ஆறாது சினம் (2015)

8:58:00 AM

‘MEMORIES’ கொஞ்சம் சுமாரான படம் தான். அதைத் தமிழில் ரீமேக் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அதிலும் ‘ஈரம்’ அறிவழகன் – ஆச்சரியம் தான். ஒரிஜினலே பிடிக்கவில்லை, ரீமேக்க என்னத்த பாத்துக்கிட்டு என்று ஒதுக்கிவிட்டிருந்தேன். விமர்சனங்களும் mixed ஆகவே இருந்ததும் ஒரு காரணம். ஆனால் படத்தை இன்று பார்த்துவிட்ட பிறகு, எனது எண்ணம் முற்றிலும் தவறு என்பதைப் புரிந்துகொண்டேன். ஒரிஜினல் தன்மை கெடாமல், அதே சமயம் தமிழுக்கும் ஏற்றபடி காட்சிகளைக் கோர்த்த விதத்தில், ‘ஆறாது சினம்’ நிச்சயம் நல்ல ரீமேக் தான். சொல்லப்போனால் ரீமேக் ஆகும் மலையாளப்படங்களில் சமீபத்தில் ‘பாபநாசம்’ படத்திற்குப் பிறகு ஒரு நல்ல படம் என்றால் நிச்சயம் அது இந்தப் படம் தான்.
அருள்நிதி நன்றாக நடித்திருக்கிறார். முகத்தில் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் ரியாக்ஷன் மட்டும் கொடுக்கக் கற்றுக்கொண்டால் சூப்பராக இருக்கும். ஐஸ்வர்யா ராஜேஷ், ஃபுல் மேக்கப்பில், ஃபுல் ஆக சிரிக்கிறார். இவர்களது பிள்ளையாக வரும் குழந்தை தப்பான காஸ்டிங். பாரீன் குழந்தையை இவர்கள் தத்தெடுத்து வளர்ப்பது போல் இருந்தது. சுத்தமாகப் பொருந்தவில்லை. சின்னக் கதாப்பாத்திரமாக இருந்தாலும், அது குழந்தையாக இருந்தாலும், முக்கியமான கதாப்பாத்திரங்களில் யாரை நடிக்க வைக்கிறோம் என்பதில் கவனம் வேண்டும். கதையுடன் ஒன்ற காஸ்டிங் முக்கியம் என்பது எனது தாழ்மையான கருத்து. ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் வந்ததை விட இப்போது அழகாகவும் கான்பிடன்டாகவும் தெரியும் ஐஸ்வர்யா தத்தா இந்தப் படத்தில் ரிப்போர்டராக வந்ததன் காரணம் என்ன என்று தெரியவில்லை. சார்ளி இருக்கிறார்.
அரவிந்த் சிங் என்பவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மிக அருமையாக இருக்கிறது. தமனின் இசையில் இரண்டே பாடல்கள் தான். அதும் சூப்பர். பின்னணி இசைக்கு மொத்தம் மூன்றே மூன்று கோர்ப்புகளை மட்டும் வைத்து ஒப்பேற்றியிருக்கிறார். அதிலும் அடிக்கடி வரும் இசை, ‘அந்நியன்’ பட பின்னணியை நியாபகப்படுத்தியது. எடிட்டிங் நன்றாக இருந்தாலும், மான்டேஜ் களில் ஒரே காட்சிகள் பல முறை ரிபீட் ஆனதைத் தவிர்த்திருக்கலாம். மான்டேஜகளை மொத்தமாகத் தவிர்த்திருந்தால் கூட படம் 15 நிமிடம் வரை குறைந்திருக்கும். அவ்வளவு காட்சிகள். மலையாளத்திலிருக்கும் சில காட்சிகளைத் தவிர்த்திருக்கிறார்கள். நல்ல விஷயம் தான். ஆனாலும், ‘டப்’ என்று படத்தை முடித்திருக்கக்கூடாது. பினிஷிங் டச் மிஸ்ஸிங்.
*** SPOILER ALERT ***
மெமரீஸ் படத்திலேயே கண்ட குறை தான். தொடர்கொலைகளைச் செய்பவன் தனது பலியாடுகளை (victims) தேர்தெடுக்க சொல்லப்படும் காரணம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. அந்த ‘தர்மம்’ அல்லது லாஜிக் அவ்வளவி சிறப்பாக எடுபடவில்லை. அந்தப் பெண்கள் நால்வரும் தவறு செய்துவிட்டு அதற்கு தண்டை கொடுத்தவர்களை அதைவிடப் பெரிய தவறு ஒன்றின் மூலம் பழிவாங்குகின்றனர். அவர்களது கணவன்மார்களைக் கொன்றுவிட்டால் மேக்சிமம் ஒரு மாதம் அழுவார்கள், அவ்வளவு தான் என்றே தோன்றுகிறது. இதுவே அவர்கள் நல்லவர்களாக இருந்து, தெரியாமல் அவர்கள் செய்த தவறுக்காக இந்தத் தண்டனை என்றால் அது ஏற்றுக்கொள்ளும்படி இருக்கும், ஹீரோவிற்கு நடந்ததைப் போல. ஆனாலும், ஹீரோ தனக்குக் கொடுக்கப்பட்ட கேஸை தன் நிலையை வைத்து கம்பேர் செய்து சால்வ் செய்யும் உக்தி அருமை.
*** SPOILER ALERT ***
குறைகள் இருந்தாலும், ‘மெமரீஸ்’ பார்க்காதவர்களுக்கு நிச்சயம் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அல்லது ‘இந்த கேஸ இனி நீயே பாத்துக்கோ’ என்று கமிஷனர் ராதாரவி, ரோபோ சங்கரை கழட்டிவிடும் இடத்திலிருந்து பிடிக்கும். அறுத்தெடுத்துவிட்டார் ரோபோ. நல்லவேளை ‘ஹே மா யாரு வேணும் என்ன பண்றீங்க’ என்று அவரது டிரேட் மார்க் டயலாக் எதுவும் பேசவில்லை.
மெமரீஸ் பார்த்திருந்தாலும், பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும், இந்தப் படத்தை என்னால் ரசித்துப் பார்க்கமுடிந்தது. சீரியல் கில்லர் படங்கள் தமிழில் இப்போது வருவதில்லை. வருவதெல்லாம் வெகுஜனத்தை குறிவைக்கும் காமெடி கலந்த மசாலா படங்களே. வகைமைக்கு மதிப்பு தரும் இது போன்ற படங்கள் வரவேற்கப்படவேண்டும். ரீமேக் ஆக இல்லாமல் நேரடித்தமிழ் படமாக இருந்தால், இன்னும் கொண்டாடி இருக்கலாம்.
 பார்த்தே தீர வேண்டிய படமில்லை என்றாலும், ஒரு முறை பார்கக்கூடிய த்ரில்லர் இந்த ‘ஆறாது சினம்’.
பி.கு 1: ‘ஆறாது சினம்’ என்ற டைட்டில் இந்தக் கதைக்கு எப்படி பொருந்துகிறது என்று தெரியவில்லை. ‘மெமரீஸ்’ அருமையான டைட்டில். 
பி.கு 2: இந்தப் படத்தை நான் பார்த்தது தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா சில்லமரத்துப்பட்டியில் உள்ள R.S திரையரங்கில். டூரிங் டாக்கீஸ் ஆக தொடங்கப்பட்ட திரையரங்கம். பலநாட்கள் ஓடாமல் பூட்டி வைத்திருந்தார்கள். இப்போது பட்டி டிங்கரிங் பார்த்து, ஸ்பீக்கர் எல்லாம் மாற்றி ரெடி செய்திருக்கிறார்கள். சுமார் தியேட்டர் தான். ஆனால் சத்தியாமகச் சொல்கிறேன் - தேனி மாவட்டத்திலேயே (முக்கியமாக தேனி டவுன்) - அருமையான தியேட்டர் என்றால் அது R.S தான். டிக்கெட் விலையைக் கேட்டு மயக்கம் போட்டு விடவேண்டாம். ஆண்களுக்கு 30ரூ, பெண்களுக்கு 20ரூ. பிரதிவாரம் ரிலீஸ் படம், செகண்ட் ரிலீஸ் என்று மாறிமாறி படம் போடுகிறார்கள். இந்த வாரம் ‘ஆறாது சினம்’, போன வாரம் ‘சாகஸம்’, அதற்கு முன் ‘அரண்மனை 2’ (செகன்ட் ரிலீஸ்) நாளையிலிருந்து ‘ரஜினிமுருகன்’ இப்படி.

You Might Also Like

3 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...