என் தமிழ் சினிமா இன்று - 01

1:55:00 AM


சென்ற பதிவில் சொன்னது போல் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான இயக்குனர்களின் தற்போதைய படங்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் ஏற்கனவே நம்பப்பட்டு, ‘பிரம்மா’, ‘பிதாமகர்’, ‘பீஷ்மர்’ போன்ற அந்தஸ்துகள் பெற்று தற்போதும் படம் இயக்கிக் கொண்டிருக்கும்
 பெரும் இயக்குனர்களை ஒரு பார்வை பார்க்கலாம்.

முதலில் இயக்குனர் இமயம் பாரதிராஜா

6 தேசிய விருதுகள், 2 தமிழக அரசு விருதுகள் உட்பட இன்னும் எண்ணிலடங்கா விருதுகளுக்கும் பாராட்டுகளுக்கும் சொந்தக்காரர்; தனக்கு கொடுக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை ஈழத்திற்காக திருப்பித் தந்த தன்மானத் தமிழன். தேனி அல்லி நகரத்தில் பால்பாண்டியாகப் பிறந்து கோடம்பாக்கத்தையே ஒரு உலுக்கு உலுக்கிய உண்மையான படைப்பாளி. பாக்கியராஜ், பாண்டியராஜன், மணிவண்ணன், கே.எஸ்.ரவிகுமார் போன்ற இயக்குனர்களையும், ஸ்ரீதேவி, கார்த்திக், பாண்டியன், ரேகா, ரோகினி, ராதா, சுகன்யா, ராதிகா போன்ற பல்வேறு நடிகர் நடிகைகளையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர். 16 வயதினிலே இவரது முதல் படம். சப்பாணி மேல் பரிதாபம், மயில் மேல் காதல், பரட்டை மேல் கோபம், அந்த பட்டிணத்து டாக்டர் மேல் வெறுப்பு வராத ரசிகன் அன்றும் இன்றும் இல்லை (சாக்லேட் பையன் கமல்ஹாசனை கோவணத்தைக் கட்டி அலையவிட்டதால் இந்த படத்தை யாரும் வாங்க முன்வராத நிலையில், பாரதிராஜாவின் மீதும் படத்தின் கதை மீதும் நம்பிக்கை வைத்து வெளியிட்டவர் விநியோகிஸ்தர் “காதர் மொய்தீன்” என்ற நம் ராஜ்கிரண் (நன்றி: தெரிந்த சினிமா தெரியாத விஷயம்)). என் இனிய தமிழ் மக்களே என்று 16 வயதினிலேயில் (1977) தன் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்த பாரதிராஜா சிகப்பு ரோஜாக்கள் (1978), நிழல்கள் (1980), அலைகள் ஓய்வதில்லை (1981), ஒரு கைதியின் டைரி (1984), முதல் மரியாதை (1985), கடலோரக் கவிதைகள் (1987), வேதம் புதிது (1987) கிழக்கு சீமையிலே (1993), கருத்தம்மா (1994) என்று தமிழ் சினிமா பத்திரமாகப் பாதுகாக்க பல பொக்கிஷங்களைக் கொடுத்தவர். 

மேற்சொன்ன படங்களுக்குப் பிறகு இவர் எடுத்த படங்கள்தான் இப்போது விஷயமே. கண்களால் கைது செய் (2004 – இந்தப் படம் Thomas Crown Affair என்ற படத்தின் தழுவல்), ஈரநிலம் (2003), கடல் பூக்கள் (2001), தாஜ் மஹால் (1999) ஆகிய படங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தியேட்டரில் பார்த்திருந்தால் கூட உங்களை நான் உங்களைத் “தியாகி” என்பேன். இத்தனைக்கும் கடல் பூக்கள் திரைக்கதைக்காக தேசிய விருது வாங்கியது. இடையில் அந்திமந்தாரை (1996) என்றொரு படம் வந்தது. வந்தது, அதுவும் தேசியவிருது வாங்கியது. அது மட்டும் தான் தெரியும். இதுவரை கே டிவியில் கூட இந்தப் படத்தை நான் பார்த்ததில்லை. பாரதிராஜாவின் கடைசிப் படம் பொம்மலாட்டம் (2008). பலரும் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன், சரியான நேரத்தில் வந்திருந்தால் நல்ல வசூலைத் தந்திருக்கும் இந்தப் படம். இவரது அடுத்த படம் “அன்னக்கொடியும் கொடிவீரனும்”. கனவுப் படம், இன்னும் பத்து வருடங்களுக்கு பேர் சொல்லப் போகும் படம் என்று பாரதிராஜா சொன்னதால், “ஆஹா, அற்புதம் அற்புதம்” என்று ஆரவாரிப்பதாக நடிக்கிறது தமிழ் சினிமா. ஆம், இந்த “ஆஹா ஓஹோ” எல்லாம் இந்த மூத்த கலைஞனை பெருமை படுத்தத்தானே தவிர அவரது அடுத்த படத்தை எதிர்பார்த்து அல்ல. உண்மையைச் சொல்லுங்கள். உங்களில் எத்தனை பேர் அன்னக்கொடியையும் கொடிவீரனையும் எதிர்பார்த்திருக்கிறீர்கள்? போன வாரம் வெளியான சிம்புவின் “வாலு” டீஸரைப் பார்த்து அந்தப் படத்தை எதிர்பாக்கும் கூட்டத்தைவிட இமயத்தின் படத்திற்கு ஆதரவு குறைவு என்பது எல்லோருக்கும் தெரியும், அவரது காலம் முடிந்து விட்டது. அமீருடன் கருத்து மோதல், இனியாவிற்கு பதில் வேறொரு நடிகை, ஃபெப்சி பிரச்சனையில் தீர்வு அது இது என்று அன்னக்கொடியும் கொடிவீரனும் படம் சரியான நேரத்தில் வெளியாகி, அது திருப்தியாக இருந்தால் அது நிச்சயம் தமிழ் சினிமா சந்திக்கும் ஒரு “மெடிக்கல் மிராக்கில்” ஆகத்தான் இருக்கமுடியும் என்பது தான் கசப்பான உண்மை,

இயக்குனர் சிகரம் பாலச்சந்தர்


என்ன சொல்ல இந்த பிரம்மாவைப் பற்றி? இவரை பற்றிப் பேசும் தகுதி கூட இன்னும் எனக்கு வரவில்லை என்று நான் நினைக்கிறேன். மேடை நாடகங்களான மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம், நீர்குமிழி போன்றவட்ரில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்துவிட்டு பின் அதன் மூலமாகவே சினிமாவிற்கு வந்து அதன் இலக்கணத்தை மாற்றி எழுதிய ஜாம்பவான். சினிமாவின் தந்தை தாதாசாஹேப் பால்கேவின் பெயரால் கொடுக்கப்படும் உயரிய விருதும், பத்மஸ்ரீ, 9 தேசிய விருதுகள் பெற்ற சினிமா மேதை. சின்னத்திரையிலும் தன் தடத்தைப் பதித்த உண்மையான கிரியேட்டர். ரஜினி, கமலில் ஆரம்பித்து பிரகாஷ்ரஜ், விவேக் என்று பல நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர். கமல், விசு, வசந்த், ஹரி, செல்வராகவன், சமுத்திரகணி என்று மூன்று தலைமுறை இயக்குனர்களுக்கு சினிமா கற்றுக் கொடுத்தவர். இவரது நிலை இன்றென்ன? இவரது கடைசிப் படம் பொய் (2006). இப்படி ஒரு படம் வந்தது எத்தனை பேருக்குத் தெரியும்? அதற்கு முந்தைய படம் பார்தாலே பரவசம் (2001). அதற்கு முன் கல்கி (1996)! அதற்கு முன் வந்த டூயட் (1994) பிரகாஷ்ராஜ் என்ற அருமையான நடிகனை, உண்மையான சினிமா காதலனை அறிமுகப்படுத்தியது, பாடல்களுக்காக பேசப்பட்டது. அத்தோடு சரி. இமயம் ஓய்வெடுக்கத் தொடங்கி பல நாட்கள் ஆகிவிட்டது. அடுத்து பாலச்சந்தர் படம் எடுப்பார் என்று நான் நினைக்க வில்லை. ஏன் படம் தயாரிப்பார் என்று கூட நம்பவில்லை! ஏனென்றால் சிந்து பைரவி, ரோஜா, முத்து, சாமி, ஐயா போன்ற படங்களைக் கொடுத்த கவிதாயா நிறுவனம் குசேலனுக்குப் பிறகு தயாரித்து பல வருடங்களாக ஒரு படம் தூங்கிக் கொண்டிருக்கிறது அந்தப் படம் ஜீவன் நடிப்பில் எடுக்கப்பட்ட கிருஷ்ணலீலை!

ஒளி ஓவியர் பாலுமகேந்திரா

ஒளிப்பதிவிலிருந்து சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்த முதல் படமே இவருக்கு தேசிய விருதை வாங்கித் தந்தது. அந்தப் படம் கமல், ஷோபா நடித்த கன்னடப் படமான கோகிலா (1977). இந்தப் தவிர ஒளிப்பதிவு, இயக்கம் சேர்த்து இதுவரை மொத்தம் 5 விருதுகள். பாலா, வெற்றிமாறன், சீனு ராமசாமி, ராம் ஆகிய இன்றைய சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களின் குரு. முதல் நேரடி தமிழ் படமான அழியாத கோலங்களில் (1979) ஆரம்பித்து மூடுபனி (1980), மூன்றாம் பிறை (1983), ரெட்டைவால் குருவி (1987), வீடு (1988), மறுபடியும் (1993) ,சதிலீலாவதி (1995) என்று பல நல்ல படங்களைத் தந்தவரது இவரது கடைசிப் படம் அது ஒரு கனா காலம் (2005). அதற்கு முன் ஜுலீ கணபதி (2003) (இந்தப் படம் Misery என்னும் ஆங்கிலப் படத்தின் தழுவல்) அதற்கு முன் ராமன் அப்துல்லா (1997)! நம்ப முடிகிறதா? வீடு, மூன்றாம் பிறை, இவை போன்ற படைப்புகளை இனி கொடுப்பாரா? தெரியாது!

இந்த மூவர் தவிர தமிழ் சினிமா ஒரு காலத்தில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய மேலும் இருவர் இன்று தாங்கள் Out-dated ஆகிப் போனதை ஒத்துக்கொண்டு ஒதுங்கிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள்,

பாக்கியராஜ் – பாரதிராஜாவின் சூப்பர் ஹிட் படங்களான கிழக்கே போகும் ரெயில், டிக் டிக் டிக், ஒரு கைதியின் டைரி போன்ற படங்களின் எழுத்தாளராக தன்னை நிரூபித்துவிட்டு சுவறில்லா சித்திரங்கள் (1979) மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர். அதன் பிறகு விடியும் வரை காத்திரு (1981), இன்று போய் நாளை வா (1981), அந்த ஏழு நாட்கள் (1981), தூரல் நின்னு போச்சு (1982), முந்தானை முடிச்சு (1983), தாவணி கனவுகள் (1983), சின்ன வீடு (1985), இது நம்ம ஆளு (1988), சுந்தர காண்டம் (1990), ராசுகுட்டி (1992), வீட்ல விஷேசங்க (1994)… எழுத எழுத ஆர்வமாக இருக்கிறது. நான் பாக்கியராஜின் தீவிர ரசிகன். அவரது கதை சொல்லும் திறனுக்கு நான் உட்பட பல ரசிகர்கள் நிச்சியம் உண்டு. 1981 ஆம் ஆண்டு மட்டும் 5 படங்காள் இவரது இயக்கத்தில் வெளிவந்துள்ளன. அப்படிப்பட்ட திரைக்கதை ஜாம்பவானான இவரது கடைசிப் படம், சித்து +2 (2010), பாரிஜாதம் (2006), சொக்கத்தங்கம் (2003 – Return of the Dragon with the Lion என்று இந்தப் படத்திற்கு விளம்பரம் தந்தார்கள்) வேட்டிய மடிச்சுக்கட்டு (1998), ஞானபழம் (1996). நிச்சயம் அடுத்து படம் இயக்குவார், ஆனால் அது வெற்றி பெறுமா என்பது தான் சந்தேகம்

T.ராஜேந்தர் – ஒரு தலை ராகம் (1980) இவரது முதல் படம். இவரது அடுத்த படம் ஒரு தலை காதலாம்! சென்டிமென்ட் சப்ஜெக்ட், காதலியை டூயட்டில் கூட தொடாத கண்ணியமான காட்சியமைப்புகள், பிரம்மாண்ட செட்கள், திறமையான எதுகை மோனை வசனங்கள் என்று படங்கள் தந்த இவரது கடைசிப் படம் வீராசாமி (2007) அதற்கு முன் காதல் அழிவதில்லை (2002), மோனிஷா என் மோனாலிசா (2011). (இவரைப் போலவே அதீத திறமையிருந்தும் தன் வாயாலேயே சீக்கிரம் கெடக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பது இவரது மகன் சிலம்பரசன் (எ) சிம்பு (எ), STR!)

நான் அறிந்த வரை இந்த ஐந்து பேர். இந்த லிஸ்ட் மிக நீளம் என்பது தெரிந்ததே! இவர்கள் தவிர நியாபகத்திற்கு வருபவர்கள் P. வாசு (கடைசி படங்கள் - புலி வேஷம், குசேலன், தொட்டால் பூ மலரும்), S.A.சந்திரசேகர் (கடைசி படங்கள் - பந்தயம், சுக்ரன்), R.V.உதயகுமார் (கடைசி படங்கள் - கற்க கசடர, சுபாஷ்), R.K. செல்வமணி (கடைசி படங்கள் - குற்றபத்திரிக்கை, ராஜஸ்தான்), பார்த்திபன் (கடைசி படங்கள்: வித்தகன், பச்சக்குதிர). இன்னும் பலர் இருக்கிறார்கள் தங்களது சாதனைகளை தாங்களே மெல்ல மெல்ல அழித்துக்கொண்டு.

S.P.முத்துராமன் 1992ல் பாண்டியனோடு நிறுத்திக்கொண்டது இவரது புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. இவரைப் போன்ற இன்னும் சில புத்திசாலிகள் விசு, மணிவண்ணன், கங்கை அமரன், பாண்டியராஜன்.

சரியான நேரத்தில் ஒதுங்கிக் கொள்ளாதவர்களை தமிழ் சினிமா தோற்றவர்கள் லிஸ்டில் ஏற்றி விடும். வாழ்ந்து கெட்ட ஒரு ஜமீன் போலத் தான் மேற்சொன்ன இயக்குனர்களை தமிழ் சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறது!

முன்பே சொன்னது போல இந்தத் தொடர் என் தன்னிப்பட கருத்துகள் தான். யார் மனதையும் புண்படுத்த அல்ல.

கொடுக்கப்பட்ட தகவல்களில் தவறு இருந்தால் மன்னித்து, சரியான தகவல்களை தெரியப்படுத்தவும். எதை நோக்கி இந்தத் தொடர் செல்கிறது என்று எனக்கே தெரியவில்லை. கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவிற்கு இப்போது அரைக்கம்ப கொடியேற்ற வேண்டியளவு தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணங்களை முடிந்தவரை அலச முயற்சிக்கிறேன். தொடரை மேலும் சிறப்பானதாக்க வழிகள், அறிவுரைகள் இருந்தால் சொல்லவும்


தொடரும்!

You Might Also Like

12 comments

  1. நல்ல அலசல்.., சென்ற சனிகிழமை "சந்தியாராகம்" திரையிடலில் பாலு மகேந்திரா அவர்கள் பேசினார்.., மிக குறைந்த பட்ஜெட்டில் 5-டி கேமராவில் ஒரு படம் இயக்கி கொண்டிருப்பதாக கூறினார்.., அதுமட்டுமல்லாமல் உயிருடன் இருக்கும் வரை படம் எடுத்துக்கொண்டிருப்பேன் என்றும் கூறினார்..,

    ReplyDelete
  2. @...αηαη∂....: நானும் கேள்விப்பட்டேன் நண்பரே, சசிகுமாரின் a company productions அந்தப் படத்தைத் தயாரிக்கிறது. மொத்த பட்ஜெட் 90 லட்சம்! பாலுமகேந்திரா அடுத்து படமே இயக்கக் கூடாது என்று நான் சொல்லவே இல்லை. வீடு, மூன்றாம் பிறை போன்ற படங்களை இயக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன்...

    ReplyDelete
  3. நானும் ஒரு தகவலுக்காக தான் சொன்னேன்..,

    //வீடு, மூன்றாம் பிறை போன்ற படங்களை இயக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன்...//

    எல்லாருக்கும் இதே ஆச தான்.. :)))

    ReplyDelete
  4. சூப்பர் தொடர் நண்பா.. படிக்கறதுக்கு ரொம்பவே சுவாரஸ்யமா இருக்கு!!

    "அன்னக்கொடியும் கொடிவீரனும்" படத்துக்கு எதிர்பார்த்திருக்கிறதா பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன்.. ஆனா உண்மையா "ஒரு தலைக் காதல்" படத்துக்கு ஃபுல்லா வெயிட் பண்றேன்!!!!

    ReplyDelete
  5. இவர்கள் ஒதுங்கி கொண்டார்களா அல்லது படவாய்ப்பு இல்லையா?
    ஏமாந்த தயாரிப்பாளர் கிடைத்தால் நிச்சயம் எதையாவது எடுத்து விடுகிறார்கள்.
    பாரதிராஜாவுக்கு மட்டும் இன்னும் தயாரிப்பாளர்கள் கிடைக்கிறார்கள் (அதில் வெளிநாடு வாழ் தமிழர்கள் இவர் படங்களை பார்த்து ஆசைபட்டு வருகிறார்கள்.எஸ்.எ .சந்திரசேகருக்கு விஜய் கால் சீட் கேட்கும் யாரவது இவரை ஐஸ் வைத்தால் கிடைக்கும் என்று விழுந்துவிடுகிறார்கள்.

    ReplyDelete
  6. பாஸ்,
    ரொம்ப நல்லா இருக்கு தொடர்...
    மேல சொன்ன நிறைய டைரக்டர்கள் தற்கால ரசிகனின் ரசனை மாற்றத்துக்கு தங்களை மாற்றி கொள்ளாமல் தங்கள் பழைய ஸ்டைலில் படம் எடுத்ததால் ஜெய்க்க முடியாமல் போனது.
    இந்த லிஸ்ட்ல மணிரத்னம், மற்றும் ஷங்கர் வராமல் போனதற்கு முக்கிய காரணம் அது தான்.
    எனக்கு டி.ஆர் படத்து மேல இருக்குற நம்பிக்கை கூட பாரதிராஜா படத்து மேல இல்லை.
    பாரதிராஜாவோட அழிவு அவர் மகனை வச்சு எடுத்த "தாஜ்மஹால்" படத்துல இருந்து ஆரம்பிச்சது.
    -இவன் “தியாகி"

    ReplyDelete
  7. Nanbanae, ithu oru nalla alsal. Naan Bakayaraj oda miga perya fan... Even I like Parijatham movie but not the last one.
    --Velu

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. வழக்கம் போல அசத்தல்.. ஆனா மோனிஷா என் மோனலிசா 2011 இல்ல 1999 பாஸ் ...
    மேல் அழித்த பின்னூட்டங்களுக்காக மன்னிக்கவும் பேபி....

    ReplyDelete
  11. மணிரத்னம் R சுந்தர்ராஜன் என்ற சிறந்த இயகுனர்கள் பற்றி எழுதவில்லை.

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...