சென்ற வாரம் - டைரி குறிப்புகள்

11:07:00 AM

இந்த வாரம் 'சென்ற வாரம்' விடாமல் எழுதுவதற்கு முக்கிய காரணங்கள் உண்டு. அதற்கு பிறகு வருகிறேன். முதலில் ரெகுலர் விஷயங்களை முடித்துவிடுவோம்.

எப்படியோ முட்டி மோதி The Hut Locker, The Blind Side, The Last Ride, Percy Jackson and the Lightning Thief என்று வரிசையாக நான்கு படங்கள் சென்ற வாரம் பார்க்க முடிந்தது. தமிழ் படம் எதுவுமே பார்க்கவில்லை. அவள் பெயர் தமிழரசியின் சுவடே பெங்களூரில் இல்லை. தம்பிக்கு இந்த ஊரா, இல்லை மாத்தியோசியா எது மஹா மட்டம் என்று பதிவுலகமே(!) அடித்துக்கொண்டிருப்பதால்(!)(!) அவ்விரண்டு படங்களையும் பார்ப்பதில் ஆர்வம் ஏற்படவில்லை.

இந்த வாரம் கச்சேரி ஆரம்பம், முன்தினம் பார்த்தேனே ரிலீஸாகிறது. பார்ப்போம்... தேறுமா என்று.

இந்த ஐ.பி.எல் வந்து பலப் படங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டது. எனக்கு கிரிக்கெட் பிடிக்காது. சுத்தமாகப் பிடிக்காது. நன்றாக ஞாபகமிருக்கிறது, கல்லூரி இறுதி வருடத்தில், முதல் முறையாக இந்த ஐ.பி.எல் நடக்கும் போது ஹாஸ்டலே காலியா இருந்தது. நான் மட்டும் என் ரூமில் Black Hawk Down பார்துக்கொண்டிருந்தேன். திடீரென்று என்ன நடந்த்தோ தெரியவில்லை. வெடி வெடிக்கிறது, வெறித்தனமாகக் கத்துகிறார்கள், எதைஎதையோ கையில் வைத்துக்கொண்டு தட்டுகிறார்கள், வார்டன் பயந்து வெளியே ஓடுகிறார்... "என்னடா என்னாச்சு" என்று நான் ஒருத்தனை மறித்துக்கேட்டால், அவன் பதில் சொல்லாமல் என்னை முறைக்கிறான். "நீயெல்லாம் ஒரு இந்தியனா..." என்று கேட்டுவிட்டுப்போய்விட்டான். இவனெல்லாம் 'நீ ஒரு இந்தியனா' என்று என்னைக் கேட்கிறான் என்றால் கண்டிப்பாக ஏதோ ஒரு டீம்மின் ஜெய்ப்பு அன்று நடந்திருக்கிறது என்று நான் புரிந்துகொண்டேன். நான் கிரிக்கெட் பார்க்கமாட்டேன் என்று சொன்னால் யாரும் நம்ப வேமாட்டேங்குறார்கள். "சாமீமீ... சத்தியமா சொல்றேன்... எனக்கு பேதியானதுனாலதான் நான் லீவ் போட்டேன்" என்று கற்பூரம் அடித்தால் கூட "இல்ல நீ மேட்ச் பாக்கத்தான் லீவ் போட்ட" என்று கூறியவர் என் மானேஜர். பெங்களூரில் இருந்து கொண்டு 'சைட்' அடிக்கமாட்டேன் என்று சொல்பவர்களைக் கூட நம்பிவிடுகிறார்கள்; தமிழகத்தில் பிறந்துவிட்டு கிரிக்கெட் பார்க்கமாட்டேன் என்று சொல்பவர்களை நம்பமாட்டேன் என்கிறார்கள். அப்படியே நம்பினாலும் தேசத்துரோகியைப் பார்ப்பது போல் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். நீங்கள் இப்போது என்னை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தொடர்ந்து வாசிக்கிறீர்களா? ஏனென்றால் நான் ஒரு தேசத்துரோகி பாருங்கள். அதான் கேட்டேன்... சரி சென்ற வாரம் நடந்த ஆஸ்கார் திருவிழாவில் அவதார் பெரிதாக 'பன்' வாங்கியதில் வருத்தமிருந்தாலும் கொஞ்சமே கொஞ்சம் சந்தோஷமுமிருந்தது. ஆஸ்கார் அரசியலிலும் புயல் வீசி சில மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு என்பதை இப்போது நிரூபித்து இருக்கிறார்கள். மரண அடி வாங்கியிருக்கிறது அவதார். கடைசி நேரத்தில் கவனம் ஈர்த்து கச்சிதமாக இந்த வருட ஹீரோவாகி விட்டது, The Hut Locker. சும்மா சொல்லக் கூடாது ஸ்லம்டாக்கிற்கு 8 கிடைக்கும் போது, லாக்கருக்கு 6 தப்பே இல்லை.

முதல் படம், முதல் நாமினேஸன், இதுவரை 28, ஆஸ்காரோடு சேர்த்து 29 விருதுகளைக் குவித்துள்ளார் Col.Hans Landa (என்ற) Christoph Waltz. மேடை நாடகம், டி.வி என்று ஜாலியாகச் சுற்றிக்கொண்டிருந்தவரை ஒரு நாள் பார்த்து அசந்து, " இங்க பாரு... நீதான் பண்ற இல்லன்னா, த்தா... நான் படமே எடுக்கல", என்று கொடூரமாக பாசத்தைக்காட்டி தன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார், குவெண்டின். மனிதரும் நடித்தர், ஜமாய்த்தார், ஜெய்த்தார். இவருக்குதான் Best Supporting Actor விருது என்று குழந்தைக்கு கூடத் தெரிந்திருக்கும். அந்த முதல் கால் மணி நேர இன்ட்ராகேஷன், சான்ஸே இல்லை...

முக்கிய விஷயத்திற்கு வருவோம் "நாமளும் இதுவரைக்கும் விடாம ஒரு பத்து கத எழுதிட்டோம், சரியான ரெஸ்பான்ஸே இல்லையே" என்று நினைத்துக் குமுறிக் கொண்டிருந்த சமயம், சக பதிவர், நண்பர் ஷங்கரிடமிருந்து (கனவுகளின் காதலன்) ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் எனது 'உயிர்' சிறுகதை மிகவும் நன்றாக இருந்ததாகவும், தொடர்ந்து எழுதும்படியும் அவர் சொல்லியிருந்தார். மகிழ்ச்சியின் உச்சதிற்கே சென்று வந்தேன். இதுவரை என்னையோ நான் செய்ததையோ பாராட்டி என் டீம் லீட் கூட ஒரு மெயில் பண்ணியதில்லை. இவர் தான் முதல் ஆள். நன்றி நண்பரே...

‘உயிர்’ சிறுகதையில் என் நண்பர்கள் பலருக்கு பல சந்தேகங்கள் ஏற்பட்டது. அதில் முக்கியமான ஒன்று, தப்பான வழியில் உருவானதால் கருவைக்கலைக்க நினைத்த ஷீலா, கலைத்த டாக்டர் கொலை செய்யப்பட்டது ஓ.கே. ஆனால், தேவ் அல்லது ஆனந்த் யாராவது ஒருவர் தானே சாகவேண்டும். ஏன் இரண்டு பேரும் செத்தார்கள் என்று நண்பன் அருண் கேட்டது. அதற்கு பதில் இதோ - "அன்று இரவு தவறு நடந்திருக்கிறது. அன்று இரவு மட்டுமல்ல என்பதும் தெளிவாகவே தெரிகிறது.கழுத... இந்த மாதிரி ஆட்கலெல்லாம் இருந்த என்ன செத்தா என்ன? கொல்லனும்னு முடிவு பண்ணியாச்சுன்னா ஒருத்தனையும் விடக்கூடாது. அதனால்தான் இரண்டு பேரையும் கொன்னுடேன்" ஓ.கே தானே?

அப்புறம், நம்ம 'நித்யா' வீரப்பன் தோற்கும் அளவிற்கு வீடியோ மேல் வீடியோ அனுப்பிக்கொண்டிருக்கிறார். "முதல் வீடியோவில் நானோ ஞானபீடமோ சட்டத்திற்குப் புறம்பாக எதுவும் செய்யவில்லை" என்றார், அடுத்த வீடியோவில் "என்னைச் சுற்றி சதி நடக்கிறது; நான் தகுந்த ஆதாரத்துடன் வருவேன்" என்றார். கடைசியாக இப்பொழுது "அந்த வீடியோவில் இருப்பது நான் தான் ஆனால் முழுக்க நானில்லை, பாதி நான் பாதி மார்பிங்" என்று சொல்கிறார். இவர் வெளியிட்ட மூன்று வீடியோக்களை யார் பார்த்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் 'அவர்கள்' வெளியிட்ட வீடியொவை கமென்ட்ரியுடன் தமிழகமே பார்த்துவிட்டது. இனி என்ன விளக்கமளித்தாலும் ப்ரோஜனமேயில்லை.

அடுத்த வாரம் வேறு சில புதிய பகுதிகளை இணைக்கலாமென்று இருக்கிறேன். இப்போதைக்கு ஆதரவிற்கு நன்றி... ஓரிரு நாளில் ஒரு சிறுகதை எழுதுகிறேன். மீண்டும் வந்து படித்துவிட்டு கமெண்டவும்...

You Might Also Like

4 comments

  1. டைரி குறிப்புகள் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நண்பரே,

    Christoph Waltzன் நடிப்பு அருமையாக இருக்கும், ஆரம்பக் காட்சி அருமை அதேபோல் பிராட் பிட் கோஷ்டியுடன் இத்தாலிய மொழியில் பேசி கதறடிக்கும் காட்சியும் எனக்கு பிடித்ததே. அவரைத் தவிர்த்து வேறு விருதுகள் அப்படத்திற்கு வழங்கப்படாது எனக்கு திருப்தியே!

    பெர்சி ஜாக்சன் நாவல் அருமையாக இருக்கும். புதிய பகுதிகளை இணையுங்கள். ராசி பலன் இருக்குமா, அடுத்த வருடம் நித்திக்கு ஆஸ்கார் கிடைக்குமா :))

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி இராமசாமி கண்ணன்

    ReplyDelete
  4. @Kathalan: Christoph Waltz வரும் எல்லா இடங்களுமே அற்புதம் தான் நண்பரே - முதல் இன்ட்ராகேஷன், ஷோசானாவிடன் பாதுகாப்பு அதிகாரியாக அந்தக் ஹோட்டலில் பேசும் காட்சி, பிராட் பிட் கோஷ்ட்டியுடன் பேசுவது, கடைசிக் காட்சியில் ஷூவை ட்ரை செய்யச் சொல்லி பேச்சு வாக்கில் கழுத்தை நெறிப்பது என எல்லாமே பக்காவாக இருக்கும். இந்த ரோலிற்கு முதலில் லீயானர்டோ காப்ரியோவை கேட்டிருந்தாராம் குவெண்டின். அவரை மிஞ்சுபவராய் இவர் வந்து சேர்ந்து விட்டார்...

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...