கனவு காணுங்கள் - S S ராஜமௌலி – பாகம் 05 - ஸ்பெஷல்!

1:16:00 PM


S S ராஜமௌலியின் முதல் 8 படங்களைப் பற்றி பார்த்துவிட்டோம். 9 ஆவது படமான “ஈகா”விற்காகத் தான் இந்த தொடரையே எழுத ஆரம்பித்தேன். அந்த படத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன்னர் இதுவரை நாம் பார்த்த 8 படங்களில் ராஜமௌலி வெற்றி பெற்றது எப்படி, அவரது வெற்றி சூத்திரங்கள் என்ன என்ன, அவர் தனது கனவுப் படமான ஈகாவிற்காக தன்னை எப்படி தயார் படுத்திக்கொண்டார் என்பதைப் பற்றி இப்போது பார்த்து விடுவோம். 

(பதிவு ரொம்பவே பெரியது. மொத்த தகவலையும் ஒரே இடத்தில் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் தான் இவ்வளவு பெரிதாக எழுதிவிட்டேன். ஆனாலும், நிறைய படங்கள் இணைக்கப்பட்டிருப்பதால் தான் பதிவு ஒரேடியாக நீளமாகத் தெரிகிறது) 

1) Rule No 1: No Compromise

இந்த முதல் விதியை இன்று வரை விடாமல் கடைபிடித்து வருகிறார் S S R. கதை எழுதும் போது எது இருக்க வேண்டும் என்று நினைத்து எழுதுகிறாரோ, அது கிடைக்கும் வரை விட மாட்டார். மற்ற படங்களிலிருந்து இவரது படங்கள் வேறுபட்டு தெரிவதற்கு இது ஒரு முக்கிய காரணம். உதாரணமாக விகடன் பேட்டியில் ராஜமௌலி சொன்னதையே சொல்லலாம். Sye படத்தின் போது ஒரு குறிபிட்ட காட்சியை எடுத்துவிட்டு போட்டுப் பார்த்தவருக்கு திருப்தியில்லை. தயாரிப்பாளரிடம் சென்று, எனக்கு மேலும் ஒரு 25 லட்சம் ரூபாய் கொடுங்கள். அந்த ஒரு குறிப்பிட்ட காட்சியை நான் ரீ-சூட் செய்து கொள்கிறேன். படத்தால் நீங்கள் நஷ்டமடைந்தால் அந்த தொகையை எனது சம்பளத்தில் இருந்து கழித்துக்கொள்ளலாம் என்று கேட்டிருக்கிறார். பணமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட காட்சியும் எடுக்கப்பட்டு படமும் வெளியானது. எதிர்பார்த்ததைவிட அமோக வெற்றி! தயாரிப்பாளர் மேலும் ஒரு 25 லட்சத்தை S S R ன் சம்பளத்தில் கொடுத்துள்ளார். S S R ன் இந்த No Compramise குணத்திற்கு மேலும் ஒரு உதாரணம் Yamadonga வில் கேமராமேன் செந்தில் குமாருக்கும், கலை இயக்குனர் R ரவீந்தருக்கும் முட்டிக்கொண்ட போது நடந்திருக்கிறது. அற்புதமான யமலோக செட்டிற்கு டல் லைடிங் கொடுத்து அதன் கம்பீரத்தைக் கெடுத்ததற்காக ரவீந்தர் கடுப்பாக, பிரைட் லைடிங் கொடுத்தால் நிழல் விழும் என்று செந்தில் வாதாட, இந்தப் பிரச்சனைக்கு ராஜமௌலி ஏற்பாடு செய்த தீர்வு தான் இன்று பல படங்களில் உபயோகப்படுத்தப்படும் பலூன் லைடிங் மெதட். மேலும் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் பல்புகளை லைடிங்கிற்கு பயன்படுத்த செட்டும் டால் அடித்தது, நிழலும் விழவில்லை (நன்றி: தினகரன் வெள்ளிமலர்). மற்றுமொரு தகவல் இதே Yamadonga வில் ஜூனியர் தான் நடிப்பது என்று முடிவானவுடன், அவரை அழைத்து “எப்படியாவது உடம்பைக் குறைச்சிடுங்க, அப்படிக் குறச்சாதான் சூட்டிங்” என்ரு நிச்சயமாக்ச் சொல்லிவிட்டார் S S R. தழுக் மொழுக்கென்றிருந்த ஜூனியரும் ஜிம்மே கதி என்று உடலைக் குறைத்து அசத்தலாக வந்தார். மற்றுமொன்று காமெடி ரோல்களிலேயே நடித்து வந்த ரவிதேஜாவிற்கு சீரியஸ் ரோல் கொடுத்து அசத்த வைத்தவர் S S R. தேவையானது கிடைக்க புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்துவதிலும், நடிகர்களை தயார் செய்வதிலும், தெலுங்கு சினிமாவிற்கு வெளியிலிருந்து பல புதிய முயற்சிகளை எடுத்து வருவதிலும் S S R தான் இன்று வரை முன்னோடியாகத் திகழ்கிறார்.

2) The Team

S S Rன் தந்தை விஜயேந்திர பிரசாத் சொன்ன ஒன்-லைனர்கள் தான் சிம்ஹாத்ரி முதல் ஈகா வரை. தன் தந்தை கூறும் ஒன்-லைனர்களுக்கு அருமையான திரைக்கதை எழுதி பிரமாதப்படுத்திவிடுவார் S S R. மேலும் முதல் படமான Student No: 1ல் ஆரம்பித்து ஈகா வரை இவரது படத்தொகுப்பாளர், S S R முதன்முதலாக வேலை பார்த்த கோத்தகிரி வெங்கடேஷ்வர ராவ் தான். அதே போல் Student No: 1ல் ஆரம்பித்து ஈகா வரை இவரது இசையமைப்பாளர் சொந்த சித்தப்பாவான M M கீரவாணி தான் (தமிழில் மரகதமணி). Sye படத்திலிருந்து தான் இவரது டீம் முழுமையடைந்தது எனலாம். தனது ஆஸ்தான் கேமராமேனான செந்திலுடன் இந்தப் படத்திலிருந்து தான் இணைந்திருக்கிறார் S S R. அதே போல் Syeல் ஆரம்பித்து ஈகா வரை உடை வடிவமைப்பாளராக இருப்பவர் S S R ன் மனைவி ரமா ராஜமௌலி. Syeல் ஆரம்பித்து ஈகா வரை S S R தானே அமைத்துக் கொடுக்கும் சண்டைகாட்சிகளை திரையில் கொண்டுவருபவர் பெரும்பாலும் பீட்டர் ஹெய்ன் தான் (Vikramarkudu ராம் லக்ஷ்மன் என்பவர்).
  
இவர்கள் தவிர ஒரு சில நட்சத்திரங்கள் இவரது அனைத்துப் படங்களிலும் இருப்பார்கள். குறிப்பாக ஒருவருக்கு ஒரு சின்ன காட்சியாவது வைக்காமல் S S R படமெடுப்பதில்லை. அவர் S S Rன் “சாந்தி நிவாசம்” தொலைக்காட்சி தொடர்கால நண்பரான S Chandra Sekar என்பவர். Student No 1ல் ஆரம்பித்து ஈகா வரை இவர் இல்லாத படமில்லை. குணச்சித்திர வேடம் அல்லது வில்லனின் குரூப்பில் இவர் நிச்சயம் இருப்பார். S Chandra Sekar தனது கணவரின் சென்டிமெண்ட் என்றும், அவருக்கு ஒரு சீன் வைக்காமல் கதை எழுதுவதில்லை என்றும் கூறியிருக்கிறார் திருமதி. ரமா ராஜமௌலி!

S Chandra Sekar தவிர ராஜமௌலி படங்களில் தொடர்ந்து இடம் பெறும் மற்றொருவர் Ajay (மேலுள்ள படத்தில் Sye, Chatrapathi யில் Ajayயும் இருப்பதை கவனியுங்கள்). Student No 1ல் இருந்து சத்ரபதி வரை கேரக்டர் ரோல்களில் வந்தவருக்கு விக்ரமார்குடு படத்தில் மெயின் வில்லன் கதாப்பாத்திரம் கொடுத்து அசத்தினார் S S R. Ajayயின் உயரத்திற்கும், ஆஜானுபாகுவான தோற்றத்திற்கும் மற்ற எந்த மொழி வில்லனையும் விட Vikramarkudu “டிட்லா” படு பயங்கரமாக இருப்பான். இந்த வாய்ப்பிற்குப் பிறகே Ajayக்கு ஹீரோ வாய்ப்பு கிடைத்ததாகக் கூறுகிறார்கள். மற்றுமொரு முக்கிய நபர் Rajeev Kanakala. ஜூனியர் N T Rன் நெருங்கிய நண்பரான இவர், அவரது எல்லாப் படங்களிலும் தவறாமல் இடம் பிடிப்பார். ஜூனியரின் படங்கள் தவிர்த்து, Sye படத்திலும் ரக்பி கோச்சாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.

3) Variety in Subjects

S S R ன் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு genre. Studen No 1, Sye இரண்டும் காலேஜ் ஸ்டோரிக்கள். ஆனால் அதிலேயே எவ்வளவு வித்யாசங்கள் காட்டியிருப்பார்? முன்னது திரில்லர் – டிராமா, Sye முழுக்க முழுக்க ஆக்ஷன், அதுவும் ரக்பி விளையாட்டை மையப்படுத்தி. Simhadri கிட்டத்தட்ட நம்ம பாட்ஷா டைப் genre, Chatrapathi – முதல் பாதி முழுக்க முழுக்க ஆக்ஷன் என்றாலும் படத்தின் அடிநாதமான இரண்டாம் பகுதி ஃபுல் மதர் சென்டிமென்ட், Vikramarkudu – போலீஸ் ஸ்டோரி, Yamadonga – Socio - Fantasy, Magadheera – காலம் கடந்த பழிவாங்குதல், ஈகா – மறுபிறவி பழிவாங்கல் அதுவும் ஒரு “ஈ”யாக. ஒரு சின்ன பையனை வைத்து மாஸ் படமும் (Sye) எடுப்பார், ஒரு காமெடியனை ஹீரோவாக வைத்தும் படம் (Maryada Ramana) எடுப்பார், ஒரு ஹீரோவை வில்லனாகவும் ஒரு ஈயை ஹீரோவாகவும் வைத்தும் படம் எடுப்பார் (Eega). மஹாபாரதக் கதையை இந்தக் கால சூழலுக்கு ஏற்ப எடுக்க வேண்டும் என்பதே இவரது அடுத்த கனவு. அந்தக் கனவு நிச்சயம் பளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

4) Screenplay and Pre-Production

தனது திரைக்கதை. இதை மட்டுமே முழுதாக நம்புபவர் S S R. படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்னமே மொத்த திரைக்கதையையும் சீன்-பை-சீன், பின் ஷாட்-பை-ஷாட் பிரித்து கேமரா, கிரேன், லைடிங், மூவ்மென்ட், ட்ராலி, பில்டர் இவ்வளவு ஏன், என்ன காஸ்டியூம், எப்படி எடிட் செய்ய வேண்டும் எனபது உட்பட சகலத்தையும் முடிவு செய்துவிடுவார். Storyboardல் என்ன இருக்கிறதோ அது தான் படத்திலும் இருக்கும்.

ஒரு படம் ஆரம்பித்த 15 ஆவது நிமிடத்திலேயே ரசிகனை கட்டிப் போட வேண்டும்; படத்தோடு ஒன்ற வைக்க வேண்டும் – இது தான் S S R Screenplay Rule. அதே போல் 15 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு எமோஷனல் சீன் இருக்க வேண்டும். அந்த எமோஷனல் சீன் சண்டைக் காட்சியாகவோ, சென்டிமென்ட் காட்சியாகவோ, திருப்புமுனைக் காட்சியாகவோ இருக்கும்படி பார்த்துக்கொள்வார். அதேபோல் ஹீரோவிற்கென்று ஒரு “கெத்” இருக்கும். மற்ற தெலுங்கு மசாலாக்களுக்கு சற்றும் குறைவில்லாமல் S S R ன் படங்களிலும் ஹீரோவிற்கு மாஸ் ஓப்பனிங், சாங் இருக்கும். ஆனால் வேறு எந்தப் படத்திலும் இல்லாத அளவிற்கு மாஸ் சீன்கள் S S R படங்களில் ஹீரோக்களுக்கு இருக்கும். 

ஈகா படம் முழுக்க மாஸ் சீன்கள் தான். L E D பல்பில் ஈ மஸில் டெவலப் செய்யும் காட்சி, வில்லன் சுதீப்பை தன் கையில் (?) பொருத்தப்பட்டிருக்கும் கத்தியால் (?) கீறிவிட்டு ஆறு கைகளையும் விரித்து ரத்தத்தை கழுவிக் கொள்ளும் காட்சி என்று நெடுக மாஸ் சீன்கள் தான் ஹீரோ “ஈ”க்கு. இவை தவிர நான் ரசித்த மாஸ் சீன்கள் என்றால் Chatrapathi படத்தில் தம்பி புது வீடு கட்ட அதைப் பார்க்க வரும் அண்ணன் சத்ரபதியை அசிங்கப்படுத்தி அனுப்ப நினைப்பான். ஆனால் அவர்களது அம்மாவோ (அம்மா சத்ரபதி சிறு வயதிலேயே இறந்து விட்டதாக நினைக்கிறாள்) சிறுவயது சத்ரபதி போட்டோவை பெரிதாக மாட்டி, தம்பியை ஆசிர்வாதம் வாங்கச் செய்வாள். செம மாஸ் சீன் இது. அதே போல் Vikramarkudu படத்தில் பயம் பற்றி பிரகாஷ்ராஜ் அடிக்கும் லெக்சருக்கு, ரவி தேஜா கொடுக்கும் நோஸ் கட் பதில், Yamadonga வில் மானிடர்களைப் பற்றி யமன் தப்பாக பேசி வைக்க, அதற்கு தானே எமனாகி ‘ஏமின்டிவி ஏமிண்டிவி’ என்று யமனுக்கு மானுட பெருமை சொல்லிவிட்டு சிம்மாசனத்தில் அமர்ந்து ‘any doubts?’ என்று கர்ஜிக்கும் சீன். அனைத்திற்கும் மேலாக, மகதீராவில் 100 பேரை உன்னுடன் சண்டையிட அனுப்புகிறேன், அவர்களை வென்று காட்டு என்று ஷேர்கான் சொல்ல, அதற்கு “ஒக்கக்கன்னிகாது, ஒந்தமந்தினி ஒக்கேசாரி பம்பு” என்று ஒவ்வொருவனாக அனுப்பாமல் மொத்தமாக அனுப்பு என்று காலபைரவா சொல்லும் காட்சி.

ஹீரோயின்களை வெறும் கவர்ச்சி பொம்மைகளாக மட்டுமே பயன்படுத்துகிறார் என்று தன் மீதிருந்த குற்றச்சாட்டை பொய்யாக்கும் விதமாக Magadheera, Maryada Ramanna, Eega படங்களில் ஹீரோயினிற்கு ஹீரோவிற்கு இணையான முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்தார். இந்த மூன்று கதைகளும் ஹீரோயினைச் சுற்றியே நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கும்.

5) Rehearsal and Self – Trail
ஹீரோ, ஹீரோயின், வில்லன், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என்று சகல கதாப்பாத்திரங்கள் நடிக்க வேண்டியதையும் இரவில் தனியாக கண்ணாடி முன் நின்று தான் நடித்துப் பார்த்து மெறுகேற்றி விட்டு, பின்னர் படப்பிடிப்பில் நடிகர்களுக்கு நடித்துக் காட்டுவார். எதையும் தான் முதலில் செய்யாமல் நடிகர்களை செய்து காட்டச் சொல்லமாட்டார். படம் முடிந்து திரையில் கிரெடிட்ஸ் ஓடும் பொழுது, S S R நடித்துக் காட்டும் இந்தக் காட்சிகள் காணக்கிடைக்கும் (ஜாக்கிசான் படங்களின் கிரெடிட்ஸ் போல)

6) The Antagonists

ஒரு ஹீரோவின் முழு பலத்தைக் காட்ட வேண்டுமானால் அதற்கு இணையான வில்லன்(கள்) இருக்க வேண்டும். S S R வில்லன்கள் படுபயங்கரமானவர்கள். ஹீரோவிற்கு இணையான முக்கியத்துவம், பில்டப் வில்லன்களுக்கும் கொடுக்கப்படும். S S R வில்லன்களின் பெயர்களே மிரட்டலாக இருக்கும். பிக்ஷு யாதவ் - Sye, ராஸ் பிகாரி - Chatrapathi, ரணதேவ் பில்லா - Magadheera, டிட்லா – Vikramarkudu, சொல்லவே வேண்டாம் சுதீப் – ஈகா (Yamadonga வில் எமதர்மராஜன். இதையும் சேர்த்துக்கொள்ளலாம்!). S S R வில்லன்களில் எனது மற்றும் பலரது ஆல் டைம் பேவரிட் The Bull – பிக்ஷு யாதவ் தான். எமகாதக வில்லன் இவன்!

7) The Stunts and The Weapons

ஆக்ஷன் காட்சிகள் அதிரடியாக, இதுவரை காணாத ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார் S S R. முக்கியமாக இண்டர்வல் பிளாக், கிளைமாக்ஸ் பைட்கள் அட்டகாசமாக இருக்க வேண்டும். தெலுங்கு சினிமாவின் டாப் 10 பைட் சீன்களில் ராஜமௌலியின் படங்கள் நான்காவது நிச்சயம் இருக்கும்.


எனது பேவரிட், மஹதீரா The 100 Warriors Fight தான்.

இவை தவிர ஆயுதங்கள் - ஹீரோ பயன்படுத்த விதவிதமான ஆயுதங்களை வடிவமைப்பார் S S R. அவை தான் மேலே படத்தில் நீங்கள் பார்த்தது.

இவை தவிர வில்லன்கள் ரணதேவ் பில்லாவின் ஆயுதம், டிட்லாவின் வாளும் செம பேமஸ். ஹீரோவை ஆபத்திலிருந்து காக்கும் எதுவும் ஆயுதமாகலாம் என்பதால், Yamadonga டாலர், Maryada Ramanna சைக்கிள் கூட ஹீரோவின் ஆயுதம் தான் என்கிறார்கள் ஆந்திர ரசிகர்கள். 

8) The Flashback

நிச்சயம் முதல் பாதியினால் ரசிகர்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு அதிரடியான ஒரு பிளாஷ்பேக் மூலம் இரண்டாம் பாதியில் விடை அளிக்க வேண்டும். ஏறக்குறைய இவரது எல்லா படங்களிலும் ஒரு பிளாஷ்பேக் காட்சி இருக்கும். ஏதாவதொரு முக்கிய திருப்புமுனை சம்பவதிற்குப் பிறகு யார், என்ன போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும். Student No 1 - யார் இந்த ஆதித்யா?, சிம்ஹாத்திரி யை ஏன் ஒரு கூட்டம் சிங்கமலை என்று அழைக்கிறது?, Vikramarkudu – அத்திலி சத்திலி பாபுவை (ராக்கெட் ராஜா) “அப்பா” என்று அழைக்கும் குழந்தை யாருடையது?, Yamadonga மஹி ராஜகுமாரனாக ராஜாவை நினைப்பது ஏன்?, Magadheera - இந்துவிற்கும் ஹர்ஷாவிற்கும் என்ன தொடர்பு?

9) The V F X

இறுதியாக மிரட்டலான விஷுவல் எஃபெக்ட்ஸ் (V F X) மற்றும் இதர “டெக்னிக்”கள். டி.வி.டி வாயிலாக இன்றைய ரசிகர்கள் பெருமளவில் ஆங்கில மற்றும் பிற நாட்டுத் திரைப்படங்களை ரசிக்கும் இந்தக் காலக்கட்டத்தில், தியேட்டருக்கு வரும் அவர்களை முழுமையாக திருப்தி படுத்த இந்த லேட்டஸ்ட் “டெக்னிக்”கள் மிக அவசியம் என்கிறார் S S R. இந்த இடத்தில் தான் முழுக்க முழுக்க V F X விருந்தான ஈகாவிற்கு S S R தன்னை தயார் படுத்திக்கொண்ட விதத்தைப் பற்றி சொல்லவேண்டும். S S R ன் முதல் கிராபிக்ஸ் முயற்சி Chatrapathi யில் ஆரம்பமானது. ஹீரோ சத்ரபதி, கடலுக்கடியில் ஒரு சுறாவுடன் சண்டையிட்டு ஜெயிக்க வேண்டும். கிட்டத்தட்ட Finding Nemo வில் வரும் Bruce சுறாவே மட்டமான கிராபிக்ஸில் வந்தால் எப்படி இருக்கும்? அப்படிதான் காமெடியாக இருந்தது சத்ரபதி சுறா. கஷ்டப்பட்டு எடுத்த சீன் காமெடியானது. எனவே மொத்த டீமிற்கும் S S R தலைமையில் V F X ஏரியாவில் சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டது. 

Yamadonga வில் அவர்களது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைத்தது. எது V F X, எது நிஜம் என்று வித்தியாசப்படுத்த முடியாத அளவிற்கு படுதுல்லியமாக அமைந்தது காட்சிகள். குறிப்பிட்டு சொல்லவேண்டிய மற்றுமொரு முக்கிய விஷயம் மறைந்த நடிகர் திரு. N T R அவர்கள் Yamadongavil ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தது. தனது பேரனான ஜூனியருடன் பேசுவார், ஆடுவார், பாடுவார். அதகளமான V F X கலக்கல் அவை (தமிழிலும் இதே போன்ற யுக்தியில், மக்கள் திலகம் M G R சத்யராஜுடன் ஒரு காரில் அமர்ந்து பேசிக்கொண்டு வருவதைப் போன்ற கிராபிக்ஸ் காட்சி ஒரு படத்தில் இடம்பெற்றிருக்கும். எந்த படமென்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லவும், YouTube வீடியோ லின்க் கொடுத்தால் புண்ணியமாகப் போகும்).
இந்த V F X விருந்தே அடுத்து வந்த Magadheera வில் பன்மடங்கு பெரிதாக இருந்தது. Yamadonga வில் கூட, சில எமலோக செட்கள், N T R போர்ஷன் மட்டும்தான் விஷுவல் எஃபெக்ட்ஸில் காட்டப்பட்டன. ஆனால் மஹதீராவின் அரண்மனை, போட்டி நடக்கும் மைதானம் போன்ற இடம், The 100 Warriors Fight நடக்கும் மலை சிவன் கோவில் என்று அனைத்தின் பேக்டிராப்பும் V F X ல் உருவானது தான். மஹதீராவின் பிரம்மாண்டத்தைப் பன்மடங்காக உயர்த்தியதில் இந்தக் காட்சிகளுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. தெலுங்கு சினிமா விஷுவல் எஃபெக்ட்ஸில் ஒரு மைல் கல் மஹதீரா. ஆனால் அதையே தூக்கி சாப்பிட்டது ஈகா. தன் சாதனையை தானே முறியடித்தார் ராஜமௌலி. 
யமதொங்கா, மஹதீரா படங்களின் பின்னனியில்தான் V F X இருக்கும். ஆனால் ஈகாவின் ஹீரோவே முற்றிலும் கணிணியில் உருவாக்கப்பட்ட ஒரு “ஈ”. நடிகர்களை வைத்து சூட்டிங்கை நடத்திவிட்டு, பின் Post – Production சமயத்தில் தேவையான இடங்களில், தேவையான பேக்டிராப், பில்-டப், பிரம்மாண்டம் போன்றவற்றை உருவாக்குவது எப்படி இருக்கிறது; இல்லாத ஒரு “ஈ”யை இருப்பதாக நினைத்து மீதமுள்ள நடிகர்கள் அனைவரும் நடித்துக்கொடுத்து விட்ட பிறகு, Post – Production ல் அந்த “ஈ”யை உருவாக்கி எடுக்கப்பட்ட காட்சியை முழுமையாக்குவது எப்படி இருக்கிறது? அதிலும் திரையில் நமக்கு அருகில் ராட்சதத்தன்மாக தெரியும் ஈ, பறந்து வில்லன் அருகில் போகும் போது அதன் ஒரிஜினல் சைஸில் இருக்கும். அருமையான காட்சியமைப்புகள் + V F X கலவை இந்தக் காட்சிகள் (வில்லன் சுதீப் ஷேவிங் செய்யும் காட்சி ஒரு சிறந்த உதாரணம்) இதுவரை செய்த பரிசோதனை முயற்சிகளுக்கும், அயராத உழைப்பிற்கும், கோடி கோடியாக பணத்தைக் கொட்டியதற்கும் கை மேல் பலன் கிடைத்த்து “ஈ”காவில். திரையில் ஆடி, பாடி, பல சேட்டைகளையும், உணர்சிகளையும் வெளிப்படுத்தும் இந்த கிராபிக்ஸ் (V F X) ஈக்கு மக்களிடன் அமோக வரவேற்பு கிடைத்தது. தியேட்டரில் இந்த ஈ யின் வெற்றியை மக்கள் தங்களது வெற்றியாக கருதினர். கிளைமாக்ஸ் காட்சியின் போது திரையில் வில்லன் சுதீப் “ஈ”யை குண்டூசியால் குத்த, தியேட்டரில் குழந்தைகள் அழும் சத்தம் கேட்டது. ஈகாவின் டிரைலரைப் பார்த்த சக சினிமாக்காரரான ராம் கோபால் வர்மா, “இந்தப் படம் தெலுங்கு சினிமாவின் முதல் 100 கோடி படமாக இருக்கும்” என்று வாழ்த்தினார். படம் வெளியான பிறகு ஒரு படி மேலே போய், “உங்களது பாதங்களை போட்டோ எடுத்துப் போடுங்கள், நாங்கள் தொட்டு வணங்குகிறோம்” என்று உணர்சிவசப்பட்டார். இவர் மட்டுமல்ல இந்தியாவின் பல முன்னனி இயக்குனர்கள், ஹீரோக்களை (நம்ம தலைவர் உட்பட) தனது ரசிகனாக மாற்றியது இந்த கிராபிக்ஸ் ஈ!   

10) The Tunes
கீரவாணியின் பெஸ்ட் ஆல்பங்களில் பல நிச்சயம் S S R ன் படங்களுடையதாகத்தானிருக்கும். உதாரணம் சிம்ஹாத்ரி – andra soda buddi, சத்ரபதி - Gundusoodhi, விக்ரமார்குடு – Jintha Jintha, யமதொங்கா – Raave Naa Rambha, மஹதீரா – Dheera Dheera, மரியாத ராமண்ணா – Raaya Raaya, நான் ஈ – கொஞ்சம் உளறிக்கொட்டவா. பாடல்களை விட பின்னனியிசை S S R ன் படங்களில் சிறப்பாக இருக்கும். ஒரு மாஸ் படத்திற்கு மஸ்ட், நல்ல மியூசிக் தான். சரியான பின்னணி இசை இல்லாமல் ஒரு மாஸ் படம் எப்படி இருக்கும் என்பதை அழகாக நம் லொள்ளு சபா காட்டியிருக்கிறது. அவர்களது “பேக்கரி” எப்பிசோடைச் சொல்கிறேன். கீரவாணியின் பெஸ்ட் என்றால் என்னைப் பொறுத்தவரை Sye மற்றும் Chatrapathi தீம் மியூசிக்ஸ் தான். செம மாஸ்! மேலும் Vikramarkudu தீம், மஹதீரா தீம், ஈகா தீம் என்று நமக்கு நன்கு தெரிந்த தீம்களே நிறைய இருக்கின்றன. மாஸ் மட்டுமல்ல சென்டிமென்ட் டியூனும் தனக்கு கைவந்த கலை என்று Maryada Ramanna வில் காட்டினார் கீரவாணி. Sample Tune உங்களுக்காக.      

மேல் சொன்ன இந்த பத்தும் தான் ராஜமௌலி படங்களில் ஆதார சக்ஸஸ் பார்முளாக்கள்! இவை தவிர நடனம், கலை இயக்கம் போன்ற இன்னும் சில ஏரியாக்களும் மிச்சம் உள்ளன :-)

மேலும் இரண்டு கொசுறுத் தகவல்கள் 


“an s s rajamouli film” என்னும் STAMP “Sye” படத்திலிருந்து தான் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. “முத்திரை பதித்து விட்டார்” என்று புகழுரைப்பதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் உண்மையாகவே தனது முத்திரையை இந்தப் படத்திலிருந்து பதிக்க ஆரம்பித்தார் S S R :-)


S S ராஜமௌலியின் சொந்த தயாரிப்பு நிறுவனம் - Vishvamithra Creations. இதன் logo designற்கு model யார் தெரியுமா? Chatrapathi ஹீரோ பிரபாஸ்!

ஒரு வழியாக பதிவின் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டோம். இந்தத் தொடரின் மிக முக்கியமான, நான் எழுத அதிக நேரம் செலவழித்த பதிவாக இதை எடுத்துக்கொள்ளலாம். இந்த இடத்தில் எனக்குப் பல தகவல்களை கொடுத்து இந்தத் தொடரையே எழுத உதவிய எனது நண்பர்களான, S S ராஜமௌலியின் வெறியர்களான Sravan Kumar Konduru மற்றும் Ravisekhar Reddy இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முடிந்தது :-)





You Might Also Like

22 comments

  1. ராஜமௌலி பற்றி இவ்வளவு விரிவாக எழுதியமைக்கு நன்றி.
    தொடர் வெற்றிகள் அனைத்தையும் தலைக்கேற்றாமல்...பயத்துடன் பணியாற்றும் பாங்குதான் அவரது வெற்றி ரகசியம்.
    இந்த பால பாடத்தை மறந்து ஆடுபவர்களே...அட்ரஸ் இல்லாமல் போகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ராஜமௌலியின் ஒவ்வொரு பேட்டியிலும் தன் படங்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை தெரியும். Vikramarkudu படத்தில் வரும் வசனம் போலத்தான் இவரது ஆசையும். தன் படங்கள் தோற்றுவிடுமோ என்ற பயம் இவருக்கு இருப்பதே இல்லை. தனது முந்தைய படத்தை விட அது சிறப்பானதாக இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே கொண்டவர் ராஜமௌலி :-)

      Delete
  2. நல்ல விரிவாகவும் தெளிவாகவும் எழுதி இருக்கிங்க.., கீப் இட் அப் :)

    //தமிழிலும் இதே போன்ற யுக்தியில், மக்கள் திலகம் M G R சத்யராஜுடன் ஒரு காரில் அமர்ந்து பேசிக்கொண்டு வருவதைப் போன்ற கிராபிக்ஸ் காட்சி ஒரு படத்தில் இடம்பெற்றிருக்கும். //

    அந்த படம் "லூட்டி" ஆபிஸ்ல இருக்கதால நோ யூட்யூப் :)

    இராம.நாராயணனின் திருப்பதி ஏழுமலை வெங்கடேசா படத்துலையும் இதே உக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே. YouTubeல் தேடிப்பார்த்து விட்டேன், அந்தக் காட்சிகள் இல்லை :-(

      Delete
  3. ராஜமௌலி அவர்களைப் பற்றி இவ்வளவு தகவல்களா ?

    நல்ல தொகுப்பு... பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே... தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  4. சூப்பர் பதிவு தல...
    இவரோட அடுத்த படத்துக்கு நான் இப்ப இருந்தே வெயிட் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.
    இவரோட ஒவொரு படமும் தன்னோட முந்திய படத்தோட ரெகார்டை பிரேக் பண்ணி இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. தல, ராஜமௌலியின் அடுத்த படம் பிரபாஸ் உடன். 90 கோடி பட்ஜெட், விஷ்வாமித்ரர் கதை, இல்லை socio - fantasy என்று பேசிக்கொள்கிறார்கள். தலைவர் ஈகா 3D வேலையில் பிசியாக இருப்பதால், அடுத்த படத்தின் தகவல்கள் சொற்பமாகவே வருகின்றன :-)

      Delete
  5. இவ்வளவு விபரங்களை கலெக்ட் பண்ணி ஒரு சூப்பர் பதிவு கொடுத்தமைக்கு மிகவும் நன்றி நண்பா. இவர்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதைக்கரு மற்றும் இவரோட ஹீரோயின் செலக்சன் தான் :-) :-).

    யூடியுபில் பார்க்கலாம் என்றால் சப்டைடில் இல்லயே? எங்காவது ஒரு நல்ல காப்பி தேடி டவுன்லோட் செய்து தான் பார்க்கனும்.

    ReplyDelete
    Replies
    1. ராஜமௌலி ஹீரோயின்கள் பத்தி இன்னும் நிறைய விஷயங்கள் எழுதலாம்னு நெனச்சேன் தல... பதிவு ரொம்ப பெரிசாப் போகுதுனு editing பண்ணவேண்டியதாப் போச்சு :-)

      ஆம், சில படங்களுக்கு சப் டைட்டில் இல்லை. ஆனால் நிச்சயம் இணையத்தில் கிடைக்கிறது. நிச்சயம் பார்த்துவிடுங்கள்...

      Delete
  6. அசத்தல் பதிவு நண்பா! உங்களால் தான் ராஜமெளலி பற்றி இவ்வளவு அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.. உடனே "யமடொங்கா" பார்க்கப் போகிறேன்.. மற்றையவை பின்னால்!

    ReplyDelete
    Replies
    1. "யமதொங்கா" - ஆரம்பிப்பதற்கு அற்புதமான சாய்ஸ் தல. மற்ற படங்களையும் மிஸ் பண்ணிவிட வேண்டாம் :-)

      Delete
  7. Very Interesting writing mr.baby anandan ......keep writing and all the best

    ReplyDelete
  8. பல நாட்களுக்கு பிறகு Cinema பற்றிய ஒரு சுவாரசியமான (மின்) தொடர்.. மிகவும் இரசித்தேன்.. அலுவலகம் கிளம்பும்வேலையில் மனைவியிடம் திட்டு வாங்கிக்கொண்டே படித்தேன் :-))))

    ReplyDelete
    Replies
    1. தங்களது பெயர் தெரியவில்லை... வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே... தொடர்ந்து வாருங்கள் :-)

      Delete
  9. சூப்பர் நெறைய தகவல் தெரிஞ்சுகிட்டேன் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி காப்பிகாரன்...

      Delete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...