முகமூடி – ஒரு வேண்டுகோள், விமர்சனம் அல்ல!
12:56:00 PM
The Dark Knight Rises படம் வெளியாவதற்கு முன்பும் பின்பும்
பதிவுலகமே அல்லோல் கல்லோல் பட்டுக்கொண்டிருந்தது. படம் இப்படி இருக்குமா அப்படி இருக்குமா,
இந்த சாதனையை முறியடிக்குமா அந்த சாதனையை முறியடிக்குமா, நோலன் தன் மேஜிக்கை காடுவாரா
மாட்டாரா அதுஇதுவென்று ஊரே பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து விட்டு நானும்
கூட ஒரு பதிவை (படம் பார்ப்பதற்கு முன்) எழுதி வைத்தேன். The Avengers வெளியான போதும்
இதே நிலை தான். நானெல்லாம் முதல் போஸ்டர் ரிலீஸ் ஆனவுடன் காத்திருக்க ஆரம்பித்துவிட்டேன்.
ஆனால் இன்று தமிழில் இதே போன்றதொரு சூப்பர் ஹீரோ படம் வெளியாகிறது - முகமூடி. ஆனால்
அது பற்றி பதிவுலகில் இப்பொழுது வரை மூச்சே இல்லை. காரணம், நம்மைப் பொறுத்தவரை இந்த
முகமூடி மற்றுமொரு ஆங்கிலப் படத்தைப் பார்த்து காப்பியடித்தோ தழுவியோ எடுக்கப்படும்
மற்றுமொரு தமிழ் படம். எப்படியும் மட்டமாகத்தான் இருக்கும் என்ற இளக்காரம். யாருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அப்படியே இருந்தாலும்
பெரிதாக அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஏனென்றால் நாம் ஏற்கனவே பல சூப்பர் ஹீரோ படங்களைப்
பார்த்தவர்கள். தமிழில் இன்று வெளியாகும் முகமூடியெல்லாம் அவற்றை வைத்துப் பார்க்கும்
போது நிச்சயம் ஜுஜுபி யாகத்தான் இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இன்று மதியம்
12 மணிக்கு மேல் (முதல் ஷோ முடிந்தவுடன் என்று கூட எடுத்துக்கொள்ளாலாம்) அடுத்த இரண்டு
நாட்களுக்கு முகமூடி தான் டார்கெட். படத்தைப் பார்த்தோமா, சோறு தண்ணி கூட பாக்காம சுடச்சுட
படத்தின் மொத்த கதையையும் எழுதி “மிஷ்கினுக்கு இது தேவையா?” “புலியைப் பார்த்து சூடு
போட்டுக்கொண்ட பூனை” “இதுவெல்லாம் ஒரு சூப்பர் ஹீரோ கதையா” “இந்த சரித்திர காப்பிக்கா
இவ்வளவு பிட்டு” “அது எப்படித்தான் வெக்கமே இல்லாம விஜய் டி.வில வெற்றி நடை போடுகிறதுனு
போடுறாங்களோ” என்று ஒரு டெம்ப்ளேட் விமர்சனத்தை எழுதினோமா என்று நாம் இருப்போம். பலர்
இந்நேரம் விமர்சனத்தின் “கதை சுருக்கம்” பாகத்தை மட்டும் விட்டுவைத்து விட்டு மீதியை
எழுதி ரெடியாக இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். முதல் ஆளாக விமர்சனத்தைப் போட
வேண்டடுமல்லவா? (இதைப் பற்றி விரிவாக எனது கருத்தை எழுத வேண்டுமென்று நீண்ட நாட்களாக
ஒரு அவா!)
ஒரு சாதாரண படத்திற்கு நாம் தரும் “மரியாதை” முகமூடிக்கும்
கிடைத்து விடக்கூடாதே என்பதால் தான் இந்த அவசர பதிவு. இந்த பதிவினால் நான் எதை சாதிக்கப்
போகிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஒரு சிறு நம்பிக்கை தான்.
Batman, Spiderman, Superman, Ironman, He – Man, Captain America, Hulk, Green
Lantern, Kick Ass, Thor, Fantastic Four, Incredible, X - Men என்று பல சூப்பர் ஹீரோக்களை
பார்த்துவிட்டு காத்துக்கொண்டிருக்கும் நமக்கு, “முகமூடி” என்று ஒரு தமிழ் சூப்பர்
ஹீரோவை “குவாட்டர் சொல்லு மச்சி” ஜீவாவை வைத்து காட்டத் துணிந்திருக்கிறாரே இயக்குனர்
மிஷ்கின் அது போல.
ஆங்கிலத்தில் குறைந்தது ஒரு 100 சூப்பர் ஹீரோ படங்களாவது
வந்திருக்கும். அவையனைத்தயும் நாம் பார்த்திருக்கிறோம், ரசித்திருக்கிறோம். தலையில்
தூக்கி வைத்து கொண்டாடியிருக்கிறோம். அது தான் நமது இந்த “முகமுடி”க்கு முதல் எதிரி.
அதற்காக ஆங்கிலப் படமே பார்க்கக்கூடாதா? தமிழ் வாழ்க என்று கத்திவிட்டு தமிழ் ப்டங்கள்
மட்டும் தான் பார்க்க வேண்டுமா என்று கேட்க வேண்டாம். எதை எடுத்தாலும் வெளிநாட்டவருடன்
வைத்து ஒப்பிட்டு பார்க்கும், நம்முடையதை அசிங்கப்படுத்திப் பார்க்கும் பழக்கம் நமக்கிருக்கிறது.
நீண்ட காலமாக இந்தப் பழக்கத்திற்கு பலி ஆகிக்கொண்டிருப்பது தமிழ் சினிமா தான். தமிழ்
சினிமா நமக்கு இந்த விஷயத்தில் பொது எதிரி. இதனாலேயே அத்திபூத்தாற்போல் தமிழ் சினிமாவிற்கு
வரும் சில நல்ல படைப்புகள், மேற்கத்திய படைப்புகளோடு கம்பேர் செய்யப்பட்டு கேலிப்பொருளாகி,
மூலையில் தூக்கி வைக்கப்படுது. ஐ மீன் வீ ஆல்வேஸ் பிரவுட்லி சே, “வெள்ளைக்காரனுக்கு
கட் அவுட், தமிழுக்கு கெட் அவுட்” !
இந்த நிலை முகமூடிக்கும் வரும் என்று நன்றாகத் தெரிந்தே தனது
இந்த முயற்சியில் மிஷ்கின் இறங்கியிருக்கிறார். படமும் இன்று ரிலீஸ் ஆகிறது. தனது முந்தைய
படங்கள் அனைத்தையுமே பல வெளிநாட்டுத் திரைப்படங்களின் காப்பி என்று விமர்சகர்கள் (?) சொல்லியிருந்தாலும் இவர் அதற்காக கவலைப்படாமல், கனவு காணும் ஒரு கலைஞனாக, சிறு
வயதில் தான் படித்து ரசித்த “முகமுடி வீரர் மாயாவி” சூப்பர் ஹீரோ காமிக்ஸை போன்றதொரு கதையை தமிழில்
படமாக எடுத்திருக்கிறார். இதை “தமிழுக்கு ஏற்றவாரு எடுத்திருக்கிறார்” என்று கூட நான்
சொல்லமாட்டேன். அந்த வார்த்தைகளே எனக்கு அபத்தமாக படுகிறது. “Krrish” என்றொரு படம் வந்ததே
அது என்ன ஹிந்திக்கு ஏற்றவாரு எடுக்கப்பட்ட படமா? அப்படியென்றால் ஏதாவதொரு வடமாநிலத்தில்
தானே அந்தக் கதை நடக்க வேண்டும்? இரண்டாம் பாதி முழுக்க வெளிநாட்டில் அல்லவா நடக்கிறது.
ஓ, அதனால் தான் அந்தப் படம் சூப்பர் ஹீரோ படம் என்று ஒத்துக்கொள்ளப்பட்டதா? முகமூடி
கதை சென்னையில் நடப்பதாக சொல்லியிருக்கிறார். பேசாமல் வழக்கம்போல மலேசியாவில் நடக்கிறதென
சொல்லியிருக்கலாமோ? விமர்சனங்கள் குறையுமோ? ஏனென்றால் நம்மைப் பொறுத்த வரை தமிழ் நாடு,
இந்தியாவைத் தவிர எங்கும் எதுவும் நடக்கலாம். கேள்வியே இல்லை. அப்படித்தானே?
உலகில் எந்த ஒரு மூலையிலும் சூப்பர் ஹீரோ என்று ஒருவன் இருந்ததாக
எனக்குத் தெரியவில்லை (நிறைய ராபின் ஹுட்கள் தான் உண்டு) தெரிந்தால் சொல்லவும். சூப்பர்
ஹீரோ என்பதே ஒரு கற்பனை தான். அமெரிக்காகாரன் மட்டும் தான் அப்படி கற்பனை செய்யலாம்
என்றில்லை, யார் வேண்டுமானாலும் அவரவர் வசதிக்கேற்ப கற்பனை செய்யலாம். “விடாது கருப்பு”வில்
நாகா காட்டிய கருப்பன சாமி கிராமத்து சூப்பர் ஹீரோ. அதனால் குதிரையில் வந்தார், கையில்
அருவாள் வைத்திருக்கிறார். ஆனால் நம் முகமூடி சென்னைவாசி. அதனால் பைக்கில் பறக்கிறார்,
குங்ஃபூ சண்டையிடுகிறார், தன் வசதிக்கேற்ப உடை அணிந்திருக்கிறார். காலேஜ் படிக்கும்
Spiderman தனது சூப்பர் ஹீரோ காஸ்டியூமை தானே வடிவமைத்து ஆன்-லைனில் ஆர்டர் செய்து,
கூரியர் பார்சலில் வாங்குகிறார். அதை நாம் எந்தக் கேள்வியும் கேட்காமல் நம்புகிறோம்,
ரசிக்கிறோம். அதே போல் நம் சூப்பர் ஹீரோவும் அவன் வசதிக்கேற்ப தான் வடிமைத்த தனது காஸ்டியூமை
ஒரு டெய்லரிடம் கொடுத்து ரெடி செய்கிறான் என்று மிஷ்கின் காட்டினால் அதையும் நாம் நம்புவோம்.
நம்பவேண்டும் தானே? ஆனால் நாம் கேள்வி கேட்போம். “அதெப்படி, எங்களல்லாம் பாத்தா உனக்கு
எப்படி தெரியுது?” என்று. சூப்பர் ஹீரோ என்ற கதாபாத்திரமே ஒரு கற்பனை தான். கற்பனைகளுக்கு
எல்லையோ, கம்பரிசனோ இருக்கக் கூடாது என்பது என் கருத்து. இது ஒரு எளிய உதாரணம் மட்டுமே!
இப்படி எத்தனையோ இருக்கும் படத்தில்.
மிஷ்கின் காலை மட்டுமே காட்டிக்கொண்டிருக்கிறார், எல்லாரும்
மேலேயே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற வழக்காமன விமர்சனங்கள் போக (அவர் அப்படித்தான்
எடுப்பார். யாராலும் அதை மாற்ற முடியாது) பேட்மேனை காப்பியடித்திருக்கிறார்கள், ஸ்பைடர்மேன்
படத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள், இதைத் தான் ஏற்கனவே சூப்பர்மேனில் பார்த்திருக்கிறோமே
என்பது போன்ற விமர்சனங்களும் இதில் சேர்ந்துவிடுவோமா என்ற பயம் தான் எனக்கு. ஒரு முழு
முதல் முயற்சியை ஆரம்பத்திலேயே நாம் ஏன் காரணமில்லாமல் கருவறுக்க வேண்டும் என்பது தான்
என் கேள்வி. நன்றாக படிக்க ஆரம்பித்திருக்கும் ஒரு குழந்தையை பக்கத்து வீட்டில் இருக்கும்
IAS பாஸ் செய்தவனைக்காட்டி, “நீயும் அவர் போல் பெரிய ஆளாக வேண்டும்” என்று ஊக்குவித்தால்
பரவாயில்லை. “அவரெல்லாம் IAS, எனக்கும் தான் வந்து பொறந்துருக்குதே, மக்கு, த்தூ” என்று
காரிஉமிழ்ந்தால் எப்படியிருக்கும். அதைத் தான் நாம் செய்துகொண்டிருகிறோம். இங்கு ஹாலிவுட்காரன் IAS, படிக்க ஆரம்பித்திருக்கும் மாணவன் தமிழ் சினிமா. அவர்களுக்கிருக்கும் பட்ஜெட், வியாபாரம், வரவேற்பு போன்ற அடிப்படை விஷயங்களை நினைவில் கொண்டால் கூட நாம் இப்படி ஒப்பிட்டு பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். மலையையும்
மடுவையும் ஒப்பிட்டு, மடுவை ஆரம்பத்திலேயே காலால் நசுக்கி தரையோடு தரையாக்கி விடுகிறோம்.
நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசினால் அது ஸ்டைல், தமிழில் பேசினால் அது கொச்சை. ஆங்கிலத்தில்
திட்டினால் அது சர்வசாதாரணம், கேசுவல் டாக், அதுவே தமிழில் திட்டினால் ஆபாசம். ஆங்கிலப்
படத்தில் செய்தால் அது சாகசம், அதுவே தமிழ் படத்தில் செய்யப்பட்டால் அபத்தம், காப்பி?
நம்மை மற்றவர்கள் அசிங்கப்படுத்தினால் பரவாயில்லை, நாம் மற்றவர்களை
எப்பொழுதும் நம்மை விட உயரத்தில் வைத்தே பார்க்கிறோம். நம்மை நாமே அவர்களாய் வைத்து
ஒப்பிட்டு அசிங்கப்படுத்திக்கொள்கிறோம். அதையே பெருமை என்று நினைத்து சிரித்து கொள்கிறோம்.
நம்மைப் போன்ற பாவப்பட்ட ஜீவங்கள் உண்டா? விமர்சனம் தவறே அல்ல. தமிழில் முயற்சி செய்திருக்கிறார்கள்
என்பதற்காக மட்டமான படத்தைக் கூட “ஆஹா ஓஹோ” என்று தான் சொல்லவேண்டும் என்று நான் முட்டாள்
தனமாக வாதாடவில்லை. “எப்படியும் இது ஒரு காப்பி தான” என்கிற மனநிலை, இளக்காரம் தான் வேண்டாம் என்கிறேன்.
படம் பார்த்து விட்டு “கதை சரியில்லை, திரைக்கதை வேகமாக இல்லை” போன்ற நியாயமான காரணங்களுக்காக
படம் பிடிக்காமல் போனால் பரவாயில்லை. அதையே சொல்லி நாமும் விமர்சனம் எழுதினாலும் பரவாயில்லை. ஆனால் பேட்மேன் போல் இல்லை, ஸ்படர்மேன் போல் இல்லை, கிரிஸ்டியன் பேல் எங்கே, குவாட்டர் ஜீவா எங்கே, ஜோக்கரும் நரேனும் ஒன்னா போன்ற காரணங்களால் மட்டும் நமக்கு பிடிக்காமல் போவது, நமக்கு பிடிக்கவில்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது, விமர்சனமாக எழுதுவது தான் சரியில்லை
என்கிறேன்.
தமிழில் நிறைய “ராபின் ஹுட்” பாணி படங்கள் தான் வெளிவந்திருக்கிறது
என்றாலும் இந்த “முகமூடி”யும் தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படம் கிடையாது. தமிழின் முதல்
சூப்பர் ஹீரோ படம் “மர்மயோகி” என்று மிஷ்கினே சொல்கிறார். கமலின் “குரு” ஒரு சூப்பர்
ஹீரோ படம். சுசி கணேசன் இயக்கிய “கந்தசாமி”யில் விக்ரம் 100% சூப்பர் ஹீரோ தான். படம்
பிளாப் என்பதால், தற்போது வெளியாகும் “முகமூடி”யை “முதல் சூப்பர் ஹீரோ” என்று விளம்பரப்படுத்திக்
கொண்டும், பேட்டி கொடுத்துக்கொண்டும் இருக்கிறார்கள் படத்தைத் தயாரித்தவர்கள். கவனிக்க
மிஷ்கின் அல்ல.
இன்னமும் நான் படம் பார்க்கவில்லை. படம் எனக்கு பிடித்திருந்தாலும்
பிடிக்காவிட்டாலும் நான் இந்த முயற்சியை வரவேற்கிறேன். இதே வரவேற்பு மற்றவர்களிடமும்
இருந்து கிடைத்தால், இந்தப் படம் தோல்வியடந்தாலும் கூட, இது போன்ற வேறு நல்ல வேறுபட்ட
களன்களைக் கொண்ட படங்கள் தமிழுக்கு வர நாம் திறக்கும் கதவாக அந்த வரவேற்பு இருக்கும்.
தமிழக்கத்தில் அதிகம் வசூலித்த ஆங்கிலப்படங்கள் எல்லாமே சூப்பர் ஹீரோ படங்கள் தான் (The Avengers, The Dark Knight Rises). அப்படிப்பார்த்தால் சூப்பர் ஹீரோ என்பவன் நம்க்கு அந்நியமானவன் அல்ல. நாமும் அவனை ரசிக்கிறோம். அந்தப்படங்களையெல்லாம் எந்தக் கேள்வியும் கேட்காமல்,
“நமக்கு ரசிக்கும்படி இருக்கிறதா, அது போதும்” என்ற மனநிலையில் கைதட்டிவிட்டு வந்திருக்கிறோம்.
அதே மனநிலையில் தான் இந்த முகமூடியையும் நாம் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் சினிமா உயரவேண்டும் என்ற நப்பாசை தொண்டைக்குழியை அடைக்கும் ஒரு உண்மையான ரசிகனின்
தாழ்மையான வேண்டுகோள் இது. மிஷ்கின் – யார் என்ன சொன்னாலும் சரி, நிகழ்கால
தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத கலைஞன். தனது சிந்தனையில், படமெடுக்கும் முறையில்,
பின்பற்றும் சினிமா இலக்கணத்தில் தனித்தே நிற்கும் இவர் தமிழ் சினிமா தன் கிளிஷேகளில்
இருந்து விடுபடும் என்ற நம்பிக்கையின் முதல் படி. இவரது முகமூடியைக் காண காத்திருக்கிறேன்,
முழு நம்பிக்கையோடு !
டிஸ்கி: நான் ஏன் இப்படி ஒரு பதிவை தேவையில்லாமல் எழுதுகிறேன்
என்பது இப்போது உங்களுக்கு புரியவில்லை என்றால் பரவாயில்லை. படம் வெளியாகி, அதை விமர்சனம் என்ற பெயரில்
நம் மக்கள் சல்லடை சல்லடையாக கிழித்து தொங்கபோட்ட பிறகு வந்து வாசித்துப்பாருங்கள், நிச்சயம் புரியும், என் ஆதங்கம் என்னவென்று, நான் ஏன் இந்தப் பதிவை எழுதினேன் என்று.முகமூடி
விமர்சனத்தையும் எழுதலாம் என்றிருக்கிறேன். ஆங்கிலப் படத்தில் இருந்த எது இதில் இல்லை
என்பதையல்ல. அங்கில்லாதது எது இங்கிருந்தது என்பதை.
(ஒரு டவுட்: படம் ஒருவேளை உங்களுக்கு பிடிக்காமல் இருந்து, எனக்கு பிடித்து போய் அதை "ஆஹா ஓஹோ" என்று நான் புகழ்ந்தால் "நீ மொதல்லயே முடிவு செஞ்சிட்டு தானடா படம் பாக்கவே போன" என்று சொல்வீர்களோ. ஏனென்றால் ஊரே கூடி கும்மியடித்து அடித்து விரட்டிய "பொன்னர் - சங்கர் படத்தை ஆதரித்தவன் நான் :-))
முகமூடி வெற்றயடைய வேண்டும். யூ டிவி தனஞ்செயனுக்காகவோ, மிஷ்கினுக்காவோ, ஜீவாவிற்காகவோ, நரேனுக்காகவோ அல்ல. தமிழ் சினிமாவிற்காக. மேல் சொன்னவர்களுகெல்லாம் அடுத்த படம் உடனடியாகக் கிடைத்துவிடும். அடுத்த வேலையைப் பார்த்துகொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் "சூப்பர் ஹீரோ கதை" என்பது தமிழ் சினிமாவிற்கு இல்லாமலேயே போய்விடும்!
18 comments
தமிழ் சினிமாவை ஹொலிவூட்டுடன் ஒப்பிடவேண்டாம் ஊக்குவியுங்கள் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் நமது சினிமா ஏன் இப்படி இருக்கின்றது என்ற கவலை இருக்கத்தானே செய்கின்றது இங்கிருந்து மலைக்கு ஆசைப்படவில்லை முயற்சிகளைச்செய்து கொன்சம் முன்னேறலாமே ஆனால் அதை செய்யாமல் முன்னனி ஹீரோக்களை வைத்து மட்டகரமான படத்தை எடுத்து வசூலில் சாதனை படைத்து பெருமையுடன் வசூலை மட்டும் கூச்சல்போட்டுக்கொண்டிருக்கின்றோமே.அதுதான் கவலை
ReplyDeleteஅதற்கு காரணமும் நாம் தான் நண்பரே. நல்ல, வித்தியாசமான கதையமைப்புகள் உள்ள, புதிய முயற்சிகளை நாம் கண்டுகொள்வதேயில்லை. அதனால் தான் படம் எடுத்து வெளியிடுபவர்களும் கமர்ஷியல் ஹீரோக்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்களது படங்களையே பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்கிறார்கள். படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ, கலெக்ஷன் பெரிதாக இருக்கிறது. சினிமா என்பது வியாபாரம். எந்த பொருள் நல்ல பொருள் என்று நாம் நினைத்து வாங்குகிறோமோ, விற்பனையை அதிகரித்து லாபத்தை அதிகரிக்கிறோமோ அந்த பொருளைத் தான் வியாபாரியும் அடுத்தடுத்து வாங்கி விற்பார்! தப்பு நம் மேல் தான் :-)
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
i like பொன்னர் - சங்கர் very much making on historical movie
ReplyDeleteநீங்கள் சொன்ன அதே காரணங்களுக்காகத் தான் பொன்னர் - சங்கர் படம் எனக்கு பிடித்த படம் என்று சொன்னேன். பூமாலையை அழகாக செய்துவிட்டார்கள், ஆனால் கொடுத்ததென்னவோ குரங்கு கையில்...
Deleteஎனக்கு படத்தின் மீது வெளிப்படையாக எதிர்ப்பு கிடையாது. எங்க 'தமிழின் முதல் சூப்பர்ஹீரோ'ன்னு சொல்லிட்டு வந்த கந்தசாமி மாதிரி ஆயிடுமோன்னுதான் கவலையாயிருக்கு.. மிஷ்கின் மேலிருக்கும் குறைந்தபட்ச நம்பிக்கை படத்துல ஏதாவது வித்தியாசமா இருக்கனும்னே உள்ளுணர்வு சொல்லுது!
ReplyDelete//சிறு வயதில் தான் படித்து ரசித்த “முகமுடி வீரர் மாயாவி” சூப்பர் ஹீரோ காமிக்ஸை தமிழில் படமாக எடுத்திருக்கிறார்.//
அதைப் பார்த்து எடுத்திருக்கிறாரே தவிர இது அதே கதாப்பாத்திரம் இல்லைத்தானே?.. படம் பெயர் கேட்ட நாளன்று இந்த சந்தேகம் இருந்திச்சு.. யாராவது அந்த முகமூடி வீரர் "மாயாவி"க்கு படம் எடுத்து வெளியிட்டிருக்கார்களா நண்பா? தகவல் தேவை.. எனக்கு முன்பு ரெண்டு மாயாவியுமே (முகமூடி, இரும்புக்கை) ரொம்ப பிடிக்கும்.
* நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் எனக்கு கிறிஸ்டியன் பேலை விட, குவாட்டர் ஜீவாவை புடிக்கும்.. படம் எப்படியிருக்குன்னு பொறுத்துதான் பார்க்கனும்!
“முகமுடி வீரர் மாயாவி” சூப்பர் ஹீரோ காமிக்ஸை போன்றதொரு கதையை தமிழில் படமாக எடுத்திருக்கிறார் - என்று தான் இருக்க வேண்டும். மன்னிக்கவேண்டும். பதிவிலும் திருத்திவிட்டேன் :-)
Deleteமுகமூடி படம் முகமூடி வீரர் மாயாவி கதையல்ல. படம் பார்த்தவுடன் இன்னும் நிறாய்ய விஷயங்கள் சொல்லலாம்.
பலரைப் போல நானும் மாயாவியின் பரம ரசிகன் தான். 1943ல் கருப்பு வெள்ளையில் The Phantom என்ற பெயரில் தொடராக வந்திருக்கிறார் மாயாவி. அதே போல் 1996ல் The Phantom என்ற அதே பெயரில் டக்கரான ஒரு படம் வந்திருக்கிறது. முழுக்க முழுக்க காமிஸில் நாம் ரசித்த மாயாவி கதை இதுதான். 1994ல் The Phantom 2040 என்ற கார்ட்டூன் சீரீஸ் வந்திருக்கிறது, மொத்தமும் YouTubeஇல் இருக்கிறதென நினைக்கிறேன். 2009ல் அதே The Phantom என்ற பெயரில் ஒரு miniseries வெளியானது. நவீனகால மாயாவி கதை. முற்றிலும் வேறுபட்டு இருக்கும். அவ்வளவு ஒன்றும் இது சிறப்பாக இல்லை.
Naan solla ninaitha karuthukkall anaithayum en nanban sollivittan... aayinum enakku oru siriya yosanai... KANTHASAMY endra oru super hero padam entha vithatthil irunthalum etho oru vagaiyil antha padathai super hero padam endru verumane yetru kondom... athu polillamal intha padathukku manamarndha aatharavayum parattayum tharavendiya poruppu anaithu THAMIZH CINEMA rasigargallukku irukkirathu....
ReplyDeleteமச்சி, இன்னிக்கி படத்துக்கு போறோம், கலக்குறோம்...
Deleteதல,
ReplyDeleteரொம்ப சரியா சொன்னீங்க. உங்களுடன் சில இடத்துல உடன் படுகிறேன்.
ஆனா தமிழ் பதிவர்கள் ஒரு படத்தை மோசம் என்று வாய்க்கு வந்த படி சொல்லி ஒரு நல்ல படம் ஓடாமல் போனதா சரித்தரமே இல்லை. உ.த: களவாணி (ஒரு தமிழ் பதிவர் இந்த படம் ரெண்டு நாள் கூட ஓடாதுன்னு சொன்னார்) தமிழ் நாட்டு மக்கள் படம் நல்லா இருந்தா கண்டிப்பா பார்ப்பாங்க. என்ன பதிவர்கள் ஒரு 100 பேரு இருப்பாங்களா..????, அவங்க எழுதுற பதிவை மாக்ஸ் 2000 பேரு படிப்பாங்க... இவங்க தான் ஒரு படத்தோட வெற்றியை தீர்மானம் செய்யுறாங்கன்னு சொல்லுறது எல்லாம் ஏத்துக்க முடியல தல.
TOI, Sify போன்ற gaints கூட ஒரு படத்தோட வெற்றிய தீர்மானிக்க முடியாது. படத்தோட வெற்றியை பப்ளிக் மட்டுமே தீர்மானிக்க முடியும்.
அப்புறம் வெள்ளை காரன் படத்தோட தமிழ் படத்தை கம்பேர் பண்ணுறது எல்லாம், நானும் இங்க்லீஷ் படம் எல்லாம் பார்கிறேன், நான் அறிவாளின்னு காட்டுறதாக்க பண்ணுற டுபான்ஸ் வேலை தல.
அப்புறம் மிஷ்கின் மேல எனக்கு ரொம்பவே நம்பிக்கை இருக்கு.. கண்டிப்பா முகமுடி படம் மக்களுக்கு பிடிக்கிற மாதிரி தான் எடுத்து இருப்பார்.. அவர் நந்தலால் தவிர எடுத்த எல்லா படமுமே மக்களுக்கு பிடிச்சு இருக்கு... He knows what ppl like.. படத்துக்கு சரியான விளம்பரம் இல்லாத மாதிரி ஒரு பீல் இருக்கு எனக்கு...
தல, இணையத்தில் வரும் விமர்சனங்கள் ஒரு படத்தின் வெற்றியை கணிசமான அளவில் முடிவு செய்யத்தான் செய்கின்றன என்பது எனது கருத்து. முக்கியமாக 'A' கிளாஸ் ஆடியன்ஸ் என்றழைக்கப்படும் மல்டி பிளக்ஸ் ரசிகர்கள் (உதா: ஐ.டி ஆட்கள்) வெள்ளி மதியம் ரிலீஸ் படத்தின் விமர்சனத்தைப் படித்து விட்டு தான் சனிக்கிழமைக்கு டிக்கெட் புக் செய்கின்றனர். இது நான் வாரா வாரம் நான் கண்கூடாகப் பார்க்கும் காட்சி. "TOI ல 1.5 தான் குடுத்துருக்காங்க. படம் வேஸ்ட்" இது போன்ற செய்திகள் வாய்மொழியாக இந்த விமர்சனம் பரவுவதையும் நான் பார்த்திருக்கிறேன். குறைந்தது 100 பேராவது போகலாம் என்று முடிவு செய்திருந்த முடிவை மாற்றுவார்கள். ஒரு அலுவலகத்தில் இப்படி என்றால், மொத்தமாக யோசித்துப் பாரருங்கள். தமிழ் படத்திற்கு பரவாயில்லை. தெலுங்கிற்கு ஒரு சைட் இருக்கிறது. அங்கு முதல் நாள் ஷோ பார்க்கும் பக்கிகள், 5 நிமிடத்திற்கு ஒரு முறை தியேட்டரில் இருந்து கொண்டே "லைவ் டுவீட்" செய்கின்றன. "அல்லு அர்ஜுன் திரையில் தோன்றிவிட்டார்", "பாட் ஆரம்பித்துவிட்டது", "அல்லுவிற்கு தலையில் சின்ன காயம்" "பாடல் சுமார் தான்" "படம் மொக்கை" - நான் வாராவாரம் பார்க்கும் சங்கதி பாஸ் இது!
Deleteமொத்தமான பதிவர்கள், விமர்சகர்கள் மட்டும் தான் பட வெற்றியை தீர்மானிக்கிறார்கள் என்று சொல்லவில்லை, கணிசமான பங்கு அவர்களுக்கும் இருக்கிறது என்று சொல்கிறேன். சிறிய படங்களை விட்டுவிடுகள், அவற்றின் நிலைமை எப்பொழுதும் மோசம் தான். யார் என்ன சொன்னாலும் மக்கள் அவற்றை கண்டுகொள்ள மாட்டார்கள். ஸ்டார் வேல்யூ மிகவும் அவசியம். பெரிய படங்களுக்கு நிச்சயம் இணைய விமர்சனங்களால் பாதிப்பு உண்டு.
படம் ஆரம்பிப்பதற்கு முன் "பத்திரிக்கை, டி.வி மற்றும் இணைய நண்பர்களுக்கு நன்றி" என்று இப்போது போட ஆரம்பித்து விட்டார்களே, கவனித்தீர்களா? ஏன்? சும்மா எதற்கு இணையத்திற்கு நன்றி எல்லாம் போட வேண்டும்? கரு.பழனியப்பன் தனது மந்திரப்புன்னகை, சதுரங்கம் படங்களை பிரத்யேகமாக பதிவர்களுக்கு போட்டுக்காட்டினாரே ஏன்? மேட்டர் இல்லாமையா?
:-)
நம்மைப் பொறுத்தவரை இந்த முகமூடி மற்றுமொரு ஆங்கிலப் படத்தைப் பார்த்து காப்பியடித்தோ தழுவியோ எடுக்கப்படும் மற்றுமொரு தமிழ் படம். எப்படியும் மட்டமாகத்தான் இருக்கும் என்ற இளக்காரம். யாருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அப்படியே இருந்தாலும் பெரிதாக அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஏனென்றால் நாம் ஏற்கனவே பல சூப்பர் ஹீரோ படங்களைப் பார்த்தவர்கள். தமிழில் இன்று வெளியாகும் முகமூடியெல்லாம் அவற்றை வைத்துப் பார்க்கும் போது நிச்சயம் ஜுஜுபி யாகத்தான் இருக்கும்
ReplyDeleteஎப்பா சாட்டையடி.இருந்தாலும் அது நடக்கத்தான் போகிறது.ஆங்கில படம் என்றால் எதையும் கேள்வி கேட்க்காமல் நம்புவோம்.தமிழ் படம் என்றால் நாறடிப்போம் என்பவர்களை என்ன சொல்வது.சில மாதங்களுக்கு முன் கமல் தன் விஸ்வரூபம் படத்தின் கதையின் outline சொன்னார்.உடனே பலர் true lies காப்பி என்று பாட தொடங்கி விட்டனர்.அது கூட பரவாயில்லை.நம்ம கில் பில் இயக்குனர் ஆளவந்தான் (ஹிந்தியில் அபே ) பார்த்து அதன் பாதிப்பில் killbill கார்ட்டூன் சண்டை காட்சிகள் வைத்தாய் சொன்னதும் நம்ம ஆட்கள் விட்ட நக்கல் இருக்கிறதே.அப்பப்பா.
--
விஸ்வரூபம் படம் வெளிவந்தவுடன் தான் கிளைமாக்ஸ் இருக்கிறது. அதை அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம் தல!
Deleteஇந்த செய்தி உண்மை என்பதை யாரும் யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை. ஏனென்றால் சம்பந்தப்பட்டவர்கள் கமல் - anurag kashyap - quentin tarantino :-)
நமது இயக்குனர்களிடம் சரக்கு இல்லாமல் இல்லை... ஆனால் எல்லாம் எல்லாவற்றையும் ஆட்டுவிக்கும் பணம் தான் காரணம்...
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள் தலைவரே! நல்ல படம் எடுப்பதில் நமக்கு ஆயிரம் restrictions இருக்கத்தான் செய்கிறது :-(
Deleteதொடர் வருகைக்கும், மறக்காமல் பின்னூட்டம் இடுவதற்கும் மிக்க நன்றி :-)
உலகில் எந்த ஒரு மூலையிலும் சூப்பர் ஹீரோ என்று ஒருவன் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை தெரிந்தால் சொல்லவும்
ReplyDelete------------------------------------------------
http://www.docurama.com/docurama/superheroes/
தகவலுக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே!
Deleteமுதல்ல ஹாலிவுட்டில் இருந்து தமிழ்ப்படங்கள் உருவப்படுவது எனக்கு பிடிக்காது. அதிலும் காப்பிரைட்ஸ் இல்லாமல் எடுப்பது மகாத் தவறு. கதை என்பதில் ஒரு ஒரிஜினாலிட்டி இருக்க வேண்டும். ஹாலிவுட்டில் பல லட்சம் டாலர் கொடுத்து வாங்கி படமெடுக்கும் ஒரு கதையை, அவனின் உழைப்பை காப்பியடித்துவிட்டு வெட்கமில்லாமல் தன் உழைப்பு என்று புகழ் கொண்டாடுபவர்களை என்ன செய்வது? எனக்குத் தோன்றும் ஒரு விடயம் இது தான். கமர்ஷியல் படங்கள் தான் வெற்றி பெறுகின்றன என்று சொல்ல முடியாது. நல்ல சினிமாக்களுக்கும் வரவேற்பு உண்டு. (வழக்கு எண் 18/9, களவாணி) ஆனால் மீடியாவின் உதவி அவர்களுக்கு தேவை.
ReplyDeleteதமிழில் ஹாலிவுட்டை விட படமாக எடுப்பதற்கு ஏராளமான விடயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. தேடிப் பார்த்தால் படமாக்க நம்மைச் சுற்றி ஆயிரம் விடயங்கள் படமாக்க இருக்கின்றன. ஆனால் நல்ல கருத்தை சொல்லவந்துவிட்டு திரைக்கதையில் சுவாரஸ்யமில்லாமல் ஆக்கிவிட்டு சொதப்பும் இயக்குனர்கள் இங்கு அதிகம். அதே போல போதிய மார்க்கெட்டிங் செய்யாமல், ஒரு குறிப்பிட்ட சில தியேட்டர்களில் ரிலீஸ் செய்துவிட்டு படம் ஓடவில்லை, மக்கள் வரவேற்கிறார்கள் இல்லை என்று கூப்பாடு போடுவதும் சரியில்லை. பெரும்பாலும் ஹாலிவுட்டில் இருந்து சுடுபவர்கள் பிரபல இயக்குனர்கள் என்பதால் எப்படியும் முதல் வாரங்களில் அவர்களுக்கு கல்லாக் கட்டிவிடும். புதிய இயக்குனர்கள் தான் இதில் சிக்குவது. நல்ல ப்ரொடியுசர்கள் மாட்டினால் அவர்களுக்கும் வெற்றி நிச்சயம். தமிழில் நிறைய புதிய முயற்சிகள் வரும்.
ஆனாலும் மிஷ்கின்னை எனக்கும் பிடிக்கும். வழக்கமான தமிழ்ப்படங்களிலிருந்து அவரின் படங்கள் கொஞ்சம் வித்தியாசமாக ஸ்டைலிஷ்ஷா தெரியும். (சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய் பிடித்திருந்தது. நந்தலாலா பார்க்கவில்லை)
கதை என்னவென்று தெரியாமல் இது காப்பி என்று கூப்பாடு போடுவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம். ஆனால் கதை தெரிந்ததும் இது ஹாலிவுட் படத்தின் காப்பி தான் என்று உறுதியானால் சொல்வதில் தப்பில்லையே? மக்கள் (நானும் தான்), இது காப்பியடிச்ச படம் தானே? நாங்க ஒரிஜினலையே பார்த்துக்கலாம் என்று நினைத்து ஒதுக்கினால் அடுத்த முறை சுயமாக யோசித்து ஒரு நல்ல படமாக எடுப்பார்களா இல்லையா?
நான் இன்னும் படம் பார்க்காததால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் கேள்விப்பட்டவரை படம் டமாரம் தான் போல. :(
(மூணாவது முறையா அடிக்கும் கமெண்ட் இது. ஏற்கனவே இரண்டு முறை இடையில் கரண்ட் போய்டிச்சு. என்னவோ சொல்லவந்து எதையோ உளறிட்டு இருக்கேன்.)
நண்பரே, காப்பியடித்து / தழுவி எடுக்கும் படங்களை ஆதரிப்பது என் நோக்கமே அல்ல. "புதிய முயற்சிகளை வரவேற்க வேண்டும்" - இது மட்டும் தான் இந்தப் பதிவில் நான் சொல்ல விரும்புவது. இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. "சூப்பர் ஹீரோ" என்பது தமிழுக்குப் புதிது. ஆங்கிலத்தில் வரும் பல சூப்பர் ஹீரோ படங்களை நாம் பார்த்து ரசித்திருக்கிறோம், படம் நன்றாக இருக்கும் பட்சத்தில். அதே வரவேற்பை தமிழில் வரும் அதே genre படத்திற்கும் தர வேண்டும் என்பதே எனது வாதம்.
Deleteபெர்சனல் ஒப்பீனியன் - கேங்ஸ்டர் ஒருவன் உருவாகும் கதையில் The Godfather படத்தின் தாக்கம் இல்லாமல் இருக்காவே இருக்காது. அது தான் மூலக்கதை. அதே போல் ஸ்பெஷல் பவர்ஸ் இல்லாத சாதாரண மனிதன் ஒருவன் தனது திறமையை மட்டுமே நம்பி நாட்டிற்கு நல்லது செய்ய முகமூடி அணிகிறான் என்று எப்படிக் காட்டினாலும் அதில் பேட்மேனின் பாதிப்பு இல்லாமல் இருக்காது. ஏனென்றால் அது தான் மூலக்கதை. மூட்டைப்பூச்சி ஒன்று கடித்ததால் அவன் பெரும் வீரனானான் என்றால் அது காப்பி :-)
படம் குறித்த எனது பார்வையை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதில் மேலும் விளக்கமாக எனது கருத்துக்களை கூறுகிறேன்.
பி.கு: இந்த பதிலை உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கும்போது இங்கும் ஒரு முறை பவர் கட் :-)
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...