என் தமிழ் சினிமா!
12:11:00 PM
பெரும்பாலும்
அதிகம் பழக்கமில்லாத இருவர் பேசிக்கொள்ள நேரிட்டால் மூன்றே மூன்று தலைப்புகள் தான்
அவர்களது உரையாடலில் பிரதானமாக இருக்கும், அவை 1) அரசியல் 2) கிரிக்கெட் 3) சினிமா.
இவை மூன்றும் இல்லா உலகில் நமக்கு வாழத் தெரியாது. இவை மூன்றில் அதிக முக்கியத்தும்
தந்து நம் நேரம் மற்றும் பணத்தை அதிகம் செலவிடுவது சினிமாவில்தான். சினிமா என்னும்
இந்த மூன்றெழுத்து தான் தமிழனை வாட்டி வதைத்து, சில சமயம் ‘ரசிகன்’ என்ற பதவியையும்
தந்து வாட்டி வதைத்து விடுகிறது.
கல்லூரி
முடித்து கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு நண்பன் ஒருவனை மற்றொரு நண்பனது
திருமணத்தில் சந்தித்தேன். “என்ன மச்சி நல்லாருக்கியா? எதுவும் பிகர் செட் ஆச்சா?”
போன்ற சம்பிரதாய கேள்விகளுக்குப் பிறகு நாங்கள் இலங்கை பிரச்சனையில் இந்தியாவின் செயல்பாடு
பற்றியோ, கேள்வி கேட்கிறவர்களை, கார்ட்டூன் வரைபவர்களை எல்லாம் மாவோயிஸ்டுகள் என்று
சொல்லும் மம்தாவின் செயல்பாடு பற்றியோ, ஐபில் முழுக்க பிக்ஸிங் என்று உலவும் செய்தி
பற்றியோ, கவிழ்ந்து குட்டிக்கரணம் போட்டுக்கொண்டிருக்கும் மார்க்கெட் நிலவரம் பற்றியோ
பேசியிருப்போம் என்று நினைக்கிறீர்களா? இல்லை. “என்ன மச்சி தல எப்படி கலக்குறாரா? மங்காத்தா
எப்படி வெறியா? பில்லா 2 டீஸர் பாத்தியா? குமுதத்துல பேட்டி படிச்சியா?” என்று தான்
அவன் கேட்டான். இத்தனைக்கும் அவன் வெட்டிக்கதை பேசி அப்பன் காசில் உலவுபவன் அல்ல. திருச்சியில்,
பெங்களூர் சம்பளம் வாங்குபவன். இது மிகவும் சாதாரண உதாரணம். முக்கிய விஷயம் பேச போனில்
அழைக்கும் நண்பர்கள், விஷயத்தை பாதி சொல்லிவிட்டு, சைடில் டிவியில் எதையோ பார்த்துவிட்டு
“சந்தானம் செம்மல்ல. சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது,.. ஆமா, என்ன சொல்லிக்கிட்டு
இருந்தேன்?” என்று தொடர்வதும் பல முறை நடந்திருக்கிறது.
இவை எல்லாம்
எனக்கு மட்டும் தான் நடக்கிறது என்று சொல்ல முடியுமா? ‘இது என்ன அவ்ளோ பெரிய விஷயமா?
போய் அடுத்த வேலையப் பாருப்பா’ என்று எளிதில் ஒதுக்கி விடக் கூடிய விஷயம் தானா சினிமா?
Time, Importance and Attention - இவை மூன்றையும் எதன் மீது நாம் அதிகம் வைக்கிறோமோ,
அதன் மீது நமக்கு அன்பு, ஆர்வம், அக்கறை அதிகம் என்று அர்த்தம். தமிழன் இம்மூன்றயும்
தமிழ் சினிமா மேல் வைத்து 75 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. இல்லையென்றால் தமிழ்
வலையுலகில் 65% வலைபக்கங்கள் சினிமா சம்பந்தப்பட்டதாக இருக்காது. தமிழகத்தில் வெளிவரும்
பத்து பத்திரிக்கைகளில் (அதிகம் அறியப்பட்ட, வாசிக்கப்படும்) ஆறு சினிமா புத்தகங்களாக
இருக்காது. காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கும் வரை ஒருநாளாவது சினிமா பற்றி பேசாமல்,
கேட்காமல், பார்க்காமல் இருக்க முடிகிறதா? நமது நேரத்தை, பணத்தை, கவனத்தை கவர்ந்து
கொள்ளும் சினிமா, சினிமா சம்பந்தப்பட்டவர்கள் இப்போது நமக்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?
நடிகர்,
நடிகைகளைப் பற்றி எது வந்தாலும் அது முக்கிய செய்தியாகிறது. அவர்கள் புது நாய் குட்டி
வாங்குவது வரை செய்தி தான். தமிழக அரசியலில் சினிமா சம்பந்தமில்லாத புள்ளிகளை விரல்
விட்டு எண்ணிவிடலாம். சினிமா பற்றி செய்தி வாசிக்காத ஒரே சேனல்கள் எத்தனை உண்டு?
முதலில்
பட ரிலீஸுக்கு மட்டும் காத்திருந்த ரசிகன், இப்பொழுது படப்பூஜையில் ஆரம்பித்து ஃபர்ஸ்ட்
லுக் போஸ்டர் ரிலீஸ், டீஸர் ரிலீஸ், ப்ரோமோ ஸாங் ரிலீஸ், மூவி ஸ்டில்ஸ், முழு பாடல்
ஆல்பம் ரிலீஸ், தியேட்டர் டிரைலர் ரிலீஸ் என இவையனைத்தையும் எதிர்பார்த்து, காத்திருந்து,
பின் அந்த “The D-Day” அன்று வெளிவரும் படத்தைப் பார்த்து எதில் முட்டிக் கொள்வது என்று
தெரியாமல் தன் கையாலேயே தன் தலையில் அடித்துக் கொள்கிறான்.
கொஞ்சம்
யோசித்துப் பார்த்தால் சமீபத்தில் வந்த எந்த தமிழ் படமும் திருப்திகரமாக இருந்ததாகத்
தெரியவில்லை. “திருப்தி” என்று நான் இங்கு சொல்வது ரசிகனுக்கு படத்தைப் பார்த்ததால்
கிடைப்பதும், தயாரிப்பாளருக்கு படத்தை எடுத்ததால் கிடைப்பதையும் சேர்த்து. இரண்டில்
ஒன்று யாருக்காவது அவ்வபோது கிடைக்கிறது என்றாலும் இரண்டும் இருவருக்கும் கிடைத்து
பல நாட்கள் ஆகிவிட்டது. ஆட்சி மாற்றம், தயாரிப்பாளர் சங்க பிரச்சனை, ஃபெப்ஸி பிரச்சனை
என்று அடுத்தடுத்து புதிது புதிதாக பிரச்சனைகள் வேறு. ஆனால் எது இருக்கிறதோ இல்லையோ
நடிகனுக்கு மட்டும் சம்பளம் குறைவில்லாமல் கிடைக்கிறது. இன்று தான் படித்தேன். “சூர்யாவின்
சம்பளம் 15 கோடி, சிம்புவின் சம்பளம் 10 கோடி” என்று. சூர்யாவாவது பரவாயில்லை. சிம்புவிற்கு
எதற்கு 10 கோடி? ஒஸ்தியில் வராத மஸிலை வா வா என்று முக்கி எடுத்துக் காட்டியதற்காகவா?
பாலுமகேந்திரா 90 லட்சத்தில் ஒரு படம் எடுத்து வைத்திருக்கிறாராம்! தயாரிப்பாளர் சசிகுமார்!
முன்னதை நினைத்து முட்டிக்கொள்வதா, இல்லை பின்னதை பாராட்டி தட்டிக் கொடுப்பதா - தெரியவில்லை.
சரி, இவ்வளவு
நேரம் தோன்றியதை எழுதிவிட்டேன், அதை பொறுமையாக படித்தும் விட்டீர்கள். என்ன சொல்லப்
போகிறேன் என்பது தெரியாவிட்டால் சொல்லிவிடுகிறேன் – “இன்றைய தமிழ் சினிமா”. இதைப் பற்றித்தான்
தொடர் பதிவாக எழுத நினைக்கிறேன். தொடர் பதிவா, அதுவும் உன்னிடமிருந்தா, ம்க்கும்… என்று
நீங்கள் நினைப்பதில் தவறொன்றும் இல்லை. என் ரெப்புடேஷன் அப்படி. இன்றைய தமிழ் சினிமாவில்
ஒரு நல்ல படம் வந்து, அது ஹிட்டாவது எவ்வளவு அபூர்வமோ, அதை விட என்னிடமிருந்து ஒரு
பதிவு வருவது அபூர்வம் என்று என்னைத் தொடர்ந்து வாசித்து வரும் ஒரு சில நண்பர்களுக்குத்
தெரியும் (இந்த தொடர் நண்பர்களைப் பற்றிய ஒரு சுவையான செய்தி இருக்கிறது. அதை அடுத்த
பதிவில் சொல்கிறேன்) தமிழ் சினிமா தான் மட்டரகமாகயிருக்கிறது என்று சொல்லிவிட்டாயே
மேலும் என்ன என்று நீங்கள் கேட்கும் முன் சொல்லிவிடுகிறேன்; சமீபத்தில் வந்த தமிழ்
படங்கள் தோற்க காரணம் என்ன? என்ன அந்தப் படங்களில் இல்லை அல்லது எவை இருந்திருக்க வேண்டும்;
தினம்தினம் ஒரு பட பூஜையின் அறிவிப்பு வெளிவந்து, பின் அதனைப் பற்றிய செய்திகள் பட
ரிலீஸ் வரை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் போது, வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் அந்தப் படம்
ஏன் அடுத்த வெள்ளிக்கிழமை கூடத் தாண்ட முடியாமல் தவிக்கிறது போன்றவற்றைப் பற்றித் தான்
இந்த பதிவுகள் இருக்கும்.
வழக்கம்
போல இதையும் சொல்லிவிடுகிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வையாகத் தானிருக்கும்.
ஒரு உண்மையான தமிழ் சினிமாவின் ரசிகனான, காதலனான் ஒரு தனி மனிதனின் பார்வையே இவையெல்லாம்.
சில தகவல்களில் தவறுகள் இருக்கலாம். அதை தாராளமாக சுட்டிக்காட்டலாம். நன்றாக இருந்தால்
தயவு செய்து அதையும் வெளிப்படுத்துங்கள். ஆபீஸில் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருக்கும்
மேனேஜரின் பார்வைக்கு படாமல், Alt+Tab பட்டன்களில் எப்பொழுதும் இரண்டு விரல்கள் தயாராகக்
காத்திருக்க, மீதமுள்ள விரல்களின் அவசர வேலைதான் எனது பதிவுகள். சில கமெண்ட்டுகள்,
Likeகள் என் வேகத்தை நிச்சயம் அதிகப்படுத்தும். ஆளில்லா டீகடைக்கு டீ ஆற்றுவது ஆரம்பத்தில்
தொழில் பக்தியாகத் தெரிந்தாலும், பின்னாட்களில் போரடித்துவிடும்.
தமிழ்
சினிமா ரசிகன் (அட்லீஸ்ட் ஏ, பி ரசிகர்கள்) நடிகர்களை பின்னொதுக்கி விட்டு, இயக்குனர்களுக்கு
முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருப்பது தான் சமீபத்திய தமிழ் சினிமா அடைத்த ஒரே
வெற்றி. 70 களில் ஆரம்பித்து 80கள் வரை எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய்காந்த்,
சத்யராஜ், பாக்யராஜ், மோகன், ராமராஜன் என்று ஹீரோக்களுக்காக படத்திற்கு செல்லும் கூட்டம்
இப்போது சொற்பமே (விஜய், அஜித், பவர் ஸ்டார் ரசிகக்கண்மணிகள்… மன்னிக்கவும், இவர்களையெல்லாம்
நான் ‘தமிழ் சினிமா ரசிகன்’ என்று அழைப்பதில்லை) மணிரத்னம், ஷங்கரில் ஆரம்பித்து நேற்றைய
மெளனகுரு சாந்தகுமாரின் அடுத்த படம் வரை எதிர்பார்த்து காத்திருக்கும் “ரசிகர்” கூட்டம்தான்
இப்போது நிச்சயம் அதிகம். எனது அடுத்தடுத்த பதிவுகள் தமிழ் சினிமாவின் இந்த நட்சத்திரங்களைப்
(இயக்குனர்கள்) பற்றித் தான். வருடத்திற்கு 3 படங்கள் கொடுத்து, 5, 6 வருட போராட்டத்திற்குப்
பிறகு தான் இந்த “நட்சத்திர” அந்தஸ்த்து கிடைத்தது முன்பெல்லாம். (உ: பாரதிராஜா, பாலுமகேந்திரா,
பாலச்சந்தர்). இப்பொழுதெல்லாம் திரும்பிப் பார்க்க வைக்க ஒரே ஒரு படம் போதும் (உ: தியாகராஜன்
குமாரராஜா, சாந்தகுமார்). தயாரிப்பாளரைக் கவர ஒரு குறும்படம் போதும் (உ: பாலாஜி மோகன்)
விரிவாக, விளக்கமாக இவர்களைப் பற்றித் தொடர்ந்து பேசலாம்.
7 comments
“இன்றைய தமிழ் சினிமா”- தொடர் நல்லா வர வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்க கிட்ட இருந்து தொடரா..??? கொஞ்சம் ஆச்சிரியம்மா இருக்கு. ஆனா கண்டிப்பா சுவாரிசியம்மா இருக்கும் என்பது மட்டும் நிச்சியம்.......ரொம்ப ஆர்வமாய் எதிர்பார்கிறேன்.. அட்லீஸ்ட் வாரம் ஒரு பதிவு இல்லாட்டி, மாசத்துக்கு ரெண்டு பதிவு போடுங்க பாஸ்..தற்கால சினிமாவையும் 80's & 90's வந்த படங்களையும் கம்பர் (Compare) பண்ணி எழுதுவீங்களா..இல்லாட்டி வெறும் தற்கால சினிமா மட்டும் தானா..????
இவன்: தமிழ் சினிமா ரசிகன்
80கள் தமிழ் சினிமாவின் பொற்காலம். அவற்றை அப்படியே விட்டு விடுவது தான் நல்லது.
ReplyDeleteஇப்போதுள்ள தமிழ் சினிமாவிற்கு முன்பிருந்ததைவிட வாய்ப்புகள், திறமைசாலிகள், வியாபார அமைப்புகள் அதிகம். ஆனால் அதை யாரும் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. யோசித்துப் பார்த்தால் நாம் தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பல இயக்குனர்களது அடுத்தடுத்த படங்கள் மண்ணைக் கவ்வின. காரணம் மக்கள் ரசனை அல்ல, அவை மொக்கையாக இருந்ததினால் தான்! அது தான் உண்மை!
இவர்களிடமிருந்து இப்படியொரு படமா? என்று மக்கள் ஏமாந்து போயினர். அவற்றை பற்றித் தான் எழுதப் போகிறேன்.
வாரம் இரண்டு பதிவு நிச்சயம் :-) அன்பிற்கு நன்றி!
தொடர் சுவாரஸ்யமாக இருக்கும்....சந்தேகமில்லை.
ReplyDeleteசொற்கள் விளையாடுகின்றன... அசத்தல் ஆரம்பம் பேபி... வாழ்த்துக்கள்...
ReplyDelete@KaniB - மிக்க நன்றி :-)
ReplyDelete@ உலக சினிமா ரசிகன்: நிச்சயம் நண்பரே, உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன் :-)
ReplyDeleteNanbane, u r correct now we are not looking for the actors/actress before going to a movie. Only the directors last movie is pulling the audience to the theatre (atleast me! may be I will fall in to A/B center audience :)). for example till now I dunno who is the hero for the Prabhusalaman's next movie but waiting for that movie (I dunno know whether he is doing any project or not!) anyways ithu oru nalla thodaraga vara vazthukal.
ReplyDelete--Velu
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...