சற்றே பெரிய சிறுகதை: ஆக்சிடென்ட் !!

12:23:00 PM

1)

ஓல்ட் மகாபலிபுரம் கிராஸ் ரோடு.

"பாலாஜி...வண்டிய அந்த ஓரமா நிப்பாட்டுங்க... ஒரு டீய போட்டுட்டுப் போவோம். என்ன ஏட்டு, சரி தான?" திரும்பி கேட்டார் இன்ஸ்பெக்டர் நல்லசிவம். "ஆமா சார், ராத்திரி பூரா சுத்தியிருக்கோம். ஒரு டீய கீயப் போட்டாதான் தெம்பா இருக்கும்" மற்றவர்களையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சொன்னார் ஏட்டு.

ஒரு டீக்கடையின் முன் வண்டி நின்றது. கடையின் முன் பையன்கள் பேப்பர் அடுக்கிக் கொண்டிருந்தனர். மணி 6 ஆக இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது. "இந்தாப்பா, டபுள் ஸ்ட்ராங்கா ஒரு அஞ்சு டீ போடு. வட கிட ஏதாவது சூடா இருக்கா?" மும்முரமாக ஆர்டர் கொடுத்துக் கொண்டிருந்தார் ஏட்டு. "ஏட்டு, மணி இன்னும் ஆறு கூட ஆகல. வட கேக்குறிங்க. பொறைய சாபிட்டாலாவது பசி ஆறும்" சொல்லிக் கொண்டே பிஸ்கட் பாட்டிலுக்குள் கையை விட்டார் பி.சி கணபதி.

பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்த நல்லசிவம், "ஏட்டு, 6 டீயா சொல்லும். அங்க பாரும்..." என்று அவர் சொன்ன திசையில் ட்ராபிக் கான்ஸ்டபிள் சபாபதி தொப்பை குலுங்க ரோட்டை க்ராஸ் பண்ணி ஓடி வந்து கொண்டிருந்தார். "வணக்கம் சார்..."

"என்ன சபாபதி, 6 மணிக்கெல்லாம்...?" பேப்பரில் இருந்து கண்ணை எடுக்காமல் கேட்டார் நல்லசிவம்.

"இல்ல சார், IT கம்பெனி இந்த ஏரியாவுல ஜாஸ்தியானதுல இருந்து ஆறு, ஆறரைக்கெல்லாம் ட்ராபிக் ஆயிடுது. கண்டிப்பா ஒரு ஆள் நிக்கனும்னு சொல்லிட்டாங்க. அதான்...ம்...உங்களைப் பாத்தேன்...அதான் ஓபன் சிக்னல் போட்டுட்டு ஓடி வந்தேன்..." சொல்லாமலே வந்த டீயை சிரித்த முகத்துடன் வாங்கிக் கொண்டே சொன்னார்.

"சபா...ஓபன் சிக்னல் போட்டுட்டு நீ பாட்டுக்கு வந்துடீயே...எதுனா ஆய்ட்டா?" வாயில் பிஸ்கட்டுடன் கேட்டார் ஏட்டு. "ஒன்னும் ஆகாது ஏட்டையா...ட்ராபிக் ஜாஸ்தி இல்லல்ல...6 மணிக்கு மேல தான்..."

"ஹேய்... ஹேய்... நிறுத்துயா...நிறுத்து !!"

கத்திக் கொண்டே ரோட்டை நோக்கி ஓடினார் பி.சி லிங்கம். "டமார் !! " பின்னாடியே ஓடினார் கணபதி. கிளாசை கீழே போட்டு விட்டு ஓடத்தொடங்கியிருந்தார் சபாபதி.

2)

"சரி...நா கெளம்புறேன். இன்னும் அரை மணில சிட்டிய தாண்டிடனும். பெரிய வண்டி. கண்டிப்பா நல்ல லாபமிருக்கும்..." ஆக்டேவியாவின் கதவை மூடினான் கார் சேகர்.

"பாத்துண்ணே...நம்பர் ப்ளேட் மட்டும் தான் மாத்தியிருக்கேன். உசாரா இருந்துக்கோங்க. போலீஸ் கண்ல மாட்டிராதிங்க...செக் பண்ணா பேஜாராய்டும்...பாத்து..." சொன்னான் சிங்காரம்

"சரி...நா பாத்துக்குறேன்".

பின்னிரவு
தாண்டி, ஒரு பிரபல பாரில் தள்ளாடியபடி கார் கதவைத் திறந்த ஒருவனை லேசாகத் தட்டி விட்டு, காரை ஓடிக் கொண்டு வந்து, நம்பர் ப்ளேட் மாற்றி விட்டான். இனி பாண்டிச்சேரி போய் பிரிக்க வேண்டியது தான் பாக்கி. புது ஆக்டேவியா. "நல்ல கேட்ச், நல்ல லாபம் "

110 ல் பறந்து கொண்டிருந்தான் சேகர்.
டாஷ்போர்டு எலக்ட்ரானிக் க்லாக் 5:55 am என்று காட்டியது.

ஓல்ட் மகாபலிபுரம் கிராஸ் ரோடு.

ஓபன் சிக்னல் பார்த்து ரைட் எடுக்க வந்தவன், திருப்பத்தில் போலீஸ் கூட்டம் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். "நிறுத்தி விடுவார்களோ?" பயத்தில் சட்டென்று லெப்ட் எடுத்தான். அந்த போர்டை கவனித்திருக்க வாய்ப்பில்லை. "No Free Left"

"ஹேய் ஹேய்..." பின்னாடி ஒரு போலீஸ் சத்தம் போட்ட....

"
டமார் !! "

"
நிறுத்துயா...நிறுத்து !!" ...டபடி ஓடி வந்து கொண்டிருந்தார்.

எது இடித்ததென்றே தெரியவில்லை. சைடு விண்டோவில் மோதி ஸ்டீரிங் மேல் முட்டி...தலையில் ரத்தம்ம்ம்ம்ம்... மயங்கிக்கொண்டிருந்தான்...

3)

"டேவிட்...ம்...நான் தான்...கிளம்பிட்டேன்..."
...

"யாரும் எழும்பல...பால் வாங்குற மாதிரி கதவ தெறந்து வந்துட்டேன்..."
...

"இல்ல..யாரும் பாக்கல..."
...

"சும்மா எதையாவது சொல்லாத. உன்ன நம்பி வீட்ட விட்டு கிளம்பி வந்த நானே தைரியமா இருக்கேன்... நீ என்னடான்னா..."
...

"ம்...ம்..."
...

"சரி நான் ஆட்டோ ஏறிட்டேன்" "...ஓல்ட் மகாபலிபுரம் கிராஸ் ரோடு போகணும்..." சொல்லிக் கொண்டே ஆட்டோவில் ஏறினாள்.
...

"ஏறிட்டேன். நீ 'விநாயகா ஸ்டீல்ஸ்' பக்கத்துல வெயிட் பண்ணு...நான் ரோடு கிராஸ் பண்ணி வரேன்"
...

"ம்...கூப்பிடுறேன்..."

டொட்...டொட்...டொட்...ஆட்டோ மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. கையில் TITAN 5:50 என்று காட்டியது. காலை நேரம். அதிக நேரம் ஆகவில்லை. கிராஸ் ரோட்டில் இறங்கிக் கொண்டாள். டபுள் சார்ஜ் கேட்ட ஆட்டோகாரனை எதுவும் சொல்லாமல் கட் செய்து விட்டு மொபைலை ஆன் செய்தாள்.

"...வந்துட்டேன்"
...

"ஆமாம்...டிராபிக் அவ்வளவா இல்ல..."
...

"பயந்து சாகாத...ம்..ம்... பாத்துட்டேன்...வர்றேன்"
...

"இப்ப நா வரவா வேண்டாமா...." பேசிக்கொண்டே ரோட்டைக் கடந்தவளது கவனத்தைக் கலைத்தது அந்த அலறல்...

"...ஏய்...பொண்ணு...ஏய்"

இடிக்கிறார் போல் வந்து சட்டென்று வலப்பக்கம் திரும்பியது அந்த மாருதி வேன். திரும்பிய வேகத்தில் மற்றொரு காரை மோதியது.

"
டமார் !! "

தூரத்தில் யாரோ கத்தினார்கள்.

"
நிறுத்துயா...நிறுத்து !!"

காதைப் பொத்திக் கொண்டு நடு ரோட்டில் உட்கார்ந்திருந்தாள். சுற்றி கண்ணாடிச் சிதறல். மொபைல் கீழே கடந்தது. தூரத்தில் டேவிட் வேறு திசையில் ஓடுவது தெரிந்தது. எதற்கு இப்படி ஓடுகிறான்? எதிர் திசையில் வரிசையாக போலீஸ் ஓடி வந்து கொண்டிருந்தார்கள்...உதய டிவியின் மாருதி வேன் ஒரு ஆக்டேவியா காரை இடித்திருந்தது.

4)

"ண்ணா...ரெண்டு நைட்டா சுத்திகினு இருக்கோம்...இன்னிக்காவது டீல் முடியுமா? பணம் வந்துருமா? " ஒட்டியபடி கேட்டான் ரங்கா.

"பார்ட்டி போலீஸ் கிட்ட போகல. ஆனாலும் உஷாரா இருக்கணும். இந்த வண்டி இருக்கிற வரை பிரச்சனை இல்ல. ஆளும் கட்சி டிவி...ஒரு பய நிறுத்த மாட்டான்" பெருமிதமாய்ச் சொல்லிக் கொண்டே சிகரெட் பற்ற வைத்தான் ஆதி.

"பணம்..." இழுத்தான் ரங்கா.

"கிடைச்சுரும் டா ரங்கா...ஒன்னும் பிரச்சன இல்ல...இன்னிக்கி பாப்போம், வரலியா, போட்ல எத்தி பாம்பேக்கு அனுப்பிருவோம்" இழுத்தான் ஆதி, புகையை.

புகையை வெளியே விட்டபடி "மயக்கம் தெளிஞ்சுருச்சா?" பின் சீட்டைப் பார்த்தான் "இல்ல...இருடி உன் அப்பன் பணம் கொடுத்தா பொத்துனாப்ல வீட்டுக்கு போயிறலாம்..இல்லனா பாம்பே தான்...மகாநதி கமல் மாதிரிதான் உன்ன உன் அப்பன் கண்டு பிடிப்பான்...சொல்லிட்டேன்.என்னடா சொல்ற ரங்கா..." கேட்டான் ஆதி. பின் சீட்டில் கை கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் மயக்கமாக ஒரு இளம் பெண்.

"ஆமாண்ணா...ஹி ஹி ஹி " சிரித்தான். மகாபலிபுரம் கிராஸ் ரோடு.

"மணி என்னடா ஆச்சு?"

"மணியாண்ணா...ஆறு...
...ஏய்...பொண்ணு...ஏய்" சட்டென்று எதிரில் ஒரு பெண் போன் பேசிக்கொண்டே வர, ரைட் திரும்பிய வேகத்தில்...

" டமார் !! "

...மோதி நின்றது வேன்.
ரங்கா வெளியில் விழுந்து கிடந்தான்...ஆதி மயங்கி வெகு நேரமாகி இருந்தது...

பின் வருபவை அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்...

"சார், உதய டிவி வேன் சார்"

"
ச்சே...ஒரு பயந்தகொள்ளிய நம்பி வீட்ட விட்டு ஓடி வந்துட்டேனே "

"
சார், உள்ள ஒரு பொண்ணு சார்"

"
சார்...இவன் கார் சேகர்...திருட்டு கார் சார்"

"
...இந்தா பொண்ணு...எந்திரி...போன் பேசிக்கிட்டே இப்படியா வருவ...என்ன பையி...ஊருக்குப் போறவ இங்க எதுக்கு எறங்குன?"

"இந்த பொண்ணு காணாம போன தொழிலதிபர் பொண்ணு சார்..."

"குட் கேட்ச்"

"இவன பத்தி கடைசி நேரத்துல தெரிஞ்சதால தப்பிச்சேன்..."

"எட்டு...பொண்ணு மயக்கமா இருக்கு...சோடா வாங்கு. யோவ் சபா...வாய்யா இங்க"

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...