தியேட்டர் தலைவலிகள் - நான் அனுபவித்ததில் சில :-)
1:13:00 PM
டிஸ்கி: 15 ரூபாய்க்கு ஒரு புதுப்பட திருட்டு வீசிடியை வாங்கி
வீட்டில் 30 பேருடன் அமர்ந்து பார்பபவர் நீங்கள் என்றால், இந்தப் பதிவு உங்களுக்கானதல்ல.
மேலே இருக்கும் இந்தப் படத்தைப் பார்த்ததிலிருந்தே, இது சம்பந்தமாக
ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். எதையெல்லாம் தியேட்டரில் செய்யக்
கூடாது என்று அழகாக விளக்குகிறார்கள் குவெண்டினும் அவரது நாயகன் பிராட் பிட்டும்.
வாரம் ஒரு படமாவது தியேட்டரில் பார்க்கும் ஆள் நான். வெவ்வேறு
விதமான படங்களை வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு சமயத்தில் பார்த்திருக்கிறேன். சிறு வயதில்
நான் அதிகம் படம் பார்த்தது OAT என்றழைக்கப்பட்ட எங்களது காலனியின் திறந்தவெளித் திரையரங்கில்
தான். சிலருக்கு மட்டுமே அனுமதியிருந்த அந்த திரையரங்கிற்குள் திருட்டுத்தனமாக ஒரு
பாஸை (Entry Pass) வைத்துக்கொண்டு நண்பர்கள் நாங்கள் பல பேர் பல படங்கள் பார்த்திருக்கிறோம்.
நண்பர்களுடன் முதன் முதலாக பஸ் ஏறிப் படம் பார்க்கச் சென்றதென்றால் அது ‘ஜெமினி’ படத்திற்கு
தான். முதல் நாள் மேட்னி. பாதி படம் சீட்டின் மேல் நின்று கொண்டு தான் பார்த்தோம்.
இப்படி ஆரம்பித்த எனது தியேட்டர் அனுபவங்கள் தஞ்சாவூரில் கல்லூரி சேர்ந்தவுடன் பூதாகரமானது.
வாரம் இரண்டிலிருந்து மூன்று படங்கள் விடாமல் பார்த்துக்கொண்டிருந்த காலம் அது. இப்போது
பெங்களூருவிலும் அதே வேலை தொடர்கிறது.
சரி இனி மேட்டருக்கு வருவோம். தியேட்டரில் நாம் படம் பார்த்துக்
கொண்டிருக்கும் போது, உடன் அமர்ந்திருக்கும் எருமைகள் அருகிலிருப்பவர்களை தொந்தரவு
செய்கிறோம் என்கிற நினைப்பே இல்லாமல் செய்யும் பல அட்டகாசங்களில் நான் சந்தித்த சில
இந்தப் பதிவு உங்களுக்காக.
அட்டகாசமான சீங்களுக்கு விசில் அடிப்பது, மொக்க சீன்களுக்கு
கமெண்ட் கொடுப்பது, ஹீரோ ஓப்பனிங்கின் போது பேப்பர் கட்டிங் வீசுவது, பஞ்ச் டயலாக்கின்
போது கைதட்டுவது எல்லாம் தியேட்டரில் சாதாரணமாக நடப்பவை. சொல்லப் போனால் இவையெல்லாம்
இல்லாமல் தியேட்டரில் படம் பார்ப்பதே வேஸ்ட். இந்த லைவ்லினெஸ்கள்தான் “தியேட்டர் சுகங்கள்”.
இவையெல்லாம் தொந்தரவு செய்கின்றன என்று சொன்னால் ஒருவன் தியேட்டருக்குப் போய் படம்
பார்ப்பதே வேஸ்ட். ஆனால் இவையில்லாமல் பல தலவலிகள் தியேட்டர்களில் உண்டு. அவற்றில்
பொதுவானவை விஜய் படத்தில் அஜித் ரசிகர்களின் அட்டகாசங்கள், காலேஜ் நண்பர்களின் வரிக்கு
வரி கமெண்ட்டுகள், உன் விசில் பெருசா என் விசில் பெருசா போட்டிகள், முன் சீட் காலியாக
இருந்தால் கால் வைப்பவர்கள், ஆள் இருந்தால் “டொக்கு, டொக்கு, டொக்கு” என்று தையல் கடைக்காரன்
மாதிரி மூன்சீட்டை தட்டிக்கொண்டேயிருப்பவர்கள், அருகில் இருப்பவரிடம் விடாது எதையாவது
பேசிக்கொண்டே இருப்பவர்கள், அரை மணிநேரம் லேட்டாக நம் காலை மிதித்துக்கொண்டே வந்து
அமர்ந்துவிட்டு “படம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சா பாஸ், ஒரு 15 நிமிட்ஸ் இருக்குமா
ஆரம்பிச்சு, என்ன நடந்துச்சு, முக்கியமான சீன் எதும் வரலயே” என்று விடாமல் கேள்வி கேட்பவர்கள்
என்று தங்கள் ஆயி அப்பன் கட்டிவிட்ட தியேட்டரில் நாம் தான் தர்மத்துக்குப் படம் பார்க்க
வந்தவர்கள் என்பது போல் சிலர் செய்யும் இம்சைகள் பல உண்டு. அவற்றில் சில,
முதல் தலைவலி செல்போன் பேசும் அலப்பறை மன்னர்கள்!
ரிலாக்ஸ்டாக, எந்த வேலையும் இல்லாத நேரத்தில், எந்தத் தொந்தரவும்
இல்லாமல் படம் பார்க்கவே நம்மில் பலர் விரும்புவோம். ஆனாலும் நமக்கிடையில் சில அம்பானிகள்
வந்து அம்ர்ந்து கொண்டு அலப்பறையைக் கொடுப்பார்கள். இந்த அம்பானிகளுக்கு விடாமல் போன்
வந்து கொண்டே இருக்கும். சாதாரணமாக “படத்துல இருக்கேண்டா, அப்பறம் கூப்பிடுறேன்” இது
தான் தியேட்டரில் படம் பார்துக்கொண்டிருக்கும் போது கைப்பேசி அழைத்தால் நமது பதிலாக
இருக்கும் / இருக்க வேண்டும். ஆனால் நான் தியேட்டரில் அமர்ந்து கொண்டே சத்தமாக வழி
சொல்பவர்களை, வீட்டில் கொழந்த குட்டி நலமா என்று விசாரிப்பவர்களை, இன்டர்வலே வந்திருக்காது
ஆனால் போனில் “இன்னும் அரை அவர் தான் வந்துடுவேன்” என்று சொல்பவர்களை, கிளைமேக்ஸிற்குள்
நண்பனுக்கு போன் போட்டு “படம் மொக்கடா மாமா” என்று ரன்னிங் கமென்ட்டரி கொடுப்பவர்களை
பார்த்திருக்கிறேன். மிக முக்கியமான போன் காலாக இருந்தால் யாரையும் தொந்தரவு செய்யாமல்
எழுந்து வெளியில் போய்விட வேண்டும். ஆனால் அப்படிப் போன் பேச வெளியே போகும் போது பலர்
கதவை மூடாமல் போய் பளீரென்று வெளிச்சம் சரியாக ஸ்கிரீனில் அடிக்கும். தஞ்சாவூரில் இந்தப்
பிரச்சனை இல்லாத தியேட்டர் இல்லை.
இவையெல்லாம் பரவாயில்லை ஒரு முறை என்னருகில் அமர்ந்திருந்த
ஒருவனுக்கு போன் வந்தது. அலறிக்கொண்டிருக்கும் போனை எடுத்து இப்படி அப்படி பார்த்தவன்
அதை எடுக்கவும் இல்லை, கட் செய்யவும் இல்லை, வெளியேவும் போகவில்லை. அதுவும் விடாமல்
அடித்துக்கொண்டேயிருக்கிறது. அவனும் சுவாரஸ்யம் குறையாமல் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
போனை சுவிட்ச் ஆப் பண்ணக் கூட அவனுக்குத் தோன்றவில்லை!
பேச மட்டுமா செய்கிறார்கள்? அருகில் அமர்ந்துகொண்டு விடாமல்
மெசேஜ் அனுப்பிக் கொண்டேயிருப்பவர்களும் இருக்கிறார்கள். கும்மிருட்டுத் தியேட்டரில்
நம் முகத்தில் மட்டும் பளிச் பளிச் என்று அவ்வபோது லைட் அடித்துக்கொண்டேயிருந்தால்
எப்படியிருக்கும்? இன்னும் சில பேர் இருக்கிறார்கள் படத்தில் பாடல் வந்தவுடன் உடனே
தங்களது செல்போனில் அதை படம் பிடிப்பார்கள், அன்றே YouTubeல் போடுவதற்கு! அதை தியேட்டர்காரன் பார்த்து விட்டால் பஞ்சாயத்து முடிய 15 நிமிடமாவது ஆகும்.
மல்டிப்லெக்ஸ் திரையரங்குகளில் இந்தப் பிரச்சனைகள் பெரும்பாலும்
இருக்காது. ஆனால் முதல் பத்தியில் சொன்ன ‘தியேட்டர் சுகங்களும்’ இருக்காது.
இரண்டாம் தலைவலி பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டே இருக்கும்
எருமைகள்!
தியேட்டரில் இருக்கும் போது ஒரு வார்த்தை கூட யாருடனும் பேசக்கூடாது
என்று நான் சொல்லவில்லை. ஆனால் விடாமல் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வதும், நக்கல் அடித்துக்கொள்வதும்,
வரிக்கு வரிக்கு “ஐயோ என் காசு போச்சே” ரீதியான கமெண்ட் அடிப்பதும் தாம் தப்பு. இதைக்
கேளுங்கள். “யுத்தம் செய்” இரவுக்காட்சி. நானும் என் நண்பனும் சென்றிருந்தோம். எங்கள்
அருகில் ஒரு ஐ.டி கணவன் மனைவி. முதலில் மனைவி சொல்கிறாள், “என்ன வசனமே இல்லபோல இந்தப்
படத்துல” அதற்கு கணவன் “250ரூ குடுத்து வந்திருக்கோம்; படத்துல ஒரு மியூசிக் இல்ல,
பாட்டு இல்ல… ஹும்ம்… ‘மை நேம் இஸ் ஷீலா, ஷீலா கி ஜவானி...’ ஆம்! முன்னால் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
பக்கத்தில் நாங்களும் இன்னும் பலரும் இருக்கிறோம், இந்தத் தம்பதிகள் தங்களுக்குள்ளே
பேசிக்கொண்டுவிட்டு, பாட்டும் பாடிக்கொள்கிறார்கள். அடங்கோ, இப்படியெல்லாம் உங்கள படம்
பாக்கச் சொல்லி யார் கெஞ்சுனது? இதெல்லாம் ஓவரா இல்ல?
இதே போல் இன்னொரு சம்பவம் ஒஸ்தி படம் பார்க்க போன போது. ஒரு
பையன் – பொண்ணு. ஏதோ பீட்சில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது போல் தியேட்டரில் அவரவர்
பக்கம் திரும்பிக்கொண்டு பேசிக்கொண்டேயிருந்தார்கள். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில்
பையனுகு போன் வர, அவன் எழுந்து வெளியில் போய் விட்டான். அப்போது தான் பொண்ணு படம் பார்க்கவே
ஆரம்பித்தது. ஒரு கால் மணி நேரம் கழித்து பையன் வர, அந்தப் பெண் சட்டென எழுந்து சத்தமாக
“நல்ல படத்துக்கு கூட்டிடு வந்த, நீயே முழுசா பாரு. என்னால அஞ்சு நிமிஷம் கூட இனிமே
பாக்க முடியாது” என்று வெளியே போய்விட்டாள். குடுத்த காசிற்காக பையன் மட்டும் அமர்ந்து
படம் பார்த்தான். இண்டர்வலுக்குப் பிறகு அவனையும் காணவில்லை!
மூன்றாவது மிகப்பெரிய தலைவலி தியேட்டரில் தூங்கும் கிராதகர்கள்!
வெளியில் வெயிலில் காய்வதற்கு வேலை ஆகும் வரை ஒரு படத்தில்
போய் உட்கார்ந்திருக்கலாம் என்று பலர் தியேட்டருக்கு வருவார்கள். அப்படி வருவதில் தவறில்லை
ஆனால் வந்தவர்கள் தியேட்டரில் தூங்குகிறார்கள். அப்படி தூங்குவது கூட தவறில்லை. குறட்டை?
பல முறை தியேட்டரில் குறட்டை சத்தத்தைக் கேட்டு நான் வெறுப்பாகியிருக்கிறேன், அதுவும்
கடந்த ஆண்டு இங்கு பெங்களூருவில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் என்னை ஒருவர் மிகவும்
சோதித்துவிட்டார். கொஞ்சம் பருமனான அவரால் மதிய வேளையில் எந்தப் படமுமே என்னால் நிம்மதியாகப்
பார்க்க முடியவில்லை. படம் ஆரம்பித்து கொஞ்சம் தாமதமாகத்தான் உள்ளே வருவார். அவருக்கு
இடம் பிடித்து வைக்க ஒரு நண்பர் வேறு. “இதோ வந்துட்டேன்” டைப் வசனமொன்றை பெறிய சிரிப்புடன்
கத்திக்கொண்டே வந்தமர்கிறவர் முதலில் “ப்போக்,
ப்போக்” என்று ஏப்பத்தில் ஆரம்பிப்பார். அவர் என்ன சாப்பிட்டார் என்பது தியேட்டருக்கே
தெரியும். அப்புறம் ஒரே கொட்டாவிச் சத்தமாகக் கேட்கும் அதுவும் எப்படி? DTS எஃபெக்ட்டில்!
“வ்ஆஆஆவ்…” அதை எப்படி எழுத்தில் கொண்டு வருவது என்று தெரியவில்லை. பின் சரியாக கால்
மணிநேரத்தில் மிருகத்தனமான கொறட்டை சத்தம் கேட்கும். யப்பா சாமி “ரோட் ரோலர்” தோற்றுவிடும்.
அப்படி ஒரு சத்தம். பின் யாரவது ஒருவர் அவரை “Whats this guy doing in a theatre?”
என்று சொல்லிக்கொண்டே தட்டி எழுப்பிவிட, அசிங்கமாக சிரித்துக்கொண்டே படம் பார்க்க ஆரம்பிப்பார்
நம்மாள். என்ன கொடுமையடா இது?
நான்காவது தலைவலி சிறுவர்களை படங்களுக்கு (சம்பந்தமில்லாத)
அழைத்து வரும் மங்குனிகள்
இந்தக்கால சிறுவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. பிஞ்சில்
பழுத்த பதறுகளாய் தான் இருக்கிறார்கள் பலர். அதுவும் பெங்களூரில் கேட்கவே வேண்டியதில்லை.
தியேட்டரில் வந்து அமர்ந்த உடன் “பாப்கார்ன்” என்று ஆரம்புத்து, அது கையில் கிடைத்தவுடன்,
“எப்போ வீட்டுக்கு போறோம்” என்று ஆரம்பித்துவிடும். நாம் ‘என்னடா இது டிஸ்டர்பன்ஸ்’
என்று திரும்பிப் பார்த்தால் “Uncle பாக்குறாரு பாரு, உன்ன அடிக்க போறாரு” என்று நம்மை
வில்லன் ஆக்குவார்கள் பெற்றோர். “என்னயவே அடிப்பியா நீ” என்கிற ரீதியில் பின்னாடி நின்று
கொண்டு நாம் உட்கார்ந்திருக்கும் சேரை ஆட்டிக் கொண்டேயிருக்கும் அந்த பயபக்கி. பின்னாலிருந்து
என் முடியைப் பிடித்து இழுத்தவனெல்லாம் உண்டு. மடியில் சிறுவர்களை உட்கார வைத்து படம்
பார்க்கும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று கவனிப்பதே இல்லை.
அவர்கள் சுவாரஸ்யமாக படம் பார்த்துகொண்டிருப்பார்கள்; பையன் நாம் உட்கார்ந்திருக்கும்
சீட்டை விடாமல் தன் காலால் தட்டிக்கொண்டேயிருப்பான். பல முறை தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது
சிறுவர்கள் இருட்டில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
நடந்து கொண்டிருக்கும் சிறுவன் நிச்சயம் இருட்டில் கீழே விழுவான். யாரவது தூக்கிவிடுவார்கள்.
அவன் அழுவான். பிறகு தான் “ஓ விழுந்தது நம்ம பையன் தான்” என்று அப்பனும் வந்து தூக்கிக்
கொண்டு போவான். “நிம்மதியா படம் பாக்கவிடுறியா, சனியன்” என்று அம்மா ஒரு அரை வைப்பாள்
(நம்புங்கள், இதே டயலாக்கை நான் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என்று நான்கு பாஷைகளில்
கேட்டிருக்கிறேன்). அவன் இன்னும் சத்தமாக வாயைத் திறப்பான். படம் திரையில் பார்க்க
முடியாது, இந்தக் குடும்பத்தில் தான் பார்க்க வேண்டும்.
புதுப்பேட்டை படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது, தனுஷ்
சினேகாவை ஏதோ செய்ய சினேகா கத்த, என் பின்னே ஒரு சிறுவன், “அவங்க என்ன பண்றாங்க” என்று
கேட்டுக்கொண்டேயிருந்தான். அதே போல் “3” படத்திற்கு போய் உட்கார்ந்தவுடன் என் பின்னே
அமர்ந்திருந்த சிறுவன் ஒருவன் “கொலவெறி பாட்டு எப்போ வரும்” என்று கேட்க ஆரம்பித்தவன்
தான். பாட்டு ஆரம்பித்தவரைக்கும் கேடுக்கொண்டேயிருந்தான். பாட்டு முடிந்தவுடன், “நல்லாவேயில்ல”
என்று சொல்லிவிட்டான்.
படம் பார்க்கப்பிடிக்கவில்லையென்றால் தன் அப்பாவின் செல்போனை
வாங்கி அதில் தனக்குப் பிடித்த பாடலை போட்டுவிடும் விவரக்கார சிறுவர்களும் உண்டு!
இவை ஒரு சில தலைவலிகள் தான். இன்னும் ஏராளம் இருக்கிறது.
ஆனால் இப்போதைக்கு இது போதும் என்று என் புலம்பலை நிறுத்திக்கொள்கிறேன்!
தொடரும்!
8 comments
ரொம்ப அவஸ்தபட்டுடீங்க போல. நல்ல பதிவு.
ReplyDeleteநண்பா...அருமை..
ReplyDeleteசமீப காலமாக செல்போன் அம்பானிகள்
தொல்லைதான் தாங்கல...
தொடருங்க.. தொடருங்க.. அட்டகாசமான பதிவு! அனுபவித்த வலிகள் நமக்கும்தான் :(
ReplyDeleteஇலங்கைத் தியேட்டர்களில் பெரும்பாலும் ஆங்கிலப் படஙகளுக்கு இந்தப் பிரச்சினை குறைவு. வருபவை எல்லாம் ஹை-ஃபை இங்கிலீஸ்கார குடும்பங்கள் என்பதால் இவை குறைவு. சிறுவர்களின், லவ்ஸுக்களின் அலப்பறை மட்டும் கொஞ்சம் அதிகம் இருக்கும். இங்கு அனேகமானோர் (என்னையும் சேர்த்து) டீவிடி/டவுன்லோட் தான்.
ReplyDeleteஎனக்குத் தெரிந்து நீங்கள் சொன்னவற்றில் அனேகமானவை தமிழ்ப்படங்களுக்கு சென்றால் காணக்கிடைக்கும். அனுபவங்கள் நமக்கும் உண்டு.
தொடரட்டும்.
முன்ன காலேஜ் படிக்கிற காலத்துல வெறி தனமா தியேட்டர் போய் சினிமா பார்த்துக்கிட்டு இருந்தேன்..எல்லாம் தரை டிக்கெட் தான்.. அந்த காலத்துல செல் போன் தொல்லை அவ்வளவா இல்லை, அதனால முத தலைவலி அனுபவிச்சது இல்லை.
ReplyDeleteரெண்டாம் மற்றும் முன்றாம் தலைவலி நான் அனுபவிச்சு இருக்கேன், அடுத்தவங்களுக்கு நிறைய வாட்டி ஏற்படுத்தியும் இருக்கேன்..
படம் மொக்கையா இருந்தா நம்ப மக்கள் இந்த மாதிரி அராஜகம் பண்ணுவாங்க.. நல்ல படம்னா ரொம்ப அமைதியாக பார்ப்பாங்க..
நான்காவது தலைவலி அனுபவிச்சது இல்லை...
தொடருங்க.. தொடருங்க...
வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி நண்பர்களே! தியேட்டர் தலைவலி உலகமயமாக்கப்பட்ட விஷயம், எனவே அனைவருக்கும் பல அனுபவங்கள் இருக்கும் என்பது தெரிந்ததே :-)
ReplyDeleteரொம்ப பாதிக்க பட்டு இருக்கீங்க போல..நன்றாக இருக்கிறது உங்களின் வர்ணனை...
ReplyDeleteWhat about the kasamusa couples who distract us? :P
ReplyDeleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...