BIG Fish...என் அப்பாவிற்காக...

12:34:00 PM

சிறு வயதில் தூங்கும் போது கதை கேட்கும் பழக்கம் நம்மில் பலருக்கு கண்டிப்பாக இருந்திருக்கும். நான் பல கதைகள் கேட்டிருக்கிறேன். என் அப்பா எனக்கு நிறைய கதைகளை சொல்லியிருக்கிறார். அந்தக் கதைகளில் அவர் தான் ஹீரோ. எனக்கும் அவர்தான் ஹீரோ. "நான் இப்படிதான் ஒரு தடவை..." என்று ஆரம்பித்தால் நானும் என் தம்பியும் கேட்டுக் கொண்டே இருப்போம். என் அப்பா எனக்கு அவரைப் பற்றி சொன்னதை விட என் அம்மா, என் தாத்தா, பாட்டி அவரைப் சொன்னது தான் அதிகம். எனக்கு விபரம் தெரியும் வரை நிறைய கதைகள் கேட்டுள்ளேன். முதன்முதலில் டிவியில் JAWS படம் பார்த்த போது என் அப்பா சொன்ன கதை எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்படி கதை சொல்லும் ஒரு அப்பாவைப் பற்றிய கதை தான் இந்த படமும். Edward Bloom தன் மகன் Will Bloom ற்கு கதை கதையாக சொல்லித் தள்ளுகிறார். இப்படித்தான் நான் ஒரு வாட்டி...என்று எதற்கெடுத்தாலும் கதை சொல்லும் அவரை புதிதாக கதை கேட்கும் அனைவரும் விரும்பினாலும் அதே கதைகளை நூறு முறைக்கு மேல் கேட்ட Will Bloom ஆல் சகித்துக் கொள்ள முடியவில்லை. தன் திருமண நாளன்று விருந்தினர்களுக்கு "என் மகன் பிறந்த தினத்தில் நான் என் திருமண மோதிரத்தை தூண்டிலில் இணைத்து யாராலும் பிடிக்க முடியாத பெரிய மீன் ஒன்றைப் பிடித்தேன் " என்று கதை சொல்கிறார். கடுப்பாகும் மகன் புது மனைவியை கூடிக் கொண்டு ஊரை விட்டே கிளம்பிவிடுகிறான்.

தந்தை இறக்கும் தருவாயில் இருப்பதை அறியும் மகன் மூன்று வருடம் கழித்து கர்ப்பிணியான தன் மனைவியுடன் திரும்பி வருகிறான். இன்னமும் தன் அப்பா கதை விட்டுக் கொண்டிருப்பதை பார்த்து வெறுப்படைக்கிறான். தன் தந்தைக்கு வேறு குடும்பம் இருப்பதாக நினைக்கிறான். தன் தந்தை யார் என்பதை கண்டுபிடிக்க முயல்கிறான். அவர் சொன்ன கதைகள் ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்கிறான்.

சிறுவனாக இருந்த போதே மிக வேகமாக வளர ஆரம்பித்து, ஊருக்கு வெளியே உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் ஒரு சூனியக்காரியை சந்தித்து அவளது கண்ணாடிக் கண்ணில் தன் இறப்பை தெரிந்து கொண்டது,
ஊரையே பயம் காட்டிக் கொண்டிருந்த 11 அடி ராட்சத மனிதனை நண்பனாக்கிக் கொண்டு உலகத்தை அறிய கிளம்பியது,
இதுவரை மனிதனால் மாசுபடாத ஒரு புதிய ஊரைக் கண்டுபிடித்தது,தன் காதலியைக் கண்டுபிடிக்க இரவில் ஓநாயாக மாறும் ஒரு சர்க்கஸ் சம்பளமே வாங்காமல் 3 வருடம் வேலை செய்தது,ராணுவத்தில் வேலை செய்யும் போது இடுப்பிற்கு கீழே ஒன்றாகவும் மேலே இரண்டாக இருக்கும் சகோதரிகளைக் கண்டது, ஒரு திருடனுக்கு பினான்சியல் அட்வைசராக இருந்து அவன் கொடுத்த 10000 டாலரைக் கொண்டு தன் மனைவிக்கு ஒரு கனவு இல்லத்தைக் கட்டிக் கொடுத்தது, தான் கண்டுபிடித்த ஊர் பாழடைந்ததை அறிந்து அதை புதுபித்துக் கொடுத்தது கடைசியாக தன் மகன் பிறந்த தினத்தில் ஒரு பெரிய மீனைப் பிடித்தது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தன் தந்தையிடம் போய் "அப்பா, நீங்கள் இதுவரை உங்களுக்கு நடந்ததாக சொன்ன கதைகள் எல்லாம் 'கதைகள்' என்று எனக்குத் தெரியும். உங்களைப் பெற்றிய உண்மை எனக்குத் தெரிய வேண்டும். இன்னும் கொஞ்ச நாளில் எனக்கு ஒரு மகன் பிறக்கப் போகிறான். என் அப்பாவைப் பற்றி தெரியாத நான் எப்படி என்னைப் பற்றி அவனுக்குச் சொல்ல முடியும்" என்று கேட்கிறான். Bloom நிதானமாக, "Will, நான் பிறந்த தினத்திலிருந்து நான் நானாகவே தான் இருந்திருக்கிறேன். அதை நீ தெரிந்து கொள்ள வில்லையென்றால் அது உன் தவறு தான்" என்கிறார். கடுப்பாகிறான் Will.

தன் தந்தை சொன்ன கதைகளில் வருபவர்களை கண்டுபிடிக்க முயல்கிறான். கடைசியில் ஒரு நான் Edward Bloom மருத்துவமனையில் சாகும் நிலையில் இருக்கிறார். அன்று இரவு தன் அப்பாவுடன் தங்குகிறான் மகன். அங்கு வரும் டாக்டர், "Will, உனக்கு நீ பிறந்த கதை தெரியுமா?" என்று கேட்கிறார்.தெரியும். "நூறு முறை எனக்குச் சொல்லியிருக்கிறார். பெரிய மீனைப் பிடித்தேன் அது இதுவென்று. ஆனால் அத்தனையும் பொய்" என்கிறான் Will. "உண்மையான கதை தெரியுமா?" என்று கேட்கிறார். தெரியாது என்கிறான். "ஒரு நாள் மதியம் 3 மணிக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் சாதாரணமாக நீ பிறந்தாய். ஒரு வாரத்திற்கு முன்பே நீ பிறந்து விட்டதால் ஊரில் இல்லாத உன் அப்பாவால் நீ பிறக்கும் போது அருகில் இருக்க முடியவில்லை. அதை ஈடு செய்யத்தான் திருமண மோதிரத்தைப் போட்டு பெரிய மீனான உன்னைப் பிடித்ததாகக் கூறுகிறார். உண்மையை விட உன் தந்தை சொல்லும் மோதிரம், மீன் கலந்த கதை தான் எனக்குப் பிடித்திருக்கிறது" என்கிறார். இப்படி தன் தந்தை சொன்னது அனைத்தும் சற்றே மிகைப் படுத்தி சொல்லப் பட்ட உண்மைகள் தான் என்பதை தெரிந்து கொள்கிறான். தன் தந்தை ஒரு சிறந்த கதை சொல்லி என்று புரிந்து கொள்கிறான். கடைசியில் தன் தந்தைக்கு அவர் இறப்பைப் பற்றி கதை சொல்கிறான். மகன் தன்னைப் புரிந்து கொண்ட திருப்தியில் Edward Bloom இறக்கிறார்.

தன் தந்தையின் இறுதி ஊர்வலத்தில் அவர் கதைகளில் வரும் அனைவரையும் சந்திக்கிறான். 7 அடி மனிதன், ஒரே மாதிரி இருக்கும் இரட்டைச் சகோதரிகள், ராணுவ வீரர்கள் என்று அனைவரும் வருகின்றனர்; Edward Bloom இன் பெருமைகளைப் பேசுகின்றனர். "Edward was a Social Person" என்கின்றனர். கதைகளை சொல்லும் தன் தந்தை கடைசியில் தானே ஒரு வரலாறாக யாராலும் பிடிக்க முடியாத ஒரு பெரிய மீனாக மாறியதாக Will நினைக்கிறான். தன் தந்தையின் கதைகளை தன் மகன்களுக்கு சொல்கிறான். Edward Bloom தன் கதைகளைப் போலவே அழிக்க முடியாத வரலாறு ஆகிறார்...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் குறையவில்லை. என் அப்பாவை நான் இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறேன். சில படங்கள் தான் வாழ்க்கையைக் காட்டும். அதில் இந்தப் படத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. நான் பார்த்த Feel Good படங்களில் 2003 ல் Tim Burton என்பவரால் இயக்கப்பட்ட இந்த BIG Fish ற்கு தான் முதல் இடம். இது தான் ஆக்சுவல் வாரணம் ஆயிரம்...

இந்தப் படம் சிறந்த இசைக் காக ஆக்ஸருக்கு பரிந்துரைக்கப் பட்டது.

படத்தின் வசனங்கள் அத்தனை அற்புதம். ஒவ்வொன்றும் படம் பார்த்து இத்தனை நாள் ஆன பிறகும் நினைவிலேயே நிற்கிறது. அத்தனை அற்புதமான வசனங்கள்.

என் அப்பா மேல் எனக்கு இன்னமும் பாசமும் மரியாதையும் கூடியிருக்கிறது. என் அப்பா தான் எனது ஹீரோ. சூப்பர் ஹீரோ. இன்றும் என் பின்னால் எனக்குப் பாதுகாப்பாக நிற்கும் இவர் தான் அந்த சூப்பர் ஹீரோ...
I LOVE YOU DADDY...

You Might Also Like

3 comments

 1. என் அப்பா எனக்கு கதை சொல்லலைன்னாலும்... இது நூத்துக்கு நூறு உண்மை..!! :)

  அருமையா எழுதியிருக்கீங்க! :)

  அந்த தமிழிஷ், தமிழ்மண பின்னூட்டத்தில்.. உள்குத்து இருக்கோ? :) :) :)

  ReplyDelete
 2. தெரியலயேப்பா தெரியலையே...தமிழ்மணம், தமிழிஷ் விஷயத்துல கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க பாலா அண்ணா...

  ReplyDelete
 3. அருமையா எழுதியிருக்கிறீங்க.எனக்கு அப்பாதான் ரொம்ப இஷ்டம்.வாழ்த்துக்கள்..

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...