2012 சினிமா: பாகம் 04 - தமிழ் - WORST 10
12:44:00 PM
மலையாளம்,
தெலுங்கு, ஹிந்தி யில் 2012 ஆம் ஆண்டு நான் பார்த்த படங்களைப் பற்றிய எனது பார்வையை
முந்தைய பதிவுகளில் சொல்லியிருந்தேன். ஆங்கிலப் படங்களைப் பற்றியும் எழுத ஆசைதான்.
ஆனால் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன், நிறைய படங்களை இன்னும் பார்க்க வேண்டும்.
அவற்றையெல்லாம் தொகுத்து எழுதுவதென்பது பெரிய வேலையாகிப் போகும். எனவே காலத்தைக் கடத்தாமல்
தமிழுக்குச் சென்று விடுகிறேன். இந்த ஆண்டு நான் பார்த்த தமிழ் படங்கள் - நண்பன், வேட்டை,
மெரினா, அம்புலி 3D, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், அரவான்,
கழுகு, 3, ஒரு கல் ஒரு கண்ணாடி, வழக்கு எண் 18/9, கலகலப்பு, ராட்டினம், மனம் கொத்திப்
பறவை, தடையறத் தாக்க, சகுனி, நான் ஈ, பில்லா II, மாலை பொழுதின் மயக்கத்திலே, மதுபானக்கடை,
மிரட்டல், அட்டக்கத்தி, நான், முகமூடி, பாகன், சுந்தர பாண்டியன், சாருலதா, சாட்டை,
தாண்டவம், இங்கிலீஷ் விங்கிலீஷ், மாற்றான், பீட்ஸா, ஆரோகணம், போடா போடி, துப்பாக்கி,
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நீர்ப்பறவை, கும்கி, நீதானே என் பொன்வசந்தம்.
முதலில்
நான் பார்த்த இந்தப் படங்களில் “வொர்ஸ்ட் 10“, எவை என்பதைச் சொல்லிவிடுகிறேன். ஏனென்றால்
நீ, நான் என்று போட்டி போட்டுக்கொண்டு பல படங்கள் இந்த லிஸ்டில் தான் இடம்பெற்றிருக்கின்றன.
அது தான் இந்த வருடச் சிறப்பும் கூட. அடுத்த பதிவில் BEST 10, OK 10.
சரி,
எதுவாக இருந்தாலும் லிஸ்ட்டைக் கண்டு நண்பர்கள் யாரும் கொந்தளிக்க வேண்டாம். இது முழுக்க
முழுக்க என் ரசனைக்கு மட்டுமே உட்பட்டது மட்டுமே (மட்டமானதாக இருந்தாலும்). என்னைப்
பொறுத்த வரை ஒரு படம் நமக்கு பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் நிறைய காரணங்களைச்
சொல்லமுடியும். படத்தை பார்ப்பதற்கு முன் ஆர்வக் கோளாறில் வாசித்துவிடும் இணைய விமர்சனத்தில்
ஆரம்பித்து, படத்தை நாம் பார்க்கும் திரையரங்கம், பார்க்கும் நேரம், டிக்கெட் விலை,
படம் பார்த்து கொண்டிருக்கும் போது நமது மனநிலை, உடன் படம் பார்த்துக்கொண்டிருப்பவர்களின்
செய்கைகள், யாருடன் பார்க்கிறோம், எப்படிப் பார்க்கிறோம் ஏன் ஏ.சி அளவு உட்பட என்னைக்
கேட்டால் படத்தைத் தவிர தனியாக 1000 காரணங்கள் சொல்வேன் (இதைப்பற்றி ஒரு பதிவே எழுதலாம்).
இவற்றையெல்லாம் தாண்டி படமும் நன்றாக இருக்க வேண்டும். அப்படி எனக்கு எல்லா வகையிலும்
முழு திருப்தி அளித்த படங்கள் மட்டும் தான் எனது TOP10ல் இருக்கும். அது நாளை. வொர்ஸ்ட்,
பெஸ்ட், டாப் – எதையும் ப்ளான் செய்து எழுதவில்லை. என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதியிருக்கிறேன்.
சரி,
இப்போதைக்கு Worst 10. படத்தை நான் எதிர்பார்த்த அளவு + படம் என்னை வெறுப்பேற்றிய அளவு. இரண்டையும் கணக்கிட்டு வரிசைப்படுத்தியிருக்கிறேன்.
1) தாண்டவம்
இந்தப்
படம் போல இந்த வருடம் எந்தப் படமும் என்னை வெறுப்பேற்றவில்லை. அது ஏனென்று தெரியவில்லை,
தாண்டவத்தைப் பற்றிய பேச்செடுத்தாலே எனக்கு செம காண்டாகிவிடுகிறது. படத்தில் என்னைப்
பொறுத்தவரை ஒன்றுமே இல்லை. எந்திரனில் “தலைவர்-ஐஸ்வர்யா ராய்” இருவருமே வயதானவர்கள்.
ஆனால் தாண்டவம் “விக்ரம்-அனுஷ்கா” ஜோடியைக் கம்பேர் செய்யும் பொழுது அவர்கள் செம யூத்தாகத்
தெரிந்தார்கள். மௌன ராகம் டைப் வித்தியாச திருமண வாழ்க்கை எல்லாம் ஓக்கே தான். ஆனால்
டெல்லியில் கண் மருத்துவராக இருக்கும் அனுஷ்கா கூட, லைலாத்தனமான டிபிக்கல் தமிழ் சினிமாவின்
லூசு ஹீரோயின் தான் என்று காட்டியிருப்பதெல்லாம்... அதை விட ஏமி ஜேக்ஸன் – எதுக்கு
இவர் இந்தப் படத்தில்? சம்பந்தமே இல்லாமல் இவரை படத்தினுள் கொண்டுவந்து ஒரு 15 -
20 நிமிடத்தை ஓட்டியிருக்கிறார்கள். “எங்கேயும் காதல்” படத்தில் ஒரு தமிழ் பெண்ணைப்
(?) பார்த்து ஃபாரினர்ஸ் தமிழ் பாட்டு பாடி, டான்ஸ் ஆடுவார்கள். இந்தப் படத்தில் ஒரு
ஃபாரின் பெண்ணைப் பார்த்து, ஃபாரினர்ஸ் அதே போன்றதொரு தமிழ் பாட்டைப் பாடி டான்ஸ் ஆடுகிறார்கள்.
கண்தெரியாத விக்ரம் ஒளியின் உதவியுடன் சம்பந்தமில்லாத சிலரைக் கொல்கிறார். அந்த சம்பந்தமில்லாதவர்களைச்
சம்பந்தப்படுத்தும் காட்சிகள் படு மட்டம். 1980களில் வந்த படங்களில் கூட இது போன்ற
காட்சிகாள் தெளிவாக எடுக்கப்பட்டிருக்கும், கொஞ்சம் சுவாரஸ்யம் இருக்கும். ப்ளாஷ்பேக்கில்
விக்ரம் RAW OFFICER, இந்தியாவின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
சொல்கிறார்கள். அவ்வளவு தான். காட்சிகளாக எதையுமே காட்டவில்லை. தீவிரவாதிகள் கூட்டத்திற்குள்
இன்பார்மராக பல வருடம் இருந்து பின் ஒரு நன்நாளில் நண்பனைக் காப்பாற்றும் சீனில் கூட
இருவரைக் கொல்கிறார். அவ்வளவுதான். மிஷன் சக்ஸஸ். மாறுவேடம் களைகிறார், ஷேவ் செய்துகொண்டு
ஆபீஸ் வந்து விடுகிறார் (அந்த ஆபீஸ் ஏதோ பழைய போஸ்ட் ஆபீஸ் போல் உள்ளது) வந்த வேகத்தில்
ஒரு பத்திரிக்கை வருகிறது. உடனே ஊருக்கு போய் திருமணம் செய்து கொள்கிறார். கண் இருக்கும்
போதும் இல்லாத போது விக்ரம் கண்தெரியாதவர் போல் தான் இருக்கிறார். ஓவராக பிராக்டீஸ்
செய்துவிட்டாரோ என்னவோ. பார்த்தவுடனே தெரிந்து விடுகிறது விக்ரமின் நண்பர் தான் வில்லன்
என்று. அதை விட கிளைமாக்ஸ் – RAW AGENT பெருமை, லண்டன் குண்டுவெடிப்பு பழி, மனைவியின்
இறப்பு, தீவிரவாதி முத்திரை, கண் பார்வை இழப்பு – இவற்றிற்கெல்லாம் தீர்வான கிளைமாக்ஸ்
ஒரு ஃபேக்டரிக்குள் fist fight செய்து முடிக்கப்படுகிறது. வெளியே iPad ஐ நோண்டிக்கொண்டு
ஆபீஸர் நாசர் வெயிட் செய்கிறார் (அவர் iPad நோண்டலுக்கு சொல்லப்படும் காரணம் மஹா மட்டம்).
இந்தக் கதையில் அப்படி என்ன இருக்கிறது என்று இது என்னுடைய கதை என்று ஒருத்தன் கேஸ்
போட்டான் என்று தான் எனக்குத் தெரியவில்லை.
2) பில்லா
II
நான்
தல ஃபேனும் இல்லை, தளபதி ஃபேனும் இல்லை. தமிழ் சினிமாவின் ஃபேன். இப்படிச் சொல்ல காரணம்
இருக்கிறது. கோட்டு + கூலிங் க்ளாஸ் – இதை யார் போட்டுக்கொண்டு நடந்தாலும் எனக்கு “தல”யைப்
பார்ப்பது போலவே இருக்கிறது! பில்லா ஒரு அகதி – எதற்கு இந்த வேண்டாத நெஞ்சை நக்கும்
வேலை? ஈழத்திலிருந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வரும் நம் இனத்தவர் இப்படியா
கொழுக் மொழுக் என்று இருக்கிறார்கள். நல்ல செழிப்பான அகதியாக இருக்கிறார் பில்லா. ஏதோ
பாரின் டிரிப் போய்விட்டு டையர்டாக இறங்கும் டூரிஸ்ட் போல படகிலிருந்து இறங்குகிறார்.
அந்த முதல் காட்சியிலேயே படம் விழுந்துவிட்டது. பின் வந்த காட்சிகள் எதிலும் உயிரே
இல்லை. “நம்மளுக்கு என்ன வந்துச்சு, காச வாங்கியாச்சு, பூஜைய போட்டாச்சு, சும்மா எதையாவது
காட்டி படத்த முடிச்சு வப்போம். “தல” மாஸுக்கு முதல் நாளே படம் வெற்றினு அவங்களே அறிவிச்சிடுவாங்க”
என்று தான் படத்தை எடுத்திருக்கிறார்கள். கிளைமாக்ஸில் அகதி, பில்லா ஆக வேண்டும். லோக்கல்,
நேஷனல், இன்டர்நேஷனல் என்று படிப்படியாக வளர வேண்டும். உடன் இருப்பவர்களில் ‘ரஞ்சித்’
தவிர்த்து பழைய ஆட்கள் யாரும் இருக்கக்கூடாது. இதை மட்டும் வைத்துக்கொண்டு எதையோ எடுத்திருக்கிறார்கள்.
“ஸ்கிரிப்ட்” என்ற ஒன்றெல்லாம் இந்தப் படத்திற்கு உண்டா இல்லையா என்றே தெரியவில்லை.
சக்ரியைத் தவிர இரு வெளிநாட்டவர் பெயர்களை வேறு கதை-திரைக்கதையில் போட்டார்கள். அப்படி
என்னத்தடா உக்காந்து உக்காந்து எழுதுனீங்க? படத்துல் ஒரு எழவுமே இல்ல. அஜித் நல்லவர்
வல்லவர், உதவும் நெஞ்சம் கொண்டவர், டூப் போடாமல் சொந்த ரிஸ்க் எடுத்து சண்டை போடுபவர்,
பைக் ரேஸர், கார் ரேஸர். அட எல்லாமே ஓக்கே. ஊருக்குள் யாருமே செய்யாததை தல செய்கிறார். பாராட்டலாம், வாழ்த்தலாம். ஆனால் 250ரூ
டிக்கெட் கொடுத்து படம் பார்க்கப் போவது “தல நடப்பத பாத்தா மட்டும் போதும்” என்ற நினைப்பில் அல்ல. அவரது தொழிலான சினிமா வில் அவர் நடித்திருப்பதைப்
பார்ப்பதற்கு. அந்த சினிமாவில் கொஞ்சமாவது சரக்கு இருக்க வேண்டும். அப்பொழுது தான் தலயாக இருந்தாலும் வாலாக இருந்தாலும் ரசிக்க முடியும். நல்ல கதையாக தேர்ந்தெடுத்து
நடிப்பது, அதை விட முக்கியமாக "நீங்க நடந்தா மட்டும் போதும்" என்று
கதை செய்து கொண்டு வரும் மூடர்களை விரட்டுவதும் தான் தல யின் தலையாய கடமை. என்னைக் கேட்டால் விஜய்
பரவாயில்லை. தனக்கு இருக்கும் மாஸிற்கு சென்சிபில் முயற்சிகளை கொஞ்சமாவது எடுக்கிறார்.
அவரது படங்கள் சமீபகாலமாக பரவாயில்லை. ஆனால் அஜித்? சுத்த வேஸ்ட். இவரது படங்களில்
ஒன்றுமே இல்லை (மங்காத்தா உட்பட). சும்மா தல தல என்று கத்திக்கொண்டு இருப்பதெல்லாம்
இன்னும் எத்தனை நாள் என்று தெரியவில்லை. விஷ்ணுவர்தன் படத்தை நான் பெரிதும் எதிர்பார்த்திருக்கிறேன்.
காரணம் தல யோ, அவர் ரிஸ்க் எடுத்து டூப் போடாமல் நடித்த (அட வாங்குற சம்பளத்துக்கு இந்த ரிஸ்க் கூட எடுக்கலன்னா எப்படி?) சண்டைக்காட்சிகளோ அல்ல. “அறிந்தும் அறியாமலும்”,
”பட்டியல்”, ”பில்லா” படங்களை எடுத்தவரின் அடுத்த படம் என்பதற்காக.
3) மெரினா
“பசங்க”
பாண்டிராஜின் படம். அதனாலேயே பசங்க மாதிரியே முயற்சி செய்திருக்கிறார். மெரினா வில்
வாழும் சிறுவர்களைப் பற்றிய கதை. ஆனால் இவர் காட்டியதை விட பல விஷயங்கள் மெரினாவில்
தினம் தினம் நடக்கிறது. “மரண கானா விஜி”னு ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்டாலே, கேட்கக்கூட
வேண்டாம். அப்பப்போ டிவியில் வருவார். அப்படி அவர் வரும் போது சென்னையைப் பற்றியும்,
மெரினாவைப் பற்றும் அவர் சொல்லும் கதைகளைக் கேட்டாலே போதும். ஆயிரம் திரைக்கதைகளை உருவாக்கலாம்.
அது தான் மெரினாவின் உண்மையான முகம். பாண்டிராஜ் காட்டியிருப்பதை வைத்துப்பார்த்தால்
மெரினா வில் பசங்க எப்பொழுது பார்த்தாலும் கடலை விற்றுக்கொண்டும், ரேஸ் விட்டுக்கொண்டும்,
நல்லவர்கள் சூழ ஜாலியாக இருப்பதைப் போலத் தெரிகிறது. சிவகார்த்திகேயன் – ஓவியா பார்ட்
எல்லாம் எதற்கு என்றே தெரியவில்லை. பசங்க படத்தில் மீனாட்சி சுந்தரம்–சோபிக்கண்ணு க்ளாஸிக்.
அது போல் மீண்டும் முயற்சி செய்து இயக்குனர் தோற்றிருக்கிறார். பாண்டிராஜின் பலம் கன்டென்ட்.
பசங்க படத்திலும் சரி, வம்சம் படத்திலும் சரி “விஷயம்” அவ்வளவு இருக்கும். ஒவ்வொரு
காட்சிக்கு பின்னாலும் உழைப்பு இருக்கும். ஆனால் மெரினாவில் எதுவுமே இல்லை. சிறுவர்களுக்கான
படம் போல் இல்லை, சிறுவர்கள் எடுத்த படம் போல் இருந்தது. கேடி பில்லா கில்லாடி ரங்கா
வில் முழு காமெடியை முயற்சி செய்திருக்கிறார். இதெல்லாம் அவர் ஏரியாவே இல்லை. பார்க்கலாம்
படம் எப்படி என்று.
4) சகுனி
“சகுனி”
– இந்தப் பெயரை மனதில் வைத்தே ஆயிரம் கதைகளை எழுதலாம். முதன்முதலாக 2500 தியேட்டர்களில்
வெளியிடப்பட்ட தமிழ் படம். அதற்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாத படம். கார்த்தி நடித்திருப்பது
ஐந்தே படங்கள் தான். ஆனால் சூர்யாவின் தம்பி என்பதற்காக மட்டும் இவருக்கு கொடுக்கப்படும்
விளம்பரமெல்லாம் ரொம்பவே அதிகம். பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் தவிர வேறெந்த படங்களிலும்
நடிப்பிலும் பெரிதாக ஈர்ப்பதாகத் தெரியவில்லை. ஆள் பார்ப்பதற்கு “யூத்” ஆகவும் இல்லை.
பிட் ஆகவும் இல்லை. சகுனி படமெல்லாம், என்னவென்று நினைத்து கதையை எழுதினார்களோ தெரியவில்லை.
படத்தில் லாஜிக் என்பது ஊரூகாய் அளவு கூட இல்லை. “பொட்டு வைத்து புளியோதரை சாப்பிட்டு
கொண்டிருந்த” அம்மாஞ்சி கார்த்தி இன்டர்வலுக்கு முன் திடீரென்று ஒரு முடிவெடுக்கிறார்.
கந்துவட்டி ராதிகாவை மேயர் ஆக்குகிறார், ஒரு சாமியாரை உருவாக்குகிறார், ஜெயிலில் எதிர்கட்சி
தலைவரிடம் 5 நிமிடம் தனியாகப் பேசுகிறார். டன். தமிழகத்து முதல்வரை ஜெயித்து விடுகிறார்.
அவ்வளவு சுலபமானதா அரசியல் அல்லது அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் அத்தனை கேனா புனா
வா தெரியவில்லை. கமர்ஷியல் படங்களுக்கு லாஜிக் தேவையில்லை என்பது சரிதான். அதற்காக
இப்படியா? தமிழ் நாடு என்றுதானே காட்டுகிறார்கள்? தமிழ் பேசும் வேற்று உலகம் என்று
சொல்லியா படத்தைத் தொடங்குகிறார்கள்? முதல் பாதியில் கார்த்தியும் சந்தானமும் ரோட்டில்
உச்சா போனதற்கு மொபைல் கோர்ட்டில் ஃபைன் கட்டுவார்கள். அப்போது நீதிபதி “Did you
pass urine in public place?” என்று கேட்பார். அதற்கு கார்த்தியும் சந்தானமும் ஒன்றும்
புரியாமல் “ங்கே” என்று ஒரு ரியாக்ஷன் கொடுப்பார்கள். அது காமெடி.. அதே கார்த்தி க்ளைமாஸிற்கு
முன் ஒரு ஃப்ரேம் லெஸ் கண்ணாடியை போட்டுக்கொண்டு Lenovo லேப்டாப்பை சீரியஸாக பார்த்துக்கொண்டிருப்பார்.
அது ஹீரோயிஸம். இன்டர்வெல் வரை அத்தை மாமாவிற்கு கூஜா தூக்கிக்கொண்டு, பின் சந்தானத்தோடு
சேர்ந்து கொண்டு காமெடி செய்து கொண்டிருந்தவருக்கு, பிரகாஷ்ராஜை எதிர்க்க ஆரம்பித்தவுடன்,
அரசியல் சரி, ஆங்கிலமும் ஜஸ்ட் லைக் தட் கைகூடிவிட்டதா? இது ஒரு சாதாரண “எதைக் காட்டினாலும்
பார்ப்பார்கள்” என்ற நமது தமிழ் சினிமா போக்கிற்கு எடுத்துக்காட்டு. இது போல் இன்னும்
எவ்வளவோ அபத்தங்கள் இருக்கிறது. சாமியார் நாசர் தனி கொடுமை. இந்த மனிதரை ஏன் எல்லா
படங்களிலும் இப்படி பாடாய் படுத்துகிறார்களோ தெரியவில்லை. சகுனி – முதல் பாதி கமல்-ரஜினி
காமெடியைத் தவிர்த்து ஒன்றுமே இல்லை.
5) வேட்டை
பையா
ஹிட்டான வேகத்தில் வேட்டை அறிவிப்பை வந்துவிட்டது. அப்பொழுதே நினைத்தேன், படம் நிச்சயம்
அரைவேக்காடாகத்தான் இருக்கும் என்று. மேலும் படம் வெளியாகும் முன்பே ஹிந்தில அமிதாப்
ரீமேக் பண்ணக் கேட்டாக, சைனா ல ஜாக்கிசான் ரீமேக் பண்ணக் கேட்டாக என்று சொல்லும் போது
கன்பார்ம் செய்துவிட்டேன். படத்தில் அமலா பால் பரவாயில்லை. பார்க்க கொஞ்சம் நன்றாக
இருந்தார். ஆனால் சமீரா - அய்யோ பாவம் மாதவன். மாதவனை இன்னமும் எத்தனை படத்தில் ஷட்டரைக்
க்ளோஸ் பண்ணச் சொல்வார்களோ தெரியவில்லை. மாதவனுக்கு “ரன்”, ஆர்யாவிற்கு “வேட்டை” என்று
எந்த அர்த்தத்தில் லிங்கு பேட்டி கொடுத்தார் என்றே தெரியவில்லை. ஏன் படம் சரியில்லை
என்பதையெல்லாம் விளக்கி எழுத படத்தில் ஒன்றுமே இல்லை. சுதந்திரத்திற்கு முன்பே வர ஆரம்பித்த
கோழை அண்ணன், வீரன் தம்பி, ஆள்மாராட்டம். போலீஸ் கதை வேறு. இப்படியொரு மட்டமான போலீஸ்
கதையை நான் பார்த்ததே இல்லை. அண்ணன் தம்பி கதைகள் எல்லாம் எவ்வளவோ எடுக்கலாம். இந்த
மாதிரியே அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருந்தால் படமும் ஓடாது, எந்த மல்டி-ஸ்டாரர்
படமும் வராது.
6) அரவான்
அங்காடித்தெரு
நிச்சயம் ஒரு உலக சினிமா. அதை எடுப்பதற்கும் வெளியிடுவதற்கும் வசந்தபாலனுக்கு எவ்வளவு
நேரம் ஆனது, எவ்வளவு போராட வேண்டியிருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அரவான்
அப்படி இல்லை. அங்காடித்தெரு ஹிட் என்று தெரிந்தவுடன் அறிவுப்பு வெளியாகிவிட்டது. நல்ல
விளம்பரத்துடன், அங்காடித்தெருவிற்கு இருந்ததை விட பல மடங்கு எதிர்பார்ப்புடன் வெளியானது.
ஆனால் ரிசல்ட்? அரவான் வெளியாகி இவ்வளவு நாளாகியும் வசந்தபாலனின் அடுத்த பட அறிவிப்பு
அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அமைதியாக, மிகவும் அமைதியாக அடுத்த வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
ஒரு படம் வெளியாகி ஹிட்டானவுடன் ஏன் ஆட வேண்டும்? பின் ஏன் முடங்கிப் போக வேண்டும்?
வேட்டை “லிங்கு”வுக்கும் இதே கதிதான். பையா வெளியாகிய உடனே வேட்டை ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் இன்று அவர் அடுத்து என்ன படமெடுக்கிறார் என்றே தெரியவில்லை. சினிமா ரேஸில் வெற்றியைத்
தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது உண்மைதான். அதற்காக இப்படியா ஒரு மட்டமான படைப்பை
அவசர அவசரமாகக் கொடுத்து முந்தைய நல்ல படத்தில் வாங்கிய பெயரையும் சேர்த்து கெடுத்துக்கொள்வது?
அரவான் நிச்சயம் நல்ல படமாக வந்திருக்கும், திரைக்கதையில் கொஞ்சம் கவனம் காட்டியிருந்தால்.
காடுகளிலும் மலைகளிலும், வெயிலிலும் மழையிலும் உழைத்த உழைப்பு அனைத்தும் மோசமான திரைக்கதையால்
பாழாகிப் போனது. எதை பற்றியும் கவலை இல்லாமல் கிடைத்ததைத் திருடி, ஊர் ஊராக “ஜாலி”யாகச்
சுற்றித் திரியும் வரிப்புலி, உண்மையில் தன் காதல் மனைவி, மக்களைப் பிரிந்து, உயிர்
பயத்தால் பதுங்கி வாழும் பலி ஆள் என்று சொல்லும் போது, முதல் பாதியில் நாம் பார்த்த
ஜாலி ஜோக்கர் பாதிப்பினால், இரண்டாம் பாதி ப்ளாஷ்பேக்கும் சரி, கிளைமாக்ஸ் தலைவெட்டும்
சரி வலுவிழந்து விடுகிறது. இம்பாக்ட் சுத்தமாக இல்லை. ஏமாற்றமே இருந்தது. இரண்டாம்
பாதியெல்லாம் தியேட்டரில் உட்காரவே முடியவில்லை. நைட் ஷோ வேறு, அதுவும் தனியாக. ஆதி,
பசுபதி, “பேராண்மை” தன்ஷிகா உட்பட திறமையான நடிகர்களின் அத்தனை உழைப்பும் விளலுக்கு
இறைத்த நீர். ஒன்று முழுக்க முழுக்க சென்டிமென்டாகவோ அல்லது நரம்புகளை முறுக்கேற்றும்
போராளியின் கதையாகவோ அல்லது ஒரு வித்தியாச ஆக்ஷன் படமாகவோ வந்திருக்க வேண்டிய அரவான்,
வசந்தபாலனின் “என்ன நடந்தாலும் ஹீரோ கடைசில செத்துபோயிட்டா போதும், படம் ஹிட்டு” என்ற
தப்பான ஜட்ஜ்மென்ட்டால் தோல்விப்படமாக அமைந்தது. கதை திரைக்கதை தவிர்த்து மற்ற அனைத்து
கிராப்டிலும் திருப்தியளிக்கக்கூடிய படம் அரவான். ஆனால் ஒரு படம் ஹிட்டாக இவை இரண்டும்
தான் வேண்டும்.
7) முகமூடி
என்னத்த
சொல்ல. புலம்பி புலம்பி வாய் வலித்து, புலம்புவதைக் கூட பாதியிலேயே நிறுத்திவிட்டேன்.
முகமூடி சம்பந்தமாக நான் எழுத ஆரம்பித்து பின் பாதியிலேயே நிறுத்திய தொடரின் மிஞ்சிய பதிவுகள் கீழே.
முகமூடி
வெளியாவதற்கு முன் மிஷ்கின் என்னென்ன்வோல்லாம் பேசினார். இப்போது ஆளையே காணோம். எங்கிருக்கிறார்,
என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை. பூனை அடுக்களையில் ஒளிந்து கொண்டது
போல. தேவையா இதெல்லாம்? லிங்குசாமி படத்தைத் தயாரிக்க மறுத்ததற்காக வில்லனுக்கு அங்குசாமி
என்று ஒரு பெயரை யோசித்தவருக்கு, கதையை சுவாரஸ்யமாக யோசிக்கத் தெரியவில்லை.
8) முப்பொழுதும்
உன் கற்பனைகள்
அதர்வா
சிக்ஸ் பேக்ஸில் வானுலக தேவனைப் போல பெரிய பெரிய றெக்கையெல்லாம் வைத்துக்கொண்டும்,
தேவதை அமலா பாலின் மடியில் படுத்துக்கொண்டும் இருப்பது போன்ற முதல் போஸ்டர்களால் ஈர்க்கப்பட்டு
இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆனால் வீக்கான, பழைய ஸ்டைல் கதையால் படம் மோசமாக இருந்தது.
செலவு செய்து எடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே
தெரியவில்லை. அமலா பால் காணாமல் போய்விட்டால், அவரைத் தேடாமல், இரண்டு மூன்று நாட்கள்
ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்து விட்டு, அவரே திரும்பி வந்துவிட்டதாக நினைத்து
இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறார், அதர்வா. அவ்வளவு தான். படத்தில் இரண்டு
முறை இது போன்ற காட்சிகள் வருகிறது. அடப்பாவிகளா, காதலிய கடத்திட்டு போனவனை விரட்டிக்கொண்டு
நம்மாட்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள்? காதலியைத் தேடி அமெர்க்கா போனவன் கதையெல்லாம்
இங்கு உண்டு. ஆனால் இவர்கள் “எல்லாம் வேஸ்ட். காதலி போய்ட்டாலா, ரெண்டு நாள் விட்டத்த
பாத்துட்டு அமைதியா இருங்க, அப்புறம் காதலியே திரும்பி வந்துட்டதா நினைச்சுக்கோங்க,
அவ்வளவுதான், அப்புறம் அதுவே பழகிடும்” என்கிறார்கள் இந்தப் படத்தில். பிளாஷ்பேக் அம்மா
சென்டிமென்ட் கூட பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை. எதை எதையோ காட்டி, எங்கெங்கோ போய்
கடைசியில் சம்பந்தமே இல்லாத இருவர் அமலா பாலைக் கடத்திப் போக, அவர்களை “ரோப்” ஸ்டண்ட்
எல்லாம் போட்டு, அடித்து நொறுக்கி, மீண்டும் அமலா பாலைத் தொலைத்து, பின் அவரே தொலைந்து,
அமலா பால் ஒரு காலை வேளையில் “அம்மா பால்” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வர, படம் முடிகிறது.
9) போடா
போடி
சிம்பு
– ஒரு திறமைசாலி, தன் திறமையனைத்தையும்
எவ்வளவு தூரம் கேவலமாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு சிம்பு தான் சிறந்த எடுத்துக்காட்டு. போடா
போடி பல வருடங்களாக ப்ரொடக்ஷனில் இருந்த படம். வரலட்சுமி அருமையான டான்ஸர். கூடவே பல
வருடங்கள் கழித்து ஷோபனா வேறு நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் நான் “தமிழின் முதல்
டான்ஸ் திரைப்படம்” என்று சந்தோஷப்பட்டேன். ஆனால் என் நினைப்பில் மண்ணை வாரி அடித்தார்
சிம்பு. நடனத்தை விடுங்கள். ஷோபனா நடிப்பிற்காக இருமுறை தேசிய விருது வாங்கியவர். கலைச்சேவைக்காக
பத்மஸ்ரீ பட்டம் வாங்கியவர். அவரை இதை விட மட்டமான ஒரு கேரக்டரில் யாராலும் காட்ட முடியாது.
அதை விட படம் சொல்லும் கருத்து. தன் துறையில் ஜெய்க்க வேண்டும், உலகப் புகழ் அடைய வேண்டும்
என்று நினைக்கிற பெண்ணை “கலாச்சாரம்” “தமிழ் பண்பாடு” என்று சொல்லி கற்பமாக்கி வீட்டில்
உட்கார வைக்க வேண்டும். இதை வேறு யாரையாவது வைத்து சொல்லியிருந்தால் கூட மனது ஆறியிருக்கும்,
ஆனால் சொன்னது சிம்பு. டேய்… படத்தில் டான்ஸ் என்பதுகூட பேருக்கு தான். தன்னை ஒரு மிகப்பெரிய
“குத்து” டான்ஸராக காட்டிக்கொள்ளும் சிம்பு கடைசியில் ஆடும் குத்து டான்ஸ் தான் அவரது
கேரியரிலேயே வொர்ஸ்ட் டான்ஸ். “யே என்னப்பாருய்யா, நான் சொல்றதக் கேளுய்யா, நான் உன்னய
லவ் பண்றேன்யா” என்று சிம்பு பேசுவதைக் கேட்டாலே எரிச்சல் உச்சந்தலைக்கு ஏறுகிறது.
வரலட்சுமி சரத்குமாருக்கு நிச்சயம் இந்தப் படம் ஒரு நல்ல அறிமுகம். அவரது அழகில் கொஞ்சம்
ஆண்மை இருந்தாலும் அவர் பேசும் அந்த வேகத் தமிழில் தனி அழகு இருக்கிறது. அடுத்தடுத்த
படங்களில் இவரின் எதிர்காலம் தெரிந்து விடும். விடிவி கணேஷ் பரவா இல்லை. நல்ல வேளை
சந்தானம் இல்லை. போடா போடி எல்லாம் இல்லை வெறும் போடாங்… மட்டும் தான்.
10) ராட்டினம் / மனம் கொத்திப் பறவை
ராட்டினம்
– பார்த்தவங்கல்லாம் பாராட்டுறாங்க, சூப்பர், அது இது என்று என்னென்னவோ சொன்னார்கள்.
படத்தைப் பார்த்தால் அப்படி ஒன்றுமே இல்லை. இது மற்றுமொரு ‘விடலைக் காதல் பாடையில்
முடியும்’ டைப் “காதல்” கதை தான். படத்தில் புதிதாக எதையுமே சொல்ல வில்லை. சம்பதமே
இல்லாமல் கிளைமாக்ஸில் ஒருவரைக் கொன்று இம்பாக்ட் கிரியேட் செய்யப் பார்த்திருக்கிறார்கள்.
அவ்வளவு தான். ஹீரோ நடிப்பு பரவாயில்லை. ஆனால் ஹீரோயின், ஹும் நோ கமெண்ட்ஸ். ஆனால்
ஒன்று, இன்னும் எத்தனை படங்கள் பள்ளிக்காதலை மையப் படுத்தி வரப்போகிறாதோ தெரியவில்லை.
ஒரே ஒரு ஆறுதல் படத்தின் உண்டு. நான் எனது பள்ளிப்பருவம் முழுவதையும் தூத்துக்குடியில்
தான் கழித்தேன். இதுவரை தூத்துக்குடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில் இது கொஞ்சம்
பரவாயில்லை. வெறும் போட் களையும், ஹார்பரையும், ஏலே, ஓலே என்று பேசுபவர்களை மட்டும்
காட்டாமல், ஊரை, ஊரின் முக்கியமான ஸ்பாட்களை அருமையாகக் காட்டியிருக்கிறார்கள். பழைய
நினைவுகளில் மிதந்தது உண்மை. எனக்கு இப்படி. மற்றவர்களுக்கு இதுவும் இருந்திருக்காது.
மனம்
கொத்திப் பறவை - எழில் ஒரு நல்ல இயக்குனர். அவரது முந்தைய படமான தீபாவளி (பில்லு -
சுசி) எனக்கு பிடிக்கும், வியாதிப்படமாக இருந்தாலும். ஆனால் மனம் கொத்திப் பறவை பிடிக்கவே
இல்லை. ஏனென்றால் படத்தில் ஒன்றுமே இல்லை. காமெடியும் இல்லை, காதலும் இல்லை, கதையும்
இல்லை. முதல் பாதியில் வீட்டில் இருக்கும் போது தாவணி, ஜடை போட்டுக்கொண்டு இருக்கும்
ஹீரோயின், இரண்டாம் பாதியில் சிட்டிக்கு கூட இல்லை சும்மா ஊட்டிக்கு போனதற்கே ஸ்லீவ்லெஸ்,
லூஸ் ஹேர், “வாவ் நைஸ்” மொழி என்று ஆளே மாறிப் போகிறார். இது ஒரு சாதாரண எக்ஸாம்பிள்.
ஹீரோ எப்படி பணக்காரன் ஆகி திரும்ப ஊருக்கு வருகிறார், ஹீரோயின் எப்படி தன் குடும்பத்தை
மீறி இவ்வளவு நாள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார் என்பதையெல்லாம் யாரும் கேட்கவே
இல்லை. சிவகார்த்திகேயன் - நிச்சயம் அருமையான கலைஞன். இந்தப் படம் கொஞ்சமாவது ஓடியதற்கு
முக்கிய காரணம், இவர் இருக்கிறார் என்ற ஒற்றைக் காரணத்திற்காகத்தான். காமெடியனாக பட்டையைக்
கிளப்புகிறார். ஆனால் தமிழ் சினிமாவில் ஹீரோவாக (காமெடி ஹீரோவாகவே இருந்தாலும்) நிலைத்து
நிற்பதற்கு நிறைய தகுதிகள் வேண்டும். அதை வளர்த்துக்கொண்டால் புகழ் இன்னும் விரியும்.
இப்போதிருப்பது பத்தாது.
சினிமாவில் முதல் வாய்ப்போ, மீண்டும் ஒரு வாய்ப்போ கிடைக்காமல் எத்தனையோ பேர் அலைந்து திரித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு பலருக்கு இந்த வருடம் கிடைத்தும், கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாத ஒரு மெத்தன மனநிலையில் படங்களை எடுத்து வெளியிட்டிருகிறார்கள். உலகிலேயே அதிக சினிமா தயாரிக்கப்படும் இடங்களில் ஒன்றான கோலிவுட் இந்த வருடம் மஹா மட்டமாகிப் போனதற்கு இவர்கள் தான் காரணம். பேருக்கு பல படங்கள் தோற்றாலும், ரசிகர்கள் பெருமளவில் தங்களது பணத்தை இழந்திருக்கிறார்கள். இந்த வொர்ஸ்ட் லிஸ்ட் குறைந்து பெஸ்ட் லிஸ்ட் அடுத்த வருடமாவது அதிகமாகுமா என்று பார்ப்போம்.
தமிழில் எந்த மாதிரியான படங்கள் வர வேண்டும் என்ற எனது ஆசையை ஏற்கனவே ஒரு பதிவாக எழுதியிருக்கிறேன். அதையும் முடிந்தால் படிக்கவும்.
12 comments
பாகன், மிரட்டல் ரெண்டும் இந்த லிஸ்டை விட்டு தப்பித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.. அடுத்த பதிவையும் போட்டுட்டா ஆத்ம திருப்தி!
ReplyDelete* உலகிலேயே அதிக படங்கள் தயாரிப்பது கோலிவுட்டா?? நான் முன்பு வாசித்த வரையில் இந்திய அளவிலேயே வருடத்துக்கு படங்கள் எண்ணிக்கையில் கோலிவுட் 3வது இடத்தில் (பாலிவுட், டோலிவுட்) என்று நினைக்கிறேன்..
* Hobbit பார்த்துட்டு yet another i Max experience!னு மட்டும் போட்டிருக்கீங்க.. ரசிகர்கள் ஆகா,ஓகோன்னும் மத்தவங்க வேஸ்டுன்னும் சொல்லிக்கிட்டிருக்காங்க..
இங்கயும் 3டியில ஓடுது. படம் எப்படியிருக்குன்னு சொன்னீங்கன்னா (அதுக்கு தனிப் பதிவா எழுதுற ஐடியா இருந்தா வெயிட் பண்ணுறேன்!) கன்ஸிடர் பண்ணிக்குவேன்.. :)
பாகன் இன்னும் பார்க்கவில்லை. எதிர்பார்ப்பும் இல்லை. மிரட்டல் கூட நல்ல காமெடி படம் தான். டைம்பாஸ் ஆனது. அடுத்த பதிவு நாளை நிச்சயம் :-)
Deleteone of the largest என்பதற்கு பதில் the largest என்று எழுதிவிட்டேன். இப்பொழுது திருத்து எழுதியிருக்கிறேன். நன்றி...
LOTR ரசிகர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் பிடிக்கும். மேலும் LOTR போல ராவாக இல்லாமல் குழந்தைகள் விரும்பும் வண்ணம் இந்தப் படத்தை எடுத்திருந்தார்கள். i Max என்பதால் சொல்ல்வே வேண்டாம், எனக்கு படம் ரொம்பப் பிடித்திருந்தது. 3Dயில் தாராளமாக ஒரு தரம் பார்க்கலாம் (னீங்கள் LOTR fan ஆக இருந்தால்)... LOTR பத்தி பதிவெழுதுற அளவுக்கெல்லாம் நமக்கு விவரம் பத்தாது :-)
nice da :)
ReplyDeleteThanks machi :-)
Deleteசூப்பர் பாஸ் வரிசை
ReplyDeleteநன்றி தல...
Deleteகொஞ்சமும் சந்தேகம் இல்லாமல் இந்த வருடம் நிறைய சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து பார்த்த படங்களினால் ஏமாற்றம் அடைந்து அதனால் பணத்தையும் வீணடித்து உள்ளனர்.நீங்கள் சொல்லி இருப்பது போல் worst listஇல் சேர தான் அதிக அளவில் படங்கள் இருக்கின்றன.
ReplyDeleteபடம் பார்க்கும் சூழ்நிலை பற்றி சொன்னது அருமை.சீக்கிரமே ஒரு முழு பதிவை எதிர்பார்க்கிறேன்.
பார்த்து நண்பா இணைய உலகில் விஜயை விட அஜித் ரசிகர்கள் தான் அதிகம் (மொத்தத்தில் அல்ல).நீங்கள் அஜித் சுத்த வேஸ்ட் என்று சொல்லி விட்டீர்கள்.உங்களை விஜய் ரசிகன் என்று முத்திரை குத்தி ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்க்க போகிறார்கள் .எதற்கும் பின்னூட்டத்தை அடிக்கடி செக் பண்ணி நீக்குங்கள் .(நான் எவ்வளோ பார்த்தவன் ) மங்காத்தா பிடிக்காதா? நான் விஜய் ரசிகன் தான் இருந்தாலும் மங்காத்தா ரொம்ப பிடிக்கும்.
சகுனி என்னும் கேவலமான படத்தை சன் டிவி 2012 டாப் மூவீஸ் (வருட டாப் 10) இடம் பெற்றுள்ளது.இந்த கொடுமையை எங்க போய் சொல்ல.. கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியனும் சந்தேக லிஸ்டில் தான் இருக்கு.
அட என் லிஸ்டில் முப்போதும் உன் கற்பனைகள் விட்டு விட்டேன்.போடா போடி,ராட்டினம்,மனம் கொத்தி பறவை போன்ற படங்கள் நல்ல வேலை நான் பார்க்கவே இல்லை.
நன்றாக எழுதுகிறீர்கள் .வாழ்த்துக்கள்.--
அஜித் படங்கள் வேஸ்ட் என்று அர்த்தம் கொள்வதை விட, அஜித் நடிக்கும் படங்கள் வேஸ்ட் என்று புரிந்துகொண்டால், யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்காது.
Deleteவிஜய் யோ, அஜித் தோ அல்லது வேறு யாராக இருந்தாலும் உள்ளதைச் சொன்னால் பொத்துக்கொண்டு வந்து ஆபாச வார்த்தைகளால் திட்டுவார்கள் என்றால் படம் பார்த்து நான் தண்டம் அழுத 250ரூ மனிஆர்டர் அனுப்பச் சொல்லுங்கள். அது எப்படி முடியாதோ அது போலத்தான் இதுவும். என்னை, நான் எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது :-)
அலெக்ஸ் பாண்டியன் ரிசல்ட் எல்லாம் ஏற்கனவே அறிவித்து விட்டார்கள்...
பேபி!நீங்க என்ன தியேட்டர்ல முறுக்கு விற்கிறீங்களா!இத்தனை படம் பார்க்கிறீங்க:)
ReplyDeleteதியேட்டரில் படம் பார்ப்பது மாட்டும் தான் ஒரே பொழுதுபோக்கு :-)
Deleteவெறுப்பு லிஸ்ட்ல வேட்டையையெல்லாம் பின்னுக்குத் தள்ளிட்டு தாண்டவத்துக்கு 1ம் நம்பர் கொடுத்திருக்கீங்களே!
ReplyDeleteஒரு படத்த்தின் வெற்றிக்கு பிரபலமான கதாநாயகன்,கதாநாயகியின் Goodwill கூட அவசியம்.இதுல வேற ரஜனியுடன் விக்ரம் ஒப்பீடு வேற!புதுசா,இளசாவே பார்க்கனும்ன்னா கோடம்பாக்கத்துல நடிகை தேடும் வேலையை உங்ககிட்டத்தான் கொடுக்கனும்:)
திரைமணம் பகுதி ரொம்ப ஆபத்தான ஏரியான்னு தெரியாமல் கால் இடறி வந்து விட்டேன்:)
கோடம்பாக்கத்தில் இப்பொழுதே திறாமையான "இளசு" நடிகைகள் பலர் இருக்கிறார்கள். புதிதாகவெல்லாம் தேட வேண்டாம் :-)
Delete//திரைமணம் பகுதி ரொம்ப ஆபத்தான ஏரியான்னு தெரியாமல் கால் இடறி வந்து விட்டேன்:)//
என் பதிவைக் கண்டதால் இந்த கமெண்ட்டா? சரிதான் :-)
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...