ஆப்தரக்ஷகா | கன்னடம் | 'வேட்டையன்'

7:15:00 PM

1993 ஆம் ஆண்டு ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த படம் மணிசித்ரதாழு. அதன் பிறகு சரியாக 10 வருடம் கழித்து 2004 ஆம் ஆண்டு, அதே கதை, திரைக்கதையை வைத்து P.வாசு கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்னும் பெயரில் இயக்கி வெளியிட்டார். ஆனால் கதை, திரைக்கதை, வசனம் - P.வாசு என்றே போடப்பட்டது. மூலக்கதையின் சொந்தக்காரான மது முட்டம் அவர்களுக்கு எந்த 'க்ரெடிட்ஸும்' கொடுக்கவில்லை.
கதையில் பல மாறுதல்களைச் செய்துள்ளதாக அவர் அப்போது காரணம் கூறினார். பெரிதாக ஒன்றுமில்லை. ரஜினிகாந்தின் பாகம் கொஞ்சம் அதிகரிக்கப்பட்டது, கிளைமாக்ஸில் வெட்டுவதற்கு பதில், கொளுத்துவது போல் வைக்கப்பட்டது. அவ்வளவே! மறுபடியும் அதே கதை (P.வாசு கதை) சந்திரமுகி ஆகி தமிழகத்தில் 804 நாட்கள்(!) ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. தமிழகத்தில் ஹரிதாஸிற்குப் பிறகு அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் சந்திரமுகி மட்டுமே!

தமிழ் சந்தரமுகி அதே பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டது, உலக வரலாற்றில் முதல் முறையாக Der Geisterjager (The Ghost Hunters) என்னும் பெயரில் ஜெர்மன் மொழியில் டப் செய்யப்பட்டு பல நாடுகளில் வெளியிடப்பட்டது. பிறகு 2005 ஆம் ஆண்டு வங்காள மொழியில் ராஜ்மொஹலாகவும், 2007 ஆம் ஆண்டு ஹிந்தியில் ப்பூல் ப்பூலைய்யாவாகவும் வெளியானது. இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம், ஹிந்தி பதிப்பை எடுத்த ப்ரியதர்ஷன் மணிசித்ரதாழு சமயத்தில் ஃபாசிலிடம் உதவி இயக்குனராக இருந்தவர். அதனாலோ என்னவோ இவர் மூலக்கதை 'மது முட்டம்' என்று கிரெடிட்ஸ் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அந்தப் பழைய கதயையே கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் எடுத்தார்.
இப்படியாப்பட்ட ஒரு 'ஃபேமஸ்' கதைக்கு இரண்டாம் பாகம் எழுதுவது சாதாரண விஷயமில்லை. எந்த மொழியில் வெளியிடப்பட்டாலும், பல தரப்பட்ட மக்களும் விமர்சிக்கும் படமாக அந்தப் படம் அமைந்து விடும். அப்படிப் பட்ட ஒரு ரிஸ்கை எடுத்துள்ளார் P.வாசு. அதில் வெற்றியும் பெற்றுள்ளார் என்பதே உண்மை. அந்தப் படம் தான் ஆப்தரக்ஷகா. கன்னட ஆப்தமித்ராவின் தொடர்ச்சி... தியேட்டர்களில் மக்கள் கூடம் அலைமோதுகிறது. முதல் நாள் டிக்கெட் 700 ரூபாய்க்கு குறைவாக இல்லை. 3000ரூ வரையெல்லாம் போனது. நம் ஊரில் 'பாபா' ரிலீஸ் சமயம் முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் ஏலமெல்லாம் விடப்பட்டது ஞாபகத்திற்கு வந்தது...

படத்தின் கதைக்கு வருவோம்

ரமேஷ்('தமிழில்' செந்தில்நாதன்) - கங்கா பங்களாவிலிருந்து நாகவள்ளி வெளியேறி, எந்தப் பிரசனையும் இல்லை என்று தெரிகிறது. ஆனால் அதே சமயம் அந்த நாகவள்ளியின்(சந்திரமுகிகாரு) சித்திரம் ஒரு ஏழை ஓவியருக்கு வண்டிப்பாதையின் வழியில் கிடைக்கிறது. பிரமாதமாக வரையப்பட்டிருக்கும் அந்த ஓவியத்தை அவர் பொக்கிஷமாக பாதுகாக்க நினைக்கிறார். ஆனல் அந்த ஓவியரின் மனைவியோ "அதை விற்று பணமாக்கு இல்லையென்றல் பிணமாகு" என்று கோபமாய்க் கத்த, மறுநாள் காலை ஓவியர் வாயில் ரத்தம் கக்கி இறந்துகிடக்கிறார். ஓவியம் விற்கப்பட்டு, ஒரு நடன போட்டியில் தன் கணவனுடன் ஆடி வெற்றிபெற்ற சரஸ்வதிக்கு பரிசாகக் கொடுக்கப்படுகிறது.
கதை இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது. ஓவியம் பரிசாகக் கிடைக்கப்பெற்று 5 வருடங்களுக்குப் பிறகு ஒரு பெரிய வீட்டில் கௌரியின்(‘காதல்சந்தியா) நிச்சயதார்த்த விழா நடக்கிறது. அந்த விழாவில் தோழி ஒருத்தி 30 அடிப்பாம்பு ஒன்றைப் பார்த்து மயங்க, மாப்பிள்ளையும் எதையோ பார்த்து பயந்து பொண்ணும் வேணாம், ஒன்னும் வேணாம் என்று காரணம் கூறாமலே தெறித்து ஓட, பாம்பு பிடிக்க வந்தவனும் வாயில் ரத்தம் கக்கி இறக்க, ராமச்சந்திர ஆச்சாரியார் வரவழைக்கப்படுகிறார். வீட்டு வாஸ்த்துவில் பிரச்சனை இருக்கலாமென்று அதை கணிக்க ஒவ்வொரு இடமாக போகும் அவர் ஒரு பூட்டியிருக்கும் ஓர் அறையின் வாசலில் நின்று, உடல் சிலிர்த்து, கண்கள் வெறித்து (இருக்கு, இந்த வீட்டுல பிரச்சன இருக்கு!) "இந்த ரூமத் திறங்க!" என்று கர்ஜிக்கிறார். கதவைத் திறந்தால் சுவறில் பெரிதாக 'நாகவள்ளி' சித்திரம். மிரண்டு போய் "இது எப்படி இங்கே வந்தது? இது என்ன ஓவியம்னு உங்களுக்குத் தெரியுமா? 'நாகவள்ளி!' உங்க வீட்ல நடக்கிற எல்லா பிரச்சனைகளுக்கும் இந்த ஓவியமே காரணம், உங்க வீட்ல யார் உடம்புலயோ நாகவள்ளி புகுந்திருக்கா. அது யாருங்கிரத நான் கண்டுபிடிக்கிறேன். ஆனா அந்த நாகவள்ளிய கேப்டன் ஒருவரால் மட்டுமே சமாளிக்க முடியும்என்கிறார். "சாமுண்டித் தாயே ஆனே நானு நிம்மோனே" என்று பெங்களூர் இனோவேட்டிவ் ஃபில்ம் சிட்டியில் இளம் டான்ஸர்கள் மத்தியில் கேப்டன் 'டாக்டர்.விஜய்' (விஷ்ணுவர்தன்) இன்ட்ரோ.
வந்ததும் வராததுமாக அந்த வீட்டில் இருக்கும் அத்தனை பேரைப் பற்றியும் புட்டு புட்டு வைக்கிறார். "எல்லாம் .கே ஆனா, வூட்ல யாரோ மிஸ்ஸிங்" என்று கொக்கி போடுகிறார். "நான் வந்து 10 நாள் ஆச்சு. விசாரிச்சிட்டேன். இவங்களைத் தவிர யாருமில்ல" என்கிறார் ஆச்சாரியார். "இல்ல ஆச்சாரியாரே கண்டிப்பா ஒருத்தர் மிஸ்ஸிங்" என்று அடித்துச் சொல்ல எல்லாரும் அப்படியே வழக்கம்போல மிரண்டு போறாங்க! "ஹாய் நாகவள்ளி" என்று கூலாக படத்தைப் பார்த்துக் கையசைத்துவிட்டு, "சாமீ, கதவைத் திற, காற்றுடன் சேர்த்து நாகவள்ளியும் வெளியே வரட்டும்" என்று பூட்டிய நாகவள்ளியின் சித்திரமுள்ள அறைக்கதவையும் திறக்க வைக்கிறார்.
பிறகு, அந்த வீட்டுப் பெண்களின் மனசில் ஈஸியாக இடம் பிடிக்கிறார், ஆண்களை அதனால் பயப்படவைக்கிறார், வீட்டுப் பெண்ணின் காதலைக் கண்டுபிடிக்கிறார், "பறக்குது பாரு பட்டம்" மாதிரியே எல்லோருடனும் சேர்ந்து பாட்டு பாடுகிறார் (வீட்டுப் பெண்களுடன் சேர்ந்து தத்திந்தோம் ஸ்டையில் பாடலும் உண்டு) ... இப்படியே நகருகிறது கதை. இடையில் திடீரென்று நாகவள்ளியக் கண்டுபிடிப்பேன், ஓடவைப்பேன் என்று சொல்லிக்கொண்டேயிருக்கும் ஆச்சாரியாரைக் கொல்ல சதி நடக்கிறது, வீட்டமா ராவானா அரிக்கேன் விளக்கை தூக்கிக் கொண்டு எங்கோ செல்கிறாள், ராப்பொழுது ஒரு மணிக்கு (எது பதினெண்டு மணியா... இது பேய் வாக்கிங் போற டைம்னு சொல்வாங்களே...ஐய்யயய்யோ, ரூமா இது பெரிய மைதானமாதிரி இருக்குது, குடுக்கும் போது ஸ்டைலா வாங்கிட்டோம், இப்போ லப்க்கு லப்க்கு, லப்க்கு லப்க்குனு அடிச்சிக்குது) சலங்கைச் சத்தம் என்று பழைய அறிகுறிகள் தொடர்கிறது. டாக்டர் விஜய் ஒவ்வொருவராக சந்தேகப்பட்டு கடைசியில் ஒரு முடிவிற்கு வந்தவராய் பப்ளிக் லைப்ரரிக்குப் போகிறார். ராஜா விஜய ராஜேந்திர பகதூர் (வேட்டையராஜா) பற்றிய வரலாற்றைப் படிக்கத்தொடங்குகிறார். பக்கத்தைப் புரட்ட அந்த ராஜா தன் உருவத்தில் இருப்பத்தைக் காண்கிறார். குதிரையில் கையில் வாளுடன், "ஹௌறா! ஹௌறா!!" (லக்கலக்கலக்க...) என்று கர்ஜித்தபடி, ராஜா விஜய ராஜேந்திர பகதூர்...'இனி வேட்டையன் தரிசனம்' - இடைவேளை.
இந்தக் கதை கண்டிப்பாக தமிழுக்கு வந்துவிடும். அதனால் இதற்கு மேல் சொல்லி ரகஸியத்தை உடைக்க விரும்பவில்லை. முதல் பாகத்தில் வந்த அதே ஸீக்வென்ஸயே வைத்து இந்தக் கதைக்கான திரைக்கதையையும் P.வாசு அமைத்துள்ளார். சந்திரமுகி, வேட்டையனுக்கு நடுவில் அப்படி என்னதான் நடந்தது என்பதை சரியாக முதல் பாகத்தில் காட்டிய காட்சிகளுடன் பொருத்தி, லாஜிக் சிக்கலில்லாமல் வெற்றி பெறுகிறார். இதில் காட்டப்படுவது தான் உண்மையான 'துர்காஷ்டமிக்கு நானு அவன சம்பேஸ்தானு'. கிளைமாக்ஸ் அற்புதம். கண்ணில் நீர் நிச்சயம்...
நாகவள்ளியாக விமலா ராமன். உயரத்திற்கும், நிறத்திற்கும், பாம்புக் கண் லென்ஸ் போட்டு சும்மா மிரட்டுகிறார். தெலுங்கு சிரிப்பு நடிகரை நினைவுப்படுத்தும் முகத்திலும் அச்சுஅசல் வடிவேலு காமெடி ஸ்டைலிலும் 'மேல் நர்ஸாக' கோமலாக வரும் ஸ்ரீநாத் சிரிக்க வைக்கிறார். ஆனால் அவரை விட இறுதி வரை எதையாவது சொல்லி நம்மை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பது ராமச்சந்திர ஆச்சார்யா தான். சந்திரமுகியில் சீரியஸ் பிரபு கேரக்டர் கடைசியில் காமெடியானது போல் இதில் இவர் மாட்டிக்கொண்டு விட்டார். "அடியே நாகவள்ளி உன்ன உண்டு இல்லனு பண்ணிடுறேன்" என்று சொல்வார். உங்களால் எப்படி முடியும்" என்று கேட்டால் வெட்கமேயில்லாமல் விஷ்ணுவர்தனைக் கையைக் காட்டிவிட்டுக் கிளம்பிவிடுவார். கிளைமாக்ஸில் நாளை நாகவள்ளியை சரி பண்ணலாமென்று விஷ்ணுவர்தன் சொல்ல, தூங்கிக்கொண்டிருக்கும் நாகவள்ளியிடம் (ஜோதிகா மாதிரி இங்க ஒரு பொண்ணு உடம்புல இருக்கிற நாகவள்ளி - எப்படி ரகசியத்தக் காக்குறேனா?) போய் "உன்ன நாளைக்கு க்ளோஸ் பண்ணிடுறேன்" என்று சவடால் பேசிவிட்டு திரும்பும் போது மாடிப்படியில் கால தடுக்கி கண்ணாபின்னாவென்று உருண்டு மூக்கு வாயில் ரத்தம் ஒழுக ஆஸ்பத்திரியில் கிடப்பார். என்னக் கொடும ஆச்சாரியாரே இது...
விஷ்ணுவர்தன்... ராஜ்குமாருக்குப் பிறகு கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர். அவரது 200 மற்றும் கடைசிப் படம். முட்டியைப் பிடித்துக் கொண்டு, மெதுவாக நடந்து மிகவும் வயதானது போல் ஆரம்பத்தில் தெரிந்தாலும் பிறகு பழகிவிடுகிறது. ராஜ்பகதூராக நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் வேட்டையனாக ரஜினி வரும் போது கண்டிப்பாக தோற்றுவிடுவார்... நம்ம தலைவர் ஸ்டைலுக்கு ஈடாகுமா?
மொத்தத்தில் ரஜினி நடித்தால் கண்டிப்பாக இன்னுமொரு 800 நாட்களுக்கு ஓடக்கூடிய கதை, திரைக்கதை இந்தப் படத்தில் உள்ளது. மேக்ஸிமம் கியாரண்டி... தலைவரும் "கண்டிப்பா இது தமிழ்ல ஹிட்" என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ரஜினியைத் தவிர வேட்டையனாக யாரைப் போட்டாலும் ஆபத்து தான். அதைக் கண்டிப்பாக தாய்த் தமிழகம் ஏற்றுக்கொள்ளாது. P.வாசுவுடன் சேர்ந்து நாமும் வெயிட் செய்வோம்...

You Might Also Like

8 comments

 1. P. வாசுவை எப்படிங்க டைரக்டரா ஏத்துக்கறது??

  ஆனாலும்.. தலைவர் நடிப்பாரா? ஏற்கனவே.. குசேலன்ல வாங்கின அடி நினைவிருக்குமே..?

  ReplyDelete
 2. //P. வாசுவை எப்படிங்க டைரக்டரா ஏத்துக்கறது??//

  வழிமொழிகிறேன் . .பீ வாசுவை ஒரு இயக்குனராக நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இருந்தாலும், வேட்டையனாக தல நடித்தால் வெற்றி நிச்சயம்தான். ரஜினியே இப்படத்துக்கு 'வேட்டையன்' என்று பெயர்வைத்து எடுக்கும்படி அட்வைசினார் என்று வாரமலரில் படித்தேன் . .பார்ப்போம் . .

  ReplyDelete
 3. பை தி வே - விமர்சனம் நல்லா இருந்திச்சு . .சுவாரஸ்யம். ரசிச்சி படிச்சேன் . .

  ReplyDelete
 4. நண்பரே,

  விறுவிறுப்பான விமர்சனம். ரஜினி அந்த வேடத்தில் நடிக்காவிடில் அதற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள்? நண்பர் கருந்தேளை விட்டால் வேறு யாருமில்லை என்றே எண்ணுகிறேன் :)

  ReplyDelete
 5. ஆஹா . . . நமக்கு இந்த மாதிரி வேட்டையன் ரோலெல்லாம் வேண்டாம் . .ஹாலிவுட் சைக்கோ கில்லர் வேடமே எனக்குச் சிறந்தது . . :-)

  ReplyDelete
 6. @பாலா, கருந்தேள், காதலன் - வருகைக்கு நன்றி நண்பர்களே...
  'பீ'.வாசு மேல் எனக்கும் அப்படி ஒன்றும் பெரிய அபிப்ராயமோ எதிர்பார்ப்போ இல்லை. ஆனாலும் வால்டர் வெற்றிவேல், சேதுபதி I.P.S, சின்னதம்பி, மன்னன் படங்களை மறக்கமுடியாது. ஆப்தரக்ஷகா கதை மெய்யாலுமே சூப்பர்... ஆச்சரியப்பட்டுப் போனேன். அண்ணாமலை காலத்திலிருந்தே 'இது என் கடைசி படம்'னு தலைவர் பேட்டி கொடுத்துக்கிட்டே இருக்காரு... ம் ம் ம் நடக்குமா அதெல்லாம்...? வேட்டையன் தரிசனம் நிச்சயம் உண்டு...

  ReplyDelete
 7. நீ எழுதுறதுல நிறைய வளர்ச்சிக்கான மாற்றம் தெரியுது! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. இந்தப் படம் தமிழில் வராது, வரவே வராது, பூஜையெல்லாம் போட்டு தலைவர் பாதுகாப்பாக இருக்கிறாராம். இந்தக் கதை செண்டிமெண்ட்டாக சரியாக வராது என்று அகில உலகமும் சொல்லிக் கொண்டு இருக்கிறதாம்

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...