ஆதலால் காதல் செய்வீர்... 01
1:11:00 PMஅமுதா - 01
"இன்னிக்கு ஹியரிங் இருக்கு. சாயங்காலம் கிளம்புறேன்"
"டிக்கட் புக் பண்ணியாச்சா?"
"ம், S.E.T.C ல"
"எப்போ முடியும்னு ஏதாவது ஐடியா இருக்கா?"
"தெரியல, ஆனா முடிஞ்சிரும், இப்போ ஒரு லேடி லாயர்ட தான் கொடுத்திருக்கேன். சீக்கிரம் முடிச்சிரலாம்னு சொன்னாங்க"
"ம்ம்ம்... நீயும் இதையேத்தான் ஒவ்வொரு தடவை கோயம்பத்தூர் கிளம்பும் போதும் சொல்ற. ஆனா கேஸ்ல தான் ஒரு முன்னேற்றமும் இல்ல. டைவர்ஸ் கேஸ் இவ்ளோ நாள் எடுக்குறது உன் கதைல மட்டும் தான்"
"என்னை என்ன பண்ணச்சொல்றீங்க, அவன் என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணான், நான் விவாகரத்து கேட்டேன். ஆனா அவன் ஜட்ஜ பார்த்த உடனே "என் முன்னாள் மனைவி என்ன மிரட்டுறா, எனக்கு என் இன்நாள் மனைவி அமுதா கூடத் தான் வாழ விருப்பம்னு அழறான்". ஆம்பிளையா அவன்? பாத்து பாத்து கட்டி வச்சாரே எங்க அப்பா அவரைச் சொல்லனும்"
"நீ ச்சீ, த்தூனு துப்பினதுக்குப் பிறகும் உன் மேல இவ்வளவு காதல் வச்சிருக்காரே..."
"போதும்... இதுக்கு மேல எதுவும் பேச வேணாம், மன்டே பாக்கலாம்"
சொல்லிவிட்டு தன் லேப்டாப் பேக்கை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் அமுதா. அவள் கிளம்பியதும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான் பாஸ்கர். அமுதா வீடு போய் சேர்வதற்குள் அவளைப் பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம். அமுதாவிற்கு இப்போது வயது 30. ஐ.டி கம்பெனியில் நல்ல வேலை, நல்ல நண்பர்கள், நல்ல சம்பளம், நல்ல சூழல் என அனைத்தும் இருந்தும் எதையுமே அவளால் ரசிக்க முடியாத நிலை. அமுதா விவாகரத்து ஆனவள். சரியாகச் சொல்ல வேண்டுமானால் விவாகரத்து ஆகப்போகிறவள். B.Sc படித்துக்கொண்டிருக்கும் போதே அமுதாவைத் திருமணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவளது தந்தை தேடித் திரிந்து தன் மகளுக்கு பொறுத்தமான மாப்பிளை என்று ஒருவனைக் கொண்டு வந்தார். "பரவாயில்லை, பெண் படிக்கட்டும், நான் காத்திருக்கிறேன்" என்று ஒரே ஒரு வாக்கியத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தி அமுதாவுடன் சேர்த்து அவளது அப்பாவையும் சரணடைய வைத்து படிப்பு முடிந்தவுடன் கல்யாணத்தையும் முடித்து வெற்றி கண்டார் "ஏர் போர்ஸ்" மாப்பிள்ளை கிஷோர். அந்தக் கிஷோரிடமிருந்து விவாகரத்து பெறத் தான் இப்போது பெங்களூருக்கும் கோவைக்குமாய் அலைந்து கொண்டிருக்கிறாள் அமுதா. சிறு வயதிலேயே தன் வாழ்க்கையை இழந்து விட்டதாக நினைத்து மனமுடைந்து போயிருந்த அமுதாவிற்கு மீண்டும் ஒரு வித நம்பிக்கையைத் தந்துகொண்டிருப்பது அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் பாஸ்கரது நட்பு. அவருடன் பேசி விட்டு தான் இப்போது அமுதா வீடு திரும்புகிறாள்.
"அம்மா..." வீட்டு வாசலில் அவளது காலணிகள் ஒன்றை ஒன்று பிரிந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கிடந்தது.
"வா அமுதா, நீ வர்றதுக்கு தான் நானும் அப்பாவும் வெய்ட் பண்ணிக்கிட்டு இருந்தோம். கிளம்பி ரெடியாகு..."
"ம் ம் நான் கிளம்புறது இருக்கட்டும், நீங்க எங்க கிளம்பிட்டீங்க?"
"கோயம்பத்தூருக்கு... நாங்களும் தான வர்றோம்... இல்லையா?" பயம் கலந்த வருத்ததுடன் தன் மகளைப் பார்த்தாள் அம்மா.
"இல்ல, நான் மட்டும் தான் போறேன். நீங்க ரெண்டு பேரும் இங்கயே இருங்க. இல்ல கோயம்பத்தூருக்கு வர்றதா இருந்தா அங்கயே இருந்துக்கோங்க. நான் இங்க நிம்மதியாவாது இருப்பேன்"
"ஏன்டி இப்படியெல்லாம் பேசுற. பெத்த வயிறு கலங்குது..." அம்மாவின் கண்களில் காத்திருந்த கண்ணீர் எவ்வித அறிவிப்புமின்றி வழிந்தது.
"சும்மா பெத்த வயிறு அது இதுனு டயலாக்கெல்லாம் பேசாத. நானும் தான் பெத்திருப்பேன். என் பிள்ளை கருவிலேயே கலைந்த மாதிரி நானும் உன் வயித்திலயே கலஞ்சிருந்தா இப்போ இந்தப் பிரச்சனையே இருக்காது. நீங்க நிம்மதியா இருந்திருப்பீங்க, கோயம்பத்தூர்ல"
"இப்படியெல்லாம் பேசதாடி கண்ணு. நானும் அப்பாவும் உயிர கைல பிடிச்சிக்கிட்டு இருக்கிறதே உன்ன மறுபடியும் பழைய அமுதாவா சந்தோஷமா பாக்குறதுக்காகத் தான். அத புரிஞ்சிக்கோடா"
"அம்மா, தயவு செஞ்சு என்ன முதல்ல நீங்க புரிஞ்சிக்கோங்க" கண்களில் வந்த நீரை அடக்கிக் கொண்டே தொடர்ந்தாள் அமுதா "நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இப்போ எனக்கு இருக்கீங்க. என்னப் பார்த்து பார்த்து அழுது அழுது நீங்களும் போய்டீங்கன்னா நான் என்ன பண்ணுவேன்? ஒவ்வொரு தடவை கோயம்பத்தூர் போகும் போதும் அப்பா இடிஞ்சு போய் நம்ம வீட்டு விட்டத்தைப் பார்த்து உட்கார்ந்துக்க, நீங்க பக்கத்து வீட்டு பரிமளா அக்கா, எதிர் வீட்டு கமலா மாமி, ராணி அக்கானு எல்லார்கிட்டயும் என்னப் பத்தி பேசி அழுது புலம்பி தவிச்சு, அவங்க எல்லாரும் என்ன பரிதாபமா பாத்து... நான் எப்படியாவது என் பழைய வாழ்கைய மறக்கனும்னு முயற்சி பண்றேன். என்னால முடியலம்மா" இம்முறை அழுகையை அமுதாவால் அடக்க முடியவில்லை.
தாயும் மகளும் அழுது கொண்டிருக்க வெளியில் சென்றிருந்த அப்பா உள்ளே நுழைந்தார்.
"என்னாச்சு... அமுதா, ஏம்மா அழற... அமுதா"
"ஒன்னும் இல்லப்பா... நீங்க எங்க போனீங்க?"
"இல்லமா நாம திரும்புறதுக்கு எப்படியும் மூணு நாளாவது ஆகும்ல, தம்பி அவசரமா பணம் வேணும்னு போன் பண்ணான். அதான் போய் அனுப்பிட்டு வந்தேன்"
"தம்பி பணம் கேட்டான்னா என் கிட்ட சொல்லவேண்டியது தானே. நான் ஆன்-லைன்ல டிரான்ஸ்வர் பண்ணிடுவேன்ல. நீங்க ஏன் இப்படி அலைறீங்க. ஏதாவது ஆயிருச்சுன்னா?..."
"எனக்கு ஒன்னும் ஆகாது அமுதா, நீ டென்ஷன் ஆகாத. முதல்ல போய் நீ கிளம்பு. நான் வர்ற வழிலயே ஆட்டோவுக்கு சொல்லிட்டு வந்துட்டேன். அரை மணி நேரத்துல அவன் வந்துருவான்"
சரி என்பது போல அப்பாவையும் அம்மாவையும் ஒருசேரப் பார்த்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்தாள் அமுதா. மகனுக்கு அனுப்பிய 2000 போக சட்டைப் பையில் மீதமிருந்த 200ரைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார் அப்பா. அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. சோபாவில் சாய்ந்து கிடந்தது அமுதாவின் லேப்-டாப்.
தொடரும்...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி:
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி:
முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் நான் கண்ட மூன்று காதல் கதைகளை எழுத ஆரம்பித்து இருக்கிறேன். சுஜாதா அவர்களது 'ஆதலினால் காதல் செய்வீர்' தலைப்பினால் ஈர்க்கப்பட்டு, 'ஆதலால் காதல் செய்வீர்' என்று பெயர் வைத்திருக்கிறேன். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்படுவதால் கதையே காப்பிதான். டைட்டில் காப்பியைப் பற்றி நான் பெரிதாக யோசிக்கவேவில்லை :-) முடிந்தவரை சுவாரஸ்யமாகவும், வேகமாகவும் எழுத முயற்சி செய்கிறேன்...
உங்கள் கருத்துக்களை கண்டிப்பாக பின்னூட்டமிடவும்...
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...