ஆனந்த்... ஐ லவ் யூ! - சிறுகதை
11:23:00 AMஎன் பெயர் காவ்யா - ஆம் அப்படித் தான் என்னை அழைப்பார்.
எனக்குத் தெரிந்த வரை யாரென்றே தெரியாத ஒரு பெண்ணிடம் வந்து, “நீ ரொம்ப அழகா இருக்க, உன்ன பாத்தவுடனே எனக்கு பிடிச்சுப்போச்சு. என் அம்மாவுக்கும் உன்ன ரொம்பப் பிடிக்கும். இந்த நிமிஷத்துல இருந்து என் வாழ்க்கைல அடுத்து வரப் போற சந்தோஷமான நிமிஷங்கள் அத்தனையையுமே உன்னோடு சேர்ந்து அனுபவிக்க ஆசைப்படுறேன். யோசிச்சு உன் பதில சொல்லு. அண்ட்... ஐ லவ் யூ (சின்னதாய் சிரித்து விட்டு) ஓக்கே, (கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த எனது ஐ.டி கார்ட்டை பார்த்து) கா...வ்யா, ஸீ யு சம் டைம் லேட்டர்” என்று யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள். நான் யார் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வாய்பில்லை. ஏனென்றால் அன்று தான் அந்த கம்பெனியில் எனக்கு முதல் நாள். அவர் பெயரும் அப்போது எனக்குத் தெரியாது. என்ன நடக்கிறது என்று நான் குழம்பிப் போய் நின்றிருக்க, அதைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் இத்தனையையும் பேசிவிட்டு பின் ஏதோ நினைத்து திரும்பி வந்து எனது கைகளை வாங்கி, மெதுவாகக் குழுக்கி, அழகாகச் சிரித்து அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். “பை த வே, ஐ ஆம் ஆனந்த்!”
“யார்? ஆனந்தா?” நான் சொன்னபோது யாரும் நம்பியதாகத் தெரியவில்லை. “லுக் காவியா, நீ சொன்னது மட்டும் உண்மையாக இருந்தால் இந்த உலகத்திலேயே லக்கி கேர்ள் நீ தான்”. அவர்கள் பங்கிற்கு குழப்பி விட்டுப்போனார்கள். அப்போது எனக்கு வயது 22. கல்லூரி முடித்து, படித்துக்கொண்டிருக்கும் போதே கிடைத்த வேலையால் முதல் முறையாக என் வீட்டை, பெற்றோரை விட்டு விலகி, பெங்களூர் வந்திரங்கியிருக்கிறேன். என்னை இவ்வளவு தூரம் அவர்கள் அனுப்பியதே பெரிய விஷயம். இதில் இந்த "ஆனந்த்" சமாச்சாரம் வேறு. யார் இந்த ஆனந்த்?
சிறிது நாட்களிலேயே இந்தக் கேள்விக்கு விடை கிடைத்தது. ஆனந்த் அந்த டீமின் மிஸ்டர் பெர்ஃபெக்ட்! அனைவருக்கும் அவரைப் பிடித்திருந்தது குறிப்பாக பெண்களுக்கு. அதனால் என்னைப் பலருக்கு பிடிக்கவில்லை என்பதும் தெரிந்தது. சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பில் எந்தக் கவலையுமின்றி, வருத்தம் என்பதே என்னவென்று தெரியாமல் பிறந்ததே சந்தோஷமாக இருக்கத்தான் என்று தான் மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஆனந்த், எந்த ஒரு பெண்ணும் எளிதாக விரும்பக்கூடிய பெர்ஃபெக்ட் பேச்சுலர். முதன் முதலில் அவர் “ஐ லவ் யூ” சொன்னது என்னிடம்தானாம். இந்தத் தகவல் அவசியம் நான் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று தானா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் யாராகயிருந்தாலும் சரி முன் பின் தெரியாத ஒருவர் மீது அடுத்தவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக காதலில் விழும் மக்குப் பெண் நானில்லை என்பது மட்டும் எனக்குத் தெரியும். இருந்தாலும் “நீதான் முதல் ஆள்” என்று சொல்லப்பட்டபோது என் உதடுகள் என் அனுமதியில்லாமல் மெல்லிய புன்முறுவலை வெளிப்படுத்தியதை நான் மறுக்கவில்லை.
எப்பொழுதும் அழகாக, சிரித்துக் கொண்டே கைகளை அங்கும் இங்கும் ஆட்டி ஆட்டி அவர் பேசுவதை நான் திரும்பிப் பார்த்து கவனித்துக் கொண்டேயிருக்கிறேன் என்பது அவரது கண்களை அடிக்கடி எனது கண்கள் சந்திப்பதிலிருந்து தெரிந்தது. 'இனி திரும்பிப் பார்க்கக் கூடாது' என்று முடிவு செய்து திரும்பிப் பார்த்த போது ஆனந்த் அங்கு இல்லை.
“ஹலோ காவ்யா, யோசிச்சாச்சா, என் கேள்விக்கு பதில்?” - திடீரென்று என் அருகில் அவர் குரல் கேட்ட போது ‘பக்’ என்றானது.
“இல்ல...” அவசரமாக பதில் சொல்லிவிட்டேன் என்றாலும் அதுவரை நான் ஆனந்த் பற்றித் தெரிந்து கொண்டதிலிருந்து “இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டும்” என்று கூட சொல்லியிருக்கலாம். ஆனால் திடீரென்று அவர் என்னருகில் வந்ததால் ஏற்பட்ட பயம் என்னை “இல்லை” என்று சொல்ல வைத்தது. என்னை பயமுடுத்தியதற்காக பழிக்கு பழி வாங்கியதாக நினைத்துக்கொண்டேன். ஆனால் நான் சொன்ன பதில் தவறு என்பது அன்றே எனக்கு யாரோ ஒரு பெண்ணிடம் அவர் சிரித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது தெரிந்தது. எனக்கு அவர் மேல் எந்த ஒரு காதல் உணர்வும் இல்லை என்பதை மூளை அடிக்கடி ஞாபகப்படுத்தினாலும், "பின் எதனால் உனக்கு கோபம் வருகிறது?" என்று உள்ளம் கேட்ட போது பதில் தெரியவில்லை. நன்றாக யோசித்துப் பார்த்து மூளையே அதற்கு பதில் சொன்னது. அதற்குப் பெயர் தான் “பொறாமை” யாம்!
அடுத்த வந்த நாட்கள் அனைத்தும் எனது வாழ்வின் மிக மிக சந்தோஷமான, இப்போது நினைத்தாலும் உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்கும் தருணங்கள். “என் வாழ்வின் சந்தோஷத் தருணங்களில் நீ நிறந்திருக்க வேண்டும்” என்று அவர் தான் முதன்முதலில் என்னிடம் கேட்டார். ஆனால் எனது வாழ்வின் சந்தோஷ தருணங்கள் அனைத்திலும் அவர் நிறைந்திருந்தார். அவரது கேள்விக்கு எனது பதில் இன்னும் சொல்லப்படாமலேயே இருந்தது. ஆனால் அந்த பதில் என்னவாகயிருக்கும் என்பது எனக்கும், அவருக்கும் மட்டுமல்ல எங்கள் அலுவலகத்தில் இருந்த அனைவருக்கும் தெரிந்ததாகவே இருந்தது. அனைவருமே என் உதடுகளிலிருந்து அந்த வார்த்தைகள் வர வேண்டும் என்று அந்த நாளுக்காகக் காத்திருந்தனர்.
அந்த நாளும் வந்தது. “கோவா டூர்”!
இயற்கை தேவதை தன்னை கிளியோபாட்ராவாய் அலங்கரித்துக் கொண்டிருக்கும் இடம். நான் மட்டும் தனியாக நிற்கும் போது பின்னே சென்ற கடல் அலைகள், அவருடன் கைகோர்த்து நிற்கும் போது மட்டும் என் பாதங்களை முத்தமிட ஓடோடி வருவதைப் போலத் தோன்றியது. கோவாவில் நாங்கள் தங்கியிருந்த அந்த மூன்று நாட்களும் எனக்கே எனக்கென கடவுள் ஸ்பெஷலாக படைத்து பரிசளித்த நாட்களாகத் தெரிந்தது. நாங்கள் இருவரும் காலையில் கோவாவையும் இரவில் எங்களையும் ரசித்தோம். மூன்றாம் நாள் இரவு அனைவரும் அனைத்தையும் ‘பேக்’ செய்து தயாராக வைத்து விட்டு இறுதியாக ஒரு முறை கடற்கரையில் கால் நினைக்கலாம் என்று கடற்கரையில் நின்றிருந்த போது, ஆனந்த் என் அருகில் வந்தார். சுற்றி நின்றிருந்த அலுவலக நண்பர்கள் அனைவரும் எங்களையே பார்த்தனர். ஆனந்த் என் கைகளைப் பிடித்து, முத்தமிட்டு, என் முன் மண்டியிட்டு, கேட்டார் “காவ்யா, வில் யூ மேரி மீ”
“ஸே யெஸ்! ஸே யெஸ்!! ஸே யெஸ்!!!” அனைவரும் கோரஸாக கத்தினார்கள்.
என் கண்களில் தழும்பிய நீர் அவர் கைகளில் விழ, நிமிர்ந்து பார்த்தார். கண்கள் நீர் வடித்துகொண்டிருக்க நான் சிரித்துக்கொண்டிருந்தேன். பதிலுக்காக ஏங்கிக்கொண்டிருந்த அவரது கண்களிலும் நீர்... ஒரு வழியாக நண்பர்கள் கைதட்டி ஆரவாரம் செய்ய நான் சொன்னேன். “ஆனந்த்...”
சென்னை ஏர்போர்ட்டில் வந்திறங்கியது விமானம்.
சென்போனை ஆன் செய்த மறுநிமிடம் சிணுங்கியது. அவர் தான்...
"இப்போ தான் லேண்ட் ஆனேன்"
"இன்னும் பாக்கல, லௌஞ்ல வெயிட் பண்றதா சொல்லிருந்தாங்க..."
"வெங்கட் லக்கேஜ் கலெக்ட் பண்ணிகிட்டு இருக்கான்"
"ம்... பாத்துட்டு கூப்புடுறேன்"
"தேங்க்ஸ்... மறுபடியும்"
கட் செய்து விட்டு திரும்பும் போது அந்த போர்ட் தென்பட்டது "Mrs. Kavya Krishnamoorthy". போர்டை கையில் வைத்திருந்தவனுக்கு எனது மகன் வயதைவிட கம்மிதான். தன்னை ஆனந்தின் மகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். சியல்லோ கார் நான் பார்த்து சரியாக 23 வருடத்திற்கு மேலான, என் மகன் வெங்கட் இதுவரை பார்த்தேயிராத சென்னையின் நெடுஞ்சாலைகளில் பறந்து சென்றது. சென்னையின் சூடு, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அவனுக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அதைவிட அதிகமாக நாங்கள் சென்னை வந்திருக்கும் காரணமும்...
கோவா டூர் முடிந்து, நான் எங்கள் ஊருக்கு சென்று "ஆனந்த்னு என் கூட வேலை செய்ற பையனை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நான் அவனை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுறேன்" என்று என் வீட்டில் சொல்ல, "சரி" என்று அடுத்த முகூர்தத்திலேயே என்னை கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்திக்குத் திருமணம் செய்து வைத்து, அமெரிக்காவிற்கும் அனுப்பி வைத்தனர். திருமணத்திற்கு பிறகு நான் சொன்ன எதையுமே கிச்சா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே சமயம் என் மேல் அவர் காட்டிய அன்பிற்கும் குறையில்லை. எங்களுக்கு இரண்டாவதாகப் பிறந்த மகளுக்கு எத்தனையோ நல்ல பெயர்கள் இருந்தும் "அபிராமி" என்று பெயர் வைத்ததிலிருந்து தெரிந்து கொண்டேன், எங்களுக்கு நடந்தது திருமணம் அல்ல எங்கள் இருவரது காதலிற்கும் எங்கள் பெற்றோர் நடத்திய சவ ஊர்வலம் என்று.
கார் அந்த பெரிய வீட்டினுள் சென்று நின்றது. கார் கதவை திறந்து விட்டான் ஆனந்தின் மகன். அவன் அவரது வளர்ப்பு மகன் என்பது சிறிது நேரத்திற்கு முன் தான் எனக்குத் தெரிந்திருந்தது. அன்று எல்லாவற்றையும் சொல்லிவிட்டதாக நினைத்து, எதையுமே சொல்லாமல் ஆனந்தைப் பிரிந்த நான் இன்று என்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்திருக்கும் ஆனந்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சுற்றிலும் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பன்னீர் தெளிக்கப்பட்டு, கெட்டுப் போகாமல் இருக்க ஐஸ் பெட்டியினுள் அவர் வைக்கப்பட்டிருந்தார். அவர் முகத்தில் அதே அழகான சிரிப்பு! "ஆனந்த் ஐ ஆல்வேஸ் லவ்ட் யூ"
2 comments
arumaiyana kavithai pondroru padaipu....
ReplyDelete@kaniB: நன்றி தல!
ReplyDeleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...