சென்ற வாரம் டைரி குறிப்புகள்

1:12:00 PM

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்ற வாரம் தொடர்ந்து தியேட்டரிலும் எனது லேப்டாப்பிலும் படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பதிவெழுதியும் பல நாட்கள் ஆகி விட்டதால், பார்த்த ஒவ்வொரு படத்தைப் பற்றியும் எழுத வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் சத்தியமாக அது நடக்காது என்பது மட்டும் தெரியும். அதனால் மொத்தமாக ஒரே பதிவாக எழுது கிறேன் என்று முடிவு.

1. The A - Teamபடத்தின் டிரைலரை சென்ற மாதம் முதலே பல தியேட்டர்களில் மாறி மாறிப் பார்த்து என்னளவில் எதிர்பார்ப்பு அதிகமாகியிருந்தது. ஆனால் படம் வெளியானவுடன் ரிவ்யூ மன்னர்கள் 'படம் சரியில்லை' என்று சொல்லியிருந்தனர். நண்பர் கனவுகளின் காதலன் மட்டும் படம் நன்றாக இருக்கிறது, ஆக் ஷன் பிரியரகள் தாராளமாகப் பார்க்லாம் என்று எழுதியிருந்தார். அவர் சொன்னது போல் தான் படமும் இருந்தது. நம்ப முடியாத சண்டைக்காட்சிகளால் நிறைக்கப்பட்டிருந்தாலும், படம் நன்றாகவே இருந்தது. லியாம் நீஸன், சொல்லவேண்டிய அவசியமே இல்லை. தலைவர் பின்னியெடுத்திருக்கிறார். வயதானாலும் அந்த உயரம், குரல், நடை அனைத்தினாலும் மிடுக்காகத்தெரிகிறார். இவருடன் இவரது கட்டளைகளை ஏற்று நடக்கும் மூவர். இவர்கள் தான் யூ.எஸ் ஆர்மியின் ஆல்ஃபா டீம் என்ற The A - Team. ஒரு சம்பவத்தின் போது மேலதிகாரிகளால் ஏமாற்றப்பட்டு சிறைக்குச் செல்லும் இவர்கள் அங்கிருந்து ஒவ்வொருவராகத் தப்பித்து பின் தாங்கள் யார் என்பதை உலகிற்குக் காட்டுவது தான் படத்தின் கதை. காதலர் சொன்னதையே நானும் வழிமொழிகிறேன். ஆக் ஷன் பிரியர்களுக்கு இந்தப் படம் ஒரு சரியான தீனி. ஆரம்பத்தில் வரும் ஹெலிகாப்டர் சீன், கிளைமாக்ஸ் போர்ட் சீனெல்லாம் சத்தியமாக வாய்ப்பேயில்லை. ஆனாலும் நம்பும்படியாக அட்டகாச பின்னனியிசையில் அசத்தியிருக்கிறார்கள்.

2. The Losersஐநாக்ஸில் போஸ்டர் பார்த்த நியாபகத்தில் டவுன்லோட் செய்து பார்த்த படம். The A - Team மிற்கும் இந்தப் படதிற்கும் குறைந்த பட்சம் ஆறு வித்யாசம் கூட கண்டுபிடிக்கமுடியவில்லை. இரண்டு படங்களும் அப்படியே அநியாயத்திற்கு ஒன்றாக இருக்கிறது. ஓரே மாதிரியான கதை - யூ.எஸ் ஆர்மி ஆள், அவனது படையாக ஒரு நால்வர், ஒரு சம்பவத்தில் உயர் அதிகாரி ஏமாற்றுவது, பழி இவர்கள் மேல் விழுவது பின் தாங்கள் யார் என்பதை நம்பவே முடியாத சண்டைக்காட்சிகளால் நிரூபிப்பது. கஷ்டம் என்னவென்றால் படத்தில் வரும் கேரக்டர்கள் கூட ஒரே மாதிரிசித்தரிக்கப்பட்டிருக்கிறன. என்ன சொன்னாலும் The A - Team இல் இருக்கும் 'சாகஸ' சண்டைகள் இதில் இல்லை. சும்மா ஒரு ஹெலிகாப்டரைக் காட்டுவதே எதோ தனி கிளிப்பிங் சேர்த்திருப்பது போல் தெரிகிறது. அவதார் நாயகி இதில் கொஞ்சம் தூளாக பறந்து பறந்து சண்டையெல்லாம் போட்டிருக்கிறார்.

3. The Last Airbender"உலகில் பஞ்சபூதங்களும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த சமயம், கொடூரனான நெருப்பு அரசன் மற்ற அரசர்கள் மீது போர் தொடுக்கிறான். அதனால் உலகில் அமைதி தொலைகிறது. காற்று தேசத்தின் கடைசி மனிதனான சிறுவன் ஒருவன் தனது தண்ணீர் தேசத்து நண்பர்களுடன் உலகைஸ் சுற்றிப் பயணப்படுகிறான். இது தான் உலக நாயகன் ஹாலிவுட் படத்தின் கதை. உலக நாயகனாக நமது 'ஸ்லம்டாக் மில்லியனர்' தேவ் பட்டேல் நடித்துள்ளார். சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் கவருமளவிற்கு கிராபிக்ஸ் காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் தூள் பறக்கின்றது" இப்படித்தான் தினத்தந்தியில் விமர்சனம் போட்டிருந்தார்கள். காற்று, நீர், நிலம், நெருப்புடன் ஆகாயத்தையும் சேர்த்து படத்தில் பஞ்சபூதங்கள் இருக்கிறதென சொல்லிவிட்டனர். அதை விட மிகக் கொடுமை உலக நாயகன் 'தேவ் பட்டேல்' என்று சொல்லியிருப்பது. எனக்கு மிகவும் பிடித்த அனிமேடட் சீரீஸ் AVATAR - The Last Airbender (ஏற்கனவே இதைபற்றி நான் எழுதியுள்ளேன்) பார்க்காதவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், இப்படித்தான் கதையை மற்றவர்களுக்குச் சொல்வார்கள். அந்தளவிற்கு படத்தில் என்ன நடக்கிறது என்று கடைசிவரை புரியாமல் மொத்தமாக 'incomplete' ஆக உள்ளது. கார்ட்டூனில் உள்ளதை முடிந்த அளவு அப்படியே சொல்ல ஆசைப்பட்டதாலோ என்னவோ, இரண்டரை மணி நேரத்தில் எதைச் சொல்ல வேண்டும் எது அவசியமில்லை என்கிற குழப்பம் மனோஜ் ஷியாமளனிற்கு வந்து விட்டது போலும். அதிக பொருட்செலவில் எடுத்திருந்தாலும் முழுமை இல்லாத காரணத்தினால் படம் பல இடங்களில் அடி வாங்கிக்கொண்டிருக்கிறது.ஆனாலும் கிராபிக்ஸ் காட்சிகள் நிஜமாகவே நன்றாக இருந்தது. என்னால் எந்தக் குறையும் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அனிமேஷன் கார்ட்டூனாக பார்த்தவற்றை சினிமாவாகப் பார்க்கும் அந்த அதீத திருப்தி எனக்கு முழுமையாகக் கிடைத்தது. சின்ன சின்ன விஷயங்களைக் கூட அழகாக அப்படியே காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். அதிலும் காற்றுக்கோயில் லொக்கேஷங்கள், அவதார் சிறுவனின் வாகனமான ஆப்பா, ஐஸ்கட்டி மலையால் ஆன தண்ணீர்தேசம், அதன் மீது நெருப்பு தேசத்தின் படையெடுப்பு அனைத்தும் அதியற்புதம். நில தேசத்தவரிகள் ஒரு ஸீனில் தான் வந்தார்கள் என்றாலும் திருப்தியாகயிருந்தது. யூடியூபின் இந்த, மற்றும் இந்த வீடியோகளைப் பார்த்தால் எந்த அளவிற்கு ரெபரென்ஸ் எடுத்து உழைத்திருக்கிறார்கள் என்பது தெரியும்.ஆனால் ஏன் வெட்டியாக 3டியில் ரிலீஸ் செய்தார்கள் என்று தான் தெரியவில்லை. டைட்டில் தவிர எதுவுமே 3டி எஃபெக்டில் இல்லை.அதே போல் காஸ்டிங் - எனக்கு ஏமாற்றமே. அவதார் சிறுவன், கடாரா, சாக்கா, இளவரசன் ஜூக்கோ (தேவ் பட்டேல்) பரவாயில்லை. ஆனால் நெருப்பு அரசன் ஓஸாய், ஜெனரல் ஐராஹ் கதாப்பாத்திரங்கள் ஒரிஜினலுடன் சுத்தமாக ஒத்துப் போகவில்லை. நெருப்பு அரசனை முதல் பாகத்தில் காட்டவே மாட்டார்கள். சும்மனாச்சுக்கும் போட்டோவைக் காட்டியே மிரட்டியிருப்பார்கள். நெருப்பு வளையத்தின் பின்னனியில் ஆஜானுபாகுவாகக் காட்டும் போதே திகில் வயிற்றைக் கிள்ளும். படத்திலும் முதலில் போட்டோ தான் காட்டுகிறார்கள் (கார்ட்டூனில் வரும் அதே போட்டோ - கவனிக்க: கார்ட்டூன் போட்டோ) ஆனால் திடீரென்று கொஞ்சம் கூட உருவசம்பந்தமேயில்லாத யாரோ ஒரு ஆள் கொஞ்சம் ராஜாத்தனமான உடையில் "நெருப்பு தேசத்தில் என்ன நடக்கிறது" என்று தளபதியிடம் கேட்கும் போது "அடப்பாவி நீயா ராஜா?" என்று தான் கேட்கத் தோன்றியது. என் நண்பன் வேலுவின் ஸ்லாங்கில் சொல்லவேண்டுமானால் 'பொக்கத்தனமாக' இருக்கிறார் இந்த நெருப்பு ராஜா! நீங்களே பாருங்கள்...
அதேபோல் தான் ஜூக்கோவின் பெரியப்பாவான ஜெனரல் ஐராஹ். அந்த குண்டு கார்ட்டூன் உருவத்திற்கும் படத்தில் காட்டப்படும் ஆறடி ஆளிற்கும் கொஞ்சம் கூடப் பொருத்தமேயில்லை. தவிர 'தாவேரிக்கரே' லட்சுமியின் ஆடியோ செவிடன் காதில் சங்கு போல் தான் இருக்கும். இவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதும் புரியவில்லை. ஒன்று மறுபடியும் கார்ட்டூனைப் பார்க்கலாம் அல்லது டிவிடிரிப் வந்தவுடன் டவுன்லோட் செய்து ஹெட்போன்ஸ் மாட்டிக் கேட்க்கலாம். மொத்ததில் அவதார் பற்றி ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு இந்தப் படம் கொஞ்சம் திருப்தியைத் தரும் (அட்லீஸ்ட் புரியவாவது செய்யும்), மற்றவர்களுக்கு Prince of Persia, The Clash of the Titans வரிசையில் கிராப்பிக்ஸ் பிரம்மாண்டங்கள் நிறைந்த ஷங்கர் படமாக மட்டும் தான் தெரியும், புரியும்
முதன்முதலாக நான் பார்த்த டிரைலரில் இடம்பெற்ற காட்சிகளில் ஆரம்பித்து போஸ்டரில் பார்த்த காட்சிகள் என்று நிறைய படத்தில் இல்லை. இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களில் வரும் போல. என்ன செய்வது, அதுவும் இப்படிதான் பாதிபேருக்குப் புரியாமல் போகப்போகிறது. அடுத்த பாகம் ரிலீஸ் ஆகும் முன் கார்ட்டூன் சீரீஸை பார்த்து விடுவது நல்லது. ஏனென்றால் அடுத்த பாகத்தில் இன்னும் பல கேரக்டர்கள் வர இருக்கிறார்கள். குழப்பம் நிச்சயம்...

(இந்த வார கணக்கிற்கு இன்னும் 3 படங்கள் இருக்கிறது. பதிவு அனுமார் வால் ஆகும் அபாயமிருக்கும் காரணத்தால் அவற்றை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்)

You Might Also Like

5 comments

  1. நறுக் சுருக் விமர்சனங்கள்

    ReplyDelete
  2. லாஸ்ட் ஏர்பெண்டர் பத்தின அனாலிஸிஸ் சூப்பர் ! Losers என்று ஒரு படம் வந்ததே எனக்குத் தெரியாது.. அதை டவுன்லோட் வேறு செய்துவிட்டு, பார்த்து எழுதியிருக்கிறீர்கள்... தெய்வமே !! ;-)

    அந்த மத்த மூணு படத்த பத்தி சீக்கிரம் எழுதுறது !!

    ஆமா.. ஏன் தமிழிஷ்ல ஆட் பண்ணல? எதாவது கோவமா தமிழிஷ் மேல? ;-)

    ReplyDelete
  3. நண்பரே,

    மூன்று விமர்சனப் பார்வைகளும் நன்றாக இருக்கின்றன. நண்பர் கருந்தேள் கூறுயதைப்போலவே ஏர்பெண்டரை சிறப்பான முறையில் அணுகியிருக்கிறீர்கள். தொடருங்கள்...

    ReplyDelete
  4. விமர்சனங்கள் சூப்பர்...

    ReplyDelete
  5. @சி.பி.செந்தில்குமார், அஹமது இர்ஷாத்: வருகைக்கு நன்றி நண்பர்களே!

    @கருந்தேள் கண்ணாயிரம்: நண்பரே, படம் பார்க்கும் அதே ஆர்வத்துடன் போஸ்டர் பார்ப்பவன் நான். அப்படி நான் ஐநாக்ஸில் பார்த்தது தான் LOSERS. தமிழிஷ் நேற்று இரவு வேலை செய்யவில்லை. மதியம் ஆட் செய்து விட்டேன்.

    @ கனவுகளின் காதலன்: நீங்கள் ஏர் பெண்டர் பற்றி எழுதவில்லையே...உங்கள் ஊரில் ரிலீஸ் இல்லையா?

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...