ஆதலால் காதல் செய்வீர்... 03

1:05:00 PM


ஆதலால் காதல் செய்வீர்...  01, 02

காயத்ரி - 01


"இதுக்குதான்னு முதல்லயே சொல்லியிருந்தீங்கன்னா நான் வந்தே இருக்க மாட்டேன்" - காயத்ரியின் கண்களில் நிஜமாகவே கோபம் தெரிந்தது. "இப்ப யாரக்கேட்டு இந்த ஏற்பாடெல்லாம் பண்றீங்க?"

"யாரடி கேட்கனும்... அப்படியே அறைஞ்சேன்னா பாரு..." கண்களை உருட்டி கையை ஓங்கிக்கொண்டு வந்த தன் மனைவி கமலம் மகளை அடிக்க மாட்டாள் என்று தெரிந்தும் தடுத்தார் முன்னாள் ராணுவ மேஜர் திலகன், ஏனென்றால் சூழ்நிலை அப்படி.

"கமலா, கொஞ்சம் அமைதியா இரு, பாப்பா கிட்ட நான் பேசிக்கிறேன்" - அமைதியாகச் சொன்னார்.

"ஆமாம் பாப்பா, சின்னப்பப்பா பாருங்க, அதான் இப்படி எதுத்து எதுத்து பேசுறா, என்ன தாண்டி நெனசிக்கிட்டு இருக்க உன் மனசுல" விடவில்லை.

"நீ கொஞ்சம் சும்மாதான் இருயேன். கிஷோர் அம்மாவ உள்ள கூட்டிட்டு போ" மகன் கிஷோர் தங்கை காயத்ரியை முறைத்தபடி அம்மாவை உள்ளே அழைத்துச் சென்றான். காயத்ரியை அவன் பார்த்த பார்வை "நீ பேசுவது கொஞ்சம் கூட சரியில்லை" என்று சொல்லாமல் சொல்லியது.

இரண்டு நிமிட இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்தார் திலகன். "நீ B.Sc படிச்சு முடிச்சவுடனே உன் அம்மா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆசைப்பட்டா. நான் தான் சின்னப் பொண்ணு அதுக்குள்ள என்ன அவசரம்னு நீ ஆசைப்பட்ட மாதிரியே M.B.A வுக்கு படிக்க வச்சேன். படிச்சு முடிச்ச பிறகு வேலைக்கு போய் சொந்தக்கால்ல நிக்கனும்னு சொன்ன. அதுக்கும் அவள ஒத்துக்கவச்சேன். இப்போ நீ வேலைக்கு போக ஆரம்பிச்சு இரண்டு வருஷமாகப்போகுது. நீயா சொல்லுவனு நெனச்சு நாங்களும் சும்மா இருந்தோம். ஆனா, இதுவரைக்கும் எதுவுமே சொல்லல. உன் அம்மா இவ்வளவு நாள் சும்மா இருந்ததே பெரிய விஷயம். இப்பவும் எதுவும் முடிவா சொல்லாம 'கல்யாணம் வேணாம்'னு மட்டும் பிடிவாதமா சொன்னா, உங்க அம்மாகிட்ட என்னால பேச முடியாது"

எதோ சொல்ல வந்தவளை, 'நான் முடித்துக்கொள்கிறேன்' என்பது போல் கை காட்டி தடுத்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.  

"அவ கேக்குறதுலையும் எந்தத் தப்பும் இல்லையே! பொண்ணப் பெத்தவங்க நாங்க. எங்களுக்கு இதவிட வேற என்ன சந்தோஷம், கௌரவம் இருக்க முடியும் சொல்லு? நம்ம சொந்த பந்தங்களபத்தி உனக்கே நல்லா தெரியும். 'என்ன திலகா பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் பேசலியா? நாள் ஆய்கிட்டே போறாப்ள தெரியுது, பொண்ணப் பெத்தவன் பொறுப்பா நடந்துக்க வேண்டாமா'னு என்ன ஊர்ல கேக்காத ஆள் இல்ல. எனக்கே இப்படினா உன் அம்மா பொம்பள. அவ நெலைமைய கொஞ்சம் யோசிச்சு பாரு. நாம யாரும் வேண்டாம்னு சிட்டில இல்லையே; நல்லது கெட்டதுன்னனா எல்லாரும் வேணும்னு சொந்த ஊர்லல்ல இருக்கோம். பாக்குறவங்க கேக்குறப்போ நாங்க என்ன பதில் சொல்றது? சொல்லு?" - அமைதியும் பொறுமையும் அவர் வார்த்தைகளில் இருந்தாலும், 'இந்த முறை நீ சம்மதித்து தான் ஆக வேண்டும்' என்ற முடிவு அவரது பேச்சில் தெரிந்தது. 

எப்போது முடிப்பார் என்று காத்திருந்ததைப் போல "அப்பா, நான் இப்போதான் வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்கேன். எனக்கு அங்க நல்ல ஸ்கோப் இருக்கு. நாலு பேர் என்ன மதிக்கிறாங்க. உங்க பொண்ணு TCSHRனு சொல்லிகிறது உங்களுக்கு பெருமை இல்லையா? இன்னும் கொஞ்ச நாள் நான் வேலை பாக்கனும், சம்பாதிக்கனும், உங்க ரெண்டு பேரையும் நல்லா வச்சிக்கனும்னு எனக்கு நிறைய கனவுகள் இருக்கு. எல்லாம் நடந்துகிட்டு வர்ற நேரத்துல திடீர்னு கல்யாணம், புருஷன், மாமனார், மாமியார், கொழுந்தனார்னு நான் மாட்டிகிட்டு முழிக்க விரும்பல. நான் கல்யாணம் வேண்டவே வேண்டாம்னு சொல்லலியே. இன்னும் கொஞ்ச நாள் நான் நானகவே இருக்க ஆசைப்படுறேன். அதுக்கு ஹெல்ப் பண்ணுங்கனுட தான் கேக்குறேன். என் முடிவகள நான் எடுக்க கொஞ்சம் உதவி பண்ணுங்கப்பா... ப்ப்ப்ளீஸ்"
"பாப்பா..."

"(ஆரம்பிப்பதற்குள்) பாப்பா, பாப்பானு கூப்பிடாதீங்கப்பா... நான் என்ன சின்னக் குழந்தையா? எனக்கு இப்போ வயசு 24 ஆகுது" தன்னைக் குழந்தையாகவே நினைத்து, எதையும் கேட்கமல் தன் இஷ்டத்திற்கு செய்யும் தந்தையின் குணம் அவளுக்கு பிடிக்கவில்லை. சரியாகச் சொல்லவேண்டுமானால் புரியவில்லை.

"கரெக்ட். அதையேதான் நானும் சொல்ல வர்ரேன். உனக்கு இப்போ வயசு என்ன? 24... இப்போ கல்யாணம் பண்ணிக்காம, வேற எப்போ பண்ணிக்கப்போறதா இருக்க?"

". . . " 

பதில் ஏதும் சொல்லாமல் டேபிள் மேலிருந்த தன் மொபைல் போனை எடுத்துக் கொண்டு, தன் அறைக்குள் புகுந்து கதைவை மூடிக்கொண்டாள்.

சமயலறையிலிருந்து வெளிப்பட்ட கமலம் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தாள். "M.B.A வரைக்கும் இவளப் படிக்க வச்சது என் தப்பு. பொம்பளப் புள்ள வீட்டுக்கு அடங்கி, அடக்க ஒடுக்கமா இருக்காளா. என்னை என்ன கேனச்சினு நெனசிக்கிட்டு இருக்கீங்களா அப்பாவும் மகளும்? இப்போ கதவ தொறக்கப்போறியா இல்லையாடி? "

"இப்போ என்ன நடந்துபோச்சுனு இப்படி கத்துற?" 'Climax started...' தன் மொபைலில்  ஜனா என்ற எண்ணிற்கு மெஸேஜ் தட்டிக் கொண்டே பூட்டிய கதவிற்கு பின்னாலிருந்து கத்தினாள் காயத்ரி.

"நானாடி கத்துறேன், திமிரப் பாதீங்களா உங்க பொண்ணுக்கு " oh! Good...its showtime J மறுமுனையிலிருந்து reply வந்தது.

அப்பாவுக்கும் என் முடிவுக்கும் சம்பந்தம் இல்ல 'nothing is good. mom shouting, dad upset :(

என்னடி பெரிய முடிவு. நாளைக்கு மாப்பிள்ள வீட்டுக்காரங்க வரும்போது, சொந்த பந்தத்துக்கு முன்னாடி எங்கள அவமானப்படுத்தனும்கிறது தான் உன் முடிவா? all the best J

நானா அவங்கள வரச் சொன்னேன், என்னக் கேக்காம நீங்களா வரச்சொன்னா அதுக்கு நானா பொறுப்பு? ''wat all the best... dono wat to do... '

உன் மனசுல என்னதாண்டி நெனசிக்கிட்டு இருக்க? "நீ பெருசா சம்பாதிக்கனும் எங்கள நல்லா வச்சிக்கனும்னு நாங்க உன்ன கேட்டோமா?"  'it happens. let it go n do wat they say' 

"இப்போ கூட சொன்னியே, MBA படிக்க வச்சேன் MBA வச்சேன்னு. அந்தக் கடனயெல்லாம் அடைக்கவேண்டாம்?" but i m afraid. this is all prepared

இப்போ முடிவா என்ன தாண்டி சொல்ற do wat they say and lets decide abt this later

....” 'ok. i ll say yes. don msg now. ll call u later'

"பாத்தீங்களா எப்படி பேசுறான்னு" - கோபம் கலந்த ஏமாற்றத்துடன் கமலம் மீண்டும் தன் கணவனனிடமிருந்து ஆரம்பித்தாள். காயத்ரி தன் inbox ஐயும் sent message ஐயும் சுத்தமாக delete செய்துகொண்டிருந்தாள்.

********

அடுத்த நாள் மாலை, தன் மகளைப் பார்த்துப் பார்த்துப் பூரித்து போனார் திலகன். திடீரென்று வெளிப்பட்டு 'சரி' என்று அவள் சொன்னதற்கு தான் கனிவாகப் பேசி புரிய வைத்ததே காரணம் என்று கமலத்திடம் இதுவரை நூறு முறையாவது சொல்லியிருப்பார். குங்குமப்பட்டுடுத்தி, அளவான அலங்காகரத்தில் தேவதையாய் மின்னினாள் காயத்ரி. போட்டோ MMS செய்ததற்கு ஏற்கனவே 'OMG! u luk like a goddess!!!' என்று மெஸேஜ் வந்திருந்தது. சம்பிரதாயமாக எதுவும் முடிவாகாமல் 'கை நனைக்கக் கூடாது' என்று கோவிலில் பெண்ணை முதலில் பார்க்க மட்டும் வந்திருந்தனர் மாப்பிள்ளை வீட்டார். 

சாதாரண பெண் பார்க்கும் படலம் தான் என்று நினைத்துச் சம்மதித்த காயத்ரிக்கு அங்கு நடப்பவற்றைப் பார்த்தால் இதே நிகழ்ச்சி நிச்சயதார்த்தமாக மாறிவிடுமோ என்ற பயம் எழுந்தது. மாப்பிள்ளை வந்திருந்தாலாவது, அவனிடம் தனியாகப் பேசி, புரிய வைத்து நடப்பவற்றை தடுக்கலாம் என்று பார்த்தால், "சும்மா தான பார்க்க வந்திருக்கோம், இதுக்கெல்லாமா அவன கூட்டிட்டு வருவாங்க" என்று அத்தையாகிப் போகக்கூடிய வாய்ப்பு 90% உள்ள அந்த பெண் தன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்டாள். TCSல் மாதத்திற்கு 100 பேரை வேலைக்கு எடுப்பவளுக்கு 'சரியாகப் பேச வருகிறதா?' என்று சில மொக்கைக் கேள்விகளுக்கு பதில் கேட்டு டெஸ்ட் செய்தார்கள்.  'சரியாக நடக்க வருகிறதா' என்று பார்க்க கூட்டத்தில் இருந்த இரண்டு கிழவிகளுடன் "பிரகாரத்த சுத்தி வாம்மா பொண்ணு" என்று அனுப்பிவைத்தார்கள். சமைக்கத் தெரியுமா, கூட்டத் தெரியுமா, விளக்கத் தெரியுமா என்று ஏதோ 1980 ஆம் ஆண்டு தன் அம்மாவை பெண் பார்க்க வந்த தனது அப்பா வீட்டார் போல கேள்விகளை இப்போதும் இவர்கள் கேட்டுக்கொண்டிருப்பதை அவளால் சகித்துக்கொள்ளமுடியவில்லை. "என்ன படித்திருக்கிறாய், என்ன வேலை செய்கிறாய், என்ன சம்பளம்" எதுவும் சம்பிரதாயத்திற்குக் கூட கேட்கப்படவில்லை.

இந்தக் குடும்பம் தனக்கு ஒத்துவராது என்பதை சரியாகப் புரிந்து கொண்டாள் காயத்ரி. அதை தன் தந்தையிடமும் முகபாவனைகளில் வெளிப்படுத்தினாள். வீட்டிற்கு போய் பேசிக்கொள்ளலாம் என்று அவர் முகம் சொன்னது இவளுக்குப் புரிந்து அமைதியாக நடப்பவற்றை வேடிக்கை பார்த்தாள். 

வந்தவர்களுக்கு பெண்ணைப் பிடித்துப் போக, மகனிடம் பேசிவிட்டு தகவல் தருவதாகக சொல்லிக் கிளம்பினார்கள். "என் மகன் நல்லா சாப்பிட்டு வளர்ந்தவன், மருமகளுக்கு கொஞ்சம் சமைக்க கத்துக்கொடுங்க" என்று அந்தப்பக்கத்து அம்மா ஒரு பிட்டை போட "கண்டிப்பா, கல்யாணத்துக்குள்ள ரெடி பண்ணிடுறேன்" என்று ரேஸ் குதிரையை ரெடி செய்வது போல் சொன்ன தன் அம்மாவை பார்வையாலேயே சுட்டுவிடுவதைப் போலப் பார்த்தாள். அதற்குள் சம்பந்திமார்கள் உறவு முறை கொண்டாட ஆரம்பித்து, எந்த மண்டபம், யார் சமையல் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

********
"இதற்கு மேலும் என்னால பொறுத்துக்க முடியாது" - அன்று இரவு தேனியிலிருந்து சென்னைக்கு விரைந்து கொண்டிருந்த மிதவைப் பேருந்தின் 13W இருக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி சொன்னாள் காயத்ரி.

"ம்...."

"என்ன 'ம்?' அந்தம்மா என்னடான்னா கொடல் கொழம்பு வைக்க கத்துக்கோனு சொல்லுது, என் அம்மா என்னடான்னா என் பொண்ணு தலக்கற்யே பண்ணுவானு சொல்றா... அவங்களுக்கு நடுவுல உட்கார்ந்திருக்க எப்படி இருந்தது தெரியுமா... இதுல சம்பந்தி, சம்பந்தினு வேற மாறி மாறி உருகிக்கிறாங்க... கருமம்" அவள் தலையில் அடித்துக்கொண்டதில் பின்சீட்டு உருவம் உலுக்கி எழுந்து பக்கம் மாற்றி படுத்துக்கொண்டது.

"உன் அப்பா என்ன சொன்னார்?"

"எதுவுமே சொல்லல"

"ம்"

"ம்... தவிர எதுவுமே சொல்லமாட்டியா? நீ எதுக்கு இப்போ சம்பந்தேமே இல்லாம தேனிக்கு வந்த, சொல்லு?"

"உன் கூட டிராவல் பண்றதுக்கு தான்"

"நீ லைஃப் லாங் என் கூட டிராவல் பண்றத பத்தி நான் பேசிக்கிட்டு இருக்கேன்... நீ 'ம்' கொட்டி கேட்டுக்கிட்டு இருக்க. இப்படியே போனா அடுத்த மாசத்துக்கெல்லாம் என்ன யார் தலைலயாவது கட்டிவச்சு வர்றவங்களுக்கெல்லாம் கொடல் கொழம்பு வச்சிக்கொடுக்கச் சொல்லுவாங்க"

"நான் கேக்கனும்னு நெனச்சேன்... உனக்கு இதெல்லாம் நெஜமாவே குக் பண்ண தெரியுமா?"

********

"ஆமாம் மாமா, பாப்பா கெளம்பிட்டா. மாப்ள வீட்டுக்காறங்க போய் தகவல் அனுப்புறேன்னு சொல்லிருக்காங்க, நல்ல இடமாத்தான் தெரியுது"  திலகன் போனில் தூரத்து உறவு மாமாவிடம் பேசிக்கொண்டிருக்க 'ஜெனார்தன ரெட்டி - காயத்ரி செட்டியார்' காதல் ஜோடிகளை சென்னையில் இறக்கிவிடும் முனைப்பில் அந்தப் பேருந்து பறந்து கொண்டிருந்தது. ஆம், பெயர் ஜெனார்தன ரெட்டி. வேலை TCSல் HR... 

தொடரும்...You Might Also Like

3 comments

 1. லேய் நண்பா.... பின்னுதியே ல..........!!!!!!!!!!!!!!!!!!!!!

  இதே மாதிரி இன்னும் பல நல்ல கதைகள எதிர்பாக்கும் உன் உற்ற தோழன்,
  அருண் வசந்த்.

  ReplyDelete
 2. மாப்ள, நீ என் நண்பேண்டா...

  ReplyDelete
 3. நண்பா, கதை என்ன ஆச்சு? atleast ரெண்டு வாரத்துக்கு ஒருதடவையாவது கதை வந்தாதான் ஒரு பீலிங் இருக்கும்... நீ அடுத்த எபிசோடு போடும்போது நா கண்டிப்பா மொத மூணு எபிசோடையும் படிச்சே ஆகணும் போல இருக்கே!!!
  மக்கள் உன்ட்ட இருந்து இன்னும் நெறைய எதிர்பாக்குறாங்க!!!

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...