I am Sam | English | 2001

1:26:00 PM

மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரியான மனநலம் கொண்ட ஒரு பெண் ஒரு குழந்தையை தன்னால் வளர்க்க முடியும் என்று சொன்னால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அந்தக் குழந்தை அந்தப் பெண்ணிடம் வளர்வதை நீங்கள் ஆதரிப்பீர்களா? பெண்ணாய் இருக்கும் பொருட்டு பரவாயில்லை என்று நீங்கள் சொன்னால், அதுவே ஒரு ஆணாய் இருந்தால்? அதுவும் அப்படிப் பட்ட மனநலம் கொண்ட ஆள், ஒரு பெண் குழந்தையை தானே வளர்க்கிறேன் என்று சொன்னால், உங்களது பதில் என்னவாக இருக்கும்? அந்தக் குழந்தையின் எதிர்காலத்தின் மேல் உங்களுக்கு கவல் வருமா, வராதா?
ஸாம் (Sam) - மனதளவில் இன்னும் 7 வயது சிறுவனாக இருப்பவனுக்கு, எதிர் பாராத விதமாக பெண்ணின் மூலம் தந்தையாகும் பாக்கியம்(?) கிடைக்கிறது. பிறந்த குழந்தையையும் இவனையும் ஆஸ்பத்திரி வாசலிலேயே விட்டுவிட்டு அந்தத் தாய் ஓடி விட, குழந்தையின் முழு பொறுப்பு ஸாமுடையதாகிறது. ஒரு காஃபி ஷாப்பில் டேபிள் அட்டெண்டராக வேலை செய்யும் ஸாமிற்கு உலகமே தன் மகள் லூசி (Lucy), தான் செய்யும் வேலை, 'தன்னைப் போலவே' இருக்கும் ஐந்து நண்பர்கள் மட்டுமே. மிகவும் அப்பாவியாய், நல்லவனாய், பழிபாவத்திற்கு அஞ்சி, மிகவும் சிரமப்பட்டு தன் மகள் லூசியை வளர்க்கிறான் ஸாம்.
லூசிக்கு வெகு சீக்கிரமாகவே தன் தந்தையின் குறையைப் பற்றி தெரிந்து விடுகிறது. இயற்கையாகவே மற்ற பிள்ளைகளை விட அதிக புத்திசாலியாக வளர்ந்தாலும், லூசி தன் தந்தையால் பள்ளியில் நண்பர்களின் கேலிப்பேசுக்கு ஆளாகிறாள். காலப்போக்கில் ஸாமைப் பற்றி லூசியின் ஆசிரியர்களுக்கும் தெரிய வர, அவர்கள் லூசியின் எதிர்காலத்தின் மேல் கவலை கொள்கிறார்கள். லூசியின் எட்டாவது பிறந்த நாளிற்காக பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் ஸாமை பார்ட்டிக்கு வந்த ஒரு சிறுவன் கேலி பேச, ஸாம் ஏதோ சொல்லப் போக, அந்தச் சிறுவன், "நீ ஒரு மனநலம் சரியில்லாதவன், உன் மகளே உனக்கு அவள் தத்துப் பிள்ளை என்று சொன்னாள்" என்று கத்த, உள்ளே வரும் லூசி இதைக் கேட்டு வெளியே ஓட. அங்கு வரும் சமூக சேவை அமைப்பாளகள் லூசியை தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள்.
ஸாமைப் பற்றித் தெரியவரும் அந்தச் சமூக அமைப்பினர், ஒருபெண் குழந்தையை இனிமேலும் ஸாம் வளர்க்க தகுதியில்லை என்று கூறி, லூசியை தத்துக் கொடுக்க உத்தரவிடும்படி பொதுநல வழக்கு போடுகிறார்கள். என்ன நடக்கிறது என்றே புரியாத ஸாம், தன் நண்பர்களின் அறிவுரையின் பேரில் ஊரில் உள்ள மிகப்பெரிய வக்கீலான ரீட்டாவை (Rita) சந்திகிறான் ஸாம்.
ரீட்டாவின் மிக நெருக்கடியான வேலைச் சூழலில் ஸாம் வந்து உட்கார்ந்து கொள்ளும் ஸாமை, முதலில் ஏதோ பேசி அங்கிருந்து கிளம்பச் செய்தாலும், திரும்பத் திரும்ப வருவதால் அந்தக் கேஸை உடன் வேலை செய்யும் மற்ற வக்கீல்களின் வாயை அடைக்கவேண்டி ஒத்துக்கொள்கிறாள் ரீட்டா, அதுவும் இலவசமாக. ஆக, தன் மகளை தன்னிடம் மீண்டும் ஒப்படைக்க வைக்க ஊரில் உள்ள மிகப்பெரிய வக்கீலை நியமித்துக் கொண்டு, கோர்ட் படியேறுகிறான் ஸாம்... அவன் ஜெய்த்தானா?
ஸாமாக 'சீன் பென்(Sean Penn)' - 21 கிராம்ஸ், மிஸ்டிக் ரிவர், தி கேம் என்று பல படங்களில் தன் நடிப்பால் என்னைக் கவர்ந்தவர். இந்தப் படத்திலும் ரவுண்டு கட்டி கலக்கியுள்ளார். எப்போதும் சுற்றி நடப்பது ஒரு சவமும் புரியாமல் 'பே' என்று முழிக்கும் மேனரிஸம் அவருக்கு அற்புதமாகப் பொருந்துகிறது. தன் இயலாமை மேலோங்கும் போது 'பப்பரப்பே' என்று முழிப்பதும், தன் மகள் தனக்கில்லை என்று தெரியும் போது அங்கும் இங்குமாய் ஓடி பரிதவிப்பதும், இருக்கும் இடம் பற்றி கவலை இல்லாமல் மனதில் பட்டதை அப்படியே சொல்வதுமாய் மேனரிஸத்தில் கலக்குகலக்கு என்று கலக்கியிருக்கிறார். வாயை ஒரு மார்கமாத் திறந்து சத்தமாய் "அஹா அஹா" என்று சிரிக்கும் அந்தச் சிரிப்பே, "சரி ரைட்டு, ஆளு ஒரு மாதிரி" என்று சொல்லிவிடும்.
லூசியாக 'டகோட்டா ஃபேன்னிங் (Dakota Fanning)' - டென்செல் நடித்த 'மேன் ஆன் பயர்' (அதாங்க நம்ம 'ஆணை') படத்தில் வரும் அந்தக் குட்டிப் பெண்ணின் முதல் படம். அதீதமான நடிப்பு. தந்தையிம் மேல் வைத்திருக்கும் பாசத்தை ஒவ்வொரு முறையும் அவள் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் அழகே தனி. என் அப்பாவிடம் சொன்னால் வேலைக்கு ஆவாது, நாமே பார்த்துக் கொள்ளலாம் என்பது போல் ரீட்டவுடன் சேர்ந்து எதிர்தரப்பு வக்கீலுக்கு அவள் பதில் சொல்லும் விதமே அவளது கேரக்டரை விளக்கி விடும். "லூசியை பற்றி கவலையில்லை, அவள் தன்னையும் ஸாமையும் சேர்த்து கவனித்துக் கொள்வாள்" என்று நினைக்குமளவிற்கு இருக்கிறது, லூசியின் பாத்திரப் படைப்பும், டகோட்டாவின் பொருத்தமான நடிப்பும்.

ரீட்டாவாக 'மிச்சேல் (Michelle Pfeiffer)' - சத்தியமாக இந்த முதிர்கன்னியைப் பார்த்து நான் சொக்கிப் போனேன். பாதி படத்திற்கு மேல் வரும் இவரது கதாபாத்திரத்தின் அறிமுகக் காட்சியே அமர்க்களமாக, அதிரடியாக இருக்கும். ஓரே காட்சிக்கு ஏகப்பட்ட கட் வைத்து பரபரப்பை அழகாகக் காட்டியிருப்பார்கள். முன்னனி வக்கீல் என்கிற அந்த கர்வம், அந்த ஆளுமை, அந்த பணக்காரத்தனம், அதே சமயம் பிள்ளையை சரியாக கவனிக்க முடியாததாலும், கசந்து போன இல்வாழ்க்கையாலும், நெருக்கும் வேலை பளுவினாலும், மற்றவர் மீது கோபத்தை தெறிக்க விடும் அந்த குணம் என்று அனைத்தும் கலந்துகட்டி என்னைக் கவர்ந்திழுத்து விட்டது.
லூசுப் பயலான ஸாமிடம் மாட்டிக் கொண்டு மீள முடியாமல் அவர் திணரும் இடமும், பின் ஸாம் தன்மகள் மீது வைத்டிருக்கும் உண்மாய்யான அன்பைப் புரிந்து கொண்டு அவனுக்காகப் போராடுவதும் அழகு. இவர் நடித்த வேறெந்த படமும் நான் பார்த்ததில்லை. ஆனால் இனி விடப்போவதில்லை.
ஒரு குழந்தையை வளர்க்க, அதீத அறிவு தேவையில்லை, அதீத அன்பு இருந்தாலே போதும் என்று புரியவைக்கும் இந்தப் படம் நான் பார்த்த மிகச் சிறந்த படங்களில் ஒன்று. ஒரு தந்தையின் பாசத்தைக் காட்டும் இந்தப் படத்தின் இயக்குனர் ஒரு பெண். பெயர், ஜெஸ்ஸி நெல்சன். (கீழே படத்தில் இருப்பவர்)
2001 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் சிறந்த நடிப்பிற்காக ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. படத்தின் டிரைலர் இங்கு.

You Might Also Like

8 comments

 1. நல்லவிமர்சனம் நண்பரே. ஒரு ரகசியம் சொல்லட்டுமா மிகப் பிரபலமான நடிகர் இயக்க...மிகப் பிரமாண்ட இயக்குனர் இயக்க தமிழில் இது விரைவில் படமாக்கப்படவிருக்கிற்து

  ReplyDelete
 2. மன்னிக்கவும் மிகப் பிரபலமான நடிகர் நடிக்க...

  ReplyDelete
 3. @N. Jaganathan: வருகைக்கு நன்றி நண்பரே. அந்த நடிகர் யார்? என்ன படம் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?

  ReplyDelete
 4. நான் திரைப்படத்துறையில் இருக்கிறேன். எனது தொலைபெசி 9884488979 பேசுவோம்... ரகசியம் காப்போம். ஒரு செய்தி அன்னுப்புங்கள் நான் பேசுகிறேன்

  ReplyDelete
 5. @N. Jaganathan: கண்டிப்பாக நண்பரே, குறுஞ்செய்தி அனுப்புகிறேன். உங்களுக்கு விருப்பமான சமயத்தில் கண்டிப்பாக பேசுவோம்.

  ReplyDelete
 6. //நல்லவிமர்சனம் நண்பரே. ஒரு ரகசியம் சொல்லட்டுமா மிகப் பிரபலமான நடிகர் இயக்க...மிகப் பிரமாண்ட இயக்குனர் இயக்க தமிழில் இது விரைவில் படமாக்கப்படவிருக்கிற்து//
  அப்போ நீங்க சொல்லற படம் நந்தலாலா இல்லையா????

  ReplyDelete
 7. நண்பரே நீங்கள் தொடர்புகொள்ளவே இல்லை

  ReplyDelete
 8. in tamil, vikram. theiyva tirumagan.....

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...