தேசிய விருதுகள் 2016

9:11:00 AM

63 அவது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. எந்தெந்தப் படங்களுக்கு என்னென்ன விருது என்பதை இந்த லின்க் இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் -https://en.wikipedia.org/wiki/63rd_National_Film_Awards

விருது வாங்கிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அதே சமயம்,

தேசிய விருதுகளை விமர்சிக்கும் அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது என்றாலும், கருத்து சொல்வதில் தமிழனை மிஞ்சவும் முடியாது, தடுக்கவும் முடியாது என்பதால் என் மனதில் பட்டதை சொல்ல ஆசைப்படுகிறேன்.

இசைஞானி இளையராஜா வை இதைவிட மோசமாக யாராலும் அவமானப்படுத்திவிட முடியாது. தாரை தப்படையில் மேஸ்ட்ரோவின் இசை அற்புதமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் - தேசிய விருது கொடுக்குமளவிற்கு இருந்ததா என்பது தான் கேள்வி. 1000 படங்களில் எத்தனையோ படங்களுக்கு கொடுத்திருக்கலாம் ஆனால் 1000 ஆவது படம் என்ற ஓரே காரணத்திற்காக இப்போது கொடுத்துள்ளார்கள். ஜீரியில் கங்கை அமரன் (இவர் பா.ஜ.க உறுப்பினர் என்பது கூடுதல் தகவல்) இருந்தார் என்றும் பிரச்சனையைக் கிளப்பி விடத்தொடங்கியிருக்கிறார்கள். தேவையா இதெல்லாம்? ஹேராம், மௌன ராகம், தளபதி, நாயகன், நான் கடவுள், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்று ஆயிரத்தில் குறைந்தது ஐம்பதிற்காவது கிடைத்திருக்க வேண்டிய விருது இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது என்று மனதை தேற்றிக்கொள்ளலாம். சிறந்த படத்தொகுப்பிற்கான விருது மறைந்த எடிட்டர் திரு. கிஷோர் Te அவர்களுக்கு வழங்கப்பட்டதையும் நான் இப்படித் தான் பார்க்கிறேன்.

இதே தான் சிறந்த நடிகர் விருதிலும் நடந்திருக்கிறது. அமிதாப் நன்றாக நடித்திருந்தார் என்பது பார்த்தாலே தெரிகிறது. ஆனால் விக்ரம் செய்தது அதற்கும் மேலே! தனது வயதிற்கேற்ற கதாப்பாத்திரத்த்தில் Black அமிதாப் வேடத்தில் யார் வேண்டுமாலும் நடித்து விடலாம் ஆனால் 'ஐ' படத்திற்காக விக்ரம் கொடுத்த உழைப்பை இந்திய அளவில் எந்த நடிகராலும் கொடுக்க முடியாது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இதற்கு முன் விக்ரம் 'பிதாமகன்' படத்திற்காகப் பெற்றார். அந்தப் படத்தை விட 100 மடங்கு அதிக உழைப்பு 'ஐ' படத்தில் இருந்தது. உடலளவில் மாற்றங்களைக் கொண்டுவந்துவிட்டால் அது நல்ல நடிப்பா என்று நீங்கள் கேட்டால், 'ஐ' படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்று நான் சொல்வேன். காட்சிக்கு காட்சி உடலுக்கேற்ப விக்ரமின் நடிப்பும் மாறுவதை நீங்கள் கவனிக்கத்திருக்கவில்லை என்பது என் வாதம். அமிதாப் நல்ல நடிகர். Agneepath, Black, Pa படங்களுக்காக மூன்று முறை தேசிய விருதுகளையும் 15 ஃபிலிம்பேர் விருதுகளையும் வாங்கிய, மூன்று 'பத்ம' விருதுகளையும் வாங்கிய மிகச்சிறந்த நடிகர். ஆனால் - Piku படம் அவரது நடிப்பில் வெளியான சிறந்த படமல்ல. Shamitab ற்கு கொடுத்திருந்தால் கூட மனது ஆறியிருக்கும். அதே படத்தில் நம் தனுஷ் பட்டையைக் கிளப்பியது நினைவிற்கு வருகிறது.

'ஆடுகளம்' சிறந்த நடிகருக்காக ஒரு முறை, சென்ற வருடம் 'காக்கா முட்டை', இந்த வருடம் 'விசாரணை' என்று தயாரிப்பிற்காக இரண்டு முறை என்று மொத்தம் மூன்று முறை தேசிய விருது வாங்கியிருக்கும் தனுஷிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 'அம்மா கணக்கு' என்ற பெயரையும், போஸ்டரையும் பார்க்கும்போதே அடுத்த வருட அவார்டிற்கு கர்ச்சீப் போடுவது தெரிகிறது. மீண்டும் வாழ்த்துக்கள்.

கங்கனா ராவத் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவர். Tanu Weds Manu Returns இல் இவரது நடிப்பு அபாரமாக இருந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அதை விடச் சிறந்த நடிப்பை 'தாரை தப்பட்டை' இல் வரலட்சுமி கொடுத்திருந்தார் என்பது என் கருத்து. Bajirao Mastani, Piku, Tamasha என்று மூன்று படங்களிலும் தனது அசத்தல் நடிப்பால் பார்ப்பவரைக் கட்டிப்போட்டார் தீபிகா படுகோனே! Ennu Ninte Moideen படத்திற்காக பார்வதி பற்றியும், Masaan படத்திற்காக Richa Chadda பற்றியும் யாருமே பேசாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. Margarita With a Straw படத்திற்காக Kalki Kochlin னுக்கும், இறுத்திச்சுற்று படத்திற்காக ரித்திகாவிற்கும் ஸ்பெஷல் விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இதுபோல் ஒரு ஸ்பெஷல் மென்ஷன் விக்ரமிற்கு கொடுத்திருக்கலாம்!

சிறந்த துணை நடிகருக்கான விருது சமுத்திரகனிக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்தி தான் என்றாலும் இந்திய அளவில் விசாரணை படத்தில் சமுத்திரகனி நடித்ததைவிட சிறந்த நடிப்பை யாருமே வழங்கவில்லை என்பதை நம்பவே முடியவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமானால் 'விசாரணை' படத்திலும் நான் க்ளிஷேவாக கனியையே பார்த்தேன். இதே 2015 ஆம் வருடம் வெளியான 'தற்காப்பு', 'காவல்' படங்களிலும் கனிக்கு டிட்டோ இதே போன்ற கதாப்பாத்திரம் தான். 'ரஜினிமுருகன்' படத்தில் மட்டும் தான் கொஞ்சம் மாற்றி நடித்திருந்தார். தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், சிறந்த துணைநடிகருக்கான விருது சமுத்திரகனிக்கு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி, தமிழனாகப் பெருமை ஆனால் அது விசாரணை படத்திற்குக் கிடைத்தது தான் ஆச்சரியமளிக்கிறது. Badlapur படத்தில் நடித்ததற்காக Nawazuddin Siddiqui கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டாரா இல்லையா என்றே தெரியவில்லை. அதே சமயம் சிறந்த பிராந்திய மொழித்திரைப்படமாக 'விசாரனை' தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சந்தேகமே இல்லாமல் 'விசாரணை' கடந்த 10 ஆண்டுகளில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்று.

சென்ற ஆண்டு வெளியான மிகச் சிறந்த திரைப்படமான Talvar க்கு சிறந்த திரைக்கதை (Adapted Screenplay), சிறந்த சப்தம் (Location Sound) என்ற இரண்டே இரணு விருதுகள் மட்டுமே கிடைத்தது வருத்தம்.

பாகுபலி, பாஜிராவ் மஸ்தானி படங்கள் தான் இந்த வருட தேசிய விருதுகளை மொத்தமாகக் குத்தகைக்கு எடுக்கப்போகிறது என்பது தெரிந்த விஷயம். ஆனால் சிறந்த படம், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என்று இரண்டே விருதுகளுடன் ஒதுக்கப்பட்டுவிட்டது பாகுபலி. அதிலும் சிறந்த படம் என்று எப்படி மிகச் சிறந்த கமர்ஷியல் திரைப்படமான ‘பாகுபலி’ படத்தைத் தேர்ந்த்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. சிறந்த இயக்கம் பாஜிராவ் மஸ்தானிக்கு கிடைத்திருக்கிறது. இந்தப் படத்திற்கு கிடைக்க வேண்டியதை அந்தப் படத்திற்கும், அந்தப் படத்திற்கு கிடைத்திருக்க வேண்டியதை இந்தப் படத்திற்கும் மாற்றிக்கொடுத்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. பாஜிராவ் மஸ்தானி சிறந்த துணை நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒலிக்கான இரண்டு விருதுகள் (Sound Designer, Re-cordist of the final mixed track) என்று மொத்தம் 7 விருதுகளை வென்றுள்ளது. இந்தப் பிரிவுகள் அனைத்திலுமே 'பாகுபலி' யும் சிறந்து விளங்கியது என்பது எனது கருத்து. இந்த வகையில் விஜய் அவார்ட்ஸைப் பாராட்ட வேண்டும். ஒரே படத்திற்கு விருதுகளை மொத்தமாகக் கொடுக்காமல் வந்தவர்களுக்கெல்லாம் விருதுகளைப் பிரித்துப் பிரித்துக்கொடுப்பார்கள். நல்லுள்ளம் கொண்டு அவர்கள் செய்யும் சேவையை நாம் முரட்டுத்தனமாக ஓட்டித்தள்ளுவதை இனிமேலாவது நிறுத்த வேண்டும்.
smile emoticon

டப்பிங் என்பது சினிமாவில் தவிர்க்க முடியாத மிக முக்கியமான கலை. தேசிய விருதுகள் தொடங்கி, விஜய் அவார்ட்ஸ் வரை யாருமே டப்பிங் ஆர்டிஸ்ட்களை கண்டுகொள்வதே இல்லை. சிறந்த நடனத்திற்காக விருதுகொடுக்கும்பொழுது சிறந்த சண்டை வடிவமைப்பிற்கு (Stunt Choreography) தேசிய விருது வழங்கப்படாதது ஏன் என்று தெரியவில்லை. உயிரைக்கொடுத்து நம்மை எண்டர்டெயின் செய்யும் அவர்களையும் நாம் நினைவில் கொள்ளுதல் அவசியம்.

கன்னடப்படமான Lucia வெளியான சமயம் தேசிய விருதுகள் பற்றி அதன் இயக்குனர் பவன்குமார் சொன்னது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. எந்தெந்தப் படங்கள் விருது பரிந்துரைக்கு அனுப்பப்படுகிறது, அதிலிருக்கும் சிக்கல்கள் என்ன, யார் யார் ஜூரி போன்ற விஷயங்கள் எதுவுமே தெரியாமல் கொடுப்பதை வாங்கிக்கொண்டு பெருமை பேசிக்கொண்டு திரிகிறோம். ‘பத்ம’ விருதுகளுக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லை. யாருக்கு எதைக் கொடுக்கலாம் என்பதை அரசு தவிர யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனால் சினிமா வேறு. சினிமாவின் முக்கிய அங்கமே ரசிகர்களாகிய நாம் தான். தேசிய விருதுகளில் ஜூரிக்களுடன் சேர்த்து ரசிகர்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

You Might Also Like

1 comments

  1. ஐ படத்திற்க்காக விக்ரமுக்கு விருது கொடுக்காதது சரி என்றே எனக்குப் படுகிறது. ஒப்பனையையும் நடிப்பையும் குழப்பிக்கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவர் கடினப்பட்டு உழைத்தது எல்லாம் அந்த தோற்றத்திற்காக தான், அதில் என்ன நடிப்பு இருக்கிறது. அப்படி கொடுக்கவண்டும் என்றால் அவரது உடற்பயிற்சியாளருக்குத்தான் கொடுக்க வேண்டும். ஒப்பனைக்கு வேண்டுமென்றால் விருது கொடுக்கலாம். ஐ படத்தில் விக்ரம் சிறப்பாக நடித்தார் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள கடினமாகத்தான் இருக்கிறது. நீங்கள் இளையராஜாவுக்கு சொன்னது போலத்தான் இதுவும். விக்ரம் நல்ல நடிகர் தான் ஆனால் பிக்கு படத்தில் அமிதாப்புடன் ஒப்பிடும்போது தேசிய விருதுக்கு தகுதியானவர் அமிதாப் தான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...