கனவு காணுங்கள் - S S ராஜமௌலி – பாகம் 02

12:32:00 PM


S S ராஜமௌலி யார், அவரது ஆரம்பகாலம் எப்படி இருந்தது என்பவற்றை முதல் கட்டுரையில் அலசினோம். இனி அவரது படங்கள்.

முதல் படமான Student No: 1 யிலிருந்தே வருகிறேன். படத்தின் கதை – விசாகப்பட்டிணத்திலிருக்கும் ஒரு சட்டக்கல்லூரியில் சேர்கிறான் ஆதித்யா (N T R). படிக்கும் மாணவர்களை படிக்க விடாமல் தடுப்பதற்கென்றே அலையும் மாணவனை (இப்படி ஒருவன் நிச்சயம் எல்லா படங்களிலும் இருப்பான். இந்தப் படமும் விதிவிலக்கல்ல) சரிகட்டி தன் படிப்பைத் தொடகிறான் ஆதித்யா. அவன் பின்னணி என்னவென்றே தெரியாமல் இருக்கிறது. இடைவேளையில் தான் தெரிகிறது, ஆதித்யா ஒரு கைதிசிறை அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று படிக்க வந்திருப்பவன். எதற்காக ஆதித்யா குற்றவாளியானான், உண்மையில் நடந்தது என்ன? இரண்டாம் பாதி. கதை எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதல்லவா? புரட்சி தமிழன் சத்யராஜின் மகன் சிபிராஜ் அறிமுகமான Student No: 1 (2003) இந்தப் படத்தின் மோசமான ரீமேக். இதே சாயலில் தமிழில் வந்த இன்னொரு படம் விஷால் நடித்து, தருண் கோபி இயக்கத்தில் வெளியான திமிரு (2006)! புகழ் பெற்ற பழம்பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவின் மேற்பார்வையில் வந்ததால், படம் மெகா ஹிட் ஆகியும் பெயர் ராகவேந்திர ராவுக்கே கிடைத்தது என்று சென்ற கட்டுரையிலேயே பார்த்தோம். S S ராஜமௌலி யார் என்றே அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வில்லை. யாரும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்றும் சொல்லலாம்!

ஜூனியர் N T R உடனிருந்த நட்பின் காரணமாகவே S S R க்கு இரண்டாம் படமான “சிம்ஹாத்ரி” கிடைத்தது என்று போன பதிவிலேயே சொல்லியிருந்தேன். ஜுனியர் S S R ஐ இன்று வரை “ஜக்கண்ணா” (புகழ் பெற்ற சிற்பியாம்) என்றே அழைக்கிறார். இவ்விருவரது நட்பிற்கு உதாரணமாக ஒரு முறை பேட்டி ஒன்றில், “மற்ற ஹீரோக்களுக்கென்றால் ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் N T R ருக்கென்றால் அவரது கேரியரை அடுத்த உயரத்திற்கு கொண்டு போகும் படமாக கொடுக்க வேண்டும் என்று பாடுபடுவேன்” என்று சொல்லியிருக்கிறார் S S R. அது 100 / 100 உண்மைதான். எப்படி என்று பின்னர் பார்ப்போம். இப்போதைக்கு சிம்ஹாத்ரி (2003) மட்டும். S S R – N T R கூட்டணியின் இரண்டாவது படம்.

ஊர்ப் பெரிய மனிதரான ராம் பூப்பால் வர்மாவின் (நாசர்) வளர்ப்பு மகன் சிம்ஹாத்ரி (N T R). இவனது பின்னணியும் யாருக்கும் தெரியாமலேயே இருக்கிறது. மனநல விடுதியிலிருக்கும் ‘இந்து’ வை (பூமிகா) அடிக்கடி சென்று சந்திக்கிறான் சிம்ஹாத்ரி. ‘இந்து’ யார்? அவளுக்கும் சிம்ஹாத்ரிக்கும் என்ன தொடர்பு? யாருக்கும் தெரியாது. சிம்ஹாத்ரியை காதலிப்பதாக மகள் கஸ்தூரி (அன்கிதா) சொல்ல முழு மனதுடன் சம்மதிக்கிறார் பூப்பால் வர்மா. இந்நிலையில் சிம்ஹாத்ரியைத் தேடி இரண்டு கும்பல் தனித்தனியாக அலைகிறது. இரண்டு கும்பலும் கோதாவரி நதியில் இந்துவுடன் சிம்ஹாத்ரியைப் பார்க்க, தாக்குதல் ஆரம்பமாகிறது. ஒரு கும்பலால் இந்து காயமடைந்து மயக்கமடைகிறாள். மற்றோரு கும்பலோ சிம்ஹாத்ரியை “சிங்கமலை அண்ணா” என்றழைத்து அவரது கையில் கோடாரி (Double - Sided) போன்ற ஒரு ஆயுதத்தைக் கொடுக்கிறது. அந்த ஆயுதத்தால் இந்துவைத் தாக்கிய கும்பலை துவம்சம் செய்கிறான் சிம்ஹாத்ரி. மயக்கத்திலிருந்து விழிக்கும் இந்து சிம்ஹாத்ரியை பிளாஷ்பேக் காட்சிகளால் அடையாளம் கண்டுகொண்டு, ஒரு கடப்பாரையால் குத்துகிறாள். ரத்தம் கசிந்தபடி சிம்ஹாத்ரி / சிங்கமலை கீழே விழுகிறான் - இண்டர்வல்! அந்த காட்சி உங்களுக்காக இதோ!

யார் இந்த சிம்ஹாத்ரி? இவனை ஏன் சம்பந்தமே இல்லாமல் சிங்கமலை என்று அழைக்கிறார்கள்? தன்னை பாதுகாத்தவனையே ஏன் இந்து கடப்பாறையால் குத்துகிறாள்? இரண்டாம் பாதி. இந்தக் கதையையும் எங்கோ கேட்டது போல் இருக்கிறதல்லவா? புரட்சி கலைஞர் விஜய்காந்த் நடித்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த கஜேந்திரா (2004) படம் சிம்ஹாத்ரியின் மட்டமான ரீமேக். தமிழில் தான் நம் கேப்டன் நடிப்பில் படம் மொக்கையானதே தவிர தெலுங்கில் படம் மெகா ஹிட். 53 திரையரங்குகளில் தொடர்ச்சியாக 150 நாட்கள் ஓடிய இந்த மாபெரும் வெற்றிப்படத்தின் முதல் வார வசூல் மட்டும் 4.5 கோடிகள். சிம்ஹாத்ரியின் பிரம்மாண்ட வெற்றியிலிருந்து S S ராஜமௌலியின் ஆட்டம் ஆரம்பமானது.

சிம்ஹாத்ரி மூலம் தன்னை யாரென்று உலகிற்கு காட்டிவிட்டு அடுத்த வருடமே எந்த வித சிரமமும் இல்லாமல் தனது முத்திரையுடன் மூன்றாவது படத்திற்கு தயாரானார் S S R. அந்தப் படம் “Sye (2004)” முதல் படமான Student No: 1 கல்லூரியை பின்புலமாகக் கொண்ட கதை. மூன்றாவது படமான "Sye" கூட கல்லூரி சம்பந்தப்பட்ட கதை தான். ஆனால் முற்றிலும் வேறுபட்ட களம். இங்கு தான் வேறுபட்டிருந்தார் S S R. இந்தியாவில் அதிகம் அறியப்படாத ரக்பி விளையாட்டை மையமாகக் கொண்டு இந்தக் கதையை உருவாக்கினார்.
கதை மிகவும் சிம்பிள் – தங்களுக்குளே போட்டி போட்டுக்கொள்ளும் இரண்டு காலேஜ் குரூப்களான Wings and Claws, கல்லூரிக்குள் பொதுவான வில்லன் நுழையும் பொழுது, அவனை எதிர்த்து Eagles ஆக ஒன்று சேர்ந்து மோதுவது தான் கதை. கதை சாதாரணமானதாக இருந்தாலும் திரைக்கதை, காட்சி வடிவமைப்பு, ரக்பி விளையாட்டுக் காட்சிகள் என்று படம் அசாதரணமாக இருக்கும். S S R ன் தீவிர ரசிகர்கள் பலருக்கு இன்றும் பேவரிட் படமென்றால் அது Sye தான்! உலகில் அறியப்பட்ட விளையாட்டுகளில் அதிகம் ரிஸ்க் உடைய, ஆபத்து அதிகமுள்ள விளையாட்டு என்றால் அது ரக்பி தான். அப்படிப்பட்ட ஒரு விளையாட்டை ஒரு சாதாரண காலேஜ் டீம், கொலைகார கும்பலுடன் விளையாடி ஜெய்ப்பது தான் கதை. பிக்ஷூ யாதவ் (பிரதீப் ராவத், தமிழில் கஜினி, தொட்டி ஜெயா) – இது தான் வில்லனின் பெயர். இவனது ரக்பி டீமின் பெயர் புல்ஸ் (Bulls). வில்லன் பிக் ஷூ யாதவ் தனது அணியின் பெயருக்கேற்ப கடாமாடு போல் இருப்பான். அப்படியென்றால் அவனது டீம் எப்படி இருக்கும்? இவர்களுடன் ரக்பியில் மோதினால் இரும்பு மெஷினில் சிக்கிய கரும்பு தான்! அங்கு தான் தனது ரசிக்கும்படியான திரைக்கதையால், திறமையான ஸ்டண்ட் வடிவமைப்புகளால் தனது முத்திரையைப் பதிக்கிறார் S S R. பிக்ஷு யாதவ் கல்லூரியினுள் என்ட்ரி கொடுக்கும் காட்சி இதோ. இந்த ஒரு காட்சி போதும் பிக்ஷு யாதவ் எத்தனை பெரிய வில்லன் என்பதைக் காட்ட.

ரக்பி சம்பந்தப்பட்ட இந்தப் படத்தை ரீமேக் செய்வது நடக்காத காரியம் என்பதால், யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழில் இந்தப் படம் ‘டப்’ செய்யப்படவும் இல்லை (நான் ஈ வெற்றியால் இனிமேல் வர வாய்ப்பிருக்கிறது). மலையாளத்தில் ‘Challenge’ என்ற பெயரில் வெளியாகி வெற்றிகண்டுள்ளது. இந்தப் படம் தொடர்பான மற்றுமொரு முக்கிய செய்தி, படம் வெளியான பொழுது அதைப் பார்த்து ரசித்த, இந்திய ராணுவப் படையின் ரக்பி கோச் திரு. Willie Hateraka, International Rugby Union தங்களது விளையாட்டைப் பிரமோட் செய்ய ரக்பி சம்பந்தமாக எடுக்கப்பட்ட படங்களை தேடிக்கொண்டிருப்பதை அறிந்து Sye படத்தை சிபாரிசு செய்திருக்கிறார். உலகில் 144 நாடுகளில் ரக்பி விளையாடப்பட்டாலும், அந்த விளையாட்டைத் தெளிவாகக் காட்டிய மூன்று படங்களுள் ஒன்றாக Sye படம் தேர்வாகியிருக்கிறது.


S S R ன் முதல் இரண்டு படங்களை விட இந்தப் படத்திலிருந்து தான் அவரது தனித்துவம் தெரிய ஆரம்பித்தது. Student No 1 மற்றும் Simhadri இரண்டும் டிப்பிக்கல் தெலுங்கு மசாலாவாகவே இருக்கும். ஆனால் Syeயிலிருந்து தான் உண்மையான ஆட்டம், ஆளுமை ஆரம்பம் எனலாம். வித்தியாசமான, புதுமையான களன்களில் இறங்க ஆரம்பித்தார் S S R. மேலும் மிக முக்கியமாக “an s s rajamouli film” என்னும் இவரது STAMP இந்தப் படத்திலிருந்து தான் வர ஆரம்பித்தது (முத்திரையைப் பதித்துவிட்டார் என்று இந்தப் படத்திலிருந்தான் சொல்ல ஆரம்பித்தனர் :-)

Sye படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் உடன் (கவனிக்க: இவர்தான் தெலுங்கு பில்லா) இணைந்தார் S S R. படம் Chatrapathi (2005). இலங்கையில் வாழும் ஒரு குடும்பம் - அம்மா (பானுப்பிரியா). அவரது முதல் தாரத்தின் மகன் சிவாஜி (பிரபாஸ்), சொந்த மகன் அசோக் (ஷாஃபி – பீமாவில் திரிஷாவை சுட்டுக்கொல்வாரே, அவர்). அம்மாவிற்கு இரண்டு மகன்கள் மீதும் அன்பு அதிகம். ஆனால் தன் அம்மா தன்னைவிட சிவாஜி மேல் தான் பாசமாக இருப்பதாக நினைத்து பொறாமைப்படுகிறான் அசோக். அந்தப் பொறாமையால் சிங்களவர்களால் அங்கிருக்கும் மக்கள் விரட்டியடிக்கப்படும் போது சிவாஜி தன் அம்மாவைப் பிரிய நேர்கிறது. அப்போது சிவாஜிக்கு வயது 14. சிவாஜி அகதியாக விசாகப்பட்டிணம் வந்து சேர்கிறான். பாஜி ராவ் என்பவனது கன்ட்ரோலில் இருக்கிறது துறைமுகம். அவனுக்கு பின் இருப்பது அவனது அண்ணன் தாதா "ராஸ் பிகாரி" (மறுபடியும் பிரதீப் ராவட்). அகதிகளாக வரும் மக்களிடம் கையெழுத்து வாங்கி, கடத்தல் தொழிலில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்துபவன் பாஜி ராவ். இவனது முக்கிய வலது கை, காட்ராஜு. இவன் தான் துறைமுகத்தின் ஆல்-இன்-ஆல். பலசாலி, கொடூர ரவுடி. வருடங்கள் கழிகிறது. கட்டிளம்காளையாக வளர்கிறான் சிவாஜி. உயிர் முக்கியம் என்பதால் அவனை அடக்கியே வைக்கின்றனர் நண்பர்கள். தன் தாயை தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கும் சிவாஜிக்கு நீலு (ஸ்ரேயா) வின் அறிமுகம் கிடைக்கிறது. என்னதான் அடக்கி வைத்தாலும், காட்ராஜு ஒரு நாள் ஒரு சிறுவனை தலையில் அடித்து நடுவீதியில் போட, வெடிக்கிறான் சிவாஜி. காட் ராஜுவை சராமாறியாக அடித்துக் கொல்கிறான். அருமையான ஃபைட் இது. வெறிகொண்ட பாஜி ராவ், சிவாஜியின் கிராமத்திலுள்ள அனைத்து சிறுவர்களையும் பிகாருக்கு கடத்தப் பார்க்கிறான். தடுக்கும் எவரையும் கொடூரமாகக் கொல்கிறான். மீண்டும் சிவாஜி என்ட்ரி. பாஜி ராவும் கொடூரமாக இறக்கிறான். இங்கும் ஒரு அல்டிமேட் ஃபைட். ஊரையே காப்பற்றிய சாதாரண சிவாஜி சத்ரபதி சிவாஜியாகிறான். துறைமுகம் சத்ரபதியின் கன்ட்ரோலுக்கு வருகிறது. இதையெல்லாம் பொறாமையுடனும், வெறுப்புடனும் பார்த்துக்கொண்டிருக்கிறான், தம்பி அசோக். இண்டர்வல் - ஒரு மாஸ் படத்திற்கு இண்டர்வல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் இன்றும் சரியான எடுத்துக்காட்டு. சிலிர்த்துவிட்டது எனக்கு!


இரண்டாம் பாதி முழுக்க சத்ரபதி எப்படி தன் தம்பியைச் சமாளித்து தன் தாயைக் கண்டுபிடித்து, சேர்கிறான் என்பது தான் கதை. இடையில் குடைச்சல் கொடுக்க வில்லன் ராஸ் பிகாரி, காதலிக்க நீலு. இரண்டாம் பாதியில் ஆக்ஷன் கொஞ்சம் கம்மி என்றாலும் எமோஷன்ஸ் அதியம். ஆரம்ப வசூலில் கொஞ்சம் லந்தடித்தாலும், மவுத் டாக்கில் மீண்டும் பொலிவுற்று, 54 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி சக்கை போடு போட்டுள்ளது சத்ரபதி. ஒரு சாதாரண அகதி எப்படி டானாக மாறுகிறான் என்பதை அதிவேகமாக, அதியற்புதமாக ஏற்கனவே இந்தப் படத்தில் தெலுங்கு பில்லாவாக நடித்த பிரபாஸை வைத்தே காட்டி விட்டார் S S R. ஆறடிக்கும் மேலான உயரத்திற்கும், தேக்கு மரத்தைப் போன்ற உடற்கட்டிற்கும் பிரபாஸ் ஆக்ஷனில் அதகளம் செய்திருப்பார். ஆய்ஊய் என்று கத்தாமல் கோபத்தைப் கண்களில் மட்டும் காட்டும் மேனரிஸம் சூப்பர்ப்! இன்டர்வல், Just mind blowing!

தெலுங்கர்கள் பில்லா II எடுக்க அவசியமே இல்லை. ஏனென்றால்  அவர்களுக்கு ஏற்கனவே சத்ரபதி இருக்கிறது! பில்லா II வின் திரைக்கதை இதில் கால்பாகத்தின் முதல் கால் அளவு கூட இல்லை. வில்லன்களை எதிர்த்து, வரிசையாக அவர்களைக் கொன்று, அரசியல்வாதிகளை மிரட்டி, மக்கள் சப்போர்ட்டைத் திரட்டி, துறைமுகத்தைக் கைப்பற்றி “டான்” ஆவது எப்படி என்று கொஞ்சமேனும் நம்பும்படியாகக் காட்டியிருப்பார் SSR. சத்ரபதியின் முதல் பாகத்தையே தமிழில் பில்லா II வாக எடுத்திருக்கலாம். படம் வெறித்தனமாக இருந்திருக்கும். ஆனால் என்ன செய்வது, அதை நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம், இரண்டாம் பாதியாக. ஆம், தளபதி டாக்டர் விஜய் நடித்த (?) காவியமான ‘குருவி’யின் இரண்டாம் பாகம் அப்படியே சத்ரபதி முதல் பாகத்தின் அப்பட்ட காப்பி! விதி வலியது!!




தொடரும்...

You Might Also Like

2 comments

  1. தமிழ் நான் ஈ படத்தின் படத்தின் வெற்றியால் சத்ரபதி படம் , சந்திர மௌலி என்ற பேரில் தமிழில் டப் செய்ய பட்டு விரைவில் வெளி வர போகிறது.

    ReplyDelete
  2. sye padam kazhugu endra peyaril 2007 il dub seiyapattadhu.

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...