பொன்னர் சங்கர் | தமிழ் | 2011 - பாகம் 02

1:32:00 PM


இந்தப் பதிவை படிப்பதற்கு முன் இதன் முதல் பாகத்தை கண்டிப்பாக படிக்கவும். இல்லையென்றால் நான் பொன்னர் சங்கர் படத்திற்கு இவ்வளவு நேரம் செழவழித்ததே வீணாகப் போய்விடும். முதல் பாகத்தை எழுத்திவிட்டு ஒரு வாரம் கழித்து இரண்டாம் பாகத்தை வெளியிடுவதற்கு காரணம். இந்தப் பதிவைப் படித்து விட்டு "படம் நல்லா இல்ல போல" என்று ஒரே ஒரு ஆள் தியேட்டருக்குப் போகாமல் இருந்தாலும் கூட அது நான் ரசிக்கும், இன்றும் முழுமனதாக நம்பும் தமிழ் திரையுலகத்திற்கு செய்யும் துரோகமாகிவிடும். கொஞ்சம் ஓவராகத் தெரிந்தாலும் உண்மை இதுதான்.

ஒரே ஒரு பாடலுக்காக மூவாயிரம் கலைஞர்களை வரவழைத்திருக்கிறார்கள். சென்னை சங்கமம் குழுவினருக்கு அதில் முக்கிய இடம். போர்க்களக் காட்சிகளுக்காக இதுவரை எந்தவொரு தமிழ் படத்திலும் உபயோகப்படுத்தப்படாத கேமராவை வரவழைத்து படமாக்கியிருக்கிறார்கள். கிராபிக்ஸ் செய்யாமல் ஆயிரக்கனக்கான துணை நடிகர்களுக்கு போர் வீரர்கள் உடையுடுத்தி மோதவிட்டிருக்கிறார்கள். ஃப்ரேம் பை ஃப்ரேம் பணத்தைக் கொட்டியிருக்கிறார்கள். பொட்டு வைக்கும் காட்ச்சி ஒன்று இருக்கிறது. அதில் குங்குமச் சிமிழை வைரக்கற்களால் அலங்கரித்திருக்கிறார்கள். இப்படி என்னென்னவோ புதிய வாய் பிளக்க வைக்கக்கூடிய விஷயங்கள் படத்தில் உள்ளன. ஆனால் படத்தில் இல்லாத பல பழைய விஷயங்களில் முதல் இடத்தைப் பிடிப்பது 'கதை'.

படத்தில் குறைகள் பல இருப்பதால் ஒவ்வொன்றாக விளாவாரியாகச் சொல்கிறேன். முதலில் கலைஞர் எழுதிய கதை-திரைகதை-வசனம். பொன்னர் சங்கர் என்பவர்கள் இன்றும் கொங்கு தேசத்தில் கடவுளாக கோயில் கட்டி வணங்கப்படுபவர்கள். அப்படிப்பட்டவர்களது கதை எப்படியிருக்க வேண்டும்? நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைத்து பாடுபட்டு உயிர் நீத்தவர்களைதானே மக்கள் கோயில் கட்டி கும்பிடுவார்கள்? படத்தைப் பார்த்தால் "இவர்கள் அப்படி என்ன பெரிதாகச் செய்துவிட்டார்கள் என்று கோவில் எல்லாம் கட்டுகிறார்கள்" என்று தான் நினைக்கத்தோன்றுகிறது. ஆரம்பத்தில் கலைஞர் அய்யா வந்து ஒரு பத்து நிமிடம் அண்ணன்மார்களைப் பற்றிச் சொல்லி கேரக்டர்களை அறிமுகம் செய்கிறார். அதை சரியாக கவனித்திருந்தாலாவது 'கதை' என்ன என்பது தெரிந்திருக்குமோ என்னவோ!

படம் ஆரம்பமானதற்குப் பிறகு 'கதை' என்ன என்பதை சரியாகச் சொல்லவே முடியாது. ஏனென்றால் திரைக்கதையில் அவ்வளவு சொதப்பல். திருமணத்திற்கு முதல் நாள் மணப்பெண்ணான குஷ்பு (அய்யோ!) ஊர் மக்களுக்கு தானதர்மங்களை சந்தோஷ்மாக வழங்கிக்கொண்டிருக்கிறார், மாப்பிள்ளை தோரணையில் யானை, குதிரையெல்லாம் பூட்டி பிரகாஷ்ராஜ் தன் மானரோஷம் அதிகம் பார்க்கும் கோபக்கார தந்தையுடன் வந்து வணக்கமெல்லாம் வைத்துவிட்டுப் போகிறார். ஆனால் மாறுவேடத்தில் திடீரென்று ஜெயராம் வந்ததும் குஷ்புவின் முகம் வாடி விடுகிறது. முன்பு சந்தோஷ்மாக சிரித்துக்கொண்டிருந்தவர் இப்போது திடீரென்று வருத்தப்படுகிறார். ஜெயராம் யாரென்பதை தெளிவாகச் சொல்லவில்லை. குஷ்பு தன் முறை மாமனான (என்று தான் நினைக்கிறேன்) ஜெயராமைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்கிறார். குத்துமதிப்பாக, இவர்கள் பேசிக்கொள்ளும் பெயர்களை வைத்துப் பார்க்கும்போது, பெரிய செல்வந்தரின் மகனான ஜெயராமிற்கு தான் குஷ்பு என்று முன்பே முடிவு செய்யப்பட்டு இருப்பார்கள் போல, ஆனால் பிரகாஷ்ராஜின் தந்தை, ஜெயாராமின் தந்தையிடமிருந்து எல்லா சொத்துக்களையும் பிடுங்கி, தன்னைத்தானே வெகுளி என்று சொல்லிக்கொள்ளும் அப்பாவியான அவரது மகன் ஜெயராமை ரோட்டில் திரிய விட்டுவிட்டு தனது மகனுக்கு குஷ்புவை பேசி விடுகிறார்.

பட ஆரம்பத்தில் கலைஞர் பேசும் காட்சி!
மகள் திருமணத்தைக் கெடுக்க வந்த ஜெயராமை சித்ரவதை செய்யும் விஜயகுமார், எவ்வளவு டார்ச்சர் கொடுத்தாலும் 'ஸ்ட்ராங்காக' இருக்கும் குஷ்பு-ஜெயராமைப் பார்த்து மனமிரங்கி இவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கிறார். ஆனால் இது அவர் மகன் பொன்வண்ணனுக்கு இது பிடிக்கவில்லை. இதற்கிடையில் விஜயகுமார் 'பொண்ணெல்லாம் இல்ல, கெளம்புங்க, கெளம்புங்க' என்று பிரகாஷ்ராஜ் குரூப்பிடம் சொல்ல வரும் போது மன்னனான் நெப்போலியன் வருகிறார். பிரகாஷ்ராஜின் தந்தை தன் வார்த்தைகளால் ஏதோ 'டுவிஸ்ட்' வைக்க 'பெண் கொடுக்க முடியாது' என்று சொல்வதால் நெப்போலியனை விஜயகுமார் அவமதித்தது போல் ஆகிவிடுகிறது. அதனால் இவர்களுக்குள் பகை என்று தான் நினைப்போம் அது தான் இல்லை.

திருமணம் முடிந்த கையோடு வெளியில் தந்தையின் சம்மதத்தோடு அண்ணன் பொன்வண்ணனால் வெளியில் விரட்டப்படுகிறார் குஷ்பு. தன் 'அப்பாவி' கணவனை கூட்டிக்கொண்டு கிளம்புவதற்கு முன் திரும்பி ஒரு சபதமெடுக்கிறார் "நாங்களும் மாடமாலிகை கட்டி செழிப்பா வாழத்தான் போறோம், அத நீ பாக்கத்தான் போற. அதுமட்டுமல்ல எனக்கு பிறக்கப்போற சிங்கக்குட்டிக்கு உன் பொண்ண கட்டி வைக்க நீ எங்கிட்ட வந்து கெஞ்சத்தான் போற" என்று குஷ்பு சொல்ல, அதற்கு பொன்வண்ணன் 'ஒன்னில்ல ரெண்டு சிங்கக்குட்டியா பெத்துப்போடு என் வீட்டுக்கு நாயா இருக்கட்டும்' என்று சொல்ல, "அப்போ ரைட்டு, ரெண்டு சிங்கக்குட்டி, உனக்கும் ரெண்டு பொண்ணுங்க பிறக்கும், நீ அத என் சிங்கக்குட்டிகளுக்கு கட்டிக்கொடுக்க என் கிட்ட வருவ" என்று கண்டிப்பாக தனக்கு இரண்டு சிங்கக்குட்டிகள் பிறப்பார்கள் என்று ஃபிக்ஸ்(!) செய்து விட்டு கிளம்புகிறார். இந்த இடத்தில் தான் ஆரம்பக்காட்சிகள் முடிந்து பெயர்கள் போடப்படுகிறது. கூட்டம் ஜாஸ்தி என்பதால் ஒரு பத்தி நிமிடம் பெயர் போடுவதிலேயே ஓடிவிடுகிறது!

அடுத்து வரும் காட்சிகளில் குதிரையில் வெள்ளை முடி தாடி வைத்து வெள்ளைக்குதிரையில் வருகிறார் நாசர். நெப்போலியன்/விஜயகுமார் இருவரில் யாரோ ஒருவரின் முன்னாள் அமைச்சர் (இதுவும் குத்துமதிப்பாக கடைசியில் ஒரு வசனத்தில் தான் சொல்லப்படுகிறது), இப்போது துறவம் துறந்த நாடோடி(!) பாசறை/பட்டறை வைத்திருக்கும் ராஜ்கிரணைத்தேடி வருகிறார். ராஜ்கிரண் தண்ணீர் தராத 30 பேர் கொண்ட ரவுடி கும்பலை தன் மாணவர்களான 'பொன்னர்-ஷன்கர்' (இப்படித்தான் படம் முழுவதும் சொல்கிறார் - முடியலடா சாமீ! சங்கர் என்று அவருக்கு சொல்லவரவே இல்லை. யாரும் அதை கண்டுகொண்டது போலும் தெரியவில்லை) மூலம் துவம்சம் செய்து விட்டு வருகிறார். நாசர் வந்த உடனே "அப்போ வீட்ட விட்டுப் போனாங்களே குஷ்பு-ஜெயராம், அவங்க என்ன ஆனாங்க" என்று விசாரிக்க, முன்கதை சுருக்கத்தின் தொடர்ச்சியாக இப்போது ஒரு பிளாஷ்பேக் கதையை சொல்கிறார்.

"அப்படி வெளியே போன தம்பதியினரை வழியில் மறித்து வம்பிற்கு இழுக்கிறார் பிரகாஷ்ராஜ். அவரைக் கொல்லப்போகும் குஷ்புவின் வாளை ஜெயராம் தட்டி விட, ஒரு எச்சரிக்கை + சபதம் போட்டு விட்டு கிளம்புகிறார்கள் மாட மாளிகை கட்டி சிங்கக்குட்டிகள் இருவரை பெறபோகும் லட்சியத் தம்பதிகள்".  "அவர்களுக்கு பாவம் ஒரு பெண் குழந்தை (சினேகா) மட்டும் தானே!" என்று நாசர் கேட்க "இல்ல, இல்ல சபதப்படி அவர்களுக்கு கரெக்ட்டாக சிங்கக்குட்டிகள் ரெண்டு பேர் பிறந்து விட்டனர். அவர்கள் தான் பொன்னர்-ஷன்கர்" என்கிறார். இது படத்தின் இருபதாவது நிமிடம், பிரசாந்த்களின் அறிமுக பைட் முடிந்து ஐந்தாவது நிமிடமாக இருக்கலாம். இங்கிருந்து படத்தின் கடைசி இருபதாவது நிமிடம் வரை "பொன்னர்-சங்கர்களான பிரசாந்த்கள் தான் குஷ்பு-ஜெயராம் மகன்கள்" என்பதை யாராவது யாருக்காவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அப்படியா என்று அதிர்ச்சியோ, சந்தோஷமோ அடைந்து கொண்டேயிருக்கிறார்கள். குஷ்பு-ஜெயராம் தம்பதியினருக்கே இடைவேளைக்குப் பிறகே தெரியவருகிறது. அதற்கு ஒரு பிளாஷ்பேக் + சபதம் ராஜ்கிரண் வாயிலாக சொல்லப்படுகிறது. நமக்கு தான் ஆரம்பத்திலேயே தெரிந்து விடுகிறதே. அதனால் என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்றே தெரியவில்லை

இடையில் கதாநாயிகளான கட்டழகிகள் பூஜா சோப்ரா, திவ்யா பரமேஷ்வர் அறிமுகங்கள், பிரசாந்த்கள் இவர்களை ஆளுக்கு ஒருவராக இரு முறை காப்பாற்றி, அதனால் காதல் வயப்பட்டு, ஒரு டிரீம் ஸாங்க் பாடி, ஒரு சோலோ சாங்க் ஆடி, பின் சில பல சஸ்பென்ஸ் (அவர்களுக்குள் தான் சஸ்பென்ஸ்/டுவிஸ்ட் எல்லாம், நமக்கில்லை) நடந்தேறி திருமணம் முடிந்து, ராஜ்கிரண் சபதத்தின் பேரில் இரண்டு நாள் போர் நடந்து வில்லன்கள் அழிக்கப்பட்டு, சுபம்.

மூவாயிரம் பேர் பங்கேற்ற பாடல் காட்சியின் முடிவில் திடீரென்று புயல் ஒன்று கிளம்பி வருகிறது. அங்கிருக்கும் அனைவரையுமே தூக்கி எறிய ஆரம்பிக்கிறது, இதில் கதாநாயகிகளும் அடக்கம். பிரசாந்த்கள் இருவரும் பக்கத்து பக்கத்தில் ரொம்ப நேரமாக ஓடிவருகிறார்கள். அவர்கள் ஓடிவரும் பொழுதே பலர் வீசியெறியப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் குறியெல்லாம் கதாநாயகிகள் மேலே மட்டும்தான் இருக்கிறது (இந்தப் பக்கம் சினேகாவை பிரகாஷ்ராஜ் குதிரையில் துறத்துகிறார். அதையும் இவர்கள் கண்டுகொள்ளவில்லை. நாசர் தான் காப்பாற்றுகிறார்!) சரி அவர்களை காப்பாற்றினால் தான் ஆளுக்கு ஒருவராய் நாயகிகளை (பொன்வண்ணன் மகள்களை) திருமணம் செய்து தாயின் சபதத்தைக் காப்பற்ற முடியுமென்பதற்காக ஓடுகிறார்கள் என்றால் அது தான் இல்லை. இவர்கள் தான் சபத சிங்கக்குட்டிகள் என்பது யாருக்குமே (நாசர்-ராஜ்கிரணைத் தவிர) ஏன் பிரசாந்த்களுக்கே தெரியாதே! சும்மா அவர்களை மட்டும் காப்பாற்றி கரெக்ட் பண்ண ஓடுவது போல் காட்டுகிறார்கள். இப்படிப் பட்டவர்களுக்கு எப்படி கோவில் கட்டியிருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுமா தோன்றாதா?

சுத்தமாக புரியாத, தெளிவாக வரையறுக்கப்படாத கதை என்று சொல்லிவிட்டு இவ்வளவு விளக்கமாக நான் எழுதி அறுக்கக் காரணம், வயிற்றெரிச்சல் தான். ஒரு பிரம்மாண்டமான, தமிழ் சினிமா ரசிகர்களின் கனவாக இருக்கும் Genre இல் வந்திருக்கம் படத்திற்கு, "கதை-திரைக்கதை" என்பது எவ்வளவு அவசியம்? கதையை விடுங்கள், வசனம்? தளபதியிடம் சினேகாவை கடத்திவரச் சொல்கிறார் பிரகாஷ்ராஜ். எப்படி? "அருக்காணிய தூக்குறது முக்கியமில்ல, தாமரைய போட்ரனும்" என்று. யோசித்துப்பாருங்கள் கோடிக்கணக்காகப் பணம் போட்டு எடுக்கப்படும் சரித்திரப்படத்தில் இந்த மாதிரி வசனமிருந்தால் பார்க்கிறவனுக்கு எவ்வளவு எரிச்சல் வரும் என்று. இது ஒரு சின்ன சாம்பிள் தான். "பராசக்திக்கு வசம் எழுதிய கலைஞரா இந்தப் படத்திகு இப்படிப் பட்ட வசனங்கள் எழுதியது?" என்று தான் கேட்கத்தோன்றுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த சரித்திரக் கதை. செந்தமிழை நான் எதிர்பார்க்கவில்லை, வழக்குத்தமிழ் தான் படம் முழுவதும். பரவாயில்லை. அதையாவது சிறப்பாக அமைத்திருக்கவேண்டாமா?


இன்னொரு குட்டி சாம்பிள். பிள்ளை வரம் வேண்டி குஷ்பு-ஜெயராம் தேர் இழுப்பார்கள். அதற்கு ராஜ்கிரண் எங்கிருந்தோ வந்து "இனவிருத்திக்கும் கடவுள் பக்திக்கும் என்ன சம்பந்தம்? தேர் இழுக்குறத விட்டுட்டு மாளிகைல போய் உல்லாசமா பொழுதக் கழிங்க" என்கிறார். அடுத்தக் காட்சியில் ஜெயராம் கட்டிலில் குஷ்புவின் மடியில் படுத்தபடி "இத்தனை நாளா கடவுள வேண்டிக்கிட்டிருந்ததுல ஒன்னும் நடக்கல. இப்போ முப்பாலின் கடைசிப்பாலை படித்ததால என் வீரம் உலகிற்கு  போகுது" என்கிறார். இதை 'நாத்திகம்' என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படியே எடுத்துக்கொண்டாலும் அதைக் காட்ட வேண்டிய இடமா இது? இதற்கு பதில் ராஜ்கிரண் ஜெயராமிடம் "அடேய், எதுவுமே செய்யாம தான் நீ தேர் இழுத்துக்க்கிட்டு இருக்கியா? உனக்கெல்லாம் எப்படிடா புள்ள பொறக்கும் கார்பெட் மண்டையா?" என்று கவுண்டமணி சிலாங்கில் சிம்பிளாகச் சொல்லியிருக்கலாம்.

எடிட்ங்? அப்படி ஒன்று இருந்திருந்தால்தான் படம் புரிந்திருக்குமே! காட்சிகளை அழகாக டெக்னிக்கலாக எடிட் செய்தவர்கள் கதை என்று வரும் போது "சரித்திரக் கதை, படம் நீளமாகப் போகிறது" என்று கண்டாமாணிக்கு கத்தியைப்போட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன். படத்தைப் பார்க்கும் கொங்குநாட்டவர் அனைவருக்கும் தெரியும் இது பொன்னர்-சங்கரின் கதையல்ல என்பது. 1960களில் கலைஞர் எழுதிய கதை இது என்று சொல்கிறார்கள். இப்போது இருக்கும் தகவல்களை வைத்து திரைக்கதை பண்ணியிருக்கிறார்(கள்) என்று சொல்வதா அல்லது ஒரு மிகப் பெரிய சரித்திரப் புகழ் பெற்ற வரலாற்றை இரண்டரை மணிநேரத்தில் தமிழ் ரசிகர்களின் தேவைகளான பாட்டு, டான்ஸ், பைட் கலந்து சொல்வது கடினம் என்பதால் சரியாக கதை சொல்லமுடியாமல் போயிருக்கலாம் என்று எடுத்துக்கொள்வதா, தெரியவில்லை.  

கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பில் ஏன் இவ்வளவு தடுமாற்றம். பொன்னர் சங்கர் இருவரைப் பற்றியுமே காட்சிகள் அவ்வளவாக இல்லை. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை எடுத்துக்கொள்வோம். அவன் யார், அவன் ஆளும் சீமை எது, அங்கு நடக்கும் பிரச்சனைகள் என்னென்ன, யாரெல்லாம் அவனுக்கு எதிரிகள், யாரெல்லாம் அவனுக்கு நண்பர்கள், அவனுக்கு அவன் நாட்டு மக்களுக்கும் எப்படி உறவு, அவன் மனைவி யார், அவளது குணாதிசியங்கள் என்ன. இத்தனையையும் படத்தில் காட்டியிருப்பார்கள். இங்கு முதல் பாதியில் பிரசாந்த் 'இருவராக' இருந்தும் இருபது நிமிடம் கூட வரவில்லை. கதாநாயர்களுக்கே கதையில் 'ஸ்கோப்' இல்லை, தேவையானளவு சீன் இல்லை. பாட்டு, பைட் அவ்வளவு தான் பிரசாந்த்களுக்கு. இடைவேளைக்குப் பிறகு பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார்கள். அதன் பிறகாவது தாய்-தந்தை-மகங்கள் பேசிக்கொள்கிறார்களா? ஊஹும். இரண்டு முறை ஆசிர்வாதம் வாங்குவதோடு சரி.

சினேகா கதாபாத்திரம் எதற்கு என்றே தெரியவில்லை. அண்ணன்மார்களிடம் தங்கை மொத்தமாக ஒரே ஒரு முறை தான் படத்தில் பேசுகிறார் அதுவும் "உங்க மனைவிமார் உங்கள பாக்கனும்னு ஆசப்படுறாங்க" என்பதுதான். மற்றபடி பிரகாஷ்ராஜிடம் ஒருமுறை, தளபதியிடம் ஒரு முறை என்று இரண்டு ரேப் அடெம்ப்ட் மட்டும் தான் சினேகாவிற்கு. 'பவானி' நினைப்பில் சின்னதாக ஒரு பைட் சீக்வென்ஸும் உண்டு. மற்றபடி இவரது கதாபாத்திரமும் தெளிவில்லாத, வீணடிக்கப்பட்ட ஒன்று.

விஜயகுமாருக்கும் அவரது மகன் பொன்வண்ணனுக்கும் என்ன பிரச்சனை? அவர் ஏன் திடீரென்று தனது மகன் குடும்பத்தையே மொத்தமாக கொளுத்தச் சொல்லும் அளவிற்கு பகையுடன் இருக்கிறார். பிரகாஷ்ராஜ் குஷ்புவை திருமணம் செய்ய நினைக்கிறார். அவருக்கு திருமணமாகிப் பிறந்த சினேகாவை பிறகு குறி வைக்கிறார், அதுவும் கெட்டப் சேஞ் எதுவுமில்லாமல். ஆம், இவருக்கும் நெப்போலியனுக்கும் இருபது வருடங்களுக்குப் பிறகு என்று காட்டப்படும் போது, ஒரு முடி கூட நரைத்திருப்பதாய்த் தெரியவில்லை. செயல்களும் துள்ளும் இளமை பதினாறாகவே இருக்கிறது. இவர்களது கதாபாத்திரங்களில் ஏன் இத்தனைக் குழப்பம்?

அதே போல் இத்தாம் பெரிய தியாகத்தைச் செய்யுமளவிற்கு ராஜ்கிரணுக்கு என்ன அப்படியொரு நாட்டுப்பற்று? சங்கர் என்று தமிழில் சொல்லாமல் ஷன்கர் என்று அவர் படமுழுவதும் சொல்வதை ஏன் யாரும் கவனிக்கவில்லை? போஸ் வெங்கட் யார்? சோழ மன்னனுக்கும் கொங்கு நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? மாயவராக வரும் நாசர் யார்? முதலில் விஜயகுமார் யார்? ராஜாவா? இல்லை பெரிய பணக்காரரா? மொதத்தில் பார்த்தால் ஆரம்பத்தில் "குஷ்புவை பிரகாஷ்ராஜிற்கு கட்டிக்கொடுக்கவில்லை" என்பது மட்டும் தான் பிரச்சனையேவா? கடைசியில் காளிமன்னனான நெப்போலியனை வீழ்த்தி நாட்டை மீட்கின்றனர் பொன்னர்-சங்கர். எதற்கு? யாருக்கு? ஒன்றும் புரியவில்லை.

நெப்போலியனை கொடுங்கோலனாகவெல்லாம் காட்டவில்லை. சேர்க்கை சரியில்லாததைப் போல் காட்டுகிறார்கள். அவரிடமிருந்து நாட்டைப் பிடுங்கி இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? கொங்கு மக்கள் இன்றும் பொன்னர்-சங்கரை தெய்வமாகக் கும்பிடுவதற்கு நெப்போலியனை வீழ்த்தியது மட்டும் தான் தான் காரணமா?

எந்தப் படத்திற்கும் இல்லாத அளவிற்கு நான் இந்தப் படத்திற்காக அடித்துக்கொளளக் காரணம், இயக்கம் / மேக்கிங் இல் தியாகராஜன் மலையைப் புரட்டிப் போட்டிருந்தாலும் அது 'கதை-திரைக்கதை-வசனம்', கதாபாத்திரத் தெளிவு போன்ற முக்கிய சமாச்சாரங்கள் சரியில்லாத்தனால் வழக்கம் போல வீணாகப்போகிறதே என்று மனம் அடித்துக்கொள்வதனால் தான். எல்லாம் சரியாக இருந்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தையே மண்ணைக்கவ்வ வைத்தவர்கள் நாம். பொன்னர் சங்கர் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்!


மொத்ததில் என்னைப் பொறுத்த வரை, பொன்னர் சங்கர் - நிச்சயம் பார்க்க வேண்டிய படம் அதன் மேக்கிங்கிற்காக, நிச்சயம் ஓட வேண்டிய படம் அதன் ஜானருக்காக (Genre)! வேற என்ன சொல்ல?

You Might Also Like

2 comments

  1. நண்பரே நானும் மேக்கிங் அருமையாக உள்ளதே என சென்று விட்டேன். சொதப்பி விட்டார்கள். தமிழ் திரையுலகில் உள்ள குறை இதுதான். மேக்கிங் அருமையாக இருந்தால் கதையை சொதப்பி விடுகிறார்கள். கதை அருமையாக இருந்தால் மேக்கிங் இருக்காது.

    நல்ல வேலை தியாகராஜன் முதலில் பொன்னியின் செல்வனை எடுக்க நினைத்தாராம்... தப்பி விட்டது

    ReplyDelete
  2. அதிலும் பிரசாந்த் பேசும் அதிகபட்ச வசனமே 'ஆசானே கட்டளையிடுங்கள்' என்பது தான். என்னே சோதனை

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...