என் தமிழ் சினிமா இன்று - 04

10:50:00 AM


ஒரு கமர்ஷியல் படம் என்றால் அதில் ஹீரோவிற்கு ஒரு “கெத்” இருக்க வேண்டும், ஓப்பனிங் சாங் இருக்க வேண்டும், 100 பேர் வந்தாலும் பந்தாடுகிற தைரியம், IITயில் படித்த பெத்தமூளைக்காரன் வந்தாலும் சமாளிக்கிற திறமை இருக்க வேண்டும். செமையான ஒரு பேக்கிரவுண்ட், சரிக்கு சமமான வில்லன், துரத்தி துரத்தி காதலிக்கும் ஹீரோயின்(கள்) வேண்டும், கவர்ச்சி, குத்து பாட்டு, வெட்டு குத்து என்று சகலமும் வேண்டும், பனை மரங்கள், குடிசை வீடுகள், சுமோ கார்கள் என சகலமும் அடியில் பாம் வைக்கப்பட்டு தூக்கி எறியப்பட வேண்டும். முக்கியமாக “லாஜிக்” என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க வேண்டும். மொத்தத்தில் படம் ஆரம்பிப்பதும் தெரியக்கூடாது, முடிவதும் தெரியக்கூடாது. அசுர வேகத்தில் இருக்க வேண்டும். இப்படி அனைத்து பேக்டர்களையும் ஒரு கலவையாக ஒரு இயக்குனரால் கொடுக்க முடிந்தால் அவர் தான் தமிழகத்தின் அசைக்க முடியாத மினிமம் கேரண்டி, கமர்ஷியல் கிங். நான் மேல் சொன்ன விஷயங்களிலேயே தெரிந்திருக்கும் நான் யாரைப் பற்றிப் பேசுகிறேன் என்று. இயக்குனர் ஹரி!

தூத்துக்குடிக்காரரான இவர் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பும் இங்கு “அரிவாள் கலாச்சாரம்” இருந்தது. ஆனால் இவரது படங்களுக்குப் பிறகு தான் “அரிவாள் தூக்காதவன் ஆக்ஷன் ஹீரோவே இல்லை” என்ற நிலை ஏற்பட்டது. இவர் என்று படத்தை தொடங்குகிறார், என்று முடிக்கிறார் என்றே தெரியாது. பெரிய நடிகர்கள் தங்களது அடுத்த பெரிய படத்திற்கு கொஞ்சம் தாடி வளர்க்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு ஒரு மாதமாகும் என்றால் அவர்களுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ், ஹரி! ஒரே மாதத்தில் ஒரு மாஸ் என்டர்டெய்னர் படம் ரெடி. ஆறு மாதம் ஷூட்டிங் பிளான் செய்து, ஐந்தாவது மாத இறுதியில் தயாரிப்பாளார் கையில் ஃபர்ஸ்ட் காப்பி கொடுப்பவர் ஹரி என்று கேள்வி!

சிகரம் பாலச்சந்தரிடம் கல்கி படத்தில் உதவி இயக்குனராய் இருந்து விட்டு சரணிடம் சினிமா கற்றுக்கொண்ட இயக்குனர் ஹரியின் முதல் படம் “தமிழ் (2002)”. பிரசாந்த் – சிம்ரன் ஜோடி.. கிட்டத்தட்ட காணாமல் போயிருந்த பிரசாந்திற்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கிய இந்தப் படம் ஹரிக்கு ஒரு நல்ல விசிட்டிங் கார்டாக அமைந்தது. நல்ல வில்லனுக்கும், கெட்ட வில்லனுக்கும் நடக்கும் சண்டையில் மாடிக்கொள்ளும் நல்ல நல்லவனின் கதை. சதா திருக்குறள் சொல்லிக்கொண்டிருக்கும் நல்ல வில்லன் நாசர் (நாசரின் “அவதாரம்” படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் ஹரி), கெட்ட வில்லன் ஆசிஸ் வித்யார்த்தி.

அடுத்த படம் விக்ரமை வைத்து தனது குரு பாலச்சந்தருக்காக எடுத்த “சாமி (2003)”. 5 கோடி போட்டு, 20 கோடி தந்த மாபெரும் வெற்றிப்படம். போலீஸ் வேடமேற்று இதுவரை எத்தனையோ ஹீரோக்கள் நடித்துள்ளார்கள். ஆனால் விக்ரமை ஹரி இந்தப் படத்தில் காட்டியது போல் எந்தவொரு ஹீரோவையும் யாரும் காட்டியதில்லை. போலீஸ் டெபுடி கமிஷனரையே பொறுக்கியாக அரிவாள் தூக்க வைத்த திருநெல்வேலி படமிது. பல படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் பேர் வாங்காமலிருந்த திரிஷாவிற்கு “மாமி” புகழ் கிடைத்ததும் இந்தப் படத்தில் தான்.

விரல் வித்தைக்காரன் என்று பெயரெடுத்து சுற்றிக்கொண்டிருந்த சிம்புவிற்கு நடிப்பில் சொல்லிக் கொள்ளும்படியான ஒரு படமென்றால் அது கோவில் (2003) தான். சகலத்தையும் மூடிக்கொண்டு, அடக்க ஒடுக்கமாக நடித்திருப்பார் சிம்பு. அதே போல் செல்வராகவன் படங்களில் அழுமூஞ்சியாகவே நடித்துக்கொண்டிருந்த சோனியா அகர்வாலை நிஜமாகவே ஏஞ்சலாக காட்டியதும் இந்தப் படம் தான். நாசர், ராஜ்கிரண் என்று அபாரமான நடிகர்கள் இருந்தும் இந்த நாகர்கோவில் பேமிலி,காதல் கதை பாக்ஸ் ஆபீஸில் எடுபடவில்லை.

கோவில் சரியாகப் போகாததால் பேமிலி கலந்த ஆக்ஷன் படம் வேண்டும் என்று அவசர அவசரமாக ஹரி எடுத்த படம் அருள் (2004). இம்முறை கதைக்களன் கோயம்பத்தூர், விக்ரம் – ஜோதிகா நடித்திருந்த இந்தப் படத்தை எப்போது பார்த்தாலும், ஏதோ ஒன்னு குறையுதே என்பது போலவே இருக்கும். மோசமான இரண்டாம் பாதி, அருமையான முதல் பாதியை மறக்கடித்து சோதிக்கும். இந்தப் படம் ஒரு ஆவரேஜ் ஹிட். அதுவும் ஹரி-விக்ரம்-ஜோதிகாவிற்கு இருந்த ஓபனிங்கிற்காகத்தான்.

மீண்டும் கவிதாலையாவிற்காக எடுத்த படம் “ஐயா (2005)”. நட்புக்காக (1998) படத்திற்கு பிறகு சரத்குமாரின் கேரியரில் சொல்லிக்கொள்ளும்படியான முக்கிய படமென்றால் அது ஐயா தான். சந்திரமுகி வாய்ப்பை நயன்தாராவிற்கு வாங்கித் தந்த அவரது முதல் படம். சரத்-நயனிற்கு இருக்கும் வயது வித்தியாசம்கூட அருமையாக கையாளப்பட்டிருக்கும் இந்தத் திரைக்கதையில். துடிப்பான இளைஞனாக ஒரு சரத், நெக்ஸ்ட் காந்தி இல்லை காமராஜர் போன்ற மற்றொரு சரத். இரண்டு வேடங்களையும் தேவைக்கேற்ற அளவில் அற்புதமாக செய்திருப்பார் சரத். மிகப்பெரிய வெற்றிப்படம்.

அடுத்த படம் ஹரியின் ஆறாவது படமான ஆறு (2005). புதிய பாதையில் பார்த்திபனில் ஆரம்பித்து அமர்களம் / தீனாவில் அஜித், நெஞ்சினிலே படத்தில் விஜய், அப்புவின் பிரசாந்த் என்று பாபாவில் தலைவர் வரை ஏற்று நடித்து தமிழக மக்களுக்கு சலித்துப் போயிருந்த கெட்ட வில்லனிடம் வேலை செய்யும் நல்ல ரவுடி ஹீரோ கதையான இது சுத்தமாக பாக்ஸ் ஆபீஸில் எடுபடவில்லை (இன்றும் இதே மாதிரியான படங்கள் வருவது தான் எரிச்சல். நகரம் சுந்தர்.C, தீனா விக்ரம், இன்னும் பல படங்கள். ஆனால் இப்படி வரும் படங்கள் அனைத்தும் ஊற்றிக்கொள்வது ஆறுதல்). இத்தனைக்கும் சூர்யாவிற்கு இது கஜினிக்கு அடுத்த படம். தஞ்சாவூர் சாந்தி தியேட்டரில் முதல் நாள் ஷோவிற்கு கூடியிருந்த கூட்டம் இன்று என் கண் முன்னால் தெரிகிறது. ஆனாலும் படம் அட்டர் பிளாப்!

சென்னை பேஸ்டு கதை வேலைக்காகாததால், மீண்டும் ஊர்ப்பக்கம் வந்தார் ஹரி. இந்த முறை தன் சொந்த ஊரான தூத்துக்குடியை களனாக தேர்ந்தெடுத்தார். நெல்லையை மட்டுமே வைத்து பல அரிவாள் படங்கள் வந்து கொண்டிருந்த காலகடட்த்தில் இந்தத் தூத்துக்குடி அரிவாளுக்கு நல்ல வரவேற்பு. படம் தாமிரபரணி (2007). அப்படி இப்படி என்று கதை அலையடித்தாலும் சரியான விகிதத்தில் குடும்பம் + ஆக்ஷனைக் கலந்திருந்ததால் இந்த படம் வெற்றி பெற்றது.

ஆறு மண்ணைக் கவ்வினாலும் மீண்டும் ஹரி – சூர்யா(கள்) இணைந்தார்கள். படம் வேல் (2007). சின்ன வயதில் பிரிந்து போன அண்ணன் தம்பி கதை. திண்டுக்கல் பெரிய குடும்பத்து பையன் வேலு, பட்டணத்து டிடெக்டிவ் வாசு. புத்திசாலி வில்லனான கலாபவன் மணி. ஆள்மாறாட்டம், அம்மா சென்டிமென்ட், பாட்டி சென்டிமென்ட், காதல் என்று கலந்து கட்டிய இந்தப் படம் 150 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

அருமையாக ஒரு படத்தைக் கொடுத்துவிட்டு, மொக்கையாக அடுத்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்பது ஹரி பாலிசி. கோவிலிற்குப் பிறகு அருள், பிறகு ஐயாவிற்கு அடுத்து ஆறு, பின் வேலுவிற்கு அடுத்து சேவல் (2008). யப்பா ஒலக ஒர்ஸ்ட் படம் என்றால் அது சேவல் தான். பெரிய சேவல் மேல் பரத் உட்கார்ந்திருப்பதைப் போன்ற படத்தின் ஸ்டில்களைப் பார்த்த உடனேயே எனக்குத் தோன்றியது படம் நிச்சயம் ஓடாது என்று. சொல்லிவைத்தாற் போல் படம் படு மோசம். ஹரியின் கேரியரிலேயே ஒரு மட்டமான படம் என்றால் அது சேவல் தான். ஹீரோயினை மொட்டை அடித்து மூலையில் உட்காரவைத்து நம்மையும் ஒரு வழி பண்ணியிருப்பார் ஹரி. இத்தனைக்கு இந்தப் படத்தில் சிம்ரன் ரீ-என்ட்ரி வேறு. பரத்துடன் டூயட்டெல்லாம் உண்டு.

சேவல் செய்த வினையால் இரண்டு வருடங்கள் காணாமாலேயே போனார் ஹரி. மீண்டும் அவரது கர்ஜனை பெரிதாகக் கேட்டது சிங்கம் (2010) படத்தின் மூலம். மூன்றாவது முறையாக சூர்யாவுடன். “காக்க காக்க” என்ற அல்டிமேட் காப் ஸ்டோரியில் ஏ.சி.யாக நடித்திருந்த சூர்யாவை அந்த சாயலே தெரியாமல் ஊர்ப்பக்கம் நாம் பார்க்கும் இளம் எஸ்.ஐ ஆக காட்டியிருப்பார் ஹரி. அரிவாளை எடுக்காமல் ஹீரோ அரிவாள் மீசை வைத்திருந்த இந்தப் படம் ஏ, பி, சி என்று 85 கோடியை ஓடி ஓடி வேட்டையாடிக் கொடுத்தது. கன்னடத்தில் KempeGowda, பெங்காலியில் Shotru, ஹிந்தியில் Singham என்று ரீமேக்கான மூன்று மொழிகளிலும் மாபெரும் வெற்றி என்று 2010 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் சிங்கம்!

சிங்கம் கொடுத்த வெற்றியால் மறுபடியும் ‘பழைய குருடி கதவைத் திரடி’ என்று அடுத்ததாக ஒரு மொக்கையை உடனுக்குடன் அறிவித்து ஆறே மாதங்களில் எடுத்துக் கொடுத்தார் ஹரி. படம் வேங்கை (2011). இதுவரை பார்த்த அத்தனைப் ஹரி படங்களிலிருந்து உருவி எடுக்கப்பட்ட படமாகவே இந்தப் படம் இருந்தது. இதில் ஹரி – தனுஷ் இடையே சண்டை வேறு. இந்த மாதிரி ஒரு ஹீரோவுடன் யாராலும் வேலை பார்க்க முடியாது, இந்த மாதிரி ஒரு டைரக்டருடன் வேலை பார்க்க முடியாது என்று பறந்தது வசனங்கள். வேங்கை பூனையாகிப் போக இப்போது மீண்டும் சிங்கத்தையே கையில் எடுத்துள்ளார் ஹரி. சிங்கம் 2 வேலைகள் நடந்து வருகிறது.

கீழ்கண்ட விதிகள் ஹரியின் டிரேட் மார்க். ஆனால் இதையே திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டிருந்தால், நிச்சயம் அலுத்து விடும்.

  1. ஊரே மதிக்கும் ஒரு அப்பா, அவருக்கு மட்டுமே அடங்கும் / பயப்படும் பையன் (சாமி, கோவில், ஐயா, தாமிரபரணி (இதில் அப்பாவிற்கு பதில் மாமா), வேல் (இதில் அப்பாவிற்கு பதில் சித்தப்பா, பெரியப்பா), சிங்கம், வேங்கை)
  2. நல்லதோ கெட்டதோ எது செய்தாலும் ஊரே ஹீரோவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவது. ஒரே ஒரு வில்லனைத் தவிர (சாமி, அருள் (இதில் வில்லன் விக்ரம் அப்பா வினு), ஐயா, ஆறு, வேல், சிங்கம், வேங்கை)
  3. பொண்டு பொடிசுகளில் ஆரம்பித்து, தாத்தா, பாட்டி, வந்தவன், போனவன் என்று சராமாரியாக அரிவாள் தூக்கும் கேரக்டர்கள் (கிட்டத்தட்ட அத்தனை படங்களிலும்)
  4. அரிவாளை எப்படி பிடிக்க வேண்டும் (வேல்), எப்படி வெட்ட வேண்டும் (ஐயா), எப்படியெல்லாம் டிசைன் டிசைனாக அரிவாளை யூஸ் செய்யலாம் (ஆறு, வேல், வேங்கை) போன்ற விளக்கங்கள்
  5. மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துக்கொண்டு 8 மணிக்கு பிளைட் பிடிச்சா, 8:30க்கு தூத்துக்குடி வந்துரலாம் (தாமிரபரணி, சிங்கம்), 9 மணிக்கு அவன் இந்த ரோட்டை புடிச்சா, 9:30க்கு இப்படி தான் கிராஸ் ஆவான். அதனால நாம் 9:15க்கெல்லாம் இங்க போய்ரலாம் (ஆறு, ஐயா, அருள், வேங்கை)… அப்படி இப்படி என்று கணக்கு சொல்லிக்கொண்டிருக்கும் படியான காட்சிகள்
  6. ஜாக்கெட் டைப் டாப்ஸ் - குட்டைப் பாவாடையில் இடுப்பு தெரிய ஒரு குத்துப் பாடல் (இதுவும் கிட்டத்தட்ட அத்தனை படங்களிலும்)
  7. ஹீரோயின் தாவணியில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்க ஹீரோ நடந்தபடியே பாடும் ஒரு பாடல் (சாமி, ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், வேங்கை)
  8. பாம் வைப்பது, வயலைக் கொளுத்துவது, கூடயிருப்பவர்களை கொல்வது போன்ற செயல்களையே இதுவரை யாரும் செய்யாத விதத்தில் விதவிதமாக பிளான் செய்து ஹீரோவையோ அவரது பெரிய குடும்பத்தையோ கவிழ்க்க நினைக்கும் வில்லன் (இதுவும் கிட்டத்தட்ட அத்தனை படங்களிலும்)
  9. கொஞ்சம் கூட கதைக்கு பொருந்தாத, சம்பந்தமில்லாத மொக்கை காமெடியன்கள், காமெடி காட்சிகள் (சாமி, அருள், ஆறு, தாமிரபரணி, வேலு, சேவல், சிங்கம், வேங்கை). காமெடி காட்சி எடுக்க ஹரிக்கு சுத்தமாகத் தெரியவில்லை. அதிலும் சிங்கம், வேங்கை பட காமெடிகளை பார்த்தால் வெறுப்பு தான் வருகிறது. சிரிப்பு வருவதே இல்லை.
  10. பாடல்கள் – சுத்தமாக ஹரியால் முடியாத ஒரு ஏரியா என்றால் அது பாடல்கள் தான். பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ், தேவி ஸ்ரீ பிரசாத், யுவன் சங்கர் ராஜா என்று பல முன்னனி இசையமைப்பாளர்களிடம் வேலை செய்திருந்தாலும், அவர்களிடமிருந்து “பெஸ்ட் டியூன்” என்று ஒரு இயக்குனராக இதுவரை ஹரி தன் படங்களுக்கு வாங்கவில்லை. அப்படியே ஒன்றிரண்டு நல்ல பாடல்கள் கிடைத்தாலும், அவற்றைக் காட்சியப்படுத்தும் போது சொதப்பிவிடுவார் (மிகச் சிறந்த உதாரணம்: வேல் படத்து ‘ஒற்றைக்கண்ணால’ பாடல். நல்ல ஒரு கிராமத்து டியூனிற்கு, பாரின் லொக்கேஷன் போயிருப்பார்) நான் தம் அடிக்க மாட்டேன். ஆனால் என்னையே ஹரி படங்களின் பாடல்கள் வெளியே போக வைத்து விடும். (எ.கா: "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு" பாடல் ஹிட்டானது அதன் வரிகளுக்கு மட்டும் தான். மற்றபடி ஹரி அந்தப் பாடலை படமாக்கியிருக்கும் விதத்தை கண்கொண்டு பார்க்க முடியாது)


இவையில்லாமல் ஒரு பெர்சனல் ரெக்வெஸ்ட் – படம் அறிவித்தவுடன், கருப்பு/வெள்ளை போக்ரவுண்டில் ஸ்டில்ஸ் ((படத்தில் வராத) எடுத்து ரிலீஸ் செய்வதை ஹரி தவிர்க்க வேண்டும். ஹீரோ அரிவாளை ஓங்கிக்கொண்டு நிற்கும் ஸ்டில், ஹீரோயின் குத்துவிளக்கை ஏந்திக்கொண்டு நிற்கும் ஸ்டில்… போரடுக்குது ஹரி! அதுபோலவே படத்தின் போஸ்டர் டிஸைன் - 1980களில் போடப்பட்ட டிசைங்களேயே தான் இன்னும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். கொஞ்சம் டிரெண்டியா, போட்டோஷாப் அதுஇதுனு எதையாவது பயன்படுத்துங்க பாஸ்!

இவை மட்டுமல்லாமல் இன்னும் பல க்ளிஷே முத்திரைகள் ஹரி மேல் உண்டு. “அரிவாள் இல்லாத வீடு எங்க இருக்கு”, கத்தி வைச்சிருக்காத சாமி எங்க இருக்கு” என்று ஹரி இனிமேலும் சொல்லிக்கொண்டு திரிந்தால் வேலைக்கு ஆகாது. டெம்ப்ளேட் காட்சிகளைத் தவிர்த்து புதிதான தீம்களில் ஹரி படங்கள் இயக்க வேண்டும். மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான ஃப்ளேவரில் படம் எடுத்துக்கொண்டிருந்தால் சீக்கிரமே போர் அடித்துவிடும். அவசராவசரமாக படம் எடுத்துத் தள்ளாமல், நிதானமாக அமர்ந்து, வசனங்களை மட்டுமே நம்பாமல் திரைக்கதையை மெருகேற்றி அற்புதமான படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதே எனது, பலரது விருப்பம்.


You Might Also Like

24 comments

  1. ஹரியின் திரை வரலாற்றை, போஸ்ட்மார்ட்டம் பண்ணியிருக்கிறீர்கள்.
    ஹரி இதை படிப்பது...ஹரிக்கு நல்லது.

    ReplyDelete
  2. ஹரியைப் பற்றி ஒரு பெரிய ரிசர்ச்சே பண்ணியிருக்கீங்களே? ஏதே ஒரு சயின்ஸ் ரிப்போர்ட் படிச்ச மாதிரி ஃபீலிங். (விளக்கம், உதாரணம், கடைசியில் சமரி) :) :)

    //ஹரி இதை படிப்பது...ஹரிக்கு நல்லது.//

    அதே அதே ...

    ReplyDelete
    Replies
    1. ஹீ ஹீ ஹீ... வரிசையா இன்னும் நிறைய ரிப்போர்ட்ஸ் வந்துகிட்டே இருக்கு :-)

      Delete
  3. இந்தப் பதிவை ரொம்ப அற்புதமா செதுக்கி இருக்கீங்க, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஹரியை பற்றி ஹரிக்கே இவ்வளவு தெரியும்மா என தெரியலை...ஒரு பத்து பாயிண்ட் போட்டீங்களே செம்ம..புத்திசாலித்தனம்யாய் செயல் படுவதாய் அதை நினைத்தால் செம்ம சிரிப்பு தான் வருது...ஒவ்வொரு கட்டுரைக்கும் ரொம்ப கஷ்டபடுவீங்க போல...தமிழ் சினிமாவில் இதை போன்ற முறையை இன்னும் சிலர் கடைபிடித்து கொண்டு தான் உள்ளார்கள்...அடுத்ததாய் பில்லா விமர்சனம் எழுதுவதாய் போட்டு உள்ளீங்க தயவுசெய்து ரொம்ப கிழித்து தொங்கவிட்டு விட வேண்டாம் அதை தாங்கிகொள்ள முடியாது...

    ReplyDelete
    Replies
    1. தல... நான் பில்லா விமர்சனம் எழுதப்போவதில்லை. இனிமேலும் கிழித்து காயப்போட எதுவும் மிச்சமில்லை. ஒன்றே ஒன்று மட்டும் தான், தலைக்கும் சரி அவரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களுக்கும் சரி ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். தமிழ் சினிமாவில் தலைவர் படங்களுக்குப் பிறகு மாஸ் ஓப்பனிங் இருப்பது உங்கள் படத்துக்குத்தான். தயவு செய்து அதை வீணடிக்காதீர்கள். காவியத்தைக் கொடுக்கச் சொல்லவில்லை, கண்கொண்டு பார்க்கும்படியாகவாவது இருக்க வேண்டாமா? என்னத்த சொல்ல, வயிறு எரியுது!

      Delete
  5. ஒவ்வொரு இயக்குனர்களையும் அக்குவேறு ஆணி வேறா பிரிச்சு விளாசுறீங்க.. இந்த தொடர் எனக்கு ரொம்...ப புடிச்சிருக்கு!!
    அடுத்து யாரு?.. ஷங்கரா??

    ReplyDelete
    Replies
    1. மொத்தமாக 50 இயக்குனர்களைப் பற்றி எழுத வேண்டும் என்றிருக்கிறேன். அதில் ஷங்கர் இல்லாமலா?

      Delete
  6. அய்யயோ சார், அந்த பத்து பாயிண்ட் படிக்கும் போது செம சிரிப்பு.அதுவும் டைம் கணக்கு சொல்லும் விஷயம் ஹரியின் படங்களில் அதிகம்.அத படிச்சு சிரிப்ப அடக்க முடியல.நீங்கள் அதற்காக தேர்ந்தெடுத்த புகைப்படங்கள் அருமை.தமிழ் படமே எனக்கு ரொம்ப பிடித்தது.அந்த படத்திற்கு இவர் நண்பர் இயக்குனர் சரண் தான் வசன உதவி.நாசர் திருக்குறள் சொல்வது அவர் ஐடியா என்று ஹரி சொல்லி கேட்டேன்.அருள் அவசரத்தில் எடுத்தது நன்றாகவே படத்தில் தெரியும்.அய்யா மிக பெரிய ஹிட் படமா? அப்படி தெரியவில்லை.விரும்புகிறேன் படத்தில் விஜயா? நிச்சயம் ஹரி பற்றி இந்த அளவு யாரும் எழுதி இருக்க மாட்டார்கள்.பதிவு சூப்பர்.தொடரட்டும்.நான் கூட அடிக்கடி பதிவு போட வேண்டும் என்று அவசரத்தில் நிறைவாக தர முடியாமல் போய் விடுகிறது.திருத்தி கொள்ள வேண்டும். போலிருக்கு

    ReplyDelete
    Replies
    1. // அய்யா மிக பெரிய ஹிட் படமா? // - ஐயா படம் வசூல் ரீதியாக ஒரு ஹிட் படமே. எனக்கும் பிடித்தப் படமே :-)
      // விரும்புகிறேன் படத்தில் விஜயா? // - ஸாரி பாஸ், அது விரும்புகிறேன் இல்ல, நெஞ்சினிலே! பதிவிலும் மாற்றிவிட்டேன்.

      // நான் கூட அடிக்கடி பதிவு போட வேண்டும் என்று அவசரத்தில் நிறைவாக தர முடியாமல் போய் விடுகிறது.திருத்தி கொள்ள வேண்டும். போலிருக்கு //
      இதைவிட ஒரு அங்கீகாரம் எனக்கு கிடைக்காது. மிக்க நன்றி நண்பரே!

      Delete
  7. தல,
    மறுபடியும் தலை வணங்குகிறேன் உங்கள் உழைப்புக்கு....ரொம்ப ரொம்ப நல்லா அலசி இருக்கேங்க..
    மிகவும் நல்லதொரு போஸ்ட்மார்ட்டம்.... ஹரி ட்விட்டர் ஐடி இருந்தால் இதை அவருக்கு தட்டி விடுங்கள்....

    ReplyDelete
  8. தல,
    நீங்க தமிழ்மணத்தில் இணைத்தே ஆக வேண்டும்...உங்கள் பதிவை இணைக்க முயற்சி செய்தேன்..
    "உங்களின் இந்தப் பதிவு ஏற்கனவே தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு உள்ளது" என்று வருகிறது..
    உங்கள் feedburner பிரச்சனை என்று நினைக்கிறன்..
    Try this out:
    http://www.bloggernanban.com/2010/12/blog-post.html
    http://tvs50.blogspot.in/2009/06/feedburner-rss-feeds-vs-tamilmanam.html
    இது வேலை செய்ய வில்லை என்றால்
    admin@thamizmanam.com என்ற ஐடிக்கு ஒரு மெயில் தட்டுங்கள்... கண்டிப்பாய் சரி செய்வார்கள்..

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் feedburnerரில் தான் பிரச்சனை. நான் முயற்சி செய்தேன். எதுவும் முடியவில்லை. தமிழ்மண adminற்கு எழுதியுள்ளேன்.

      உதவிக்கு நன்றி :-)

      Delete
  9. ஹரி படங்களில் இருக்கும் மற்றொரு ஒற்றுமை, தன்னுடைய எல்லாப் படங்களிலும்,ஏதாவது ஒரு பாடலை மூணாறில் படமாக்கியிருப்பார்!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கும் போலருக்கு :-)

      Delete
  10. அப்புறம் நெறைய ஹரி படத்துல "ஒரு வார்த்தை" சம்பந்தமா பாட்டுக்கள் இருக்கும்..

    "ஒரு வார்த்தை பேச" - ஐயா
    "வார்த்தை ஒண்ணு" - தாமிரபரணி
    "ஓரே ஒரு வார்த்தைக்காக" - வேங்கை
    "ஒரு வார்த்தை மொழியாலே" - சிங்கம்

    ReplyDelete
  11. @Nanbanae, Hari a pathi avarae intha alavuku alasi iruka mataru polavae. Migavam arumaai ga irunthathu.

    -Velu

    ReplyDelete
    Replies
    1. thanks da வேலுகள்!!! ஒருத்தரையும் விடுறதா இல்ல... எல்லாரையும் அலசி ஆராஞ்சிடுவோம்.. உன் உதவி தேவை :-)

      Delete
  12. கோவில் சாமிய விட ரொம்ப பெரிய வெற்றி படம் (ப்ளொக்பஸ்டர்) இல்லாட்டியும், கோவில் படமும் வெற்றி படம் தான் (ஹிட்). அதுலயும் சிலம்பரசன், ஹரியோட வெற்றி படங்கள்ள அதுவும் 1. ஆறு படத்துல வன்முறை அதிகமா இருந்ததுனால பெமிலி ஓடியன்ஸ் கம்மியா தான் படத்த பார்த்தாங்க. ஆனாலும் கஜினிய விட பெரிய அளவுல இல்லாட்டியும் ஆறு படமும் வெற்றி படம் தான்.

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...