தோழா (2016)

10:54:00 PM


மீண்டும் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி. 

சில வருடங்களுக்கு முன்பு நண்பர்கள் எனது 'பேவரிட் 25' படங்களைது பட்டியலைக் கேட்டபோது நான் சொன்ன படங்களில் ஃப்ரென்ச் படமான 'The Intouchables (2011)' படமும் இருந்தது. பணம் தேவைப்படும் அல்ஜீரிய இளைஞனுக்கும் அன்பு தேவைப்படும் ஒரு ப்ரென்ச் பணக்காரனுக்கும் இடையே மலரும் நட்பு தான் கதை. மொழி தடையே இல்லாத இந்தக் கதை தமிழுக்கு வரும் என்று நிச்சயம் எதிர்பார்த்தேன். 

ஆனால்... 

'The Intouchables' அழகான படம். பார்ப்பவர் மனதில் பச்சக் என்று சுலபமாக ஒட்டிக்கொண்டு விடும். அதை ரீமேக் செய்வதென்பது கத்தி மேல் நடப்பதைப் போன்றது. கொஞ்சம் சரியில்லை என்றாலும் ஒரிஜினலைப் பார்த்தவர்கள் கம்பேர் செய்தே ரீமேக்கைக் காலிசெய்துவிடுவார்கள். இயக்குனர் வம்சி அந்தத் தவறைச் செய்யவில்லை. தேவையானதைத் தொடாமல் அப்படியே வைத்து, நமக்கேற்ப சில காட்சிகளைச் சேர்த்து கூடவே நம்மாட்களுக்காக கொஞ்சம் காதல் போர்ஷன்களையும் கலந்து ஒரு அருமையான படமாகத் தோழாவைக் கொடுத்துள்ளார். 

நிச்சயம் நாகார்ஜுனா - கார்த்தி ஆச்சரியமான காம்போ தான். காரணம் ஒரிஜினல் படம் உண்மையில் வாழ்ந்து வரும் இரு நண்பர்களது கதை. பணக்காரரின் கேர்டேக்கராக வரும் Driss என்ற அல்ஜீரியனுக்குப் பின்னால் வலுவானதொரு பின்னணி இருக்கும். சேரியிலிருந்து மாளிகைக்குள் வரும் அவனது மனநிலையை நம்மால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும். கார்த்தியைப் பார்த்தால் எப்படி சேரி பையன் என்று நினைக்கத் தோன்றும்? மேலும் நம் ஊரில் அவ்வளவு தீவிரமான பின்னணியில் ஒரு இளைஞனது கதாப்பாத்திரத்தை அமைப்பதில் பெரும் சிக்கல் உள்ளது. ஏகப்பட்ட பிரச்சனை வரும். அதனால் சிம்பிளாக கார்த்தி கதாப்பாத்திரத்தை நல்ல குடும்பத்தில் பிறந்த ஆனால், சின்ன சின்னத் திருட்டுக்கள் செய்து அதனால் வீட்டை விட்டு விரட்டப்பட்டவனாக வைத்துவிட்டார்கள். பாதகமில்லை. தனது அசத்தல் நடிப்பால் சுலபத்தில் நம்மைக் கவர்ந்துவிடுகிறார் கார்த்தி.

தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் நாகார்ஜுனா. மிகவும் கன்வின்சிங்காக இருந்தது அவரது நடிப்பும், ரியாக்ஷன்களும். தமன்னா படத்திற்குப் படம் வெள்ளையாகிக்கொண்டே போகிறார். கவர்ச்சியும் கூடிக்கொண்டே போகிறது. பெரிதாக வேலையில்லை என்றாலும் ஸ்கிரீனில் இவர் வரும் போது மற்ற பகுதிகளெல்லாம் பிளாக் அவுட் ஆகிவிட்டதால் இவரது பங்கை சிறப்பாக நிறைவேற்றியதாகவே வைத்துக்கொள்வோம். பிரகாஷ்ராஜ் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொல்லி சொல்லி போரடிக்கிறது. விவேக் முதல் பாதியில் மூன்று இடங்களில் வந்தவர் பின் காணாமல் போய்விட்டார். PVP சினிமாஸின் ஆஸ்தான ஆக்ட்ரஸான அனுஷ்காவும் படத்தில் உண்டு. 

P.S விநோத் இன் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருந்தது. குறிப்பாக இரண்டாம் பாதி. ராஜூமுருகன், முருகேஷ் பாபுவுன் வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். பல இடங்களில் தியேட்டரே ரசித்துச் சிரித்தது. பாடல்கள் வெகு சுமார். பின்னணியிசை பரவாயில்லை ரகம். 

குறை என்று பார்த்தால் படத்தின் நீளத்தைத் தான் சொல்லவேண்டும். அநாவசிய நீளத்திற்கு மிக முக்கிய காரணம் காதல் போர்ஷன்களும் பாடல்களும் தான். கதைக்குத் தேவையில்லை என்றாலும் காதல் நமக்குத் தேவை என்று இயக்குனர் நினைத்ததில் தப்பில்லை. என்னதான் இரண்டு பெரிய நடிகர்கள் நடித்த படமாக இருந்தாலும், காமன் ஆடியன்ஸிற்கு அவர்களுக்கு இருக்கும் 'ப்ரோமாஸை' மட்டும் காட்டிக்கொண்டிருந்தால் கடுப்பாகிவிடுவார்கள். கொஞ்சம் ரொமான்ஸும் இருந்தால் தான் பிசினஸ் ஆகும்.

நன்றாக ஓடிய படங்களை ரீமேக் செய்வதற்கும் நல்ல படங்களை ரீமேக் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சமீபமாக தமிழ் சினிமாவில் நல்ல ரீமேக் படங்கள் வந்துகொண்டிருப்பதில் மகிழ்ச்சி. எவ்வித எதிர்பார்ப்புமின்றி சென்றால் ரிலாக்ஸாகப் பார்க்க அருமையான படம் - தோழா!

பி.கு: எனது டாப் 25 பேவரிட் படங்கள்

You Might Also Like

1 comments

  1. எனக்கு ஏதோ தெலுங்கு படத்தை பார்ப்பது போலத்தான் இருந்தது. நாகார்ஜுனா அவர்களுடைய தமிழில் நிறைய தெலுங்கு வாடை. அநியாயத்திற்கு அவருக்குத்தான் அதிக close-up காட்சிகள் வேறு. என்னால் படத்துடன் ஒன்றவே முடியவில்லை. பாடல்கள் பெரிதாக கவரவில்லை. நீளமும் அதிகம். கார்த்தி அவருடைய பாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்.

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...