2012 சினிமா: பாகம் 03 - ஹிந்தி

10:21:00 AM


ஹிந்தியில் ஆண்டுதோறும் வதவதவென்று ஏகப்பட்ட படங்கள் வெளியானாலும் அவையனைத்தையும் பார்க்கும் பாக்கியம் எனக்கு இல்லை. கன்னடம், மலையாளம், ஏன் தெலுங்கு கூடப் புரிகிறது. ஆனால் ஹிந்தி மட்டும் தலைகீழாக நின்று தண்ணி குடித்துப் பார்த்தும் வரவே இல்லை. இதைச் சொல்லவே எனக்கு அவமானமாக இருந்தாலும், உண்மை இதுதான். தாய்மொழிக்குப் பிறகு நமது தேசிய மொழியை நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தாத்தா செய்த வினை; பல தலைமுறைக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது. சரி அது இப்பொழுது அது தேவையில்லை. ஏகப்பட்ட படங்கள் வந்ததாலோ என்னவோ, மற்ற மொழிகளை விட நிறைய நல்ல படங்கள் ஹிந்தியில் வெளியாகியிருக்கிறது. ரீமேக் கதைகள (Rowdy Rathore, Son of Sardaar), சுட்ட கதைகளும் (Bol Bachan, Houseful 2) அதிகம் வெளிவந்திருக்கின்றன. வழக்கம் போல நான் பார்த்த படங்களைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.

GANGS OF WASSEYPUR I, II 
இயக்குனர் Anurag Kashyap - பாலிவுட்டில் இவரது ஆளுமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மாற்று சினிமா பிரதிநிதியாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்வதில் பெருமையடைகிறார் இந்த இயக்குனர். இவரது படங்களும் மற்ற மாமூல் திரைப்படங்களைப் போல் இல்லாமல் இருப்பது பலம். சர்தார் கான், ராமாதீர் சிங் என்று இருவருக்குள் இருக்கும் பிரச்சனை. இதில் சுல்தான் குரேஷி என்பவனும் சர்தாருக்கு எதிராக சேர்ந்துகொள்ள தலைமுறை தாண்டிய பகையை ரத்ததமும் சதையுமாகச் சொல்லியிருக்கிறார். பிரதான இரண்டு கதாப்பாத்திரங்களைத் தவிர்த்து கதைசொல்லியான "நசிர்" இல் ஆரம்பித்து சர்தாரின் மனைவி நக்மா, துணைவி துர்கா, இரண்டாவது மகன் ஃபைசல் கான், அவனது காதலி மோஹ்சினா, தம்பி டெபனைட், இன்னொரு தம்பி பெர்பெண்டிகுலர், இன்னும் பலர் இந்தப் படத்தில் கதாப்பாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். அற்புதமான, மிக யதார்த்தமான நடிப்பு. பாலாவின் நான் கடவுளைப் பார்த்து பிரம்மித்துப் போய், “வேறு மாநிலத்தவரால் நம் மாநிலக்கதையை இவ்வளவு சிறப்பாக எடுக்க முடிகிறது. நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்” என்று தனது வேர்களைத் தேடி இந்தப் படத்தை எடுத்ததாகச் சொல்கிறார் இயக்குனர். ரசித்து ரசித்துப் பார்த்தேன் இந்தப் படத்தை. மிகவும் நீளம். இரண்டு பாகங்களையும் சேர்த்து 5 மணிநேரத்திற்கு மேல் ஓடுகிறது. படம் முழுவதுமே “சுவரஸ்யம்” "சூப்பர்" என்றெல்லாம் சொல்லமுடியாது. நிதானமாகத்தான் நகர்கிறது. ஆனாலும் நான் பார்த்த ஹிந்தி திரைப்படங்களிலேயே “தி பெஸ்ட்” என்று இந்தப் படத்தைச் சொல்வேன். “உலக சினிமா“ என்பது நமது கலாச்சாரத்தை உள்ளதை உள்ளபடி காட்டுவது தான் என்பதைப் புரிந்து கொண்டாலே இந்தப் படத்தை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என்பது புரியும். இரண்டாம் பாகத்தை விட முதல் பாகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முக்கியமாக “சர்தார் கான்” ஆக வரும் மனோஜ் பாஜ்பாய் யின் நடிப்பு அதியற்புதம். பிரமாதப்படுத்தியிருக்கிறார். வாசேப்பூரின் முழு வரலாற்றையே மூன்று பேர் அல்லது மூன்று குடும்பம் அல்லது மூன்று தலைமுறையினரின் வாழக்கை வழியாகப் பார்த்த திருப்தி ஏற்பட்டது எனக்கு. மஹாபாரதத்தை முழுதாக பார்த்து முடித்தவுடன் “ஒருவழியா பாத்து முடிச்சாச்சு!” என்று ஒரு திருப்தி வருமே. அது போல. வசனங்களை ஆங்கில் சப்-டைட்டில் உதவியுடன் தான் புரிந்து கொண்டேன் என்றாலும், அவற்றைக் கதாப்பாத்திரங்கள் வெளிப்படுத்திய விதத்தை பெரிதும் ரசித்தேன். பாடல்கள். நமது நீதா.என்.பொ.வ விட அதிகமான பாடல்களைக் கொண்ட படம். ஆனால் ஒவ்வொன்றும் பெரும்பாலும் இரண்டு, மூன்று நிமிடங்களுக்குள் தான். அருமை. பின்னணி இசை நம் ஜி.வி. பிரகாஷ்குமார். பிரமாதப்படுத்தியிருக்கிறார். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். Gangs of Wasseypur - படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதையே மறந்து, ஒரு வரலாறை அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று என்னை நினைக்க வைத்த படம். Hats off Anurag Kashyap!

காணொளிகள்:



ENGLISH VINGLISH 
தெலுங்கிற்கு EEGA என்றால் ஹிந்திக்கு இந்தப் படம். நான் தமிழில் தான் பார்த்தேன் என்றாலும் இதை ஒரு ஹிந்திப் படமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சிம்பிளான ஸ்கிரிப்ட். அதை கொடுத்த விதத்தில் தான் அசத்தியிருக்கிறார்கள். கணவன் மற்றும் குழந்தைகளால் ஆங்கிலம் தெரியாத காரணத்தால் ஏளனம் செய்யப்படும் குடும்பத்தலைவி ஷசி. அக்காள் மகள் திருமணத்திற்காக தனியாக அமெரிக்கா பயணப்பட நேர்கிறது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஆங்கிலம் கற்கத்தொடங்குகிறார். முடிவு என்ன என்பதை குழந்தை கூட சொல்லும். ஆனால் அதைக் கொடுத்த விதத்தில் தான் பிரமாதப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கௌரி ஷிண்டே - சபாஷ்! ஸ்ரீதேவிக்கு அருமையான கம்-பேக். எனது அம்மாவிற்கும் இந்தப் படம் பிடித்திருந்தது தான் ஹை-லைட். என் அம்மா எனக்கு நேர் எதிர், நான் ஒரு நாளைக்கு ஒரு படம் பார்ப்பேன், அவர் ஒரு மாத்ததிற்கு ஒரு படம் பார்த்தாலே அது ஆச்சரியம். ஆகவே இது ஒரு அக்மார்க் நல்ல ஃபீல் குட் படம்.

  
KAHAANI 
வித்யாபாலன் -இத்தனை வருடங்களாக தனக்குள் இருக்கும் திறமைக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போராடிக்கொண்டிருந்தவருக்கு, அடுத்த தீனி இந்தப் படம். தேசிய விருதிற்கு மீண்டும் சவால் விட்டிருக்கிறார். Dirty Picture ஐ விட இந்தப் படத்தில் இவரது நடிப்பு பிரமாதமாக இருந்தது. உண்மையாகவே கற்பமாகத்தான் இருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றியது. இறுதிவரை, சீன்-பை-சீன் ரசித்துப் பார்த்தேன். காணாமல் போன தனது காதல் கணவனைத் தேடி லண்டனில் இருந்து கொல்கத்தா வரும் நிறைமாத கர்பிணியின் கதை. படத்தில் வரும் "ஹிட்மேன்" உட்பட வடிவமைக்கப்பட கேரக்டர்கள் அத்தனையிலும் அவ்வளவு யதார்த்தம். டெய்லர்டு பிட் காஸ்டிங். ஒவ்வொருவரும் அசத்தியிருந்தார்கள். வித்யாபாலனுக்கு அடுத்து என்னைப் பெரிதும் கவர்ந்தவர் Nawazuddin Siddiqui. வாசேப்பூர் படத்தை விட இந்தப் படத்தில் இவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சத்தமே இல்லாமால் வந்து பெரிதாக அசத்திய அருமையான த்ரில்லர் இந்தப் படம். கொசுரு செய்தி: தமிழில் இந்தப் படத்தை கௌதம் இயக்க ஜோதிகா நடிப்பதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தோல்வியில் முடிந்தது.

  
OMG: Oh My God!
சதா கடவுளைப் பழிக்கும் நாத்திகவாதியான Kanji Lalji Mehta (Paresh Rawal) என்பவரது கடை மட்டும் ஒரு சிறிய பூகம்பத்தால் மொத்தமாக இடிந்து போகிறது. கடவுள் சிலைகளை விற்கும் கடை என்பதால், உடைந்த சிலைகள் மண்ணுக்கு அடியில் புதையுண்டு இருக்கிறது என்று அந்த நிலத்தையும் வாங்க ஆள் இல்லாமல் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகிறார் மனிதர். சரி, இன்ஷுரன்ஸ் பணத்தையாவது பெருவோம் என்றால் "இது ACT OF GOD - கடவுளின் செயல், அதனால் எங்களால் பணம் கொடுக்க முடியாது" என்று கையை விரிக்கின்றனர். கடுப்பாகும் Kanji, தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய கடவுள் மேல் கேஸ் போடுகிறார். கடவுளை கோர்ட்டிற்கு கொண்டு வர முடியாது என்பதால் "கடவுளின் பிரதிநிதி" என்று தங்களைக் கூறிக்கொள்ளும் மதகுருமார்களுக்கு நோட்டீஸ் அனுப்புகிறார். Kanji யின் இந்த செயல் நாட்டில் பெரும் அதிர்வை ஏற்படுத்துகிறது. அவருக்கு பக்கபலமாக இருக்க கடவுள் Krishna Vasudev Yadav (Akshay Kumar) என்னும் பெயரில் மானிட உருவமெடுத்து உதவ வருகிறார். அருமையான படம். யாரையும் நேரடியாகத் தாக்காமல் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் திரைக்கதையையும், வசனங்களையும் அமைத்திருக்கிறார்கள். பிரபுதேவா – சோனாகக்ஷியின் கலக்கல் குத்து பட ப்ரமோஷனுக்கு பெரிதும் உதவியது. முதல் காட்சியில் ஓட்டைக்கடையை ரிப்பேர் செய்யாமல் ஹஜ் பயணத்திற்கு கிளம்பும் சகவியாபாரியை திட்டுவார் Kanji, "சின்ன தும்மல் போட்டாகூட உன் கடை காணாம போய்டும் போல" என்று அந்தக் கடையைக் காட்டிச் சொல்லும் போது சரியாக ஒரு பெரிய கண்ணாடியை குறுக்கே சிலர் எடுத்துக்கொண்டு போவார்கள். அந்தக் கண்ணாடியில் பின்னால் இருக்கும் Kanji யின் கடை தெரியும். அவர் விட்ட சாபம் போலவே ஒரு சின்ன பூகம்பத்திற்கு அவரது கடை நொறுங்கிவிடும். இப்படி சுவாரஸ்யமான பல காட்சிகள் படத்தில் உள்ளன. புகழ் பெற்ற மேடை நாடகத்தையே படமாக எடுத்திருக்கிறார்கள். இயக்கியவர் Umesh Shukla.

  
FERRARI KI SAWAARI
இந்த வருடத்தின் ஃபீல் குட் படம். மியூசியத்தில் மட்டுமே பார்க்கக்கூடிய கேரக்டர் அப்பா (Sharman Joshi), கிரிக்கெட் மட்டுமே உயிர் என்று வாழும் மகன், உயிர்நண்பன் செய்த துரோகத்தால் கிரிக்கெட்டில் வாய்ப்பை இழந்து, துவண்டு போயிருக்கும் தாத்தா (Boman Irani). இவர்கள் தான் கதை மாந்தர்கள். நடிப்பில் மூவருமே அசத்தியிருக்கிறார்கள். தன் மகனை லண்டன் Lord's Stadium ல் நடக்கும் கிரிக்கெட் கோச்சிங்கிற்கு அனுப்ப 1,50,000 தேவை. அரசியல்வாதி ஒருவனுக்கு தன் மகன் திருமணத்தில் ஊர்வலம் போக ஒரு ferrari கார் தேவை. மும்பையிலேயே அந்தக் காரை வைத்திருக்கும் ஒரே நபர் சச்சின் டெண்டுல்கர்! இந்த ஒன்-லைனை வைத்துக்கொண்டு சரியான விகிதத்தில் காமெடி + செண்டிமெட் என்று கலக்கியிருக்கிறார்கள். கூடவே வித்யாபாலனின் செம்ம குத்து வேறு. வெகு நாட்களுக்குப் பிறகு கிளைமாக்ஸில் கண்களில் நீர் தத்தளிக்க இந்தப் படத்தைப் பார்த்தேன் (ச்சே… 7 கழுத வயசாகுது. இன்னமும் ஒரு சென்டிமென்ட் சீன் வந்தா கூட அழுகை வருது. சின்னப்புள்ளையாவே இருக்கேன்!)



ISHAQZAADE
Gangs of Wasseypur போலவே குறிப்பிட்ட ஒரு சமூகத்தைப் பற்றிய கதை என்பதால் இதுவும் கிட்டத்தட்ட ஒரு உலக சினிமா தான். Parma (Arjun Kapoor) - Zoya (Parineeti Chopra) இருவரின் புரட்சிக் காதல் தான் கதை. Parma ஹிந்து சௌகான் குடும்பத்தை சேர்ந்த போக்கிரி இளைஞன். இவனது தாத்தா அந்த சமூகத்தின் முக்கிய அரசியல் புள்ளி. குரேஷி முஸ்லீம் தலைவனின் மகள் Zoya. ஒரு வாய்த்தகராறில் கூட்டத்திற்கு முன் தன்னை அறைந்து விடும் Zoyaவை அவமானப்படுத்த காதலைக் கையில் எடுத்து, மயக்கி, திருட்டுத் திருமணம் செய்து, படுக்கையிலும் வீழ்த்துகிறான் Parma. உண்மை முகம் தெரிந்து Parma வை கொலைவெறியுடன் துரத்துகிறாள் Zoya. இதனிடையே இரு குடும்பங்களும் பரஸ்பரம் துப்பாக்கிளைத் தூக்க, சண்டையில் Parma வின் தாய் இறக்கிறார். தாயின் மரணம் செய்த தவறை உணர வைக்க Zoyaவுடன் சேர்ந்து வாழ நினைக்கிறான் Parma. ஆனால் இவர்கள் காதல் வெற்றி பெற்றால் தங்களது அரசியல் செல்வாக்கு தங்களது சமூக மக்களிடம் கெட்டுவிடும் என்பதால் இவ்விருவரையும் துரத்துகின்றனர் வில்லன்கள். என்ன நடந்தது என்பதை ரத்தமும் சதையும் மட்டுமல்லாமல் நிறைய காதலும், தோட்டாக்களுமாகச் சொல்லியிருக்கிறார்கள். புதுமுகம் Arjun Kapoor கச்சிதமாகப் பொருந்திப்போகிறார். Parineeti Chopra அழகு தேவதையாக அசரடிக்கிறார். அருமையான படம் என்று முழுமனதாகச் சொல்லமுடியாது என்றாலும் தாராளமாக ஒரு முறை பார்க்கலாம். இயக்கியவர் Habib Faisal.

  
BARFI!
காது கேளாத, வாய் பேச முடியாத இளைஞன் Barfi (Ranbir Kapoor), ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களால் வெறுக்கப்படும் பெண் Jhilmil (Priyanka Chopra), மனதளவில் Barfi யைக் காதலித்தாலும், அவனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் Shruti (Ileana). இவர்களைச் சுற்றி நடக்கும் கதை தான் Barfi! வெளியான புதிதில் பார்த்தவர்கள் எல்லாம் பாராட்ட, நானும் இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்கக் கிளம்பிவிட்டேன். அதற்குள் இந்தப் படம் ஆஸ்காருக்கு அனுப்பப்படுகிறது என்றெல்லாம் சொன்னார்கள். மகிழ்ந்தேன். ஆனால் இடைப்பட்ட நேரத்தில் நான் கண்ட வீடியோ ஒன்று Barfi! மீது நான் வைத்திருந்த மதிப்பையே கெடுத்தது. உலகின் பல முக்கிய திரைப்படங்களில் இருந்து காட்சிகளை அப்படியே சுட்டு Barfi! யில் வைத்திருக்கிறார்கள் என்று அந்த வீடியோ ஆதாரத்துடன் சொன்னது. காப்பி அடிப்பது கூட பரவாயில்லை, அதை உலகமறிய பொதுவெளிக்கு அனுப்பத்துணிவதெல்லாம் சரியில்லை. படத்தில் என்னைப் பொறுத்த வரை பிரதான மூன்று கதாப்பாத்திரங்களின் சிறப்பான நடிப்பைத் தவிர எதுவுமே இல்லை. மூவரும் நல்ல நடிகர்கள் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. கலக்கியிருக்கிறார்கள். நிச்சயம் இது ஒரு ஃபீல் குட் படம் தான். ஆனால், ஆஸ்கருக்கு அனுப்பும் அளவிற்கு இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அவமானப்படப் போவது உறுதி.

  
CHAKRAVYUH
Apaharan, Raajneeti, Aarakshan படங்களைக் கொடுத்த Prakash Jha வின் படம். நக்சலைட்களைப் பற்றிய படம். 84 போலீஸ்காரர்களை கொன்று குவித்த நக்சல்களின் கோட்டைக்கு புதிய அதிகாரியாக பொறுப்பேற்கிறான் Adil (Arjun Rampal). எவ்வளவு முயன்றும் நக்சல் தலைவனான Rajan (Manoj Bajpai) ஐ பிடிக்க முடியவில்லை. நண்பனுக்கு உதவும் பொருட்டு நக்சல் கூட்டத்தில் சேர்கிறான் Kabir (Abhay Deol). நக்சல் கூட்டத்திற்குள் Kabir சேர்ந்தவுடன் நடக்கும் திருப்பங்கள் தான் கதை. எந்தப் பக்கமும் சாயாமல் உள்ளதை உள்ளபடி, கொஞ்சம் கட்டுப்பாடுகளுடன் காட்டியிருக்கிறார்கள். பணத்தால் ஏழைகளை நசுக்கும் வர்க்கம், அவர்களுக்கு கூஜா தூக்கும் அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் மீது உள்ள கோபத்தால் துப்பாக்கி தூக்கும் நக்சல்கள், அரசியல்வாதிகளுக்கு பயப்படுவதா, போலீஸிற்கு பயப்படுவதா அல்லது நக்சல்களுக்கு பயப்படுவதா என்று தெரியாமல் தினம் தினம் செத்து பிழைக்கும் ஏழை மக்கள் என்று கழுகுப்பார்வையில் மேலோட்டமாக இந்தியாவின் உள்நாட்டு தீவிரவாத நடவடிக்கைகளைப் பற்றி சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். இந்த அளவிற்கு இவருக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டதே பெரிய விஷயம். வாழ்க ஜனநாயகம்.

  
SHANGHAI 
ஏற்கனவே ரஷ்ய திரைப்படமான "Z" படத்தை பாதிக்கு மேல் நான் பார்த்த நியாபகம். இது அந்தப் படத்தின் ரீமேக். மல்டிநேஷனல் கம்பெனிகள் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு மக்களை ஏமாற்றும் கதையில் சமூக ஆர்வலரும் பேராசியருமான Dr. Ahmedi கொல்லப்படுகிறார். கொலை, விபத்து என்று மாற்றி எழுதப்படுகிறது. தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள், உண்மையை வெளிக்கொண்டு வர நினைக்கும் இருவர், வேறு ஒரு டிராக்கில், இந்தக் கொலை / விபத்தை விசாரிக்க வரும் T.A Krishnan. இவர்களுக்குள் நடப்பது தான் கதை. ஒரு வித்தியாசமான பொலிடிக்கல் த்ரில்லராக ஈர்த்தது இந்தப் படம்.

  
AIYYAA
ஏன்டா பார்த்தோம் என்று தலையில் அடித்துக்கொண்ட படம். சிறிய இடைவெளிக்குப் பிறகு ராணி முகர்ஜி நடிக்கும் படம் என்பதாலும் Anurag Kashyap சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதாலும் இந்தப் படத்தை நான் பெரிதும் எதிர்பார்த்தேன். ஆனால் படத்தில் ஒன்றுமே இல்லை. ராணி முகர்ஜி தனி அழகு, சார்மிங். அருமையான டான்ஸர் என்றும் இந்தப் படத்திலிருந்து தெரிகிறது. ஆனால் படத்தில் பார்க்க ஏதோ மாதிரி இருந்தார். சதா எதையாவது முகர்ந்து பார்த்துக்கொண்டும், ஐய்யா! ஐய்யா! என்று சொல்லிக்கொண்டுமே திரிந்தார். குட்டி குட்டி டிரஸ் போட்டுக்கொண்டு பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. ரசிக்க முடியவில்லை. பத்தாத குறைக்கு பிருத்திவி ராஜ் வேற. பாடல்களில் பார்க்க கால்-பாய் மாதிரியே இருந்தார். சிக்ஸ் பேக்கை வைத்துக் கொண்டு பைட்டர்ஸை பறக்க விடுவார் என்று பார்த்தால், ராணி முகர்ஜிக்கு பார்த்து ஏங்க மட்டும் தான் அது பயன்படுகிறது. படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே தெரியவில்லை.

  
பார்க்க முடியாமல் போன படங்கள் நிறைய இருக்கிறது Chittagong, Vicky Donor, Talaash, Student of the Year, Dabaang 2, Heroine, Jab Tak Meri Jaan, Agent Vinod, Ek Ta Tiger...

இவை தவிர சுவாரஸ்யமான படங்கள் ஏதேனும் இருந்தால் நண்பர்கள் தெரியப்படுத்தவும்.

********************

2012 ஆம் ஆண்டு வெளியான மற்றுமொரு சிறந்த, முக்கியமான திரைப்படத்தைப் பற்றிச் சொல்ல மறந்து விட்டேன். நினைவு படுத்திய நண்பர் ஆனந்திற்கு நன்றி!

PAAN SINGH TOMAR
சாம்பல் பள்ளத்தாக்கின் மிகப்பெரிய போராளியாக அறியப்படும் Paan Singh Tomar ஒரு பத்திரிக்கைக்காரனுக்கு கொடுக்கும் பேட்டியாக படம் தொடங்குகிறது. 1950 ஆம் ஆண்டு. தாய் மற்றும் மனைவி மக்களை ஊரில் விட்டுவிட்டு ராணுவத்தில் சேர்கிறார் Paan Singh. அவரது அபார ஓட்டத்திறமையைக் கண்டு அதிகாரிகள் ஆச்சரியமடைகிறார்கள். அதிகம் சாப்பிட விருப்பம் இருந்தும் வசதியில்லாமலே வாழ்ந்து வந்த Paan Singh, கட்டுப்பாடு இல்லை என்பதற்காகவே ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சேர்கிறார்.  Steeplechase எனப்படும் ஒரு வித ஓட்டப்பந்தையத்திற்கு அவரைத் தயார் படுத்துகிறார் கோச். வரிசையாக தங்கப் பதக்கங்களை குவிக்கும் Paan Singh ஆல் டோக்கியோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வெல்ல முடியவில்லை. காரணம், சரியான ஷூ அணிந்து பயிற்சி கொடுக்கப்படாமல் போனது. ஆனாலும் அடுத்து நடக்கும் சர்வதேச ராணுவப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்கிறார். நாட்டிற்காக ஓடியது போதும், இனி எதிரிகளுடன் சண்டையிடலாம் என்று முடிவு செய்யும் போது, அதிகாரிகள் அவரைத் தடுக்கிறார்கள். விளையாட்டு வீரர்களுக்கு போர்க்களத்தில் இடமில்லை என்று கூறுகிறார்கள். அந்த சமயம் பார்த்து ஊரில் தனது சொந்தக்காரர்களாலேயே தனது நிலம் அபகரிப்பக்கப்பட்ட செய்தி வருகிறது. ராணுவம் போதும் இனி வீட்டைப் பார்க்கலாம் என்று கிளம்புகிறார் Paan Singh. தான் ராணுவத்திற்காக செய்த சாதனைகளைக் காட்டி போலீஸிடமும், கலெக்டரிடமும் உதவி கேட்கிறார். அந்தப் பதக்கங்களால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது புரிகிறது. Paan Singh மகன் எதிரிகளால் தாக்கப்படுகிறான். அடுத்து நடக்கும் சண்டையில் தாய் கொல்லப்படுகிறார். ராணுவக்காரனான தனக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று முடிவு செய்து மகனை ராணுவத்திற்கு அனுப்பிவிட்டு தந்து 8 கூட்டாளிகளுடன், தன்னை வஞ்சித்த சொந்தங்கள், மற்றும் அவர்களைப் போல் ஏழைகளின் ரத்தம் உறிஞ்சும் பணக்காரர்களை எதிர்த்து Paan Singh Tomar ஆக சாம்பல் பள்ளத்தாக்கை ஆளத் தொடங்குகிறார். இறுதியில் வழக்கம்போல கூட இருப்பவனாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு, சுட்டுக்கொல்லப்படுகிறார்.

நாட்டிற்காக போராடும், ரத்தம் சிந்தும் ராணுவத்தினர் இன்றும் சந்திக்கும் பிரச்சனைகளை, உள்ளதை உள்ளபடி கொடுத்திருக்கிறார் இயக்குனர் Tigmanshu Dhulia. இந்த உண்மை வரலாறு Irfan Khan என்னும் அருமையான நடிகரால் உயிரூட்டப்பட்டு திரைபடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தனது ஆளுமையால் அசத்துகிறார் Irfan. சாப்பாடு கிடைத்தால் போதும், நான் எவ்வளவு தூரம் வேண்டுமானால் ஓடத்தயார் என்று சொல்வதிலும், தன் தாயைச் சொல்லி தன்னை திட்டும் (போட்டியில் உற்சாகப்படுத்துகிறாராம்) கோச்சை சைலன்டாக மிரட்டுவதாகட்டும், பேட்டியின் போது வெளிப்படுத்தும் "கெத்" ஆகட்டும், இறுதியில் சாகும் தருணத்தில் தான் ஓடிய பந்தையங்களை நினைத்துப் பார்ப்பதிலும் ஒரு நடிகராக மனதிற்குள் ஆழமாக சிம்மாசன் ஏறி விட்டார் Irfan.

காணொளி - http://www.youtube.com/watch?v=enwaoPOO0Ik

You Might Also Like

8 comments

  1. நான் இதுல பர்பி மட்டும் தான் பார்த்ததே ன்

    ReplyDelete
    Replies
    1. எழுதியுள்ள படங்கள் அனைத்துமே நல்ல படங்கள் தான் (aiyyaa எனக்குப் பிடிக்கவில்லை). தாராளமாக ஒரு தரம் பார்க்கலாம்...

      Delete
  2. நான் 'இங்கிலிஷ் விங்லிஷ்' மட்டும்தான்.. ஏற்கெனவே இருக்கும் Talaash-உடன் gangs of wasseypurஐயும் kahaaniஐயும் வாட்ச்லிஸ்டுல சேர்த்துக்கிறேன்..

    அடுத்து தமிழ்.. களை கட்டட்டும்!!

    ReplyDelete
    Replies
    1. மற்ற படங்களையும் பார்த்து வையுங்கள் தல...

      அடுத்து தமிழ் தான். ஆங்கிலம் மற்றும் வேற்றுப் மொழிப்படங்களைப் பற்றி எழுதலாமென்று நினைத்தேன். ஆனால் நிறைய வரும் போலத் தெரிகிறது. நிறைய படங்கள் இன்னும் பார்க்கவே இல்லை. எனவே நேரத்தைக் கடத்தாமல் தமிழிற்குப் போய்விட வேண்டியது தான் :-)

      Delete
  3. உங்க லிஸ்ட்ல முதல் நாலு படம் தான் பார்த்து இருக்கேன் நாலுமே செம படம்.., Barfi ரொம்ப நாளா டவுன்லோட் பண்ணி வைச்சுருக்கேன் பார்க்க தோணவே இல்ல :(.

    உங்க லிஸ்ட்ல paan singh tomar படத்தையும் சேர்த்துக்கோங்க செமையா இருக்கும்..,

    ReplyDelete
    Replies
    1. paan singh tomar படத்தை எப்படி மறந்தேன் என்றே தெரியவில்லை. நினைவுபடுத்தியதற்கு ரொம்ப நன்றி தல... பதிவில் update செய்து விட்டேன்...

      Delete
  4. //தாய்மொழிக்குப் பிறகு நமது தேசிய மொழியை நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.// ??? !!! விமர்சனம் எல்லாம் நல்லத்தான் இருக்கு சார், போகிற போக்குல இப்படி அடிச்சு விட்டுப் போறிங்க பாருங்க , இதை எல்லாம் கொஞ்சம் கவனிங்க .... :)))

    ReplyDelete
    Replies
    1. போற போக்குல நான் என்ன ஸார் அடிச்சு விட்டேன்? "தாய்மொழிக்குப் பிறகு ஹிந்தி தெரிந்திருக்கவேண்டும் என்று சட்டம் இருக்கிறது"னு நான் சொல்லியிருந்தா, "அடிச்சுவிடு"னு நீங்க சொல்லலாம். என் அனுபவத்துல தமிழுக்குப் பிறகு ஹிந்தியைத் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை என்று "கருத்து" சொன்னேன். இஷ்டம் இருந்தா கேளுங்க, இல்லையா ஃப்ரீயா விடுங்க :-)

      Delete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...