ROOM (2015)

8:02:00 AM

ஒரு பத்துக்கு பத்து சிறிய அறை, Room. அதிலேயே சமையல் செய்து, உண்டு, உறங்கி, குளித்து - ஒரு இளம் தாயும் (Joy) அவளது ஐந்து வயது மகனும் (Jack) அங்கு வாழ்கிறார்கள். ஜாக்கிற்கு அந்த அறை தான் உலகம். அந்த அறைக்குள் அவன் காண்பவை மட்டும் தான் நிஜம். மற்றவையனைத்தும் டி.வி பொட்டிக்குள் இருக்கும் உயிரற்ற சமாச்சாரங்கள். தன் தாயையைத் தவிர வேறு யாரையும் ஜாக் கண்டதில்லை. அவனுக்கு டோரா புஜ்ஜியும் ஒன்று தான் ஓப்ரா வின்ஃப்ரேயும் ஒன்று தான். அவனுக்குத் தெரிந்த ஒரே நிஜம் – ‘மா’. அப்படித்தான் தன் தாயை அழைக்கிறான் ஜாக். தினமும் இரவு அந்த அறையின் எலெக்ட்ரானிக் லாக்கைத் திறந்து உள்ளே வந்து இவர்களுக்கு வேண்டியதைத் தந்துவிட்டுச் செல்கிறான் ஒருவன். அவனை இவர்கள் 'Old Nick' என்றழைக்கிறார்கள். அவன் மேஜிக் செய்து தங்களுக்கு வேண்டியதைக் கொண்டு வந்து தருவதாக நம்புகிறான் ஜாக். யார் இவர்கள்? எதனால் இந்தச் சிறிய அறையில் அடைபட்டுக்கிடக்கிறார்கள்? யார் அந்த Old Nick? இந்தக் கேள்விகளுக்கான பதில் படத்தின் முதல் பகுதியில் சொல்லப்படுகிறது.

சிறுவனின் வாய்ஸ் ஓவரில் சொல்லப்படும் இவர்களது கதை, மொத்தம் மூன்று பகுதிகளாகப் பயணிக்கிறது. பகுதி என்று சொல்வதை விட நிலை (stages) என்று சொன்னால் சரியாக இருக்கும். முதல் நிலையில் அடைபட்டுக்கிடக்கும் தாய்-மகனின் வாழ்க்கை நமக்கு பரிச்சயமாகிறது. அவர்களது தனிமை நம்மையும் தொற்றிக்கொள்கிறது. இரண்டாம் நிலையில் அந்த அறையிலிருந்து தப்பிச் சென்ற பிறகான அவர்களது சில நாட்களைக் காண்கிறோம். மூன்றாம் நிலையில் தாயும் மகனும் தாங்கள் தொலைத்ததைச் சேர்ந்து தேடத் தொடங்கும் அழகியலோடு முடிந்துவிடுகிறது படம்.

சந்தேகமே இல்லாமல் நான் சமீபத்தில் பார்த்த படங்களில் மிக அருமையாக படம் இந்த Room. மிக மெதுவாக நகரும் காட்சிகளைக்கொண்டு வேகமாகப் பயணக்கிக்கும் திரைக்கதையை நான் கண்டது இந்தப் படத்தில் தான். முக்கியமான, நாம் அதிகம் எதிர்பார்க்கும் காட்சிகளை நொடிப்பொழுதே காட்டுகிறார்கள். நுணுக்கமான பல விஷயங்களை, வசன உதவியே இல்லாமல் வெறும் காட்சிகள் மூலம் மிகச்சுலபமாக நம்முள் கடத்தி விடுகிறார்கள். அதே சமயம் சென்சிடிவ் விஷயங்களைக் கையாண்டிருந்த விதம் அருமை. புதிதாக உலகத்தை அணுகும் மகனை விட, தனக்கேற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் தாயின் மனநிலையையும், அவள் படும் அவஸ்தைகளையும் சிறப்பாகக் காட்சியப்படுத்தியிருக்கிறார்கள். மிகப்பெரிய Crime கதையின் தோற்றத்தைக் கொண்ட மிக மென்மையான, அன்பு மட்டும் போதும் என்று அழுத்திச் சொல்லும் இந்தக்கால 'Life is Beautiful' இந்தப் படம்.

'மா' வாகவே மாறிப்போயிருக்கிறார் Brie Larson. சிறந்த நடிப்பிற்கான ஆஸ்கார், Golden Globe, BAFTA உட்பட பல விருதுகளை இந்தப் படத்திற்காக குவித்துவருகிறார். நம் சோனியா அகர்வாலைப் போலச் சிரித்தாலும் சோகமாகவே தெரியும் முகம். இந்தக் கதாப்பாத்திரத்திற்காக ஒரு மாதம் யாரிடமும் பேசாமல், பல ஆண்டுகளாகத் தனியறை ஒன்றில் அடைபட்டுக்கிடக்கும் பெண்ணின் மனநிலையை உள்வாங்கி (Method Acting முறை?) தன்னைத் தயார் படுத்தியிருக்கிறார். முயற்சிக்கேற்ற பலனை இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.   

படத்தில் நான் பெரிதும் ரசித்தது சிறுவன் Jack ஆக நடித்த Jacob Tremblay வின் நடிப்பைத் தான். ஐந்து வயதுச் சிறுவன் ஒருவனால் எப்படி இப்படியெல்லாம் சொன்னதைக் கேட்டு நடிக்க முடிந்தது என்று ஆச்சரியமாக இருந்தது (நம் 'அஞ்சலி' ஷியாமிலி, 'நான் கடவுள்' சிறுவர்கள், 'பசங்க', 'காக்கா முட்டை' சிறுவர்களும் சளைத்தவர்கள் அல்ல). முதல் முறையாக வானத்தைப் பார்க்கும் பொழுது இவன் கொடுக்கும் ரியாக்ஷன் அடடா...! தத்தித் தத்தி படிகளில் இறங்குவதும், புதியவர்களைக் கண்டால் மிரள்வதும், அதே சமயம் தன் தாயிடம் மட்டும் பதிலுக்கு பதில் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமென படம் முழுவதும் இந்தச் சிறுவனே நிறைந்திருக்கிறான். தன் பாட்டியிடம் 'I love you Grandma' என்று சொல்லுமிடத்தில் எனக்குக் கண்ணீர் வந்தது, சந்தோஷத்தில். இந்தப் பொடியன் பெயரை 'சிறந்த நடிகர்' பிரிவில் சேர்த்திருந்தால் நிச்சயம் Leo விற்கு இம்முறையும் பல்ப் தான் கிடைத்திருக்கும். ஜஸ்ட் மிஸ். ஆஸ்காரில் 'சிறந்த நடிகை' என்று தன் பெயர் அறிவிக்கப்பட்டதும் Brie Larson தனக்குப் பின்னால் அமர்ந்திருந்த, Jacob Tremblay வை கட்டிக்கொண்டதைப் பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. Love knows No boundaries!

இந்தப் படம் ஒரு நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது. எந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலும் இந்த நாவல் எழுதப்படவில்லை என்று அதன் ஆசிரியர் Emma Donoghue சொன்னது ஏனோ மனதிற்கு ஆறுதலாக இருந்தது. இவரே தான் படத்திற்கான திரைக்கதையையும் எழுதியிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.

அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம். கொண்டாடப் பட வேண்டிய படம். இந்தப் படம் சென்ற வாரம் தான் இந்தியாவில் வெளியானது. திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்தவர்காள் பாக்கியசாலிகள்.

(பி.கு: இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு இரட்டை வேடத்தில் சத்யராஜ், 'சைதை தமிழரசி' பானுப்பிரியா (அவளொரு டயானோரா கலர் டீவீ...), கவுண்டர், மனோரம்மா உடன் சேர்ந்து ரவுசு பண்ணிய 'பங்காளி' படம் நினைவிற்கு வந்தால் - your Childhood was awesome...!)

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...