சிறுகதை: கடமை கண்ணியம் கட்டுப்பாடு

11:40:00 AM


"ஏட்டைய்யா, எவ்வளவு நேரம் தான் இப்படி சும்மாவே உக்காத்தி வச்சிருப்பீங்க. ஒரு டீய கீய வாங்கித்தரக்கூடாதா... நீங்க கூப்ட உடனே வந்தேனா இல்லையா, பீடிகட்டையும் பிடுங்கி வச்சுட்டீங்க... சரியாவே கவனிக்க மாட்டேங்குறீங்களே" - இப்படிச் சொன்னவன் மரபெஞ்சிற்குப் பக்கத்தில் மண்டிபோட்டு உட்கார்ந்திருந்த சத்தியசீலன்.. பெயருக்கேற்றார்போல் ரொம்பவே சீலன். குட்டி குட்டியாய் 10 கேஸ் இவன் மேல் உள்ளது. எல்லாம் சைக்கிள் திருட்டு, கோழி திருட்டு, சில்லறை வழிப்பறி போன்றவை. எதுஎது தான் நிஜமாகவே செய்தது என்று அவனுக்கேத் தெரியாது. இந்தக் கதை அவனைப் பற்றியதல்ல.

"டேய் மூடிட்டு உட்காரமாட்ட... மத்தவனெல்லாம் பொத்திகிட்டு இருக்கானல்ல, உனக்கு மட்டும் என்ன? - இப்படிச் சொன்னது ரைட்டர் டேபிள் பக்கத்தில் நின்று எதையோ புரட்டிக்கொண்டிருந்த ஏட்டு அரிசந்திரன் என்கிற நான். இந்தக் கதை என்னைப் பற்றியதுமல்ல.

" அட, விடுங்க ஏட்டையா, அவர் வர்ற நேரத்துல நீங்க ஏன் வாயக் குடுக்குறீங்க; எப்படியும் அவர் வந்து நாலு தட்டு தட்டுவாரு, அப்புறம் இவன் வாயத் திறக்கிறானா பாப்பம்" - இது ரைட்டர் ரவி. கதை இந்த ரைடரைப் பற்றியதுமல்ல. ‘அவர்’ ‘அவர்’ னு இந்த இவன் சொல்றானே, அந்த அவரைப் பற்றியது.

"என்னங்க இது புது எஸ்.ஐ வர்றாரு, கேஸ் குறையுது. சும்மா ஒரு நாள் இருந்துட்டு போன்னு தான கூட்டி வந்தீங்க. இப்ப என்னடானா அடிப்பாரு வப்பாருங்குறீங்க. ஏட்டையா என்ன ஏட்டையா இது உங்கள நம்பி வந்தவந்தவங்களுக்கு சோதனையக் குடுக்குறீங்களே" மறுபடியும் சீலன். "டேய் நீ சும்மாவே இருக்கமாட்டியா, புது எஸ்.ஐ ஊர்ல இருக்கிற பேர் போன திருட்டு பசங்கள வந்த உடனே பாக்கனும்னு நேத்தே போன் போட்டுட்டாரு. அதான் உங்கள கூட்டி வந்து உக்காத்தி வசிருக்கேன். போதுமா? கொஞ்ச சும்மத்தான் இரேன்..." என்று நான் சொன்னதற்கு மறுபடியும் "ஓஹோ... அதான் மேட்டரா " என்றான் அவன். ஆம். அது தான் விஷயம். குலுமினார்பட்டி கிராமத்திற்கு புது எஸ்.ஐ வர்றார். அதற்காகத் தான் இப்படி முப்பது பேரை ஸ்டேஷன் அடக்க உட்கார்த்தி வைத்திருக்கிறோம். இந்தக் கதை அவரைப் பற்றியது தான்.

சென்னையில் பெரிய போலீஸாருக்கு லான்ஸர் காரும், ஏட்டு, கான்ஸ்டபிள்களுக்கு பல்சர் பைக்கும் குடுத்திருந்தாலும், எங்களுக்கு இன்னும் நீலக் கலர் ஜீப், சைக்கிள் மட்டும் தான். இங்கு வரும் பெரும்பாலான அதிகாரிகள் ஜீப் உபயோகிப்பது இல்லை. அவரவர் பைக்கிலேயே போய் வந்து கொண்டிருந்தனர். அதில் அவர்களுக்கு ஏகக்கடுப்பு. பெரிய ஊர்களிலிருந்து மாற்றமாகி வந்திறங்கும் பலருக்கும் இது பெரிய தலைவலியாக இருந்து வந்தது. ஜீப் வசதி சரியில்லை என்பதற்காகவே மாற்றம் வாங்கிக்கொண்டு போன எஸ்.ஐ கதையெல்லாம் இங்கு உண்டு.

அப்படிப் பட்ட 'வளர்ந்த' ஊரான குலுமினார்பட்டிக்கு புது எஸ்.ஐ வர்றார். இவர் எத்தனை நாள் என்று பார்க்கலாம்.

சரி, நான் இங்கு எத்தனை வருடமாக இருக்கிறேன் தெரியுமா? 19 வருடங்களாக. கான்ஸ்டபிளாக ஆரம்பித்து, இந்தா இந்த ரவி மாதிரி ரைட்டராகி, முக்கி முக்கி இப்போழுது 7 வருடங்களாக 'ஏட்டு'. இந்த ஊர் எனக்கு ரொம்பவே பழக்கம். எனக்கு பெண் எடுத்தது இந்த ஊரில் தான். என் மகளுக்கு நான் மாப்பிள்ளை தேடுவதும் இதே ஊரில் தான். என் ஓரே மகள். பெயர், மீனாட்சி. என் அம்மாவின் பெயர். குலுமினார்பட்டியில் 'ஏட்டு' என்றால் தெரியாத ஆள் இல்லை. எனக்கும் இந்த ஊரில் தெரியாத ஆள் இல்லை. இதோ இந்த சத்தியசீலன் இருக்கிறானே, இவனை நான் ஐந்து வயதிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். பத்து வயதில் பிக்பாக்கெட் அடிக்க ஆரம்பித்தவன் இப்போது 21 வயது ஆகிறது இன்னும் அதே லெவலில் தான் இருக்கிறான். பெரும்பாலான சமயம்
மாட்டிக்கொண்டுவிடுவான். இரண்டு முறை மதுரை சென்ட்ரலுக்கு போய் வந்திருக்கிறான். யாருமில்லாத நல்லவன். இவனை மாதிரி இந்த ஊரில் எத்தனையோ பேர். எத்தனையோ தொழில் செய்கிறார்கள். அதில் முக்கியமான தொழில்... அதற்கு முன்… இந்த ஊரின் நிஜப் பெயர் என்ன தெரியுமா?

குன்றுக்கோனார்பட்டி!

குன்றுக்கோனார் எப்படி குலுமினார் ஆனது தெரியுமா? இந்தத் தொழில்களால்தான். இந்த மதுரை ஜில்லாவிலேயே கள்ளச் சாராயம், விபசாரம் இரண்டும் கொடிகட்டிப் பறப்பது இங்குதான். ஒவ்வொரு முறை புது எஸ்.ஐ வரும்போதும் ரெய்ட் போவோம். மொத்தமாக இழுத்துக்கொண்டு வந்து ஒரு நேரம் வைத்திருப்போம். பிறகு போன் வரும். பேரம் நடக்கும். புது எஸ்.ஐ எவ்வளவிற்கு போவார் என்பது தெரியும். கொஞ்ச நேரத்தில் பார்சலுடன் ஆள் வருவான். பார்சலை கொடுத்துவிட்டு, 'இழுத்து' வந்தவர்களை 'அழைத்து'க்கொண்டு போய்விடுவான். அடுத்த எஸ்.ஐ வரும் வரை இவர்களது கச்சேரி களை கட்டும்... ஹும்... இதே ஊரில் குடும்பத்தையும் வைத்துக்கொண்டு இந்த போலீஸ் வேலை பார்ப்பதற்கு..., இல்லை என் டிப்பார்ட்மெண்ட்டை நானே அசிங்கமாகப் பேசக்கூடாது.

ஆனால் இப்போது வந்துகொண்டிருக்கும் இந்த புது எஸ்.ஐ ஆரம்பத்திலேயே பல ஆச்சரியங்களைத் தந்துகொண்டிருந்தார். நேற்று மதியமே போன் வந்துவிட்டது. "குன்றுக்கோனார்பட்டி எஸ்.ஐ பேசரேன், நாளை காலை ஜாய்ன் பண்றேன். நான் வரும் போது ஊர்ல இருக்கிற காலிப்பயலுக, கள்ளச் சாராய பார்ட்டிக, தொழில் செய்ர பொம்பளைங்க எல்லாரும், ஒருத்தர் விடாம ஸ்டேஷனுக்கு வந்திருக்கனும். ஊர்ல என்ன தான் நடந்துக்கிட்டு இருக்குனு எனக்குத் தெரியனும். ராத்திரி குவார்டஸ் (பழைய பஞ்சாயத்து ஆபீஸ் பில்டிங்) வந்துருவேன். காலைல 10 மணிக்கு ஜீப் அனுப்பிருங்க" - சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். நான் தான் பேசினேன்.

குன்றுக்கோனார் என்று அவர் சொன்னதே பெரிய ஆச்சரியம். எங்களது ரெக்கார்டுகளிலேயே பல இடங்களில் குலுமினார் என்றுதானிருக்கும். புது எஸ்.ஐ மீது புது மரியாதை வந்தது.

சொன்னது போல் சரியாக 10 மணிக்கு வந்துஇறங்கினார். மாலை பொடப்போனை ரவியை முறைத்தார், எதுக்கு இந்த வெட்டி ஃபார்மாலிடீஸ் என்றார். ஸ்டேஷன் முழுக்க திருடர்கள், சாராய வியாபாரிகள், 'அழகிகள்' என்று தனித்தனியே நிற்கவைத்திருப்பதைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தார். வந்தவர் "அரிசந்திரன்" என்றார். முதலில் யாரையோ என்று நான் சும்மா நின்று கொண்டிருந்தேன். "அரிச்சந்திரன், உங்களத்தான், அதான உங்கப் பேரு?" என்றார். ஏட்டு ஏட்டு என்றே சிறியது முதல் பெரியது வரை எல்லோரும் கூப்பிட்டு கூப்பிட்டு என் பெயரே எனக்கு இப்போது மறந்திருந்தது. "ஐயா" - கிட்டே போய் நின்றேன். “ஐயாவெல்லாம் வேணாம் அரிசந்திரன். தம்பினு கூப்பிடுங்க, சிரமமாயிருந்தா ஸார்னு கூப்பிடுங்க” என்றதற்கு நான் "சரிங்க ஸார்" என்றேன், “உங்க இஷ்டம்” என்றார்.

அடுத்தடுத்து அவர் செய்த செயல்கள் இதுவரை நான் பார்த்த அதிகாரிகள் செய்யாதது. குலுமினார்பட்டி 'தொழில்' அதிபர்களிடம் அவர் விலை போகவில்லை.

"சாராயம் காய்ச்சுவதை நீங்களே நிறுத்த வேண்டும் இல்லையென்றல் நிறுத்தபடும். உங்களுக்கு சிறு தொழில் உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். பக்கத்து ஊர் எம்.எல்.ஏ எனக்கு மாமன் முறை (அப்படிப் போடு!). என்னிடம் உங்களது எந்தப் பருப்பும் வேகாது. வாலைச் சுருட்டிக் கொண்டு நான் சொல்வதை மட்டும் நீங்கள் கேட்க வேண்டும். வேறு வழியே இல்லை"

"லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம். நீங்கள் செய்த தவறை நான் ஒரு முறை தான் மன்னிப்பேன். மறுபடியும் லஞ்சம் என்று எதை நீட்டினாலும் வெட்டி முட்டிக்குமுட்டி தட்டி, உள்ளே வைத்து விடுவேன்"

"யாரையும் இப்போது அரஸ்ட் செய்யப்போறது இல்லை. எல்லோருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு தருகிறேன். சரி செய்து கொள்ளுங்கள். இல்லை... (மேஜையில் 'டம்'மென்று அவர் கை இறங்கிய வேகம், சீலனை சுவரோடு ஒட்டிய பல்லியாக்கியது!) உங்களுக்குதான் பிரச்சனை. நான் மத்த போலீஸ்காரங்க மாதிரி கிடையாது."

"ஊர்ல இருக்கிற 'சரோஜா', 'ராணி' யெல்லாம் அந்தந்த பொண்ணுங்கள அவங்கவங்க வீட்ல கொண்டு போய்விட்ரனும். இங்க இடமில்லனு பக்கத்துல எங்கயாவது கூடாரத்தப் போட்டு ஆள விட்டுக்கிட்டு இருந்தீங்க,... (ட்ட்டிக் - கை சொடுக்கி) ஜென்மத்துக்கு வெளியே வர முடியாதபடி பண்ணிருவேன். ரெய்ட் வரும் போது சிக்கினவன் அத்தோட வெளி உலகத்த மறந்துறவேண்டியது தான். குன்றுக்கோனார குலுமினார்னா மாத்துறீங்க பாக்குறேன், இனி எப்படின்னு"

"இந்த பிக்பாக்கெட் அடிக்கிறவன், வீடு புகுந்து கொள்ளை அடிக்கிறவன், அடுத்தவன் பொண்டாட்டி தாளி அறுக்கிறவன் எல்லாம் உசிர் மேல ஆச இருந்தா அமைதிய எதாவது வேலை செஞ்சு பொழச்சுக்கோ. இல்ல இந்த ஊர விட்டே ஓடிப்போயிரு!"

ஒருத்தனையும் விடவில்லை. முதல் நாள் பகட்டு என்று தெரியவில்லை. அவர் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் கோபமிருந்தது. ஊர் சுத்தமாகிவிடும் என்ற நம்பிக்கை லேசாக பிறந்தது போலிருந்தது. இது மாதிரி மேலதிகாரிகள் இருந்தால், என்னை மாதிரி ஆட்களும் நிம்மதியாக வாழலாம். மகள் கல்யாண...

"ஏட்டு"

"யோவ்! ஏட்டு, ரெண்டு தடவ கூப்பிட்டாதான் வருவீகளோ?"

"இல்லைங்க தம்பி". முறைத்தார். "சொல்லுங்க ஸார்"

"இப்போ வந்துட்டு போனதிலே அந்த நீலக்கலர் புடவ கட்டிக்கிட்டு நச்சுனு ஒரு குட்டி, அதான் கையக்கட்டிட்டு அங்க நின்னுகிட்டு இருந்தாளே, அவள ராத்திரி குவார்டஸ்கு வரச் சொல்லு. இன்னிக்கி குலுமினார்பட்டி ஸ்பெஷல் எப்படினு பாத்துற்றேன்"

"சரிங்க ஐயா" - புது எஸ்.ஐ. மற்றவர் போல் இல்லை (?)

You Might Also Like

3 comments

 1. க்ளைமேக்ஸ் எதிர்பார்த்ததுதான், ஆனாலும் எழுத்து நடை நல்லாருந்தது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. நண்பரே,

  ஏதோ நடக்கப் போகிறது எனும் சஸ்பென்ஸும், உங்கள் சிறப்பான நடையும் கதையை விரைவாக படிக்க வைத்தது. தொடருங்கள்.

  ReplyDelete
 3. வருகைக்கு நன்றி ramtirupur

  @கனவுகளின் காதலன்: மிக்க நன்றி நண்பரே... உங்களைப் போன்றவர்களது ஆதரவால்தான், தோன்றுவதையெல்லாம் "கதை" என்ற பெயரில் கிறுக்கிக்கொண்டிருக்கிறேன். படிக்க சிலர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில்|:-)

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...