சீரியல் ஜுரம்... பாகம் 01

11:56:00 AM


டிவி சீரியல் பார்ப்பதைப் பற்றி நண்பன் அருண் தனது தளத்தில் சிலாகித்து எழுதியிருந்தான். தமிழில், நான் குடும்பத்துடன் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒன்று விடாமல் பார்த்த மெகா சீரியல் என்றால் அது 'சித்தி' மட்டும் தான். கிட்டத்தட்ட தமிழகமே "கண்ணின் மணி கண்னின் மணி இவள் தானம்மா" என்று சித்தி பாசத்திற்கு அடிமையாகியிருந்த காலகட்டம் அது. அதன் பிறகு வந்த 'அண்ணாமலை' - "உயிர்கள் பிறப்பது பாசத்திற்காக" என்று ஆரம்பத்தில் ஆரவாரமாக இருந்தாலும் போகப்போக புஸ்ஸானதால் நாங்கள் பாதியிலேயே நிறுத்திக் கொண்டோம். அன்று முதல் இன்று வரை எங்கள் வீட்டில் மெகா சீரியல்கள் ஒரு அன்றாட நிகழ்வாக இருந்ததேயில்லை. அது ஏனோ தெரியவில்லை என் அம்மாவிற்கு மெகா சீரியல் பார்ப்பதில் விருப்பம் இருந்ததேயில்லை. மதிய, இரவு வேளைகளில் ரமணிச்சந்திரனை புரட்டுவதோடு சரி.

நானும் எனது தம்பியும் விடாமல் பார்த்து ரசித்த சீரியல் ஒன்று இருக்கிறது. அது 'மாயா மச்சீந்ரா'! பிரபு தேவா தம்பி நாகேந்திர பிரதாத் நடித்து புதன்தோறும் இரவு 8 மணிக்கு விஜய் டி.வியில் ஒளிபரப்பானது. இன்னும் அது மறக்க முடியாத வசந்த கால நினைவுகளாக இருப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. 8 மணிக்கு தொடர் ஆரம்பிக்கும் முன் நானோ அல்லது என் தம்பியோ சைக்கிளை எடுத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்குப் பக்கதிலிருக்கும் 'சூர்யா நைட் கிளப்' என்கிற ஒரு கடையில் ஆளுக்கு மூன்று புரோட்டா, சிக்கன் கொத்து வாங்கிக்கொண்டு வந்து, டி.வி பார்த்துக் கொண்டே சாப்பிடுவோம். எனகள் வீட்டில் டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிட அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகள் அந்த புதன்கிழமைகளில் தான் நடந்தது. கர்ணனிடம் 'உள்ளத்தில் உயர்ந்த உள்ளம்' என்று பாடியவாறு கிருஷ்ணன் லவட்டிக் கொண்டு போன கவச குண்டலம் ஒரு சாதரண மனிதனிடன் கிடைக்க அவன் மாயா மச்சீந்திரா ஆகிறான், அநீதியை அழித்து உலகைக் காக்கிறான். இது தான் கதை.

அதன் பிறகு நான் ஒரு வாரம் கூட தவற விடாமல் பார்த்த சீரியல் என்றால் அது மர்ம தேசம் சீரீஸ். முதல் கதையா 'ரகசியம்' என்னவென்று நான் அறிவதற்குள் முடிந்திருந்தது. அடுத்த 'விடாது கருப்பு' இன்று முதல் எனது பேவரிட். தமிழ் சினிமாவில் குடைக்குள் மழையில் ஆரம்பித்து, நேற்றைய நடுநிசி நாய்கள் வரை சொல்லப்பட்ட 'ஸ்பிளிட் பெர்சொனாலிட்டி' தீமை அப்போதே வைத்து அசத்தினார் நாகா. www.rajshri.com தளத்தில் இந்த சீரியல் மொத்தமாக முன்பு கிடைத்தது. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. கல்லூரி முடிந்திருந்த காலத்தில் ஒருமுறை சமீபத்தில் மேலும் ஒரு முறை என்று மொத்தமாக மூன்று முறை விடாமல் கருப்பை ரசித்திருக்கிறேன் நான். அதிலும் கடைசி 10 எப்பிசோட்கள் ஆஹா ஓஹோ தான். கருப்பின் வெள்ளைக்க குதிரை வேகத்திற்கு அடுத்து வந்த 'சொர்ண ரேகை', 'இயந்திரப் பறவை', சீரியல்கள் ஈடுகொடுக்கவில்லை. ருத்ரவீணை வந்த சமயம் நான் கல்லூரியில் இருந்தேன்.

விஷயம் என்னவென்றால் ஆங்கிலத்திலும் தமிழைப் போலவே பிழியப் பிழிய ஏராளமான டிவி சீரியல்கள் இருக்கிறது என்பதே எனக்கு சமீபத்தில் தான் தெரியும். கல்லூரி நாட்களில் மொத்த ஹாஸ்டலே விடாமல் கண்முழித்துப் பார்த்த சீரியல் 'Prison Break'. அதையும் நான் அப்போது பார்க்கவில்லை. Wi-Fi கனெக்ஷன் முதன் முதலில் எங்கள் பேட்ச்சிற்கு தான் முதன்முதலில் கொடுக்கப் பட்டிருந்தது. Heroes, Supernatural, Lost என்று பீட்டர் பாய்ஸ்கள் டாரண்ட் டவுன்லோட்களாக அள்ளித் தெரித்துக் கொண்டிருப்பார்கள். அதையும் நாங்கள் கண்டுகொள்ளவில்லை. 

செவ்வனே கொடுக்கப்பட்ட கனெக்ஷனை சிறப்பாக பயன்படுத்தினோம். விஜய் டிவியில் 8.30 மணிக்கு என்ன பார்க்கலாம் என்ற போட்டியில் வெற்றி பெற்று ஆரம்பிக்கப்பட்ட'மதுரை' சீரியலை பகல் முழுவதும் டவுன்லோட் செய்து இரவு முழுவதும் ஒரு கூட்டமாக உட்கார்ந்து பார்த்தோம். மதுரையின் சரவணனின் அலப்பறையையும், மீனாட்சியின் அழகையும் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. மதுரையின் தீம் சாங் "ஏலேலோ... "அப்போது எனது ரிங்டோன். 100 எப்பிசோட்களுக்கு மேல் மதுரையும் ஜொலிக்கவில்லை (முதல் 100 என்னிடம் உள்ளது!). முடிவு படுமொக்கையாக அமைந்தது. மதுரையைப் பார்த்து கலைஞர் டிவி செய்துகொண்டிருக்கும் கொடுமை "தெற்கத்தி பொண்ணு" பாவம் பாரதிராஜா. கனா காணும் காலங்களுக்கும் நல்ல ரசிகர் கூடம் இருந்தது. இவ்வளவு தான் நான் பார்த்த சீரியல்.

ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ். பறந்து பறந்து ஆங்கில சீரியல்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். '24' என்னும் கிரைம் திரில்லரில் ஆரம்பித்து இப்போது 'Bones' , 'Lie To Me', 'White Collar' , 'Dexter' என்று போய்க்கொண்டிருக்கிறது. நான் பார்த்ததிலேயே கொஞ்சம் பெஸ்ட் சீரியல்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன். இவை அனைத்தும் டாரெண்ட்களிலும், ராபிட்சேரிலும் குவிந்து கிடக்கிறது. சிரமமே இல்லாமல் தரவிறக்கிப் பார்க்கலாம்.

24 
இது ஒரு "ஒன் மேன் ஆர்மி" சமாச்சாரம். விஜய்காந்த் இதுவரை நடித்த போலீஸ் படங்கள் 100 என்று வைத்துக்கொள்வோம். அது அத்தனையையும் அடுத்தடுத்து ஒரு சீரியலாகப் பார்த்தால் எப்படியிருக்கும். அதுதான் 24. மொத்தம் 10 சீசன்ஸ். ஒரு சீசனிற்கு ஒரு கதை, 24 எபிசோட்கள். இந்த சீரியலின் சிறப்பம்சம் என்னவென்றால் இது ரியல் டைமில் நடப்பதாகக் காட்டப்படுகிறது. அதாவது முதல் எப்பிசோட் 12 மணிக்கு ஆரம்பித்தால், அது 1 மணிக்கு முடியும். அடுத்த எப்பிசோட் 1 மணிக்கு ஆரம்பித்து 2 மணிக்கு முடியும். இப்படி 24 மணி நேரத்தில் நடப்பதாக 24 எபிசோட்களில் ஒரு கதை என்று 10 சீசனிற்கு இது வரை 10 கதைகள் வந்துள்ளது. அனைத்திலும் ஹீரோ Jack Baur என்னும் CTU (Counter Terrorist Unit) அதிகாரி. அவர் எப்படி எதிரிகளின் சதியை முறியடித்து அமெரிக்க மக்களை நிம்மதியாக தூங்க வைக்கிறார் என்பதே கதை. ஒவ்வொரு எப்பிசோட் முடிவிலும் ஒரு செக் வைத்து அற்புதமாக எடுத்திருப்பார்கள். இவர்களது எடிட்டிங் பேட்டர்ன் செம பேமஸ். ஒரே ஒரு சின்னப் பைரச்சனை, ஒரு கதையை ஆரம்பித்தால் அது முடிய 24 மணி நேரம் ஆகும்! பி.கு - 24 பற்றி முன்னாள் (!) பதிவாளர் ஹாலிவுட் பாலா தனது தளத்தில் விளக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதியிருந்தார்.

Bones

Dr. temperance Brennan. எழும்புக்கலை (Forensic Anthropologist!) நிபுணர். ஒரே ஒரு துண்டு பீஸ் எலும்பு கிடைத்தால் போதும், பெண்மணி செய்யும் அலும்பு தாங்காது. அந்த எழும்பின் சொந்தக்காரன்/காரியுடைய வரலாற்றையே அக்கு வேறு ஆணிவேறாக பிரித்துவிடுவார், அது எவ்வளவு பழைய, சேதமடைந்த நிலையிலிருக்கும் எலும்பாக இருந்தாலும் சரி. இவருக்கு கேஸ்களை கொண்டு வந்து கொடுக்கும் FBI அதிகாரி மற்றும் வெவ்வேறு திறமைகளையும் குணாதியங்களையும் கொண்ட 3 அசிஸ்டண்ட் டாக்டர்கள். இவர்கள் தான் பிரதான் கதாப்பாத்திரங்கள். சில வேளைகளில் இது செமையான உட்டாலக்கடி சமாச்சாரம் போலத் தோன்றினாலும், இது போலான ஆட்களும் இருக்கிறார்கள், இது போலான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டுதானிருக்கிறது. Dr. Temperance Brennan என்னும் கதாப்பாத்திரமே ஒரு உண்மையான Forensic Anthropologist Dr.Kathy Reichs என்பவரை மூலகரணமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான். அவரது உதவிடன் தான் இந்தக் சீரியலுக்கான கதைகள் தேர்வு செய்யப்படுகிறது. அவரது பெரும்பாலான பழக்கவழக்கங்கள், அதிகம் பேசும் வசனங்கள் போன்றவை இதிலும் பயன்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் செய்தி. 24 போல்லல்லாமல் இவை Procedural Drama வகை. அதாவது ஒரு எப்பிசோடிற்கு ஒரு கதை. நாம் பார்க்கும் எப்பிசோடின் கதை புரிய வேறு எந்த எப்பிசோடையும் பார்த்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கதையில் முக்கியமாக வரும் 5,6 பேரைப் பற்றித் தெரிந்திருந்தாலே போதும். 

Castle 
இது கொஞ்சம் ஜாலி-காலி டை. சீரியலை ஒரு வரியில் சொல்லவேண்டுமானால், "இரண்டு வகையான மனிதர்கள் தான் ஒருவனை எப்படியெல்லாம் வித்தியாசமாக கொல்லலாம் என்று சதா சிந்தித்துக்கொண்டேயிருப்பார்கள் ஒருவன் சைக்கோ கொலைகாரன், இன்னொருவன் க்ரைம் - த்ரில்லர் எழுத்தாளன்". Castleன் கதானாயகன் Rick Castle. மிகப்பிரபலமான எழுத்தாளன். ஒரு முறை முற்றிலும் வித்யாசமான முறயில் கலைநயத்துடன் (ஒரு பெண்ணைக் கொன்று, நிர்வாணப்படுத்தி, உடலை அழகாக ரோஜாப்பூக்களால் மறைத்து, இரண்டு கண்களையும் எடுத்து விட்டு அதற்கு பதில் இரண்டு சூரியகாந்தி பூக்களை வைத்து...!!!) ஒரு கொலை நடைபெறுகிறது. அந்தக் கொலையை அப்படியே தனது முந்தய கதை ஒன்றில் எழுதியிருப்பார் ரிக். போலீஸ் தூக்கிக் கொண்டு வந்து விசாரிக்கும். அடுத்து மற்றுமொரு 'அழகான' கொலை. ரிக்கின் தீவிர ரசிகன் ஒருவன் தான் இப்படி செய்து கொண்டிருக்கிறான் என்று ரிக்கை உடன் வைத்துக் கொண்டே போலீஸ் விசாரணை செய்யும். இது தான் முதல் எப்பிசோட். அந்த போலீஸ் க்ரூப்பில் ஒரு மெய்ன் அம்மணி பிகராக இருக்க, ரிக் தனது தொடர்புகளைப் பயன்படுத்தி அந்த அம்மணியுடனே இருக்க ஏற்பாடு செய்து விடுகிறான். அவன் சொல்லும் காரணம் எனது அடுத்த கதை ஒரு பெண் போலீஸைப் பற்றியது. சொல்லவா வேண்டும். நகரின் மேயர் முதல், போலீஸ் கமிஷ்னர் வரை ரிக்கின் தீவிர ரசிகர்கள். உடனே ஆர்டர் கிடைக்கிறது. ரிக்கும் போலீஸ் அதிகாரி கேட் பெக்கட்டும் இணைந்து எப்படி கேஸ்களை முடிக்கிறார்கள் என்பதே 'Castle'. இதுவும் Procedural Drama வகைதான்

பதிவு பெரிதாகிக் கொண்டே போவதால், நான் இந்த பதிவை எழுத காரணமான சில முக்கியமான, மிகவும் சுவாரஸ்யமான சீரியல்களை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

You Might Also Like

2 comments

  1. நல்ல பதிப்பு நண்பா. bones, 24 பற்றி கேள்வி பட்டு இருக்கேன். Castle பற்றி இன்று தான் தெரிந்து கொள்கிறேன். அடுத்த பாகத்தையும் சீக்கிரம் பதிவு செய்...

    ReplyDelete
  2. bro try band of brothers, breaking bad, luther, river, got, sherlock, davincis demons, house of cards, fargo, narcos.

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...