நாடோடிகள்...

11:22:00 AM

தோரணை, ராஜாதி ராஜா, மரியாதை, சர்வம், மாசிலாமணி என்று நான் பார்த்த படங்கள் எல்லாம் என்னை ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்க, த்டீரென்று ஒரு நல்ல படம். முன்னமே சொன்ன மாதிரி நல்ல தமிழ் படங்களுக்கு எத்தனை பேர் விமர்சனம் எழுதலாம்.('பசங்க' மிஸ் ஆகி விட்டது)

நண்பனின் நண்பனும் நண்பன் என்பதுதான் இந்த படத்தின் கரு. படத்தில் சரியாக அதைச் சொல்லி பாராட்டு வாங்கி விட்டார்கள். என்னை வைத்து நீ படம் எடுத்தாய் பதிலுக்கு உன்னை வைத்து நான் படம் எடுத்தேன் என்று சாதாரண டீல் போல் இல்லாமல் இருவரும் ஹிட் கொடுக்க வேண்டும் என்று நினைத்தது முதல் வெற்றி."சசிகுமார், சமூத்ரகனி நல்ல கூட்டணி தானுங்கோ...கடைசி வரை இப்படியே இருந்தா நல்லதுதான்..."

படத்திற்கு வருவோம்...

"ஒன்னும் பிரச்சனை இல்ல மாப்ள...100 பேர் வந்தாலும் பரவாயில்ல, பாத்துருவோம். நாங்க இருகோம்டா. அந்த பொண்ணு உன் மேல உசிரையே வைச்சிருக்கு இல்ல? நீ கூப்டா வரும்ல...விடு கல்யாணத்த நாங்க பண்ணி வைக்கிறோம்...நாங்க இருகோம்ல..." என்று வரிக்கு வரி நாங்க இருக்கோம்.. நாங்க இருக்கோம்.. என்று நண்பர்களின் காதலுக்கு உதவி செய்பவர்கள் நிறைய பேர் உண்டு.

'அவர்கள் நன்றாக வாழ்ந்தால் சரி' என்ற ஒரே ஒரு திருப்தியுடன் பட்ட சிரமங்களை எல்லாம் மறந்து சிரிப்பது தான் நட்பு. அப்படித்தான் நண்பனின் நண்பனுக்காக, அவன் காதலுக்காக உடலளவிலும், மனதளவிலும் நிறைய இழந்து ஓடி,ஓடி, போராடித் திருமணம் செய்து வைக்கிறார்கள் நண்பர்கள் சிலர். இதுவரை வந்த படங்களில் காதலர்களை பஸ்சோ டிரயினோ ஏத்தி விட்ட பிறகு 'சுபம்' போட்டு விடுவார்கள். அல்லது மிஞ்சிப் போனால் அவர்கள் போகும் வரை ஒரு பைட் இருக்கும். அவ்வளவுதான்.(2016 க்குப் பிறகு தமிழகத்தின் நிரந்தர முதல்வர், இளைய தளபதி டாக்டர் விஜய் கஷ்டமே படாமல் 25 ஜோடிகளை சேர்த்து வைக்கும் 'ஷாஜகான்' படத்தின் தீம் தான் இதுவும்.ஆனால் நிறைய வித்யாசம் இருக்கிறது. இது தான் உண்மை பாஸூ...)அப்படி அவர்களை ஏற்றி விட்ட பிறகு என்னென்ன நடக்கும் என்பதை இந்தப் படத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
கருணா (சசிகுமார்), பாண்டி ('கல்லூரி' பரணி), சந்திரன்('சென்னை 28' விஜய் வசந்த்) மூவரும் நண்பர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை சூழ்நிலை, பிரச்சனை உண்டு. கருணாவின் பால்ய நண்பன் சரவணன். ஊருக்கு வரும் சரவணன் வந்த வேகத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை பண்ணப் பார்க்கிறான். காப்பாற்றி கேட்டால் 'காதல்' என்கிறான். "சேராவிட்டால் அவளும் செத்துருவா, நானும் செத்துருவேன்" என்கிறான். அடிதடி சண்டைக்குப் பிறகு சேர்த்து வைத்து கையில் இருப்பதை எல்லாம் கொடுத்து, தம்தம் வாழ்க்கைகளையும் கிட்டத்தட்ட இழந்து அனுப்பி வைக்கிறார்கள். அனுப்பியபின் போனவர்கள் என்ன ஆனார்கள், அனுப்பி வைத்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது தான் 'நாடோடிகள்'. மேலும் கதைக்குள் போவது சரியில்லை.

சபாஷ்
:
படத்தின் முதல் 'சபாஷ்' சசிகுமாரின் தங்கை, விஜயின் காதலியாக வரும் அபிநயா. இவர் பிறவிலேயே வாய்பேச, காது கேட்க முடியாதவர் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். இந்தப் படத்தில் பேசியிருக்கிறார். பேச வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் மருந்துக்குக் கூட வித்தியாசமாக தெரியவில்லை. அவ்வளவு அழகு, அவ்வளவு நடிப்பு. ஸ்பெஷல் பாராட்டுக்கள் அபினயாவிற்கு.

அடுத்த சபாஷ் 'கல்லூரி' பரணி. முதல் படம் போலவே இதிலும் நல்ல ரோல். பிண்ணி இருக்கிறார். டயலாக் டெலிவெரியும், முக பாவனைகளும் அற்புதம். சரளமாக 'நாங்கெல்லாம்' என்று ஆரம்பிக்கிறார். படத்தின் காமெடி கிங் இவர்தான்.

அடுத்தது சசியின் ஜோடியான அனன்யா... தின்னிப் பண்டாரமாக, குழந்தைத்தனம், மாமன் மேல் அளவு கடந்த பாசம், அப்பாவின் மிரட்டலால் தவிப்பு என்று பல முகம் காட்டி அசத்துகிறார்.

அடுத்த சபாஷ் இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு. பாடல்களுக்கு இல்லை. பின்னணி இசைக்கு. சம்போ சிவா சம்போ ருத்ர தாண்டவ பின்னணி. மற்றபடி 'பழயபாட்டு' செண்டிமெண்ட் இதிலும் உண்டு. 'கண்கள் இரண்டாளை' சரியான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ம்
...ஓகே:

கலைமாமணி, கரிசல்காட்டு நாயகன் கஞ்சா கருப்பு என்று போடுகிறார்கள். ஆனால் அந்த அளவிற்கு வேலை இல்லை. ஒரே மாதிரியான நடிப்பு. அவரை விட தனக்குத் தானே பிளேக்ஸ், கட் அவுட் வைத்துக் கொள்ளும் உள்ளூர் அரசியல்வாதி அதிக சிரிப்பை வரவைக்கிறார்...

சசிகுமார்...ஹீரோ. ஆள் பக்கத்தில் நின்றாலும் சுப்ரமணியபுரம் நினைப்பில் குதித்து குதித்து தான் சண்டை போடுகிறார். நடிப்பு, சொல்ல வேண்டியதில்லை. சிரிக்காமல் சிரிக்க வைக்கும் கேரக்டரில் நன்றாக செட் ஆகியிருக்கிறார். ஆனால் டான்ஸ்...சுத்தமாக வரவில்லை. உங்க கிட்டருந்து நிறைய எதிர்பாக்குறோம். ஹீரோவாக இல்லை. டைரக்டராக...

மற்ற நடிகர்களும் நிறைவாகவே செய்துள்ளனர்.

ஒவ்வொரு வசனமும் படத்தை தாங்கி நிற்கிறது. நட்பு, காதல், சிரிப்பு, கோபம், வெறுப்பு, பயம், வெறி என்று எல்லா இடங்களிலும் அளவான அற்புதமான வசனங்கள்.

நட்பு, காதல் இவை இரண்டையும் சொல்லும் படத்தை கண்டிப்பாக நண்பர்களுடன் ஒரு கூட்டமாக சென்று பார்த்தால் தான் நன்றாக இருக்கும். என்னைப் போல் தனியாகப் போய் பார்த்து விட்டு பின் போனில் "மச்சி, படம் பட்டாசா இருக்குடா...கண்டிப்பா பார்ரா" என்று சொன்னால் முழு பீல் கிடைக்காது.

மொத்தத்தில், நாடோடிகள் - நண்பர்கள்...

(நிறைஞ்ச மனசு படம் எடுத்தவராச்சே பாக்கலாமா வேணாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். பரவில்லை நல்லாத் தான் இருக்கு. கண்டிப்பா பாருங்க...நண்பர்களோடு :-)

You Might Also Like

2 comments

  1. relatively a bad one compared to the previous reviews .sasikumar's pair is the one who's deaf and dumb.sasikumar s correct apt for the role.Anyways rest of the review s ok...........

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...