கனவு காணுங்கள் - S S ராஜமௌலி – பாகம் 04

8:46:00 AM


வித்தியாசமான கதைகளன்களை எடுத்துப்பார்த்தாயிற்று. ஆக்ஷன், சோஸியோ  பேன்டஸி படம், சரித்திர படம், காதல், சென்டிமெண்ட் என்று அனைத்து ஏரியாக்களையும் ஒரு கை பார்த்து விட்ட ராஜமௌலிக்கு ஒரு எண்ணம். தன் கதைக்காக படம் ஓடுகிறதா? இல்லை கதாநாயகனுக்காக படம் ஓடுகிறதா? என்று. ஏனென்றால் இதுவரை படம் பண்ணிய அனைத்து ஹீரோக்களும் பெரிய குடும்ப பின்புலம் உள்ளவர்கள் (ஜூனியர், ராம் சரண்) அல்லது ரசிகர் வட்டம் உள்ளவர்கள் (பிரபாஸ், ரவி தேஜா). மேலும் ஈகாவின் கதை வேறு மனதிற்கு ஓடிக் கொண்டிருந்ததால் ஒரு சின்ன கேப் தேவைப்பட்டது. சரி, ஒரு பரிசோதனை முயற்சியை செய்து பார்ப்போமே என்று முடிவெடுத்து அவர் கையிலெடுத்த சப்ஜெக்ட் "காமெடி"! அதுவும் யாரை வைத்து? மஹதீரா காமெடியன் 'சுனில்' ஐ ஹீரோவாகப் போட்டு! ஏற்கனவே தமிழில் நம் லிவிங்ஸ்டன் நடித்த ‘சுந்தர புருஷன்’ தெலுங்கு ரீமேக்கான Andala Ramudu வில் நடித்து மண்ணைக் கவ்வியிருந்தார் "ஹீரோ" சுனில். எனவே 7 படங்கள் வெற்றி கொடுத்து விட்ட SSR க்கு 8 ஆவது படம் ப்ளாப் என்று உறுதி செய்து காத்திருக்க ஆரம்பித்தது தெலுங்கு சினிமா. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படத்தைத் தொடங்கினார் S S R.
1922 ஆம் ஆண்டு வெளியான மௌனப்படம் Our Hospitality. அந்தப் படத்தைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்ட படம் - Maryada Ramanna (2010). S S Rன் மற்ற படங்களுக்கு சற்றும் குறையாமல் அதே “மாபெரும் வெற்றி” என்னும் ரிசல்ட்டைக் கொடுத்து அனைவரின் வாயையும் அடைத்தது.

"இந்த டீஸரை அவசியம் பார்க்கவும்"

கதை – ஆந்திரா ராயலசீமா பகுதியில் நடக்கும் கலவரத்தில் உயிரை விடுகிறான் ராமிநீடுவின் அண்ணன். 28 வருடங்கள் ஆகியும் தன் அண்ணனைக் கொன்றவர்களை பழிவாங்கக் காத்திருக்கும் வில்லன் (?) ராமிநீடு. ஹதிராபாத்தில் தினம் பிழைப்பை ஓட்ட படாதபாடு பட்டுக்கொண்டிருப்பவன் ராமு (சுனில்). உப்பு விற்றால் மழை பெய்யும், உம்மி விற்றால் காற்றடிக்கும் கதைதான் ராமுவுடையது. அவனுடய மொத்த சொத்துதே அவனது ஓட்டை சைக்கிள் ஒன்று தான். அதை நம்பி தான் அவன் பிழைப்பு ஓடுகிறது. படம் முழுக்க ராமுவுடன் இருக்கும் இந்த சைக்கிளிற்கு வாய்ஸ் S S R ன் Vikramarkudu ஹீரோ ரவி தேஜா! இந்நிலையில் ராயலசீமாவில் தன் குடும்பதிற்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் இருப்பதைத் தெரிந்து கொள்ளும் ராமு, அதை விற்று, வரும் காசில் செட்டில் ஆகிவிடலாம் என்ற கனவுடன் ரயில் ஏறுகிறான். ரயிலில் ஹீரோயின் என்ட்ரி. எதிர் சீட்டில் காலேஜ் முடித்து சொந்த ஊர் திரும்பும் அபர்னா (Saloni Aswani – ராஜபாட்டையில் ஒரு பாடலுக்கு விக்ரமுடன் ஆடுவாரே அவர்). பேச்சு சுவாரஸ்யம் நட்பாகி, தென்றல் காற்று வீசி, நல்லதொரு நைட் எஃபெக்ட்டில், அருமையான மெலடி சாங் ஒன்றும் துணையோடு, ரகசியமாக இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. ஊர் வந்துவிடுகிறது. காதலர்கள் பிரியும் நேரம். இப்படியே விட்டுவிட்டால் காதல் ஜோடிகள் மீண்டும் சந்திப்பது எப்படி? எனவே அபர்னாவின் ஓவியங்கள் அடங்கிய புத்தகம் ராமுவிடம் வந்து விடுகிறது. அதைத் திரும்பக் கொடுக்க அபர்னாவின் வீட்டைத் தேடி வருகிறான் ராமு. வந்து சேரும் இடம் ராமிநீடுவின் வீடு. அபர்னா ராமீயின் மகள். வேறென்ன, ராமுவின் அப்பாதான் ராமீயின் அண்ணனை 28 வருடங்களுக்கு முன் கொன்றவர். அவரது நிலத்தை விற்கத்தான் மகன் ராமு வந்திருக்கிறான் இன்டர்வல்! 
வாழும் வீட்டைக் கோவிலாக மதிக்கும் பாரம்பரிய குணம் கொண்ட  குடும்பம் ராமீயுடையது. வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அவர்களது மனம் சிறிதும் நோகாதபடி கவனித்து, விருந்தோம்பல் செய்து அனுப்ப வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே இவரது குடும்பத்தில் கடைபிடிக்கின்றனர். எனவே வீட்டிற்குள் ரத்தம் என்ன சத்தம் கூட இருக்காது. ஓவிய நோட்டைக் கொடுக்க வீட்டிற்குள் வரும் ராமு யார் என்பது ராமீ கோஸ்டிக்கும் (ராமீ + 2 மகன்ஸ்), ராமீ யார் என்ற வரலாறு ராமுவிற்கும் தெரிய, ஆட்டம் ஆரம்பம். ராமுவை வீட்டை விட்டு வெளியே அழைத்து சென்று போட்டுத் தள்ள ராமீ கோஷ்டி துடிக்க, படி தாண்டினால் சங்கு என்பது உறுதியானதால் ராமுவும் அது இது என்று கோல்மால் செய்து வீட்டிலேயே செட்டில் ஆக, வழக்கமான கிளைமாக்ஸுடன் சுபம்! 

படம் முழுக்க சுனில் தான். நடிப்பு பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இவர் ஒரு சூப்பர் டான்ஸர் என்பது இந்தப் படத்திலிருந்து அனைவருக்கும் தெரிந்தது. டான்ஸராக சினிமாவிற்குள் நுளைந்த சுனில், வில்லனாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் கிடைத்ததோ காமெடியன் வேடம்! ஆனால் இந்தப் படத்திற்கு பிறகு, முழு நேர ஹீரோ. அதிலும் இப்போது இவர் சாதாரண ஹீரோ இல்லை. 6 பேக் ஹீரோ. தழுக் மொழுக் என்று இருந்தவர், Maryada Ramana விற்கு அடுத்து நடித்த Poola Rangadu என்னும் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காக கிரனைட் கல்லை அடுக்கடுக்காக செதுக்கி வைத்தது போல உடம்பை இருக்கிவிட்டார். அப்படி ஒரு பெர்ஃபெக்ஷன், டெடிகேஷன்! மைல்ஸ் டு கோ சுனில். ஆல் தி பெஸ்ட்! 
காதலுக்கு அழகுப் பதுமையான சலோனி. இவரது கண்களே ஆயிரம் கதைகள் சொல்கிறது. நடிப்பும் தேவையான அளவிற்கு நிரம்பவே இருக்கிறது. கவர்ச்சிக்கும் பஞ்சம் இல்லை. ஆனாலும் ஏன் தெலுங்கு சினிமா சரியான சந்தர்ப்பம் எதுவும் கொடுக்காமல் இவரை ஒதுக்கியே வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. விக்ரமுடன் ஆடிய போது சற்று உருண்டையாக பிரம்மாண்டமாகத் தெரிந்தார். ஆனால் இந்தப் படத்தில் சோ கியூட்! அதுவும் அந்த ராய ராய ராய சலோனி பாடலில் ஓஹோ (சிங்காரவேலன்)! கேட்டுக்கொண்டே இருக்கிறேன் அந்தப் பாடலை. இதே உங்களுக்காக இங்கே. 

30 கோடி வசூல் செய்து 2010 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமானது Maryada Ramana. அமெரிக்காவில் முதல் வாரயிறுதி வசூல் மட்டும் 1 கோடி. இந்தியாவில் முதல் வார லாபம் மட்டும் 10.58 கோடி என்கிறது விக்கிபீடியா. ஏற்கனவே ராஜமௌலியின் Vikramarkuduவை அக்ஷய் குமாரை வைத்து Rowdy Rathore ஆக்கி கைநிறைய அள்ளிவிட்ட பாலிவுட், இப்போது Maryada Ramana வை அஜய் தேவ்கனை வைத்து Son of Sardaar ஆக்கியிருக்கிறார்கள். பட்ஜெட் 50 கோடி என்கிறார்கள். எல்லாம் ராஜமௌலி திரைக்கதையின் மேல் இருக்கும் நம்பிக்கை. கன்னடத்தில் ஒரிஜினல் பெயரிலேயே ரீமேக் செய்யப்பட்டு வெற்றியும் கண்டது. இங்கும் முன்னனி காமெடியன்தான் ஹீரோ. தமிழில் இன்னும் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. அப்படி வந்தால் யார் நடிக்கலாம். வடிவேலு? முதலில் அவர் ஏதாவது ஒரு படத்தில் நடிக்க வேண்டும், இனி அதற்கே வாய்ப்புகள் கம்மி என்று தோன்றுகிறது. 50 வயது விவேக்கும் பொருத்துவார் என்று தெரியவில்லை. கருணாஸும் செட் ஆக மாட்டார். வேறு யார்? சந்தானம் தான் ஒரே சாய்ஸ்! வேலாயுதம் இரண்டாம் பாதியில் தனியாக வீட்டிற்குள் புலம்பியபடியே பணத்தை அடிக்க சுற்றிக்கொண்டிருப்பாரே, அதே போல் பல சீன்கள் இருக்கிறது இந்தப் படத்தில்! இவரையும் விட்டால் மற்றொரு சாய்ஸ், சத்யன். இவரது உருவத்திற்கும், வாய்ஸிற்கும் பொருத்தமான படமிது. Maryada Ramana படத்தின் காணொளி இங்கே.


சொல்ல மறந்து விட்டேன், Maryada Ramana என்று சொன்னவுடன் படத்தின் ஆடியோ ரிலீஸையும் மறக்காமல் நினைவுருகிறார்கள். அந்த அளவிற்கு பிரம்மாண்டமாகவும், வித்தியசமாகவும் நடந்திருக்கிறது இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா. ராமிநீடுவின் வீடு போன்றதொரு பிரம்மாண்ட செட்டிங், மேடையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் சுனில் ஒளிந்து கொண்டு வெளியே வராமல் அடம்பிடிப்பார். ராஜமௌலியின் நாயகர்களான ஜூனியர், ரவிதேஜா, பிரபாஸ் மற்றும் பல நட்சத்திரங்கள் பல விதமாக அழைக்க, கடைசியில் நம் S P B கூப்பிட்ட குரலுக்கு வீட்டைவிட்டு வெளியே வருவார் சுனில். இப்படிதான் நடந்திருக்கிறது இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா.

பிரம்மாண்ட பட்ஜெட், பெரிய மாஸ் ஹீரோக்கள், ஆக்ஷன், மசாலா, கவர்ச்சி என்று எதிலும் தான் சிக்கிக்கொள்ளவில்லை, எதை நம்பியும் தான் படம் எடுக்க வேண்டியதில்லை, தனது திரைக்கதை மட்டும் போதும்  என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டார் S S R, ஆந்திர ரசிகர்கள் கொடுத்த நம்பிக்கையால் தனது கனவுப் படமான "ஈகா" வைக் கையில் எடுத்தார். அதுவும் எப்படி பிரபாஸ் உடனான அடுத்த படத்தை ஆரம்பிப்பதற்கு முன் 30 முதல் 40 நிமிடம் ஓடக்கூடிய ஒரு குறும்படமாகவே ஈகாவை எடுக்க முடிவு செய்திருக்கிறார். மொத்தமாக ஒரு 50 ஸ்கிரீன்களில் மட்டும் லிமிடட் ரிலீஸ் செய்வதே அவரது பிளான். V F X ஆட்களைக் ஒரு "ஈ" யை டிசைன் பண்ணச் சொல்லி வேலையைக் கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் அப்பா ராஜெந்திர பிரசாத் நாகர்ஜுனாவை வைத்து, "ராஜண்ணா" என்ற சுதந்திர போராட்டக் கதையை எடுக்க அதற்கு சண்டைக்காட்சிகளை மட்டும் வடிவமைத்து, இயக்கிக் கொடுத்தார் S S S. படத்தில் மொத்தம் மூன்று முக்கிய சண்டைக்காட்சிகள். ஒவ்வொன்றும் ராஜமௌலி பேரை உரக்கச் சொல்லும் வகையில் கோரியோகிராப் செய்யப்பட்டிருக்கும். படத்தில் பெரிதும் பேசப்பட்ட ஒரு சண்டைகாட்சி உங்களுக்காக இதோ...

ராஜண்ணாவை முடித்து விட்டு கிராபிக்ஸில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட “ஈ” யைப் பார்க்க ஆர்வமாக வந்திருக்கிறார் S S R. ஆனால் அந்த "ஈ"யோ அசிங்கமாக, பார்ப்பதற்கே unpleasing ஆக இருந்திருக்கிறது. செலவு மட்டும் 10 கோடி! 1 கோடி என்றால் கூட போகட்டும் என்று கையை சுட்டுக் கொண்டு அடுத்த படத்தில் மொத்தமாக எடுத்திருக்கலாம். ஆனால் செலவானதோ 10 கோடி. எளிதில் விடக்கூடிய தொகையல்ல என்பதால் படத்தை / முயற்சியை டிராப் செய்ய விரும்பாமல், மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்திருக்கிறார் S S R.



இவருக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது, பிக்ஸரின் லோகோவான மேஜை விளக்கு அனிமேஷன். ஒரு உயிரற்ற மேஜை விளக்கால் அங்கும் இங்கும் ஓடி, பல வித உணர்ச்சிகளைத் தெளிவாக காட்ட முடியும் போது, உயிருள்ள ஈயால் ஏன் செய்ய முடியாது என்று விடாமல் முயன்றிருக்கிறார். இந்த மேஜை விளக்கு மட்டுமல்ல, பிக்சரின் கைவண்ணத்தில், Wall – E என்னும் படத்தில் ரோபோக்கள் கூட காதலை வெளிப்படுத்தியிருக்கும். அப்படி நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டது தான் தான் படத்தில் நாம் பார்க்கும் “ஈ”. தனது உருவத்தில் பாதியை கண்களுக்கு கொடுத்திருக்கும் “ஈ” படத்தில் சொல்ல வரும் விஷயங்கள் அனைத்தையும் ‘பிந்து’ மட்டுமல்ல நாமும் புரிந்து கொள்கிறோம்.  படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு முதல் படியே இங்கு தான் ஆரம்பித்து இருக்கிறது. குறும்படமாக எடுத்து limited release செய்ய நினைத்த "ஈகா"வின் கதையை முழு திரைப்பட திரைக்கதையாக எழுதி முடிதார் S S R. முன்னனி நட்சத்திரங்கள் தேவையில்லை, யமதொங்கா, மஹதீரா படங்களால் V F X ல் போதுமான அளவு அனுபவம் இருக்கிறது. அருமையான திரைக்கதை இருக்கிறது. வேறு என்ன வேண்டும்? இனி முழுக்க முழுக்க ஈகா என்று இறங்கினார் S S R...


தொடரும்...

You Might Also Like

14 comments

  1. சமீபத்தில படித்த மிகச்சிறந்த கண்டெண்ட் உள்ள பதிவு.. அருமை.. வாழ்த்துக்க்ள் நண்பா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete
  2. சத்தியமா சுனிலின் அந்த 3 போட்டேக்களைப் பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கிறது! மரியாதை ராமண்ணாவும் எப்படியாவது பார்த்துவிட வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. சினிமாவில் இது போல dedication உள்ள ஆட்களை பார்ப்பது அபூர்வம்...

      Delete
  3. Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே!

      Delete
  4. எக்கச்சக்க விஷயங்கள் நண்பா.அருமை.

    ReplyDelete
  5. அப்பப்பா ஏகப்பட்ட தகவல்கள்... பாராட்டுக்கள்...

    உங்கள் தளத்திற்கு முதல் வருகை ( நண்பர் ராஜ் மூலம்) என்று நினைக்கிறேன்...

    நன்றி… தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே... தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  6. I read all your post regarding SSR. All were nice and interesting similar to a film.. Gud work.. keep it up..!!!

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot Sudarsan, please do visit my blog regularly...

      Delete
  7. நான் ஈ படம் பார்த்துடு அவர பத்தி தகவல் சரியாய் தெரியாம இருந்துச்சு இப்ப எல்லாம் படிச்சு தெரிஞ்சுகிட்டேன் நன்றி நண்பா அடுத்த பதிவ சிக்கிரம் போடுங்க

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே! தொடர்ந்து வாருங்கள். நான் ஈ விமர்சனம் மட்டும் இந்தத் தொடரில் மிச்சம் இருக்கிறது. சீக்கிரம் அதையும் எழுதி விடுகிறேன்.

      Delete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...