Awake | TV Series | US

11:46:00 AM


ஒரு வழியாக ராஜமௌலி தொடரை முடித்து விட்டேன். கிடைத்த கேப்பில் சுதந்திர தினத்தைப் பற்றிய எனது பார்வையையும் பதிவிட்டு விட்டேன். சரியில்லை சரியில்லை என்று புலம்பிக்கொண்டிருக்காமல், இறங்கி சரி செய்ய முயற்சி செய் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. என்னாலான முயற்சிகளை நான் விடாமல் செய்து கொண்டுதான் இருக்கிறேன். எங்களது இளம்பிறை (www.ilampirai.org) ஒரு உதாரணம். நமது கல்வி முறையில் ஒரு மாற்றம் கொண்டுவரவும், அரசுப்பள்ளிகள் மேல் மக்கள் கொண்டுள்ள தவறான கருத்தை மாற்றி அமைக்கவுமே இளம்பிறை ஆரம்பிக்கப்பட்டது. எங்கள் அளவில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இளம்பிறை பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் ஏற்கனவே ஒரு பதிவு எழுதியுள்ளேன். இவை தவிரவும் என்னால் ஆன சின்ன சின்ன விஷயங்களைச் செய்தும், சமயம் கிடைக்கும் போது இந்த மாதிரி கருத்துக்களை பகிர்ந்தும், விவாதித்தும் மாற்றம் கொண்டு வர முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அவை இங்கு தேவையில்லை என்பதால் இன்றைய விஷயத்திற்கு வருவோம்.

தமிழ் சினிமா இன்று தொடரின் அடுத்த இயக்குனரைப் பற்றி எழுதலாம் என்று தான் உட்கார்ந்தேன். ஆனால் ஒரேடியாக தொடராகளாகவே(?) எழுதிக்கொண்டிருப்பது எனக்கே போரடிக்கிறது. அதனால் இம்முறை ஆங்கில டிவி சீரியல் ஒன்றைப் பற்றி எழுதுகிறேன். ஏற்கனவேHomelandபற்றி எழுதியிருக்கிறேன். இம்முறை எழுத நினைத்திருப்பது மற்றுமொரு வித்தியாசமான சீரியலான “Awake”. சாதாரண Police Procedural Drama வாக எடுத்துக்கொள்ள முடியாத இந்த Awake சீரியலின் திரைக்கதை மந்திரத்தால் அடைபட்டு முதல் சீசனின் 13 எப்பிசோட்களையும் விடாமால் ஒரே மூச்சில் பார்த்து முடித்தேன். Homeland போல் பக்கம் பக்கமாக இல்லாமல் Awake பற்றி சுருக்கமாக எழுத "முயற்சி" செய்கிறேன். 
அமெரிக்காவின் Los Angeles Police Department ஐ சேர்ந்த மைக்கேல் (Detective Michael Britten), தனது மனைவி ஹன்னா (Hannah Britten) மற்றும் மகன் ரெக்ஸ் (Rex Britten) உடன் பயணம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவர்களது கார் பெரும் விபத்துக்குள்ளாகிறது. ஒரு பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் காரில் மிகவும் சிரமத்துடன் கண் திறக்கும் மைக்கேல், அவரது மனைவியும் மகனும் அப்படியே சலனமில்லாமல் இருப்பதைப் பார்க்கிறார். கட்...

மைக்கேல் ஒரு டிடெக்டிவ் என்பதால் கார் விபத்தினால் அவரது வேலையில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக மனோதத்துவ நிபுணரை சந்திக்க ஏற்பாடு செய்கிறது டிபார்ட்மெண்ர். விபத்திற்கு பிறகான தனது நிலையை மைக்கேல் தனது சைக்காட்ரிஸ்டிடம் விவரிக்கிறார். அவர்களுக்கு இடையான உரையாடலின் ஒரு பகுதியை அப்படியே இங்கு கொடுக்கிறேன். இதிலேயே இந்த சீரியலில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்து விடும்

Psych: So tell me how this works

Michael: I am awake with my wife. I close my eyes and open them and I am awake with my son.

Psych: And this is been happening since the accident?

Michael: (nods his head)

Psych: Meaning you can’t tell whether you are awake or asleep at this very moment

Michael: (no reply) 

Psych: Well I can assure you, Detective Britten, this is not a dream

Michael: (laughs) that’s exactly what the other shrink said 

இப்படிதான் ஆரம்பிக்கிறது Awake டிவி சீரியல். மேலுள்ள உரையாடலை சிவப்பு, பச்சை என்று இரு வேறு வண்ணங்களில் எழுதியிருப்பதற்கு காரணம் இருக்கிறது. இந்த கலர் வேறுபட்டை வைத்து உரையாடலை புரிந்து கொள்ள முயற்சித்தால் Awake சீரியல் எப்படிப் பட்டது என்பது தெளிவாகப் புரிந்து விடும். ஆம், கார் விபத்திற்கு பிறகு மைக்கேல் இரட்டை வாழ்க்கை வாழத் தொடங்குகிறார். அவரது உலகம் இரண்டாகிறது. ஒரு உலகத்தில் விபத்தில் மகன் இறந்திருக்க, மனைவியுடன் வாழ்கிறார். தூங்கி எழுந்தால் மற்றொரு உலகம். அங்கு மகன் உயிர் பிழைத்திருக்கிறான், மனைவி இல்லை! இரண்டில் ஒரு முற்றிலும் மைக்கேல் காணும் கனவு. ஆனால் எது கனவு எது நிஜம் என்றே தெரியாமல் வாழத் தொடங்குகிறார் மைக்கேல். தான் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்பதை மைக்கேல் தனது கையில் ஆணிந்திருக்கும்ரப்பர் பேண்ட்டை வைத்துக் கண்டுபிடிக்கிறார். சிவப்பு கலர் பேண்ட் என்றால் மனைவி இருக்கும் உலகம். பச்சை கலர் என்றால் மகன் இருக்கும் உலகம். இந்த வண்ணங்களை வைத்து கான்ட்ராஸ்டில் தான் நாமும் மைக்கேல் இருக்கும் உலகைத் தெரிந்து கொள்கிறோம். மைக்கேல் தன் மனைவியுடன் இருக்கும் உலகம் சிவப்பு கலர் டோனிலும், மகனுடன் இருக்கும் உலகம் பச்சை கலர் டோனிலும் நமக்கு காட்டப்படுகிறது.

இரண்டு உலகிலும் மைக்கேலுக்கு வேறு வேறு சைக்காட்ரிஸ்கள். சிவப்பில் Dr. Jonathan Lee; பச்சையில் Dr. Judith Evans. இருவருமே மைக்கேலின் மனம் ஒரு பெருந்துயரத்திற்கு ஆளானதால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து அவருக்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்கின்றனர். மைக்கேல் குணமடைய விரும்பவில்லை என்றாலும் கூட. இரண்டு உலகிலும் வேறு வேறு பார்ட்னர்கள். சிவப்பில் புதிதாக நியமிக்கப்பட்ட பார்ட்னர் Detective Efrem Vega; பச்சையில் விபத்துக்கு முன் இருந்த அதே பார்ட்னரான Isaiah "Bird" Freeman. இரண்டு உலகிலும் வேறு வேறு கேஸ்களை சந்திக்கிறார் மைக்கேல். ஆனால் எல்லாம் ஒன்றுக்கொன்று ஏதாவது ஒரு வகையில் தொடர்புடையதாய் இருக்கிறது. ஒரு உலகில் தான் எடுத்து நடத்தும் கேஸிற்கானக்ளுமற்றொரு உலகத்தில் கிடைக்கிறது. இதனால் மைக்கேலால் சிக்கலான கேஸ்களையும் தனது இன்ஸ்டின்க்ட் மூலமாக சுலபமாக வேட்டையாடி விளையாட முடிகிறது.

கையில் ரப்பர் பேண்டால் கலர் வேறுபாடு தெரிந்தாலும் மைக்கேலுக்கு பல சமயங்களில் பல விதமான குழப்பங்கள் ஏற்படுகிறது. அதில் முக்கியமான ஒன்று Hallucination. இல்லாத ஒரு பொருள் இருப்பதாய் தெரிவது. இந்த Hallucination, படுசிறப்பாக மூன்று எப்பிஸோட்களில் கையாளப்பட்டிருக்கிறது. பல சமயம் மைக்கேலின் நடவடிக்கையால் அவரது டிபார்ட்மெண்டிற்கும், பார்ட்னர்களுக்கும் சந்தேகம் ஏற்படுகிறது. மைக்கேலது இந்த நிலையை இரு சைக்காட்ரிஸ்களுமே நம்ப மறுக்கின்றனர். தாங்கள் இருக்கும் உலகமே நிஜம் என்றும் மற்றொன்று மைக்கேல் காணும் கனவு என்று நம்ப வைக்க தங்களால் ஆன முயற்சிகளைச் செய்கின்றனர். ஆனால் மைக்கேல் தனக்கு இந்த இரண்டு வாழ்க்கையுமே தேவை என்கிறார். மூவரும் ஒன்றாக இல்லை என்றாலும், ஒரு உலகத்தில் தன் மனைவியுடனும், மற்றொரு உலகத்தில் தன் மகனுடனும் வாழ்வதையே தான் விரும்புவதாகச் சொல்கிறார். எது கனவு எது நிஜம் என்பதைத் தெரிந்து கொண்டு இருவரில் ஒருவரை இழப்பதற்கு அவர் தயாராக இல்லை.

இவையனைத்தும் தான் நமக்கு Pilot (முதல்) எப்பிசோடில் சொல்லப்படும் விஷயங்கள்.

பின் வரும் எப்பிஸோட்களுக்கு சில சாம்பிள்கள்:

Episode 03 - Guilty: மைக்கேல் முன்பு குற்றவாளியாக சிறையில் அடைத்த ஒருவன் வெளியே வந்து மகன் ரெக்ஸை கடத்த (பச்சை உலகில்), அதே குற்றவாளியை சிகப்பு உலகத்தில் சிறையில் சந்தித்து மகன் கடத்தப்பட்டு வைத்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறார் மைக்கேல்!

Episode 09 - Game Day: மகனுடன் உரையாடிக்கொண்டிருக்கும் மைக்கேல் (பச்சை உலகில்), அவனுக்கும் அவனது கேர்ள் பிரண்ட் எம்மா (Emma) வுடன் விபத்திற்கு முன்பு ஏற்பட்டு ஏற்பட்ட சம்பவத்தால் எம்மா கருவுற்றிருப்பது தெரியவர, அதே எம்மாவை சிவப்பு உலகத்தில் சென்று சந்த்திக்கிறார். சம்பவம் விபத்திற்கு முன் நடந்ததென்பதால் எம்மா இங்கும் கர்ப்பம். மகனை இழந்து தவிக்கும் ஹன்னாவிற்காக ஊரை விட்டு போய்விடலாம் என்ற முடிவிலிருந்த மைக்கேல் - ஹன்னா தம்பதி, இறந்த தங்களது மகனின் வாரிசு எம்மாவின் வயிற்றில் வளர்வது தெரிந்து அவளை அவளது பெற்றோர் சம்மதத்துடன் தத்தெடுக்க விரும்புகின்றனர். இங்கு மகனின் உலகத்தில் (பச்சை) இந்த கர்பத்தால் காதலர்களுக்குள் மனஸ்தாபம் வர, மைக்கேல் தன் மகனுக்கு சில பல அட்வைஸ்களைச் சொல்லி தெளிவுபடுத்துகிறார்.

Episode 04 - Kate Is Enough: சிகப்பு உலகில் போதைக்கு அடிமையான பெண்ணாக ஒருத்தியை (Babysitter Kate) சந்திக்கும் மைக்கேல், அதே பெண்ணை பச்சை உலகில் ஒரு பணக்கார இன்வெஸ்டராக சந்திக்கிறார். தினம் தூங்கி எழுவது போலத் தான் இருக்கும். ஆனால் இரண்டு உலகத்தில் நடப்பதும் அதே சீக்வென்ஸில் அப்படியே நினைவிலும் இருக்கும் 
இவை தவிர ஒரு கட்டத்தில் மைக்கேலுக்கு நிகழ்ந்தது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை முயற்சி என்பது நமக்கு சொல்லப்படுகிறது. இரண்டு உலகங்களிலும் உயிரோடிருக்கும் மைக்கேலால் தங்களுக்கு எதுவும் ஆபத்து வரும் என்று சந்தேகித்து மைக்கேலைக் கண்காணிக்கின்றனர் அவரது கொலையாளிகள். லாஜிக்படி பார்த்தால் இந்த சீக்வென்ஸ்கள் சற்று முரண்பட்டிருக்கும். இரண்டு உலகங்களில் ஏதோ ஒன்று கனவு என்றிருக்கும் பொழுது, மைக்கேலின் கொலையாளிகள் எப்படி இரண்டு உலகங்களிலும் மைக்கேலை கொல்ல தாங்கள் போட்ட திட்டங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்க முடியும்? இதே போன்ற ஒரு சமீபத்திய தமிழ் உதாரணத்தைச் சொல்ல வேண்டுமானால் "வழக்கு எண் 18/9" படத்தில் கதாநாயகன் காணும் கனவில் வரும் கதாநாயகி வீட்டு அலமாரியில் லெனின் புத்தகம் இருக்கும். அது எப்படி சாத்தியம்? என்று எழுந்த கேள்வி. இதற்கு நண்பர் உலக சினிமா பாஸ்கரனின் தளத்தில் விடையிருக்கிறது (விடை என்பதை விட காரணம் என்று சொல்லலாம்) இங்கு Awake இன் இறுதி எப்பிசோடில் இவர்கள் கொடுக்கும் ஜஸ்டிபிகேஷனால் அந்த லாஜிக் மீறலுக்கும் விடை கிடைக்கிறது.

இப்படி இந்த சீசனின் 13 எப்பிசோட்களிலிலும் மைக்கேலின் அவரது நிலையை வைத்தே கபடி ஆடியிருக்கிறார், ஒவ்வொரு எப்பிசோடும் திரைக்கதையில் ஒரு கதகளி நடனத்தையே நம் முன் ஆடிக்காட்டி கைத்தட்டல் வாங்குகிறது. இந்த சீரியலின் கிரியேட்டர், Kyle Killen. இரண்டு உலகத்தின் காட்சிகளை வேறுபடுத்திக் காட்ட சிவப்பு, பச்சை என்று வேறு வேறு வண்ண பேனாக்களைக் கொண்டு தான் திரைக்கதையையே எழுதியிருக்கின்றனர் இவரது குழுவினர். இதனால் படம் எடுக்கும் போதும், எடிட் செய்து சேர்க்கும் போதும் எந்த சிரமும் ஏற்படவில்லை இந்த டீமிற்கு. விமர்சன ரீதியாக வெகுவாகப் பாராட்டப்படிருந்தாலும், பார்வையாளர்கள் அதிகம் இல்லாததால் இந்த Awake முதல் சீசனுடன் முடிவடைந்து விட்டதாக அறிவித்தார்கள், இதை ஒளிபரப்பி வந்த அமெரிக்க டி சேனலான NBC. டிவி ஒளிபரப்பிற்குப் பிறகு, டிவிடி, மறுஒளிபரப்பு அது இது என்று Awake கொஞ்சம் லேட் பிக்கப் ஆக, கொஞ்சம் கொஞ்சமாக பட்டையைக் கிளப்ப ஆரம்பித்திருக்கிறது. இப்போது Awake ரசிகர்கள் 'Save Awake' என்ற பெயரில் குழு அமைத்து போராடி வருகின்றனர். அதனால் விரைவில் அடுத்தடுத்த சீசன்கள் வரவும் வாய்ப்பிருக்கிறது.

"மைக்கேலின் உண்மை நிலை தான் என்ன?" - இந்த கேள்விக்கு பதில் தான் கிளைமாக்ஸ் என்றிருக்கும் பட்சத்தில், சீனன் ஒன்றிலேயே நமக்கு விடை சொல்லப்படுகிறது. ஆனால் இந்த பதிலுக்கு Inception கிளைமாக்ஸ் ஷாட்டான "டாப்" பரவாயில்லை என்பேன் நான் :-)

இந்த “Awake” சீரியலின் நாயகனான Michael Britten ஆக நடித்திருப்பவர் Jason Isaacs - ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு இவரை நன்றாகத் தெரியும் இவர்தான் Lucius Malfoy. மனரீதியான பிரச்சனை உள்ளவராக, தன் மனைவி, மகன் இருவரில் ஒருவர் இறந்தது உண்மை என்று தெரிந்தும்கூட அதற்காக வருத்தப்படுவதா வேண்டாமா என்றுகூட தெரியாமல் நடுநிலையான (?) ஒரு கதாப்பாத்திரத்தில் மகனை இழந்து தவிக்கும் தன் மனைவியை ஒரு உலகத்திலும், தாயை இழந்து தவிக்கும் மகனை மற்றொரு உலகத்திலும் சமாதானப்படுத்தி, ஆறுதல் சொல்லி, தான் இந்த இரண்டில் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதே தெரியாத ஒரு மனநிலையில் இருக்கும் ஒரு முற்றிலும் குழப்பமான கதாப்பாத்திரத்தில் மனிதர் ஆற்புதமாக நடித்திருப்பார்

நாயகி Hannah Britten ஆக "அழகி" Laura Allen. மகனை இழந்து, அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவிக்கும் இடங்களும், தனது இந்த நிலை தன் கணவனை பாதிக்கிறது என்பது தெரிந்து அவருக்காக கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தன் பழைய நிலைக்கு மாறும் இடங்களிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். சிறு வயதிலேயே திருமணமான, பருவ வயதில் ஒரு மகன் இருக்கும் இளம் தாயின் கதாப்பாத்திரத்தில் அருமையாக செட் ஆகிறார் இவர்.

மகன் Rex Britten ஆக Dylan Minnette. Prison Break பார்த்தவர்களுக்கு இவனை நிச்சயம் தெரியும். தாயை இழந்து, தந்தையுடனும் சரியான புரிதல் இல்லாமல் தவிக்கும் ஒரு சராசரி அமெரிக்க டீ-ஏஜர். தந்தையை விட்டு விட்டு பாசத்தை வெளியில் தேடும் ஒரு சிறுவனாக நன்றாகவே நடித்திருக்கிறான்.

சிவப்பு உலக மனோதத்துவ நிபுணர் Dr. Jonathan Lee ஆக BD Wong. கொஞ்சம் கராராக, மைக்கேல் சொல்லும் எதையுமே பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தனது மருத்துவத்தில் ஈடுபாடு காட்டவில்லை என்றால் மைக்கேல் இப்படிபட்ட ஒரு ரெண்டுங்கெட்டான் சூழ்நிலையிலேயே வாழ்க்கை முழுவதையும் கழிக்க வேண்டி வரும் என்றே திரும்பத்திரும்ப சொல்லும் ஆசாமியாக நடித்திருக்கிறார். அதே சமயம் சிவப்பு உலக மனோதத்துவ நிபுணர் Dr. Judith Evans ஆக நடித்திருக்கும் Cherry Jones, மைக்கேலின் நிலையை நிதானமாகப் புரிந்து கொண்டு, அவரது மூளையின் இந்தச் செயல்பாடுகளை வியந்து, மைக்கேலின் போக்கிலேயே விட்டு அவரை சரி செய்ய விரும்பும் கதாப்பாத்திரமாக பிரமாதப்படுத்தியிருக்கிறார். இந்த இரு கதாப்பாத்திரங்களுக்கும் இடையே இருக்கும் முரண்பாடுகளே சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டிருக்கிறது. தான் தான் உண்மையான (சிறந்த) மருத்துவன் என்று மைக்கேல் உடனான உரையாடல்களின் மூலம் இருவரும் விவாதிக்கும் இடங்களெல்லாம் உண்டு!

இவர்கள் தவிர மைக்கேலது இரண்டு பார்ட்னர்கள், ரெக்ஸ் காதலி எம்மா, ஸ்டேஷன் கேப்டன், மைக்கேலை கொல்ல நினைத்தவர்கள் என்று சில முக்கிய கதாப்பாத்திரங்களும் இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டியது மற்றுமொரு விஷயம் ஒளிப்பதிவு. அருமை

மைக்கேல் எந்த உலகத்தில் இருக்கிறார் என்பதையும், யாரைச் சந்திக்கிறார் என்பதையும் அவரால் ஃபாலோ செய்ய முடிகிறதோ இல்லையோ நம்மால் ஈஸியாக ஃபாலோ செய்ய முடிகிறது. அதற்கு இந்த Double Color Tone உம், சிறப்பான ஒளிப்பதிவும் தான் காரணம்.

சுருக்கமாக எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு வழக்கம்போல பெரிய பதிவாக எழுதி தள்ளிவிட்டேன். அடுத்தடுத்த சீசன்களை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, இந்த சீசனின் முடிவு கடைசி எப்பிசோடிலேயே "கன்வின்ஸிங்" ஆன முறையில் சொல்லப்பட்டு விடுவதால், தாராளமாக நேரம் கிடைக்கும் போது Awake ஐ பார்த்து வைக்கலாம். கனவு சம்பந்தப்பட்ட சீரியல், நம்மில் அநேகம் பேருக்கு நிச்சயம் பிடிக்கும்!

நான் மேலே சொன்ன அனைத்து விஷயங்களும் காட்சியாக கீழே இருக்கும் டிரைலரில் இருகிறது.


You Might Also Like

7 comments

  1. அது lucius தான்னு பார்த்தவுடன் கண்டுபிடிக்கவே முடியலை..
    செம கதையாகப் படுகிறது! இப்ப பார்க்க முடியமான்னு தெரியலை.. ஆனா கண்டிப்பா எப்பயாவது பார்த்துரனும்..

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் பாருங்கள் நண்பரே!

      Delete
  2. விரிவான விளக்கம்... அனைத்தும் தொகுத்து கண்ணொளியாக பகிர்ந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தனபாலன்!

      Delete
  3. தொடர் கதை ஒன்றை சீரிஸாக பார்ப்பது கடினமான விடயம். டெக்ஸ்டர், கேம் ஒவ் த்ரோன்ஸ் அதற்கு சிறந்த உதாரணம். வருஷத்திற்கு ஒரு சீசன் வரும் ... புதுசு வர்றப்போ பழசு மறந்து போய்விடும். நமக்கு ஒரே மூச்சில் பார்த்து முடிவு தெரிந்து கொள்கின்ற மாதிரி ட்ராமா அல்லது ஃப்ரெண்ட்ஸ், பிக் பேங் தியரி மாதிரி ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு சம்பவம்/நிகழ்ச்சியாக அமையும் நாடகம் தான் ஒத்து வரும்.

    முதல் சீசனுடன் கதை முடிகிறதா? அல்லது இரண்டாவது சீசனில் தெரிந்துகொள்ள ஏதாவது ட்விஸ்ட் வச்சிருக்காங்களா?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, இந்தத் தொடரின் 11 ஆவது எப்பிஸோட் திரைக்கு வந்த போதே சீரியலை முடிக்கப் போகிறோம் (Cancelled by NBC) என்று சொல்லிவிட்டனர். எனவே அடுத்து சீசன் வர வாய்ப்புகள் மிகவும் கம்மி என்பதால் முற்றிலுமாக எந்த கேள்வியையும் விட்டு வைக்காமல், எந்த முடிச்சையும் அவிழ்க்க மறக்காமல் மொத்தமாக விடையளித்து விட்டனர். கவலை வேண்டாம். தாராளமாக நேரம் செலவழித்து பார்க்கலாம் (Climax உங்களை ஆச்சரியத்திலும் ஆழ்த்தலாம், வெறுப்பேற்றவும் செய்யலாம் :-))

      Delete
  4. நண்பரே மிக அருமை...சமயம் கிடைக்கும் பொது பார்க்கிறேன்...
    http://dohatalkies.blogspot.com/2012/08/a-beautiful-mind.html

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...