JNC யுடன் வைகை அணையில் இளம்பிறை

1:34:00 PM

இளம்பிறையின் சார்பாக விடுதிகளில், ஆசிரமங்களில் தங்கிப் படிக்கும் சிறுவர்களை இன்பச் சுற்றுலா ஒன்றிற்கு  ஏற்பாடு செய்து வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் ஆசையாக இருந்தது.  போடி JNC மலைவாழ் மாணவர் விடுதி மாணவ-மாணவிகளை தேனியிலுள்ள வைகை அணைக்கு அழைத்துச் சென்றதன் மூலம் எங்கள் ஆசை நிறைவேறியிருக்கிறது. முதலில் JNC மலைவாழ் மாணவர் விடுதியைப்பற்றி சொல்லவேண்டும். தேனி மாவட்டத்தில் உள்ள சிறுநகரமான போடிநாயக்கனூரில் அமைந்துள்ளது இந்த விடுதி. போடி மக்களின் பிரதான தொழில்களாக விவசாயமே திகழ்கிறது.  மலைகள்  சூழ்ந்த  குளிர் பிரதேசமான இங்கு ஏலைக்காய், மிளகு, டீ போன்றவை பெருமளவில் விளைவிக்கப்படுகிறது. போடியைச் சுற்றியுள்ள மலைப்பிரதேசங்களில் இன்னும் பல ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  சாலை, மின்சாரம், மருத்துவம் போன்ற அத்தியாவசிய வசதிகள் எதுவும் இல்லாத இடத்தில் மக்கள் கூடி வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஏலைக்காய்,  டீ எஸ்டேட்களில் கூலி வேலைக்குச் செல்பவர்கள். சிறு வயதிலேயே  குடிப்பழக்கம்,  போதைப்பழக்கம்,  பால்ய விவாகம், ஒரு தம்பதிக்கு  சராசரியாக 10-12 என்று குழந்தைகள் என்று இன்றைய நவீன, முறையான கலாச்சார சூழழுக்கு கொஞ்சமும் பொருத்தமேமில்லாத ஒரு முறையற்ற, அடிப்படை தேவைகளே இல்லாத ஒரு வாழ்கையையே அந்த  மக்கள்  வாழ்ந்து வருகின்றனர்.

இத்தகைய சூழழில் பிறந்து வளரும் குழந்தைகளும் இவர்களைப் போல் ஆகிவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில், திருச்சியயைச் சேர்ந்த திரு பென்ஜமின் என்பவரும் அவரது மனைவியாரும் போடியில் தங்கள் சொந்தப்  பணத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, மலைவாழ் மக்களின் குழந்தைகள் சுமார் 35 பேருக்கு Jesus New Creation Ministry என்ற பெயரில் மாணவர் விடுதி ஒன்றைத் தொடங்கி இலவச கல்வி, உணவு,  இருப்பிடம் அளித்து வருகின்றனர். ஆதரவற்ற, கைவிடப்பட்ட குழந்தைககள் சிலரும் இதில் அடக்கம். 3 வயது முதல் அதிகபட்சம் 15 வரையிலான சிறுவர்-சிறுமிகள் இங்கு தங்கிப் படிக்கின்றனர். கி்றிஸ்துவ தம்பதிகளான இவர்கள் இது போல் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்குச் செய்யும் உதவி, கடவுளுக்கு தாங்கள் நேரடியாகச் செய்யும் சேவவை என்று நம்புகின்றனர். சத்தான அதே சமயம் அளவான சாப்பாடு இந்தக் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. கடவுள் பக்தி, ஒழுக்கம், கட்டுப்பபாடு போன்றவற்றை மிகுந்த அன்போடு  கற்றுத்தருகின்றனர். குழந்தைகளும் ஒருவருக்கொருவர்  மிகுந்த பாசத்துடனும் 'அங்கிள் - ஆன்ட்டி'  மேல் அதிக மரியாதையுடனும் இருக்கின்றனர்.

மலைவாழ் மக்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு செல்வதே பெரும் கஷ்டம் என்று இந்தத் தம்பதியினர் கூறுகின்றனர்.  வெளியுலகம் அதிகம் தெரியாத இம்மக்கள் யாரோ இருவர் வந்து இலவச கல்வி கற்றுத் தருகிறோம்  என்று தங்கள் குழந்தைகளைக் கேட்டால் தந்துவிடுவார்களா?  மிகுந்த  போராட்டத்திற்குப் பிறகும்,  நிபந்தனைகளுக்கு உட்பட்ட பிறகும்தான் இவர்களால் குழந்தைகளை அழைத்து வர முடிகிறதாம்.  தினமும் காலையில் எழுந்தவுடன் கடவுள் வழிபாட்டுடன் ஒரு முறையான வாழ்க்கை முறையை  இந்தக் குழந்தைகளுக்கு கற்றுத் தருகின்றனர். திரு பென்ஜமின் அவர்கள்   திருச்சியில் பாதிரியாராக சேவை புரிந்து வருகிறார்.  அவரது மனைவி இங்கு போடியில் இந்தக் குழந்தைகளுடன் தங்கியிருக்கிறார். இந்தத் தம்பதிக்கு  இரண்டு மகன்கள். இருவரும் திருச்சியில் தங்கிப் படிக்கின்றனர். விடுமுறையானால் தாயைக்காண விடுதிக்கு வருகின்றனர்.  பெற்ற குழந்தைகளளைப் பிரிந்து அடுத்தவர் குழந்தைகளுக்காக பாடுபடும் இந்தத்  தம்பதியினர் எங்களுக்கு இன்னமும் ஒரு ஆச்சரியமாகவே விளங்குகின்றனர்.

இளம்பிறைக்கு ஆரம்பம் முதலே JNC யுடன் தொடர்பு இருந்து வருகிறது. சொல்லப்போனால் நாங்கள் முதன்முதலில் உதவி செய்த இடம் JNC தான். இந்த விடுதியிலிருந்து சுமார் 15 மாணவர்கள் போடி 1st வார்டு அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். எனது அம்மாவும் இதே பள்ளியில் தான் வேலை செய்வதால்தான் எங்களால் இந்த விடுதியைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. மாணவர்களிடம் விசாரித்து பார்த்த போது இவர்கள் சொல்வது எதுவும் பொய்யில்லை என்பதும் உறுதியானது. முதலில் தங்களது சொந்த பணத்தை செலவழித்து வந்தவர்கள் பிறகு சமாளிக்க முடியாமல் பிறர் உதவியயை நாடினர். அப்படித் தான் இளம்பிறையின் மூலம் நாங்கள் செய்ய முன்வந்த சிறு உதவியையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அரசிடமிருந்து  நிரந்தர உதவி பெறலாம் என்று நினைத்து அணுகியபோது அதிலுள்ள  சிக்கலான விதிமுறைகள் இவர்களை சுதந்திரமாக செயல்பட தடைசெய்யும்  விதமாய் அமைந்துள்ளதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டு கிடைக்கும் நன்கொடை,  உதவிகள் மூலமாக இந்த விடுதியை நடத்தி வருகின்றனர். இளம்பிறை சார்பாக இந்த விடுதியின் மளிகை செல்வுகளுக்காக மாதம் ரூ2000 கொடுத்து வருகிறோம்.

நாங்கள் சென்று வந்த சுற்றுலா பற்றி இனி. வைகை அணை என்பது தேனி மாவட்டததின் பிரதாண சுற்றுலா தளம். காமராஜர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் இந்த அணையச் சுற்றி பூங்கா அமைத்து சுற்றுலாத் தளமாக  மாற்றியிருப்பதாகத் தெரிகிறது. அழகிய சோலையாக இன்றும்  பராமறிக்கப்பட்டு வரும் வைகை அணை பூங்காவின் Center of attraction யானை சறுக்குமரம் தான்.  ஒரு மிகப் பெரிய யானையின் பின்பக்கமாக ஏறி, முன் பக்கம் சறுக்கி வரும்படி அமைந்திருக்கும் இதில் குழந்தையாக இருக்கும் போது பல முறை ஏறி இறங்கி விளையாடியிருக்கிறேன். அந்த வித்யாசமான அமைப்பு என்றும் மனதை வவிட்டு அகலாது.  மற்றுமொரு குறிப்பிடத்தக்க விஷயம், தண்ணீர் குடிக்கும் அரக்கன் சிலை. இதுவும் பல வருடங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரக்கனும் பல வருடகாலமாக தொடர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டேயிருக்கிறான்

வெளியே அழைத்துச் செல்லலாம் என்று முடிவு செய்தவுடனே குழந்தைகளிடம் எங்கு செல்லலாம் என்று கேட்டோம். அவர்களுக்கு எந்த இடத்தைச் சொல்வது என்று தெரியவில்லை. தேனிக்கு அருகில் இருக்கும் குழந்தைகளுக்கான ஸ்பாட் என்று பார்த்தால் அது இரண்டே இரண்டு இடங்கள் தான். ஒன்று தேனி - பெரியகுளம் ரோட்டில் அமைந்திருக்கும் ஸேரன்ஸ் ஃபன் பார்க் மற்றொன்று வைகை டேம். ஃபன் பார்க்கில் வீடியோ கேம்ஸ் இருக்கும், பட்டாம்பூச்சி தோட்டம் இருக்கும், பெரிய திரையில் கார்ட்டூன் படம் ஓடும். வைகை அணையில் யானையின் பின்புரத்தில் ஏறி, முன் புறமாக இறங்கும் சறுக்கு மரம் இருக்கும். “எங்கு போகலாம்?” என்று கேட்டதற்கு, குழந்தைகள் அனைவரும் ஒரு சேர சொன்ன பதில் யானை சறுக்கு மரம்!

முதலில் 22ஆம் தேதி தான் செல்வதாக முடிவு செய்திருந்தோம். ஆனால் அன்று புனித வெள்ளியானதால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தேவாலயத்திற்கு செல்லவேண்டும் என்று கூறிவிட்டனர். பின்னர் 20ஆம் தேதி என்று முடிவு செய்து கேட்டபோது கொஞ்சம் பெரிய சிறுவர்களின் முகமெல்லாம் தொங்கிவிட்டது. அவர்களுக்கு இன்னமும் பரிட்சைகள் முடியவில்லையாம். உங்களை வேறு எங்காவது அழைத்துச் செல்கிறோம் என்று சொன்னதற்கு பதிலையே காணோம். சரி அவர்களை மட்டும் ஏன் வருத்தப்பட வைக்க வேண்டும் என்று இறுதியாக 23ஆம் தேதி என்று முடிவு செய்து 'வேன்' புக் செய்தோம். 23ம் வந்தது. கூடவே இடியுடன் கூடிய அடைமழையும் வந்தது. தேனியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாகவும், ப்ளானை கேன்ஸல் செய்யும் படியும் எனது அப்பா போன் செய்தார். ஹாஸ்டலுக்குப் போன் செய்து கேட்டால் சிறுவர்கள் அனைவரும் குதூகலமாகக் கிளம்பிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். ஆனது ஆகட்டும் மழை பெய்தால் சும்மாவாவது தேனியைச் சுற்றி வரலாம் என்று வேனைக் கிளப்பி ஹாஸ்டலுக்குச் சென்றோம்.

குழந்தைகள் அனைவரும் வாசலிலேயே எங்களுக்காகக் காத்திருந்தனர். நாங்கள் அங்கு சென்றதும், வணக்கம், Praise the Lord, என்று எங்களை வரவேற்றனர். ஒவ்வொருவரும் தங்களிடம் இருப்பதிலேயே சிறந்த உடையை அணிந்து ஜம்மென்று ரெடியாகியிருந்தனர். எப்படா வேனிற்குள் செல்வோம் என்றிருந்தவர்களை 'ப்ரேயர்' செய்ய 'ஆன்ட்டி' உள்ளே அழைத்தார். அவசரவசரமாக கடவுளுக்கும் எங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் வண்டியில் தங்களது இடத்தைப் பிடித்து அமர்ந்து கொண்டனர். இளம்பிறையின் சார்பாக நானும் என் அம்மாவும், JNC சார்பாக திரு பென்ஜமின் அவர்களும், அவரது மனைவியும். ஆக மொத்தம் 34 பேர் எப்படி அந்த வேனில் உட்கார்வது என்று யோசித்துக்கொண்டிருந்தோம். எந்தச் சிக்கலையும் தரவில்லை குழந்தைகள். ஆளாளுக்கு ஒருவர் மடிமீது ஒருவரை வைத்துக்கொண்டு எங்களுக்கும் அழகாக இடம் ஒதுக்கி வைத்திருந்தனர். சிலுசிலுவென்று காற்று அடிக்க சந்தோஷக்கரவெலியுடன் கிளபியது வேன்!

நாங்கள் செல்ல செல்ல சொல்லிவைத்தாற்போல் மழை குறைந்துகொண்டே வந்தது. தேனியை நெருங்கிய போது மழை விட்டிருந்தது. ஊரே வெள்ளக்கடாக இருந்தபோதும் நாங்கள் மிதந்து வைகை அணை நோக்கிப் பயணப்பட்டோம். தேனி டவுனிலிருந்து ஒரு 20 நிமிட பயணம். அவ்வளவு தான். நாங்கள் இறங்கியபோது மழை லேசாக தூறிக்கொண்டிருந்தது. வாசலில் டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றோம். லேசான தூரல், சுற்றிலும் தண்ணீர், எதிரே குளுகுளுவென பிரம்மாண்டமான, அதே சமயம் ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத பார்க். அருமையான லொக்கேஷன்.

வந்த விஷயதைப் பார்ப்போம் என்று கேமராவை கையில் எடுத்துக் கொண்டு குழந்தைகளை போட்டோ எடுக்க ஆரம்பித்தேன். யானை சறுக்கு மரத்தை நோக்கி ஓடிய சிறுவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சறுக்கி வரும் இடத்தில் பள்ளமாக இருந்ததால் குட்டை போல் தண்ணீர் தேங்கியிருந்தது :( அதையும் பொருட்படுத்தாமல், "நாங்கெல்லாம் யாரு?" என்று மூன்று சிறுவர்கள் அவசரவசரமாக பின்புரம் ஏறி முன்புறம் 'ஹே!' என்று சறுக்கி வந்து குட்டைக்குள் 'தொப்' பென்று லேண்ட் ஆகினர். முழுக்க நனைந்ததை அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாவில்லை. திரு பென்ஜமினும் அவரது மனைவியும் தான் பதறி அடித்துக்கொண்டு கையில் வைத்திருந்த துண்டால் அவர்களைத் துவட்டினர். மற்றவர்கள் ஆசைக்காக ஒரு முறை பின்வழி ஏறி பின் அவ்வழியே இறங்கி வந்தனர். யானையின் கீழே நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். பின் ஒரு இடத்தை செலக்ட் செய்து சாக்லேட் சாப்பிட்டோம். மறுபடியும் ஆங்காங்கே போட்டோ எடுத்து கொண்டே நடக்க ஆரம்பித்தோம்.

இடது ஓரத்தில் நிற்பது எனது அம்மா, அடுத்தது Mrs.பென்ஜமின் மற்றும் JNC குழந்தைகள்
இறுதியாக பூங்காவின் இறுதிப் பகுதிக்கு வந்து, அணையைப் பார்க்க படியேறி மேலே சென்று வந்த வழியே வைகை , மேகம் சூழ்ந்த மலைகளையும் ரசித்துக்கொண்டே நடந்தோம். அந்த சமயத்தில் குழந்தைகளிடன் பல விஷயங்களை பேச முடிந்தது. விளையாட விடாமல் மழை தடுத்திருந்தாலும் சந்தோஷம் சிறிதும் குறையவில்லை. அது வேண்டும், இது வேண்டும் என்று யாரும் விழுந்து உருளவில்லை. கூட்டத்தை விட்டு ஒரு நிமிடம் கூட விலகிச் செல்லவில்லை. இரண்டு இரண்டு பேராக கூட்டு சேர்ந்து கொண்டு கடைசி வரை ஒருவரை ஒருவர் "இருக்கிறார்களா" என்று பார்த்துக்கொண்டு பத்திரமாகவே நடந்தனர்.

ஆரம்பித்த இடத்திற்கே மறுபடியும் வந்து, மறுபடியும் ஒரு பெஸ்ட் ஸ்பாட்டை செலெக்ட் செய்து பிஸ்கட், மிக்சர் வரிசையில் நின்று இரண்டு ரவுண்டு வாங்கி சாப்பிட்டோம். தூரத்தில் இருந்த பெரிய மரத்தில் நிறைய வௌவால்கள் திங்கிக்கொண்டிருந்தன. அதையும் ஆச்சரியமாகப் பார்த்து 'எப்போ பறக்கும்?', 'எதுக்கு தொங்கிட்டு இருக்கு?' என்று ஒருவருக்கொருவர் கேள்வி கேட்டுக்கொண்டு பதில் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே காக்கைக் கூட்டம் வந்து எங்கள் அருகில் உட்கார்ந்தது. ஒருவன் பிஸ்கட் துண்டை ஒரு காக்கைக்கு போட, அதை பல காக்கைகள் எடுக்க முயற்சிதது. உடனே அவரவர் ஆளுக்கு கொஞ்சம் பிஸ்கட், மிக்சர் என்று போட ஆரம்பித்னர். எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகும் காக்கைகள் சுற்றி சுற்றி வரவே, ஒன்றக்கூட விடாமல் எல்லாவற்றையும் விரட்டியும் விட்டனர்!

வெளியே வந்து ஆளுக்கு ஒரு டீ சாப்பிட்டு விட்டு 'ரயில் பயணத்திற்கு' தயாரானோம். வைகை அணை பழைய இடமாக இருந்தாலும் குழந்தைகள் கூட்டம் அதிகமாயிருப்பதற்கு இந்த ரயிலும் ஒரு காரணாம். சும்மார் ஐந்து நிமிடத்திற்கு பார்க்கை ஒரு சின்ன ரயிலில் வைத்து சுற்றிக்காட்டுவார்கள். ஆளாளுக்கு ஒரு இடம் பிடித்து, சந்தோஷக் கூக்குரலிட்டு, கடைசி பெட்டியில் அமர்ந்திருந்த சிறுவர்கள் ரயில் ஓட்டுவது போல் பாவ்லா செய்து, கைதட்டி, மிகவும் ரசித்தனர் இந்த 'சிறிய' பயணத்தை. மதியம் மூன்று மணியளவில் பூங்காவினுள் நுழைந்த நாங்கள் மாலை ஆறு மணிக்கு சரியாக அங்கிருந்து கிளம்பினோம். ஹாஸ்டலில் அனைவரையும் இறக்கி விட அனைவரும் வந்து என் கைகளை மாறி மாறி பற்றிக்குழுக்கி நன்றி, தேங்க்ஸ், Praise the Lord சொல்லி கிளம்பிச் சென்றனர்.

மழை காரணத்தால் ஊஞ்சல், சறுக்கு மரம், ஸீ ஸா என்று எதையுமே இந்தக் குழந்தைகளால் விளையாட முடியவில்லை. இருந்தும் அவர்கள் இந்த டூரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர். பள்ளி முடிந்தால் ஹாஸ்டல், மறுபடியும் காலையில் பள்ளி என்று போய்க்கொண்டிருக்கும் அவர்களது வாழக்கையில் வெளியே சென்றதே ஒரு பெரிய விஷயம் தான். திரும்பி வரும் போது ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அசந்து தூங்கிக்கொண்டே வந்தது அவ்வளவு அழகு. JNC விடுதியுடனான எங்களது தொடர்பு என்றும் மாறாது. அங்கு தங்கியிருக்கும் ஒரு குழந்தைக்கு மாதம் ஒன்றிற்கு சராசரியாக ரூ500 செலவு ஆவதாகச் சொல்கிறார்கள். பத்தாவது எழுதியிருக்கும் ஒரு மாணவனுக்கு ஒரு பாட்டியைத் தவிர யாரும் இல்லை. அவனுக்கு மேலும் படிக்க விருப்பமிருந்தால் தேவையான உதவிகளை செய்வதாக வாக்களித்துள்ளோம். எட்டாவது முடித்திருக்கும் ஒரு பெண்ணிற்கோ பெற்றோர் இருந்தும் வீட்டிற்கு செல்ல முடியாத வேறு விதமான பிரச்சனை.

முதன் முறை நாங்கள் இந்த விடுத்திக்கு தங்கியிருந்த போது எங்களிடம் அழகாக மழலை மாறாமல் பேசி அசத்திய 'ஜீவாநிதி' என்கிற ஐந்து வயது குழந்தை இப்போது அங்கு இல்லை. அவளுக்கு பன்னும் டீயும் உயிராம். ஒரு முறை மலையிலிருந்து பார்க்க வந்த தந்தை பன்னும் டீயும் வாங்கி தருவதாக இங்கு வந்து கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறான். சென்றவன் குழந்தைக்கு பன்னும் டீயும் வாங்கிக்கொடுத்து விட்டு நேராக டாஸ்மாக்கிற்கு போய் உட்கார்த்திருக்கிறான். அங்கு ஏதோ பிரச்சனையாக போலீஸ் அவனை அள்ளிக்கொண்டு போயிருக்கிறது. இதையெல்லாம் பார்த்து பயந்துபோன ஜீவாநிதி அருகில் இருந்த பார்க்கில் ஒளிந்திருந்து பின் யார் மூலமோ ஹாஸ்டல் வந்து சேர்ந்திருக்கிறது. சிறிது நாட்களுக்குப் பிறகு மறுபடியும் வந்து தன் மகளை அழைத்துச் சென்ற அந்தக் குடிமகன் திரும்ப வரவேயில்லையாம்! ஜீவாநிதி வேறு ஏதோ ஹாஸ்டலில் தங்கியிருப்பதாக செய்தி மட்டும் வந்ததாம். அந்த பிஞ்சு மனம் வாடாமல் எங்காவது நன்றாக இருந்தாலே எங்களுக்குப் போதும்...

இது போல் இன்னும் எத்தனையோ கதைகள், எத்தனையோ பிஞ்சுக்குழந்தைகள், ஹாஸ்டல்கள், ஆசிரமங்கள், பள்ளிகள். இவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுடன் வைத்துப் பார்த்தால் நமக்கிருப்பதனைத்துமே 'ஒன்றுமே இல்லை' தான். அது இது என்று பேச மட்டும் செய்து, செயலாக ஒன்றுமே செய்யாமலிருந்து கடல் கடந்திருந்த நம்மவர்களைத் தான் கூண்டோடு காவு கொடுத்து விட்டோம். இங்கிருப்பவர்களுக்காவது நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். பிரச்சனைகள் வேறு வேறு என்றாலும் கண்ணீர் ஒன்று தான். துயரம் துடைக்க முயற்சிப்போம்.

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...