12-12-12: தலைவர் பிறந்தநாள்...

7:10:00 AM



தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்று பிறந்த நாள். ஸ்பெஷல் தேதியான 12-12-12ல் தனது கோடிக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டிருக்கிறார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலைவர் தன் வீட்டு வாசலில் தன் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து ஆசி பெற்றதையே ப்ளாஷ் நியூஸாகப் போட்டு பரபரத்துக்கொண்டிருக்கிறது மீடியா உலகம். தீபாவளி ஸ்பெஷல் நிகழ்ச்சி போடுவதை போல எல்லா டிவி சேனல்களும் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்ந்ந்ந்தின் பிறந்ந்ந்ந்த நாஆஆளை முன்னிட்டு…” என்று தலைவர் புகழ் பாடும் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள், ஸ்பெஷல் திரைப்படங்களை ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன. லாரன்ஸ் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மியூசிக் ஆல்பம் வெளியிட்டுள்ளார், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ரஜியுடன் தான் வேலை செய்த தருணங்களை “பாட்ஷாவும் நானும்” என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இன்னும் உஅலகெங்கிலும் உள்ள பல ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பல்வேறு வழிகளில் சொல்லிகொண்டிருக்கின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன்பே இணையதள கொண்டாட்டத்திற்கு ரசிகர்கள் தயாராகி விட்டபோதும், நேற்று மாலையிலிருந்து வாழ்த்துக்களால் FaceBookக்கும் Twitterரும் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. பதிவுலகத்திலும் கணிசமான அளவு தலைவர் பெருமை பேசும் பதிவுகள் வந்துவிட்டிருக்கிறது. எனது பங்கிற்கு இதோ இந்த பதிவு.

விபரம் தெரிந்த வயதிலிருதே நான் ரஜினி ரசிகன். ரஜினிக்கு பின் தான் கமலும் இன்ன பிறரும் எனக்கு அறிமுகமானகள் என்றே சொல்லலாம். நான் மட்டுமல்ல நமது அடுத்த தலைமுறறையினருக்கும் தலைவரைப் பிடித்திருக்கிறது. இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது. இப்போது நான்காவது படிக்கும் எனது அக்கா வின் மகனுக்கு “சிவாஜி” என்றால் உயிர். “சிவாஜிங்கிறது படத்தோட பேருடா, அவர் பேரு ரஜினி” என்றால் நம்ப மறுக்கிறான், அவன். எந்திரன் பார்த்துவிட்டு “சிவாஜி சிட்டியா நடிச்சிருக்கார்” என்றான். ஐந்தரை வருடங்களுக்கு முன் அவனுக்கு விபரம் தெரிந்து, புரிந்து பார்த்த படம் சிவாஜி. அன்றிலிருந்து இன்று வரை அவன் ரஜினி ரசிகன். “சிவாஜி”, “எந்திரன்” பார்த்த தலைமுறைக்கே இப்படி என்றால், “பாட்ஷா”, “அண்ணாமலை”, “அருணாச்சலம்”, “தளபதி”, “முத்து”, “படையப்பா”, “சந்திரமுகி” பார்த்த நாம் எப்படி தலைவரை ரசிக்காமல் இருக்க முடியும்?

தமிழகத்தில் சினிமாவிற்கு என்று ஒரு மாபெரும் சக்தி இருக்கிறது. சினிமாவை கலையாகப் பார்க்காமல், சினிமாக்காரர்களை தெய்வமாக நாம் பார்க்கிறோம். அதிலும் தலைவரைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை (மேல் உள்ள படத்தை ஒருமுறை பார்க்கவும்). திரையில் நடிகர்கள் சொல்லிக்கொடுத்ததை நடிக்கிறார்கள் என்பதைத் தாண்டி அவர்கள் செய்வது அனைத்தையும் நாம் உண்மையென நம்புகிறோம். சினிமாவை சினிமாவாகப் பார்க்கும் போக்கு நம்மிடம் இல்லை. இனிமேலும் இருக்காது என்பதும் நன்றாகவே தெரிகிறது. ஆங்கிலேயர் நம்மை விட்டுச் சென்ற பிறகு நம்மை அதிகம் ஆண்டவர்கள் சினிமாகாரர்கள் தான். “நாட்டை ஆள” ஒரு நல்ல விசிட்டிங் கார்டாக, கிட்டத்தட்ட அனுமதிச் சீட்டாகவே சினிமா இருக்கிறது. அதனால் தான் ரசிகர் மன்றங்கள் எல்லாம் மக்கள் இயக்கங்களாகவும் பின்னர் கட்சிகளாகவும் உருமாறிக்கொண்டே இருக்கின்றன. பட்டம் இல்லாத நடிகன் இல்லை என்பது போய், சொந்தக் “கொடி” இல்லாத நடிகன் இல்லை என்றாகிவிட்டது நிலைமை. ஆனால் இந்த விஷயத்தில் தலைவர் கொஞ்சம் உஷாரான பார்ட்டி தான். தன் நிலை அறிந்து இன்று வரை தன் வேலை என்னவோ அதை மட்டும் செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்திற்கு வெறுமனே ஆதரவாகப் பேசியதற்கே கர்நாடகா மன்னிப்பு கேட்க வைத்தது. அது எப்படி மன்னிப்பு கேட்கலாம் என்று தமிழகம் கொந்தளித்தது. இதில் கட்சி தொடங்கி முதல்வரெல்லாம் ஆகியிருந்தால் பிறந்த இடத்திற்கும் போகமுடியாமல், வளர்ந்த இடத்திற்கும் எதுவும் செய்ய முடியாமல் தினம் தினம் வாழ்க்கை நரகமாகத்தான் இருந்திருக்கும். அதற்கு இப்போதிருகும் நிலை எவ்வளவோ பரவாயில்லை. அஜித் ஒரு விழா மேடையில் “மிரட்டுறாங்க அய்யா” என்று சொன்ன உடன், விருட்டென்று எழுந்து நின்று, முதல் ஆளாக ரஜினி கை தட்டும் போதே தெரியவில்லை, மனதில் எவ்வளவு வேதனை இருந்திருக்கும் என்று. நடிகனும் மனிதன் தான். அவனுக்கும் தன் வாழ்க்கையை நிம்மதியாக வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கும். தலைவர் பிறந்தது கர்நாடகாவில், சம்பாத்திதது தமிழகத்தில், ஆனால் நிம்மதி என்ற வஸ்த்துவைத் தேடி அலைவது இமயமலையில். பாவம் தலைவர்.

இன்னுமொன்று, இந்த “அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று வாயைத் திறப்பவர்களை எல்லாம் முதலில் உதைக்க வேண்டும். அடுத்த புரட்சித் தலைவர், அடுத்த புரட்சித் தலைவி, அடுத்த கேப்டன் என்றெல்லாம் இதுவரை யாரும் பேசியிருக்கிறார்களா? அது என்ன சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் “அடுத்து” என்று ஒன்று? பிச்சு புடுவேன் பிச்சு! எப்படி புரட்சித்தலைவர் என்றால் அது வாத்தியார் “எம்.ஜி,ஆர்” மட்டும்தானோ, அது போல “சூப்பர் ஸ்டார்” என்றால் அன்றும் இன்றும் என்றும் ஒருவர் தான் – அது நம் தலைவர் ரஜினி மட்டும் தான். மற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்பதே நிஜம். லிட்டில் சூப்பர் ஸ்டார், காமெடி சூப்பர் ஸ்டார், நாளைய சூப்பர் ஸ்டார் எல்லாம் ஓடிடுங்க, "சூப்பர் ஸ்டார் பட்டம்" ரஜினியிடம் PATENT RIGHTS வாங்கியிருக்கிறது "தலைவா, நான் உங்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்று". ஜாக்கிரதை!

63 வயதாகிவிட்டது தலைவருக்கு. இந்த நேரத்தில் ஒரு ரசிகனாக எனது ஆசைகளை / வேண்டுகோள்களை சொல்லலாம் என்றிருக்கிறேன்.

1) தலைவர் இனி படங்களே நடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இதுவரை நடித்தவையோ பொக்கிஷங்களாக இருக்கின்றன. ஆனால் அடுத்து நடித்தால் தன் வயதிற்கேற்ற வேடங்களில் மட்டுமே நடிக்க வேண்டும். இன்னும் குமரிகளுடன் டூயட் பாடிக்கொண்டு திரிவது பார்க்க நன்றாக இல்லை. அப்படிச் செய்வதால் தான் நேற்று வந்த சிறுவனெல்லாம் சரிக்குசமமாக உட்கார்ந்துகொண்டு “அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என்கிறான்”. படையப்பாவில் இளம் ரஜினியை விட, செகண்ட் ஆப் அப்பா ரஜினி தான் பட்டையைக் கிளப்புவார். அண்ணாமலையிலும் இதே தான். அது போல வயதிற்கேற்ப, ஆனால் மனதளவில் ஒரு angry young man ஆன கதாப்பாத்திரங்களில் மட்டுமே ரஜினி இனி நடிக்க வேண்டும். இது எனது வேண்டுகோள் மட்டுமல்ல, உண்மையான ரசிகர்கள் பலரது வேண்டுகோள்ளும் இதுவாகத்தான் இருக்கும்.

2) தலைவர் மனதளவில் உயர்ந்தவர், சத்தமில்லாமல் பலருக்கு நன்மைகளைச் செய்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் சத்தமில்லாமல் செய்வதை கொஞ்சம் கொஞ்சம் சத்தம் போட்டே செய்தால் நிச்சயம் அதனால் நன்மைகள் அதிகம். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவனின் பெயர் சொல்லி செய்து கொண்டிருக்கும் தொண்டுகள் பல (மிகச் சில சமயங்களில் தொல்லைகளும் உண்டு). அவர்களே தாங்களாகவே இப்படி பல விஷயங்களைச் செய்யும் போது, தலைவரே தன் கையால் சில உதவிகளைச் செய்து அந்த செய்தி “சூப்பர் ஸ்டார் ரஜினி இப்படிச் செய்கிறார்” என்று வெளியே வந்தால் “பலன்” பன்மடங்கு உயரம். உதாரணத்திற்கு திடீரென்று ஒரு நாள் “சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் 1000 ஏழைக்குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகம், சீருடை வாங்கித் தந்தார்; தன் ரசிகர்களையும் இதுபோல் ஏழைக்குழந்தைகளுக்கு உதவி செய்யச் சொன்னார் என்று செய்தி வருகிறது என்று வைத்துக்கொள்வோம்; தலைவனின் வழியில் ரசிகர்கள் அனைவரும் ஆயிரம் வேண்டாம் ஒரு 10 பேருக்காவது நிச்சயம் உதவுவார்கள். அப்படி தலைவரின் ஒரு சின்ன “மூவ்”விற்கே, தமிழகமே பயன்பெறும். தலைவருக்கு மட்டும் தான் இந்த சக்தி உண்டு. செய்யும் தொழில் சினிமா, சினிமா என்றாலே விளம்பரம் தான். தலைவரது பெயரை வைத்து கண்டதற்கெல்லாம் விளம்பரங்கள் செய்யப்படும் போது, நல்ல விஷயங்களுக்கு எல்லாம் செய்வதில் தவறே இல்லை.

3) சினிமா தயாரிப்பு நிறுவனம் – இன்றைய தேதியில் தலைவரைத் தவிர்த்து சொந்தமாக ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனம் இல்லாத பிரபலத்தை விரல் விட்டு எண்ணி விடலாம். தலைவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கும், செல்வத்திற்கும் ஜஸ்ட் லைக் தட் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இளைஞர்களுக்கு வாய்ய்பு ஏற்படுத்திக்கொடுக்கலாம். மீண்டும் தலைவரது அந்த சிறிய “மூவ்” தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் என்பதில் ஆச்சரியமே இல்லை. கதை, திரைக்கதை, இயக்கம் இதெல்லாம் தலைவருக்கு செட் ஆகாது என்பது உலகம் அறிந்த உண்மை (வள்ளி, பாபா). ஆனால் தயாரிப்பு, பட்டையைக் கிளப்பலாம். சினிமாவில் சம்பாதித்ததை கொஞ்சமேனும் சினிமாவில் செலவு செய்தால், அது அடுத்து வரும் தலைமுறைக்கு நல்லதொரு பாதையாக அமையும். தயாரிப்பு மட்டுமென்றில்லை, சினிமாவில் நடிப்பதைத் தவிர ஏதேனும் ஒரு சிறிய விஷயம் தலைவர் செய்ய வேண்டும் என்பது பலரது நீண்ட நாள் ஆசை. ஏனென்றால், நான் மட்டுமல்ல உலகமே தலைவரை வெறும் நடிகனாக மட்டும் பார்க்கவில்லை. அவர் அதற்கும் மேலே!

4) தலைவர் உடல்நலம் இல்லாமல் இருந்தது நிஜத்தில், திரையில் அல்ல. அதற்கு ரசிகன் காவடி எடுத்ததும், தீ மிதித்ததும், விரதம் இருந்ததும், கடவுளை வேண்டிக்கொண்டதும் நிஜத்தில் “ரஜினி” என்னும் மனிதனுக்காக, திரையில் தான் கண்ட சூப்பர் ஸ்டாருக்காக அல்ல. எனவே தலைவரும் தனது நன்றியை தனது ரசிகர்களுக்கு ஏதாவது நன்மை செய்து தான் காட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு, திரையில் சிவாஜி 3D படத்தைப் பார்க்கச் சொல்லி “இது தான் நான் உங்களுக்கு செய்யும் நன்றிக்கடன்” என்று சொல்லக்கூடாது. ஒரு மண்டபம் இருக்கிறது, அது ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப் படுகிறதா என்றால், தெரியவில்லை. மனைவி லதா பெயரில் “ஆஷ்ரம்” என்று ஒரு பள்ளி இருக்கிறது. அதில் நிச்சயம் ஏழைக் குழந்தைகளுக்கு இடமில்லை. தலைவர் நினைத்தால் செய்ய முடியாதது எதுவும் இல்லை. ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேள்வி கேட்கவும் எவனும் இல்லை. வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இன்னும் தலைவர் தனது நன்றிக்கடனைச் சரியாகச் செய்யவில்லையோ என்று தோன்றுகிறது.

இன்று இரவு “சிவாஜி” மறுபடியும் பார்க்கப்போகிறேன். எத்தனையாவது முறை என்று தெரியவில்லை. ஆனால் இம்முறை 3D யில். பட்டையைக் கிளப்புவதாய் கேள்வி. பார்த்து விட்டு, பதிவிலோ, அல்லது எனது Facebook பக்கத்திலேயோ சொல்கிறேன். ஆனால் ஒன்று சிவாஜி  3D கலெக்ஷனில் விரும்பித் தோற்றுப்போக பழைய ரெக்கார்டுகள் எல்லாம் காத்திருக்கின்றன.

சிவாஜியில் செய்தது போல பெரிதாக, மிகவும் பெரிதாக சீர்திருத்தம் எல்லாம் செய்ய வேண்டுமென்றில்லை, அதில் ஒரு 10 பாகத்தைச் செய்தாலே போதும், என் தலைவனை “தலைவன்” என்று வெறும் வாயால் சொல்லாமல், மனதால் சொல்வேன், அப்படிச் சொல்வதால் பெருமையும் அடைவேன். இது என் ஆசை மட்டுமல்ல, ரசிகர்களின் வேண்டுகோள், கட்டளை.

ஏதாவது செய் தலைவா, தமிழகம் காத்திருக்கிறது. HAPPY BIRTHDAY...

You Might Also Like

9 comments

  1. 1வதும், 4வதும் வேண்டுகோள்கள் எல்லா ரசிகர்களினதும் நியாயமான எதிர்பார்ப்பே!
    தலைவர் நிறைவேற்றுவாரா என்று பொறுத்திருந்தே பார்ப்போம்!

    ReplyDelete
    Replies
    1. காத்திருப்பதைத் தவிர நம்மால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது :-(

      Delete
  2. சரியாக சொல்லியுள்ளீர்கள்!!! ரஜினி ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அவரது ரசிகர்களின் அன்பை பெற்றவர். அவர் நினைத்தால் பல விஷயங்களில் முன்னுதாரணமாக இருக்க முடியும். ஏனோ இதுவரை செய்யாமல் இருக்கிறார் :(

    ReplyDelete
    Replies
    1. காத்திருப்பதைத் தவிர நம்மால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது :-( வேறென்ன சொல்ல :-(

      Delete
  3. சூப்பரா சொன்னிங்க பாஸ்

    ReplyDelete
  4. எஸ்.எஸ்.ராஜமெளலி பத்துன உங்களோட எல்லா பதிவையும் படிச்சேன். ரொம்ப நல்லா இருந்துது. ஒரு கமர்சியல் டைரக்டரா தொடர்ந்து எல்லாருக்கும் புடிக்கிற மாதிரி படங்களை கொடுக்கிறது கஷ்டம். அதை அவர் செய்றது ஆச்சரியமா இருக்கு. அவரோட ‘மகதீரா’ படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க சொல்ற மாதிரி ஹீரோயிசத்தோட உச்சத்த அனாயாசமா தொடுறார். மகதீரா எனக்கு கோரா சொல்ற ஆரூடம் பலக்கிற எடத்துல ராம் சரண் நெருப்போட வந்து நிப்பார். எனக்கு சிலிர்த்துடுச்சு. ஒரு அறிமுக ஹீரோக்கே இவ்ளோ இம்பாக்ட்-னா மாஸ் ஹீரோக்கு எப்படி இருக்குன் -னு யோசிச்சா பயங்கரமா இருக்கு :) எனக்கு இவர் ரஜினி வச்சு, தலைவரோட வயசுக்கு ஏத்த மாதிரி ஒரு மாஸ் கேரக்டர உருவாக்கி ஒரு படம் பண்ணா நல்லா இருக்கும் :)

    நீங்க எழுதுன எல்லா பாகத்தையும் ஒரு pdf-ஆ போடலாமே??? யமடோங்கா, சிம்மாத்ரி, சை, சத்ரபதி படங்களுக்கு சப்-டைட்டில் வச்சு பிரிண்ட் இருக்கா?? லிங்க் இருந்தா கொடுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி Kanagu... S S ராஜமௌலி, தலைவரை வைத்துப் படமெடுக்க வேண்டும் என்ற தனது ஆசையை ஏற்கனவே சொல்லிவிட்டார். நிச்சயம் நடக்கும் என்று நம்புவோம் :-) இவரது படங்கள அனைத்தும் YouTube லேயே ஆங்கில சப்-டைடிலுடன் கிடைக்கிறது. தேடிப்பாருங்கள்...

      Delete
    2. தேடி பாத்துட்டேன் தல. ‘யமடோங்கா’ மட்டும் தான் சப்-டைட்டில் வச்சு இருக்கு. மத்ததெல்லாம் இல்ல :(

      Delete
  5. இப்போ தான் ‘என் தமிழ் சினிமா இன்று’ பதிவுகளை படிச்சு முடிச்சேன். எல்லாமே நல்லா இருக்கு. ஹரி, கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கெல்லாம் ஒதுக்குன மாதிரி பாரதிராஜா, பாலசந்தர், பாக்யராஜ் அவர்களுக்கும் ஒரு பதிவ ஒதுக்கி விரிவா சொன்னா இன்னும் நல்லா இருக்கும் :)

    இந்த தொடரோட கடைசி பதிவு-ல பல விஷயங்கள சொல்லி இருந்தீங்க. ஆனா அதெல்லாம் நடக்கும்-னு எனக்கு நம்பிக்கை இல்ல. ஏன்னா இவங்க சினிமா வியாபாரத்த மொத்தமா மாத்திட்டாங்க. 100-வது ஒரு படம் நாலு தியேட்டர்-ல கொண்டாடி நான் பாத்து ரொம்ப நாள் ஆச்சு :( மொதல் நாள் மொதல் ஷோ பாத்துட்டு வர அந்த கெத்து போய்டுச்சு :(

    நான் தல ரசிகன் தான். ஆனா ‘பில்லா-II' எல்லாம் ஏன் நடிச்சார்-னு இருந்துது. மொக்கையான திரைக்கதை. விஷ்ணுவர்தன் எழுதுனத திருத்தி எழுதுனேன் -னு சக்ரி டொலட்டி சொன்னார். எனக்கென்னமோ பிளாங்க் பேப்பர் தான் வச்சிருந்துருப்பார்-னு நினைக்கிறேன் :)

    அந்த தொடர கொஞ்சம் விடாம எழுதுங்க :)

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...