உன்னை போல் ஒருவன்... இல்லை !

10:59:00 AM

தலைவர் ஸ்டைல்ல "கண்ணா இப்போ ஒரு குட்டிக் கத..."

பேரீச்சம்பழம் ஒரு முறை "நான் பாலைவனத்தில் மட்டுமே கிடைப்பதால் என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. அதனால் நான் எங்கும் கிடைக்கும் வாழைப்பழமாக மாறப் போகிறேன்" என்றது. சிறிது நாட்கள் கழித்து, "வாழைப்பழம் மக்களுக்கு அலுத்து விட்டது, அதனால் என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. நான் ஆப்பிளாக மாறப் போகிறேன்" என்றது. சிறிது நாட்கள் கழித்து "ஆப்பிள் விலை அதிகமாக இருப்பதால் என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. அதனால் நான் திராட்சையாக மாறப் போகிறேன்" என்றது. மேலும் சிறிது நாட்கள் கழித்து, "திராட்சை பல சமயம் புளிப்பாக இருப்பதால் என்னை யாருக்கும் பிடிக்கவில்லை" என்றது. இப்போது எதாக மாறுவது என்று அதற்குத் தெரியவில்லை. கடைசியாக "இத்தனை முறை மாறிய பிறகு நான் யார் என்பதே மறந்து விட்டது. இப்போது என்னகே என்னைப் பிடிக்கவில்லை. பேசாமல் பேரீச்சம் பழமாகவே இருந்திருக்கலாம். இருப்புச் சத்து வேண்டியவர்கள் என்னை கண்டிப்பாக விரும்பி ஏற்றிருப்பார்கள்" என்றது; எல்லாம் முடிந்த பிறகு.

கதையை எதற்குக் கூறினேன் என்று கண்டிப்பாகப் புரிந்திருக்கும். நம்மில் பலர் ஒரு கூட்டத்தினர் நம்மை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக நம் தனித்துவத்தைத் துகிலுரித்துவிட்டு நிர்வாணமாய் நிற்கத் தயாராக இருக்கிறோம். நம்மில் இருக்கும் பல தனித் திறமைகளை வெளிக் காட்டாமலேயே நம்முள் திணிக்கப்பட்டதைச் சுமக்கத் தொடங்குகிறோம். ஏதாவதொரு அற்ப அங்கீகாரத்திற்காக நம் தரத்திலிருந்து இறங்கி வந்தாலும் பரவாயில்லை என்று முடிவுசெய்து விடுகிறோம். ஓடும் ஓடத்தில் நாம் யார் என்பதே கடைசியில் மறந்து விடும் என்னும் உண்மை புரியாமலேயே மற்றவரை முந்திக் கொண்டு ஓடுகிறோம்.

இன்று
உலகமே தூக்கி வைத்துக் கொண்டாடும் தேசத்தந்தை காந்தியடிகளை முன்பு ஒரு ஈ, எறும்பு மதித்ததில்லை. இன்று அவர் படம் போட்டத் தாளுக்குத் தான் அடிதடியே. நம்மை, நம் திறமையை அறியாதவர் இருக்கும் இடம் நம்முடையதல்ல என்பதை நாம் புரிந்து கொள்வது எப்போது? நம் சொந்த வானில் சுதந்திரமாகப் பறக்கப் போவது எப்போது?

தண்ணீர் செய்வதை பெட்ரோலால் செய்ய முடியாது. தகரம் செய்வதை தங்கத்தால் கூட செய்ய முடியாது. நாம் தங்கமாக முலாம் பூசிக் கொள்ளத் தான் ஆசைப்படுகிறோமே தவிர, தகரமாய் நம் திறமையால் ஜொலிக்கத் தவறுகிறோம். சிறு எறும்பு யானைக் காதில் புகுந்தால் என்ன ஆகும் என்று நம் எல்லோருக்குமே தெரிந்திருந்தும், நாம் யானையாக அசைந்து கொடுக்கவே விரும்புகிறோம், எறும்பாக வளைந்து கொடுக்க விரும்புவதில்லை. We are here for a purpose. YOU are here to be YOU...just Y-O-U...I am here to be just M-E

உண்மையில் 'உன்னைப் போல் ஒருவன் ' என்று யாரும் இல்லை. நான் நானாக இருந்தால் தான் உலகம் என்னை மதிக்கும். நீ நீயாக இல்லாவிட்டால் உலகம் உன்னை மதிக்காது...நமக்கென்று ஒரு தனி உலகம் காத்திருப்பது உண்மை. நாம் அதைக் கண்டுபிடிக்க வேண்டியதில்லை, அது நம்மைக் கண்டுபிடிக்கும். அந்த உலகில் நாமே ராஜா, நாமே மந்திரி...நம்புவோம்.காத்திருப்போம்...!

இந்த வாழ்கை நாம் அழுவதற்கு நூறு காரணங்களைத் தந்தால், நாம் நாம் சிரிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிப்போம்...மொத்தத்தில்...

ITS BETTER TO BE HATED FOR WHAT WE ARE THAN TO BE LOVED FOR WHAT WE ARE NOT

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...