GODS OF EGYPT (2016)

7:54:00 AM

இது ஒரு கிராபிக்ஸ் கலக்கல்கள் நிறைந்த ஃபான்டஸி திரைப்படம் என்பது டிரைலரிலேயே தெரிந்தது. என்ன எதிர்பார்த்து படத்திற்கு சென்றேனோ அவையனைத்துமே காணக்கிடைத்ததில் மகிழ்ச்சியே.

அசத்தல் 3D இல் பளப்பளப்பளவென்று தங்கத்தால் இளைக்கப்பட கிராபிக்ஸாலான பிரம்மாண்ட அரண்மனைகள், குட்டிக் குட்டி உடையணிந்த தேவலோக ரம்பையைப் போன்ற ஹீரோயின்கள், 6 அடிக்கு மேல் வளர்ந்து நிற்கும் சிக்ஸ் பேக் ஹீரோக்கள், கண்டமேனிக்கு உருவம் கொண்ட விநோத மிருகங்கள், தர்மத்திற்கு ஏதேதோ மாயாஜாலங்கள், வானம் / பூமி / காற்று / தண்ணீர் / நெருப்பு என்று பஞ்சபூதங்களைக் கொண்டு நடக்கும் விசித்திரமான சண்டைக்காட்சிகள் - அனைத்துமே இந்தப் படத்தில் உண்டு.

விமர்சன ரீதியாக படம் படுமொக்கை என்று பெயர் வாங்கியிருக்கிறது. விமர்சக ரசிகர்கள் எதை எதிர்பார்த்து 'இது' போன்ற ஒரு படத்திற்குச் சென்றிருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு இது போன்ற மைண்ட்லெஸ் ஃபான்டஸி படங்கள் பிடிக்கும். 3D கண்ணாடியைப் போடும் பொழுதே மூளையைக் கழட்டி அப்படி வைத்துவிடுவேன். அதனால் தான் இது போன்ற படங்களையும் என்னால் விரும்பிப் பார்க்க முடிகிறது.

பூமியைப் படைக்கும் கடவுள்கள் எகிப்து நகரைத் தேர்ந்தெடுத்து அங்கு மனிதர்களுடன் சேர்ந்து வாழ்கிறார்கள். மனிதர்களை விட உருவத்தில் பெரியவர்களாகவும் சில விஷேச சக்திகளையும் கொண்ட கடவுள்களின் அரசன் 'ஆதவன்', சூர்யக் கடவுள். அவரது பிரதான வேலையே தினம் பூமியையும் தன்னையும் அழிக்க வரும் இருள் மிருகத்தை விரட்டியடிப்பதே. ஆதவனுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகனான 'ஓசிரிஸ்' நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்ய, மற்றொரு மகனான 'செட்' பாலைவனத்தை ஆட்சி செய்கிறான். வாயுமைந்தனான இளவரசன் 'ஹோரஸி'ற்கு முடிசூட்டு விழா நடந்துகொண்டிருக்கும் போது ஊருக்குள் வருகிறான் செட். ஓரிஸைக்கொன்று ஹோரஸின் கண்களையும் பிடிங்கிவிடுகிறான். பிறகென்ன மக்களை அடிமைபடுத்தி 'பல்வாழ்தேவன்'தனமான ஆட்சி செய்கிறான். ஹீரோ 'பெக்' அந்தப் பாவப்பட்ட மக்களில் ஒருவன். அவனது காதலி 'ஜாயா'வோ இன்னும் குருடாகி நாடுகடத்தப்பட்ட கடவுள் ஹோரஸை நம்பிக்கொண்டிருப்பவள். அவளுக்காக செட் ஐ அழிக்க ஹோரஸிற்கு உதவுவதாகச் சொல்கிறான் பெக். அது எப்படி, என்ன, ஏது என்பது தான் 'காட்ஸ் ஆஃப் ஈஜிப்ட்' படத்தின் கதை.

காதல் தேவதை, அறிவுக்கடவுள், நாகக்கன்னிகள், செத்துப்போனவர்களுக்கு சொர்க்கமா / நரகமா என்பதை தீர்மானிக்கும் கடவுள்கள், இறப்பிற்குப் பின்னான உலகம், அந்த உலகத்தின் வாயிலைக் காக்கும் கடவுள் என்று பலப்பலக் கடவுள்கள் படத்தில் உண்டு. முழுக்க முழுக்க கிராபிக்ஸிலேயே எடுத்திருக்கிறார்கள். லலிதா ஜூவல்லரி விளம்பரம் போல் ஜொலி ஜொலிக்கிறது படம். வில்லன் செட் ஆக Gerald Butler. இவருக்கு இது போன்ற வேடங்கள் பீஸ் ஆஃப் கேக். ஜஸ்ட் லைக் தட் ஆக செய்திருக்கிறார். கடவுள் ஹோரஸ் ஆக Game of Thrones புகழ் Nikolaj Coster-Waldau. ஹீரோ பெக் ஆக Brenton. பெரிதாக இவருக்கு வேலையில்லை. ஹீரோயின் ஜாயா வாக Mad Max Fury Road படத்திலேயே நம் மனதைக் கொள்ளை கொண்ட அழகிய லைலா Courtney Enton. செம்ம அழகு, செம்ம க்யூட்! காதல் தேவதையாக 'Electra' Elodie Yung.

'இந்த மாதிரி' படங்கள், அதாவது உதாரணத்திற்கு Wrath of Titans, Exodus, Scorpion King, Immortals, Percy Jackson, Hercules போன்ற படங்களை நீங்கள் ரசித்துப் பார்த்திருந்தால் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்கவும். சாதாரண ரசிகர்களுக்கு இந்தப் படம் உச்சகட்ட வெறுப்பை கொடுக்கக் கூடும். காரணம் நான் உதாரணம் சொன்ன படங்களில் கொஞ்சூண்டு 'சென்ஸ்' இருக்கும். இந்தப் படத்தில் கிராபிக்ஸ் கலக்கலைத் தவிர ஒன்றுமே இல்லை. இத்தனைக்கும் இந்தப் படத்தை எடுத்தவர் 'The Crow', 'iRobot' போன்ற எனக்குப் பிடித்தப் படங்களைக் கொடுத்த Alex Proyas.

சைனீஸ் படங்களில் வருடத்தில் குறைந்தது 5 படமாவது இந்த கேட்டகரியில் வெளியாகும். இந்த வருடம் கூட Mermaid என்ற படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது போன்ற படங்களை இவ்வளவு செலவு செய்து, இவ்வளவு நட்சத்திரங்களை நடிக்க வைத்து ஏன், யாருக்காக எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. காரணம் இது போன்ற படங்கள் பெரும்பாலும் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியையே அடைகின்றன. ஒரு வேளை அந்த ஊரிலும் கருப்பை வெள்ளையாக்கிக் கணக்கு காட்ட படங்கள் எடுப்பது தான் சிறந்த வழியோ என்னவோ...!

எது எப்படியோ எனக்கு படம் பிடித்திருந்தது.

(பி.கு: நான் பார்த்தது எங்கள் ஊர் திரையரங்கில், தமிழில்)
smile emoticon

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...