கனவு காணுங்கள்...
7:05:00 AM
கனவுகளுக்கு
உருவம் தரும் சினிமாவிற்கு சரியான பெயர் “கனவுத் தொழிற்சாலை”. இந்தத் தொழிற்சாலையில்
இயக்குனர்கள் தாங்கள் கண்ட கனவுகளுக்கு உருவம் கொடுக்கின்றனர். சினிமாவில் நுழையும்
ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு கனவு இருக்கும். சினிமா என்கிற ஊடகத்தின் மூலம் இதுவரை
மக்கள் காணாத ஒரு ஒன்றைக் காட்டி விட வேண்டும், சொல்லப்படாத ஒரு கதையை சொல்லிவிட வேண்டும்,
சாத்தித்து நிலைத்து நிற்க வேண்டும் என்ற கனவு.
நிஜ வாழக்கையிலிருந்து
தான் சினிமா எடுக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஒவ்வொரு கதைக்குப் பின்னாலும்
ஒரு இன்ஸ்பிரேஷன் இருக்கும் (இப்பொழுது அதிகமாக பிற நாட்டுப் படங்களின் இன்ஸ்பிரேஷன்
தான் இருக்கிறது, அது வேற டாப்பிக்) ஆனால் சினிமாவில் படமாகக் காட்டப்படும் கதைக்கும்
நிஜ வாழ்வில் நடந்த கதைக்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கும். நிஜ வாழ்க்கையில் நம்மைப்
பொய்க்கும் அனைத்தும் சினிமாவில் சாத்தியம். சினிமாவில் சாத்தியமில்லாதது எதுவும் இல்லை.
“எனக்கு
பொண்ணுங்க கிட்ட பேசுரதுனாலே கொஞ்சம் பயம். வெட்கப்படுவேன். சரியாச் சொல்லனும்னா என்
முதல் படம் வெண்ணிலா கபடி குழு ஹீரோ மாதிரி தான் நானும். ஆனா நான் எப்படியெல்லாம் இருக்கனும்னு
மனசுக்குள்ள ஒரு ஆசை வச்சிருந்தேனோ அப்படியெல்லாம் என் இரண்டாவது படமான நான் மகான்
அல்ல ஹீரோ இருப்பார்”.
விஜய்
டிவியில் ஒளிபரப்பான ஒரு நேர்க்காணலில் இயக்குனர் சுசீந்திரன் சொன்னது தான் மேலே நீங்கள்
படித்தது. தனக்குப் பிடித்த பெண்ணிற்கு தன்னையும் பிடிக்கும் என்று தெரிந்தும் எதுவும்
பேசாமல் வெறுமனே பின்னால் மட்டும் செல்லும் கேரக்டர், வெ.க.குழு மாரிமுத்து. சுசீந்திரன்
சொல்லும் அவரது ஒரிஜினல் கேரக்டர். பார்த்த மாத்திரத்தில் ஒரு பெண்ணைப் பிடித்து நேராக அவளிடம் போய் “நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா?” என்று கேட்டு தனக்குப் பிடித்த பெண்ணிற்கு
தன்னையும் பிடிக்க வைக்கும் கேரக்டர் நான் மகான் அல்ல, ஜீவா. சுசீந்திரன் இருக்க விரும்பும்
அவரது ‘ஆல்டர்’ கேரக்டர். சினிமாவின் சக்தியை விளக்க இதை விட சிறந்த உதாரணம் இருக்க
முடியாது என்று நினைக்கிறேன். யதார்த்தம், மிகை யதார்த்தம் இரண்டும் இங்கு சாத்தியம்.
ஒரு இயக்குனர் தன்னை உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அந்த உலகத்தை
உருவாக்கி தனக்குமட்டுமல்லாமல், பிறர்க்கும் காணப் படைக்கிறார். அதானால் தான் அவரது
பெயர் க்ரியேட்டர்!
அதே சமயத்தில்
இதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். பத்து பேரை ஒரே ஆள் புரட்டி புரட்டி பறக்க விட்டு அடிப்பது,
போட்டோவில் மட்டுமே நாம் பிறந்ததிலிருந்து பார்க்கும் அம்மன், தானே சிங்கத்தின் மீதேறி
வந்து தீய சக்திகளை துவம்சம் செய்து “சாந்தி, சாந்தி” என பேக்கிரவுண்ட் சவுண்ட் ஒலிக்க
அமைதியாவது, ரீபோக் ஷூ போட்ட பால்காரன் ஒரே பாட்டில் பணக்காரன் ஆவது, தழுக் மொழுக் ஆசாமி ரெண்டு கத்தி குத்து, ஜஸ்ட் லைக் தட் 10 – 15 கொலை செய்து பெரிய டான் ஆவது,
இவ்வளவு ஏன் உண்மையாக உருகி உருகி காதலிப்பது கூட நிஜத்தில் சாத்தியமே இல்லை. ஆனால்
சினிமாவில் இந்த "பேண்டஸிகள்" அனைத்தும் சாத்தியம்!
போகட்டும்,
இவையெல்லாம் சாதாரணமாக காலம்காலமாக நாம் பார்த்து, கேட்டு வரும் ordinary கதைகள். ஆனால்
திடீரென்று ஏதாவது ஒரு extra-ordinaryயான கதை நமது ஒட்டுமொத்த கவனத்தை ஈர்க்கும். கூட்டம்
கூட்டமாக மக்களை தியேட்டருக்கு இழுக்கும். அப்படிப் பட்ட படங்களை Trend Setter படங்கள்
என்று அழைப்பார்கள் (என்னைப் பொறுத்த வரை ‘Trend Setter’ என்பது கூட சாதாரண வார்த்தை
தான்). உதாரணமாக ஷங்கரின் “முதல்வன்”. ஆயிரம் அரசியல் படங்களைப் பார்த்திருக்கிறோம்.
கெட்ட அரசியவாதியை எதிர்க்கும் சாமாணியன்களின் கதைகள் அயிரம் உண்டு தமிழ் சினிமாவில்.
கெட்ட அரசியல்வாதியிடம் சவால்விட்டு, ஒரே நாளில் நல்ல அரசியல்வாதியாக உருமாறிய ஹீரோக்கள்
/ சமீபத்திய சகுனிகள் வரை இங்கு ஏராளம். ஆனால் “ஒரு நாள் முதல்வர்”?
“ஒரு நாள் நீ என் நாற்காலில உக்காந்து பார்... என் நாற்காலி ஒரு முள்
படுக்க, என் பதவி ஒரு முள் கிரீடம்னு உனக்கு புரியும்”
தன்னைப்
பேட்டி எடுத்துகொண்டிருக்கும் டி.வி காரனிடம் ஒரு மாநிலத்தின் (தமிழக) முதல்வர் வீம்புக்கு
இப்படி சவால் விடுகிறார். அதை ஏற்றுக்கொள்கிறான் அந்த சாதாரண, தினம் தினம் நாம் பார்க்கும்
நம்மில் ஒருவனான அந்த ஹீரோ காதாபாத்திரம். 100% சாத்தியமுள்ள, 100% சாத்தியமில்லாத
கதை. புரியவில்லையா? லாஜிக்படி பார்த்தால் 100% சாத்தியம். ஒரு நாளைக்கு ஒருவரை முதல்வராக
அமர்த்த சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனால் தற்கால சூழலின்படி பார்த்தால் 100% இப்படி
நடக்க சாத்தியமேயில்லை. இங்கு தான் ஷங்கர் ஒரு இயக்குனராக தான் சாதாரணமாக கண்ட ஒரு
கனவை இந்த உலகத்திற்கு அசாதாரமாக காணப் படைக்கிறார். எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும்
தமிழில் முதல்வனுக்கு ஈடானா ஒரு சாத்தியமுள்ள சாத்தியமேயில்லாத கதையுள்ள படங்கள் என்
நினைவிற்கு வரவில்லை. தான் இயக்கும் அனைத்து படங்களையுமே “கனவுப் படம்” என்று தான்
ஒரு இயக்குனர் சொல்வார் (ஏன், நம் சுசீந்திரனே “ராஜபாட்டை”யை அப்படித்தான் சொன்னார்.
இப்போது ராஜபாட்டை எடுத்ததற்கு தமிழ் மக்கள் என்னை மன்னிக்க வேண்டும் என்று பேட்டி
தருகிறார்) ஆனால் உண்மையில் இயக்குனர் ஷங்கரின் கனவுப்படம் “எந்திரன்” என்பது நமக்கெல்லாம்
தெரியும். ஆனால் முதல்வன் உண்டாக்கிய மாற்றத்தை எந்திரன் உண்டாக்கியதா என்பது தான்
கேள்வி. ஷங்கரே இனி முதல்வன் மாதிரியான படம் எடுப்பாரா என்பது சந்தேகமே. முதல்வன்
- That was REALLY a good interview!
ஷங்கரின்
முதல்வனுகடுத்து தான் கண்ட கனவை, 100% சாத்தியமுள்ள, சாத்தியமேயில்லாத ஒரு கதையை பிரம்மாண்டமாக
கொடுத்து அதில் மாபெரும் வெற்றியையும் கண்டிருப்பவர் இயக்குனர் திரு. S S ராஜமௌலி அவர்கள்
மட்டும்தான் என்பது என் கருத்து. தனது முதல் படமான Student No: 1ல் ஆரம்பித்து தனது
ஒன்பதாவது படமான Eega / நான் ஈ வரை அவர் எடுத்துக்கொண்ட களன்கள், கதைகள், காதாபத்திரங்கள்
என அனைத்தும் வேறு வேறு. ஒன்றே ஒன்று மட்டும் தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
அது வெற்றி மட்டும் தான். வெற்றி, வெற்றி, வெற்றி சலித்துப்போகுமளவிற்கு வெற்றி. அது
தான் S S ராஜமௌலி என்னும் ராட்சஷனின் அடையாளம்! இவரது உச்சகட்ட கனவின் வெளிப்பாடு தான்
Eega / நான் ஈ. “அவதார்” படத்தை எடுக்க சரியான டெக்னாலஜி வேண்டும் என்று 12 வருடங்களுக்கு
மேல் காத்திருந்ததாகச் சொன்னார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். இல்லாத ஒரு உலகத்தை உருவாக்க,
கற்பனையான ஒரு கதையை திரைப்படுத்த, தன் கனவை நிறைவேற்ற இவருக்கு 12 ஆண்டுகளுக்கு மேல்
வேண்டியிருந்தது. ஆனால் தினம் தினம் நடக்கும் ஒரு சாதாரண விஷயத்தை திரையில் காட்ட
10 வருடங்களுக்கு மேல் காத்திருந்திருக்கிறார் நம் நாட்டு இயக்குனர்.
சாதாரண
ஒரு ‘ஈ’யால் நம்மை என்ன செய்து விட முடியும்? முக்கியமாக ஏதாவது செய்துகொண்டிருக்கும்
பொழுது காதருகில் வந்து “கொயிங்ங்ங்ங்” என்று ரீங்காரமிட முடியும். அவ்வளவுதான். அனால்
அந்த கொயிங்ங்ங்ங் சத்தமே டார்ச்சராக மாறினால்? கொசுவைப் போல் அவ்வளவு எளிதாக அடித்துக்
கொல்ல முடியாத ஈ ஒரு முழு ஆளைக் கொல்ல நினைத்தால்? இது தான் இயக்குனர் திரு S S ராஜமௌலி
கண்ட கனவு. அளவில் மிக்ச் சிறியதான ஒரு ஈ தன்னால் முடிந்த அளவிலான முயற்சிகளை மட்டும்
வைத்து ஒரு “மனிதனைக்” கொல்ல முடியுமா? ஈகா படத்தைப் பார்த்தால், லாஜிக்படியே முடியும்
என்று தான் சொல்கிறார் இந்த இயக்குனர்! நாமும் படம் பார்த்து முடித்தவுடன் அதை நம்புகிறோம்!
இது தான் இன்று உலகமே கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தின் வெற்றி ரகசியம். ஆனால்
நடைமுறையில் இப்படியொரு சம்பவம் நடக்க சாத்தியமேயில்லை. எனவே முதல்வனுக்குப் பிறகு
நான் பார்த்த வரை சாத்தியமுள்ள, சாத்தியமில்லாத ஒரு கதை “ஈகா”வோ என்று எனக்கு நினைக்கத்
தோன்றுகிறது!
SSR பற்றி
ஈகாவிற்கு முன்னரே தமிழ்நாடு அறிந்திருக்கும். அவரது முந்தைய படங்களான மகதீரா (தமிழ்
டப்பிங் - மாவீரன்), விக்ரமார்குடு (தமிழ் ரீமேக் - சிறுத்தை) மூலம். ஆனால் SSRக்கும்
தமிழகத்திற்கும் அவரது ஆரம்பகாலத்திலிருந்தே தொடர்பு இருந்திருக்கிறது. முதலில் நான்
ரசித்த வரையில் ஈகாவைப் பற்றி மட்டும் தான்
எழுதாலாமென்றிருந்தேன். ஆனால் பலர் “விமர்சனம்” எழுதிவிட்டனர். போதாததற்கு தினகரன்
‘வெள்ளிமலர்’ இதழில் ஈகா வெளியாவதற்கு ஒரு மாதம் முன்னரே SSR பற்றிய கட்டுரை ஒன்றை
படித்தேன். SSRஐப் பற்றி ஓரளவிற்கு விரிவாகவே அலசியிருந்தார்கள். இன்னும் தெரிந்து
கொள்ளலாம் என்று அவரது பேட்டிகள், அவரைப் பற்றிய கட்டுரைகள், காணொளிகள், தெலுங்கு நண்பர்களுடன்
உரையாடல்கள் என்று போன போது பல தகவல்கள் கிடைத்தது. ஈகாவை சமீபத்தில் தியேட்டரில் பார்த்து
அசந்து போய் இவரது முந்தய 8 படங்களையும் பேக்–டு-பேக் மறுபடியும் ஒரு முறை ஒரே மூச்சில்
பார்த்தேன். அத்துடன் நிறுத்திவிடலாமா? நான் படித்த, கேட்ட, பார்த்த தகவல்கள் அனைத்தையும் தொகுத்து இதோ ஆரம்பித்து
விட்டேன். தென்னிந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனரான திரு S S ராஜமௌலியைப்
பற்றிய எனது குறுந்தொடர். இந்த INTRO பதிவு தவிர்த்து முதல் 8 படங்களை அலசி நான்கு பதிவுகள் + ஒரு ஈகா ஸ்பெஷல்
பதிவு என மொத்தம் ஐந்து பதிவுகள். இது தான் Plan! “என் தமிழ் சினிமா இன்று” தொடர் போல் இல்லாமல் ஒரே மூச்சில் நான்கு
பதிவுகளையும் அடுத்தடுத்து கொடுத்துவிட திட்டம். என்னைப் போல் உங்களைப் போல் கனவு காணும்
ஒரு சாதாரண மனிதனின், அசாதாரண செயல்களுக்கு ஒரு ரசிகனாக என்னால் ஆன ஒரு சிறு காணிக்கை இந்தத் தொடர்.
To you S S Rajamouli Sir…
தொடரும்...
12 comments
கலக்குங்க நண்பா. லேட் பண்ணாம சீக்கிரம் விடுங்க.
ReplyDeleteநன்றி நண்பரே... வரிசையிலிருக்கும் பதிவுகளை ஏற்கனவே எழுதி வைத்துவிட்டேன் (கடைசி பதிவு மட்டும் பாக்கி). ஒரு நாள் விட்டு மறுநாள் தொடர்ந்து 'போஸ்ட்' செய்து விடுகிறேன் :-)
Delete// That was REALLY a good interview! //
ReplyDeleteThat was really a very good interview. :) :)
ஷங்கர் அடுத்தமுறையாவது கனவு காண்றேன், கனவு காண்றேன்னு சொல்லி ரெண்டு நாளைக்கு நம்ம கனவுகளை கெடுக்காமல் இருப்பார் என நம்புவோம். :) :)
ஷங்கர் பத்தி எழுதுறதுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. "என் தமிழ் சினிமா இன்று" தொடரின் ஹைலைட்டே ஷங்கர், மணிரத்னம் தான் :-)
ReplyDeleteகலக்கல் நண்பா.., செம தொடர் .. Keep Rocking :)
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!
Deleteதல ,
ReplyDeleteக்ரியேட்டர்காண விளக்கம் ரொம்ப ரொம்ப நல்லா குடுத்து இருக்கேங்க....சுவாரிசியம்மா போகுது தொடர்....
அடுத்து SSR .....கலக்குங்க....ஆனா இந்த தொடரை அப்புறமா கண்டின்னு பண்ணுங்க,,
"என் தமிழ் சினிமா இன்று" தொடர் முடிய பல மாதம் ஆகும் தல... அதனாலதான் சும்மா ஒரு பிரேக் எடுத்து S S R பத்தி எழுத ஆரம்பிச்சிட்டேன். 5 பதிவு. பிறகு மீண்டும் தமிழ் சினிமா இயக்குனர்களை ஒரு பிடி பிடிக்கலாம் :-)
Deleteஇயக்குனர்கள் பத்தி நீங்க எழுதினாலே அது வாசிக்க 'கிக்'காத்தான் இருக்கும்.. அடுத்து பதிவை உடனே போடுங்க!
ReplyDeleteதினம் தினம் இவங்க எடுக்குற படங்களத்தான கண்கொட்டாம, நேரம் போகாம பாத்துக்கிட்டு இருக்கேன். அப்புறம் இது கூட செய்யலனா எப்படி :-)
Deleteராஜமவுலியின் படம், நான் ஈ மட்டும்தான் பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteஎம்ஜியார்,ரஜினி படங்களுக்கு தியேட்டரில் கிடைக்கும் கைதட்டல்கள்,இந்த படத்துக்கும் கிடைத்தது.
எனக்கும் படம் பிடித்தது.
நல்ல கமர்சியல் படம்.
மற்ற படங்களையும் நிச்சயம் பாருங்கள் நண்பரே... ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அற்புதமாக இருக்கும். எனது இந்தத் தொடரில் அவரது படங்களைப் பற்றியும் விரிவாக அலசுகிறேன்...
ReplyDeleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...