சிறுகதை : உன் பார்வைக்கு என்ன அர்த்தம் - பாகம் II
4:53:00 AMபார்த்தவுடன் வழக்கம்போல(!) ராஜாவும் ரஹ்மானும் ரெடியாகி நின்றார்கள். ஷெல்லியும் வாலியும் தோற்கத் தயாரானார்கள். ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் நிலைமையில் நான் தான் இல்லை. எனக்கு என் இதயத்துடிப்பு மட்டும் சத்தமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. உச்சிவெயில் நெற்றி வியர்வை ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்த மௌண்டைன் டியூ மேலிருக்கும் ஐஸ்துளியாய் ஜில்லிட்டுக்கொண்டிருந்தது. “ஏன் இப்படி லூசு மாதிரி நடந்துக்கிற” என்று கேட்ட நண்பனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. சொன்னாலும் அவனுக்குப் புரியப்போவதுமில்லை. “மதன் வரையும் ‘Mr. பொதுஜனம்’ போலிருக்கும் என்னை ‘ம. செ’ வரையும் அட்டைப்பட அழகி போலிருக்கும் அவள் திரும்பிப் பார்த்தாள்” என்றால் அவன் அதை நம்பவும் மாட்டான். என்ன செய்வது ஐ.டியில் வேலை செய்தாலும் நம்ம பர்ஸ்னாலிட்டி அப்படி!
இந்தக் கதை முழுக்க முழுக்க அவளைப் பற்றியது தான். அதனால், மிஸ் ஆவதற்குள், என்ன நடந்தது என்று சொல்வதற்கு முன், என்னைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். இந்தக் கதையை எழுதிக்கொண்டிருக்கிறானே Baby ஆனந்தன் அவனுக்கும் எனக்கும் கொஞ்சம் அந்தரங்கமான சம்பந்தம் இருக்கிறது (அதைப்பற்றி இங்கு சொல்லவேண்டியதில்லை) அவனது ' உன் பார்வைக்கு என்ன அர்த்தம் (பாகம் I (!?))' கதையைப் படித்துள்ளீர்களா? 'இல்லை' என்பது தான் உங்களில் பலரது பதிலாக இருக்கும். ஏனென்றால் இந்தப் பயல் அவ்வளவு பேமஸ் இல்லை பாருங்கள். சரி விடுங்கள்... இந்தக் கதைக்கும் அந்தக் கதைக்கும் ஒரே ஒரு சம்பந்தம் தான். அது நான் தான். அன்று அந்தக் கோயம்பத்தூர் பிகர் என்னை 'அண்ணா, பெரியார்'னு எதையோ சொல்லி அசிங்கப் படுத்திருச்சு... "இந்தப் பிகர் இல்லன்னா இன்னொன்னு ஆண்டவா” என்று B.T.M பிள்ளையார் ஆலமரத்தைச் சுற்றியது வீண் போகவில்லை.
நண்பன் சுரேந்ரா 'கீத்பீட்டெர்ஸன் கிட்டார்' என்று தனது யெளவனக் கதையில் ஒரு முறை சொல்லியிருந்தான். எனக்கு அந்தக் 'கீத்...' பயலைச் சத்தியமாகத் தெரியாது. ஆனால் அவன் கிட்டார் எப்படியிருந்திருக்கும் என்று இவளைப் பார்த்தபோது தெரிந்தது. சூர்யா (சும்மா எச்சாம்பிளுக்காக..) பக்கத்தில் அனுஷ்கா (ஆனால் இது நிஜம்) நிற்பது போல்தானிருக்கும் நான் அவள் பக்கத்தில் நின்றால். அவ்வளவு உயரம், க்ளீனிக் ப்ளஸ் சாலஞ்சிற்கு இவளை அனுப்பலாம் அவ்வளவு நீளமான கூந்தல். அதில் அம்சமாய் ஒரு வெள்ளை கலர் க்ளிப். வெள்ளை-நீலக்கலரில் அடிடாஸ் ஷூ, அதைப் போட்டுக்கொண்டு சும்மா "டக்கு", "டக்கு", "டக்கு" என்று அவள் நடக்கும் அழகே தனி. அவள் கலருக்கேற்றார்போல் ரெட், கருநீலம், கரும்பச்சை என்று ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போட்டுக்கொண்டு… ஆனால் இந்த ஸ்லீவ்லெஸ் கண்டுபிடித்தவனை கண்டவுடன் கண்ட இடத்தில் சுட வேண்டும். அவளது அழகை 'ஓ'வராகக் காட்டுவதே ஸ்லீவ்லெஸ்கள் தான். என்னைப் போலவே பலர் அவளைப் பார்’க்’கிறார்கள் என்பதை அது தான் எனக்குக் காட்டிக் கொடுத்தது. வெள்ளிக்கிழமையாகிவிட்டால் நம் ஊர்ப்புள்ளைகள் அழகாக தாவணியில் கோவிலுக்குப் போவார்கள்(!) ஆனால் இங்கு வெள்ளிக்கிழமையானால் டைய்ட்ட்ட்ட்ட் ஜீன்ஸ், டி-ஷர்ட் சகிதம் ஆபீஸ் வந்து பின் அங்கிருந்து அப்படியே ஜீன்ஸிலிருந்து மினி ஸ்கர்டுக்கு மாறி 'பப்' ற்குப் போய்விடுகிறர்கள் பிகர்கள். ஆனால் என்னவள் ஜீன்ஸை மாற்றுவதுமில்லை, பப்பிற்கு போவதில்லை. நான் அவள் பஸ்ஸில் தான் வருகிறேன், அவள் இறங்கிய பிறகு அடுத்த ஸ்டாப்பில் தான் இறங்குகிறேன், எனக்குத் தெரியாதா...
அடடா... ஆக்சுவலா நான் என்னப் பற்றிச் சொல்கிறேன் என்று தானே இவ்வளவு தூரம் உங்களை வாசிக்க வைத்தேன்! அதற்குள் அவளைப்பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டேன் பாருங்கள். என்னுள் முழுக்க அவள் என்று ஆன பிறகு இப்படி நடக்கத்தானே செய்யும். சரி விஷயத்திற்கு வருவோம். கோயம்பத்தூர் என்னை அசிங்கப்படுத்தி சரியாக 4 மாதம் 22 நாள் ஆகியிருந்தது. பெங்களூரில் வெயில் ஆரம்பித்திருந்தது. நான் பாதித் தூக்கத்தில் அரையும் குறையுமாக குளித்துவிட்டு அவசராவசரமாக வெறும் ஷூவைச் சொறுக்கிக்கொண்டு கையில் சாக்ஸ் மற்றும் ஆபீஸ் பேக்குடன் ஓடி வந்து மூச்சிறைத்து ஆல்ரெடி ஸ்டார்ட் ஆகிப் போய்க்கொண்டிருந்த எங்கள் ஆபீஸ் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். தலை கலைந்திருந்தது, சரியாக 'டக்கின்' செய்திருக்கவில்லை, ஷூவைக்கழட்டி சாக்ஸ் மாட்டிக்கொண்டிருந்தேன், வெயிலில் ஓடி வந்ததில் முகம் வியர்த்...
"திடீரென்று, ஜன்னல் வழியே ஊரே கூலிங் க்ளாஸ் போட்டுப் பார்ப்பது போல் ஜில்லென்று தெர்ந்தது, காற்று வீசியது(தென்றல்?), டீக்கடையில் முதல் முறையாக ஒரு மென்மையான கன்னடப் பாட்டு 'நின்னிண்டலே, நின்னிண்டலே...', அந்த வாசம் வித்யாசமாக இருந்தது, ஏதோ என் மேல் பட்டது, ஒரு நிமிடம்... சரியாக ஒரே நிமிடம் தான் பஸ் மறுபடியும் நகர..."
குனிந்து ஷூ மாட்டிக் கொண்டிருந்ததால் கவனிக்கவில்லை. போன ஸ்டாப்பில் ஏதோ நடந்திருக்கிறது. இல்லையென்றால் இப்படியெல்லாம் சிம்ப்டம்ஸ் தெரியாதே... யார் அது என்று ஆர்வமாய் தலைதூக்கி முன்ஸீட்களில் தேடினேன். எல்லாம் வழக்கமாக ஏறும் மொக்க பீஸ்கள். என் ஸீட்டிற்குப் பின்னால் சிரிப்புச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். கண்ணாடி போட்டுக்கொண்டு காட்டுக் கருப்பியாய் ஒருத்தி. சத்தியமாக பயந்து விட்டேன். கோயம்பத்தூர் பிகர் போனதிலிருந்து புதிதாக எது க்ராஸ் ஆனாலும் தென்றல், கூலிங் க்ளாஸ் ஃபீல் வருகிறதோ என்று சந்தேகம் ஏற்பட்டது. ச்சே... நிலைமை இவ்வளவு மோசமாகிவிட்டதே என்று நொந்து... "எக்ஸ்க்யூஸ் மீ" பின்ஸெட்டிலிருந்து குரல். அடியே கருவாச்சி என்னையா கூப்பிடுற... அய்யையோ... திரும்பினேன். கூப்பிட்டது கருவாச்சி இல்லை, அவள் பக்கத்திலிருந்த...
இதுவரை எந்தக் கண்களும் என்னை அப்படிப் பார்த்ததில்லை. ட்ரிப் ஷீட் கொடுத்த அவளது வலது கையில் கடிகாரம் - மணி பத்தேகால். என் ரூம் 'ஸ்ரீ விசாலம் சிட் பன்ட்ஸ்' கேலண்டர் பார்த்து "இன்னிக்கு நல்ல நேரம் பத்து டூ பத்தர ஆனா உனக்கு மட்டும் ஏழர" என்று கிளம்பிக்கொண்டிருக்கும் போது நண்பன் சொன்னது நியாபகத்... நல்ல நேரம் பத்தேகால்! ட்ரிப் ஷீட்டில் அவள் பெயரிருந்தது...
"இந்தக்... க்கோயம்... கோயம்பத்தூர்னு சொல்றாங்களே, அது எங்கங்க இருக்கு"
அடுத்தடுத்த நாட்களில் நான் என்ன செய்திருப்பேன் என்று சொல்லித் தெரியத் தேவையில்லை. தினம்தினம் அடித்துப்பிடித்து அதே பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து விடுவேன். அவளும் அடுத்த ஸ்டாபில் ஏறும்போது என்னைப் பார்ப்பது போலிருக்கும், பார்க்காத மாதிரியுமிருக்கும். ஆனால் எப்போதும் என்னை கடந்து, கருப்பியுடன் சென்று எனக்குப் பின்ஸீட்டில் தான் உட்காருவாள். ட்ரிப் ஷீட்டிலும் எப்போதும் சரியாக அவள் பெயருக்குப் பின்னால் என் பெயர்தான். இப்படிப் போய்க்கொண்டிருக்கும் போது தான் ஒரு நாள் எனக்குப் பின் ஸீட் புதிதாக ஏறிய சில தடி மாடுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. நான் என் ஸீட்டில் உட்கார்ந்து ஆர்வமாய் அடுத்த ஸ்டபிங்கிற்காக காத்திருந்தேன். அவளும் ஏறினாள். எனக்குப் பின்னால் ஸீட் இல்லை. என்னருகில் ஸீட் இருந்தது. ஆனால் அந்த கருப்பி மேல் என்ன பாசமோ, அவளுடனே போய் முன் ஸீட் ஒன்றில் உட்கார்ந்து கொண்டாள். முதல் முறையாக எனக்கு இரண்டு ஸீட்களுக்கு முன் அவள். B.T.M மிலிருந்து மாரத்தகள்ளி வரை... ஒரு மணி நேரம் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். லேசாக கண்ணை மூடித் திறந் த போது பின்னால் திரும்பிப் பார்த்த அவள் என்னைப் பார்ப்பது போலிருந்தது. " உன் பார்வைக்கு என்ன அர்த்தம்?" "ஹாய்!" என்றாள் அவள்...
"மச்சி! தேவதை பஸ்ல வருதுன்னு சொன்னா நீ நம்புவியாடா? நல்ல வேளடா றக்கையெல்லாமில்ல, அதனால நான் நம்பல...", "ஒரு பார்வ பாத்தாடா... அப்படியே ஏதோ உள்ள உருகுது, மூச்சு முட்டுது, முடியலடா" பல சினிமாப்பாடல், டயலாகுகளை நான் எடுத்து விட்டிருக்கிறேன், பலரை வெறுப்பேற்றியிருக்கிறேன் என்று அன்று எனக்குத் தெரியவில்லை. வாயைத் திறந்தால் கவிதை தான்... மனதைத் திறந்தால் ஹம்மிங் தான்... முதலில் சொன்ன ரஹ்மான் ராஜா, வாலி ஷெல்லி சமாச்சாரங்கலெல்லாம் அதனால்தான். "அவ என்ன பாத்து சிரிச்சிட்டா..."
அத்தோடு அப்படியே ப்ரோசீட் பண்ணிட்டு போயிருக்கலாம். விதி யாரை விட்டது. "ரோமியோ ஜூலியெட்டை உன் காதல் தோற்கடிக்கவேண்டாமா..." என்று அடுத்த ஸ்டெப்பிற்கு ரெடியானேன். ஒன்றும் பெரிதாகயில்லை. இரண்டு நாள், என் ஸ்டாபில் ஏறாமல், அவள் ஸ்டாப்பில் ஏறினேன். என் ஸ்டாப்பில் இறங்காமல், அவள் ஸ்டாப்பில் இறங்கினேன். மூன்றாவது நாள் அவளுடன் வேறு யாரோ ஒருவன் நிற்பது போல் தெ-ரி-ந்-த-து.-.-.-
நான் வழக்கம்போல் போய் நின்றேன். தரையில் கால்விரல்களால் கோடு போட்டேன். பஸ் வருகிறதா என்று பார்க்கும் சாக்கில் அவளைப் பார்த்தேன். அவளும் பார்த்தாள். சிரித்தேன். ஆர்வத்தில் கொஞ்சம் பெரிதாக இளித்திருக்கலாம்...தெரியவில்லை.
அதற்காக? தெரியாமல் தான் கேட்கிறேன். ரூட் விடும் பெண்னைப் பார்த்து சிரிப்பது ஒரு குற்றமா? - கோபப்பட்டுவிட்டாள்
"கோன் ஹே?". என்னைக் கை காட்டினாள். ‘கோன் ஹே’ட்டவன் முதலில் வந்தான் "க்யா?" என்றான். அவனுக்கு சப்போர்ட்டாக மேலும் இரண்டு பேர். ஒரு நிமிடம். இவர்களை எங்கோ பார்த்திருக்கிறேனே... ஆங், மூன்று நாட்களுக்கு முன்னால் ‘பஸ்ஸில் புதிதாக சில தடி மாடுகள் ஏறின’ என்று சொன்னேனே அந்த மாடுகள் ஸாரி... தாடி வச்ச தடிக்காண்டாமிருகங்கள் தான் இவர்கள். அடிப்பாவி, அப்ப நீ சிரிச்சது, ஹாய் சொன்னது என்னப் பாத்து இல்லயா? எனக்குப் பின்னல் உட்கார்ந்திருந்த இவனுகளைப் பாத்துதானா... வழக்கம்போல நான் ஸோலோ ஹம்மிங்கா? சும்மா பர்ஸ்ட் டைம் ஜஸ்ட் சிரிச்சதுக்கே இப்படி ஆளனுப்புறாளே... !
அன்று இரவு இதை எழுத்திகொண்டிருக்கும் இந்தப் பயல் என்னை வைத்தே தனக்கு ஒரு “இரண்டாம் பாகம்” கிடைத்த சந்தோஷத்தில் என் தோளில் கையைப் போட்டு "டேய் மச்சி பிரதீப்... இந்த நார்த்துப் பொண்ணுங்க இருக்காளுகளே" என்று ஆரம்பித்தான்... அப்ப “அவள் பார்த்த அந்தப் பார்வைக்கும் அர்த்தம் அதில்லையா?”
இளையராஜா வயலினைக் கையில் எடுத்திருந்தார்...
9 comments
கதையின் ஆரம்பத்தில் படிக்க ஆரம்பித்தால், இறுதி வரி வரை எப்படியாவது வாசிப்பவரை கொண்டு வந்து விடும் திறமை உங்களிடம் இருக்கிறது. சிரிப்பை வைத்து எவ்வளவு கனவுகள். ஜாலியான நகைச்சுவையான நடை. தொடர்ந்து தயங்காது எழுதுங்கள், இன்னமும் மெருகு பெறுங்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteநீங்கள் வழங்கியிருக்கும் படம் சிறப்பான தெரிவு நண்பரே.
ReplyDelete:-) இன்னமும் தமிலிஷைக் காணோமே . . ஒருவேளை அது உங்களுக்குப் பிடிக்கவில்லையோ . . :-) எனிவே, பாராட்டுக்கள் . . இன்னமும் நிறைய எழுதுங்கள் . . எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு ., .
ReplyDelete@கனவுகளின் காதலன்: வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி நண்பரே...
ReplyDelete@கருந்தேள்: பிடிக்கவில்லை என்றெல்லாம் இல்லை நண்பரே. இந்தப் பதிவை தமிழிஷில் இணைதுள்ளேன். அந்த ஓட்டுப் பட்டை சமாச்சாரம் மட்டும் இன்னும் செய்யவில்லை |:-). ஆதரவிற்கு நன்றி...
கருந்தேள், இந்த தமிலிஷ் ஓட்டுப் பட்டையை பதிவில் எப்படிச் சேர்ப்பது? கொஞ்சம் உதவுங்களேன்...
ReplyDeleteBTM லிருந்து மாரத்தஹல்லி போறதிலே இவ்வளவு 'வசதி' இருக்கா:-? படிக்க நல்லா இருந்ததுங்க!
ReplyDeleteக்தை அருமை! ஒரு + குத்து!
ReplyDeleteஇது பேஸ்புக்கா இருந்தா, இப்போ ஒரு லைக் அடிச்சுருக்கலாம்....
ReplyDeleteஹாஹாஹா... மிக்க நன்றி kaniB
ReplyDeleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...