வாழ்க சுதந்திரம்...

11:20:00 AM

போட்டோ இணையத்திலிருந்து எடுத்தது. All Credits goes to the original uploader

டிஸ்கி: பதிவு வழக்கம்போல மிகவும் நீளமாகப் போய்விட்டது. மன்னிக்கவும்!

சுதந்திரம் வாங்கி 65 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. 65 ஆண்டுகளாக சுதந்திர தினத்தையும் விடாமல் கொண்டாடி வருகிறோம். ஒரு நாள் விடுப்பு கிடைக்கிறது. காதலர் தினத்தில் மட்டும் காதலைக் கொண்டாடுவது போல, சரஸ்வதி பூஜையன்று மட்டும் விழுந்து விழுந்து “கல்வி கண் கொடு தாயே” என்று உருகுவதைப் போல, சுதந்திர தினத்தில் மட்டும் நம்மவர்களுக்கு சுதந்திர தாகம் பொத்துக்கொண்டு வந்து வடுகிறது. ஏனென்றுதான் தெரியவில்லை. காந்தியைப் பற்றிய ஸ்பெஷல் நிகழ்ச்சிகளில் ஆரம்பித்து, 2 ரேப் ஒரு கொலை செய்தவனை நன்னடத்தைக் காரணமாக சிறையிலிருந்து விடுதலையளிப்பது வரை அனைத்தும் சுதந்திர தினத்தில் தவறாமல் நடக்கிறது.

அதற்காக காந்தியையும், போஸையும் தினம் தினமா நினைத்து கொண்டிருக்க முடியும்? வேறு வேலை இல்லையா? கேட்கலாம். இன்றைய தலைமுறையில் கேட்டதெல்லாம் நொடிப்பொழுதில் கிடைத்துவிடும் பாக்கியம் பெற்ற நமக்கு (பெரும்பாலானவர்களுக்கு) சுதந்திரம் என்பதன் உண்மையான அர்த்தமும், அதை வாங்க நம் முன்னோர்கள் செய்த போராட்டங்களைப் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பள்ளி பாடப்புத்தகத்தில் “இந்திய விடுதலைப் போராட்டம்” என்பது ஒரு பாடமாக இருக்கும். நாமும் அதை மனப்பாடம் செய்து பரிட்சையில் எழுதி 10 / 10 மதிப்பெண் வாங்குகிறோம். இவ்வளவு தான் நமக்குத் தெரிந்த விடுதலை - போராட்டம் - வரலாறு.

போகட்டும் “சுதந்திரம்” பற்றி நமக்கு என்ன தெரியும்? நிறையவே தெரியும். பேசுச் சுதந்திரம், எழுதுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், உடுத்தும் உடைகளில் சுதந்திரம், பேசும் மொழியில் சுதந்திரம், உண்ணும் உணவில், குடிக்கும் மதுவில் என்று சுதந்திரத்திற்கு மட்டும் நமக்கு இங்கு எல்லையே இல்லை. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவ்வளவு சுதந்திரம். ஒரு குறிப்பிட்ட இனத்தை நமக்கு பிடிக்கவில்லையா? பரவாயில்லை அவர்களை மொத்த மொத்தமாக கொன்று குவிக்கலாம். யாரும் உங்களை எதுவும் கேட்க முடியாது. உங்களிடம் எண்ணைக்கிண்று இருந்தால் தான் உலக நாட்டாமையான அமெரிக்கா பஞ்சாயத்து பேச வரும். கிணறு இல்லை வெறும் புத்தர் சிலை தான் நிறைய இருக்கிறது என்றால் பிரச்சனையே இல்லை. அவ்வளவு தூரம் போவானேன், வீட்டருகில் பணக்காரர்கள் குடித்து, குட்டிகளுடன் கும்மாளம் அடிக்கிறார்களா? வயிறு எறிகிறதா? உங்களுக்கு அவர்களை வீடு புகுந்து தாக்கவும் சுதந்திரம் இருக்கிறது. உடன் ஒரு போட்டோகிராப்பரையும் அழைத்துக்கொண்டு போகலாம். நமது கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள், அதனால் தட்டிக் கேட்கிறோம் என்று அந்தக் குட்டிகளின் மார்புகளில் கையை வைத்துக் கொண்டே பேட்டி கொடுக்கலாம். அதை YouTubeல் போடலாம். அதைத் தேடி எடுத்து, இரண்டு நாட்கள் டீவியிலும் காட்டுவார்கள். பல தலைவர்கள், சங்கங்கள் இதைப் பற்றிப் பேசுவார்கள். உங்களுக்கு போலீஸ் பந்தோபஸ்து கிடைக்கும். நாட்டின் கலாச்சாரத்தைக் காப்பாற்ற உங்களுக்கு இல்லாத உரிமை, சுதந்திரம் வேறு யாருக்கு இருக்கிறது?

“புகைப்பதும், மது அருந்துவதும் எங்களது சுதந்திரம்” - சொல்வது வேறு யாருமில்லை. பாரதி கனவு கண்ட ஒரு புதுமைப் பெண் தான். அவளுக்கு தன் சுதந்திரம் பற்றியும் அதன் எல்லைகளைப் பற்றியும் நிறையவே தெரிந்திருக்கிறது. “மாம், ஐ நோ வாட் ஐயம் டூய்ங், ஒய் ஆர் யு பாதர்ட்?” கேட்பது வேறு யாருமில்லை. ஒரு தமிழ் குடும்பத்தின் இளைய வாரிசு தான். மூன்றால் வகுப்பு படிக்கிறான். அவனுக்கும் சுதந்திரம் பற்றி தெரிந்திருக்கிறது. “கோவிலுக்கு ஏன் குளிக்காமல் போகக்கூடாது? இது மாதிரி எல்லாம் சட்டம் (?) போடுபவர்கள் சுதந்திரத்திற்கு முன்னால் பிறந்தவர்கள்” சொல்கிறவன் வேறு யார் இன்றைய தலைமுறை சாப்ட்வேர் இளைஞன். குளிக்காமல் கோவிலுக்கு போதும் கழிவறையில் அமர்ந்து சாப்பிடுவதும், அனைத்தும் அவன் இஷ்டத்தைப் பொறுத்தது. யாரும் அதில் தலையிட முடியாது. அவ்வளவு சுதந்திரம். சிக்னலில் நிற்க வேண்டாம், பிடிபட்டாலும் 10 ரூபாய் கொடுத்தாலே சுதந்திரம். இவ்வளவு சல்லீசு விலையில் சுதந்திரம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் நம் முன்னோர்கள் தேவையில்லாமல் தங்களது ரத்தத்தை சிந்தியிருக்க மாட்டார்கள்.

அன்று வெள்ளையன் நம்மை வெளிப்படையாக அடிமைப்படுத்தி வைத்திருந்தபோது போது கூட நமக்கு, ரயில் வண்டி, தபால் நிலையம், கல்வி, ஜாதிக் கொடுமையிலிருந்து விடுதலை, வேலைவாய்ப்பு என்று நிறைய ஆதாயம் கிடைத்தது. நம்மை நாமே ஆண்டு கொள்ளும் சுதந்திரம் இல்லாமல் அடுத்தவனுக்கு மண்டி போடும் நிலை மட்டும் தான் இருந்தது. ஆனால் சுதந்திரம் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு இன்றும் நம்மை அவர்களுக்கு, அவர்களது கலாச்சாரத்திற்கு வெள்ளையன் அடிமையாக்கி வைத்திருப்பதைப் பார்க்கும் பொழுது சுதந்திரம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? நம்மை ஆண்டு கொண்டிருப்பதென்னவோ வெள்ளையன் தானே என்று தோன்றுகிறது! உடுத்தும் உடை, பேசும் பேச்சு, உண்ணும் உணவு என்று அனைத்தையும் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட நாம், அவர்களது மொழிப்பற்று, தேசப்பற்று, கலாச்சாரத்தின் மேல் உள்ள அவர்களது பிடித்தம் ஆகியவற்றை ஏன் கற்றுக்கொள்ளவில்லை? தெரியவில்லை! முழுக்க முழுக்க வெள்ளையனை மட்டும் இந்த இடத்தில் குற்றம் சொல்லக்கூடாது. காந்தியின் பெயரால் நேரு குடும்பம் சுதந்திரம் வாங்கிய தினத்திலிருந்து வேறு ஆப்ஷனே கொடுக்காமல் சுதந்திரமாக நம்மை ஆண்டு கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?

சுதந்திரம் வாங்கி 65 ஆண்டுகள் ஆகிவிட்டதைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். சரி, சுதந்திரம் இருக்கிறது. பாதுகாப்பு இருக்கிறதா? நமக்கு (இந்தியாவிற்கு) ஒரு ஆபத்து என்றால் யார் முதலில் உதவிக்கு வருவார்கள்? நம் வீட்டில் ஏதாவது சத்தம் கேட்டால், முதலில் வந்து எட்டிப் பார்த்து என்னவென்று பார்ப்பது நம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் (பிளாட்காரர்களைச் சொல்லவில்லை). ஆக இந்தியாவிற்கு ஏதாவது நடந்தால் என்னவென்று கேட்டு உதவிக்கு ஓடி வருபவர்கள் யார் யார்? நமக்கு மிக அருகில் இருக்கும் பாகிஸ்தானா? சீனாவா? இலங்கையா? அல்லது வங்காளமா? மியான்மரா, நேபாளமா? நம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் நம் எதிரிகள். இந்த ஒவ்வொரு நாடுகளின் ஏவுகணைகளும் நம்மை நோக்கியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் தற்போதைய ஒரே எதிரி இந்தியா தான் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. பாகிஸ்தான் - சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இலங்கை – வாயைத் திறக்க முடியுமா நம்மால்? இவ்வளவு ஏன்? பத்து பேர், எந்த வித பாதுகாப்பு கவசங்களும் இல்லை, எந்த வித தடங்கள்களும் இல்லை, கையில் ஆளுக்கு ஒன்றிரண்டு இயந்திரத் துப்பாக்கிகளை மட்டும் வைத்துக் கொண்டு வந்தார்கள், சுட்டார்கள், கூட்டம் கூட்டமாக மக்கள் செத்து மடிந்தார்கள். 72 மணிநேரத்திற்கும் அதிகமான போராட்டத்திற்கு பிறகு ஒருவன் மட்டும் பிடிபட நம்மில் 166 பேர் பலி. அதில் 28 பேர் வெளிநாட்டவர்கள். 300க்கும் அதிகமானோர் காயங்களுடன் தப்பினர். Hemant Karkare – நினைவிருக்கிறதா இவரை? மும்பையின் Anti Terrorist Squad தலைவர். மும்பை தாக்குதலின் போது மூன்று குண்டுகளை நெஞ்சில் வாங்கி இறந்தவர். காரணம் அவர் அணிந்திருந்த புல்லட் ப்ரூஃப் வெஸ்ட். அழகாக குண்டுகளைத் தனக்குள் வாங்கிகொண்டு இந்த வீரனது உயிரைப் பறித்தது அந்த வெஸ்ட்! சைனா மார்க்கெட்டில் வாங்கிவிட்டு, Made in U.S என்று லேபிள் அடித்து இவரது கையில் கொடுத்துவிட, மனிதரும் நம்பி அதைப் போட்டுக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார். உயிர் போய்விட்டது. தீவிராவாதிகள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்கவும் துப்பில்லை, அவர்களை பிடிக்க உதவும் சாதனங்களை கலப்படம் இல்லாமல் வாங்கி வைக்கவும் துப்பில்லை. கொன்று குவித்த கொலைகாரனைத் தூக்கிலிடவும் துப்பில்லை. இந்திய சுதந்திர நாட்டில் “காசாப்”பிற்கு தான் சுதந்திரம் நிரம்ப இருக்கிறது. தினம் அவனுக்கு பிரியாணி வாங்கிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது நம் அரசு. அனைத்து நாடுகளும் நம்மை பார்த்து “பொண்டுகப்பயலுக” என்று வெளிப்படையாகவே நக்கலடித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சுதந்திர தினம் நமக்கு மிக மிக அவசியம்! கொண்டாடித் தள்ளி விடவேண்டாமா? அதிலும் நமது முப்படைகளும் டில்லி செங்கோட்டையில் அணிவகுத்து வருவார்களே, அதைப் பார்த்தும் பூரித்து போகவேண்டியது அவசியம்.

இந்தியாவை விடுங்கள், தமிழகம் பாதுகாப்பாக இருக்கிறதா? கர்நாடகா, கேரளா, கீழே இலங்கை யாருடனாவது நமக்கு நட்புறவு இருக்கிறதா? நமக்கு முதலில் ஒரு பிரச்சனை என்றால் மிகவும் சந்தோஷப்படுபவர்கள் இவர்களாகத் தான் இருப்பார்கள். இப்படி நாடும் வீடும் பாதுகாப்பில்லாமல் இருக்கும் போது நமக்கெல்லாம் சுதந்திர தினம் நிச்சயம் தேவையான ஒன்றுதான்

சரி, இப்படி சுதந்திரம் பொங்கி வழியும் இந்த நாட்டின் சுதந்திர தின ஸ்பெஷலாக நானும் ஏதாவது எழுத வேண்டும் என்று எண்ணிய போது தான், செண்பகராமன் பிள்ளை அவர்கள் என் நினைவிற்கு வந்தார். இவரைப் பற்றி சிறிது நாட்களுக்கு முன் முகப்புத்தகத்தில் (எப்படி என் மொழியார்வம்!) ஒரு குறிப்பு எழுதியிருப்பததைப் பார்த்து இவர் யார், என்ன என்ற விபரத்தை இணையத்தில் தேடினேன். பல சுவாரஸ்யாமான தகவல்களை விக்கிபீடியா கொடுத்தது. மேலும் Google உதவியுடன் ஆழமாகத் தோண்ட இன்னும் நிறைய விபரங்கள் கிடைத்தது. அப்படித் தெரிந்து கொண்டதன் மூலம், நம் நேதாஜிக்கு இணையான ஒரு சுதந்திர போராட்ட வீர்ர், தமிழரை பற்றி இத்தனை நாள் எதுவுமே தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன், வெட்கப்பட்டேன். என் நண்பர்களிடமும் “செண்பகராமன் பிள்ளை” என்பவரைத் தெரியுமா? என்று கேட்டேன். அவர்களுக்கும் தெரியவில்லை.

ஆக, “போதிதர்மரை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறேன்” என்ற பெயரில் நம்மை வாட்டி வதைத்த ஏழாம் அறிவு போல் ஏதாவது செண்பகராமன் பெயரை வைத்தும் வந்துவிடப்போகிறது என்ற பயத்தில் அவரைப் பற்றி என்னாலான தகவல்களை இங்கு பகிர்கிறேன். மேலும் விபரமாக இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள இணையத்தில் நான் படித்த சில பக்கங்களின் “லின்க்”களையும் இறுதியில் கொடுக்கிறேன்.

நன்றி - www.wikipedia.com
செண்பகராமன் பிள்ளை – இந்தியாவிற்கு வெளியே இருந்து ஆங்கிலேயர்களை வெளியேற்ற பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களில் முதன்மையானவர்; தமிழர். பள்ளி பாடம் கேரளாவில். பின்னர் சர் வால்டர் வில்லியம் என்பவரது துணையுடன் ஐரோப்பா சென்று, ஜெர்மனியில் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ளார். “International Pro-India Committee” என்ற குழுவை 1914 செப்டெம்பர் மாதம், Zurich ல் தொடங்கி, இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை வெளியிலிருந்து எதிர்க்க ஆரம்பித்தார். பின்னர் பெர்லினில் உருவாக்கப்பட்ட Indian Independence Committee யிலும் தன்னை இணைத்துக்கொண்டு போராடியுள்ளார். ஆங்கிலேயர்கள், "இந்தியாவை தாங்கள் ஆள்வது சரிதான்" என்றும், நம்மை நாமே ஆளும் திறன் நமக்கு (இந்தியர்களுக்கு) இல்லை என்பது போன்ற பொய்யான பிரச்சாரங்களை பரவவிட்டிருந்ததை எதிர்த்து போராடி பல் வேறு நாடுகளுக்குச் சென்று ஆதரவு திரட்டியிருக்கிறார்.

முதலாம் உலகப் போரின் போது வெள்ளையர்களின் கப்பற்படையை நீர்மூழ்கிக்கப்பல்களைக் கொண்டு கலங்கடித்தனர் ஜெர்மனியினர். அப்படி சென்னையில் இருந்த ஆங்கிலேயர்களை கலங்கடித்து, பயம்காட்டிய கப்பல் - “எம்டன்”. மூன்று மாதங்கள் பசிபிக் பெருங்கடலை தன் கைக்குள் வைத்திருந்த எம்டன் மொத்தம் 18 ஆங்கிலேய கப்பல்களை தகர்த்தெறிந்து இருக்கிறது. இந்தக் கப்பலின் முக்கிய பொறியாளர், செண்பகராமன் பிள்ளை. ஆங்கிலேயருக்குச் சொந்தமான இரண்டு எண்ணெய்க் கிடங்குகள், சென்னைத் துறைமுகம், ஜார்ஜ் கோட்டை, திருகோணமலைத் துறைமுகம் என்று தமிழகத்தில் சராமாரியாக இக்கப்பல் நிகழ்த்திய பீரங்கித் தாக்குதல்கள் நாடறிந்தது.

வெள்ளையர்கள் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் போதே, அவர்களது ஆட்சியை எதிர்த்து இந்தியர்கள் ஆப்கானித்தானில் தங்களே நடத்திய போட்டி அரசை (ஆண்டு 1915) நிறுவியதில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்த அரசிற்கு ஜெர்மெனியின் நேரடி ஆதரவு இருந்து வந்திருக்கிறது. 1930களில் ஹிட்லருடன் நேரடித் தொடர்பில் இருந்திருக்கிறார் செண்பகராமன் பிள்ளை. அவரது இந்த நட்பின் நோக்கமெல்லாம் இந்திய விடுதலைக்காகவே இருந்திருக்கிறது. ஆனாலும் ஒரு முறை இந்தியாவை தரக்குறைவாக விமர்சித்த ஹிட்லரைக் கண்டித்து, எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு வாங்கியிருக்கிறார். இது நடந்தது டிசம்பர் 1931. அதனாலேயே நாஜிக்களால் நயவஞ்கமாக உணவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்கிறது வரலாறு, ஆண்டு, 1934. இந்த மனிதரின் கடைசி ஆசை தனது அஸ்தியை தனது பிறந்த ஊரில் புதைக்க வேண்டும் என்பதே. 1966 ஆம் ஆண்டு செண்பகராமன் அவர்களது ஆசை, அவரது மனைவியார் ஜான்சி அவர்களால் நிறைவேற்றப்பட்டது.
  
இவற்றையெல்லாம் விட மிக முக்கியமாக “ஜெய்ஹிந்த்” என்ற இந்திய சுதந்திர முழக்கத்தை முதலில் முழங்கியவர் செண்பகராமன் பிள்ளை அவர்களே. 1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் இவர் இம்முழக்கத்தை முழங்க, அதை கேட்டு வழிமொழிந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உலகமெங்கும் பரப்பினார்.

செண்பகராமனைப் பற்றி மேலும் விபரமாகத் தெரிந்து கொள்ள் கீழுள்ள ‘லின்க்’களை பயன்படுத்தவும். ஏகப்பட்ட தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன இங்கே.

இங்கு - செண்பகராமன் அவர்களின் முழு வரலாறு ஆங்கிலத்தில்

இங்கு செண்பகராமன் அவர்களைப் பற்றிய விக்கிபீடியா ஆங்கிலப் பக்கம்

இங்கு – செண்பகராமன் அவர்களைப் பற்றிய விக்கிபீடியா தமிழ் பக்கம்

இங்கு - உசிலம்பட்டியைச் சேர்ந்த பதிவர் போட்டோகிராப்பர் திரு சங்கர் “ஜெய்ஹிந்த்” எழுதிய பதிவு

இங்கு - குமரி பாவட்டத்தின் பெருமையச் சொல்லும் பக்கம். இங்கு செண்பகராமன் பிள்ளை அவர்கள் நேதாஜியுடன் இணைந்து “ஜெய்கிந்த்” என்று முழங்குவதைப் போன்ற ஓவியம் இருக்கிறது.

இங்கு - செண்பகராமன் எப்படி இறந்தார் என்பதை பற்றிய குறிப்பு

இங்கு திடீரென்று என்ன நடந்ததோ தெரியவில்லை, தமிழ அரசு 2008 ஆம் ஆண்டு செண்பகராமன் பிள்ளை அவர்களுக்கு ஒரு சிலையை வைத்து மரியாதை செய்து, தன் கடமையை நிறைவேற்றியது.

1857 ஆம் ஆண்டே வெளிப்படையான சுதந்திர போராட்டம் நம் நாட்டில் சிப்பாய் கலகத்தின் வாயிலாக தொடங்கப்பட்டு, அன்றிலிருந்து 1947 ஆம் ஆண்டு வரை இந்தியா முழுக்க பலர் நம் சுதந்திரத்திற்காக எண்ணிலடங்கா தியாகங்களைச் செய்திருந்தாலும் நாம் அறிந்த “சுந்தந்திர போராட்ட வீரர்கள்” எல்லாம் கடைசியில் வந்த ஒரு சிலர்தான். மகாத்மா காந்தியையும் நேரு மாமாவையும் தெரிந்த அளவிற்கு நமக்கு மற்றவர்களைப் பற்றித் தெரியவில்லை. அதிலும் காந்தி? இவரது பெயரில் இன்று வரை நடந்து கொண்டிருக்கும் அரசியலைப் பற்றி வெளிப்படையாக பேசக் கூட நம்மில் யாருக்கும் தைரியம் இல்லை. காந்தியை பற்றிப் பேசினாலே இங்கு பெருங்குற்றமாகி விடுகிறது. காரணம் காந்தியைத் தான் “இவர்கள்” தங்களது அரணாக வைத்திருக்கிறார்கள். காந்தியை ராமனின் மறு அவதாரமாக இவர்கள் சித்தரிக்கிறார்கள். ராமனும் தவறு செய்தவன் தானே என்றெல்லாம் இங்கு கேடகக்கூடாது. ராமன் கடவுள், கடவுள் எது செய்தாலும் சரியே. மனைவியை சந்தேகப்படுவது உட்பட. சரியாகச் சொல்ல வேண்டுமானால் ஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் (பாலாவின் நான் கடவுள்) வரும் மாங்காண்டிச் சாமி கதாப்பாத்திரம் போன்றவர் தான் நாம் அறிந்த அல்லது நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட காந்தி, எல்லாமே இவர்தான் என்பது போலிருக்கும். ஆனால் மிகவும் பாவப்பட்ட ஜீவன் என்றால் (“மகாத்மா?”) அது அந்த மாங்காண்டிச் சாமி அல்லது நம் காந்தி தான். காந்தீயம் என்ற பெயரில் இன்று நடந்து கொண்டிருக்கும் கூத்து, காந்தி தன் முற்பிறவிகளில் செய்த பாவங்களின் மொத்த வினை. அடுத்த பிரதமர் ராகுல் காந்தி! வாழ்க காந்தீயம்.

சுதந்திரப் போராட்டம், இந்தியப் பிரிவினை பற்றி நமக்கு முழுமையாக பல விஷயங்கள் சொல்லப்படவில்லை என்பதே எனது ஆதங்கம். சுதந்திரம் என்பதே பிரிவினையின் போது பல்லாயிரக்கணக்காண உயிர்களை பலி கொடுத்து வாங்கியது என்பது நம்மில் எத்தனை பேருக்கு உரைக்கிறது என்பது தெரியவில்லை. என்னைப் பொறுத்த வரை சுதந்திர தினமென்பது ஒரு கறுப்பு தினம். நம்மை நாமே ஆள வேண்டும் என்பதற்காக அன்று உயிரை விட்ட பல்லாயிரக்கணக்கான தியாகிகளுக்கும், மதரீதியாக நடந்த இடப்பெயர்ப்பில் அநியாயமாக சிக்கி சீரழிந்து மாண்டுபோன நம்மை போன்ற சாமானியர்களுக்கும் துக்கம் சம்பவிக்கும் தினமாகவே சுந்தந்திர தினம் இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு நரகாசுரன் செத்ததை தீபாவளியாகக் கொண்டாடுவது போல் இந்தத் தியாகிகள் செத்து மடிந்ததையும் அதே டெம்ப்ளேட்டில் “ஸ்பெஷல் நிகழ்ச்சிகள், ரிலீஸ் படங்கள், நடிகர்-நடிகைகள் பேட்டிகள், முகப்புத்தகத்தில் வாழ்த்து” என்று ஒரு தேசியக் கொடியை மட்டும் நெஞ்சில் எக்ஸ்ட்ராவாகக் குத்திக் கொண்டு நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஏன் கொண்டாடுகிறோம், எதற்கு கொண்டாடுகிறோம், எதைக் கொண்டாடுகிறோம்? தெரியவில்லை.

இந்தியப் பிரிவினை என்று சொன்னவுடன் தான் நியாபகத்திற்கு வருகிறது. கதையில்லை கதையில்லை என்று பேயாகப் பறந்து, பழைய படங்களை ரீமேக் செய்துகொண்டிருக்கிறதே கோலிவுட்; தெரியாமல் தான் கேட்கிறேன், இந்தியப் பிரிவினையையும், இலங்கை இறுதி கட்டப் போரையும் களமாக தேர்ந்தெடுத்தால், ஆயிரம் கதைகள் கிடைக்குமே. அவற்றையெல்லாம் படமாக எடுக்க முடியுமா? முடியாது… நடந்ததைக் காட்டும், உள்ளதை உள்ளபடி காட்டும் சுதந்திரம் நமக்கு இல்லை. எனக்குத் தெரிது அப்படி தமிழில் வந்த ஒரே ஒரு படம் ஹேராம். அந்தப் படத்திற்கு நாம் செய்தது அநீதி. இன்றும் அந்த அநீதியை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் நண்பர் உலக சினிமா பாஸ்கரன் போன்றவர்கள் தங்களது தளங்களில் கதறிக் கொண்டிருக்கிறார்கள். (நான் ஹேராம் என்ற படத்தைப் பற்றி மட்டும் தான் பேசுகிறேன். கமல் புராணம் பாடவில்லை) இந்த மாதிரி படங்கள் தோற்பதால் தான் மரத்தைச் சுற்றிப் பாட்டு பாடுவதையே படம் என்று நினைத்து எடுத்துக்கொண்டிருக்கிறோம், பார்த்துக்கொண்டிருக்கிறோம். பிரிவினையை விடுங்கள். அது நடந்து 65 ஆண்டுகளாகிவிட்டது. பொது இடத்தில் ஒரு பெண்ணை 15 பேர் கும்பல் பலாத்காரம் செய்வதை, அந்த 15 பேரில் ஒருவனே இணையத்தில் வெளியிட, உலகமே அதைப் பார்க்கிறது. ஆனால், ஒரு இனமே அழிக்கப்பட்டதை, வெளிப்படையாக ஒரு சினிமாவாகக் கூட நம்மால் எடுக்க முடியவில்லை. ஏனென்றால் நம்மை ஆண்டுகொண்டிருப்பது “காந்தியவாதிகள்”. ஆஹா… சுதந்திரம்... எங்கும் எதிலும் சுதந்திரம், தலைவிரித்தாடுகிறது இந்த சுதந்திரம்!

எதையோ எழுத ஆரம்பித்து சம்பந்த சம்பந்தமில்லாமல் பல விஷயங்களை எழுதி பாதியிலேயே நிறுத்திவிட்டிருப்பது போலத் தோன்றுகிறது. இன்னமும் இட ஒதுக்கீடு, கல்விமுறை, சட்டம், லஞ்சம்,  ஊழல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை என்று எவ்வளவோ இருக்கிறது. பரவாயில்லை. எழுதி, பேசி மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது? எது சுதந்திரம் என்பதே தெரியாமல் சுதந்திர தினத்தை இனிப்பு, விடுப்பு கொடுத்து கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். நம்மைப் போன்ற பாவப்பட்ட ஜீவன்கள்  இவ்வுலகில் உண்டா ? என்னளவில், நாளை நான் சந்தோஷமாக அலுவலகம் செல்கிறேன். சுதந்திர தினத்தில் அலுவலகம் வந்தால் இரட்டை ஊதியம் கொடுக்கிறார்கள். வேறு ஏதாவது ஒரு நாள் விடுப்பும் எடுத்துக்கொள்ளலாம். எனக்கு இது போதும். இது தான் என் சுதந்திரம். 

அடுத்தவரை மட்டுமே குறை சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இங்கு நான் எழுதியிருக்கும் அனைத்தும் வானத்தைப் பார்த்து துப்பிக்கொள்வதைப் போலத் தான். என் முகத்திலேயே வேறு எப்படி நான் துப்பிக்கொள்ளவதாம்?

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள், ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், Whatever…

You Might Also Like

4 comments

 1. நண்பரே...மிக்க நன்றி.
  செண்பகராமன்பிள்ளை பற்றி மிக விரிவாகஎழுதியதற்கு.
  அவரை பற்றி முன்பு ஒரு தடவை தினமணி கதிரில் படித்தேன்.
  இப்போது மிக விரிவாக தெரிந்து கொண்டேன்.
  இனி பிள்ளை சமூகத்தை சேர்ந்த ஜாதி சங்கம் அவரை தத்தெடுத்து கொள்ளும்.
  தேசியத்தலைவர்களையெல்லாம் இப்போது ஜாதி சங்க கடவுள்களாகி விட்டார்கள்.
  இதுவும் ‘சுதந்திரம்’ கொடுத்த சுதந்திரம்.

  ஹேராம் பதிவு பற்றி குறிப்பிட்டு பெருமை படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 2. தல,
  நீங்க சொன்ன நிறைய கருத்துகள் கூட நான் அப்படியே ஒத்து போறேன். சில இடங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. நம்ம சிஸ்டம் நீங்க சொன்னா மாதிரி தான் இருக்கு, நம்மால் சிஸ்டதத்தை மாத்த முடியாது, முடியாது என்பதை விட தெரியாது என்பதே சரி. அந்த சிஸ்டத்தில் வாழ பழகி கொள்ள வேண்டு, அந்த சிஸ்டத்தை ஏற்று கொள்ள முடியாதவர்களே கலாச்சார சீரழிவு, போலி ஜனநாயகம் என்று சொல்லுறாங்க என்பது என்னோட கருத்து.
  எனக்கு நம்ம சிஸ்டம் ரொம்பவே பிடிச்சு இருக்கு, அதனால எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை :).
  ஒரு நல்ல குடிமகனோட கடமை ஒட்டு போட்டு, சரியா 30% வரி கட்டுறதோட முடியுதுன்னு நான் நினைக்கிறன்...
  இன்னும் கொஞ்சம் நாளுல நான் இந்த கடமையில இருந்து தவறுனலும் தவறுவேன் :)
  அப்புறம் முக்கியமா "செண்பகராமன் பிள்ளை" பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றி, அவரை பத்தி இப்ப தான் கேள்விபடுறேன்.

  ReplyDelete
 3. செண்பகராமன்பிள்ளை பற்றிய விரிவான தகவலுக்கு மிக்க நன்றி... பாராட்டுக்கள்... நன்றி...

  ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

  ReplyDelete
 4. //டக்...டக்... நான்தான் மனசாட்சி பேசுறேன்...//
  லேபலுக்கு பெயர் வைக்கும் விதமே புதுமையாயிருக்கு..

  சுதந்திர தின வாழ்த்துக்கள் (நான் ரொம்ப லேட்டோ!)

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...