கலாச்சாரக் காவலர்கள்...
11:04:00 AMபல நாட்களாக உள்ளுக்குள் உறுத்திக் கொண்டிருந்த இந்த விஷயம் நண்பர்கள் சுரேந்திரா, கோபி மூலம் தூபம் போடப்பட்டு இன்று வெளியே வருகிறது... இது முழுக்க முழுக்க என் கருத்து தானே தவிர யாரையும் அசிங்கப்படுத்தவோ, சவுக்கடி கொடுக்கவோ இல்லை...(Smoking Kills என்று சிகரெட் பாகெட்டில் எழுதுவது போலதான் இதுவும்...ஹி ஹி ஹி )
விஷயம் 1)
Burger என்றழைக்கப்படும் ரொட்டித் துண்டு 80 ரூ.
அதே ரொட்டியை கொஞ்சம் பெரிசாக சுட்டால் அது Pizza. அதன் முதல் எழுத்து போலவே இருக்கும் அதன் விலை, 350 ரூ வரை.
Pepsi, Coke போன்ற மூத்திரங்கள் 40 ரூ வரை.
சினிமா டிக்கெட் 200 ரூ.
அரைக்கை சட்டை 3000 ரூ.
கண்மன் தெரியாமல் இப்படி காசைப் பிடுங்கும் மேல்தர இடங்கள் இங்கு பெங்களூருவில் நிறைய உண்டு. இவ்வளவு காஸ்ட்லியாக இருந்தாலும், கூட்டம் கூட்டமாக வருகிறார்கள், அனைத்தையும் வாங்குகிறார்கள், வாங்கும் அளவு வசதி உள்ளவர்கள். வசதி இல்லாதவர்கள் 'காச எப்படி செலவு செய்றதுன்னு தெரியாம சுத்துற கூட்டம், பணம் செய்யும் திமிர், காசிருப்பதால் இளக்காரம், நிக்கவைத்து சுடனும், பிச்சை எடுக்க விடனும் ' இப்படி பல வகைகளில் கரித்துக் கொட்டுகிறார்கள். காரணமாக இவர்கள் சொல்வது பணவீக்கம், அந்நிய மோகம், விலை வாசி ஏற்றம், முக்கியமாக கலாச்சாரச் சீரழிவு போன்றவை... இவர்கள் கையிலும் காசிருந்தால் இவர்கள் மேற சொன்ன குறைகளை நீக்கும் விதமாக தான் செயல்படுவார்களா?
விஷயம் 2)
ஜனவரி 24, 2009 மதியம். மங்களூர் பப் ஒன்றில் புகுந்த ஸ்ரீ ராம சேனா, ராஷ்திரிய ஹிந்து சேனா ஆதரவாளர்கள் அங்கிருந்த பெண்களைத் தாக்கினர். துரத்தி துரத்தி அடித்து மண்டையை உடைத்து ஆஸ்பத்திரியில் படுக்க வைத்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், அந்த பெண்கள் குடித்து விட்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தார்களாம்; நமது கலாச்சாரம் பாழாகிரதாம்; அதனால் அடித்தார்களாம். இந்த கலாச்சாரக் காவலர்கள், குடித்துவிட்டு தன் வீட்டுப் பெண்களை அடிப்பார்கள், இல்லையென்றால் குடிக்கிற பெண்களை அடிப்பார்கள். இன்னார் என்று இல்லை. மொத்தத்தில் நமது கலாச்சாரப்படி பெண்களை அடிப்பார்கள். முழு நேர வேலையே இதுதான்... கலாச்சாரத்தைக் காப்பாற்ற கலாவை அடிக்கலாம், அப்படித்தானே?
விஷயம் 3)
கமல் ஹாசன் தன் படத்திற்கு Mumbai Express என்று பெயர் வைத்தார். 'அது ஆங்கிலப் பெயர் மாற்று' என்றார்கள் சிலர். அடுத்த படத்திற்கு 'சண்டியர்' என்று தமிழில்தான் பெயர் வைத்தார். அதையும் மாற்று என்றார்கள். அடுத்து நீ படமே எடுக்கக் கூடாது என்று சொல்வார்கள். இதே போல் தான் S.J சூர்யா தன் படத்திற்கு BF என்று பெயர் வைத்ததும்... 'தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து' என்று எப்போதும் தன் குடும்பத்தை வளர்க்கும் மாண்புமிகு முதல்வர், ஆச்சரியமாக தமிழ் வளர்க்கப் பார்த்தாலும் இந்த கமல், சூர்யா போன்றவர்கள் 'பரவாயில்லை நாங்கள் ஆங்கிலத்திலேயே பெயர் வைத்துக் கொள்கிறோம்' என்று சொல்கிறார்கள். ஆனால் இது நம் கலாச்சாரம் இல்லை என்று சிலர் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள்...விருமாண்டி, அன்பே ஆருயிரே என்று தூய தமிழ் பெயர்களை அவர்கள் வைத்தவுடன் தமிழ் 'நான் வளர்கிறேனே மம்மி' என்று இவர்களிடம் வந்து சொல்லி விட்டதா?
விஷயம் 4)
இதுவும் திரைத்துறை சம்பந்தப் பட்டது தான். தமிழ் M.A என்றொரு படம். அந்தப் படத்தின் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார்? தமிழ் படித்ததால் ஏற்படும் இழப்பையா ? இல்லை கணினி கற்காததால் ஏற்பட்ட இழப்பையா? Computer Engineer ஒருவரை ஆபீஸ் புகுந்து கேவலப் படுத்துகிறார் , T Shirt அணிந்த பெண்ணை அசிங்கப் படுத்துகிறார், கடற்கரையில் உட்கார்ந்து இருப்பவர்களை சுடுகிறார்? கேட்டால் கொலை வெறிக்குக் காரணம் தமிழ் என்கிறார். அப்படித்தானே?
விஷயம் 5)
இது என் எதிரில் நடந்த ஒன்று. நான் வசிக்கும் பகுதி பெரும்பாலும் IT, சிறிதளவு மற்ற துறைகளில் வேலை செய்பவர்களால் நிறைந்துள்ளது. பல மாநிலத்தவர் தங்கியிருக்கும் இங்கு எனக்குத் தெரிந்த காஷ்மீர் இளைஞன் ஒருவன் விமானப் பணிப் பெண் ஒருத்தியைக் காதலித்து வருகிறான். 'அது எப்படி எங்க ஏரியாவில் ஒரு பெண்ணைக் காதலிக்கலாம், கலாச்சாரம் என்ன ஆவது' என்று கோபப்பட்ட அந்தப் பகுதி வெட்டி ஆபிசர்கள் சிலர் அந்த காஷ்மீர் இளைஞனைத் தாக்கினர்.
அந்தப் பெண் அந்த ஏரியா இல்லை, அந்த ஊர் இல்லை, அந்த மாநிலப் பெண்ணாக இருந்தால் கூட இவர்கள் கலாச்சாரக் கோபம் நியாயம் பெரும் வாய்ப்பு உள்ளது. அந்தப் பெண்ணோ வடநாடுக்காரி... மேலும் பெப்ரவரி 14 அன்று கையில் ஒரு தாலியுடன் கூட்டம் கூட்டமாக பஸ் ஸ்டாண்ட், சினிமா தியேட்டர் என்று காதலர்களைக் கண்டால் கல்யாணம் பண்ணி வைக்கத் துடித்துக் கொண்டிருந்தார்கள். சம்பந்தமே இல்லாதவர்களிடம் போய் கலாச்சாரம் பேசும் அளவிற்கு கலாபுருஷர்களா இந்த ஏரியா இளைஞர்கள்?
விஷயம் 6)
என் நண்பர்கள்... இல்லை எதற்கு அவர்களை இழுத்துக் கொண்டு... நானே பல முறை, 'ச்சே, குரங்கு மாதிரி இருக்கான். இவனப் போய் எப்படி இவ லவ் பண்றா? ' என்று பல ஜோடிகளைப் பார்த்து புலம்பியிருக்கிறேன். பார்க்கும் அழகான பெண்கள் அனைவருக்கும் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து பொருத்தமான ஜோடியைத் தேடவா நான் முயற்சி செய்கிறேன்?
மேற்சொன்ன விசயங்கள், அதன் கடைசியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை. இல்லை...இல்லவே இல்லை....
அனைத்திற்கும் பொதுவாக ஒரே வரியில் பதில் சொன்னால் அதன் பெயர் பொறாமை, இரண்டு வரியில் சொன்னால் வயிறு எறிதல்.
Pizza, Burger என்று திங்க முடியாமல் , வெளிநாட்டு சரக்கு அடிக்க முடியாமல் தவிப்பவனின் அப்பட்டமான பொறாமையின் வெளிப்பாடு தான் இருப்பவனை கல்லால் அடிக்கப் பார்ப்பது, ஹோட்டல் புகுந்து பெண்களை அடிப்பது போன்றவை.
வந்தவனில் எவனாவது ஒருவனுக்கு வேலை இருந்திருந்தால் வேலை கெட்டுப் போய் மட்ட மதியம் கட்டையை தூக்கிக் கொண்டு வருவானா?
அவனிடம் பணம் உள்ளது என்னிடம் இல்லை, அவன் அப்பன் பணக்காரன் என் அப்பன் இல்லை என்று சொல்பவர்களுக்கு இந்த ஸ்பெஷல் பஞ்ச்.
" ஒருவன் பிறக்கும் போது ஏழையாய்ப் பிறந்தால் அது அவன் தவறல்ல; ஆனால் இறக்கும் போதும் ஏழையாகவே இறந்தால் அது அவன் தவறு மட்டும் தான் "
என்னிடம் பணம் இல்லை. அதனால் யாரும் செலவு செய்யக்கூடாது என்று சொல்வது கலாச்சாரத்தைக் காப்பாற்றுவது இல்லை. வயித்தெரிச்சலைக் காட்டுவது.
உழைத்து, முன்னேறி, பணம் பார்த்து எப்படி வேண்டுமானாலும் செலவு செய்ய வேண்டியது தானே? அதை விட்டு விட்டு பொறாமையில் வெந்து சாவது _________________த்தனம் (என்ன வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்)
அடுத்தவன் பெயரைக்கெடுத்தாவது தான் புகழ் அடைய வேண்டும் என்று நினைப்பவன் செய்வது தான் சினிமா பெயரில் தமிழ் வளர்ப்பது. (லட்சக்கணக்கில் தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள், இங்கு தமிழ் வளர்கிரார்களாம்...தமிழர் இல்லாமல் இவர்கள் வளர்க்கும் தமிழ் எதை புடுங்கப் போகிறது? தெரியவில்லை. இருக்கும் பதவியை வைத்து உருப்படியாக எதுவும் பண்ணுவது கிடையாது...) தமிழ் வளரும் இடம் அதுவல்ல. அது கலைஞர்கள் வளரும் இடம்.
அங்கும் போய் நான் படிப்பதைத் தான் படிப்பேன்; எனக்கும் அமெரிக்காவில் வேலை, டாலர்களில் சம்பளம் வேண்டும் இல்லையென்றால் கொலை செய்வேன் என்று சும்மா இருப்பவனைக் கிளப்பி விட்டு படம் காட்டுவது __________________த்தனம். ஓடுகிற ஓட்டத்தில் சுதாரித்துக் கொண்டு, முன்னேறி முந்தி வந்து வசதியான ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு பிறகு கனவுகளை நனவாக்குவது தான் புத்திசாலித்தனம். இப்படி புலம்புவது அல்ல...
ஒரு பெண் தன் பின்னால் வரும் அளவிற்கு தகுதி உடையவனாய் வருவது ஆண்மைத்தனம். அதை விட்டு விட்டு வெளியூர் பிள்ளைப் பூச்சிகளிடம் வீரத்தைக் காட்டுவது ____________________ த்தனம். இதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. வேலை வெட்டி இருந்தாலே போதுமே... சம்பாத்தியம் புருஷ லட்சணம்... கிளிகள் சுற்றிச் சுர்ர்றிப் பறக்குமே!!
என்னளவில் கலாச்சாரம் என்பது தனி மனித ஒழுக்கம் சம்பந்தப்பட்டது. அதை சொந்த, வெந்த வெறுப்புகளுக்குப் பயன்படுத்துவது தவறு. அப்படி காலாச்சாரத்தை வளர்க்க விரும்புபவர்கள் தங்கள் அளவில், இல்லை தன்னைச் சார்ந்தவர்கள் அளவில் அதை நிறுத்திக்கொள்வது நல்லது... அதை விட்டு விட்டு கலாச்சாரப் போர்வையில் அடாவடித்தனம் பண்ணுவது ____________________த்தனம் (கடைசியாக இதையும் நிரப்பிவிடுங்கள்)
1 comments
அடடா!! என்னா பீலிங்கு!! தனி மனித உரிமையில்/சுதந்திரத்தில் தலை இடுவது மாபெரும் தவறு! மற்றும் நான் தான் நீதி சொல்பவன் என்று தன்டாலை கையில் எடுத்து கொண்டது தவறு! இது பொறாமையின் வெளிப்பாடு மட்டுமே என்று அறுதியிட்டு கூற முடியாது! ஆற்றாமையின் வெளிப்பாடகவும் இருக்கலாம். இன்னும் டிஸ்கஸ் பண்ண வேண்டிய விஷயம்
ReplyDeleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...