என் தமிழ் சினிமா இன்று - 05

9:21:00 AM


தமிழ் சினிமாவில் ‘Trend Setter’ தகுதி என்பது வெகு சிலருக்கே கிடைக்கப் பெற்ற ஒரு பெருமை. எனக்குத் தெரிந்து பாரதிராஜா, மணிரத்னம் இன்னும் சிலர். ஒரே மாதிரியான ப்டங்கள் வந்து நம்மைச் சாகடிக்கும் பொழுது இவர்களது படங்கள் தனியாக தெரியும். கொண்டாடப்படும். முதல் படத்திலேயே அப்படி ஒரு பெயரை வாங்கியவர்கள் மிகவும் குறைவு. அதே போல பலமே, பலவீனமாக அமையப்பெற்றவர்களும் வெகு சிலரே. அப்படிப்பட்ட ஒருவர் தான் “கௌதம் வாசுதேவ் மேனன்”. 


ஒரு ஹீரோ அளவிற்கு பாப்புலராக இருக்கும் ஒரு ஸ்டார் இயக்குனர். முதல் படம் “மின்னலே” வில் ஆரம்பித்து இந்த வாரம் வெளியான “நீதானே என் பொன்வசந்தம்” வரைக்கும் இவரது படங்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம். சில படங்கள் இன்றும் கொண்டாடப்படுகின்றன.சில படங்கள் வெறுக்கப்படுகின்றன. நீதா.என்.பொ ரிசல்ட் என்னவென்பது இந்நேரம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். கௌதமின் பலம் என பல விஷயங்களைச் சொல்லலாம். அவரது காஸ்டிங், ஸ்டைலான மேக்கிங், வசனங்கள், இசை அறிவு, திரைக்கதை அமைப்பு, காஸ்டியூம் சென்ஸ் என்று எவ்வளவோ இருக்கிறது. ஆனால் இவையனைத்துமே ஏதாவது ஒரு கட்டத்தில் பலவீனமாகவும் அமைந்து விடுவது தான் சோகம். ஆனாலும் தன் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒன்றை முயற்சி செய்து அதில் பெரும்பாலும் வெற்றியும் அடைந்திருக்கறார், சினிமாவில் உள்ள காதலால படமெடுக்க வந்துவிட்ட இந்த மெக்கானிக்கல் இன்ஞ்சினியர். நீதானே என் பொன்வசந்தம் வெளிவந்து “ஓடிக்”கொண்டிருக்கும் இந்நேரத்தில், என் தமிழ் சினிமா இன்று தொடருக்காக எனது பேவரிட் இயக்குனர்களுள் ஒருவரான கௌதம் பற்றிய எனது பார்வையை எழுதுகிறேன்.

கௌதம் ஒரு மெக்கானிக்கல் இன்ஞ்சினியர். இதை ஏன் திரும்ப சொல்கிறேன் என்றால் எனக்குத் தெரிந்து கலைக் கல்லூரியையே சுற்றிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவை (எப்பொழுதாவது மருத்துவக் கல்லூரியும்) பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வந்தவர் கௌதமாகத்தான் இருக்கும். இவர் படித்த திருச்சி “மூகாம்பிகை பொறியியல் கல்லூரி”க்கு முன்பிருந்ததை விட இன்று பெயர், மவுசு அதிகமிருப்பதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். இவரது கல்லூரி வாழ்க்கை அருமையானதாக இருந்திருக்கிறது என்பதற்கு இவரது படக்காட்சிகளே சாட்சி. முதல் படமான மின்னலேவில் ஹீரோ இன்ட்ரோ இது “இந்த ப்ராக்ஸி வேலையெல்லாம் வேணாம்; இன்னிக்கும் வரலையா. ஒரு மெக்கானிக்கல் இன்ஞ்சினியங் ஸ்டூடண்ட் படிக்கனும் ஒரு ஃபயர் வேண்டாம்” என்று (கௌதம் வாய்சில்) பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் புரொபஸர் சொல்ல, சரக்கென்று தீக்குச்சி உரசி தம்மைப் பற்ற வைப்பார் மாதவன், பின்னணியில் “மேடி” தீம் சாங்! அன்றே எனக்கெல்லாம் தெரியும் நானெல்லாம் மெக்கானிக்கல் இன்ஞ்சினியங் தான் எடுப்பேன் என்று! ராஜீவ் மேனனிடம் உதவியாளராக சில விளம்பரப்படங்களிலும், “மின்சாரக் கனவு” படத்திலும் வேலை பார்த்து விட்டு, வெளியே வந்தார்.

மின்னலே
சில பல விளம்பரப்படங்களுக்குப் பிறகு கிடைத்த முதல் வாய்ப்பு “மின்னலே”. ஹாரிஸ் ஜெயராஜிற்கும், ரீமாசென்னிற்கும் “மின்னலே” தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. காதலர் தினத்தன்று வெளியான “மின்னலே”வில் (முதலில் வைக்கப்பட்ட பெயர் ஊலலல்லா…) புதியவன் என்பதால் பெரிய அளவில் சுதந்திரமாக படமெடுக்க முடியவில்லை என்று கௌதம் பின்னர் கூறினாலும், முற்றிலும் புதியவர்களே எடுத்த படமாகயிருந்தாலும், ஒரு முதல் பட இயக்குனரின் படம் போல் இல்லாமல், பெர்ஃபெக்ட் ரொமான்ஸ் கொஞ்சமே கொஞ்சம் ஆக்ஷன் கலந்த படமாக அமைந்தது “மின்னலே”. விவேக் காமெடி படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். இந்தப் படம் வெளியான போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். தியேட்டரில் பார்த்து விட்டு, “படம் சூப்பர்” என்று நான் சொல்ல “நிச்சயமான பொண்ண காதலிக்கிறான், இதெல்லாம் ஒரு படமா” என்று கூறி என்னை முறைத்தனர் என் பெற்றோர். கௌதம் மேனனின் ஆடியன்ஸ் யார் என்பதற்கு இந்த ஒரு பெர்ஸனல் உதாரணமே போதும். வசீகரா பாடல் (“தாமரை” வரிகள்) படம் வெளியாவதற்கு முன்னமே ஏகத்திற்கும் பிரபலமாகியிருந்தது. அது போலவே ரீமா சென் மழை -மின்னலில் அறிமுகமாகும் சீன் (சுப்புணி, நான் பேங்ளூர் பேசுறேன் ராஜேஷ்லருந்து) அதியற்புதம். மின்னலே பட பாட்டு கேஸட் எல்லாம் நான் வாங்கி வைத்திருந்தேன் (இது அதிசயம் தான். அதனால் தான் குறிப்பிட்டு எழுதுகிறேன்), அந்த அளவிற்கு அற்புதமான பாடல்கள். அவற்றைப் படமாக்கிய விதம் அதைவிட அருமை. மொத்தத்தில் படம் ஹிட். அலைபாயுதேவிற்கு பிறகு மாதவனுக்கு அடுத்த வெற்றி கூடவே “மேடி” என்னும் சுவீட் நேம் வேற. கௌதம் இந்தக் கதையை அலைபாயுதே முடித்திருந்த மாதவனிடம் சொன்னபோது, “மணிரத்னம் இந்த கதையை கேட்டு ஓக்கே பண்ணிட்டா பரவாயில்லை” என்று குருபக்தியோடு சொல்லியிருக்கிறார். மணி சொன்ன பதில் “இந்த படம் ஓடாது”. ஆனாலும் படம் டேஆப் ஆகி வெற்றியும் அடைந்தது. ஹிந்தியில் ‘Rehna Hai Tere Dil Mein’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு புரொடியூசரில் தலையீட்டால் ஒரிஜினாலிட்டி இழந்து தோல்விப் படமாக அமைந்தது.


காக்க காக்கவின் வெற்றி பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சத்தமில்லாமல் வந்து பெருமளவில் வெற்றி பெற்ற படம். படப் போஸ்டரைப் பார்த்து விட்டு என்னடா இது பேரு என்று நண்பர்கள் நாங்கள் சிரித்தது இன்று நினைவிருக்கிறது 10 th Standard). மௌனம் பேசியதே, நந்தா விற்கு பிறகு சூர்யாவிற்கு சரியான நேரத்தில் வந்த ஒரு படம். மின்னலே வந்த பொழுதெல்லாம் கௌதம் தெரியவே இல்லை.”மேடி” மட்டுமே முழு பயனையும் அடைந்தார். ஆனால் காக்க காக்க அப்படியில்லை. இந்தப் படத்திற்குப் பிறகு “கௌதம் மேனன்” என்ற இயக்குனரை தமிழ் சினிமா உலகமே திரும்பிப் பார்த்தது. காக்க காக்க வில் இருந்த ஸ்டைல், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஸ்டோரி லைன், A C P அன்புச்செல்வன் – மாயா லவ், வில்லன் பாண்டியா என்று தமிழ் சினிமாவில் ஒரு புது டிரண்டு உருவானது. தங்கப்பதக்கத்திலேயே சிவாஜி கையில் “காப்பு” அணிந்திருப்பார். ஆனாலும் காக்ககாக்க விற்குப் பிறகு தான் அது பேமஸ் ஆனது. அதன் பேரே “போலீஸ் காப்பு” தான். முதல் ஷாட்டிலேயே சூர்யா ஒரு லேக் ஹௌஸ் ஜன்னலை உடைத்துக்கொண்டு தண்ணீருக்குள் விழுவார். என் நண்பன் ஒருவன் இந்த முதல் சீன் ஆரம்பித்து படம் முழுவதையும் கதை சொன்னான். அன்புச் செல்வன் மாயாவை முதல் தடவை பார்க்கும் அந்த பஸ் ஸ்டாண்ட் ராகிங் சீன், ஆசிட் அடிக்கும் சீன், பெட்ரோல் பங்க் குணா, மணளி கஜா, சேது என்கவுண்டர் சீன்கள், “நாங்க நாலு பேர் எங்களுக்கு பயமே இல்ல”, “அவ கண்ல சின்னதா ஒரு கண்ணீர், அவ முகத்துல சந்தோஷம், ஒரு நிரஞ்ச பார்வ பாத்தா”, “வெறும் 50 ரூபா செலவு, என் செலவு, செல்வி சந்தோஷமா இருப்பாள்ல” போன்ற வசனங்கள், உயிரின் உயிரே, ஒன்றா ரெண்டா ஆசைகள் பாடல்கள் என்று காக்க காக்க பார்க்காத ஆளே இல்லை. அனைவருக்கும் பிடித்த ஒரு படமாக இன்றும் இருக்கிறது காக்க காக்க. இந்தக்கதை முதலில் சொல்லப்பட்டது அஜித் திடம். நல்ல கதைகள் அஜித் திற்கு பிடிக்காது என்பதால் “ஜோ” சிபாரிசால் சூர்யா கைக்குப் போனது வாய்ப்பு (அஜித் புறக்கணித்த கதைகளால் அதிகம் வாழ்ந்தது சூர்யா தான்). தெலுங்கில் வெங்கடேஷ் – அசின் நடிப்பில் Gharshana என்ற பெயரில் வெளியாகி தமிழை விட மிகப் பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.


என் அளவில் கௌதம் படங்களிலேயே பெஸ்ட் என்றால் அது வேட்டையாடு விளையாடு தான். கமல் தன் வயதுக்கேற்ற வேடத்தில் D C P ராகவனாக ஒரு கலக்கு கலக்கியிருப்பார். Another Episode in a Police officer’s life என்று படம் தொடங்கும் அந்த முதல் சீனே அற்புதமாக இருக்கும் (ஒன்னும் இல்ல மணி; என் கண்ணு வேணும்னு கேட்டியா?), குட்டி குட்டியாய் இருபது சீன்களில் கமல் எப்படிப்பட்ட போலீஸ் என்பதைக் காட்டும் “கற்க கற்க“ பாடல், குட்டி ப்ளாஷ்பேக்கில் கமல் - கமலினியின் கியூட்டான ஒரு காதல் கதை + பாடல் + மனைவியின் மரணம், வெரி டேஞ்சரஸ் சைக்கோ சீரியல் கில்லர் டாக்டர்களான இளமாறன் – அமுதன் (Gay?), அவர்கள் அப்படி ஆனதற்குக் காரணம், அமெரிக்காவிற்கு இன்வெஸ்டிகேஷனுக்கு போகும் நம்ம ஊர் போலீஸ், சேஸிங், கன்வின்சிங் க்ளைமாக்ஸ் என்று முற்றிலும் வேறு ஒரு சாயலில், வித்தியாசமான படமாக அமைந்து கௌதமின் டிரண்ட் செட்டர் பட்டத்தை உறுதி செய்தது இந்தப் படம். படத்தின் ஒரே திருஷ்டி ஜோதிகா. தேவையில்லாமல் ஒரு லவ் டிராக், வேகமாக படம் போய்க்கொண்டிருக்கும் பொழுது நடுவில் “என்னைப் புரிந்து கொள்ள மாட்டாயா” டைப் ஒரு பாடல் வேறு. “உயிரிலே என்று தொடங்கும் இந்தப் பாடல் ஸ்கிரிப்டிலேயே இல்லை, தயாரிப்பாளர் என் அனுமதியில்லாமல், நான் இல்லாமலேயே இந்தப் பாடலை எடுத்தார்” என்று பின்னர் கௌதம் சொன்னார். ஜோ டிராக் இல்லாமல் ஹிந்தியில் அமிதாப்பை வைத்து இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று கௌதம் முயற்சி செய்து, அது முடியாமல் போனது. கௌதம் படங்களில் ப்ரீ-ப்ரொடக்ஷனிலேயே அதிகம் பிரச்சனைக்குள்ளானது இந்தப் படம் தான். தயாரிப்பாளர் தற்கொலை அளவிற்குப் போக, கமல் ஆளவிடுங்கடா என்று கிளம்ப, ஏகப்பட்ட பிரச்சனைக்களுக்குப் பிறகு, கதை - திரைக்கதையில் கமல் “ஈடுபாடு” இல்லாமல், வெகு நாட்கள் கழித்து வெளியாகி “தமிழில் ஒரு ஆங்கில தரத்தில் ஒரு படம்” என்ற பாராட்டைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் முதல் முறையாக சென்னையில் மட்டும் சுமார் 16 திரையரங்குகளில் வெளியான முதல் படம் என்ற பெருமையும் பெற்றது..


வேட்டையாடு விளையாடு வெளியாகி ஐந்து மாதத்திற்குள் வெளியான படம் பச்சைக்கிளி முத்துச்சரம். முதலில் கமலுக்கு இந்தக் கதை தான் சொல்லப்பட்டது. கமல் ஆக்ஷன் த்ரில்லரை டிக் செய்ய, மாதவனுக்கும் பின்னர் சேரனுக்கு கதை சொன்னார் கௌதம். எதுவும் செட் ஆகாமல் கடைசியில் சரத்குமார் நடித்தார். ஜோ தனது அருமையான நடிப்பையும், ஆண்ட்ரியா, மிலிந் சோமன் கூட செம நல்ல பெர்பாமன்ஸைக் கொடுத்திருந்தும், சரத் உருவம் இந்தக் கதைக்கு செட் ஆகாமல் odd man ஆக இருந்ததால் out ஆனது. கௌதம் “இந்தப் படத்தோல்விக்குக் காரணம் சரத் தான், அவருக்காக கதையில் பல மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்ததால் தான் படம் தோற்றது” என்று ப்ளிக்காகவே பேட்டி கொடுத்தார். எது இருக்கிறதோ இல்லையோ வழக்கம்போல பாடல்கள் மட்டும் அருமையாக இருந்ததால் மட்டுமே இன்று இந்தப் படம் நினைவில் இருக்கிறது. Derailed என்னும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு முதலில் அறிவிக்கப்பட்ட பெயர் சிலந்தி! (சிலந்திகள் பெண்கள். ஆண்கள், பூச்சிகள்!)


பச்சைக்கிளி சமயத்தில் கௌதமின் தந்தை இறக்க, அவரது நினைவாக இந்தப் படத்தை எடுத்தார் கௌதம். அப்பா-பையன் இரண்டு வேடங்களிலும் சூர்யாவே நடித்த இந்தப் படமும் ஒரு வெற்றிப் படம்தான். முதல் பாதி அருமையாக, ரயிலில் சந்தித்த பெண்ணைத் தேடி அமெரிக்காவிற்குப் போகும் காதலன் கதையாக இருக்க இரண்டாம் பாதி எங்கு போகிறது என்றே தெரியாமல் சுற்றி சுற்றி இமையமலைக்கு தீவிரவாதியையெல்லாம் பிடிக்கப் போய், ஒரு வழியாக - முடியும். கௌதம் தன் தந்தையைப் பெருமைப் படுத்தத்தான் இந்தப் படத்தை எடுத்தார் என்று சொன்னால், Sorry, He was terribly wrong! அப்பா சூர்யா, சிம்ரனை பார்த்த மாத்திரத்தில் கரெக்ட் செய்ததைத் தவிர வேறு எதையுமே செய்யவில்லை என்பதே உண்மை. படுத்தபடி ஆங்கில நாவல் படித்துக்கொண்டு இருக்கும் அவர் திருவிழாவில் (?) துழைந்து போகும் சிறுவன் சூர்யாவை கண்டுபிடித்து I’m there for you சொல்லி கட்டிக்கொள்வார், லாரி ஓட்டிக்காட்டுவார் (Don’t tell அம்மா), “உன் வீடு சின்னதா இருந்தாலும் அழகா இருக்கு” என்று தோழிகளை வீட்டிற்கு அழைத்து வந்து பேசச் சொல்வார், “கஷ்டப்பட்டு workout பண்ணி இதெல்லாம் ஏத்தி வச்சிருக்கியே எதுக்கு” என்று சொல்லி ஏத்திவிட்டு ஆர்த்திக்காக பைட் பண்ணச் சொல்லுவார், “என் பையன் நெஞ்சில் கை வச்சிட்டான், இனி அவன் இஷ்டம் தான்” என்று வசனம் பேசுவார். கடைசியில் பேரன் பேத்தியைக் கொஞ்சி விட்டு செத்தும் போவார். அஸ்தியைக் கரைக்கும் இடத்தில் “உன் அப்பா வாரணம் ஆயிரம் சூழ வாழ்ந்தவர்” என்று அம்மா சிம்ரன் சொல்ல எனக்கு “ங்ங்கே…” என்று இருந்தது! அப்பா சூர்யா (கிருஷ்ணன்) பையன் சூர்யாவிற்கு என்று என்னைக் கேட்டால் இந்தப் படத்தில் எதுவுமே செய்யவில்லை! கடன் வாங்கி தான் கல்லூரியில் சேர்க்கிறார், அமெரிக்கா பயணமும் சூர்யாவின் சொந்த முயற்சியால் தான், காதலி இறந்து போதைக்கு அடிமையாகும் போது ஒதுங்கியேதான் இருப்பார், பின் மிலிட்டரிக்குப் போகிறேன் என்று சொல்லும் போதும், குத்து ரம்யாவைக் கட்டிக்கிறேன் என்று சொல்லும் போதும் எதுவுமே சொல்ல மாட்டார். பையன் சூர்யாவின் வாழ்க்கையை இன்ஸ்பயர் செய்யும் அளவிற்கு அப்பா சூர்யாவிற்கு காட்சிகளே இல்லை, பிடித்த பெண்ணிடம் பார்த்த மாத்திரத்தில் ஒரு Hi சொல்லி “and I am in LOVE with you” சொல்வதைத் தவிர. இதற்கு என் நண்பன் சொன்னது போல் நாடோடிகள் அப்பா எவ்வளவோ தேவலாம் (என்ன ரியாக்ஷன்? ம்ம்ம்… பாசிட்டிவ் ரியாக்ஷன்) சூர்யாவின் நடிப்பு, சிக்ஸ் பேக்ஸ், சமீரா மீது காதல், அமெரிக்கா போர்ஷன்ஸ், முக்கியமாக பாடல்கள் இவை தவிர ஒரு ஆணின் முழு வளர்ச்சியைக் காட்ட முயன்ற திரைக்கதை – இவை தான் என்னைப் பொறுத்த வரை “வாரணம் ஆயிரம்”மே தவிர அப்பா சென்டிமெண்ட் வொர்க் அவுட் ஆகவில்லை. படையப்பாவில் 15 நிமிடம் வந்தாலும் சிவாஜி ரஜினிக்கு கடைசி வரை இன்ஸ்பிரேஷன் கூடவே தேவர் மகன் சிவாஜி. ஆனால் இவர்கள் எல்லாம் சினிமா அப்பாக்கள். தவமாய் தவமிருந்து ராஜ்கிரண் – இவர் ரியல் லைஃப் இன்ஸ்பிரேஷன். வாரணம் ஆயிரம் கிருஷ்ணன் இந்த இரண்டு வகையிலும் பொருந்த மாட்டார். துரை தயாநிதியின் க்ளவுட் நைன் பிக்சர்ஸின் முதல் ரிலீஸ். இந்தப் படத்துடன் ஹாரிஸ் கழண்டு கொண்டார்.


சிம்பு கேரியரிலேயே ஒரு நல்ல படம் என்றால் அது வி.டி.வி தான். த்ரிஷாவிற்கும் பத்து வருட சினிமா வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு படம். படத்தின் முதல் பாதி நான் வாழ விரும்பிய வாழ்க்கை. “I want to be a film maker”, காதலைச் சொல்வது, காதலியைத் தேடி கேரளாவிற்குப் போவது, அசிஸ்டண்ட் டைரக்டராகச் சேர்வது அது இதுவென்று சூப்பராக இருந்தது. இரண்டாம் பாதி படமே அப்படித்தானா அல்லது எனக்குப் புரியவில்லையா என்று தெரியவில்லை. ஒரே குழப்பம். அளவிற்கதிக சொதப்பலாக எனக்குத் தெரிந்தது. குழப்பமான த்ரிஷா கேரக்டர் தான் ஒரிஜினல் பெண்கள் கேரக்டர் என்றாலும் திரையில் அதைப் பார்க்கும் போது இன்னமும் குழப்பியது. கூடவே வசனங்களும். முதல் பாதியில் அருமையாக இருந்த வசனங்கள் (உன் கண்கள் வழியா யாரும் என்னப் பாக்கல போல) போகப் போக ரொம்பவுமே செயற்கையாக இருந்தது. அதுவும் த்ரிஷா பேசும் வசனங்கள் எல்லாம் கௌதம் ஆங்கிலத்தில் தோன்றியதை தமிழில் எழுதிப் பேச வைத்திருக்கிறார் என்று தோன்றியது. மற்றபடி ஹாரிஸ் என்று ஒருவர் இந்தக் கூட்டணியில் இருந்து போய்விட்டர் என்ற நினைப்பே வராத அளவிற்கு வெகுநாட்கள் கழித்து ஏ ஆர் ரஹ்மானின் அனைத்துப் பாடல்களும் + பின்னணி இசையும் அற்புதமாக இருந்தது படத்தின் மிகப்பெரிய பலம். வின்னைத்தாண்டி வருவாயா, இப்பொழுது காதலர்களுக்கென்று தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு “கல்ட்” படம். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை. தெலுங்கில் Ye Maaya Chesave என்ற எடுக்கப்பட்டு, ஹிட்டானது. ஹிந்தியில் Ek Deewana Tha என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு பெருமளவில் ஊற்றிக்கொண்டது. அதற்கு தான் காரணம் இல்லையென்றும் படத்தை ஹிந்தியில் தயாரிக்கச் சொன்னவர்க்ளே காரணம் என்றார் கௌதம்


இந்தப் படத்தைப் பிடிக்கும் என்று சொன்னால் நம்மையும் ஒரு நாயைப் போலத்தான் பார்ப்பார்கள். அந்த அளவிற்கு கழுவி கழுவி ஊற்றப்பட்ட படம். அதனாலேயே இந்த படத்திலிருந்த மிகப்பெரிய ஒரு முயற்சி இன்றும் கவனிப்பார் இல்லாமல் இருக்கிறது. கௌதமிற்கு இருக்கும் இசை அறிவிற்கு அவரது முந்தைய படங்களின் பாடல்களும், அவற்றின் வெற்றியுமே சாட்சி. அப்படிப் பட்டவர் தனது அடுத்த படத்தை இசையே இல்லாமல் வெறும் ஒரிஜினல் சவுண்ட்ஸ் மட்டும் வைத்து எடுத்தார். படம் வெளியாகும் முன் இது எல்லோருக்குமான படமல்ல என்று கௌதம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் மக்கள் இந்தப் படத்தையும் ஒரு வெகுஜெனப் படமாகவே பார்த்து, துப்பினர். மனோஜின் அருமையான ஒளிப்பதிவு, வீரா – சமீராவின் நடிப்பு, கௌதமின் “I will not glorify an antagonist with music” முயற்சி என்று அனைத்தும் வீணானது. காரணம் ஒன்று - தமிழகம் ஏற்றுக் கொள்ளாத கதை! இந்தப் படத்தின் தோல்வியாலேயே கௌதம் மீண்டும் காதலைக் கையில் எடுத்தார்.


இந்தப் படத்திற்கு ஒரு தனிப் பதிவு எழுதலாம் என்றிருந்தேன். இப்பொழுது பத்தோடு பதினொன்றாக எழுதுவதற்குக் காரணம் படம் சரியில்லை என்ற விமர்சனத்தினால் அல்ல, இந்தப் படத்தைப் பற்றி எழுத என்னிடம் விஷயம் அதிகம் இல்லை என்பதே. பார்க்கலாம்…

நான் காதலித்திருக்கிறேன் (பப்பி லவ், அந்த லவ் இந்த லவ் என்று எண்ணிப்பார்த்தால் ஏகப்பட்டது வருகிறது), ஆனால் காதலிக்கப்பட்டிருக்கிறேனா என்பது தெரியவில்லை. படம் பலருக்கு பிடிக்காமல் போனதற்குக் காரணம் இதுதான். உண்மையான காதலர்களுக்கு, உண்மையாக காதலித்தவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புரியும், பிடிக்கும் – என்று நான் நினைக்கிறேன். இதற்கு எதிர்மறையான கருத்து உள்ளவர்களுடனும் நான் ஒத்துப் போகிறேன். காரணம் சமீபத்தில் நான் படித்த பதிவர் குட்ட்ச்சுவர் அவர்ளது பதிவு. கடைசியில்அவர் கேட்ட கேள்வி என்னை வாயடைத்துவிட்டது!

வழக்கம் போல தமிழ் சினிமாவின் பல விதிகளை இந்தப் படத்தில் உடைத்திருக்கிறார் கௌதம். மற்ற படங்களைப் போலவே சிலாகித்து எழுத இந்தப் படத்திலும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அதற்காக படம் ஆஹா ஓஹோ என்று வாய் கூசாமல் என்னால் பொய் சொல்ல முடியாது. படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகளும் இருக்கிறது. முடிந்தால் நீதா.எ.பொ.வ பற்றிக் கொஞ்சமும் முக்கியமாக கௌதமின் ப்ளஸ், மைனஸ் பாயிண்ட்ஸ் + நான் இதுவரை படித்த, கேட்ட, தெரிந்து கொண்ட விஷயங்களை அடுத்த பதிவில் சொல்லவா?

You Might Also Like

15 comments

 1. Replies
  1. நன்றி நண்பரே... அப்படியே உங்க கருத்துக்களையும் சொல்லியிருந்தா நல்லா இருந்திருக்கும்...

   Delete
 2. Replies
  1. தல என்ன இது போங்காட்டம் ஆடுறீங்க... ஏதாவது சொல்லுங்க பாஸ் :-)

   Delete
 3. சீரிஸ் ரீவைவ் பண்ணதுல சந்தோஷம்! அந்த உடைக்கப்பட்ட தமிழ் சினிமா விதிகள் என்னதான்னு தெரிஞ்சுக்க ரொம்பவே ஆர்வமாயிருக்கேன். டக்குனு அடுத்த பதிவையும் போட்டுருங்க!

  ReplyDelete
  Replies
  1. உடைக்கப்பட்ட விதிகள் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் "நீ சொன்னா மாடியிலருந்து கூட குதிப்பேண்டா"விற்கு சொல்லப்படும் காரணம் போலத்தான் இருக்கும். பரவாயில்லையா?

   Delete
  2. நோ ப்ராப்ளம்ஸ்..

   Delete
 4. he influnce mallu charters a lot in his movies.
  while he was doing minnale he was known as gowtham. how he got all his religious caste and state identies later on?
  why he is still showing mallu ppl good in his movies.
  mallu titles
  so many mallu things?

  ReplyDelete
  Replies
  1. ஆம் இது ஒத்துக்கொள்ள வேண்டிய ஒரு குற்றச்சாட்டு தான். ஆனால் எனக்கு இது பெரிய தப்பாகப் படவில்லை. கௌதமின் தந்தை மலையாளி, அவர் பிறந்தது கேரளாவில், அந்த பாசம், டச் இருக்கத்தான் செய்யும். சசிகுமார், பாலா போன்றவர்கள் தொடர்ந்து மதுரையைச் சுற்றியே படம் எடுப்பதையும், ஹரி தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லையைச் சுற்றியே படமெடுப்பதையும் நாம் குறை சொல்லவில்லையே! ஊர்ப்பாசம், வளர்ந்த இடத்தின் மீதுள்ள் பற்று இதெல்லாம் சாதாரண விஷயம். மேலும் சினிமாவை நாமாவது கலையாக மட்டும் பார்ப்போமே, அரசியல் வேண்டாம்...

   Delete
  2. "mallu titles"... neenga entha padatha solreenga ?? "varanam ayiram","vettaiyadu..v.." ,"pachaikilli..." are all in good tamil.

   Delete
  3. ஆமா, எனக்கும் எத நண்பர் அப்படிச் சொல்றார்னு தெரியல... கௌதமோட முக்கியமான இன்னொரு ப்ளஸ், கதைமாந்தர்கள் என்ன தான் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குபவர்களாக இருந்தாலும், டைட்டில் சுத்த சங்கத் தமிழில் தான் இருக்கும்...

   Delete
 5. அண்னாத்தே,

  பதிவு அட்டகாசம்.

  தயவு செய்து மின்னலே பார்க்கும் போது எட்டாம் வகுப்பு, காக்க காக்க பார்க்கும் போது பத்தாம் வகுப்பு என்று சொல்லாதீர்கள். எனக்கு படிக்கும் போதே தலை வெளுத்து விட்டது போல ஒரு தோற்றம். ஏனென்றால் மின்னலே பார்க்கும் போது நான் ஃபைனல் இயர் :-)

  ReplyDelete
 6. நல்ல அலசல் நண்பா :) கெளதமின் மேக்கிங் ஸ்டைல் எனக்கு பிடிக்கும். எல்லா படமுமே ஒரு மாதிரியான தனி தரத்தில் இருக்கும். அதே போல் அவரது இசை வாங்கும் திறமையும், பாடல்களை பதிவாக்கும் திறமையும் எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று.

  என்னை பொறுத்த வரை அவருடைய சிறந்த படம் ‘மின்னலே’ தான். அனைத்தும் சரியாக அமைந்த ஒன்று. உங்களை போலவே என்னை மிகவும் ஏமாற்றமடைய வைத்தது ‘வாரணம் ஆயிரம்’. காதலோ, அப்பாவின் பாசமோ.. எதுவுமே சரியாக சொல்லப்படவில்லை. ‘நடுநிசி நாய்கள்’ எனக்கு பிடிக்கவில்லை.. ஆனால் படத்தில் ஒரு உண்மை இருந்தது. அது போல் ஒரு படம் தமிழில் வந்ததில்லை என நினைக்கிறேன்.

  ‘நீதானே என் பொன்வசந்தம்’ எனக்கு பிடித்திருந்தது. ஆனால் கடைசி 30 நிமிடங்கள் மிகவும் சோதனை :) அவர் மேல் உள்ள குற்றசாட்டு, எப்போதும் மேல் நடுத்தர மக்களை பற்றியே படம் எடுக்கிறார் என்பது. ஆனால் அது தவறு என எனக்கு தோன்றுகிறது. ஒருவர் தனது அணுபவங்களை வைத்து மட்டுமே ஒரு படைப்பை தர முடியும். அவரது சூழல் அப்படி இருக்கலாம். அவரிடம் இருந்து ஒரு கிராம வாழ்க்கை பற்றிய படங்களை எதிர்பார்ப்பது, பாலாவிடமிருந்து ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ எதிர்பார்ப்பதற்கு சமம்.

  என்னுடைய கெளதமிடம் இருக்கும் ஒரே ஆசை.. அவர் மீண்டும் ஹாரிஸுடம் இணைந்து பணியாற்ற வேண்டுமென்பதே.

  ReplyDelete
 7. ரொம்ப நல்லா இருக்கு பாஸ் உங்க அலசல்.... எனக்கு பிடித்த இயக்குனர் ஷங்கர் பற்றியும் நீங்கள் போட வேண்டும்...

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...