பொன்னர் சங்கர் | தமிழ் | 2011 - பாகம் 01
3:04:00 AMTroy, Alexander, Gladiator, Robin Hood, 300, Narnia... இன்னும் என்னென்ன வெற்றி பெற்ற ஆங்கில வரலாற்றுப் படங்கள் உள்ளனவோ அவை அனைத்திலுமிருந்து சுடப்பட்ட ஒரு மட்டமான 'காப்பி' என்று பதிவுலகம் கிழிக்து, தொங்கவிட்டு, காறி உமிழ ஒரு 'தமிழ்' படம் கிடைத்துவிட்டது. கொரிய, ஜப்பானிய, ஆஸ்திரேலிய, ஆப்ரிக்க படங்களே உலகத்தரம் வாய்ந்தவை என்பதை அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கட்டும். நான் அதை மறுக்கப் போவதில்லை. ஆனால் வழக்கம்போல் நான் இந்தப் பக்கம் தான் நிற்கிறேன். 'உறுமி' படம் பற்றி எழுதியிருந்த போதே வரலாற்றுப் படங்கள் மீதான எனது ஆர்வத்தைப் பற்றிச் சொல்லியிருந்தேன். உறுமியில் வரும் காட்சிகளையே 'ஆஹா ஓஹோ' என்று சொல்லியிருந்தேன். ஏனென்றால் "தமிழில் பேர் சொல்லும்படி அப்படி ஒரு சரித்திரப் படமில்லை!" இந்த ஏக்கம் எனக்கு முதலிருந்தே இருக்கிறது. அந்த ஏக்கத்தை 'பொன்னர் சங்கர்' தீர்த்ததா என்றால் நிச்சயம் கணிசமான அளவு என்னை திருப்திபடுத்தியது என்றே சொல்வேன்.
கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன் தியாகராஜன் தன் மகன் பிரசாந்தை வைத்து கலைஞரின் பொன்னின் செல்வன் நாவலை படமாகப் போகிறேன் என்று சொன்னபோது அது பெரிய விஷயமாகப் பேசப்படவில்லை. சரித்திரக் கதையான அதை அவ்வளவு எளிதில் எடுக்க முடியாது என்பாதால் இருக்கலாம். மேலும் பிரசாந்த் குடும்ப விவகாரம் வேறு புயலாய் கிளம்பியிருந்தது. இடையிடையில் படத்தைப் பற்றிய செய்திகள் அவ்வபோது வந்தாலும் அது பெரும்பாலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக படப்பிடிப்பு தடைபட்டது என்ற செய்தியாகவே இருந்தது. அப்படிப்பட்ட சமயத்தில் தான் சென்ற மாதம் கலைஞர் பொன்னியின் செல்வன் 'செட்'டில் போய் படப்பிடிப்பு குழுவினரைச் சந்தித்தார் என்று போட்டோ. கிட்டத்தட்ட தமிழில் உள்ள முக்கிய குணசித்திர நடிகர்கள் அனைவருமே அதில் இருந்தனர் சினேகா உட்பட. திடீரென்று விஜய் டிவியில் மிரட்டும் டிரைலர். உண்மையில் அசந்துவிட்டேன். அரண்மனை, கோபுரம், முதலை/பாம்பு பைட், வி-அம்பு படை, போர்களம், குதிரை வீரர்கள், எரியும் கோட்டை, திவ்யா பரமேஷ்வர் அதைவிட பிரம்மாண்ட உருவத்தில் இரண்டு பிரசாந்த் என்று கலந்து கட்டியடித்தது டிரைலர்.
படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்களைப் பற்றி முதலில் சொல்லியாக வேண்டும். முக்கிய கதாபாத்திரமான பொன்னர்-சங்கரில் பிரசாந்த். அவரது பெற்றோக்களான குன்றுடையான் என்றழைக்கப்பட்ட நெல்லியன் கொண்டனாக ஜெயராம், அவரது மனைவியான தாமைரை நாசியாராக குஷ்பு, தங்கையான அருக்காணி தங்கமாக சினேகா. பொன்னர்-சங்கரின் மனைவிகளான முத்தாயியாக பூஜா சோப்ரா, பவளாகியாக திவ்யா பரமேஷ்வர். இவர்களது தந்தை, தாமரையின் அண்ணனான சின்னமலைக் கொழுந்தாக பொன்வண்ணன் அவரது மனைவியான சிலம்பாயியாக 'யுத்தம் செய்' புகழ் லஷ்மி ராமகிருஷ்ணன், இவர்களது மகனான வையம்பெருமாளாக ரியாஸ்கான், தாமரை-சின்னமலைக் கொழுந்துவின் தந்தையான பெரியமலைக் கொழுந்தாக விஜயகுமார், அவரது மனைவி பெருமாயியாக கீதா (யாரென்று தெரியவில்லை), காளிமன்னனாக நெப்போலியன், ராக்கியண்ணன் ஆசானாக ராஜ்கிரண், அவரது மனைவியான அழகு நாச்சியாராக சீதா, இவர்களது மகனான வீரமலையாக போஸ் வெங்கட், மாயவராக நாசர் மற்றும் மாந்தியப்பனாக பிரகாஷ்ராஜ். இவர்கள் தவிர ஸ்பெஷல் அப்பியரன்ஸ் என்று பார்த்தால் ஒரு பாடலுக்கு பானு (கருப்பான கையால), சோழ மன்னன் அகாலதேவராக பிரபு, ஒரே ஒரு வசனம் பேசி பிரசாந்தின் வாளுக்கு இரையாகும் தளபதியாக பொன்னம்பலம், நெப்போலியனின் ராஜகுருவாக(!) சண்முகராஜன், சோழ மன்னனின் அரசவையைல் இருப்பதாக, முகபாவனைகள் கூட இல்லாமல் இரண்டே இரண்டு ஷாட்களில் மட்டும் காட்டப்படும் மந்திரிகளாக(!), டெல்லி கணேஷ், ராஜ் கபூர், சந்தான பாரதி என்று ஒரு கூட்டமே படத்தில் நடித்திருக்கிறது. இந்தப்பெயர்களையெல்லாம் திரட்டி எழுதவே எனக்கு அரை மணி நேரம் பிடித்திருக்கிறது. இவரகளையெல்லாம் திரட்டி நடிக்கவைத்ததற்கு எவ்வளவு நேரமும், உழைப்பும் செலவாகியிருக்கும்?
படத்தில் என்னை வாய் பிளக்கச் செய்தது அதன் மேக்கிங் தான். பிரம்மாண்டம் - அது முதல் காட்சியிலிருந்து கடைசிவரை பரந்து விரிந்து ஆளுமை செய்கிறது. கதாநாயகிகள் அறிமுகப்பாடல். சந்திரலேக்கா 'முரசு' பாடலைப் போலப் போல இதை வடிவமைத்திருக்கிறார் தியாகராஜன். கிட்டத்தட்ட நூறு பேருடன் பானு இந்தப் பாடலுக்கு ஆடுகிறார். இளையராஜாவின் பின்னனி இசை ராஜ்ஜியம் இந்தப் பாடலில் சிம்மாசனம் ஏறியிருக்கிறது. அதுவும் பாடலின் இறுதிப் பகுதியில் வரும் மேளதாள இசை, காதைப் பிளந்து திரையில் நடக்கும் திருவிழாவிற்குள் நம்மை வழுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறது.
அடுத்து இடைவேளைக்கு முன் வரும் சண்டைக்காட்சி. கதாநாயகிகளை வில்லன் கும்பல் ஒரு கோட்டையில் கடத்தி வைத்திருக்க, படையுடன் சென்று கதாநாயர்கள் மீட்டு வர வேண்டும். நிச்சயம் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று ஒரு நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். இரவு நேரம் வேறு. நெருப்பு அம்புகள் விடும் எதிரிகள், கேடையத்தால் தங்களை மறைத்தபடி இவர்கள் முன்னேறிச் சென்று பொன்னர் வாள் சண்டையிட, சங்கர் வில்-அம்பில் சண்டையிட, கதாநாயகிகள் நெருப்பு வளையத்திற்குள் சிக்கிக்கொள்ள, கடைசியில் அத்தனை பேரையும் கொன்று குவித்து ஆளுக்கு ஒருவர் என காப்பாற்றி ஜம்மென்று வெளியே வருகிறார்கள் பொன்னரும் சங்கரும். ப்ரேம்-பை-ப்ரேம் அத்தனை அபாரம், பிரம்மாண்டம். அருமையான பின்னனியிசை. அற்புதமான உழைப்பு. சில மூவ்கள் கொஞ்சம் காமெடியாக இருந்தாலும் அதெல்லாம் அந்த பிரம்மாண்டத்தில் காணாமல் போய் விடுகிறது.
அடுத்து இடைவேளை 'நெருப்புக் கோட்டை' சண்டைக்காட்சியை விட பத்து மடங்கு பிரம்மாண்டமான கிளைமாக்ஸ் போர்க்களக்காட்சி. இரண்டு பிரசாந்த்கள், அவருடன் இணைந்து பொன்வண்ணன்-ரியாஸ்கான், ராஜ்கிரண்-போஸ்வெங்கட், சோழ படைகளுடன் நாசர் என்னும் கூட்டணி, நெப்போலியன்-பிரகாஷ்ராஜ்-விஜயகுமார் கூட்டணியுடன் மோதுகிறது. அதுவும் இரண்டு நாட்கள். பிகாஷ்ராஜைத் தவிர மற்ற அனைவரும் ராஜாத்தனமான உடைகளுக்கு அற்புதமாகப் பொருந்துகின்றனர். அருமையாக சண்டயிடுகின்றனர். பிரசாந்த் ஒரு கதகளியாட்டமே ஆடுகிறார். இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திலும் நான் பார்த்திராத காட்சி. புளுதி பறக்க, ரத்தம் தெறிக்க, சில பல ஸ்லோமோஷன் ஷாட்களைப் புகுத்தி, 'தமிழ் சினிமாவிற்கு இது அதிகம்தான்' என்று தாராளமாக சொல்லுமளவிற்கு அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள். எதிரெதிரே ஓடிவரும் இரண்டு படைகள் ஒரு நொடியில் மோதிக்கொள்ளும் காட்சி, குதிரையில் இருந்து கொண்டே வாள் சண்டையிடும் காட்சி, கையில் இரண்டு வாள்களுடன் கர்ஜித்துக்கொண்டே போரிடுவது என்று அலப்பறையைக் கூட்டியிருக்கிறார்கள். 'அற்புதம்' என்ற வார்த்தையைத் தவிர எதுவும் சொவதற்கில்லை. மினிமம் 3000 பேராவது இருக்க வேண்டும். தியாகராஜன் 30,000 பேர் என்று பேட்டி கொடுத்திருக்கிறார். ஒரு ஷாட் எடுக்க 28 நாட்கள் எடுத்துக்கொண்டோம் என்றும் சொல்லியிருக்கிறார்.
படத்தின் கதாநாயகிகள் - ம்ம்ம்ம்ம்... 'அழகி' ஒருத்தியிருந்தாலே ஆட்டம் கண்டுவிடும். 'பேரழகிகள்' இருவர் இருந்தால்... சொல்லவா வேண்டும்? திவ்யா பரமேஷ்வர் - பூஜா சோப்ரா! கட்டழகி அனார்கலி' (கள்) என்று பிதாமகன் சூர்யா சிலாங்கில் தான் இவர்களை வர்ணிக்கவேண்டும். அழகென்றால் வர்ணிக்கமுடியாத அப்படியொரு பேரழகு. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடையில், உடையில், முகபாவனைகளில், இடையசைவுகளில் தங்களது அழகை வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் இருவருக்காகவே ஒரு பாடல் இருக்கிறது. மாடமாளிகை அந்தப்புரத்தில் இருவரும் குளித்து விட்டு தோழியருடன் குடும்பத்தார் பார்க்க ஒரு ஆட்டம் ஆடுவார்கள். சினேகா நடுநடுவே வந்து ஆடினாலும் இவர்கள் இருவருக்கு மத்தியில் காணாமல் போய்விடுகிறார். 'இடை' என்றால் இவர்களுக்கு இருப்பது தான். அதுவும் திவ்யா பரமேஸ்வர் பற்றி நான் ஏற்கனவே பல இடங்களில் 'ஜொள்ளி'யிருக்கிறேன். பூஜா சோப்ரா மிஸ் இந்தியா, சொல்லவா வேண்டும்? இவர்கள் திரையில் வரும்போது நான் ஏன் கண்ணிமைக்கக் கூட மறந்தேன் என்பதை மேலிருக்கும் படம் சொல்லும். ஆஹா எத்தனை எத்தனை அழகு!
மேற்சொன்ன விஷயங்களுக்காகவே நான் மறுபடியும் 'பொன்னர்-சங்கர்' பார்க்க தியேட்டருக்கு ஓடினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இறுதியாக தியாகராஜனுக்கு ஒரு மிகப் பெரிய ராயல் சல்யூட். இப்படிப்பட்ட ஒரு வரலாற்றுக் கதையை, தைரியமாக இவ்வளவு பணத்தை வாரி இறைத்து, தமிழில் இத்தனை நடிகர்கள், ஆயிரக்கணக்கான துணை நடிகர்களை வைத்து எடுத்து, பலப்பல பிரச்சனைகளையும், சிரமங்களையும் மீறி மூன்று வருடங்களுக்குப் பிறகு இப்போது வெற்றிகரமாக வெளியிடவும் செய்ததற்காக உண்மையிலேயே இவரைப் பாராட்ட வேண்டும். இது போலான முயற்சிகளும் அவை அடையும் வெற்றிகளும் தான் இது போன்ற உண்மையான பிரம்மாண்டமான பல படங்களுக்கு பாதை வகுக்கும். நான் எப்போதும் சொல்வதையே தான் இப்போதும் சொல்கிறேன். இந்தப் படம் நிச்சயம் ஓட வேண்டும்.
4 comments
பொன்னின் செல்வன் ????? பொன்னியின் செல்வன் ???????
ReplyDeleteஎன்னது பொன்னியின் செல்வனா? என்ன தல சொல்லவர்றீங்க?
ReplyDeleteபொன்னியின் செல்வன் கதைய மணிரத்னம் விஜய், மகேஷ் பாபு, சத்யராஜ், ஆர்யா இவங்கலெல்லாம் வச்சு இனிமே தான் எடுக்கப் போறார்!
hi first time i am commenting on ur blog. i think i am happy after ur review.like u me also dreaming for this kind of movie in tamil.we have lots of untold stories in tamil cinema.i was expecting someone should put first step to make our ancient stories/histories.i dont think i can see this film in movie hall.(i am woriking in dubai).
ReplyDeleteFYI: in my school days, during summer this drama will be played for 3 days in my village at night.so i know the story. just i want to see the making.
if this movie get good resposce then ponnien selvan also will be sure hit.
-gaja
@ thangaraju: அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.
ReplyDelete'மேக்கிங்' என்று பார்த்தால் 'பொன்னர் சங்கர்' தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல். பொன்னியின் செல்வன் நிச்சயம் இதை விட பன்மடங்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர் பார்க்கலாம். ஆனால கதை-திரைகதை போன்ற சமாச்சாரங்களில் என்னை இந்தப் படம் அவ்வளவாக திருப்திபடுத்தவில்லை. உன்மைக்கதையைத் தான் எடுத்திருக்கிறார்கள் என்று என்னால் நம்பமுடியவில்லை. களம் நன்றாக இருந்தாலும் கதையில் திரைக்கதையில் தெளிவு இல்லை.
இரண்டு வேறு கருத்துக்களை ஒரே பதிவில் சொல்லி குழப்ப வேண்டாம் என்று தான் இரண்டு பாகங்களாகப் போடுகிறேன். அதையும் வாசித்து விட்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...