ஆதலால் காதல் செய்வீர்... 02

11:43:00 AM


ஆதலால் காதல் செய்வீர்... 01

மதுமிதா - 01

"பத்திரமா போ மது, சாயங்காலம் அண்ணன் வந்து கூட்டிட்டுப் போவான்"

சரியென்பது போல் தலையசைத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் கல்லூரியினுள் நடந்தாள் மதுமிதா. படித்துக் கொண்டிருப்பது B.Sc இரண்டாம் ஆண்டு (இரண்டாம் செமஸ்டரின்போது தீடீரென்று வந்த வைரஸ் காய்ச்சலால் இன்னும் ஒரு அரியர் இருக்கிறது).

வழக்கம் போல அன்றும் தன் மகளை கல்லூரி வாசலில் விட்டுவிட்டு தன் பள்ளி நோக்கி ஸ்கூட்டரைத் திருப்பினார் தலைமை ஆசிரியர் சதாசிவம். தான் போவதை மகள் திரும்பி வந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்பதை சதாசிவம் அறியவில்லை.

********

"என்னம்மா?" கேட்டார் வாட்ச்மேன் முத்தையா (கவனிக்க - செக்யூரிட்டி முத்தையா அல்ல வாட்ச்மேன் முத்தையா)

"ஒன்னும் இல்ல... எக்ஸாம் பீஸ் எடுத்துட்டு வர சொல்லியிருந்தாங்க, மறந்தே போச்சு. அப்பா வேற ரொம்ப தூரம் போய்டாரே! அதான்நான் நானே போய் எடுத்துக்கிட்டு வந்துடுறேன்"

"அட நீ ஏன் கண்ணு போற, அப்பாவுக்கு போன் பண்ணி திரும்பி வரச் சொல்லி வாங்கிக்க"

"இல்ல, அவருக்கு ஸ்கூலுக்கு லேட் ஆயிடும். பக்கத்துல தான் வீடு. பஸ்ல போய் எடுத்துட்டு பெல் அடிக்கிறதுக்குள்ள வந்துடுறேன்"

இதற்கு மேல் முத்தையாவிடம் அவள் பேச விரும்பாததற்கு அவர் மேலிருந்து வரும் பீடி நாற்றம் காரணமாகயிருக்கலாம். இதற்கு மேல் கேள்வி கேட்க முத்தையா விரும்பாததற்கு உள்ளிருந்தது சைகையில் அழைக்கும் ப்யூன் மாடசாமி காரணமாகயிருக்கலாம்.

விறுவிறுவென கல்லூரிப் பேருந்து நிறுத்தத்தில் போய் நின்றாள் மது. தூரத்தில் தன் தந்தை போவதை அவள் கவனிக்காமலில்லை. பஸ் வந்தும் இவள் ஏறாமல் நிற்பதை முத்தையா கவனிக்கவில்லை.

********

முத்தையாவை இப்போதைக்கு ஒதுக்கிவைத்துவிட்டு சதாசிவம் தன் பள்ளிக்கு போய் சேர்வதற்குள் அவரைப் பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன். அண்ணனின் மேல் அதீத பாசம் வைத்திருக்கும் தன் தாய் தன் மீது மட்டும் ஏன் வெறுப்பாக இருக்கிறாள் என்பதை சதாசிவத்தால் இந்த நிமிடம் வரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஒருவேளை அவர் பிறந்தவுடன் அவரது தந்தை இறந்ததுகூட காரணமாகயிருக்கலாம். சிறு வயது முதல் யாருடைய அரவணைப்பும் இல்லாமல் தானாகவே வளர்ந்து, தானாகவே படித்து, தானாகவவே ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து, சுயம்புவாக இப்போது கும்பகோணத்தின் மிகப் பெரிய பள்ளியான "அரசினர் மேல்நிலைப் பள்ளி" - யின் தலைமை ஆசிரியராக உயர்ந்திருக்கிறார். அவருக்கு சாரதி என்று ஒரு மகன், மதுமிதா என்று ஒரு மகள். அந்த மதுமிதா தான் இப்போது படிதாண்டி (அதாவது இப்போதைக்கு கல்லூரியின் வாயிற்படியைத் தாண்டி) பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிறாள்.

********

“வணக்கம் ஸார்” - பள்ளியின் ஆபிஸ் அஸிஸ்டண்ட் ராஜன்.

ஸ்கூட்டரை பின் பக்கமாகத் தள்ளி ஸ்டாண்ட் போட்டார் சதாசிவம். “வணக்கம் ராஜன், பெல் அடிச்சாச்சா?”

“இன்னும் இல்லை ஸார். அஞ்சு நிமிஷம் இருக்கு”

“ம்...”

ராஜன் பின் தொடர தன் அறைக்குள் நுழைந்தார். “அப்புறம் ராஜன், ஸ்காலர்ஷிப் பணம் வந்துருச்சு, 12 A ல அந்த நாலு பசங்களையும், B ல ரெண்டு பசங்களையும் ப்ரேயர் முடிஞ்சதுக்குபின்ன என்ன வந்து பாக்கச் சொல்லுங்க. ம்...மணி (கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே - போன பிறந்த நாளுக்கு தன் பிள்ளைகள் வாங்கிக்கொடுத்தது) ஆச்சுன்னு நினைக்கிறேன், பெல் அடிக்கச் சொல்லுங்க” கட்டளைகளை ஏற்றுக் கொண்டு ராஜன் வெளியேற, தன் கைப்பையை எடுத்தார் சதாசிவம். அதில் தான் மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணம் ரூ24000 இருக்கிறது. உள்ளே பணம் இருப்பதை உறுதி செய்தபின் பையை தன் மேஜை டிராயரில் வைத்துப் பூட்டிவிட்டு ப்ரேயருக்குச் சென்றார். ப்ரேயரில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

********

“மாணிக்கம், மாணிக்கம்...”

கதைவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் ப்யூன் மாணிக்கம்.

“ஐயா”

“நான் பிரேயர் போயிருக்கும் போது யாரும் என் ரூமுக்கு வந்தாங்களா?”

“இல்லிங்களே ஐயா, நான் இங்கனயே தான நின்னுகிட்டு இருக்கேன்”

“இல்ல... பணம், ஒன்னுமில்ல, ஆபீஸ் ரூமல ராஜனை வரச்சொன்னேன்னு சொல்லு”

இரண்டு நிமிடம் ஆவதற்குள்...

“ஸார்...”

“ராஜன், பைல வச்சிருந்த பணத்துல 9000 குறையுது ராஜன். வீட்லருந்து வரும் போது எண்ணி தான் எடுத்து வச்சேன். இப்போ குறையுது...”

“வீட்டுக்கு போன் போட்டு கேட்டிங்களா ஸார்?”

“இல்ல, ஒரு நிமிஷம்...கேட்டுடுறேன்...ம்... அந்த... அந்த பசங்கல இல்ல... நான் சொல்லும் போது வரச் சொன்னா போதும். என்ன? அதச் சொல்லத் தான் வரச் சொன்னேன்” தனது கைப்பேசியில் வீட்டு எண்ணை அழுத்திக்கொண்டே சொன்னார் சதாசிவம். நெற்றியில் லேசாக வியர்த்திருந்தது.

 ********

“ஹலோ... நான் தான் சிவகாமி... என் பைலருந்து எதும் பணம் எடுத்தியா?”

“இல்லையா, இல்ல 24000 ரூ வச்சிருந்தேன். இப்போ 9000 குறையுது. தம்பி (சாரதி) ப்ராஜெக்ட் விஷயமா பணம் வேணும்னு கேட்டானே, அவன் எடுத்திருப்பானா. கேட்க்காம எடுக்கமாட்டானே”

“எனக்குத் தெரியல. சரி விடு அவனுக்கே போன் போட்டு கேட்டுக்குறேன்”

“ஆமா விட்டுட்டேன். காலேஜ் வாசல்லயே இறக்கி விட்டுட்டுதான் வந்தேன்”

“ம், சரி”

********

"ஹலோ"

“தம்பி, ம்ம்ம், வந்துட்டேன். ஒன்னுமில்ல, என் பைலருந்து ஏதாவது பணம் எடுத்தியா?”

“நீயும் எடுக்கலையா... இல்ல கொஞ்சம் பணம் குறையுது. மது எதுவும் பணம் வேணும்னு சொன்னாளா?”

“எக்ஸாம் பீஸ்க்கு தான் இன்னும் நாள் இருக்கே, ம்... தெரியல, இருக்கலாம். சரி, எதுக்கும் நான் அம்மாவ போய் பாத்துட்டு வரச் சொல்லிடுறேன். ஸ்காலர்ஷிப் பணம் அது...”

********

மதுவின் அம்மா கிளம்பி, ஆட்டோ பிடித்து மதுவின் கல்லூரியை வந்தடைந்த போது மணி மதியம் 12. கல்லூரி வாசலில் யாருமில்லாததால் (முத்தையா?) நேராக ஆபிஸ் ரூமிற்குள் நுழைந்து...

“மதுமிதாவா சொன்னீங்க?... ம... து... மிதா, B.Com... 2.. யர், ஆப்ஸென்ட்... இன்னிக்கு மதுமிதா காலேஜுக்கே வரலையே, நீங்க யாரு அவ அம்மாவா?”

தொடரும்...

You Might Also Like

3 comments

 1. நல்ல தொடக்கம்... வாழ்த்துக்கள் நண்பரே.....

  ReplyDelete
 2. நண்பா, கதையை நல்ல தொடங்கி இருக்க.. continue பண்ணு...படிக்க ஆள் இருக்கு...

  ReplyDelete
 3. @ kaniB: நன்றி நண்பரே

  @ Arun: நண்பேன்டா...

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...