'எப்போதும் பெண்'

1:03:00 PM


மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பல நாவல்களில் சில என்றுமே நம் மனதை விட்டு நீங்காமல் உள்ளே ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படி எப்போழுதோ படித்த நாவல் ஒன்று இன்றும் என் மனதில் நீங்காமல் நிற்பதன் பாதிப்பே இந்தப் பதிவு. சுஜாதாவின் ஸ்பெஷல் 'என் இனிய இயந்திரா', 'சொர்க்கத் தீவு' போன்ற sci-fi கதைகதான் என்று நான் நினைத்திருந்த காலக் கட்டத்தில் கணேஷ்-வசந்த் அறிமுகமாகி Crime-Thriller வகையராக்களில் ராஜேஷ்குமாரெல்லாம் ஜூஜூப்பி என்கிற ரேஞ்சிற்கு எண்ண வைத்தார்கள். அடுத்தடுத்து 'பிரிவோம் சந்திப்போம்', 'ஒரே ஒரு துரோகம்' என்று கலந்து கட்டி அடித்த சுஜாதா, 'எப்போதும் பெண்' என்கிற ஒரு நாவலின் மூலம் என்னை வியப்படைய வைத்தார். இதைக் குறுநாவல் என்று வகைப்படுத்தலாமா என்று தெரியவில்லை. அவர் பாணியிலேயே சொல்லவேண்டுமானால் ராமாயணம், மஹாபாரதம் இரண்டைத் தவிர அனைத்துமே குறுநாவல்கள் அல்லது சிறுகதைகள்தான்.

கதையின் ஒன்-லைன் - ஒரு பெண் தன் தாயின் கருவில் உருவாவதிலிருந்து அவளே ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். முழுக்க முழுக்க ஒரு பெண்ணைப் பற்றிய கதையை இலக்கணங்கள் சிறிதும் மாறாமல் அழகாக, நேர்த்தியாக தன் திறமையால் விவரித்திருப்பார் சுஜாதா. ரமணிசந்திரன் போன்ற பெண் எழுத்தாளர்களின் கதைகளில் பெண்களைப் பற்றியும் அவர்களது உளவியல் பற்றியும் நுணுக்கமான செய்திகள் இருப்பதில் ஆச்சரியமேயில்லை. ஆனால்  ஆண் எழுத்தாளர் ஒருவர் ஒரு பெண்ணைப் பற்றிய இத்தனை விளக்கங்களைக் கொடுக்க முடியுமா என்பதில் எனக்கு ஆச்சரியமே. இந்த நாவல் எனக்குத் தந்த இதே வியப்பை தொடர்கதையாக 1982-1983 ஆம் ஆண்டு மங்கையர் மலரில் வந்த போதும் ஏற்படுத்தியதாத் தெரிகிறது. சுஜாதாவின் மிகச் சிறந்த நாவல் எது என்று கேட்டால் நான் கண்ணாய் மூடிக் கொண்டு 'எப்போதும் பெண்' என்பேன். இதுவே பலரின் கருத்துக்களாக இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் தாயை இழந்து, பணக்கார வீட்டில் தத்துக் கொடுக்கப்பட்டு, புரியாத வயதில் மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்து, சித்தியிடம் வளர்ந்து, அண்ணங்களுடன் பழகி, பூப்படைந்து, பருவச் சிக்கல்களை சமாளித்து, திருமணமாகி, பாஷை புரியாத தில்லி தேசத்தில் குடியேறி, தாயாகி, இறுதியில் தன் தாயைப் போலவே தானும் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து இறக்கும் கதை தான் 'எப்போதும் பெண்'. நாவலின் ஒவ்வொரு பத்தியும் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. சுஜாதாவின் ஸ்பெஷலே இதுதான். இவரது கதைகளை இன்னமும் நான் படித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு எழுதியிருக்கிறார் மனுஷன். ஒரு கதையை படித்து விட்டு உடனே நான் அடுத்த கதைக்கு தாவியதில்லை. என்னால் தாவவும் முடியாது. படித்த கதையின் தாக்கம் எனக்குள் பல நாட்கள் இருந்து கொண்டேயிருக்கும். அது தீரும் வரை அடுத்தப் பக்கக் கதையை நான் புரட்டியதேயில்லை. எப்போதும் பெண்ணின் தாக்கம் இன்னும் என்னுள் இருக்கிறது. முழுக்க முழுக்க பெண்களைப் பற்றிய கதை அல்லது குறுநாவல் ஒன்றை எழுதி விடவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அதற்கு சரியான சமயம் இப்போது தான் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

எனக்கு நன்றாகப் பழக்கப்பட்ட, நான் பார்த்த மூன்று பெண்களது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தொகுத்து, சரியான புள்ளியில் இணைத்து எழுத ஆரம்பித்திருக்கிறேன். மதுமிதா, காயத்ரி, அமுதா என்று வெவ்வேறு வயதில், ஒருவருக்கொருவர் சம்பந்தம் இல்லாத மூன்று பெண்களைப் பற்றியது இந்த கதை. நான் பார்த்த அவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் நுழையலாம் என்று எனக்குத் தெரியவில்லை. முடிந்த வரை சுவாரஸ்யமாகக் கொடுக்க முயற்சிக்கிறேன். உண்மைக் கதைகளில் சிலப் பிரச்சனைகள் உண்டு. இதில் பேண்டஸி இருக்காது, சினிமாத்தனம் இருக்காது, எதிர்பாராத திடுக் திருப்பங்கள் இருக்காது. ஆனால் நிச்சயம் உண்மையான உணர்ச்சிகள் இருக்கும், அன்றாடம் நம் பக்கத்து வீட்டில், எதிர்வீட்டில் நடப்பது போன்ற உணர்வு இருக்கும். நிச்சயம் இது போன்ற சம்பவங்களை நம் வீட்டிலேயே எதிர்கொண்டிருப்போம் அல்லது பக்கது வீட்டில் நடக்கும் போது ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்திருப்போம். 

நிச்சயம் ஒரு திருப்தியான ரசிக்கும் படியான யதார்த்த நிகழ்வுகளைத் தொகுத்துக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் தொடங்கியிருக்கிறேன். தலைப்பு எதுவும் இன்னும் 'செட்' ஆகவில்லை. நல்ல தலைப்பு கிடைத்தவுடன் உடனே பதிவிட்டு விட வேண்டியதுதான்.

வருடத்தின் 365 நாட்களும் ஆணின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணமாகயிருக்கும் பெண்களுக்கென்று ஆண்களாகிய நாம் ஒதுக்கியிருப்பது ஒரே ஒரு நாள். சரிதான்! அதை விடக் கொடுமை தாங்கள் அசிங்கப்படுத்தப்படுகிறோம் என்பது தெரியாமல் பெண்களும் இதை பெரிய வாய்ப்பாக நினைத்து ஏதோ அமெரிக்காவில் இருப்பது போல், இன்று மட்டும் புடவை, மல்லிகை என்று வித்யாச காஸ்டியூமில் தாங்கள் வந்திருப்பதாய் நினைத்து அன்ன நடை நடந்து அங்கும் இங்கும்மென்று உலா வருகிறார்கள். கொண்டாடுகிறார்களாம்! இருக்கட்டும்... நானும் சொல்லிவிட்டேன். உலகப் பெண்கள் அனைவருக்கும் இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்!

நான் ஆணாத்திக்கத் தனமாகப் பேசுவதாக நினைக்கவேண்டாம். என் மனதில் தோன்றியதைச் சொல்கிறேன். ஆண்கள் தினம் என்று ஒன்று இல்லை, முதியவர்கள் தினம் என்றும் ஒன்று இருப்பதாய்த் தெரியவில்லை. குழந்தைகள் தினம் மட்டும் இருக்கிறது. அதுவும் எதற்கு நேரு மாமாவை நினைவூட்ட, சாக்லெட் கொடுத்து ஏமாற்ற… பெண்கள் தினமும் சாக்லெட் கொடுத்து ஏமாற்றத்தானா? ஏன் இப்படி? முதலில் 33% அப்புறம் வாழ்த்து என்று சொல்லமாட்டீர்களா?

You Might Also Like

1 comments

  1. நமக்கு இந்த மாதிரி sentiment stories ல interest இல்லை.. இருந்தாலும் உன்னுடைய கதைக்காக waiting...

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...