம் விரும்பிப் பார்ப்பவை தென் கொரியப் படங்கள். குறைந்தது 100 படங்களுக்கு மேல் பார்த்திருப்பேன், 50 படங்களுக்கு மேல் எனது ப்ளாகிலும், pfools பக்கத்திலும் எழுதியிருக்கிறேன். பார்க்கவேண்டிய படங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, தமிழ், ஆங்கிலம் தாண்டி சினிமா பார்ப்பவர்களில் பெரும்பாலானவருக்கு தென்கொரிய சினிமாக்கள் அவசியம் பேவரிட்டாக இருக்கும். பலர் நினைப்பது போல தென்கொரியாவிலிருந்து வெறும் வன்முறையை மட்டுமே முன்னிறுத்தும், ரத்தம் தெறிக்கும் கேங்ஸ்டர் படங்கள், சைக்கோ கில்லர் படங்கள் மட்டும் வருவதில்லை. எனக்குத் தெரிந்து ரொமான்ஸ், காமெடி, டிராமா, ஆக்ஷன், த்ரில்லர், பீரியட், வார், டீன்-ஏஜ், மியூசிக்கல், சயின்ஸ் பிக்ஷன், ஃபான்டசி என்று சினிமாவில் இருக்கும் அத்தனை ஜானரிலும் மிகச்சிறந்த படங்கள் தென்கொரியவிலிருந்து வந்துகொண்டிருக்கிறது. என்ன நம்மூர் படங்களை வைத்துப் பார்க்கும் போது கொரியர்களது சினிமாக்களில் அவர்கள் எதையுமே கொஞ்சம் மிகைப்படுத்திக் காட்டுவதைப் போல செய்வதைப் போலத் தெரியும். தென்கொரிய சினிமா மட்டுமல்லாமல், டி.வி சீரியல்கள் கூட இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் பேமஸ் ஆக இருக்க இதுவே கூட ஒரு காரணமாக இருக்கலாம். அந்த அளவிற்கு காதல் என்றால் உருகி உருகி நம்மையும் கரைய வைத்துவிடுவார்கள், ரத்தம் என்றால் பித்தம் தலைக்கேறும் அளவிற்கு தெறிக்கவிடுவார்கள் - எல்லாமே அங்கு மிகை தான்.
வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் தொடர்ந்து நடந்துவரும் பனிப்போர், கொரியர்களது வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது. ஒரே இனத்தவர் வாழும் இந்த இரண்டு நாடுகளுக்குமிடையே மலைக்கும் மடுவிற்கும் அளவு வித்தியாசம் இருக்கிறது. தென் கொரியா ஜனநாயக நாடு. வடகொரியாவில் நடப்பதோ சர்வாதிகார ஆட்சி. தொழில் நுட்ப வளர்ச்சியிலும், தனிமனித முன்னேற்றத்திலும் அமெரிக்க தரத்திலிருக்கிறது தென் கொரியா. வட கொரியா தீவிர கம்யூனிஸ்ட் நாடு. அடுத்தவரை அச்சுறுத்தும் ஆயுத வளர்ச்சி மட்டுமே அதன் மிகப்பெரிய பலம், முன்னேற்றம். தொழில்நுட்பத்திலும், கல்வியிலும், தனிமனித வளர்ச்சியிலும் இன்னும் பின் தங்கிய நாடாகவே இருந்து வருகிறது வட கொரியா. உள்ளே என்ன நடக்கிறது என்பது கூட வெளியுலகத்திற்கு தெரியாது. அந்த அளவிற்கு ராணுவக்கட்டுபாட்டுடன் ரகசியமாகவே நாட்டை ஆட்சி செய்துவருகிறார்கள் அங்குள்ள ஆட்சியாளர்கள். ஊடகம், இன்டர்நெட் அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் அடங்கும் விஷயங்களே. மக்கள் எதைப் பார்க்கலாம், எதைப் படிக்கலாம், எப்படி சிந்திக்கலாம் என்பது வரை கட்டுப்பாடுகளை விதித்து வைத்திருக்கிறது வட கொரியா. சினிமா என்று எடுத்துக்கொண்டால் ஒருவருடத்திற்கு உலகளவில் அதிக படங்களை வெளியிடும் நாடுகளில் தென் கொரியா அவசியம் டாப் 10 - இல் இருக்கும். வட கொரியாவில் 'சினிமா' என்ற ஒன்று இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை. கூகிள் முழுக்க ராணுவப்பிரச்சாரப் படங்களாகவே காட்டுகிறது. #100நாடுகள்100சினிமா தொடருக்காக எப்படியாவது ஒரு ஜனரஞ்சக வடகொரிய படத்தைப் பார்த்து எழுதிவிடவேண்டும் என்று வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறேன். அதே தென் கொரிய சினிமாவில் எதை எழுதுவது என்ற குழப்பம் நேற்று வரை இருந்தது. அவ்வளவு படங்கள் கொட்டிக்கிடக்கிறது.
அப்படிக்கொட்டிக்கிடக்கும் படங்களில், இந்த Ode to My Father (2014) படத்தைத் தேர்தெடுக்கக் காரணம் உண்டு. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு கொரியா இரண்டாகப் பிளவுபட்ட 1950 களிலிந்து இன்றைய தினம் வரையான கொரிய சரித்திரத்தை ஒரு தனி மனிதனின் பார்வையில், அவனது அனுவத்திலிருந்து சொல்கிறது இந்தப் படம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய சம்பவங்கள் இந்தப் படத்தில் இடம் பெறுகிறது. கிட்டத்தட்ட 60 ஆண்டு கால கொரியர்களது வாழ்க்கை முறையை அப்படியே படம்பிடித்துக்காட்டியிருக்கிறது இந்தப் படம்.
படத்திற்குப் போகும் முன் கொரியா பிரிந்த கதையை மிகச் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.
பல நூற்றாண்டுகளாக கொரியாவை ஆண்டுவந்த Joseon பேரரசு (1392 - 1910), ஜப்பானிடம் 1910 ஆம் ஆண்டு வீழ்ந்தது (இதற்கு முன்பே கொரியாவை முதல் சினோ-ஜப்பான் போரில் ஜப்பானிடம் தோற்றது கொரியா). அதன் பின் சுமார் 35 ஆண்டுகள் ஜப்பான் வசமிருந்தது கொரியா. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் படுதோல்வியடைய, நேசப்படைகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் ஜப்பான் வசமிருந்த நாடுகளை தற்காலிகமாக நிர்வகிக்க முடிவு செய்தது. அந்த இருபெரும் நாடுகளுக்கிடையே பனிப்போர் தொடங்கியிருந்த காலகட்டம் என்பதால் சேர்ந்து நிர்வகிப்பது என்பது, ஐ.நா ஆதரவுடன் தனித்தனித்தே நிர்வகிப்பது என்று முடிவு செய்யப்பட்டதுது. அவர்களே முடிவெடுத்துக்கொண்டார்கள், கொரிய மக்களை ஒன்றும் கேட்கவில்லை என்பது கூடுதல் தகவல். அதன்படி கொரியா சரிபாதியாகப் பிரிக்கப்பட்டது (38th parallel of latitude). ரஷ்யர்கள் தங்கள் வசம் வந்த வட கொரியாவிற்கு Kim Il-sung என்பவரை புதிய அதிபராக நியமித்தது. Syngman Rhee என்பவர் அமெரிக்க ஆதரவுடன் தென் கொரிய அதிபரானார். இரு அதிபர்களில் ஒருவர் ரஷ்ய ஆதரவில் இருக்கும் கம்யூனிஸ்ட். இன்னொருவர் கம்யூனிஸ்ட் எதிர்பு நாடான அமெரிக்க ஆதரவாளர். இருபெரும் நாடுகள் தங்களுக்குப் பின் இருக்கும் தைரியத்தில், இரு கொரிய அதிபர்களும் ஆங்காங்கே அடுத்தவர் பகுதிகளை ஆக்கிரமிப்புச் செய்யத் தொடங்கினர். முதல் பெரிய சண்டை / போர் 1950 ஆம் ஆண்டு தொடங்கியது. ‘கொரியாவை இணைக்கப்போகிறேன்’ என்று Kim Il-sung தொடுத்த இந்தப் போரில், கிட்டத்தட்ட 30 லட்சம் கொரியர்கள் கொல்லப்பட்டனர். புலம்பெயர்ந்தவர்கள், குடும்பங்களை இழந்தவர்கள், சொந்தங்களைப் பிரிந்தவர்கள் எத்தனை பேர் என்று இன்றுவரை சரியான கணக்கு இல்லை. முதலில் வட கொரியா தென் கொரிய பகுதிகளைக் கைபற்றியது. பிறகு அமெரிக்கா உதவிக்கு வர, இழந்த பகுதிகளை மீட்டதோடு மட்டுமில்லாமல் வட கொரியப் பகுதிகளையும் சேர்த்துக் கைப்பற்றியது தென் கொரியா. கம்யூனிஸ்ட் நாடான தென் கொரியாவிற்கு சைனா உதவி செய்ய மீண்டும் வடகொரியாவின் கை ஓங்கியது. இப்படியே மாறி மாறி மூன்று வருடங்கள் நடந்த சண்டை ஒருவழியாக ஐ.நா தலையீட்டால் முடிவிற்கு வந்தது.
Korean Armistice Agreement என்ற பெயரில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஷ்யா - அமெரிக்கா தங்களுக்குள் பிரித்துக்கொண்ட அதே எல்லையில் 250 கி.மீ நீளம், நான்கு கி.மீ அகலத்திற்கு Demilitarized Zone (இரு நாடுகளுக்கும் பொதுவான எல்லைப் பகுதி) உருவாக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டு ஜெனிவா மாநாட்டில் முடிவு செய்யப்பட்டதன்படி, கொரிய பொதுஎல்லைப்பகுதி சுவிஸ் மற்றும் சுவீடன் நாட்டு ராணுவத்தினர் கண்காணிப்பில் இருந்து வருகிறது. Joint Security Area (2000) என்ற படத்தில் இந்த Demilitarized Zone சுற்றி நடக்கும் கதை. பார்த்தே தீர வேண்டிய படம். போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடுவதற்குள் இரு நாடுகளுக்குமிடையே கிழக்குப் பகுதியிலிருக்கும் இருக்கும் பெரிய மலை (Aerok Hills) ஒன்றை எப்படியும் தங்கள் வசம் கொண்டுவந்துவிடவேண்டுமென்று இருநாட்டு வீரர்களும் மோதிக்கொள்ளும் The Front Line (2011) படமும் அவசியம் பார்த்தே தீர வேண்டிய ஒன்று.
போர் நிறுத்தம் தான் நடந்திருக்கிறதே தவிர இன்னும் போர் முடிவிற்கு வரவில்லை. அன்றிலிருந்து இன்று வரை தென் கொரியாவும் வடகொரியாவும் ஒருவரையொருவர் எதிரியாகவே பார்த்துவருகிறார்கள். அடிக்கடி மோசமாக சண்டையிட்டும் வருகிறார்கள்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், கொரியா இரண்டாக உடைந்ததற்குக் காரணம் - அமெரிக்கா, ரஷ்யா. கொரியா மட்டுமல்ல இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகில் எந்த இரண்டு நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டாலும் அதற்குப் பின்னால் இவர்கள் இருந்தார்கள்.
இதற்கிடையே தென்கொரிய டிவி சேனலான Korean Broadcasting System (KBS) ஒரு உன்னத காரியத்தைச் செய்தது. கொரிய வரலாற்றையே மாற்றி எழுதிய சரித்திர நிகழ்வானது - 'Reuniting Separated Families' என்ற பெயரில் நடத்தைப்பட்ட நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி. 1983 ஆம் ஆண்டு ஜீன் 30 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 138 நாட்கள் ஒளிப்பரப்பானது. கொரியப் போரினாலும், அதற்கு முந்தைய ஜப்பான் ஆட்சிகாலத்திலும் தங்களது குடும்பத்தைப் பிரிந்தவர்கள், உறவுகளைத் தொலைத்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று தாங்கள் தேடிக்கொண்டிருப்பவர்களைப் பற்றிய அங்க அடையாளங்களை, அவர்களை தொலைத்த இடத்தைப் பற்றி டி.வியில் சொன்னார்கள். போர்டுகளை ஏந்தி நின்றார்கள். வட கொரியா உட்பட பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்திருந்த கொரியர்கள் இந்த நிகழ்ச்சியைக் தொடர்ந்து பார்த்தனர். மொத்தம் 453 மணிநேர ஒளிப்பரப்பின் மூலம் கொரியப் போர் நடந்து 35 வருடங்களுக்குப் பிறகு கிட்டதட்ட 10,189 பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்ந்தது. மனதை உருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது. Ode to My Father (2014) படத்தில் இந்த நிகழ்ச்சி பிரதானப் பகுதியாக வருகிறது. கல்நெஞ்சையும் கரைத்து சந்தோஷத்தில் அழவைத்துவிடும் இந்தப் பகுதி தான் இந்தப் படத்தை #100நாடுகள்100சினிமா தொடரில் சேர்க்கக் காரணம். சிரித்துக்கொண்டே கண்ணீர் விட்டு அழுகவைத்துவிட்டது இந்தப் படம்.
1950 ஆம் ஆண்டு தொடங்குகிறது படம். வடகொரியாவில் உள்ள மூன்றாவது பெரிய துரைமுக நகரமான Hungnam பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது அமெரிக்கத் தலைமையிலான தென் கொரியப்படை. இழந்த பகுதியைக் கைபற்ற அந்நகரம் மீது வெடிகுண்டுத்தாக்குதலை நடத்தத் தொடகுகிறது வடகொரியா ஆதரவுப் படைகள். Hungnam evacuation என்றழைக்கப்படும் அந்த சம்பவத்தில் மட்டும் சுமார் 1,00,000 வடகொரியர்கள் புலம்பெயர்ந்து தென்கொரியாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் சென்றனர். SS Meredith Victory என்றழைக்கப்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றில் மட்டும் சுமார் 14,000 பேர் தென்கொரியாவிற்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். அப்படி வடகொரியாவிலிருந்து தென்கொரியாவிற்கு வந்து சேர்ந்தவன் தான் நம் ஹீரோ Yoon Deok-soo.
கப்பலில் ஏறும் போது அவன் முதுகில் சுமந்து வந்த குட்டித்தங்கை காணாமல் போக, அவளைத் தேடிக் கப்பலை விட்டு தந்தையும் இறங்கிவிடுகிறார். தாய், தம்பி, தங்கை மூவருடனும் தென்கொரியாவிலுள்ள தனது அத்தை வீட்டிற்கு வந்து சேர்கிறான் Deok-soo. கப்பலைவிட்டு இறங்கும் முன் தன் மகன் Deok-soo-விடம் சத்தியம் வாங்குகிறார் தந்தை. ‘கடைசிவரை தந்தை ஸ்தானத்திலிருந்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றி அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுப்பேன்’ என்பதே அது. அந்த சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டி, தனது கடைசிவரை தனது குடும்பத்திற்காக, அவர்களது சந்தோஷத்திற்காக உழைத்த ஒரு மகனின், ஒரு அண்ணின், ஒரு கணவனின், ஒரு தகப்பனின் கதைதான் இந்த Ode to My Father (2014).
Hungnam evacuation பகுதியில் தொடங்கும் படம் ஜெர்மன் நிலக்கரிச்சுரங்கத்திற்கு Deok-soo வேலைக்குப் போவது, அங்கு நர்சாக வேலை செய்யும் பெண்ணைக் காதலித்து மணப்பது, போருக்கு நடுவே வியட்நாமிற்கு செல்வது, சிறுவயதில் பிரிந்த தங்கையை டி.வியில் கண்டுபிடிப்பது, இன்னொரு தங்கைக்குத் திருமணம் செய்துவைப்பது, அத்தை விட்டுச் சென்ற கடையை மீட்கப் போராடுவது என்று கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தனது குடும்பத்திற்காகவே வாழ்ந்த ஒருவனது நினைவுகளைச் சொல்கிறது இந்தப் படம்.
Haeundae (2009) என்ற அருமையான படத்தைக் கொடுத்த இயக்குனர் Yoon Je-kyoon ஐந்து வருட இடைவெளிக்குப் பின் இயக்கிய இந்தப் படம் தென்கொரிய திரைப்பட வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படங்களில் தற்சமயம் இரண்டாமிடத்தில் உள்ளது (முதல் இடம் Kim Han-min இயக்கத்தில் 'Old Boy' Choi Min-sik நடிப்பில் வெளிவந்த Admiral: Roaring Currents (2014)). தனது பெற்றோர்களது பெயர்களான Deok-soo, Young-ja என்பதையே படத்தின் பிரதான கதாப்பாத்திரங்களுக்கும் வைத்திருக்கிறார் இயக்குனர்.
பல்வேறு விருதுகளைக் குவித்துள்ள இந்தப் படத்தில் Yoon Deok-soo ஆகவே வாழ்ந்திருப்பவர் Hwang Jung-min. இளைஞனாக, நடுத்தரவயதுக்காரனாக, பேரன் பேத்தி கண்ட முதியவராக மூன்று கெட்-டப்களில் பக்காவாக பொருந்திப்போய் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறார். இவருடன் கடைசி வரை வரும், எங்கும் சென்றாலும் பின்தொடரும் உயிர்நண்பனாக Oh Dal-su பட்டையக்கிளப்பியிருக்கிறார். மனைவி Young-ja ஆக வரும் Yunjin Kim அசத்தல். நர்சாக, காதலியாக, மனைவியாக, மருமகளாக, தாயாக தன் பங்கிற்கு ஒரு பக்கம் பட்டையைக்கிளப்புகிறார். படத்தில் நடித்த ஒவ்வொருவருமே அந்தக் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
அவசியம் பார்த்தே தீர வேண்டிய படமென்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. படம் சோகமாக இருக்குமோ என்ற சந்தேகம் வேண்டவே வேண்டாம். செண்டிமெண்டிற்கு இணையாக, காதல், காமெடி, ஆக்ஷன், காட்சிக்கு காட்சி நம்மை அசத்தும் பிரம்மாண்டம் என்று செம்மையாக இருக்கிறது படம். தமிழில் 'தவமாய் தவமிருந்து' படத்தையும், மலையாளத்தில் Pathemari (2015) படத்தையும் நினைவுபடித்தியது இந்தப் படம். போர்க்கப்பலில் அகதிகளை ஏற்றுவது, நிலக்கரிச்சுரங்கம், வியட்நாம் பகுதி, KBS நிகழ்ச்சி என்று படத்தில் வரும் அனைத்து சம்பவங்களையும் காசைக்கொட்டி மிகப்பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். ஒரு தேசத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒரே படத்தில் ஒரு சாமானியனது பார்வையில் சொல்லியிருப்பது அசத்தல். Hats Off!
கொரியப்போர் சம்பந்தமாக ஏகப்பட்ட படங்கள் கொட்டிக்கிடக்கிறது. இன்னொரு சமயம் அந்தப் படங்களைப் பற்றி எழுதிவிடுகிறேன்.
#100நாடுகள்100சினிமா தொடரில் இது 50 ஆவது பதிவு. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அடுத்த ஐம்பதை எழுதிவிடுகிறேன்.
பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள்
*****************************
Ode to My Father (2014) is the story of one man Yoon Deok-soo who for his family sacrifices his entire life as promised to his father before getting separated during the Hungnam evacuation. The movie begins with and old Deok-soo remembering his past under various occasions. The movie begins with the Hungnam evacuation and travels through episodes where Deok-soo works as a labor in a German Coal Mine Company and later as a technician in the war torn Vietnam where the Koreans where fighting as Allies with the Americans. Another majoir episode is the based on the historical 'Reuniting Separated Families' program aired and organised by the Korean Broadcasting System (KBS).
Dir. Yoon Je-kyoon |
Directed by Yoon Je-kyoon of Haeundae (2009) fame, Ode to My Father (2014) is the second largest grosser in Korean History next to Kim Han-min's Admiral: Roaring Currents (2014). Hwang Jung-min of Veteran (2015) & New World (2013) fame as our Hero Yoon Deok-soo is just as compelling as any actor could be as Son, Brother, Friend, Father and a Grandfather. He has 3 getup in the films and he carries them with ease. Yunjin Kim as Deok-soo's love interest has done her part perfectly. Oh Dal-su as Deok-soo's friend and right hand comes throughout the film.
The movie covers an extensive part of Korean History and has some epic visuals which will make us go awestruck with some wonderful performances and excellent story line.
A must watch movie.
Download Link - https://katorents.net/ode-to-my-father-2014-bluray-720p-dts-x264-epic-tt12501267.html
5 comments
இப்ப தான் உங்களோட வலைத்தளம் அறிமுகம் கிடைத்தது...
ReplyDeleteரொம்ப அருமையான படம்..
கண் கலங்கிருகிச்சு ... செம்ம பீல் குட் மூவி..
உங்களோட அடுத்த பரிந்துரை படங்களையும் பார்க்க டவுன்லோட் போட்டிருக்கேன்...
தேங்க்ஸ் பிரதர்....
The sobering point touching on Skin Rejuvenation is that you don't have to Skin Care to see sobering results. The truth is that Skin Care remains quite elusive. I am dependent upon Anti Aging.
ReplyDeletehttps://www.salubritymd.com/
https://sites.google.com/view/hydroserum-ocean-shake/
https://www.salubritymd.com/pure-keto-xls/
ReplyDeletehttps://sites.google.com/view/hydroserum-ocean-shake/
ReplyDeletehttps://www.salubritymd.com/hyaluronan-crema/
https://sites.google.com/view/jatinchugh/home
https://www.salubritymd.com/bullrun-ero-tabletki/
ReplyDeleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...