Homeland | TV Series | US
11:52:00 AM
எண்ணை
வளம் மிக்க நாடுகளில், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்கா நடத்திய, நடத்திக் கொண்டிருக்கும்
“போர்” சம்பந்தமாக இதுவரை ஆயிரம் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் வந்துவிட்டது. அவற்றில்,
அமெரிக்காவில் தயாராகும் படங்கள்/தொடர்கள் பெரும்பாலும் அமெரிக்க அரசு அல்லது அமெரிக்க
ராணுவம் அல்லது அமெரிக்க மக்கள் இந்தப் போர்களால் இழந்ததை, அனுபவித்ததை / அனுபவித்துக்
கொண்டிருக்கும் இன்னல்களைப் பற்றித் தான் பெரிதாகச் சொல்லும்.
“நாலு
பேருக்கு ( = எண்ணை வளம் மிக்க இஸ்லாமிய நாடுகளுக்கு) நல்லது செய்யனும்னு நெனச்சதுக்கு
எங்களுக்கு கிடச்சதப் பாருங்க. நன்றினா கிலோ என்ன விலைனு கேக்குற காட்டுமிராண்டி
பயலுக அவனுக. உலகத்துல எங்களுக்கு சம்பந்தமே இல்லாத வேற பக்கத்துல இருந்தாலும் அந்த
நாடுகள்ல நடக்குற உள்நாட்டுப் போர்ப் பாத்துப் பரிதாபப்பட்டு, மக்களுக்கு உதவியா வந்து,
ஆட்சி செய்ற கொடுகோலனை களையெடுத்து (நோட் பண்ணுங்க… இதுக்கு பேர் கொலையில்ல, களையெடுக்குறது!)
அந்நாட்டு மக்களே தங்களுக்குள்ள ஒரு நல்ல தலைவனை தேர்ந்தெடுக்க உதவி செய்றோம். நிலைமை
சரியாகுற வரைக்கும் கூடவேயிருந்து பாதுகாப்பு தர்றோம். மனிதர் குல மாணிக்கங்களே அமெரிக்கர்களான நாங்கள் தான்” – இதுதான் அந்தப் பெரும்பாலான அமெரிக்க படங்கள் / தொடர்கள் நமக்கு சொல்லும் செய்தி.
ஹாலிவுட்காரர்களால்
எப்படி அவர்கள் நாட்டவரை தியாகச் செம்மல்களாகவும், அவர்கள் போருக்கு செல்லும் நாட்டவரை
தீவிரவாதிகளாகவும், இந்தப் போரை எதிர்க்கும் நாட்டவரை துரோகிகளாகவும் சித்தரிக்க முடிகிறது
என்று தெரியவில்லை! அமெரிக்காவில் ஒரு தீவிரவாதிகூட இருக்கமுடியாதா? அல்லது இப்படிக்
கேட்டுப் பார்ப்போம், முஸ்லிம் நாடுகளில் ஒரு நல்லவர்கூட வேண்டாம் ஒரு சாதாரண குடிமகன்
கூட இல்லையா? எல்லோருமா துப்பாக்கியும் கையுமாக கொலைவெறி பிடித்து அலைகிறார்கள்?
அப்படியே
அமெரிக்காவில் ஒருவன் தப்பித்தவறி தீவிரவாதியாக இருந்தாலும் அவன் இந்த முஸ்லீம் நாடுகளால்தான்
(எண்ணை வளம் மிக்க, இதை மறக்கக் கூடாது) தன் தாய்நாட்டிற்கு எதிராக, இல்லாததும்
பொல்லாத்தும் சொல்லப்பட்டு முக்கியமாக் மூளைச்சலவை செய்யப்பட்டு (Brain Wash) மாற்றப்பட்டிருப்பான்
என்பது தான் இவர்களது கதையாக இருக்கும். அமெரிக்கா ‘என்னைக் கேள்வி கேட்க எவன் இருக்கிறான்
இந்த உலகில்’ என்று இந்த நாடுகளின் மேல் அரங்கேற்றும் மனிதநேயமற்ற போர் குற்றங்களைக்
கண்டு ஒரு அமெரிக்கனே தன் நாட்டிற்கு எதிராக திரும்ப வாய்ப்பிருக்கிறதா? அந்த அமெரிக்கன்
இந்த மாதிரியான இரக்கமற்ற போர்களில் பங்கேற்ற ஒரு போர்வீரனாக இருந்தால்? அவனே போரில்
எதிரியிடம் அகப்பட்டு, பின் 8 வருடங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டவனாக இருந்தால்? 8
வருடங்கள் கழித்து திரும்பி வந்த தன்னை “போரின் நாயகன் (War Hero)” என்று தலையில் தூக்கிவைத்துக்
கொண்டாடும் மக்களையே அவன் கொல்ல நினைப்பானா?
இந்தக்
கேள்விகளுக்கெல்லாம் பதில் ‘Homeland’ என்னும் இந்த அமெரிக்க தொலைக்காட்சி தொடரில்
இருக்கிறது.
“An
American Prisoner of the War has been turned”
இந்த வரிகள்
தான் ‘Homeland’ன் Tagline! தொடரின் மொத்த கதையையும் விவரிக்க இந்த ஒரு வரி போதும்.
அல்-கொய்தா வால் 8 வருடம் சிறையில் அடைக்கப்பட்டு, பின் தன் நாட்டு ராணுவத்திரனரால்
ஒரு பதுங்குக் குழியிலிருந்து மீட்கப்படுகிறான்
U,S Marine platoon sergeant நிகோலஸ் ப்ரோடி (Nicolas Brody – நமக்கு சுருக்கமாக ‘நிக்’).
நிக் மீட்கப்பட்டு, தன் தாய் நாடு திரும்புகிறான் என்ற செய்தியைக் கேட்ட மறுநிமிடத்திலிருந்தே
அவனுக்கும் அபு நசீர் (Abu Nazir) என்னும் அல்-கொய்தா தீவிரவாதி தலைவனுக்கும் தொடர்பு
இருக்குமென்றும், நிக் நசீரால் அமெரிக்காவிற்கு எதிராக திருப்பப்பட்டிருக்கிறான் என்றும்
நம்புகிறாள், CIA operations officer ‘கேரி’ (Carrie Mathison). இவள் இப்படி நினைப்பதற்குக்
காரணம், அவள் முன்பு ஒரு கேஸ் விஷயமாக ஈராக்கில் சுற்றிக் கொண்டிருந்த போது, தூக்கிலடப்படும்
தருவாயில் ‘ஹாசன் இப்ராஹிம்’ என்ற ‘இன்பார்மர்’ கொடுத்த துப்பு ஒன்றே. அந்தத் துப்பு
தான் ‘An American POW has been turned’!
எந்தவித
ஆதாரமும் இல்லாமல் 8 வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்பும் போர்வீரனை ‘தீவிரவாதி’ என்று
சொல்லும் கேரியை யாரும் நம்பத் தயாராக இல்லை. ஆனால் அவள் முழுதாக நம்புகிறாள். தனக்கு
தெரிந்தே தன் தாய் நாடு ஆபத்தில் சிக்கப்போவதை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறாள். அதனாலேயே
தன் மேல் அதிகாரிகள் விட்டுவிடச் சொல்லியும் கேளாமல், அவர்களுக்குத் தெரியாமல் ‘நிக்’
ப்ரோடியை கண்காணிக்கத் தொடங்குகிறாள். நிக் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் கேமிரா, மைக்ரோபோன்
பொறுத்தப்படுகிறது. நிக் ராணுவ விமானத்திலிருந்து அமெரிக்க மண்ணில் காலடியெடுத்து வைத்த
மறுநொடியிலிருந்து அவன் என்ன செய்கிறான் என்பதை தன் வீட்டிலிருந்தபடியே கண்காணிக்கத்
தொடங்குகிறாள். நிக் தூங்கிய பிறகே இவள் தூங்குகிறாள். கேரி வெளியே போக வேண்டிய சூழல்
ஏற்பட்டால், அவளது நண்பன் (இந்த கண்காணிப்புகளை செய்து கொடுத்தவன்) விர்ஜில்
(Virgil) அவள் வேலையைச் செய்கிறான்.
கேரிக்கு
பயிற்சி கொடுத்து, அவளை பக்காவாக தயார் செய்தவர், சால் (Saul Berenson), கேரியை முதலிலிருந்தே
தடுப்பவர் சால்தான். ஏற்கனவே கேரி தனது ஈராக் பயணத்தின் போது, அபு நசீர் பற்றிய செய்தியை
வாங்குகிறேன் என்ற பெயரில் அத்துமீறி ஒரு சிறைச்சாலைக்குள் நுளைந்து அங்கிருக்கும்
கைதியிடம் (ஹாசன் இப்ராஹிம்) அனுமதியின்றி பேசிய குற்றத்திற்காக திருப்பி அழைக்கப்பட்டவள்.
சாலிற்கு இந்த விஷயத்தில் கேரி மீது அதிருப்தி உண்டு. இப்போது கேரி, இப்ராஹிம் விஷயத்தையும்,
நிக் விஷயத்தையும் சம்பந்தப்படுத்துவதை அவர் நம்பத் தயாராக இல்லை, நம்பினாலும் அவரால்
பெரிதாக எதுவும் கேரிக்கு உதவி செய்துவிட முடியாது. ஏனென்றால் கேரி / சாலின் பாஸ்,
அதாவது CIA சிறப்புப் படையின் தலைவர் டேவிட் (David Estes) கேரியினால் சால் மேல் கொண்டிருக்கும்
அதிருப்தி தான். டேவிட் நிக்கின் மீட்டெடுப்பில் முக்கிய பங்கு வகித்தவர். அதனால் அமெரிக்க
துணை ஜனாதிபதியின் செல்லப் பிள்ளை வேறு. இவர் நிச்சயம் நிக் ஒரு தீவிரவாதி என்ற வாதத்தை
ஒத்துக்கொள்ளாவே மாட்டார். அதுவும் கேரி அப்படிச் சொல்கிறாள் என்றால் மதிக்கக்கூட மாட்டார்.
இப்படி எல்லாமே தனக்கு எதிராக இருக்க கேரி தன் வாதத்தை நிரூபித்தாளா இல்லையா, நிக்
உண்மையில் ஒரு தீவிரவாதியா? அவனால் என்ன தீங்கு வரப் போகிறாது அமெரிகாவிற்கு? என்பது
தான் ‘Homeland’ Season 01ன் சாராம்சம்.
இந்தத்
தொடரில் என்னை மிகவும் கவர்ந்தவர் சந்தேகமில்லாமல், நாயகியான கேரி தான். எப்போதும்
நிலையில்லாமல் அலையும் கேரி தன் வாழ்க்கையில் தோற்றவள் ஆனால் அவளது தொழிலில் அவள் கெட்டி.
இவளுக்கும் CIA தலைவர் டேவிட்டிற்கும் முன்பு தொடர்பிருந்ததாகவும் அதனாலேயே டேவிட்டின்
மனைவி குழந்தைகளுடன் அவரை பிரிந்து வாழ்வதாகவும் வாய்மொழியாக ஒரு இடத்தில் வருகிறது.
திருமணமாகாதவளாக, அழகானவளாக இருந்தாலும் இவளால் யாருடனும் ஒரு நிலையான நிரந்தர உறவில்
ஈடுபட முடியாதிருக்கிறது. எந்த நேரம் இவள் எப்படி இருப்பாள், என்ன செய்து கொண்டிருப்பாள்
என்று யாராலும் சொல்ல முடியாத ஒரு ‘புரியாத புதிர்’ இந்தக் கேரி.
சால்,
நிக்கை கேரி கண்காணிப்பதை கண்டுபிடித்துக் கோபப்படும்போது, அவரையே தப்பாக அணுக முயற்சிக்கிறாள்
கேரி, ‘தன் மகளைப் போல நினைத்தவள் இப்படி நடந்து கொள்கிறாளே’ என்று சாலே வெறுப்பான
தருணமது. இவள் வைக்கும் பரிட்சைகள் அனைத்தையும் கடந்து ‘நிக்’ வெளியே வந்தாலும், தன்
நிலையில் மாற்றமில்லாமல் வெறிபிடித்தவள் போல நிக்கை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்கிறாள். முழுவதுமாக நிக்கையே கண்காணித்துக் கொண்டிருப்பவளுக்கு
நிக்கின் மேல் ஒரு விதமான ஈர்ப்பு ஏற்படுகிறது. அவளது தனிமையும் இதற்கு ஒரு முக்கிய
காரணம். இந்த ஈர்ப்பால், டி.வி மானிடரில் நிக்கைத் தொடர்வதை நிறுத்திவிட்டு தானே நேரில்
செல்கிறாள். முதலில் just like that மீட் பண்ணுவது போல் நிக்கைத் தொடர்பு கொள்பவள்
கொஞ்சம் கொஞ்சமாக அவளையே அறியாமல் நிக்கின் மேல் ஒரு வித காதல் உணர்வு கொள்கிறாள்.
இதனால் நிக்கிற்கும் கேரிக்கும் உடல் ரீதியான தொடர்பும் ஏற்படுகிறது. தன் நாட்டின்
எதிரி, தனது முதல்முக்கிய எதிரியின் மீது காதல் கொண்டு அவனுடன் படுக்கையையும் பகிர்ந்து
கொள்கிறாள் கேரி! இப்படி ஒரு நிலையற்ற பாத்திரமாக கேரி சித்தரிக்கப்பட்டிருப்பதற்கு
ஒரு முக்கிய காரணம் சொல்லப்படுகிறது. இவளது தனிமையான வாழ்க்கைக்கும் அது தான் காரணம்.
மாட்டிக்கொண்டபோது என்ன செய்வதென்று தெரியாமல் தன் தந்தை போலான, தனது குரு சாலையே தப்பாக
அணுகச் செய்ததும் அந்தக் காரணம் தான் அது என்ன?
இந்தக்
கேரிக்கும் நம்ம தனுஷிற்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. ஆம், ‘3’ படத்தில் தனுஷிற்கு
ஒரு வியாதி இருப்பதாகக் காட்டுவார்களே, அதே வியாதி தான் இந்தக் கேரிக்கும். அது
‘Bi-Polar disorder’. நிலையில்லாத மனநிலை. 3 படத்தில் காட்டப்படுவது போல் அதீத சிரிப்பு,
அதீத அழுகை, அதீத கோபம், யானை பலம் இத்யாதி, இத்யாதியெல்லாம் தான் Bi-Polar
disorder என்று ஒரு மருத்துவரை வைத்து இவர்கள் கிளாஸ் எடுக்கவில்லை. “இந்த வியாதி இருக்குறவங்க
என்ன ஆவாங்க டாக்டர்?”, “இவங்கள குணப்படுத்தவே முடியாதா டாக்டர்?” என்று படத்தின் முக்கிய
கதாப்பாத்திரத்தைப் பற்றி மற்றொரு முக்கிய கதாபாத்திரம் ஒரு கேள்வியை எழுப்ப அதற்கு
சில பல X-Ray, MRI களை தன் முன் வைத்துக் கொண்டு டாக்டர் கிளாஸ் எடுப்பார். இந்தக்
காட்சி வந்தாலே எனக்கு வெறியாகிவிடும் உ: 3, அந்நியன், சந்திரமுகி, முப்பொழுதும் உன்
கற்பனைகள், குடைக்குள் மழை இன்னும் பல “வியாதியினால் இப்படி ஆயிட்டான்” டைப் படங்கள்.
கேரியாக
நடித்திருப்பவர், அல்லது நமது பாரம்பரிய ஸ்டைலில் சொன்னால் வாழ்ந்திருப்பவர்
‘Claire Mathison’. சிறந்த நடிகைக்கான Golden Globe Award (இது இவரது மூன்றாவது Golden Globe விருதாம்!), Satellite Award,
Critic’s Choice Television Award என்று பல விருதுகளை கேரி பாத்திரத்திற்காக வென்றிருக்கிறார்
இவர். தனக்குள்ளேயே ஒரு மிகப்பெரிய பிரச்சனையை வைத்துக்கொண்டு (மனப்பிரச்சனை இருப்பவர்கள்
CIAவில் இருக்க முடியாது. கேரிக்கு இருப்பதோ CIA மட்டும் தான்) ஊர்பிரச்சனைக்கு பாடுபடும்
இந்த கேரி கதாபாத்திரத்தை சரியான முறையில் கையாண்டிருப்பார் க்ளேரி!
அடுத்த
முக்கிய பாத்திரம் 8 வருடங்கள் கைதியாக இருந்து விட்டு, தன் தாய்நாட்டிற்கும், வீட்டிற்கும்
திரும்பும் நிக்கேலஸ் ப்ரோடி. போரின் கொடூரத்தால் சாதாரண மக்கள் போல இயல்பு வாழக்கை
வாழ முடியாமல் தவிக்கும் பாத்திரமான நிக்கோலஸ் ப்ரோடியாக நடித்திருக்கும் ‘Band of Brothers’ புகழ் Damian Lewis. (இதே போன்ற 'பல நாள் கழித்து வீடு திரும்பும் போர்கைதி கதாபாதிரத்தில் எனக்கு
மிகவும் பிடித்தது நம்ம ஸ்பைடர்மேன் (முன்னாள்?) Tobey Maguire தான். படம்: Brothers - 2009). வீட்டில்
மனைவி குழந்தைகளிடம் சகஜமாகப் பேச முடியாமல், தான் செய்வது வித்யாசமாக மற்றவரது கவனத்தை
ஈர்பதாக இருக்கிறது என்பது தெரியாமல் இருப்பதும் (பேட்டி கேட்டு வீட்டிற்குள் வரும்
மீடியாகாரனை தாக்குதல், வீடே இவன் திரும்பி வந்ததற்காக பார்டி கொண்டாடிக்கொண்டிருக்க,
இவனோ தோட்டத்தில் உலாவும் மான் ஒன்ற ‘உன் தோட்டத்தை நாசம் பண்ணு பாத்துச்சு டார்லிங்’’
என்று சொல்லி எல்லோர் முன்னிலையிலும் அதை சுட்டுக் கொல்லுதல்), மீடியா தன்னை ஒரு ஹீரோவாகச்
சித்தரித்து சதாசர்வகாலமும் தன் வீட்டு வாசலிலேயே கேமராவுடன் காத்திருப்பதை ஏற்றுக்கொள்ளாமலும்,
சரியான தூக்கமில்லாமல், மன நிம்மதியில்லாத ஒரு ரணப்பட்ட போர்க்கைதியாக நன்றாகவே நடித்திருக்கிறார் Lewis. பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், ‘நன்று’ என்றே சொல்லலாம் இவரது
நடிப்பை.
மற்ற முக்கிய
பாத்திரங்கள் என்றால் நிக் மனைவி, ஜெசிக்கா (Jessica Brody). இறந்து விட்டதாக நம்பப்பட்ட கணவன் 8 வருடங்களுக்குப்
பிறகு திரும்பி வ்னதால் எப்படி இருக்கும். அதை தெளிவாக ஸ்கிரீனில் காட்டியிருக்கிறாது
இந்தப் பாத்திரம் (இவரது அறிமுகமே படு ஜோர்: ‘நிக்’கின் நண்பனோடு படுக்கையில் இருக்கும்
போது பாதியில், கணவனிடமிருந்து ‘I am coming back’ என்று போன் கால் வரும்). குற்ற உணர்ச்சி,
திடீர் மீடியா வெளிச்சம், கொஞ்சமும் தன்னை மதிக்காத டீன்-ஏஜ் மகள், அப்நார்மலாக ஏதாவது
செய்துகொண்டிருக்கும் கணவன், ‘நீயில்லனா நான் செத்துருவேன்’ டைப் டயலாக் சொல்லி நிலைமை
புரியாமல் சாவடிக்கும் சமீபத்திய காதலன் (கணவனின் நண்பன்) என்று இவரது பாத்திரமும் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளாது. ஜெசிக்காவாக நடித்திருக்கும் Morena Baccarinனும் நன்றாகவே நடித்திருக்கிறார்.
கவனிக்க
வேண்டிய மற்ற பாத்திரங்கள் (மேலே படத்தில் வரிசையாக இடமிருந்து வலம்) சால் (நடித்திருப்பவர், Mandy Patinkin), டேவிட் (நடித்திருப்பவர், David Harewood),
விர்ஜில் (நடித்திருப்பவர், David Marciano), அபு நசீர் (நடித்திருப்பவர், Navid Patinkin) மற்றும் நிக்-ஜெசிக்காவின் டீன்-ஏஜ் மகள் டானா (நடித்திருப்பவர், Morgan Saylor.
அமெரிக்க
பெருமை சொல்லும் தொடர்போலத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளே சில பல நியாய தர்மங்களையும்
அலசியிருக்கிறார்கள். நிக் உண்மையில் யார்? எட்டு வருடங்கள் கைதியாக இவன் என்ன செய்து
கொண்டிருந்தான்? அபு நசீருக்கும் இவனுக்கும் தொடர்பு இருக்கிறதா, இல்லையா? கேரி தன்னை
நிரூபிக்க என்னவெல்லாம் செய்கிறாள்? என்று ஒவ்வொரு எப்பிசோடாக கொஞ்சம் கொஞ்சமாக கட்டவிழ்த்து,
நம்மைக் கட்டிப்போடுகிறார்கள். Season 01 தான் முடிந்திருக்கிறது. Season 02 வரும் செப்டம்பரில் ஆரம்பம். அதற்குள் இந்தத் தொடரை பார்த்து விடுங்கள். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் :-)
Homeland - காணொளி கீழே... பதிவில் ஆங்காங்கே நான் இணைத்துள்ள YouTube linkகளையும் தவறாமல் பார்க்கவும். நான் இவ்வவு தூரம் எழுத்தில் சொன்னதை இந்தக் காட்சிகள் எளிதாக உங்களுக்குப் புரிய வைத்துவிடும்.
Homeland - காணொளி கீழே... பதிவில் ஆங்காங்கே நான் இணைத்துள்ள YouTube linkகளையும் தவறாமல் பார்க்கவும். நான் இவ்வவு தூரம் எழுத்தில் சொன்னதை இந்தக் காட்சிகள் எளிதாக உங்களுக்குப் புரிய வைத்துவிடும்.
7 comments
பிரதீப் பாண்டியன்,
ReplyDeleteஅது தானே பாஸ் உங்க பேரு...உங்க பழைய பதிவு எல்லாம் படிக்கும் போது தான் தெரிஞ்சிது.. அதுவும் இல்லாம உங்க ஊர் "போடி" தானே ??உங்க 100 ஆவது பதிவுல பார்த்தேன்.. எனக்கு "கூடலூர்".
இப்ப தான் உங்க பழைய பதிவு எல்லாம் படிச்சிட்டு வரேன். உங்களுக்கும் எனக்கும் நிறைய எடத்துல எண்ணங்கள் ஒரே மாதிரி இருக்கு.. உங்க "கலாச்சாரக் காவலர்கள்..." பதிவு நல்ல உதாரணம்.
Homeland சீரீஸ் இப்ப தான் கேள்விபடுறேன்...
ReplyDeleteஉங்க பதிவு படிக்கும் போது எனக்கு சீரீஸ் பார்த்த மாதிரி இருந்தது... ரொம்ப ஆழமா ஒவொரு கேரக்டர் பத்தி விமர்சனம் பண்ணி இருக்கேங்க...நிக் நல்லவனா, தீவிரவாதியான்னு நான் டவுன்லோட் பண்ணி பார்த்து தெரிஞ்சுகுறேன்.. :)
உங்க "Bi-Polar disorder" கருத்துடன் நான் உடன் படுகிறேன்..வியாதியின் தாகத்தை காட்சியில் தான் காட்ட வேண்டும்.. ஆனா அப்படி தமிழ் சினிமாவுல பன்னுறதில் சில சட்ட சிக்கல் இருக்கு..
மெம்ண்டோ படத்துல எந்த டாக்டரும் "short term memory loss" பத்தி கிளாஸ் எடுக்க மாட்டாரு... ஆனா ஹீரோவோட பிரச்னை விளக்க நிறைய காட்சிகள் வைத்து இருப்பார் நோலன்...கடைசி சீன் வரைக்கும் நமக்கு ஹீரோவோட memory loss பத்தி நமக்கு நோலன் காட்சிகள் முலமா விளக்கி கொண்டே இருப்பார்.. நிறைய சின்ன சின்ன விஷயங்கள்...
ஆனா கஜினி படத்துல ஒரு டாக்டர் ஆரம்பத்திலே ஒரே காட்சியில் memory loss பத்தி கிளாஸ் எடுத்துதுடுவார்...
அப்படி இல்லாட்டி நம்ப மக்களுக்கு புரியறது கொஞ்சம் கஷ்டம் பாஸ்...அப்படி விளக்கி சொல்லியும் கூட என் கூட படம் பார்த்த ஒரு படிச்ச பக்கிக்கு புரியல.... ஊர் பக்கம் இருக்குற ஆளுகளை நெனைச்சு பாருங்க.... அதுவும் இல்லாம நிறைய காட்சிகள் வீண் ஆவதை தவிர்க்க டாக்டர் கிளாஸ் தேவை படுது....
பதிவு கொஞ்சம் பெருசு பாஸ்...ஆனா போர் அடிக்கல.....
நீங்க "தமிழ்மணத்துல" இன்னும் இணைக்க வில்லை போல..ஏதாவது spl reason...???
அலசி ஆராய்ந்து விமர்சனம் பண்ணியிருக்கீங்க. கிட்டத்தட்ட ட்ராமாவ பார்த்துவிட்ட திருப்தி ... நிக் நல்லவனா, கேரிக்கு வெற்றி கிடைத்ததான்னு மட்டும் தான் தெரியல.
ReplyDeleteஏற்கனவே பார்க்கவேண்டிய நாடகங்கள் நிறைய குவிந்து கிடக்கு. Lost சீரீஸை அடுத்து ஆரம்பிக்க இருக்கேன். நமக்கு சீசன் சீசனா பார்ப்பது ஒத்துவராது பாஸ். மொத்தமா எடுத்தமா, தொடர்ந்து ஒரு ரெண்டு, மூன்று வாரம் பார்த்தமா, முடிச்சமா .. அடுத்ததுக்கு போனமான்னு இருக்கணும். இந்த Game of Thrones, Sherlock Holmes அடுத்த சீசன் வர்ற வரைக்கும் வெயிட் பண்றது ரொம்பக் கஷ்டமா இருக்கு.
என்னிக்காவது நேரம் வரும்போது எடுத்துப் பார்க்கிறேன்.
@ ராஜ் - மிக்க நன்றி நண்பரே... தங்களைப் பற்றிச் சொன்னதற்கும் மகிழ்ச்சி :-)
ReplyDeleteகஜினி படம் போல முதல் காட்சியிலேயே விளக்கி விட்டால் கூட பரவாயில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. திடீரென்று சம்பந்தேமே இல்லாமல் ஒரு காட்சியில் ஹீரோவிற்கு ஏதோ ஆக, அதன் பிறகு ஒரு டாக்டரின் லெக்சருக்குப் பிறகு ஹீரோ முற்றிலும் வேறு மாதிரி நடந்து கொள்வார். ஹும்ம்... நீங்கள் சொல்வதும் சரி தான். நம்மவர்களுக்குப் புரிய ஒரு விளக்கம் தேவைப்படுகிறது. பதிவு பெருதாகிக்கொண்டே போவது தெரிந்து தான் சடாலென்று நிறுத்தி விட்டேன். இல்லையென்றால் சால், டேவிட், விர்ஜில் என்று ஒவ்வொரு கேரக்டரையும் அலச எண்ணியிருந்தேன் :-)
தமிழ்மணாத்திற்கும் எங்க்கும் ஏதோ பிரச்சனை :-) எனது எந்த பதிவை இணைக்க முயற்சித்தாலும், "இந்தப் பதிவு ஏற்கனவே தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டுள்ளது" என்றே வருகிறது :-( முடிந்தால் கொஞ்சம் எனக்கு உதவவும்!
@ ஹாலிவுட்ரசிகன்: ஆஹா ரொம்ப நீநீநீளமாத்தான் எழுதிட்டேன் போலருக்கே! இந்த மாதிரி எழுதினால் நீங்கள் பார்க்கும் போது சுவாரஸ்யம் குறைந்து விட வாய்ப்பிருக்கிறது என்பதை மறந்து, என் ஆர்வக்கோளாறை காட்டிவிட்டேன். மன்னிக்கவும் :-) அடுத்து 'Awake', 'Missing', 'Misfits', 'Touch' போன்ற நான் பார்த்த, அதிகம் வெளியில் தெரியாத நல்ல தொடர்கள் பற்றி எழுத நினைத்திருக்குகிறேன். அவை எல்லாம் short & sweet ஆக இருக்கும். ஓக்கே தானே?
ReplyDeleteநண்பரே...நலமா ?
ReplyDeleteஇப்பெல்லாம் சினிமா பார்ப்பதே குறைந்துவிட்டது..இதில் டிவி சீரிஸ்..உங்க விமர்சனம் படித்த பிறகு பார்க்கனுமென்ற ஆசை உண்டாயிருச்சி.
பதிவு நீளமாக இருந்தாலும் விடாது படிக்க முடிந்தது..ரொம்ப அருமை..தொடர்ந்து எழுதுங்கள்..நன்றி.
பதிவை பகிர்ந்த அன்பு நண்பனுக்கு நன்றி
ReplyDeleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...