கோவை புத்தகக் கண்காட்சி 2012 - ஒரு ரவுண்ட்

12:22:00 PMகோவையில் புத்தகக்கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அநேகமாக இந்த பதிவை நான் வெளியிடும் போது “நடைபெற்றது” என்று மாற்ற வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். சினிமா பார்க்கும், படங்களைச் சேர்க்கும் அளாவு ஆர்வம் எனக்கு புத்தங்களின் மீது இருந்ததில்லை. ஆனாலும் சினிமா சம்பந்தமாக (நடிகர், ந்டிகைகள் கிசு கிசு அல்ல) எந்த புத்தகம் வந்தாலும் அதை ஆவலுடன் வாங்கி உடனே படித்தும் விடுவேன். First Priority. பெரும்பாலும் தமிழ் புத்தகங்கள் தான் என் சாய்ஸ். எப்பொழுதாவது தான் ஆங்கிலம். சினிமா தவிர்த்து விரும்பிப் படிக்கும் புத்தகங்கள் என்றால் கதை, கட்டுரைகள், அரசியல், இந்திய வரலாறு, வணிகம் என்று மிகவும் குறுகிய வட்டமே. கவிதைகள் எனக்கு அலர்ஜி. எனவே புத்தகக் கண்காட்சி என்றால் முதல் ஆளாக ஆஜராகிவிடுவேன். வாங்குகிறேனோ இல்லையோ ஒரு ஸ்டால் விடாமல் ஏறி இறங்கி விடுவேன். அப்படி கோவையில் நடக்கும் (நடந்த ?) இந்த புத்தகக் கண்காட்சிக்கும் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து பெங்களூரில் இருந்தது பஸ் ஏறினேன். சுமார் நான்கு மணி நேரம் செலவழித்து எனது நண்பன் முத்துராஜ் உடன் கண்காட்சியை ஒரு ரவுண்ட் வந்தேன். 100 ஸ்டால்கள் இருந்ததென நினைக்கிறேன். பெரும்பாலும் அனைத்து ஸ்டால்களிலும் ஏறி இறங்கிவிட்டோம். ஆனால் அதிக நேரம் செலவிட்டதென்னவோ நண்பர் உலக சினிமா பாஸ்கரன் அவரது ஸ்டாலில் தான். நண்பரது ஸ்டாலில் மற்ற ஸ்டால்களுடன் ஒப்பிடும் போது கூட்டம் இருந்தது மகிழ்ச்சி.

முதலில் நண்பரது “Hollywood DVD Shopee” ஸ்டால் பற்றி எழுதிவிடுகிறேன். நாங்கள் ஸ்டாலுக்குள் நுழையும் போது சீரியஸாக வேறு ஒரு கஸ்டமருக்கு பிஸியாக சினிமா பரிந்துரைத்துக் கொண்டிருந்தார் நண்பர். அவரை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று நான் ஒரு பக்கம் தேடலை ஆரம்பித்தேன். முதலில் தென்பட்டதே நான் பல நாளாய் தேடிக்கொண்டிருந்த Death on a full Moon Day! விகடன் செழியன் உட்பட பலர் இந்தப் படத்தைப் பற்றி எழுதி ஆவலைத்தூண்டி விட்டிருந்தனர். இணையத்திலும், வெளியிலும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இப்போது கிடைத்துவிட்டது. ஆரம்பம் அமர்களமாக அமைந்ததால் முழு உற்சாகத்துடன் ஸ்டாலை துலாவ ஆரம்பித்தேன். சற்று நேரத்திலேயே நண்பர் பாஸ்கரன் என்னை அடையாளம் கண்டுகொண்டு பேச ஆரம்பிக்க வேட்டை தொடர்ந்தது. மொத்தம் 25 படங்கள் எடுத்தேன். அதில் 8 நண்பர் பாஸ்கரனது ரெக்கமென்டேஷன்ஸ். எல்லாம் பழைய கிளாஸிக்ஸ் (Man With a Movie Camera, Zorba, Taras Bulba, Umberto D என்று. மறுக்காமல் வாங்கிக்கொண்டேன். கடைசியாக எடுத்தது Postmen in the Mountains. இதுவும் பல நாள் சிக்காமலிருந்த படம் தான். தனக்கென்று வைத்திருந்த கடைசி A Separation பட டிவிடியையும் நான் கேட்டவுடன் எடுத்துக் கொடுத்துவிட்டார். ஏற்கனவே என்னிடம் இருக்கும், பார்த்தும் விட்ட Seven Samurai பட டிவிடியை அங்கு பார்த்தவுடன் “ஒருவேளை நம்மிடம் இந்தப் படம் ஒரு காப்பி இல்லையோ” என்ற சந்தேகம் வர அதையும் வாங்கினேன் (இப்போது என் க்லெக்ஷனில் Seven Samurai இரண்டு டிவிடிக்கள் இருக்கிறது. இப்படி என்னிடம் இருக்கும் பல (பார்த்த) படங்களையே சந்தேகப்பட்டு, டென்ஷன்பட்டு பல முறை வாங்கியிருக்கிறேன்) டிவிடி தேடல்களுக்கிடையிடையே பதிவர்கள், பதிவுலகம், அதில் தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் குரூப் காமெடிகள் (?), of course கமல்ஹாசன், தமிழ் சினிமா, உலக சினிமா என்று பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் விடாமல் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு, பாஸ்கரன் அவர்கள் வெளியே போயிருந்த சமயம் டிவிடிக்களை துலாவிக்கொண்டிருந்த ஒருவர் என்னிடம் வந்து “Braveheart இருக்கா?” என்று கேட்டார். “நிச்சயம் இருக்கும். எங்கன்னு தான் தெரியல. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று சிரித்தேன். “ஓ… சாரி. நீங்களும் கஸ்டமாரா” என்று பதில் சிரிப்பு சிரித்து விட்டு Braveheart ஐ தேடப் போனார் அந்த நபர். குறைந்தது 600 (individual titles) படங்களாவது (இல்லை அதற்கு மேலும் கூட) அன்று பாஸ்கரன் அவர்களது ஸ்டாலில் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். வயது வரம்பில்லாமல் உலக சினிமாவையும் ( = ஆங்கிலம் அல்லாத மற்ற மொழியில் வந்த தரமான படங்கள்), ஆங்கில சினிமாவையும் வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொண்டு போனார்கள். War Movies, Thriller Movies, ‘Scary Movie’ type Spoof movies, Action movies, Iran movies, Indian Classics என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டேஸ்ட் இருந்தது. 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் ஆசையாசையாக “அப்பாடா கெடச்சிருச்சு” என்று சொல்லிக்கொண்டே “It's a Mad, Mad, Mad, Mad World” வாங்கிக் கொண்டு போனார். “பணம் அதிகம் எடுத்துக்ககிட்டு வரல, பிரட் எல்லாம் வாங்க வேண்டி இருக்கு” என்று சற்று ஏமாற்றத்துடன் சொல்லிக்கொண்டே போனார். நிச்சயம் திரும்ப வந்திருப்பார். மற்றுமொரு நபர் தன் பங்கிற்கு எனக்கு படங்களை ரெக்கமண்ட் செய்ய ஆரம்பித்தார். “The Day of the Jackal” அப்படி அந்த முகம் தெரியாத நண்பர் “நிச்சயம் பார்க்கவேண்டிய படம், a very good movie” என்று சொல்லி என் கையில் எடுத்து கொடுத்த படம். கடைக்கு வந்தவர்களில் பத்தில் ஒருவராவது “எங்கேயும் இவ்வளவு கலெக்ஷனை பார்த்தது கிடையாது” என்று சொல்லிவிட்டு சென்றனர். அது என்னவோ 100 / 100 உண்மை தான். கிட்டத்தட்ட அனைவருமே கோவையில் நண்பரது கடை எங்கிருக்கிறது என்று விசாரித்து, மீண்டும் வருவதாய் சொல்லிவிட்டுச் சென்றனர். ஒருவழியாக வாங்கிய டிவிடிகளுக்கு பணத்தைக் கொடுத்து விட்டு, பார்சலை அங்கேயே பத்திரமாக வைத்து விட்டு மற்ற ஸ்டால்களுக்கு நகர்ந்தோம்.

முதலில் தென்பட்டவை எல்லாம் சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்களே. பேல பெலாஸ் அவர்கள் எழுதிய சினிமா கோட்பாடு (The Theory of the Film, தமிழில் எம்.சிவக்குமார், பாரதி புத்தகாலையம் வெளியீடு). நான் அன்று வாங்கிய முதல் புத்தகம். இந்தப் புத்தகத்தைப் பற்றி சொன்னவர் நண்பர் உலக சினிமா பாஸ்கரன் அவர்களே! நீண்ட நாட்களாக வாங்க வேண்டுமென்று நினைத்திருந்த எஸ்.ரா வின் “உலக சினிமா”வையும் ஒருவழியாக வாங்கி விட்டேன். எஸ்.ரா எழுதிய “என்றும் சுஜாதா” தொகுப்பும் கிடைத்தது. பெரிய எழுதுக்களில் தலையணை சைசில் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய ருத்ரவீணையையும் வாங்கினோம். ஆரம்பத்ததில் சாருவின் சில புத்தகங்கள், அவரது குமுதம் தொடர் போன்றவற்றை படித்ததிலிருந்து அவர் மீது ஒரு வித வெறுப்புணர்வு மட்டுமே இருந்ததால் அவரது புத்தகங்களை தொடாமலே இருந்து வந்தேன். ஆனாலும் தமிழ் சினிமாவை இப்படி கழுவி கழுவி ஊற்றுக்கிறாரே, அப்படி என்ன தான் சொல்கிறார் பார்ப்போம் என்று அவர் எழுதிய சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்கள் (நண்பனது எச்சரைக்கையையும் மீறி) மூன்று வாங்கினேன்.  இன்னும் சில வரலாறு, ஈழம், கட்டுரைகள் என்று மொத்தம் 20 புத்தகங்கள் வாங்கினேன், பல நாட்கள் கழித்து.  

பர்ஸின் கனம் குறைய குறைய பசி எடுக்க ஆரம்பித்தது. உள்ளேயே பொட்டலம் 20ரூபாய் என்று அருமையாக தக்காளி, எலுமிச்சை, கீரை, தயிர் சாதம், பஜ்ஜி விற்றார்கள். இரண்டு பொட்டலம் வாங்கி உள்ளே தள்ளிவிட்டு மீண்டும் விட்ட ஸ்டால்களை நோட்டமிட்டோம். ஒன்றை மட்டும் தெளிவாக நான் புரிந்துகொண்டேன். புரட்சி பற்றி மக்களுக்கு சொல்லக்கூட நம் ஆட்கள் “சே குவேரா”வை தான் நாடுகிறார்கள். ஒவ்வொரு ஸ்டாலிலும் “சே” பற்றிய ஏதாவது ஒரு புத்தகம் நிச்சயம் இருந்தது. பெரும்பாலான ஸ்டால்களில் காந்தி - “என்னைப் பற்றி தெரிந்து கொள்” என்று சிரித்துக்கொண்டிருந்தார். வாங்கத்தான் ஆள் இல்லை. மற்ற தலைவர்கள் சுத்தமாக மிஸ்ஸிங். ஒரே ஒரு ஸ்டாலில் அதிசயமாக “வீரன் செண்பகராமன் பிள்ளை” பற்றிய ஒரே ஒரு புத்தகம் இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஒன்றிரண்டு ஸ்டால்களில் மருது சகோதரர்கள், பகத்சிங், பாரதி, பிரபாகரன் என்று சிலர் தெரிந்தனர். சோழர் பரம்பரை, தமிழ், தமிழர் வரலாறு என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்ததும் ஆறுதலே. சினிமாவிற்கு இருந்த முக்கியத்துவம்கூட அரசியலுக்கும், வரலாறுக்கும் இல்லை என்பது தான் என் வருத்தம். “சே” மட்டும் ஏன்? என்று நான் கேட்கவே இல்லை. மற்றவர்கள், நம் தேசத்தவர்கள் ஏன் இல்லை? என்று தான் கேட்கிறேன். வீரம் விளைவிக்கக் கூட அந்நிய விதைதான் வேண்டுமா நம் ஆட்களுக்கு?

கவிஞர் வைரமுத்து அவர்களை சிறப்பு விருந்தனராக அழைத்திருந்ததனால் அவரது லேட்டஸ்ட் “மூன்றாம் உலகப் போர்” பல ஸ்டால்களில் இருந்தது. திரு பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய ஈழம் சம்பந்தப்பட்ட பெரிய புத்தகமும் இருந்தது. காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கவில்லை. சிவகாசி பிரகாஷ் பப்ளிகேஷன் வரவில்லை போலும். அது மிகப் பெரிய ஏமாற்றமே. ஆங்கில புத்தகங்கள் மிகவும் குறைவாகவே இருந்தது. பிரத்யேகமாக ஆங்கிலத்திற்கென்று தனி ஸ்டால் இல்லவே இல்லை என்று நினைக்கிறேன். குழந்தைகள், பள்ளி மாணவர்களை குறி வைத்து அ, ஆத்திசூடி முதல் +2 வேதியல் வரை அனைத்து பாடங்களையும் சி.டிகளில் அடக்கி ஆங்காங்கே டி.வியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அதை கேட்கத்தான் குழந்தைகள் தான் இல்லை. சம்பந்த சம்பந்தமில்லாமல் அந்த பாடங்கள் (படங்கள் ?) தன் இஷ்ட சுருதியில் கத்திக்கொண்டிருந்தன. ஆங்காங்கே யோகா, போட்டோஷாப் வீடியோக்களும் தங்களை விற்க முயற்சித்துக் கொண்டிருந்தன. சிரமம் என்று பார்த்தால் கண்காட்சி ஸ்டால் பந்தல் asbestos இல் போட்டிருந்ததால், மேலே தொங்கிக்கொண்டிருந்த மின்விசிறிகள் கூட நெருப்பையே உமிழ்ந்தன. வியர்த்துக்கொட்டியது எங்களுக்கு. மொத்தமாக இரண்டே கடைகளில் தான் card தேய்க்கும் வசதி இருந்தது (அதில் ஒருவரை நண்பர் பாஸ்கரன் உசார் செய்து வைத்திருந்தார்). அதனால் பர்ஸ் காலியாக மக்களும் இன்னும் சில புத்தகங்களை வாங்க ஆசையிருந்தும் வாங்காமலேயே வெளியேறினர். கண்ட கழுதைக்கெல்லாம் credit card தேய்க்கும் போது புத்தகங்களுக்காக தேய்த்து கடன் பட்டால் என்ன? எது இருக்கிறதோ இல்லையோ Card தேய்க்கும் வசதி நிச்சயம் இருக்க வேண்டும்.

நான் பார்த்த வரை பெங்களூரு, சென்னையில் நடந்த புத்தகக்கண்காட்சிகளுக்கு சற்றும் குறைவில்லாமலே கோவை கண்காட்சி இருந்தது என்று சொல்வேன். ஆனாலும் இன்னும் பலரக புத்தகங்கள் இருந்திருந்தால் அருமையாக இருந்திருக்கும். வேறெங்கும் கிடைக்காத “Unique Collections” என்று எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. கிழக்கு, விகடன், உயிர்மை, சிக்ஸ்த் சென்ஸ் (இவர்கள் நீயா நானா கோபி புத்தகங்கள் மட்டும் தான் விற்கிறார்களா?), ஈஷா என்று ரெகுலர் ஆசாமிகளே இருந்தனர். சுலபமாகக் கிடைக்கும் இவர்களின் புத்தங்கங்களை வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைனில் Flipkart, உடுமலை, nhm, டிஸ்கவரி புக் பேலஸ் தளங்களில் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி செய்கிறார்கள். பிறகு மக்கள் எப்படி புத்தகக்கண்காட்சிகளுக்கு வருவார்கள்? கண்காட்சிகளில் மட்டும் தான் கிடைக்கும் என்று சொல்லும் வகையில் அரிய, பழைய, புதிய, வித்தியாசமான புத்தகங்களை தேடிப்பிடித்து விற்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.  

மேலும் புனித திருக்குரானையும், புனித பைபிள் நூலையும், அன்றைய தினகரன் பேப்பரையும் இலவசமாகக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். புனித பகவத் கீதை 1000 ரூ மதிப்பிலானது 135ரூ என்று போட்டிருந்தார்கள். ஸ்டால்களுக்கு மத்தியில் ஆங்காங்கே குடிக்க சுத்தமான மினரல் தண்ணீர் வைத்திருந்தால் மக்கள் தப்பித்தார்கள்.

You Might Also Like

9 comments

 1. அடடா...நான் போகனும் என்று இருந்தேன்...மறந்தே போச்சு...போன வருடம் நான் சென்ற போது உலக சினிமா ரசிகனை சந்தித்து வந்தேன்..இந்த முறை முடியாமல் போய் விட்டது...

  ReplyDelete
  Replies
  1. என்ன தலைவரே இப்படி பண்ணிட்டீங்க... ஊர்க்காரர் நீங்களே போகலனா எப்படி?

   Delete
 2. //கண்காட்சிகளில் மட்டும் தான் கிடைக்கும் என்று சொல்லும் வகையில் அரிய, பழைய, புதிய, வித்தியாசமான புத்தகங்களை தேடிப்பிடித்து விற்க வேண்டும்.// உண்மை. நீங்கள் குறிப்பிடும்படி நடந்தால் புத்தகக் கண்காட்சிகள் விளம்பரம் இல்லாமலே மிகப்பெரிய வெற்றி பெறும். கண்காட்சி குறித்த சிறப்பான தகவல்களுக்கு மிக்க நன்றி.

  ஸ்ரீ....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே! விளம்பரங்களுக்கு பஞ்சமில்லை. ஊரெல்லாம் வைரமுத்து போட்டோ தாங்கிய பேனர்கள் பட்டையைக் கிளப்பின, ஆனால் கூட்டம் தான் இல்லை. வாரயிறுதி கூட பரவாயில்லை போலும், வாரநாட்களில் சுத்த மோசம் என்று கேள்வி. என்ன புதுசா இருக்கப் போகுது என்று மக்கள் நினைத்து விட்டார்களோ என்னவோ!

   Delete
 3. பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. நல்ல பகிர்வு..
  பெரிய dvd collection வைத்திருப்பீர்கள் போல இருக்கே?
  http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

  ReplyDelete
  Replies
  1. மிகப்பெரிய கலெக்ஷன் வைத்திருக்கிறேன் நண்பரே, இடம் போதவில்லை :-)

   Delete
 5. நண்பரே...என்னைப்பற்றியும்...எனது கடையை பற்றியும் புகழ்ந்து தள்ளி விட்டீர்கள்.
  நன்றி.

  உண்மையில் இன்னும் 1000 படங்கள் நான் கொண்டு வரவில்லை.
  பல காரணங்கள்...முக்கிய காரணம்... மதுரை புத்தகக்கண்காட்சியில் எனக்கு இடமில்லை என சொல்லி விட்டனர்.
  இன்னேரம் நான் மதுரையில் இருக்க வேண்டியவன்.

  நொந்து போன மனதுக்கு...மருந்தாக இருக்கிறது...உங்கள் பதிவு.

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...