NEBO, PEKLO... ZEM / HEAVEN, HELL... EARTH | SLOVAKIA | 2009

6:02:00 PM

பெண்... காலம், கலாச்சாரம், நாகரிகம், வாழ்க்கை முறை என்று எது மாறினாலும் மாற்றப்படாமல் , மாறவிடாமல் இருப்பவள். சுஜாதா தனது எப்போதும் பெண்ணில் அருமையாக கூறியிருப்பார் - அழகான லக்ஷனமான பெண் குழந்தைக்கு "கண்டிப்பாக ஒரு கலெக்டரோ, டாக்டரோ தான்டியம்மா உனக்கு மாப்பிள்ளையாக வருவான்" என்று ஒருத்தி ஆசிர்வதிப்பாள். ஏன் அந்தப் பெண் ஒரு கலெக்டரோ, டாக்டரோ ஆவாள் என்று வாழ்த்தக்கூடாது என்று. இன்று, இந்த நிமிடம் வரை கூட ஆணுக்குச் சமமான மதிப்பு பெண்களுக்கு இல்லை. ஆதாம் ஏவாளை அடக்கி ஒடுக்க ஆரம்பித்தது இன்று வரை மாற்றமில்லாமல் தொடர்கிறது. பொன், பொருளுக்கு அடுத்து மனிதன் தேடி அலையும் ஒரு போதைப்பொருளாகவே பெண் சித்தரிக்கப்படுகிறாள். அவமானப்பட்டு, கஷ்டப்பட்டு, பல முயற்சிகளுக்குப் பிறகும் கூட, ஆண்களின் தயவால் மட்டுமே பெண்கள் மேலே வரும் அசிங்கம் இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

சரி படத்திற்கு வருவோம்...

க்ளாரா (Clara) ஒரு டான்ஸர். நடன உலகின் ராணியாக வேண்டும் என்கிற கனவுடையவள். அவளின் கனவு நிறைவேறும் விதமாக உலகத்தின் தலைசிறந்த கலைஞர்கள் கூடும் நடன விழாவில் ஆடும் வாய்ப்பு கிடைக்கிறது. தன்னுடைய நீண்ட நாள் கனவு சாத்தியமாவதற்காக விடாமல் பயிற்சி எடுக்கிறாள். வெளியூரிலிருந்து வரும் தன் காதலனிடம் தனக்கு வாய்ப்பு கிடைத்த விஷயத்தைச் சொல்கிறாள். மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்திருக்கும் அந்தச் சமயத்தில் தான் தன் காதலன் தனக்கு துரோகம் செய்வது தெரிய வருகிறது. கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறும் க்ளாரா, தன் அம்மாவிடம் செல்ல முடிவெடுத்து படியில் இறங்கும் போது கால் வழுக்கி விழ, இடது காலில் பலத்த காயம் ஏற்படுகிறது. பெரிய கட்டுடன் நடக்கவே சிரமப்படுகிறாள். தனது நெடுநாள் கனவு மெல்ல மெல்ல கரைவதை உணரும் க்ளாராவிற்கு பெரிய குளத்தில் வெளிவரமுடியாமல் மூழ்குவது போல் அடிக்கடி கனவு வருகிறது.

ஆறுதல், ஆதரவு தேடி அம்மவிடம் சென்றால், அங்கு அவள் அம்மாவிற்கும், அப்பாவிற்கும் பிரச்சனையாகி இருவரும் பிரியும் நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. தன் அண்ணனிடம் போகலாமென்றால் கொடுமைக்கார அண்ணிக்கு இவளைக் கண்டாலே பிரச்சனை. 'கோலங்கள்' அபி போல திரும்பிய இடமெல்லாம் பிரச்சனையாகிப் போக, எங்கு செல்வது என்று தெரியாமல், தன் அம்மாவிடமே தற்காலிகமாகத் தங்குகிறாள்.

இந்தச் சமயத்தில் தான், 22 வயதான க்ளாரவிற்கு தன் தந்தை வயதுடைய டாக்டர் ருடால்ஃப் (Rudolf) உடன் பழக்கம் ஏற்படுகிறது. மனைவியைப் பிரிந்து வாழும் ருடால்ஃப் தன் 13 வயது மகளைப் பார்த்துக் கொள்ள க்ளாராவை தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். அங்கேயே அவள் தங்கவும் ஏற்பாடு செய்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக ருடால்ஃப் உடனான நெருக்கம் அதிகமாகிறது. தான் தன் லட்சியம் மறந்து புது பந்தத்தில் சிக்கிக் கொண்டிருப்பதை உணர்கிறாள். காதல், காமம், தாய்மை என்று அந்த 22 வயதுப் பெண்ணிற்கு புதிய அனுபவங்கள் கிடைக்கிறது. தனது பழைய காதலால் நரகத்தில் இருப்பதாக நினைத்தவளுக்கு இப்போது புதிய காதலால் சொர்கத்தில் இருப்பதாய்த் தோன்றுகிறது. அதுவும் கொஞ்ச நாட்களுக்குத் தான். பிரிந்து போன ருடால்ஃபின் மனைவி திரும்பி வருகிறாள்...மீண்டும் க்ளாராவிற்கு நீரில் மூழ்குவது போன்ற அதே பழைய கனவு வரத் தொடங்குகிறது... இதயத்தை கனமாக்கும் அந்த முடிவு, பெண்னென்பவள் பகடைக்காயாக ஆணின் விருப்பத்திற்கேற்ப ஆட்டுவிக்கபடும் பொம்மையாகவே இருக்கிறாள் என்பதை நடுமண்டையில் கொட்டிப் புரிய வைக்கும்.

சொர்க்கம், நரகம் என்று மீண்டும் மீண்டும் நிலையற்ற திளைக்கும் பந்தங்களால் க்ளாராவினால் தன் உண்மையான உலகான பூமியை உணரமுடியவில்லை. ஆணாதிக்க அதிகாரம் தன்னை கட்டுப்படுத்துவதை உணர்ந்தும் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு பெண்ணின் அகவேதனை, சந்தோஷங்களை இந்த அளவிற்கு கூற ஒரு பெண் இயக்குனரால் மட்டுமே முடியும். Heaven, Hell... Earth படத்தின் இயக்குனர் Laura Siváková.

பெண் இயக்குனர் நடித்த முழுக்க முழுக்க ஒரு பெண்ணைப் பற்றிய இந்தப் படமும் அவ்வளவு சீக்கிரம் எடுக்கவோ, வெளியிடவோ முடியவில்லை. திரும்பிய இடமெல்லாம் பிரசனை. சூட்டிங் நடந்தது 40 நாட்கள் தான் என்றாலும் அது இரண்டு வருடங்களில் 12 நாட்கள், 28 நாட்கள் என்று இரண்டு செட்யூல்களாக நடந்துள்ளது. அதற்குள் படத்தில் நடித்த 13 வயதுக் குழந்தை வளர்ந்து ரீ-காஸ்ட் செய்யும் அளவிற்கு போயிருக்கிறது. க்ளாராவின் அண்ணன் கதாபாத்திரத்திற்கும் அதே நிலமை தான். படத்தின் காஸ்ட்-க்ரூ பாதிக்கு பாதி மாற்றப்பட்டிருக்கிறது. க்ரெடிட்ஸில் வருவது 50 பெயர்கள் தான் என்றாலும் இறுதிக்கட்ட வேலைகள் வரை கூட இருந்தது 20 பேர்தானாம். ஆனால் ஆரம்பத்திலிருந்து படத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் என்று பார்த்தல் 220 வரும் என்கிறார் Laura Siváková.

தமிழ் சினிமாவிலேயே பெண் இயக்குனர்கள் என்று பார்த்தால் ஆரம்பகாலங்களிலிருந்தே மிகவும் சொற்பம் தான். தமிழின் முதல் பெண் இயக்குனர், முதல் பேசும் படமான காளிதாஸில் நடித்த திருவையாறு P. ராஜலக்ஷ்மி அவர்கள். இவர் இயக்கிய இரண்டு படங்கள்; மிஸ் கமலா (1936), மதுரை வீரன் (1938). அவரைத் தொடர்ந்து பானுமதி நடிப்பு, திரைக்கதை, இயக்கம், இசை, தயாரிப்பு என்று ஒரு ரவுண்ட் வந்துள்ளார். சாவித்ரி குழதை உள்ளம், பிரதாபம், 3 தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து பலர் வந்திருந்தாலும் பெயர் தெரியாமல் போய்விட்டனர் என்பதே உண்மை. இப்போதுள்ள பெண் இயக்குனர்கள் என்று பார்த்தால், ரேவதி (Kerela Cafe, Phir Milenge, Mitr, My Friend - மூன்றும் ஹிந்தி என்றாலும் இவர் தமிழ் தானே...சேர்த்துக்கொள்ளலாம்), சுஹாசினி (இந்திரா), விஜயா நிர்மலா (தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மனைவி), V.ப்ரியா (கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா), மதுமிதா (வல்லமை தாராயோ), காயத்ரி (கணவர் புஷ்கருடன் இணைந்து ஓரம் போ), நந்திதா தாஸ் (ஹிந்தி படங்கள் தான் இயக்கியிருக்கிறார் என்றாலும் நம் 'அழகி'யல்லவா அவர்), அனிதா உதீப் (குளிர் 100) போன்றவர்கள் என் விவரப்படி (உங்களுக்குத் தெரிந்த மற்ற பெண் இயக்குனர்களையும் அவர்களது படங்களைப் பற்றியும் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்)

பல திரைப்பட விழாக்களில் பல்வேறு சர்வதேச விருதுகளைக் குவித்துள்ள NEBO, PEKLO... ZEM படத்தை நான் பார்த்தது Landscape No 2, Kameleon படங்களைப் பார்த்த அதே சென்னை திரைப்பட விழாவில் தான். விழா பற்றிய அறிமுகம் தந்த நண்பர், பதிவர் ஜாக்கி சேகருக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம்...

படத்தின் லிங்க் கிடைக்கவில்லை. டிரைலர் இங்கே...

You Might Also Like

3 comments

  1. நன்றி தெரிவித்த பிரதீப்புக்கு... நான் நீங்கள் மேலே விமர்சித்த படத்தை மட்டும் பார்க்கவில்லை... மற்ற இரண்டு படங்களையும் விரைவில் விமர்சன்ம் செய்ய இருக்கின்றேன்...
    நீங்களும் நன்றாக லேன்ட்ஸ் கேப் படத்தை பற்றி எழுதி இருக்கின்றீர்கள்..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி ஜாக்கி ஸார்... உங்க ஸ்டைல்ல அந்தப் படங்களப் பத்தி எழுதுங்க... காத்துகிட்டு இருக்கேன்...

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...