ஒரு வழியாக எந்திரன் டிக்கெட் கிடைத்து விட்டது. ஆனால் எவ்வளவு முயன்றும், எவ்வளவு பணம் செலவழிக்க தயாராக இருந்தும் முதல் நாள் கிடைக்கவில்லை. பெங்களூரில் ரஜினி படங்கள் என்றால் எதாவது பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. 'சிவாஜி' வெளியான சமயத்தில் நான் மங்களூரில் இருத்தேன். இதோ இதோ என்று கடைசி வரை கர்நாட்டக்காவில் படத்தை ரிலீஸ் செய்யவே இல்லை. சில புண்ணியவான்கள் 'ரஜினி படம் ஓடினால், கல்லால் அடிப்போம்' என்று கத்தியதால் தியேட்டர் உரிமையாளர்கள் பயந்து விட்டனர். சிவாஜி எப்படிப் பார்த்தேன் என்பது மறக்கமுடியாத அனுபவம். அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். இப்பொழுது எந்திரனுக்கு வருவோம்.
பெங்களூரில் எந்தெந்த தியேட்டர்களில் எந்திரன் ரிலீஸ் என்று சரியான தகவல் நேற்று வரை இல்லை. தமிழகத்தில் கடந்த வெளிக்கிழமையே முன்பதிவு தொடங்கிய போதிலும், பெங்களூரில் எந்த சுவடுமில்லை. B.T.M ல் இருக்கும் எனக்கு அருகில் உள்ள தியேட்டர்கள் என்று பார்த்தால் மகேஸ்வரி, லக்ஷ்மி, ஜெயா நகர் INOX அல்லது PVR. இதில் எங்கள் ஊர் 'போடி' யில் இருக்கும் ஜீவன் தியேட்டரைவிடக் மகாக்கேவலமாக இருக்கும் மகேஸ்வரி தியேட்டரில் எந்தப் படம் ஓடும் என்று தியேட்டர்காரர்களுக்கே தெரியாது. ஆனாலும் சொல்ல முடியது, வாராவாரம் எதாவது ஒரு புது தமிழ் படம் அங்கு ஓடும். பெங்களூரில் தமிழ் 'ராவணன்' நான்கு திரையரங்குகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அதில் ஒன்று இந்த மகேஸ்வரி. PVR, INOX ல் கூட ஹிந்தி 'ராவன்' தான் ஓடியது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் எந்திரனுக்கு ராவணனுக்கு நடந்தை விட பல மடங்கு பெரிதாக அடிதடி, தடியடி நடக்கும். ரசிகர்கள் தவ்வித்தவ்வி ஆடி, பேப்பர் பறக்க விட்டு, விசிலடித்து, சீட்டின் மேல் ஏறி நின்று படமே தெரியாது, முன்னல் இருப்பவன் தலை தான் தெரியும் (ராவணனுக்கு அப்படித்தான் ஆனது). லக்ஷ்மியிலும் கிட்டத்தட்ட இதே நிலைமை தான். அங்கும் முன்பதிவிற்கான சுவடே இல்லை. பேப்பரிலும் லக்ஷ்மியின் பெயர் இல்லை. INOXல் செவ்வாய் அன்று திடீரென சொல்லாமல் கொள்ளாமல் புக்கிங் ஓபன் ஆக, நான் அங்கு போவதற்குள் முதல் நாள் ஃபுல்.
PVR தான் ஒரே வழி அதுவும் புதன் காலை 10 மணிக்கு தான் புக்கிங் ஓப்பன் என்று அங்கு சென்று கேட்டு வந்தவர்களில் பலர் சொன்னார்கள். PVR தான் முடிவு செய்து நானும் காலை சீக்கிரமே அலாரமெல்லாம் வைத்து எழுந்து, 9 மணிக்கெல்லாம் அங்கு சென்று பார்த்தால் கூட்டமே இல்லை. என்னடா இது தலைவருக்கு இவ்வளவு தான் மரியாதையா என்று நினைக்க, ஃபோரம் மாலில் இருபுறமும் இருக்கும் டிக்கட் கவுன்ட்டர்களில் ஒரு கவுன்ட்டர் முழுவதையுமே எந்திரனுக்காக பிளாக் பண்ணி வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. நான் ஓடிச் சென்று பார்த்த போது கூட்டம் பின்னியெடுத்துக் கொண்டிருந்தது. செக்யூரிட்டிகளும், 'கோட்' போட்ட ஆபீஸர்களும்(!) கூட்டத்தை சரிபடுத்திக்கொண்டிருந்தனர். டிக்கெட் இன்னும் கொடுத்திருக்கவில்லை. முன்பின் முகம் தெரியாதவர்கலெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். முதல் ஷோ டிக்கட் விலை 750 ரூபாய் என்று செய்தி வந்தது. அனைவரும் தம்தம் பாக்கெட்டுகளை தடவிக்கொண்டும், செல்போனில் "மாப்ள 750 ரூபாயாண்டா, உனக்கும் வாங்கிரத்தானே... இல்ல கேட்டேன்" என்று பேசிக்கொண்டிருந்தனர்.
முதலில் விலை விபரத்தை டிஸ்ப்ளே செய்தார்கள். முதல் காட்சி 750 ரூ, மற்றவை அனைத்தும் 500 ரூ, கோல்ட் கிளாஸ் எனப்படும் 'சோபா செட்' போட்ட வி.ஐ.பி ஸ்கிரீனில் 1500ரூ! டிக்கெட் கொடுக்கும் ஆட்கள் ஸ்டைலாக, சரியாக 10 மணிக்கு வந்தார்கள். அறிவித்தார்கள். "FRIDAY TICKETS COMLETELY SOLD OUT". வெறியானது நின்றிருந்த கூட்டம். அதெப்படி இன்னும் ஓபன் பண்ணவே இல்லை; அதற்குள் முடிந்துவிட்டது என்று ஒரே தகராறு. யாரும் டிக்கெட் வாங்காதீர்கள் என்று ஒருவர் கத்த, நான் என் பங்கிற்கு ஒரு கவுன்ட்டரை மறைத்துக் கொண்டு நின்று விட்டேன். எனக்குப் பின்னால் இருந்தவர் யாரையும் டிக்கெட் வாங்க விடவில்லை. ஒரே கூச்சலாக, தமிழ், ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி என மாறி மாறி கத்தல்களுமாக இடமே அலறிக்கொண்டிருது. PVR ஆட்கள் யார் யாரோ வந்தார்கள், "நேற்று இரவே ஓப்பன் செய்து விட்டோம், நீங்கள் பார்க்கவில்லையென்றால் நாங்கள் என்ன செய்வது, டிக்கேட் இருந்தால் உங்களுக்கு கொடுப்பதில் எங்களுக்கு என்ன, வேண்டுமென்றால் போலீஸில் கூட புகார் கொடுங்கள்" என்று எதேதோ பேசினர். இங்கு காலையில் இருந்து காத்துக்கொண்டிருப்பவர்களுக்காவது டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டால், அதற்கும் இதே பதில் தான்.
கடைசியில் ஒன்றும் நடக்கப்போவதில்லை என்று ஆன பின், "சனிக்கிழமையும் வேகமாக தீர்ந்து கொண்டிருக்கிறது" என் அறிவிப்பு வர, நான் போய் காலை ஷோவிற்கு டிக்கெட் வாங்கி விட்டேன். செம எரிச்சல். எல்லாமே வேஸ்ட். கடுப்புடன் வீடு வந்து வந்தேன். மாலை அலுவலகத் தோழி ஒருவர் அவர் தம்பியின் நண்பர் PVR ரில் வேலை பார்ப்பதாகவும் அவர் ஒருவரே முதல் நாள் ஷோவிற்கு கிட்டத்தட்ட 90 டிக்கெட்களை வாங்கி விற்றதாகவும், அதிலேயே 40,000 ரூபாய் லாபம் கண்டுவிட்டதாகவும் கூறினார். அடங்கொக்க மக்கா, 40,000ரூ! என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ரஜினி படமென்றால் யாராக இருந்தாலும், எந்த வழியாக இருந்தாலும் லாபம் தான் என்பது உறுதியானது. ஒருவனே 90 டிக்கெட் வாங்கினான் என்றால், எங்களுக்கு எப்படிக் கிடைக்கும். என்ன நடக்கிறது அங்கே. எதுவும் புரியவில்லை. ஒன்று மட்டும் உறுதி. கடைசி நேரத்தில் மகேஸ்வரியில் போடப்போகிறார்கள், வெள்ளிக்கிழமை முதல் ஷோ சட்டை கிழிந்து, லத்தியடி வாங்கி தான் தலைவர் படம் பார்க்கப் போகிறேன் என்று நினைக்கிறேன். அதன் பின் பொறுமையாக PVR சனிக்கிழமை காலை பார்த்துக்கொள்ளலாம்.
சிவாஜிக்கு நடந்ததெல்லாம் மிகப்பெரிய கதை. மங்களூரில் ரிலீஸ் ஆகவில்லை என்று தெரிந்ததும், விடியற்காலையிலேயே எழுந்து ரயில் பிடித்து, இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, கேரளாவில் ஒரு ஊரில் இறங்கி, அங்கிருந்து அரை மணி நேரம் ஆட்டோவில் சென்று, அந்த டொக்கு தியேட்டரைக் கண்டுபிடித்து கூட்டத்தில் தள்ளுமுள்ளுகளை சமாளித்து, டிக்கெட் வாங்கி, விசிலடித்து விசிலடித்து வாய் வலித்து, இண்டர்வலிலேயே அடுத்த ஷோவிற்கும் டிக்கெட் வாங்கி ஒரே நாளில் இரண்டு முறை அடுத்தடுத்து சாப்பிடாமல் கொள்ளாமல் சிவாஜி பார்த்ததெல்லாம் மறக்கவே முடியாத அனுபவம்.
நாங்கள் சென்ற அந்த ஊரின் பெயர் மறந்து விட்டது. ஆனால் மிகவும் ரம்மியமாக இருந்தது அந்த சிறிய ஊர். லேசாகத் தூரிக்கொண்டு, பச்சைப் பசேல் என்று சொர்க்கபூமியாகத் தெரிந்தது.
சன் டிவியும் 5 நிமிடத்திற்கு ஒரு முறை தனது 5 சேனல்கள் என்ற கணக்கில் சன் டிவி, கே டிவி, சன் மியூசிக், சன் செய்தி, சுட்டி டிவி என்று தொடர்ந்து டிரைலர், ஷங்கர் பேட்டி, ரஹ்மான் பேட்டி என்று ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். படத்தைப் பார்க்காதவர்கள் கடும் தண்டனைக்கு ஆளாவார்கள் என்று தான் இன்னும் சொல்லவில்லை. மொத்தத்தில், தலைவர் படமென்றால் அது சும்மா "வந்தோமா பாத்தோமா" கேஸெல்லாம் இல்லை, அதிரடி அனுபவம் தான். அடுத்த அனுபவத்திற்காக காத்திருக்கிறேன்.
டிஸ்க்: இந்தப் படம் சிவாஜி பெங்களூரில் பலப் பிரச்சனைகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆன போது எடுத்ததாம். நெட்டில் கிடைத்தது...