சிந்தனை செய்...(அதையே தான் நானும் சொல்றேன்)

3:53:00 AM

ரொம்பவும் சில படங்கள் மட்டும் தான் எனக்கு பலத்த குழப்பதை ஏற்படுத்தும். படம் நல்லா இருக்கா இல்லையா என்று யாராவது கேட்டால் நான் தெரியாது என்று சொல்லியிருக்கிறேன். அப்படி நான் தலையைச் சொறிந்த படங்களில் ஒன்று சிந்தனை செய். போன வாரம் வழக்கம் போல் நான் மட்டும் தனியாக PVR சென்று பார்த்த படம். தியேட்டரில் ஒரு 30 பேர் இருந்திருப்பார்கள். பல பேர் இடைவேளைக்கு பிறகு காணாமல் போனார்கள் என்று தான் நினைக்கிறேன். கூட்டமே இல்லை என்பதைத் தான் என்று சொல்ல வருகிறேன்.ஆனாலும் படம் நாளா தான் இருந்தது.

ஒரு படம் முழுமையான வெற்றி பெற இப்போதெல்லாம் ' promo ' ரொம்பவும் முக்கியம். முழுக்க முழுக்க புது முகங்கள் நடித்து, ஒரு புது முகம் இயக்கி தயாரித்திருக்கும்
சிந்தனை செய் படத்திற்கு இந்த அளவு ரீச் இருந்ததற்கு காரணமும் promo தான். படத்தின் பாடல்கள் பல மாதங்களுக்கு முன்னே ரிலீஸ் ஆகிவிட்டது. ஸ்டில்கள் எல்லாமே பலப் பல விதங்களில் பக்காவாக வொர்க் செய்யப்பட்டு ஆர்வத்தை தூண்டியது. கதை யுவன் என்பதைப் பார்த்துவிட்டு நண்பன் ஒருவன் யுவன்சங்கர்ராஜா கதை இது என்று கிளப்பி விட்டிருந்ததால், மேலும் எங்கள் வட்டாரத்தில் பிரபலம் ஆகியிருந்தது இந்தப் படம்.
அருமையான கதை. அதில் சந்தேகம் இல்லை. திரைக்கதையும் நல்லாத்தான் இருக்கு. ஆனால் எடுக்கப்பட்ட விதம், சில காட்சிகள், பல வசனங்கள் எனக்கும் என்னுடன் படம் பார்த்த பலருக்கும் திருப்திகரமாக இல்லை. அதிலும் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு 'ஆண்டி' உச் கொட்டிக் கொண்டே இருந்தார். உச் நூறைத் தாண்டியிருக்கும். பல காட்சிகள் முக்கியமாக ஹீரோவின் கேரக்டரைஷேசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் கேவலம் என்றால் சாதா கேவலம் இல்லை மகா கேவலமாக இருந்தது. ஆள் உருவமும் கொஞ்சம் சரியில்லை. நமக்கு ஹீரோன்னா சும்மா கெத்தா இருக்கணும். இவருக்கு செட் ஆகவில்லை. அதே போல் பாரதியின் அச்சமில்லை அச்சமில்லை பாடலை இதற்கு மேல் யாரும் கேவலப்படுத்த முடியாது. காற்சிலம்பை வைத்துக் கொண்டு கண்ணகி வேஷத்தில் வேறு ஆடுகிறார்கள். கொடுமை!
நொண்ணை மாதிரி ஒரு ஹீரோ, பாதி 'ஆண்டி' ஹீரோயின், தேவையில்லாத திணிப்பாக 'காதல்' தண்டபாணி, புத்திசாலியாக காட்டப்படும் மொக்கை போலீஸ், கேவலமான காமெடி, விரச காட்சிகள் என்று இன்னும் நிறைய இருக்கிறது.

ஆனால் பிளஸ் பாயிண்ட்களும் நிறைய உண்டு. என்னளவில் அருமையான பேங்க் கொள்ளை சீன் கடைசியாக தமிழ் படத்தில் வந்தது ருத்ரா படத்தில். பாக்கியராஜ் கலக்கியிருப்பார். அதற்கடுத்து இந்தப் படத்தில் தான். இடைவேளைக்கு முன் வரும் பேங்க் கொள்ளை அதி அற்புதம். பக்கா ட்விஸ்ட். தலையில் கை வைத்து உட்கார்ந்திருந்த பலர் படக்கென்று நிமிர்ந்த சத்தம் நன்றாகவே கேட்டது.

இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள், அரை மணி நேரத்திற்கு முன், இரண்டு நாட்களுக்குப் பின், இப்போது என்று மாறி மாறி காட்டி படத்தின் சுவாரஸ்யத்தை மேலும் மேலும் அதிகப்படுத்துகிறது. பணத்தை கொள்ளை அடித்தபின் ஒருவருக்கொருவர் மற்றவரை நம்பாமல் போடும் திட்டங்களும் செய்யும் வேலைகளும் யப்பா சாமி விடாக்கண்டன் கொடாக்கண்டன் வேலைகள்.
கதையைச் சொல்லவில்லையே...மூன்று நண்பர்கள். உருப்படாத முன்னாள் மிடில் பெஞ்ச் மாணவர்கள். எல்லாருடைய பிளாஷ்பேக்கும் மகா கேவலம். அனைவருடைய தேவையும் பணம் என்று வரும் போது திருட ஆரம்பிக்கிறார்கள். சரி, பெரிய அளவில் ஏதாவது செய்துவிட்டு செட்டில் ஆகிவிடலாம் என்று பேங்க் ஒன்றை கொள்ளை அடிக்கிறார்கள். இரண்டு நண்பர்கள் இவர்களுடன் கூட்டு சேர்கிறார்கள். கொள்ளையடித்த பணத்தை போலீஸ் தொல்லையால், வைத்திருக்க முடியாமல் பங்கு பிரிக்க நினைக்கும் போது பிரச்சனை ஆரம்பிக்கிறது. ஒருவரை ஒருவர் ஏமாற்றி விட்டு மொத்தப் பணத்தையும் லவட்டப் பார்க்கிறார்கள். அடுத்து நாம் எதிர்பார்க்காது எல்லாம் நடக்கும் கிளைமாக்ஸ்!

மொத்தத்தில் நல்ல படம் தான் இருந்தாலும்ம்ம்ம்....சரி விடுங்க விடுங்க நல்ல படம் தான்...பாருங்க பாருங்க... :)

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...