Under the Same Moon | Spanish | 2008

8:11:00 AM

உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல், மாட்டிக் கொண்டால் வாழ் நாள் முழுக்க சிறையில் இருக்க வேண்டும் என்பது தெரிந்தும் திருட்டுத்தனமாக அமெரிக்காவிற்குள் நுழைவோர் எண்ணிக்கை சற்றும் குறைந்தபாடில்லை. நடுஇரவில் முள் வேளிகளுக்குள் புகுந்து, மறைந்து மறைந்து அமெரிக்காவிற்குள் புகுந்து விடுபவர்கள் அதிகம். எவ்வளவோ கட்டுப்பாடுகள், கடுமையான சட்ட திட்டங்கள் இருந்தும் இதை கட்டுப் படுத்த முடியாமல் இன்னமும் திணறிக் கொண்டிருக்கிறது அமெரிக்க அரசு. அப்படி இல்லீகலாக அமெரிகாவிற்குள் புகுந்து வீட்டு வேலை செய்து மெக்ஸிகோவில் பாட்டி வீட்டில் வளரும் தன் மகனுக்காக கஷ்டப்படும் ஒரு தாய் - மகன் கதை தான் 'Under the Same Moon'

அலுவலக நண்பர் ஒருவர் ஸ்டார் மூவீஸில் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு சொன்னார். படத்தைப் பற்றி அவர் சொல்லும் போது அவர் கண்ணில் தெரிந்த அந்த மின்னலால் அடுத்த நாளே தரவிறக்கிப் பார்த்து விட்டேன். நான்கு வருடங்களாகத் தன்னைப் பிரிந்து அமெரிக்காவில் வசிக்கும் தாயைக் காணக் கிளம்பும் ஒரு சிறுவனின் பயணம் படத்தின் தான் ஒரு வரிக் கதை.

மெக்ஸிகோவில் மகன் நலமுடன் வாழ, அமெரிக்காவில் ஒளிந்து ஒளிந்து பணக்காரர்களின் வீட்டில் வேலை செய்து சம்பாத்திகும் ஒரு தாய், ரொசரியோ (Rosario). வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை, சரியாக பத்து மணிக்கு இரண்டு நிமிடம் மட்டுமே தன் தாயுடன் பேசிக்கொண்டு, அவள் அனுப்பும் பணத்தில் உடல் நலம் சரியில்லாத பாட்டியுடன் வசிக்கும் சிறுவன், கார்லிடோஸ் (Carlitos).

தன்னை அன்பகப் பார்த்துக் கொள்ளும் பாட்டி திடீரென்று ஒரு நாள் தூக்கத்தில் இறந்து விட, தான் இதுவரை சேர்த்து வைத்திருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு, அமெரிக்கா கிளம்புகிறான் கார்லிடோஸ், அதுவும் எப்படி? மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு மக்களைக் காரின் ஸீட்டிற்கடியில் மறைத்து வைத்து கடத்திச் செல்லும் இருவர் மூலமாக.

சரியாக பார்டரில் வேறு ஒரு பழைய குற்றத்திற்காக கார் மடக்கப்பட்டு, காரேஜிற்குள் விடப்பட, இரவில் வெளியேறுகிறான் கார்லிடோஸ். தனியாக சிறிது தூரப் பயணித்த பிறகு, தான் கொண்டு வந்த பணம் அனைத்தையும் கார் நிறுத்தப்பட்டிருந்த காரேஜிலேயே தொலைத்து விட்டதை உணர்ந்து, ஒரு டாக்ஸியில் அவ்விடத்திற்குச் செல்கிறான். ஆனால் அவன் தொலைத்த இடத்தில் பணமும் இல்லை, காரும் இல்லை. பணமில்லாததால் ஆத்திரமடையும் அந்த டாக்ஸி டிரைவர், சிறுவன் கார்லிடோஸை தப்பான இடத்தில் விற்க முயல்கிறான். அங்கிருந்து அவனைக் காப்பாற்றும் ஒரு வயதான பெண்மணி அவனைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறாள்.

அந்த பெண்ணின் வீட்டில் இவனைப் போலவே இல்லீகள் இம்மிகிரண்ட்ஸ் நிறைய பேர் கூடி, அரசிற்குத் தெரியாமல் மறைந்து வாழ்கின்றனர். அவர்களுடனே தங்கிவிட்டு அடுத்த நாள் காலை, அவர்கள் அனைவரும் செல்லும் தக்காளி தோட்டத்திற்கே தானும் வேலைக்குச் செல்கிறான். மிகவும் சிரமத்துடன் அங்கு அனைவரும் வேலை செய்து கொண்டிருக்க திடீரென்று போலீஸ் வந்து விடுகிறது. அனைவரும் தெறித்து ஓடிகிறார்கள். கார்லிடோஸ் உடன் எரிக் என்பனும் தப்பி அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

முதலில் எரிக்கிற்கு கார்லிடோஸிற்கும் ஒத்து வரவில்லை. ஆனால் கார்லிடோஸின் புத்திசாலித்தனத்தால் எரிக்கும் பயனடைகிறான். அதனால் நாளடைவில் இருவரும் ராசியாகிவிடுகிறார்கள். பின்பு எரிக்கின் உதவியுடன் கார்லிடோஸ் எப்படி தன் தாயைக் கண்டுபிடித்தான் என்பது தான் மீதிக் கதை.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை தன் தாய் போன் செய்வதற்குள் அவளிடம் போய் சேர்ந்து விட வேண்டும் என்று துடிப்புடன் செயல்படும் கார்லிடோஸ், தன்னை ஒருவன் மனமாறக் காதலிப்பத்து தெரிந்தும், தன் மகனிடன் போக முடிவெடுக்கும் ரொசாரியோ, முதலில் வெறுப்படைந்தாலும் பின் மனமுருகி கார்லிடோஸிற்காக தன் நிலைமயை கெடுத்துக்கொள்ளும் எரிக் என்று இந்த மூன்று கதாபாத்திரங்களும் மனதைக் கொள்ளை கொள்வர். அதிலும் தான் பிறக்கும் முன்னே தன்னை பிரிந்த தந்தையை கார்லிடோஸ் சந்திக்க நேரும் போது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் அற்புதம்.

"சின்ன பையனை இப்படி தனியா விட்டுட்டு போய்ட்டாளே, உங்க அம்மா" என்று அப்பன் சொல்ல, அதற்கு "உங்களை விட கம்மியான வருடங்கள் தான் விட்டுட்டு போய்ருக்காங்க" என்று தன் தாயை விட்டுக்கொடுக்காமல் பதில் சொல்லிவிட்டு இருவர் சாப்பிட்ட பர்கர்களுக்கும் பில்லை கார்லிடோஸே கொடுக்கும் இடம், "நீ என்னைப் பிரிந்திருப்பதை நினைத்து வருந்தும் பொழுதெல்லாம் மேலே தெரியும் நிலவைப் பார், நானும் அதைத் தான் பார்த்துக்கொண்டிருப்பேன், உனக்கு நான் அருகில் இருப்பது போல் தெரியும்" என்று தாய் கூறியிருக்க அதே போல் அவன் அழுது கொண்டே நிலவைப் பார்க்க அருகில் தாய் இருப்பதை உணரும் இடங்கள் அற்புதம்.

இந்தப் படத்தின் இயக்குனர் நான் எதிர்பார்த்ததை போலவே ஒரு பெண் - பெயர், Patricia Riggen. அழகான கவிதை போன்றதொரு களத்தில் யதார்த்தமான நடிகர்களை வைத்து ஒரு சிறுவனின் மனநிலையை அழகாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

நான் மேல் சொன்ன அனைத்தையும் காட்சிகளாகப் பார்க்க, இந்தப் படத்தின் டிரைலரை இங்கு சென்று பார்க்கவும்.

இந்தப் படம் பார்த்தவுடன் நான் முன்பு பார்த்த திரைப்படக் கல்லூரியினர் எடுத்த 'ஆசை' என்னும் குறும்படம் ஞாபகத்திற்கு வந்தது. வேறு ஊரில் இருக்கும் தன் தாயுடன் தொலைபேசியில் பேச ஆசைப்படும் ஒரு மளிகைக் கடை சிறுவனின் கதை இந்தப் படம். அற்புதமாக இருக்கும். இங்கு சென்று அதையும் கண்டிப்பாக பார்க்கவும்

You Might Also Like

8 comments

  1. அருமையான படப்பகிர்வு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இந்த படத்தோட டிரெய்லரும் நல்லாயிருக்கு. குறும்படமும் நல்லயிருக்கும். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. நல்ல அறிமுகம். நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. நண்பரே,

    சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி நண்பர்களே...

    ReplyDelete
  6. வெரிகுட்... வீக்கெண்டுக்கு அடுத்த படம் ஆச்சி ;-).. பிக் ஃப்ளிக்ஸ்ல இருக்கான்னு தேடிப்பாக்குறேன் ;-)

    ReplyDelete
  7. @கருந்தேள் கண்ணாயிரம்: கண்டிப்பா பாருங்க...

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...